எந்த எந்தக் காரியங்கள் ஒழுங்காகவும், திறமையாகவும், நாணய மாகவும் நடக்க வேண்டும் என்கின்ற கவலை அரசாங்கத்துக்கு இல்லையோ, அந்தக் காரியங்களைப் பொது ஜனங்கள் தலையில் போட்டுவிட்டு அவை பொது ஜனங்களால் ஊழலாய் நடத்தப்படுவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பது நமது சர்க்காரின் திருவிளையாடலாய் இருந்து வருகிறதே என்று நாம் அனேக முறை சந்தேகிப்பதுண்டு. சில சமயங்களில் உறுதி கொள்வதுமுண்டு.

உதாரணமாக ஸ்தல ஸ்தாபனங்கள் விஷயத்தில் அதாவது ஜில்லா, தாலூக்கா போர்ட், முனிசிபாலிட்டி, பஞ்சாயத்து ஆகிய விஷயங்களில் பொது ஜனங்களும், ஓட்டர்களும், பிரதிநிதிகளும் நடந்து கொள்ளும் மாதிரியும், அதனால் பொது ஜனங்களின் செல்வமும், நலமும் கொள்ளை போய் பாழாவது பற்றியும் நாம் சுமார் 15ஆண்டுகாலமாகவே வறட்டுக் கூப்பாடு போட்டும், சர்க்காராரும் அனேக விஷயங்களில் கைப்பிடியாய் பிடித்து கண்ணாடியில் தெரிவதுபோல் உண்மைகள் கண்டும், கட்சி அபிமானம் காரணமாகவும் ஜாதி அபிமானம் காரணமாகவும் அதைப் பற்றியதொரு நடவடிக்கையும் திருத்தப்பாடும் செய்யாமல் இருந்து விட்டு இப்பொழுதுதான் அதுவும் காங்கிரஸ்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங்களை அரசியல் கிளர்ச்சிக்கு அனுகூலமாய் உபயோகப்படுத்தி பாழாக்கி விடுவார்கள் என்கின்ற பயம் வந்தவுடன் ஒரு அளவுக்கு அவற்றை ஒழுங்காக நடைபெறும்படி முயற்சித்து வருகிறார்கள்.

இன்னும் அவற்றில் செய்ய வேண்டிய திருத்தங்கள் அனேகம் இருக்கின்றன.

அதாவது சிப்பந்திகளை சர்வீஸ் கமிஷனிலேயே நியமிக்கச் செய்ய வேண்டியதும்,

கண்ட்ராக்டுகள் கொடுக்கும் விஷயத்திலும் பொது ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களுக்குச் சிறிதும் சம்மந்தமில்லாமலும்,

மாகாணம் பூராவுக்கும் ஒரே மாதிரியான, சிப்பந்திகள், சம்பளங்கள், வேலை பங்கீடுகள் ஆகியவை இருக்கும்படியாகவும், குறைந்த அளவு அந்தந்த ஜில்லாவுக்குள் உள்ள ஜில்லா போர்ட், முனிசிபாலிட்டி, பஞ்சாயத்து ஆகிய ஸ்தாபனங்களுக்குள்ளாவது சிப்பந்திகளை 2 வருஷத்துக்கு ஒரு முறையாவது மாற்றிவிடும்படியாகவும் ஆன ஏற்பாடுகளும், திட்டங்களும் இருந்து வந்தால் இப்பொழுது நடைபெற்று வரும் அக்கிரமங்களிலும் பகுதிக்கு மேல் குறைந்துவிட வழி ஏற்படும்.

அரசாங்கத்தாருக்குப் பொறுப்புள்ள மற்ற எல்லா இலாக்காக்களிலும் அரசாங்கத்தார் இப்படித்தான் நடந்து வருகிறார்கள்.

ஆனால் சுயாட்சி கொடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்ட சில இலாக்காக்களில் மாத்திரம் மக்கள் சுயராஜ்யத்துக்கு லாயக்கில்லை என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகவோ, அல்லது தங்களுடைய பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவோ அல்லது வேறு எந்தக் காரியத்துக்காகவோ இவ்வளவு முக்கியமான விஷயத்தில் அதாவது கல்வி, சுகாதாரம் முதலாகிய காரியத்தில் இவ்வளவு கோளாறும் ஊழலும் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருப்பது விளங்கவில்லை. ஆனாலும் இது கண்டிக்கக்கூடாத விஷயம் என்று சொல்ல முடியாது.

முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு ஆகியவைகளிடம் போலீசு இலாக்கா, மது இலாக்கா முதலியவைகளையும் ஒப்புவித்துவிட வேண்டும் என்பது நமது அபிப்பிராயமாகும். அதற்கு வேண்டிய அபிப்பிராயம் சொல்லும் பொறுப்பில் பெரும்பாகம் பொது ஜனங்களுக்கு கொடுப்பதில் நமக்கு ஆக்ஷேபணை இல்லை. ஆனால் நிர்வாக நடத்துதலான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அதிலிருந்து தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதும், பொது ஜனங்களை சண்டையிட்டுக் கொள்ளும்படி ஸ்தல ஸ்தாபன யந்திரத்தை அமைப்பதும் நேர்மையாகாது என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

கூட்டுறவு இலாக்கா

கூட்டுறவு இலாக்கா என்பது ஸ்தல சுயாட்சி என்பதைப் போன்ற மற்றொரு முக்கிய விஷயமாகும். இது பெரிதும் ஏழை மக்களைப் பொறுத்த விஷயம் என்பதோடு மாத்திரமல்லாமல் செல்வவான்கள், பெரிய மிராசுதார்கள், வன்நெஞ்ச வட்டிக் கடைக்காரர்கள், வழிப்பறி வியாபாரிகள் முதலிய கூட்டத்தார்களிடமிருந்து ஏழை மக்களையும், ஏழை விவசாயி களையும் காப்பாற்றுவதற்கான ஸ்தாபனங்கள் கொண்ட இலாக்காவாகும்.

இப்படிப்பட்ட அருமையானதும், சமூக வாழ்வுக்கு இன்றியமை யாததுமான இலாக்காவானது மூத்த தாரத்துப் பிள்ளையை இளயாள் கவனிப்பது போல் கவனிக்கப்பட்டு வருகிறது.

அதாவது மூத்த தாரத்துப் பிள்ளையிடம் இளையாள் தனக்கு வேண்டிய வேலைகளை யெல்லாம் வாங்கிக் கொள்ளுவதும் அதற்கு வேண்டிய சவுகரியத்தில் கவலையே இல்லாமலிருப்பதுமான தன்மையில் இருந்து வருகின்றது.

நமது மாகாணத்தில் கூட்டுறவு ஸ்தாபனங்கள் இரண்டொரு ஜில்லாக்கள் தவிர மற்ற இடங்களில் வெகுமோசமான நிலையில் இருக்கின்றன.

ஜெயில்கள் தோறும் கூட்டுறவு ஸ்தாபனங்களில் நிர்வாகம் பார்த்து மோசம் செய்த கைதிகள் இருப்பதை நேரில் கண்டோம். மற்றும் கூட்டுறவு இலாகா ஊழல்கள் அதாவது மேற்பார்வை இலாக்கா அதிகாரிகள் கவனிக்க வேண்டியது அல்லாததும், கண்டுபிடிக்க முடியாததுமான நிலையில் எவ்வளவு ஊழல்கள் ஆங்காங்கு இருக்கின்றது என்பது இதில் எழுதி முடியாத அளவினதாகும்.

ஏழைகள் நலனுக்கு என்று சொல்லப்பட்டும் இந்த இலாக்கா நிர்வாகம் முழுவதும் செல்வவான்கள் கையிலும், மேல்ஜாதிக்காரர்கள் கையிலும், அரசியலின் மூலம் தங்கள் அந்தஸ்தையும், வாழ்க்கையையும் உயர்த்திக் கொள்ளவும், நிலைநாட்டிக் கொள்ளவும், நினைத்துக் கொண்டிருக்கும் நேர்மையும், யோக்கியப் பொறுப்பும் நாணையமும் அற்றவர்கள் கையிலும் இருந்து வருவது எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

இன்றைய தினம் கூட்டுறவு இலாக்கா நிர்வாகத்தில் இருந்து வரும் ஆட்கள் பெரும்பாகம் அந் நிர்வாக சலுகைகளைத் தங்கள் சொந்தக் காரியங் களுக்கும் அரசியல் லாபத்துக்கும் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பதற்கு அனேக ஆதாரங்கள் நம் கையில் இருந்து வருகின்றன.

கோவாப்ரேட்டிவ் ஸ்தாபனங்களில் தங்களுக்கு உள்ள செல்வாக்கைக் கொண்டே சட்டசபை, ஜில்லாபோர்ட், முனிசிபாலிட்டி ஆகிய ஸ்தாபனங் களுக்கு அபேக்ஷகராய் நின்று வெற்றி பெற பலர் காத்திருக்கிறார்கள்.

கூட்டுறவு ஸ்தாபன சிப்பந்திகளைத் தங்கள் எலக்க்ஷன்களுக்கு வேலை செய்யும் தரகர்களாக நியமித்துப் பயனடைகிறார்கள்.

தங்களுக்கு வேலை செய்யாதவர்களையோ தங்கள் பந்துமித்திரர் களுக்கு வேலை செய்யாதவர்களையோ தண்டிப்பதற்கும் புத்தி கற்பிப்பதற்கும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

இதுபோலவே தங்களுக்கு வேண்டிய சிப்பந்திகளுக்கு "ஊரார் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே" என்பது போல் கண்ணை மூடிக் கொண்டு அவர்கள் எவ்வளவு திறமை இன்மையும், இழி குணமும் படைத்தவர்களானாலும், சம்பளங்களை ஒன்றுக்கு இரண்டாய், மூன்றாய், நான்காய்கூட உயர்த்திக் கொடுப்பதும், தங்களுடைய சுய நலனுக்கு வேலை செய்யாதவராகவோ, சரிவரக் கவனிக்காதவர்களாகவோ இருந்தால் அந்த சிப்பந்திக்கு சம்பளம் குறைப்பதும், நீக்குவதும் அசௌகரியமான இடத்திற்கு மாற்றுவதுமான அக்கிரமங்கள் செய்து வருகிறார்கள்.

கடன் கொடுத்தல், திருப்பி வாங்குதல் ஆகிய காரியங்களிலும், அரசியல் தன்மைகளையும் எலக்ஷன் தன்மையையும் குறி வைத்து, கொடுக்கக் கூடாதவனுக்குக் கொடுப்பதும், கொடுக்கக் கூடியவனுக்கு மறுப்பதுமான காரியங்கள் செய்வதும்,

இவ்வளவும் போதாமல் நிர்வாகம் தப்பித் தவறி பார்ப்பன ஆதிக்கத்துக்குப் போய் விட்டால் அங்கு ஜாதி வித்தியாசம் தாண்டவமாடுவதும், ஸ்தாபனம் பூரா பார்ப்பன அக்கிரகாரமாக்குவதும்,

கடன் கொடுத்ததில் 100க்கு 90 கடன்கள் சோம்பேறி கூட்ட நன்மைக்குப் பயன்படுவதும், பாடுபடும் ஏழை மக்கள் விஷயம் அலட்சியப்படுத்தப்படுவதும், மற்றும் அந்த நிர்வாகத்தில் தாங்களே சிரஞ்சீவியாய் இருப்பதற்குத் தகுந்தபடி பங்குக்காரர்களை, ஓட்டர்களைக் கற்பித்துக் கொள்ளுவதும்,

தங்களுடைய சுயநலத்துக்கு பயன்பட மாட்டான் என்று தெரிந்தால் அவனை ஸ்தாபனத்துக்குப் பக்கத்தில் வரவொட்டாமல் துரத்தி அடிப்பதும்,

இலாக்கா மேற்பார்வை அதிகாரிகளைக் கைவசப்படுத்திக் கொண்டு, அல்லது வேறு செல்வாக்கில் மிரட்டி தங்களுக்கு வேண்டியபடி (பைலாக்கள்) சட்டம் செய்து கொள்ளுவதும்,

கடன் அவசியமிருக்கிறவர்களும், கூட்டுறவு இலாக்காவின் முக்கிய தத்துவமும் அலட்சியம் செய்யப்பட்டு அவசியமில்லாத செல்வவான்களுக்குப் பெருங்கடன்கள் கொடுப்பதும்,

நிர்வாகத் தலைமையில் வக்கீலோ, பாங்கிக்காரரோ, பெரிய மிராசுதாரோ அமர்ந்து கொண்டு வக்கீல் கட்சிக்காரனுக்குக் கடன் கொடுத்து பீசு பெறவும், பாங்கிக்காரன் தன்னிடம் கடன் வாங்கி தவணை தப்பியவனுக்குக் கடன் கொடுத்து வராக் கடனை வசூலிப்பதும், மிராசுதாரன் தான் பூமியைக் குத்தகைக்குக் கொடுத்த சிறு விவசாயியின் குத்தகை பாக்கிக்காரனுக்குக் கடன் கொடுத்து வசூலிக்க முடியாத குத்தகை பாக்கியையும் லிமிட்டேஷன் ஆன பாக்கிகளையும் வசூல் செய்து கொள்ளுபவர்களுக்குமே இன்று கூட்டுறவு ஸ்தாபனங்கள் ஆளாகி வருவதை யாரும் மறுக்க முடியாது.

பூமி அடமான கடன் பாங்கி

பூமி அடமானக் கடன் பாங்கி என்பது யாருக்கும் ஜவாப்தாரியாய் இருக்க வேண்டாத நிலையில் பொது ஜனப் பிரதிநிதி என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் பொறுப்பற்ற அல்லது தங்கள் பொறுப்பை உணராத ஒரு அரசாங்கத்தின் முறை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் இந்த ஸ்தாபனம் கடன்பட்ட விவசாயிகளின் கஷ்டத்தை நிவர்த்தி செய்ய ஏற்பட்டது. அதுவும் எதிர்பாராத அசவுகரியங்களால், சம்பவங்களால், விளைவில்லாததால், பஞ்சத்தால், விலை இல்லாதது முதலிய காரியங்களால் கடன்பட்டுப்போன விவசாயிகள் மிராசுதார்கள் ஆகியவர்களின் கஷ்டத்தை ஒரு அளவுக்கு நிவர்த்திக்க ஏற்பட்ட ஸ்தாபனமே ஒழிய பூமி எங்கிருக்கிறது, எப்படி விளைகின்றது, குத்தகைக்காரன் எப்படி நடந்து கொண்டான் என்பவை போன்றவைகளைச் சிறிதும் கூட கவனியாமல் மோட்டார் வைத்துக் கொண்டு தாசி வீட்டிலும், சீமைச் சாராயக் கடையிலும், சூதாட்டக் கிளப்புகளிலும் 24 மணி நேரத்தையும் கழித்துக் கொண்டு எலக்ஷன்களுக்கு 10 ஆயிரம் 20 ஆயிரம் 50 ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்து கொண்டு கடன்காரர்களான மிராசுதாரர்களுக்கும், ஜமீன்தாரர்களுக்கும், பட்டக்காரர்களுக்கும் கடன் கொடுத்து ஏழை விவசாயிகளை மேலுமேலும் கொடுமைப்படுத்துகிறதற்காக ஏற்பட்ட ஸ்தாபனங்கள் அல்ல என்பது யாவரும் அறிந்ததாகும்.

அப்படி இருந்த போதிலும் அதன் நிர்வாகங்கள் பெரிதும் பொறுப்பற்றவர்கள் கையிலேயே கொடுக்கப்பட்டும், இருந்து வரவும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சர்க்கார் குடியானவர்களுக்குக் கடன் கொடுப்பதிலாவது ஒரு பொறுப்பு இருக்கிறது.

அதாவது சர்க்கார் லோன் என்பதில் ஒருவனுடைய பூமியையும் அவனுடைய தேவையையும் கவனித்து கடன் கொடுக்கவும், அதை கிரமப்படி நிர்பந்தமாய் வசூலிக்கவும் ஆன பொறுப்பு இருந்து வருகின்றது.

சர்க்கார் லோன் (கடன்) கொடுக்கும் முறையில் பூராப் பணமும் குடியானவனுக்குப் போய்ச் சேராவிட்டாலும் (அதாவது அனேக இடங்களில் 100க்கு 15 ரூபாய் வீதம் கமிஷன் எடுக்கப்பட்டு 7லீ ரூபாய் தாசில்தாருக்கும் 3 ரூபாய் ரிவினியூ இனிஸ்பெக்டருக்கும், 2லீ ரூ. கணக்குப் பிள்ளைக்கும், 2 ரூபாய் மணியகாரனுக்குமாக பங்கிட்டுக் கொள்வதானாலும் (இது சத்திய கீர்த்திகளாக þ அதிகாரிகள் இருந்தால் மாத்திரம் இல்லாவிட்டால் சில சமயங்களில் 100க்கு 25 வீதம்கூட ஈரவாசி குறைந்துவிடும்.) இந்த அதிகாரிகளுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

ஆனால் லேண்ட் மார்ட்டிகேஜ் பாங் என்று சொல்லப்படும் நில அடமானக் கடன் பாங்கி நிர்வாகத்திற்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை.

இந்த லேண்ட் மார்டிகேஜ் பாங்கிகளுக்குக் கொடுக்கப்படும் பணம் முழுவதும் சர்க்கார் பொறுப்பேற்று வட்டிக்கும் சர்க்கார் பொறுப்பேற்றுப் பிறத்தியாரிடமிருந்து வாங்கிக் கொடுக்கப்படும் பணமாகும்.

இந்த பாங்கிக்கு அசல் ரூபா குடி போய் விட்டாலும், வட்டி வருவாய் குறைந்து விட்டாலும் பாங்கி நிர்வாகிகளுக்கு எவ்வித பொறுப்பும் கிடையாது. சம்மந்தப்பட்ட பொது ஜனங்களுக்குப் பொறுப்புக் கிடையாது. அந்த நஷ்டம் பூராவையும் சர்க்காரே பொறுத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் அதன் நிர்வாகம் பொறுப்பில்லாத வக்கீல் களிடத்திலும், வட்டிக்கடைக்காரர்களிடத்திலும் சிறு மீன்களைத் தின்னும் பெரிய மீன்களான மிராசுதார்களிடத்திலும் இருப்பதென்றால் இதில் சர்க்காரால் பொறுப்பும், கவலையும் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறதா? என்பது நமக்குப் புரியவில்லை.

இந்த உண்மைகளை ஆட்சேபிக்கும் தோழர்கள் யாராவது இருந்தால் அவர்கள் நாம் எழுதி இருக்கும் குறைகள் ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் கேட்பார்களானால் புள்ளி விபரங்களோடு காட்டுவதற்குத் தயாராய் இருக்கிறோம்.

ஆகவே அரசாங்கத்தால் இந்த கூட்டுறவு பாங்கு ஸ்தாபனம், நில அடமான பாங்கி ஸ்தாபனம் ஆகியவைகளின் மேல் பார்வை மாத்திரமல்லாமல் நிர்வாகத்தையே முனிசிபாலிட்டிபோல் ஒரு சர்க்கார் அதிகாரியை (கோவாப்ரேட்டிவ் கமிஷனர்) வைத்து நிர்வாகம் செய்வார்களானால் அது மிகவும் பயன்படுவதோடு இந்தக் கூட்டுறவு ஸ்தாபனங்கள் மூலம் மக்களுக்குப் பிரயோசனப்படக்கூடிய வியாபாரம், கைத்தொழில், விவசாயம் முதலிய அனேக காரியங்களைச் செய்யவும் கூடும். வேலை இல்லாத மக்களுக்கு பதினாயிரக்கணக்கான பேர்களுக்கு வேலை கொடுக்கலாம். கூட்டுப் பண்ணையம் (Collective farm) செய்வதன் மூலம் பூமி திருத்தத்தையும், விவசாயத்தில் யந்திரங்கள் பயன்படுத்தக் கூடியதையும், அதிக விளை பொருள்களையும், நல்ல சத்துள்ள பொருள்களையும் உற்பத்தி செய்வதும் ஆன காரியங்கள் செய்யலாம். ஆகவே நமது மாகாண கூட்டுறவு இலாக்கா மந்திரியவர்கள் இந்தக் காரியங்களைக் கவனித்து இதற்கு ஏற்ற முறையில் இலாக்காவைத் திருத்தி அமைக்கும்படியும் வேண்டுவதோடு சுயநலம் இல்லாத சட்டசபை மெம்பர்கள் இதை வலியுருத்தி அமுலுக்கு வரும்படி செய்யக் கோருகிறோம்.

தோழர் பெரியர் -குடி அரசு - தலையங்கம் - 10.02.1935

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: