ஈரோடு முனிசிபாலிட்டியார் சென்ற வாரம் கூடிய தங்கள் மீட்டிங்கில் சந்தைப்பேட்டை அபாயத்துக்கு ஆளானவர்கள் சகாய நிதிக்கு ஆக 5000 ரூபாய் ஒதுக்கிவைப்பது என்று தீர்மானித்து இருக்கிறார்கள். சேர்மென் அவர்களும் கமிஷனர் அவர்களும் கவுன்சிலர்களும் இது விஷயத்தில் மிக்க அனுதாபம் காட்டிப் பேசியதோடு மிகவும் கஷ்டப்பட்டு கஷ்ட நிவாரண வேலையும் செய்தும் வருகிறார்கள். சர்க்கார் டாக்டரும் மிக்க கவலையோடு வேலை செய்து வருகிறார். இவற்றை எல்லா மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். விஷயம் இப்படி இருக்க, தந்திரத்தில் கவுன்சிலர்களாக ஆசைப்படும் சிலர் இவற்றிற்கு மாறாக பொய் நோட்டீசுகளும் பித்தலாட்ட விளம்பரங்களும் முதலைக்கண்ணீர் அழுகைகளும் கொண்டு ஊசியை மலையாக்கிப் பேசி மக்களை மயக்கப் பார்க்கிறார்கள் என்றாலும் முடிவில் அவர்கள் நிலை பரிதாபப்படக் கூடியதாகத்தான் இருக்கும் என்று இப்போதே கூறிவிடுகிறேன்.

பொது ஜனங்கள் பேரால் பண வசூல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் எனக்குப் பொறாமை இல்லை. சிலருக்கு அவசரமாய் சாப்பாட்டுக்கு வழிகள் வேண்டியிருக்கிறது. "ஆத்துத் தண்ணீரை அப்பா குடி அய்யா குடி". ஆனால் அபாய சம்பவ விசாரணைக் கமிட்டி வேலை என்று மற்றொரு நாடகம் நடக்கிறதே அதுதான் வேடிக்கை விஷயமாகும். இது இந்த விசாரணை கர்த்தர்களுக்கே முடிவில் தொல்லை விளைவிக்கப் போகிறது. என்னவென்றால் சந்தைப்பேட்டை கொட்டகை கட்ட கண்டிறாக்ட் எடுத்த கண்டிறாக்டர் ஒரு பார்ப்பனர். முனிசிபாலிட்டி ஓவர்சியர்கள் இருவர்களும் பார்ப்பனர்கள். ஆதலால் விசாரணைக் கமிட்டி சுற்றிச் சுற்றி என்னதான் விசாரணை செய்து தீர்ப்பு அறிக்கை விட்டாலும் முடிவில் இந்த மூன்று பார்ப்பனர்கள் தலையில் தான் கைவைக்க வேண்டி வரலாம். மற்றவர்களைப் பற்றி ஒன்றுமே செய்ய முடியாது. ஏன் என்றால் சேர்மெனையோ கமிஷனரையோ கவுன்சிலர்களையோ இந்த இலாக்கா சம்பந்தமான சர்க்கார் அதிகாரிகளையோ பாதிக்கும்படியான அறிக்கை எழுத கமிட்டிக்கு மூளை போதாது என்பது எனக்குத் தெரியும். எழுதினால் ஆப்பசைத்த குரங்குபோல் மாட்டிக்கொள்வார்கள் என்பதும் உறுதி. ஆதலால் அவ்வளவு தைரியமோ பைத்தியக் காரத்தனமோ கமிட்டிக்கு இருப்பதும் சந்தேகம்.

ஈரோடு எவ்வளவோ பார்ப்பனரல்லாதார் தன்மையைப் பற்றிய கவலையுடையவர்களை உடைய ஊராய் இருந்தும், பார்ப்பனர்கள் சொல்லுவது போல் "பார்ப்பனத் துவேஷி ராமசாமி நாயக்கன்" இருக்கிற ஊராய் இருந்தும் இரண்டு ஓவர்சியர் சிப்பந்திகளும் பார்ப்பனர்களாகவும் கண்டிறாக்டரும் பார்ப்பனராகவும் இருப்பது என்றால் இது உலகத்தில் 8வது அதிசயமல்லவா என்பது எனக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு. ஏதோ இப்போது அதற்கு ஒரு சமயம் கிடைத்திருக்கிறது. அதாவது இந்த மூன்று ஸ்தானத்தில் இரண்டு ஸ்தானமாவது இவ்வறிக்கையின் பயனாய் ஒழிக்கப்பட்டு பர்த்தி பண்ணப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டால் அதுவே போதும் என்று கருதுகிறேன். பொல்லாத காலத்திலும் இது ஒரு நல்ல காலமாகத்தான் முடியலாம். ஆனால் எனக்கு ஒரு ரகசிய சேதி எட்டி இருக்கிறது. அது என்னவென்றால் இந்த விசாரணைக் கமிட்டியிலும் மூன்று பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆளைப்பற்றி இப்போது முதலே சிபார்சு பறக்கிறதாகத் தெரிய வருகிறது.

இந்தக் காரணம் கொண்டுதான் அபாயத்துக்கு ஆக கடை வீதியிலே பணம் வசூலிக்க பார்ப்பனரல்லாதாரும் அக்கிரகாரத்தில் விசாரித்து தீர்ப்புக் கூற பார்ப்பனர்களும் என்று ஏற்பாடு செய்து கொண்டார்களோ என்னமோ தெரியவில்லை. எப்படியானாலும் சரி, பண வசூலையும் விசாரணை முடிவையும் தெரிவதற்கு என்றே நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 09.05.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: