periyar 34

காங்கரஸ் மந்திரிகள் மது விலக்கில் முனைந்துவிட்டார்கள் என்றும் சேலம் ஜில்லாவை விட்டு அறவே "கள்ளரக்கன்" விரட்டப் பட்டு விட்டான் என்றும் பாமர மக்கள் நம்பும்படி மாயப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதைப் பாமர மக்களும் சில அறிவாளிகள் என்பவர்களும் நம்பி வருகிறார்கள்.

கள் ஒரு நாளும் இந்தியாவை விட்டு அதிலும் தென்னாட்டை விட்டு ஒழியப் போவதில்லையென்பதை கல்லின்மேல் எழுதி வைத்துக் கொள்ளும்படி வாசகர்களுக்குத் "தீர்க்க தரிசனம்" கூறுவோம்.

ஆனால் கள் ஒழிக்கும் சாக்கை வைத்துக்கொண்டு பார்ப்பன ராஜ்யமானது பார்ப்பனரல்லாத மக்களின் கல்வியில் மண்ணைப்போட்டு அவர்களைப் பழையபடி காட்டுமிராண்டிகளாகவும் பார்ப்பாரின் வைப்பாட்டி மக்களாகவும் ஆக்கப் போகிறது என்பதை இப்போதே பார்ப்பனரல்லாத மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

நம்மைப் பொறுத்தவரையில் கள், சாராயம் முதலிய எவ்வகை மதுவையும் கையில் தொட்டதுகூடக் கிடையாது. மலம் சாப்பிடுவதை விட மதுவருந்துவதை கேவலமாய்க் கருதி வருகிறோம். ராமரசம், பூரணாதி, மன்மத சிந்தாமணி முதலிய போதை தரும் லேகியம்கூட கையில் தொட்டது கிடையாது. நம் ஜாதியும் நம் "கடவுளும்" மதுவை அனுமதித்து மதுவைப் படைத்து அருந்தி வந்திருந்தாலும் கூட என்ன காரணமோ மது நம்மால் வேறு எதையும்விட அதிகமாக வெறுக்கப்பட்டுவிட்டது.

மதுபானக்கெடுதி ஒழிவது நல்லது என்பதில் சிறிதும் அபிப்பிராய பேதமில்லை. மதுபானத்தில் ஏற்படும் கேட்டை நன்றாய் உணர்ந்துதான் இருக்கிறோம்.

ஆனால் மதுவிலக்கு என்னும் சாக்கில் பார்ப்பன ஆட்சி செய்யும் படு மோசத்தை நம்மால் சகிக்க முடியவில்லை.

ஏனெனில் மதுவின் பேரால் அரசாங்கத்துக்கு 5, 6 கோடி ரூபாய் வருமானம் ஏற்படுத்தப்பட்டாய் விட்டது. அவ்வருமானமே கல்விக்கு பயன் படுத்தப்பட்டு வருகிறது. இப்போது மதுவால் கிடைத்து வந்த வருமானம் நின்றவுடன் கல்வி கற்பிப்பதை குறைக்க மந்திரிகள் துணிந்துவிட்டதோடு மக்கள் நலனுக்கு அவசியமான பல காரியங்களையும் நிறுத்திவிட வேண்டிய அவசியத்துக்கு வந்து விட்டார்கள்.

உதாரணமாக தோழர் கனம் ஆச்சாரியாரும் கனம் ராமன் மேனனும் மலையாள சுற்றுப் பிரயாணத்துக்கு போயிருந்தபோது மலையாள ஜனங்கள் தங்கள் ஜில்லாவுக்கும் மது விலக்கு ஏற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அளித்த பதிலில் மந்திரிகள் அறியாமல் அவர்களது விஷத்தை கக்கிவிட்டார்கள்.

அதாவது "உங்கள் ஜில்லாவுக்கு மதுவிலக்கு ஏற்படுத்தினால் சர்க்காருக்கு 40 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும். இந்த நஷ்டத்தை ஈடு செய்ய பாலக்காடு விக்டோரியா காலேஜ் மூடப்பட வேண்டிய தோடு ரோட்டுகள் செப்பனிடுவதும் பாலங் கட்டுவதும் நிறுத்தப் படவேண்டிவரும்" என்று தைரியமாய் பேசி இருக்கிறார்கள்.

(இது 20-ந் தேதி மதராஸ் மெயில் பத்திரிகை 5-வது பக்கம் 7-வது கலத்தில் மொத்த எழுத்தில் போடப்பட்டிருக்கிறது)

ஆகவே இப்போது சேலத்தில் நடந்த மதுவிலக்கினால் சர்க்காருக்கு ஏற்பட்ட 25 லக்ஷ ரூபாய் நஷ்டத்திற்கு தகுந்த மாதிரி பல பள்ளிக்கூடங்கள் மூடப்படப்போவதும் பல போக்குவரத்து சாதனங்கள் செளகரியப்படுவது நிறுத்தப்படப் போகிறது என்பதும் உறுதியாய் விளக்கப்படுகிறது.

இன்று கல்வியில் பார்ப்பனர்கள் 100க்கு 100 பேரும் படித்திருக்கிறார்கள். இன்னமும் 10, 20 வருஷத்துக்கு உத்தியோகத்துக்கு ஆள் கிடைக்கும்படி அவ்வளவு பேர் படித்து விட்டு காத்துக் கொண்டு மிருக்கிறார்கள். பார்ப்பனரல்லாத மக்களில் முக்கியமாக தாழ்த்தப்பட்ட மக்களில் 100க்கு 2 பேர் 3 பேர்கூட படிக்காமல் இருக்கிறார்கள். அவர்களில் 100க்கு 1, 2 பேர்கூட பட்டதாரிகள் இல்லாமல் இருக்கிறார்கள். ஆகவே பள்ளிக்கூடங்களும் காலேஜ்களும் மூடப்பட்டால் மற்ற சமூகத்தில் படித்தவர்கள் என்பவர்களே இல்லாமல் போய்விடுவார்கள். பார்ப்பனர்கள் திருவாங்கூருக்கோ, மைசூருக்கோ, காசிக்கோ, காஷ்மீருக்கோ போய் அங்கு சத்திரத்தில் சாப்பிட்டு விட்டு சம்பளமில்லாமல் படித்து விட்டு கொஞ்சம் பணமும் சம்பாதித்துக்கொண்டு பட்டத்துடன் இங்கு வந்துவிடுவார்கள். பிறகு படித்தவர்கள் என்றால் பார்ப்பனர்கள் - பார்ப்பனர்கள் என்றால் படித்தவர்கள் என்று அகராதியிலேயே வியாக்கியானம் வந்துவிடப் போகிறது என்பது உறுதி. இப்பொழுதே தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் சர்க்கார் உத்தியோகம் பெறுகிறவர்களுக்கு காசி, கல்கத்தா, பம்பாய், கராச்சி, பஞ்சாப் சென்று வந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று யோக்கியதாம்சம் வகுத்துவிட்டார். இனி பள்ளிக்கூடங்கள் காலேஜúகள் மூடப்பட்டுவிட்டால் நம் கதி என்ன ஆவது என்பதை சுணையும் புத்தியும் உள்ள பார்ப்பனரல்லாதார் யோசித்து பார்க்க வேண்டுமென்று விரும்புகிறோம்.

மற்றும் சேலம் ஜில்லா மது விலக்குக்காக மாகாணம் பூராவிலும் உள்ள எக்சைஸ் (மது இலாக்கா) டிப்பார்ட்டுமெண்டில் 3 வருஷத்துக்கு கீழ்ப்பட்ட சர்வீஸில் உள்ள சிப்பந்திகளை எடுத்துவிட திட்டம் போட்டிருக்கின்றார்களாம். இந்த மூன்று வருஷங்களுக்குள்ளாகத்தான் பார்ப்பனரல்லாத மக்கள் பலர் கம்யூனல் ஜீ.ஓ.படி 100-க்கு 84 வீதம் அந்த இலாக்காவில் உத்தியோகம் பெற்று இருப்பார்கள். இவர்கள் இத்தனைபேர் தலையிலும் கை வைக்கப்பட்டுவிடும். பார்ப்பனர்களோ 100-க்கு 16 வீதம்தான் உத்தியோகம் பெற்று இருப்பார்கள். இவர்களுக்கு ஹிந்தி உபாத்தியாயர் வேலை கிடைத்து விடும்; அல்லது பள்ளிக் கூடங்கள் இல்லாத அளவுக்கு இந்தப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத பணக்காரர் வீட்டுப் பிள்ளைகளுக்கு பிரைவேட் உபாத்தியாயர்களாய் அல்லது முன்னோடும் பிள்ளையாய் பதவி அடைந்து விடுவார்கள். ஆகவே பார்ப்பனரல்லாத மக்கள் கதி படிப்பிலோ, உத்தியோகத்திலோ என்ன ஆவது என்பதை யோசித்துப்பாருங்கள்.

பொறுப்பற்ற அயோக்கியர்கள் வஞ்சக சூழ்ச்சிக்காரர்கள் ஜப்பான் - சைனா, அபிசீனியா - இட்டாலி சண்டைக்குக் கூட பார்ப்பன சூழ்ச்சிதான் காரணமா என்று கிண்டல் செய்யலாம். மானமில்லாத ஜாதிக்கு அவ்வப் போது வாயில் வந்ததை உளறிவிட்டு மரியாதை கெடுவது ஆச்சரியமல்ல. ஆனால் நாம் சொல்வதும் கருதுவதும் சரியா, தப்பா? அல்லது கூலிக்கோ சுயநலத்துக்கோ இப்படி எழுதுகிறோமா? அல்லது ஆதாரமில்லாமல் அநுபவமில்லாமல் இப்படிச் சொல்லுகின்றோமா என்பதை பொதுஜனங்கள் - அறிவாளிகள் யோசிக்க வேண்டுமென்பது தான் நமது ஆசை. மற்றபடி மற்றவர்கள் குலைப்பதைப் பற்றி நமக்கு கவலை இல்லை.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.10.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: