periyar 342

கதர் மோசம்

சென்ற வாரமும் அதற்கு முந்தின வாரமும் இன்றைய சரணாகதி பார்ப்பன ஆதிக்க மந்திரி கூட்டம் நாட்டின் விடுதலைக்கு ஆக ஏற்பட்டதல்ல வென்றும் இந்நாட்டு பழந்தமிழ் மக்களை புராணகாலக் கதைகள் போல் மிருகங்களாக ஆக்கி ஆரிய ஆதிக்கத்தை நிலை நிறுத்தி ஆரியர்களுக்கு தமிழ் மக்கள் என்றென்றும் அடிமையாயிருக்கச் செய்யும் சூழ்ச்சிக்கு ஆக ஏற்பட்ட கூட்டம் என்றும் அதற்கு ஆக இப்போது பார்ப்பன ஆதிக்க மந்திரிகள் ஆட்சி செய்துவரும் மோசமான காரியங்கள் மூன்று என்றும் அவற்றில் முதலாவதாக தமிழ் பாஷை, தமிழ் கலை, தமிழ் பழக்க வழக்கம், தமிழ் சுதந்தர உணர்ச்சி, தமிழ் மக்களுக்கு ஆரியர்கள் ஆதி முதல் செய்து கொண்டு வந்த கொடுமைகள் ஆகியவைகளை மறக்கடித்து ஆரிய உயர்வையும், மற்றவர்களின் தாழ்வையும், அடிமைத்தனத்தையும் புகுத்தும் மறைவான சமஸ்கிருதமான ஹிந்திபாஷையை தமிழர்களின் இளங்குழந்தைகள் படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அநீதியைப் பற்றியும் இரண்டாவதாக தேர்தல்களில் எப்படி பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளுமே வெற்றிபெறக்கூடும் என்பதற்கு அனுகூலமாகவே தேர்தல் முறைகளை மாற்றி அமைக்கப் போடும் தந்திரங்களைப் பற்றியும் விளக்கி இருந்தோம்.

இந்த வாரம் மூன்றாவது காரியமாகிய தமிழ் மக்களின் பொருளா தாரத் துறையில் கைவைத்து தமிழ் மக்கள் என்றும் தலை தூக்காமல் இருப்பதற்கும் பழைய வர்ண தர்மமாகிய "சூத்திரர்கள் என்றென்றும் ஏழையாகவே இருக்கவேண்டும்" என்று வலியுறுத்தும் மனுதர்மத்தை நம்மீது சுமத்தி நிலை நிறுத்தவும் முதலாளிமார்களை தங்கள் வசம் செய்து கொண்டு அவர்கள் மூலம் தங்களது சோம்பேறி வாழ்க்கையையும், புரோகித ஆட்சித் தத்துவத்தையும் நிலை நிறுத்திக்கொள்ளவும் சூழ்ச்சி செய்யும் படியான கதர் மோசத்தைப் பற்றி எழுதுவோம்.

கதர்

கதர் என்பது இன்றைய பொருளில் கையால் நூற்ற நூலைக்கொண்டு கையால் நெய்த துணி என்பதாகும்.

இதைப்பற்றிய ஆட்சேபணை சமாதானங்கள் ஏற்கனவே வண்டி வண்டியாய் வெளியாக்கப் பட்டிருக்கின்றன. இப்போது மறுபடியும் வெளியாக்கப்பட வேண்டிய அவசியமென்னவென்று சில வாசகர்கள் நினைக்கலாம். இன்றைய பார்ப்பன ஆதிக்க ஆட்சியானது கதரை அரசியல் சட்டமூலம் அரசியலில் புகுத்த முனைந்திருப்பதால் மறுபடியும் மக்கள் அதைப்பற்றிய உண்மைகளை உணர வேண்டும் என்கின்ற ஆசையேயாகும்.

கதர்த் தத்துவம்

கதர் 1920ம் வருஷத்தில் அரசியலில் கலந்து பேசப்பட்ட போது கதர் மனிதனின் சுயநிர்ணயத்திற்கு என்றும், சுரண்டுவதற்காக இந்நாட்டில் ஆட்சி புரியும் அந்நிய ஆட்சியைப் பணியவைத்து விரட்டியடிப்பதற் கென்றும், மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு என்றும் பிரிட்டிஷ் முதலாளி களின் கொட்டத்தை அடக்குவதற்கென்றும் பல காரணங்கள் சொல்லப்பட்டன.

சுயநிர்ணயம் என்றால் ஒரு மனிதன் தனக்கு வேண்டிய எந்த செளகரியத்துக்கும் வேறொரு மனிதனை எதிர்பாராமல் தானே செய்துகொள்ளவேண்டுமென்று பொருள் கூறி அந்த வகையிலும் மனிதனுக்கு வேண்டிய ஆடையை அவனவனே தன் வீட்டுக் கொல்லையில் பருத்திச் செடி முளைக்கவைத்துப் பருத்தி யெடுத்து பஞ்சாக்கித் தானே நூற்று தன் வீட்டிலேயே தறி பூட்டி தானே நெய்து ஆடையாக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த முறையில்தான் ஒவ்வொரு வீட்டிலும் பருத்திச் செடி வளர்த்ததும் கைராட்டினங்கள் சுற்றியதும் வைதீகக் காந்தி பக்தர்கள் வீடுகளில் தறிகள் பூட்டியிருந்ததுமாகும்.

இது ஒரு வருஷத்திலேயே தவறாகிவிட்டதால் அதாவது சகல மக்களும் தங்கள் தங்கள் ஆடையை தாங்களே நெய்து அணிந்து கொள்வது என்பது முட்டாள்தனமான யோசனை என்றும் மிகுந்த அறிவாளியின் நேரம் நூல் நூற்பதிலும் துணி நெய்வதிலும் செலவிடப்பட்டால் நாகரிகமும் முன்னேற்றமும் நற்காரியங்களும் தடைப்பட்டுப் போகும் என்றும் தோழர்கள் லஜபதிராய், தாஸ், நேரு, மாளவியா முதலியவர்கள் காங்கரசின் சார்பாகவே எதிர்த்து முறியடித்து விட்டதால் பிறகு அந்த சாக்கு கைவிடப் பட்டு "சுரண்டிக்கொண்டு இருக்கும் அந்நிய ஆட்சியை ஒழிக்கவும், அந்நிய நாட்டு முதலாளிகளை அடக்கவும்" என்கின்ற காரணம் தலை தூக்கிற்று. அதுவும் பயன்படாது என்றும் வெறும் ஆகாயக் கோட்டை என்றும் பெரிய பெரிய அரசியல் நிபுணர்கள் எடுத்துச் சொன்னதோடு சுமார் 5, 6 வருஷம் கதர் பிரசாரம் செய்து அந்நிய ஆட்சியை ஒழிக்க கதர் சிறிதாவது பயன் படவோ அந்நிய முதலாளிகள் சிறிதாவது கதரினால் தங்கள் வியாபாரம் குந்தகமடைகின்றது என்று கருதவோ முடியாமல் போய் விட்டதால் பொது ஜனங்கள் கதரை அலôயம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

அதன் பிறகே "கதர் ஏழைகள் நண்பன் என்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு உரியது" என்றும் மாத்திரம் கூறப்பட்டது. இதை ஆக்ஷேபித்தும் அநேக பொருளாதார நிபுணர்கள் தங்கள் அபிப்பிராயங்களை வெளியிட்டு பரிகாசம் செய்தார்கள். இதன் மத்தியில் காங்கரசிலேயே பலவித அபிப் பிராயங்கள் ஏற்பட்டு கதர் ஒரு அரசியல் சின்னமென்று சிலரும் அது ஒரு போர் ஆயுதம் என்று ஒரு சிலரும் அது தற்கால உபாயம் என்று ஒரு சிலரும் கூறி வந்ததோடு சுதேசி சாமான்களோடு ஒன்றாய்க் கருதலாம் என்றும், பணக்காரர்கள் கதர் வாங்கட்டும், ஏழைகள் சுதேசி துணி வாங்கட்டும் என்றும் கடசியாக சிலருடைய பசியைப் போக்கவாவது பயன்படவில்லையா என்றும் குடியானவர்களுக்கு விவசாயமில்லாத காலத்தில் ஒரு தொழிலாக வாவது இருக்காதா என்றும், இப்படி பல விதமாக தோழர் ராஜகோபாலாச் சாரியார், பண்டிதர் ஜவஹர்லால் போன்ற காங்கரஸ் பிரமுகர்களாலும் சொல்லப்பட்டு வந்தது.

காரியத்தில் இதுவரை மேற்கண்ட காரியங்களில் ஒன்றும் பலிதமடையாமல் கதருக்கு என்று மாகாணம் ஒன்றுக்கு வருஷம் 10,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பொது ஜனங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து நஷ்ட ஈடுகொடுத்துக் கொண்டுவந்த காரணமே இந்த கதர் பிரசாரமோ கதர் உற்பத்தியோ கதர் மூலம் ஏழை களுக்கு உதவியோ செய்யப்பட்டு வந்திருப்பதாகத் தான் பெரிதும் அறியக் கிடக்கின்றதே ஒழிய கதரின் அவசியத்துக்காக சொல்லப்பட்ட மேற்கண்ட பல காரணங்களில் ஒன்றுக்காவது பயன்படவே இல்லை.

முதலாவது கதர் இன்று ஒரு மனிதன் வாங்க வேண்டுமானால் மில் நூல் கைத்தறித்துணி ஒரு கஜம் வாங்குவதற்கு 3 அணா கொடுப்பதற்கு பதிலாக அதே யோக்கியதை உள்ள, கையில் நூற்று கையில் நெய்யப் பட்ட கதர் துணி வாங்கினால் கஜம் ஒன்றுக்கு 1-0-0 கொடுக்க வேண்டி இருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதை விட மட்டமான துணி வாங்க வேண்டுமானால் கூட அதுவும் கஜம் ஒன்றுக்கு 12 அணா 10 அணா கொடுத்தால் தான் கிடைக்கும் நிலையில் இருக்கிறது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் மாத்திரம் கதர் நூல் நூற்பவர்களுக்கு தினம் 1 அணா கூலி கிடைக்கலாம். "இந்த ஒரு அணா கூலியாவது கிடைக்கிறது லாபமல்லவா" என்று சிலர் கேட்கலாம். ஒரு "ஏழைக்கூலி" தினம் ஒரு அணா சம்பாதிக்க வேண்டுமானால் அதே கூலி 4 மாதத்துக்கோ, 3 மாதத்துக்கோ வரும் படியான 5 முழ கதர் வேஷ்டி ஒரு ஜதை வாங்க வேண்டியதற்கு அவன் குறைந்தது 3 ரூபாயாவது கொடுக்க வேண்டும். இந்த 5 கஜ துணியை மில் நூல் கைத்தறியாக வாங்கினால் 0-12-6 அணாவுக்கு வாங்கலாம். உயர்ந்த துணியாக வேண்டுமானால் 1 ரூபாய்க்கு வாங்கலாம். ஆகவே ஒரு ஜதை வேஷ்டி 2 ரூ. வீதம் நஷ்டமடைய ஒருமனிதன் அல்லது ஒரு சேலைக்கு 4 ரூ. வீதம் நஷ்டமடைய ஒரு பெண் தயாராய் இருந்தால்தான் கதரினால் ஒரு ஆள் ஒரு நாளைக்கு ஒரு அணா சம்பாதிக்க முடிகிறது என்பதை எங்கும் ருஜúபிக்கத் தயாராய் இருக்கிறோம்.

"கிராம ஏழை ஜனங்கள் பிழைக்கக் கண்டுபிடித்தது இந்த மார்க்கம், ஆதலால் கதர் பூராவையும் பட்டண வாசிகளோ, பணக்காரர்களோதான் வாங்க வேண்டும்" என்று சொல்லப்படுமானால் இது அதாவது கதர் திட்டம் என்பது ஒரு கட்டாய வரித் திட்டமா? அல்லது பொருளாதார கைத்தொழில் திட்டமா என்று கேட்கின்றோம். அப்படியே கட்டாய வரித்திட்டமென்று சொல்லுவதானாலும் சரி, வேறு காரியங்களில் இவ்வரித் திட்டத்தை புகுத்தாமல் மனிதனின் நாகரிக வளர்ச்சியையும் சாதாரண இயற்கைத் திருப்தியையும் பாதிக்கும்படியான காட்டுமிராண்டித்தனத்தை வலியுறுத்தும் முறையில் கட்டாய வரியைப் புகுத்துவது கொடுங்கோன்மை ஆட்சி ஆகாதாவென்று கேட்கின்றோம். இவ்வளவு பெரிய கொடுங்கோன்மையான காரியத்தைக் கையாளுவதன் மூலம் ஏழைகளுக்கு சரியான பலனாவது ஏற்படுகிறதாவென்று பார்த்தால் அதுவும் 12 மணி நேரம் ஓயாமல் சரீரம் வருந்தப் பாடுபட்டால் 1 அணா கூலிதானே கிடைக்கக் கூடியதாய் இருக்கிறது என்பதை உணர்ந்தால் மக்களின் நஷ்டத்திற்கும் காட்டுமிராண்டிக் காலத்துக்கு போகும்படி மக்களை விரட்டியடிக்கும் இந்த கொடுங்கோன்மை முறைக்கும் அதனால் மக்கள் அனுபவிக்கும் மனக்கஷ்டத்திற்கும் அதிருப்திக்கும் இது சரியான பிரதிப் பிரயோஜனமாகுமா என்று கேட்கின்றோம். ஆகவே கதர் என்றால் நூற்கிறவர்களையும் கஷ்டப்படுத்தி நெய்கிறவர்களையும் தொல்லைப்படுத்திக் கட்டுகிறவர்களையும் சித்திரவதை செய்வது போன்ற கொடுமைப்படுத்துவதாக ஆகவில்லையா என்று கேட்கின்றோம்.

காந்தியார் முழங்காலுக்கு மேல் துணி கட்டுவதால் மக்களை மத உணர்ச்சியால் ஏமாற்றப் பயன்படுகிறது. மற்றும் இரண்டொருவர் அவரைக் காப்பி அடிப்பதால் அவர்களது கூடா ஒழுக்கங்கள் மறைக்கப்பட்டு ஏமாற்றப் படுகின்றது. காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் கதர் கட்டுவதால் உண்மை யிலேயே சுயமரியாதையும் சுதந்திர உணர்ச்சியும் அரசியல் ஞானமும் பகுத்தறிவு சுதந்திரமும் இருக்கின்றவர்களை காங்கரசுக்குள் நுழையாமல் விரட்டி அடிக்கப் பயன்படுகின்றது. இவை தவிர மற்றவர்களுக்கு கதரினால் ஏதாவது பயன் ஏற்படுகிறதா என்று கேட்கின்றோம்.

மற்றும் கதரைப் பற்றி பேசும்போது கைத் தொழில்களை ஆதரிக்க வேண்டும் என்றும் யந்திரங்கள் அபிவிருத்தியை தடுக்க வேண்டும் என்றும் பழங்கால முறையையே கையாள வேண்டுமே ஒழிய "புதிய நாகரிகமாகிய சைத்தான் ஆட்சிக்கு" போகக்கூடாது என்றும் சொல்லப் படுகிறது. இந்தக் காரணங்களாவது யோக்கியமான காரணங்கள் என்றோ புத்திசாலித் தனமான காரணங்கள் என்றோ சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

கைத்தொழில் யந்திரத்தொழில் என்பதற்கு பொருளும் வித்தியாசமும் என்ன என்றால் தொழிலாளிகள் சரீரத்தால் சதா கவலையுடன் கவனமாகப் பாடுபடுவது கைத்தொழிலாகும். சரீரப்பிரயாசை இல்லாமலும் அதிக கவலையும் கவனமும் தேவை இல்லாமலும் பாடுபடுவது யந்திரத் தொழிலாகும். இதுமாத்திரமல்லாமல் மிக கொஞ்ச உற்பத்தி மாத்திரமே செய்யக் கூடியது கைத்தொழிலாகும். தாராளமாகவும், ஏராளமாகவும் உற்பத்தி செய்யக்கூடியது யந்திரத் தொழிலாகும். இந்த இரண்டில் அறிவுள்ள மனிதன் - ஜீவன்களிடத்தில் அன்பும் கருணையும் உடைய மனிதன் எதை ஆதரிக்க வேண்டும் என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும்.

யந்திரங்கள்

தவிர யந்திரங்கள் எத்தனையோ முட்டுக்கட்டைகளையும் சூழ்ச்சிகளையும் மதப்பித்தலாட்ட தந்திரங்களையும் சமாளித்துக் கொண்டு வெளி வந்து விட்டன. தரித்திரமும் யந்திரங்களை நாணையமாகவும் புத்திசாலித்தனமாயும் உபயோகித்ததன் மூலமே ஒரு அளவுக்கு ஒழிந்து செல்வ விருத்தியும் அறிவு விருத்தியும் ஏற்பட்டிருப்பதோடு மனித வாழ்க்கைத் திட்டமும் ஒரு அளவு உயர்ந்து ஏழ்மையும் ஒழிக்கப்பட்டு வருகிறது. எங்கெங்கு காட்டுமிராண்டித்தனமும் வருணாச்சிரமதர்ம ஆட்சியும் சோம்பேறி வாழ்க்கையாரின் ஆட்சியும் இருக்கிறதோ அங்கு மாத்திரம்தான் அப்படிப் பட்டவர்களால் நடக்கும் யந்திரசாலையும் தான் மக்களை கஷ்டப்படுத்துகிறது. யோக்கியர்களாக உண்மை மனிதாபிமானிகளாக இருப்பவர்கள் வர்ணாச்சிரம ஆட்சியை ஒழிக்கவும் வர்ணாச்சிரம ஆட்சியினர் ஆதரவில் இருக்கும் யந்திரசாலைகளை அழிக்கவும் முயற்சி செய்ய வேண்டுமே ஒழிய யந்திரங்கள் கூடாது என்று சொல்லுவது ஒரு நாளும் நாணயமும் அறிவுடமையுமாகாது என்றே சொல்லுவோம்.

கராச்சி காங்கிரஸ் திட்டத்தில் யந்திரசாலைகளை தேசீயமாக்குவது என்று ஒரு தீர்மானமிருப்பதாக காங்கிரஸ்காரர்களால் சொல்லிக் கொள்ளப்படுகிறது.

ஜஸ்டிஸ் கட்சியாரும் தங்கள் திட்டங்களில் இதையும் ஒன்றாய் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க யந்திரசாலைகளைப் பற்றியோ அவற்றை தேசீயம் அதாவது சர்ககாருடைய ஆதிக்கமாக ஆக்குவதைப் பற்றியோ யோசிக்காமல் பொருளாதார புனருத்தாரணத்துக்கும் தொழில் முறை புனருத்தாரணத்துக்கும் காங்கிரஸ்காரர்கள் கதரைப்பற்றி பேசுவது எப்படி யோக்கியமாகும்?

"வேலையில்லாதவர்களுக்கு வேலையும் சோறு இல்லாதவர்களுக்கு சோறும் போடப்படும்" என்று சொல்லி ஓட்டு வாங்கிய யோக்கியர்கள் தங்கள் வாக்குத்தத்தப்படி நடக்க வேண்டுமானால் அதிக நேரம் வேலை செய்வதைத் தடுத்து வேலை செய்கிறவர்களையும், வேலை இல்லாதவர் களையும் கணக்கு போட்டு உள்ள வேலையையும் உள்ள நேரத்தையும் எல்லோருக்கும் சரி சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். சோறு இல்லாதவர்களுக்கு சோறு என்றால் இது வரையில் சம்பாதித்து தேவைக்கு மேல் அதிகமாய் சேர்த்து வைத்திருக்கிறவர்களைப் பற்றி வேண்டுமானால் பின்னால் யோசித்துக் கொள்ளலாம் என்று அனாமத்தில் வைத்து விட்டு இப்போது யார் யார் தேவைக்கு மேல் சம்பாதிக்கிறானோ எவன் எவன் சராசரி தகுதிக்கு மேல் சம்பாதிக்கிறானோ அவர்களை கணக்குப்போட்டு அந்த முறைகளையும் கவனித்து அப்படிப்பட்டவர்கள் அதிகமாய் சம்பாதிக்க மார்க்கமில்லாத மாதிரி தொழில் முறையை திருத்தி அமைப்பதை விட்டு விட்டு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்களும் எஸ். சீனிவாசய்யங்கார்களும் N 10000, 20000 மும் "ஹிந்து" பத்திராதிபர் கூட்டமும், ராஜா சர். அண்ணா மலைகளையும், ஜமால் மகம்மதுகளையும், நவாப் அப்துல் ஹக்கீம்களையும், வருஷம் 2 லக்ஷம் 3 லக்ஷம் போல் சம்பாதித்து முதல் சேர்க்கவும், இன்னும் இதுபோல் பல ஜமீன்தார்களும் மிராசுதார்களும் வருஷம் 10 லக்ஷம் 12 லக்ஷம் என்பதாக சம்பாதித்து முதல் சேர்க்கவும் தாராளமாய் வழியைத் திறந்து விட்டு விட்டு அவர்களிடம் ரகசியமாய் பிரதிப் பிரயோஜனம் பெற்றுக் கொண்டு ஏழைகளுக்கு 12 மணி பாடுபட்டு 12 சல்லிக்காசு வரும்படி வரும் படியான கைராட்டின அக்ஷய பாத்திரத்தை கொடுக்கிறேன்; அதில் காசு போடுகிறவர்கள் 3 அணா துணியை ஒரு ரூபாய்க்கு வாங்குவதன் மூலம் போடுங்கள் என்றால் இந்த கதர் திட்டம் முதலாளிகளுக்கும் யந்திர சாலை முதலாளிகளுக்கும் திருட்டுத்தனமாக இரகசியத்தில் ஏழைகளைக் காட்டிக் கொடுக்கும் துரோக ஆட்சிமுறை அல்லவா என்று கேட்கின்றோம்.

இந்த நாட்டில் ஏழைகள் என்று ஒரு கூட்டமும் முதலாளிகள் என்று ஒரு கூட்டமும் இந்த ஏழைகளை செக்கில் போட்டு ஆட்டி ரசம் பிழிந்துகொள்ள காட்டிக் கொடுக்கும் சோம்பேறித் துரோக புரோகித மந்திரிகள் என்று ஒரு கூட்டமும் நிலையாய் இருந்து ஆட்சி செலுத்தச் செய்யப் படும் சூழ்ச்சி அல்லவா என்று கேட்கின்றோம்.

கதரை எதற்கு ஆக இன்று அரசியலில் சம்மந்தப்படுத்தி மந்திரிகள் பேச வேண்டும்? அதற்கு ஆக 200000 ரூபாய் வரி செலுத்துவோர் பணத்தை ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும்? கதர் வியாபாரத்தை மந்திரிகளே (சர்க்காரே) ஏன் ஏகபோக உரிமையாக்கிக் கொள்ளவேண்டும் என்பனவாகிய விஷயங்களைக் கவனித்தால் இதில் நாணயம் எங்கே இருக்கக்கூடும்? சர்க்கார் ஏகபோக உரிமையாய்க் கொண்டு அரசாங்க நிர்வாகத்திற்கு பணம் சம்பாதிக்க வேண்டுமானால் யாருக்கும் நஷ்டமோ கஷ்டமோ இல்லாத எவ்வளவோ நல்ல தொழிலும் மார்க்கமும் இருக்கின்றன. அதை விடுத்து கதரை ஏகபோகமாக்கிக் கொண்டதும் வலியுறுத்துவதும் அதற்கு ஆக 2 லக்ஷம் ஒதுக்கி வைத்துக்கொண்டதும் பார்ப்பன ஆட்சிக்கு பலம் தேட அடிமை களை சேர்க்கவும் அடிமைகளை ஆதரிக்கவும் செய்து கொண்ட தந்திரமே அல்லாமல் வேறு என்ன காணமுடியும்?

இன்று நாட்டில் கதருக்கு ஏதாவது மதிப்போ செல்வாக்கோ நாணயமான அபிப்பிராய ஆதரவோ இருக்கிறதா என்று பார்த்தால் காங்கரசின் பேரால் பதவியிலிருப்பவர்கள் காங்கரசின் பேரால் ஓட்டுக்கேட்பவர்கள் காங்கரசின் பேரால் வயிறு வளர்ப்பவர்கள் அல்லாமல் வேறு யாரிடமாவது இருக்கிறதா என்று கேட்கிறோம்.

கதரைப்பற்றி நன்றாய் அனுபோகப்பட்டு கதரின் புரட்டையும் துரோகத்தையும் புட்டுப்புட்டு விளக்கிக்காட்டி கதரை நெருப்புவைத்துக் கொளுத்திய பகுத்தறிவு வீரர்கள் இன்று பதவிக்கும் வயிறு வளர்ப்புக்கும் ஆசைப்பட்டு தங்களுக்கு புதிய ஞானோதயம் ஏற்பட்டதாகச் சொல்லிக் கொண்டு கதர் வேஷம் போடுவது என்றால் இதற்கு நாம் என்ன பதில் சொல்லக் கூடும்? கவர்னர்களும் வைசிராய்களும் பிரதம காரியதரிசிகளும் கொஞ்ச நேரத்துக்கு கதர் கட்டுகிறார்கள் என்றால் அது அவர்களுக்கு உள்ள கதர் பக்தியா? அல்லது அவர்களது ராஜதந்திரமா என்று யோசித்துப் பார்த்தால் முழு மூடனுக்கும் உண்மை விளங்கிவிடும்.

ஆனால் சர்.மகமது உஸ்மான்கள் சர்.கே. வெங்கிட்ட ரெட்டி நாயுடுகள் போன்றவர்கள் கதர் கட்டுகிறார்கள் என்றால் இதை யார் தான் ராஜதந்திரம் என்று சொல்லக்கூடும்? மானங்கெட்ட இழிநிலை தந்திரம் என்றுதானே சொல்லுவார்கள். சமதர்மம் பேசும் பொது உடமை உணர்ச்சி வீரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஜவஹர்லால் போன்றவர் களும் ஜெயப்பிரகாஸ் நாராயணன் போன்றவர்களும் கதர் கட்டித்தான் ஆகவேண்டும் என்கின்ற நிலை வந்திருக்கிறபோது மற்ற சுண்டாங்கிகள் கதர் கட்டுவதும் கதர் உபதேசம் செய்வதும் பதவிக்கோ வயிற்றுப் பிழைப்புக்கோ கதரை ஆதரிப்பதும் நமக்கு அதிகமாய் தோன்றவில்லை. ஏனெனில் "உச்சிப் பிள்ளையாரே கோவிலோடு ஆகாயத்தில பறக்கின்ற போது எச்சிக்கலை என்ன செய்யமுடியும்?" என்று ஒரு பழமொழி உண்டு. ஆதலால் இதைப்பற்றி நாம் கவலை கொள்ளவில்லை. ஆனால் நம் வரிப்பணங்களைக் கொண்டு இம்மாதிரி அடாத காரியமும் கேடான காரியமும் செய்யப்படுவதையும் இந்தக் காரியத்துக்குள் புகுந்து கொண்டிருக்கும் ஏழைகளை முதலாளிகளுக்குக் காட்டிக்கொடுத்து நிரந்தர ஏழைகளாகப் பெரும்பான்மையான ஒரு கூட்ட மக்களை அழுத்தி வைக்கும் தந்திரத்தை புரோகித ஆட்சிக்கு அஸ்திவாரம் பலப்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சியையும் வெளியிடாமலிருக்க முடியவில்லை.

தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 05.09.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: