தோழர்களே! இன்று கொடுக்கப்பட்டிருக்கும் விஷயம் மிகவும் முக்கியமான விஷயம். இதைப்பற்றி ஒவ்வொருவரும் தங்கள் தங்களபிப் பிராயங்களைச் சொன்னார்கள். நான் தலைவர் என்கின்ற முறையில் முடிவுரையாக என் அபிப்பிராயத்தை கூறுகிறேன்.

நான் ஒரு எதிர் நீச்சக்காரன். என்ன காரணத்தாலோ நம் நாட்டு மக்களின் பெரும்பான்மையான அபிப்பிராயத்துக்கு நான் மாறுபட்டவனாக இருந்து வருகிறேன். பழமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாய்க் காணப்படுகிறது. நானோ பழமைப்பித்தை வெறுக்கிறவனாக இருக்கிறேன். அதனாலேயே நான் வெகு பேர்களால் வெறுக்கப்படுகிறேன். ஆனாலும் அறிவாளிகள் சீக்கிரம் என் பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது.

கிராமமும் ஆசிரியரும் என்கின்ற பொருள் இன்றைய கூட்ட விஷயமாகும். அதைப்பற்றி மூவர் பேசினார்கள். அது சம்பந்தமாய் என் அபிப்பிராயத்தை தலைவர் முடிவுரை என்கின்ற முறையில் நான் பேசுகிறேன். ஆசிரியர்களை முதலில் எடுத்துக்கொள்ளுவோம்.

இன்றைய ஆசிரியர்களைப் பற்றி எனக்கு அதிக மதிப்புக் கிடையாது. அவர்கள் அறிவுக்கு முட்டுக்கட்டை ஆனவர்கள் என்பதே எனது அபிப்பிராயம். இந்த நாட்டில் யாருக்காவது கல்வி அவசியம் என்றால் அது ஆசிரியர்களுக்கே ஆகும். பயன் இல்லாததும் பொறுப்பில்லாததுமான பதவி ஒன்று இருக்கின்றது என்றால் அது ஆசிரியர் பதவியே ஆகும். எனது தோழர்களிலும் சிலர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அறிவு உண்டு என்று நான் நினைத்திருக்கிறேன். ஆனால் அந்த அறிவை அவர்கள் ஆசிரியத் தன்மையில் பயன்படுத்த முடிவதில்லை. ஏனெனில் அவர்கள் படிப்புக்குப் பொறுப்பாளிகளும் அல்ல; பிள்ளைகளின் அறிவுக்குப் பொறுப்பாளிகளும் அல்ல. அவர்கள் கவலையும் பொறுப்பும் தங்கள் எஜமானர்களை திருப்தி செய்து வாழ்க்கை நடத்த வேண்டியது என்கின்ற ஒன்றேயாகும். "பாப்பாத்தியம்மா மாடு வந்ததா பிடித்து கட்டிக்கொள்" என்பதோடு மேய்ப்பவன் பொறுப்பு தீர்ந்துவிடுகிறது. அதுபோல்தான் இன்றைய உபாத்தியாயர்கள் பொறுப்பு. அவர்கள் மீது எனக்குள்ள வெறுப்பினால் நான் இப்படிச் சொல்லவில்லை. அவர்களை அந்த அளவுக்கே நிர்பந்தப்படுத்தி வைத்திருக்கும் ஆசிரியர் தன்மையையே நான் சொல்லுகிறேன். பரீக்ஷையில் பிள்ளைகள் தேரும் கணக்கைப் பாருங்கள். பிறகு அந்தப்படிப்பு எதற்கு பயன்படுகிறது என்கின்ற அனுபவத்தைப் பாருங்கள். அதற்கு ஏதாவது கேள்விமுறை இருக்கிறதா என்பதையும் பாருங்கள். இப்படிப்பட்ட பலனுக்கு காரணஸ்தர்களாய் இருக்கிற ஆசிரியர்களை எந்த அளவுக்கு நாம் மதிக்கக்கூடும். இங்கிலீஷ் ஆட்சி ஏற்பட்டு 200 வருஷமாகின்றது. இதுவரை 100க்கு 8 பேரே படிக்க முடிந்திருக்கிறது. அதிலும் பட்டணங்களை தள்ளிவிட்டு கிராமங்களை எடுத்துக் கொண்டால் எத்தனை பேர் படித்திருக்க முடியும். அதிலும் மேல்ஜாதிக்காரர்கள் பிரபுக்கள் என்கின்ற கூட்டத்தார்களை தள்ளிவிட்டால் கிராம பாமர மக்களில் 100க்கு 2 பேராவது படித்து இருக்க முடியுமா? படிப்பின் செலவு எவ்வளவு என்று பாருங்கள். இந்நாட்டில் ஒரு மனிதனுடைய சராசரி வரும்படிக்கு மேல் ஒரு மாணாக்கனுடைய படிப்புக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது கல்வி நிலையைவிட ஆசிரியத் தன்மை நிலை மோசமாக இருக்கிறது.

கல்விக்கு எப்படி உத்தேசமே இல்லாமல் படிப்பதும், படிப்பிப்பதும் பிறகு படித்த கல்வியும் மனிதனுக்கு பெரும்பான்மையோருக்கு சஞ்சலத்துக்கும் துக்கத்துக்கும் பயன்படுகின்றதோ, அதுபோல் தான் ஆசிரியர் நிலையும் உத்தேசமே இல்லாமல் ஏற்பட்டு வெறும் வயிற்றுப் பிழைப்புக்கு ஆகவே ஒரு வியாபாரம் போலவும் ஒரு ஜீவனோபாய தொழில் முறை போலவுமே பயன்படுத்தப்பட்டு வருவதாகும். வியாபாரமும், தொழில் முறையும் என்றால் நாணயத்தை பிரதானமாக எண்ணாமல் லாபத்தையே பிரதானமாய் எண்ணும் காரியங்களாகும். ஆகவே இவர்கள் எப்படி மக்களுக்கு அல்லது அறிவுக்கு பொறுப்பாளியாவார்கள்? இவர்களிடம் எப்படி குழந்தைகளை ஒப்புவித்து பிற்கால வாழ்வின் கதியை நிர்ணயிக்க முடியும்?

எதற்கு ஆக கல்விபடிப்பு என்கின்றோமோ, அதற்கு ஏற்ற ஆசிரியர்கள் மிகமிக அருமையாய் இருக்கிறது. ஆசிரியர்கள் என்கின்ற மனிதர்களைப் பற்றி நான் குறைகூறவில்லை. ஆசிரியத்தன்மை என்பதற்கு உள்ள யோக்கியதையைப் பற்றியே நான் சொல்லுகிறேன்.

நான் ஆசிரியரானாலும் சரி, மற்றும் வேறு ஆசிரியர்கள் ஆனாலும் சரி இவ்வளவுதான் முடியும். ஏனென்றால் ஆசிரியர்கள் தயார் செய்யும் நிலை அப்படிப்பட்டது. ஆசிரியர் தனக்கு ஏற்பட்ட உத்திரவுப்படிதான் கல்வி கற்பிக்க வேண்டியவர்களே ஒழிய, தங்களுக்குள்ள அறிவுப்படியோ சக்திப்படியோ கற்பிக்கக் கூடாதவர்களாயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிர்பந்தத்தில் பட்டவர்களாய் இருக்கிறார்கள். ஆசிரியர் பரீக்ஷையென்பதே நிர்பந்தங்கள் பரீக்ஷையென்று சொல்லவேண்டுமே ஒழிய அறிவை உண்டாக்கும் கல்வியை போதிப்பதற்கு தகுதியாக்கும் பரீக்ஷை என்று சொல்லுவதற்கு இல்லை.

இந்த லக்ஷணத்தில் ஒரு ஆசிரியர் பழமைப் பித்தனாகவோ, ஜாதி மத வெறியனாகவோ இருந்துவிட்டால், பிள்ளைகளின் கதி அதோகதிதான். குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொண்ட மாதிரி புத்தி படிக்கப்போய் முட்டாள் தனத்தை ஏற்றுமதி செய்துகொண்டு வந்தது போலவே முடியும்.

ஆதலால் ஆசிரியர்கள் பயன்படக்கூடியவர்களாகயிருக்க வேண்டு மானால் அவர்கள் ஒரு அளவுக்காவது சுதந்தர புத்தியுள்ளவர்களாகவும் பகுத்தறிவுக்கு சிறிதாவது மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும் பிள்ளைகளே பரீக்ஷை பாஸ் செய்யாவிட்டாலும் அறிவுடையவர்களாகவாவது ஆகலாம்.

ஆதலால் நான் முதல் ஆசிரியர்களையே கேட்டுக் கொள்ளுகிறேன். சுதந்தர புத்தியுடையவர்களாக இருங்கள். பகுத்தறிவை நேசியுங்கள். அதை கனம் பண்ணுங்கள். இரட்டை மனப்பான்மையை ஒழியுங்கள். அதாவது உங்கள் சொந்த அபிப்பிராயம் ஒன்று, உங்கள் மதத்துக்கு ஆகவோ, ஜாதிக்காகவோ பின்பற்றி நடப்பது வேறொன்று, பிள்ளைகளுக்கு போதிப்பது மற்றொன்று என்கின்ற மாதிரியான இரட்டை மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்.

இப்படிச் செய்வதற்கு ரொம்ப தைரியம் வேண்டும். ஒரு அளவுக்கு கஷ்ட நஷ்டங்களை ஏற்கவும் தயாராய் இருக்க வேண்டும்.

கிராம சீர்திருத்தம்

இனி கிராமம் என்பது பற்றி சில பேசுகிறேன்.

கிராமம் என்பது மிக பரிதாபகரமான காக்ஷியாகும். கிராம ஜனங்கள் நிலை மிகவும் பரிதாபகரமானதாகும். பட்டணத்துக்காகவே கிராமங்கள் இருந்து வருகின்றன. கிராம சீர்திருத்தம் என்பது பட்டணங்களில் வாழ்பவர்களின் சௌகரியத்துக்கு ஆக செய்யப்படும் காரியமேயாகும். கசாப்புக் கடைக்காரன் ஆட்டைப்பற்றி கவலை கொள்ளுவது போல்தான் பட்டணக்காரன் கிராமத்தைப் பற்றி கவலை கொள்ளுவதாய் இருக்கிறது. அரசியல் தானாகட்டும், சமூக இயல் தான் ஆகட்டும் எவ்வளவுதான் முற்போக்கடைந்தாலும் கிராமக்காரனின் நிலை ஒரே மாதிரிதான். அவன் பாடுபட்டு உழைத்து வஸ்துக்களை உண்டாக்க வேண்டியதும், அதன் பலனை பட்டணக்காரன் அனுபவிப்பதுமல்லாமல் வேறு என்ன நன்மை கிராமக்காரனுக்கு இருக்கிறது? கால்நடை வளர்ப்பைப்பற்றி கிராமவாசிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஒருவர் சொன்னார், கால்நடைகள் வளர்க்கப்பட்டால் கிராமத்துக்கு என்ன லாபம்? பட்டணத்தில் இருப்பவன்தான் பால், தயிர், மோர், நெய் நன்றாக சாப்பிடுவான். கிராமத்தான் சாதத் தண்ணீர் விட்டுத்தான் சாப்பிடுவான். அதுதான் உடலுக்கு பலம் தருமென்று அவன் கற்பிக்கப்பட்டிருக்கிறான். ஒரு கிராமத்தான் குழந்தை தனக்கு கொஞ்சம் நெய்விடும்படி கேட்டால் அவன் தாய்க்கு உடனே கோபம் வந்துவிடும். "உனக்கு நெய்யை ஊற்றிவிட்டால் நாளைக்கு நெய்க்கார மாப்பிள்ளைக்கு என்ன ஊற்றுவது" என்று கேட்பாள். (நெய்க்கார மாப்பிள்ளை என்றால் கிராமங்களில் சுற்றி நெய் வாங்கிக்கொண்டு போய் பட்டணங்களில் விற்கும் நெய் வியாபாரி) இவ்வளவு சிக்கனமாக கிராமத்தார்கள் பிழைத்தும் பயன் என்ன? மீத்து வைத்த பணங்களை வக்கீல்களும், போலீஸ்களும், ரிவினியு கிரிமினல் அதிகாரிகளும் கொள்ளை அடித்துக் கொண்டு போதாக்குறைக்கு அவர்களிடம் பாண்டு எழுதிக் கொள்ளுகிறார்கள்.

கிராமவாசிகளின் சௌகரியத்தைப் பாருங்கள். அவர்களுக்கு நல்ல தண்ணீர் கிடையாது, வெளிச்சம் கிடையாது, சுகாதாரம் கிடையாது, நாடகம் கிடையாது, சினிமா கிடையாது, பார்க்கு, சிங்காரத் தோட்டம் கிடையாது. அதிகாலையில் இருட்டில் போகவேண்டும், அந்தியில் இருட்டின பிறகு வீட்டுக்கு வரவேண்டும். அவனால் அரசன், வியாபாரி, லேவாதேவிக்காரன், மற்ற உத்தியோகஸ்தர்கள் எல்லோரும் பிழைக்கிறார்கள். அப்படிப்பட்டவனுக்கு பட்டணத்தில் வசிக்கும் ஒரு கக்கூசுக்காரன், தெருக் கூட்டி, மேஸ்திரி ஆகியவர்களுக்கு இருக்கும் சௌகரியமும் இல்லை. ஜாதிமுறையில் பறையன் என்றொரு ஜாதி வருணாச்சிரம முறையில் வகுத்திருப்பது போலவே கிராமம் கிராமத்தான் என்கின்ற இரண்டும் வாழ்க்கை முறையில் கீழ்ஜாதியார்கள் போல் வகுக்கப்பட்டிருக்கின்றன.

கிராமம் என்பதாக ஒன்று ஏன் இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. பட்டணத்தான் சௌகரியத்துக்கு என்பதல்லாமல் மற்றபடி கிராமம் எதற்கு என்பது எனக்கு விளங்கவில்லை. இப்படிப்பட்ட கிராமங்களை எல்லாம் அழித்துவிடவேண்டும், எல்லோரையும் பட்டணங்களுக்கு போகும்படி செய்யவேண்டும். அதுதான் கிராம சீர்திருத்தம் என்பேன். "கிராமங்களுக்குப் போ" என்பது இப்போது ஜன தலைவர்கள் என்பவர்கள் உபதேசமாக இருக்கிறது. இதில் ஏதாவது நாணயம் இருக்க முடியுமா? B.A.யும், M.A.யும் கிராமத்துக்குப் போய் மக்களுக்கு என்ன செய்யமுடியும்? கூடவே காப்பி, கோக்கோ, சிகரட்டு, பீடி, கிராமபோன், ரேடியோ கொண்டுபோனால் ஒழிய அங்கு அரை நிமிஷம் B.A., M.A.க்காரன் தங்க முடியுமா? இல்லா விட்டால் தலைவலி, உடல் வலி, தூக்கம் பிடியாமை, மூளை வேலை ஓடாமை என்கின்ற வியாதி வந்துவிடாதா? B.A., M.A. படிப்புக்கும் கிராம முன்னேற்ற வேலைக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா. இவர்கள் கிராமத்துக்குப் போவதால் கிராமக்காரனுக்கு அதிக தொல்லையே அல்லாமல் இவனால் நல்லது என்ன ஆகக்கூடும்?

விவசாய விஷயத்தில் B.A., M.A.க்கு என்ன தெரியும்? கால்நடை விஷயத்தில் என்ன தெரியும்? சுகாதார விஷயத்தில் என்ன தெரியும்? இவன் சொன்னால் கிராமத்தான் கேட்க வேண்டாமா? அவன் புத்தி பழமையில் ஒட்டிக்கொண்டிருக்கும் போது B.A., M.A. யாருக்குச் சொல்லுவான்? சொன்னபடி கிராமத்தான் கேட்பதாயிருந்தாலும், அந்தப்படி செய்ய இருவருக்கும் பணம் முதலிய சாதன சௌகரியங்கள் எங்கே என்று பாருங்கள். கிராமங்களுக்கு போ என்பது ஒரு பித்தலாட்டமான சொல், அல்லது அர்த்தமற்ற சொல். கிராமத்தானுக்கு இருக்கும் பழமைப்பித்தும், மூடநம்பிக்கையும் ஒழிய வேண்டும்.

இன்றைய B.A., M.A.யும் மூடநம்பிக்கைக்காரனாகவே இருக்கிறான். பழமை பித்தனாகவே இருக்கிறான். பழமைப் பித்துதான் இன்று தேசியமாய் இருக்கிறது. அதை போதிப்பதிலேயே எல்லோரும் ஜனத்தலைவர்களாகி விடுகிறார்கள். இன்று கிராமப்புனருத்தாரண வேலையில் முதல் திட்டம் எல்லோரும் பனங்கருப்பட்டியும் கைக்குத்து அரிசியும் சாப்பிடவேண்டும் என்பதாகும். இதற்கு யார் ஒப்புவார்கள்? இத்தனை பேருக்கும் கைக்குத்து அரிசிக்கு எத்தனை பேர் குத்தவேண்டும்? ஆண் பிள்ளைகள் நெல் குத்துவார்களா? பெண்கள்தான் இனி நெல் குத்துவார்களா? பட்டணங் களிலுள்ள பெண்கள் முறத்தகலம் பட்டுக்கரை சீலையும், வைர நகைகளையும் பூட்டிக்கொண்டு ஆர்மோனியம், வீணை, சதுர்ப்பாட்டு, கதை காலக்ஷேபம் பழகிக்கொண்டு உல்லாசமாய் கேளிக்கையில் இருக்கும்போது கிராமத்து பெண்களை நெல்லுக்குத்தவும், கருப்பட்டி காய்ச்சவும் சொன்னால் அவர்கள் எப்படிக் கேட்பார்கள்? சில மூடங்கள் கேட்பதாகவே வைத்துக்கொண்டாலும் நாம் சொல்வது தான் யோக்கியமாகுமா?

கிராமத்தில் பிறந்ததற்கு ஆக நெல் குத்த வேண்டியதா என்று கேட்கின்றேன்.

ஒரு தோழர் கிராமக் கைத்தொழிலைப் பற்றி பேசினார். கிராமக் கைத் தொழில் என்று ஒன்று ஏன் இருக்க வேண்டும்? பட்டணத்துக்காரனுக்கு எந்திரத் தொழிலும், கிராமத்தானுக்கு கைத்தொழிலும் என்று யார் சிருஷ்டித்தார்கள்? ஏன் அப்படி சிருஷ்டிக்கவேண்டும்? ராட்டினம் சுற்றுவதும், தொடையில் கயிறு திரிப்பதும், மண்வெட்டியிலும், கோடாலியிலும், சுத்தியிலும், மண்வெட்டி, மரம் பிளந்து கல் உடைப்பதும்தான் கிராமத்தானுக்கு சொந்தமா இது தான் கிராம முன்னேற்றமா என்று கேட்கின்றேன். எவ்வித முன்னேற்ற முயற்சியும் இல்லாமல் பட்டணத்தான் எவ்வளவு கொள்ளை அடிக்கிறான். வியாபாரி, லேவாதேவிக்காரன், வக்கீல், வைத்தியன், அதிகாரி, உத்தியோகஸ்தன் ஆகியவர்களின் கொள்ளையை பாருங்கள். இதை ஒழிப்பதல்லவா கிராம முன்னேற்றமாகும். இந்தக் கூட்டத்தாரல்லவா கிராமங்களை கசக்கிப் பிழிகின்றவர்கள். இதைவிட்டுவிட்டு இந்த சாதாரண வாத்தியார்கள் அதிலும் கஞ்சிக்குப் போதாத ஏழை வாத்தியார்கள் மாதம் 15 ரூபாய்க்கு தாளம் போடும் இந்த வாத்தியார்கள் கிராமத்திற்குப் போய் என்ன செய்ய முடியும் என்று கேட்கின்றேன்.

ஏதாவது நீங்கள் கிராமத்துக்குப்போய் செய்ய வேண்டுமானால் அவர்களுடைய பழமைப்பித்தை ஒழியுங்கள் மூடநம்பிக்கையை அகற்றுங்கள். அவர்களை பட்டணவாசிகள் எப்படி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி கண்விழிக்கச் செய்யுங்கள். தலைவிதியை மறக்கடித்து பகுத்தறிவை உண்டாக்குங்கள், அவர்களையெல்லாம் பட்டணங்களுக்கு குடிபோக விரட்டுங்கள். இவ்வளவு நீங்கள் செய்தால் அதுவே கிராம முன்னேற்றமான வேலையாகும். மற்றபடி நீங்கள் என்ன செய்தாலும் அது பயன்படாது. உங்களுக்கும் அதற்கு மேல் சக்தி இருக்காது. சௌகரியமும் சாதனமும் கிடையாது.

உதாரணமாக இராமநாதபுரம் ஜில்லாவில் ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன். அங்கு மீட்டிங்குக்கு 400 பேர்கள் வந்திருந்தார்கள். அவர் களின் 375 பேர்களுக்கு நரம்புச் சிலந்தி நோய் இருந்தது. அந்த ஊர்க்கிணறு, கிணற்று தண்ணீர் மேலே வருவதைவிட மேலேயிருக்கும் தண்ணீர் கிணற்றுக்குள் சுலபத்தில் போகத் தகுந்த மாதிரியான மேயோ கிணறாகும். அதன் தண்ணீரை பரிசுத்தம் செய்ய யாருக்கும் புத்தி கிடையாது. உபாத்தியாயர் ஒருவர் இருந்தார். அவரும் காலில் கட்டுப்போட்டுக் கொண்டுதான் இருந்தார். நான் கேட்டதற்கு அவர் கவனிக்கிறதற்கு ஒருவருமில்லை நான் என்ன செய்ய முடியுமென்று பதில் சொன்னார். இவைகள் எல்லாம் அரசாங்கத்தை பொறுத்த வேலையே ஒழிய பொது ஜன சேவையால் ஆகக்கூடிய காரியமோ, ஒரு திண்ணைப் பள்ளிக்கூட வாத்தியாரால் ஆகக்கூடிய காரியமோ அல்ல. அரசாங்கத்தின் கையில் இருந்த பொறுப்பை ஜனத் தலைவர்கள் என்பவர்கள் பிடுங்கிக்கொண்டு தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்.

இவைகள் மாற்றமடைய வேண்டுமானால் பகுத்தறிவை மக்களுக்கு போதியுங்கள் என்பதுதான் எனது ஆசை. பகுத்தறிவு விஷயத்திலும் நீங்கள் அடிமைப்பட்டிருக்கிறீர்கள். அது விஷயத்தில் உங்கள் அறிவுப்படி நீங்கள் போதிக்க முடியாது. உங்கள் அறிவுப்படி நீங்கள் நடக்கவும் முடியாது என்கின்ற நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரு உபாத்தியாருக்கு மூன்று புத்தி இருக்கின்றன.

அதாவது அவருக்கு சரியென்று தோன்றும் ஆராய்ச்சி புத்தி ஒன்று. பிள்ளைகளுக்கு இன்னபடிதான் கற்பிக்கவேண்டும் என்று படிப்பித்த நிர்பந்த புத்தி இரண்டு. தனக்கு தோன்றுகிறபடியும் தான் படிப்பிக்கிறபடியும் நடக்க முடியாத பழமைப்பித்தும் கட்டுப்பாட்டு நிபந்தனையும் கொண்ட கோழைப் புத்தி மூன்று. இந்த மூன்று புத்திகளுடன் நீங்கள் கிராமங்களை புனருத்தாரணமோ சீர்திருத்தமோ செய்வதென்றால் அது பயப்படக்கூடிய காரியம் தான். ஆனாலும் பகுத்தறிவை பயன்படுத்த தைரியம் கொண்டு விட்டால் இந்த கஷ்டங்கள் சுலபத்தில் ஒழிந்துபோகும் என்றே நினைக்கிறேன்.

குறிப்பு: 23.07.1936 இல் லண்டன் மிஷன் காம்பௌண்ட் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற ஈரோடு லண்டன் மிஷன் போதனா முறை பாடசாலை லிட்டரரி சொசைட்டியின் கூட்டத்தில் ஆற்றிய தலைமை உரை.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 02.08.1936

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: