தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் நானும் குற்றாலத்தில் கண்டு பேசிய விஷயம் தமிழ்நாடு பத்திரிகை உலகத்தில் மிகப் பிரமாதப் படுத்தப்பட்டு விட்டது.

என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் முதலில் இந்த விஷயத்தை கேட்டு விட்டே மரியாதைக்கு விசாரிக்கும் க்ஷேம லாபங்களைக் கூட விசாரிக்கிறார்கள். சந்திக்க முடியாத அனேகம் பேர்கள் உள்ளத்திலும் இந்த எண்ணமே இருக்கும் என்பதில் ஆக்ஷேபணை இருக்க நியாயமில்லை.

ஆகையால் அதை விளக்கி விடுகிறேன். பத்திரிகை நிருபர்கள் பலர் என்னை விசாரித்தார்கள். நான் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல என்றே பதில் சொல்லிவிட்டேன். நிருபர்கள் சேதியில் 100க்கு 90 என் விஷயத்தைப் பொறுத்தவரை திரித்தும் பிசகாயும் மாற்றியுமே எனக்கு காணப்படுகின்றன. ஆதலால் நானே குறிப்பிட்டு விடுகிறேன். எங்கள் சம்பாஷணை ஒன்றும் உண்மையிலேயே அவ்வளவு குறிப்பிடக்கூடிய தல்ல. ஆனால் கவனிக்கக்கூடியதேயாகும்.

எனக்கு பொதுவாக தோழர் சி.ராஜகோபாலாச்சாரியாரிடம் எப்போதுமே மரியாதை உண்டு. அவருக்கும் என்னிடம் அன்பு உண்டு என்றே கருதிக் கொண்டிருக்கிறேன். அதாவது நான் அவரது அன்புக்கு பாத்திரமானவன் என்கின்ற கருத்தில்.

ஆச்சாரியாரைப்பற்றி அரசியல் விஷயத்தில் பொதுநல விஷயத்தில் எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராயங் கொண்டிருந்தாலும், கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்தாலும் தனிப்பட்ட விஷயத்தில் அவரை எனது மரியாதைக்கு உரியவர் என்றே கருதி இருக்கிறேன்.

நாங்கள் பொது வாழ்வில் நுழைவதற்கு முன் அவர் சேலம் சேர்மெனாயும் நான் ஈரோடு சேர்மெனாயும் இருக்கும் போதே எங்களில் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுள்ள மாதிரியில் நெருக்கமுள்ளவர்களாய் இருந்ததோடு இருவரும் சொந்த வாழ்க்கையை அலட்சியம் செய்து பொதுவாழ்வில் தலையிடுவது என்கின்ற அருத்தத்தின் மீதே சற்றேறக் குறைய ஒரே காலத்தில் இருவரும் சேர்மென் பதவியையும் மற்றும் உள்ள சில கவுரவ பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு தோழர் வரதராஜுலுவும் உள்பட நெருங்கி கலந்து இருந்தோம். பிறகு ஒத்துழையாமை ஆரம்பமான வுடன் நான் அவருடைய உள்ளத்தை கொள்ளை கொண்ட காதலி போலவே இருந்து வந்தேன்.

எங்களுக்குள் வெகுநாள் ஒத்துழையாமையில் அபிப்பிராய பேதமே இல்லாதிருந்தது. அவர் இஷ்டத்தை அறிந்து அதுவே என் அபிப்பிராயம் போல் காட்டி அவரை இணங்கச் செய்வதுபோல் ஒவ்வொரு விஷயத்திலும் நடந்து கொள்வேன். அதனாலேயே அனேகர் என்னைக் கண்டு விட்டே அவரைக் காணுவார்கள்.

அப்படிப்பட்ட நிலை வகுப்பு உணர்ச்சி காரணமாகவே இருவருக்கும் மாற்றமடைய நேரிட்டுவிட்டது. அதன் பிறகு பல சம்பவங்கள் ஏற்பட்டு விட்டன என்றாலும் அவரைக் காணும் போது என்னை அறியாமலே அவரிடத்தில் ஒரு மரியாதையும் பணிவும் ஏற்பட்டு விடுகின்றன.

அவரைக் காணும் போது எப்படி மரியாதையும் பணிவும் ஏற்படுகிறதோ அதுபோல் ஒரு பரிதாபமும் ஏற்படாமல் இருப்பதில்லை.

காரணம், எவ்வளவு பெரிய தியாகம் செய்தவர் அவ்வளவு தியாகமும் ஒரு பயனுமில்லாமல் போகும்படியாய் விட்டதே பாவம் என்று பரிதாபப்படுவதுண்டு. என்றாலும் அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு மூன்று அர்த்தம் செய்து பார்க்காமல் நான் ஒரு முடிவுக்கு வருவதில்லை. நான் பிரிந்து விட்ட பிறகும் ஒரு சமயத்தில் சட்டசபைக்கு நிற்கும்படி என்னை வேண்டினார். இந்திய சட்டசபைக்கும் நான் நிற்பது நல்லது என்கின்ற ஜாடையும் காட்டினார். எனக்கு வெற்றி செலவில்லாமல் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கையும் உறுதியும் இருந்தும் இந்த ஸ்தானங்களுக்கு அவருடைய ஆதரவில் செல்வது எனது வாழ்வைக் கெடுத்து விடுமோ என்று அஞ்சியே மறுத்துவிட்டேன்.

இப்படியெல்லாம் இருந்தாலும் தற்கால அரசியல் புரட்டுக்களை நான் அறிந்திருப்பது போலவே ஆச்சாரியார் அவர்களும் அறிந்திருக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இரு கட்சிகளிலும் பெரிதும் சமய சஞ்சீவிகளே பயன் அனுபவித்து விடுவதும் நாம் ஒருவரை ஒருவர் துவேஷித்து முன்னேற ஒட்டாமல் தடுத்துக் கொண்டு இருப்பதும் இந்த சந்தர்ப்பத்தில் பொது மக்கள் நலம் கொள்ளை போவதும் என்னைவிட நன்றாய் உணர்ந்திருக்கிறார் என்பதே என் அபிப்பிராயம்.

இந்த நிலையில் என்னை அவர் கோயமுத்தூர் ஜெயிலில் எதிர் பிளாக்கில் ஒரு கைதியாக சந்தித்தார். தோழர் சர். ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் என்னை ஜெயிலில் சந்தித்த அதட்டியினாலும் தோழர் ஆச்சாரியார் முயற்சியாலும் நான் ஆச்சாரியார் அறைக்குப் பக்கத்தில் அவருடைய சமையலறை சாப்பாட்டில் இருக்க நேர்ந்தது.

அப்பொழுதும் எங்கள் பழைய கதை ஞாபகத்துக்கு வந்ததுடன் இருவருக்கும் கண்களில் நீர் ததும்ப எங்கள் காதலைக் காட்டிக் கொண்டோம். எந்த கருத்தில் என்றால் எனக்கும் அப்படிப்பட்ட தலைவர் ஒருவர் கிடைக்கமாட்டார், அவருக்கும் என்னைப்போல ஒரு தொண்டன் கிடைக்க மாட்டான் என்கின்ற உணர்ச்சிக் கருத்தில் என்றே சொல்லலாம். முடிவில் இருவரும் சேர்ந்து முன்போல ஒத்து உழைக்க முடியுமா என்கின்ற விஷயமாகவே பேசிப் பேசி ஒத்து உழைக்க சந்தர்ப்பம் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை மீதே ஜெயிலில் பிரிந்தோம்.

அதற்கு பிறகு ஒருதரம் சந்திக்க நேர்ந்தும் இருவரும் சரிவர அந்த அபிப்பிராயத்தை வலியுறுத்திக் கொள்ளவில்லை.

பிறகு சுமார் 20 மாதம் பொறுத்து நானும் தோழர்கள் பாண்டியன் முதலியவர்களும் குற்றாலத்தில் ஒரு நாள் ஸ்நானத்துக்கு போகையில் அங்கு நான்கு நாள் முன்னதாகவே சுகத்துக்காக போயிருந்த ஆச்சாரியார் அவர்கள் தன் ஜாகையிலிருந்தே என்னைக் கண்டார். பார்க்க வேண்டும் என்று சொல்லியனுப்பினார். அருவியில் குளித்துவிட்டு அவர் ஜாகைக்கு போனேன். அப்பொழுது மாலை 3 மணி இருக்குமாதலாலும் நானும் என் தோழர்களும் அதுவரை சாப்பிட வில்லையாதலாலும் ஆச்சாரியார் அவர்களிடம் அதிக நேரம் பேச சாவகாசமில்லை என்று சொல்லி அவசரமாய் விடை கேட்டேன். "ஏன் ஒரு நாள் சாவகாசமாக இங்கு தங்குவது தானே" என்றார். நான் இப்போது சாவகாசமில்லை என்றும் மற்றொரு நாள் வருவதாயும் சொன்னேன். அவசியம் வரவேண்டும் என்றார். ஆகட்டும் என்றேன். அந்தப்படியே 15 நாள் பொறுத்து மறுபடியும் குற்றாலம் சென்றேன். அது சமயம் அவர் ஒரு வனபோஜனத்துக்கு புறப்பட்டுக்கொண்டு வீட்டின் முன் வாசலுக்கு வந்துவிட்டார். என்னைக் கண்டதும் ஆசையாக வரவேற்று வன போஜனத்துக்கு அழைத்தார். நான் பின் சென்றேன். செல்லுகையில் வழியில் சிறிது முன்னாக சென்று கொண்டிருந்த நாங்கள் காதல் மிகுதியால் அர்த்தமற்ற வார்த்தைகளைப் பேசுவதுபோல் பல விஷயங்களை கலக்கிக் கலக்கி அங்கொன்று இங்கொன்றுமாக பேசிக் கொண்டே சுமார் 1லீ மைல் நடந்தோம். சங்கேத இடம் சென்று மற்ற எல்லோருடனும் சேர்ந்து சம்பாஷித்தோம். பிறகு வீட்டுக்கு திரும்பி அன்று மாலையும் இரவும் கழித்தோம். தானாக வந்த விஷயங்களைப் பற்றித்தான் பேசினோமே ஒழிய குறிப்பாக எதையும் வருத்தி ஒன்றும் பேசவில்லை. இவைகளிலேயே அனேக விஷயங்கள் கலந்து கொண்டன.

முடிவு என்ன வென்றால் இன்றைய இரு கட்சி கிளர்ச்சிகளும் எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதும், சேர்ந்து இன்ன இன்ன காரியம் செய்தால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நலன் ஏற்படும் என்பதும் பேசி ஒரு அபிப்பிராயத்துக்கு வந்த விஷயங்களாகும். அவரை விட எனக்கு இருவரும் கலந்து ஒற்றுமையாய் ஒரு வேலை செய்யக்கூடிய காலம் வராதா என்கின்ற ஆசை ததும்பி இருந்தது.

அவ்வளவு பெரிய விஷயம் பேச அந்த சந்தர்ப்பம் போதாது என்கின்ற எண்ணமும் இருந்தது.

ஆனால் சில விஷயங்களில் இருவருக்கும் நேர்மாறான அபிப்பிராயம் இருப்பதும் அது விஷயத்தில் ஒத்து வர முடியாதே என்று பயப்படக் கூடிய அம்சங்களும் வெளியாயிற்று.

எப்படி இருந்த போதிலும் ஒரு சமயத்தில் கூடுவோம் என்கின்ற நம்பிக்கை குறையவில்லை.

இவ்வளவுதான் நாங்கள் கலந்து பேசியதின் தத்துவமாகும்.

ஈ.வெ.ரா.

குடி அரசு துணைத் தலையங்கம் 14.06.1936

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: