தற்காலம் பள்ளிக்கூடங்களில் போதிக்கப்பட்டு வரும் படிப்பின் பிரயோஜனம் அற்ற தன்மையைப் பற்றிக் கல்வி நிபுணர்களும், கல்வியதிகாரி களும், அரசியல்வாதிகளும், சீர்திருத்தக்காரர்களும் ஏகமனதாய் ஒப்புக் கொண்டு வெகு காலமாகவே சீர்திருத்தம் பண்ண வேண்டும் என்று கூச்சலிட்டு வருகிறார்கள். நாமும் பல கூட்டங்களில் தற்காலக் கல்வி முறையைக் கண்டித்துப் பேசி வருவதோடுங்கூட பல மகாநாடுகளில் கல்வியைச் சீர்திருத்த வேண்டும் என்றும், மக்களுடைய மூடநம்பிக்கைகள் ஒழியவும், அவர்களுடைய அறிவு விளக்கமுறவும் தகுந்த பாடப் புத்தகங்கள் வெளிவர வேண்டுமென்றும் இந்தப் பத்து வருஷ காலமாகவே தீர்மானங்கள் மூலம் வெளியிட்டிருக்கின்றோம்.

இப்பொழுது பாடமாக வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் பெரும் பாலும், ஜாதி உயர்வுகளையும் மதச் சண்டைகளையும் தூண்டிவிடக்கூடிய ஒன்றுக்கொன்று முரண்பட்ட மத விஷயங்களையும், அறிவுக்கும் அனுபோகத்துக்கும் ஒத்துவராததும் மக்களுடைய வாழ்க்கையைத் துன்மார்க்க வழியில் செலுத்துவதற்குத் தூண்டக் கூடியதும் ஆகிய புராணக் கதைகளையும் போதிப்பதாகவே இருக்கின்றன என்பதை பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளே சொல்லிக் காட்டுகின்றார்கள். இதற்கு ஏற்றாற்போல் பள்ளிக் கூட ஆசிரியர்களும் மேற்கூறிய மூடக் கொள்கைகளை மாணவர்களின் மண்டைகளில் செலுத்துவதற்கென்றே பயிற்சியளிக்கப்பட்டுப் பள்ளிக்கூடங் களில் உபாத்தியாயர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட பிரயோஜனமில்லாத படிப்பிற்கு, பிரயோஜன இல்லாமற் போனாலும் சிறுவர்களின் பிற்கால வாழ்க்கையைத் தவறான வழியில் திரும்பாமலாவது இருக்கிறதா என்று பார்த்தால் அப்படியும் இல்லாமல் அவர்களுடைய பிற்கால வாழ்வைச் சுயமரியாதை அற்ற அவமரியாதை வாழ்வாக்கக்கூடிய படிப்பிற்கு ஆகும் செலவு ஏராளமாக இருக்கின்றது. குறைந்த அளவு படிப்பாகக் கருதப்படும் S.S.L.C. வரையிலும் ஒருவன் படிக்க வேண்டுமானால், ஆரம்ப முதல் S.S.L.C. வரைக்கும் சம்பளம் மாத்திரம் 400 ரூபாயாவது ஆகிறது. வீட்டில் ஒரு வாத்தியார் வைக்க ஆரம்பித்தால் அதற்கும் 400, 500 ரூபாயாகி விடுகிறது.

இதற்கு மேல் புத்தகங்களுக்காகவும், நோட்டுகளுக்காகவும், உபாயத்தியாயர்களால் அவ்வப்பொழுது விதிக்கப்படும் வரிகளுக்காகவும் ஆகும் செலவு அளவில்லால் சம்பளத்திற்கு மேல் போய் விடுகிறது என்பதைப் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கும் பெற்றோர்கள் நன்றாய் அறிவார்கள். எல்லாவற்றையும் விட பாடபுத்தகங்களின் மூலம், பெற்றோர் களிடமிருந்து அடித்துப் பறிக்கப்படும் பொருள்களே மிகவும் அதிகமாகும்.

பெரும்பாலும், ஜில்லாக் கல்வி அதிகாரிகள், டிப்டி இன்ஸ்பெக்டர்கள், சூப்பர்வைசர்கள் முதலான கல்வி அதிகாரிகளும், பள்ளிக் கூட தலைமை உதவி உபாத்திமார்களும், ஜில்லா போர்டு பிரசிடெண்டுகளும், முனிசிபல் சேர்மன்களும், கமிஷனர்களும், தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட பள்ளிக்கூடங் களையெல்லாம் புத்தக வியாபாரம் பண்ணிப் பணம் சம்பாதிக்கும் ஒரு வியாபார ஸ்தலமாக எண்ணி நடத்தி வருகிறார்களே ஒழிய, உண்மையாகப் பொது ஜன நன்மைக்கான படிப்பைப் போதிக்கும் கல்விச் சாலைகளாக நினைக்கவில்லை என்றே நாம் கருதுகிறோம். எங்கோ சில பேர் இதற்கு விலக்காக இருப்பார்களானால் அதைக் கொண்டு நாம் கூறுவது தவறு என்று ஏற்பட்டுவிடாது.

எந்தக் காரணத்தைக் கொண்டு பள்ளிக்கூடங்களையெல்லாம் வியாபார ஸ்தலங்களென்று சொல்லுகிறோம் என்பதையும் விளக்கிவிட விரும்புகிறோம்.

தாராளமாக ஒரு அணா அல்லது ஒன்றரை அணா விலை பெறக்கூடிய புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் என்ற பெயரினால் 10 அணா, 12 அணா, 1 ரூபாய் வரையிலும் விலை வைத்து விற்கப்படுகின்றன. இம்மாதிரியான புத்தகங்களை ஏராளமாக விற்பனை செய்து பொது ஜனங்களுடைய பணங்களைக் கொள்ளையடிக்கப் பல புத்தக வியாபாரிகள் ஆயிரம் பதினாயிரம் ரூபாய் செலவழித்து கல்வியதிகாரிகள், ஜில்லா போர்டு பிரசிடெண்டுகள், முனிசிபல் சேர்மன்கள், கமிஷனர்கள், உபாத்திமார்கள் ஆகியவர்களைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொள்ளுகிறார்கள். இவர் களுக்குத் தாராளமாக லெஞ்சங்களும், கமிஷன்களும்கூட புத்தக வியாபாரி களால் கொடுக்கப்படுகின்றன. புத்தக வியாபாரிகளாக இருப்பவர்கள், புத்தகம் எழுதிக் கொடுப்பவர்களுக்குக் கொடுக்கும் பணம் புத்தகங்களை அச்சிடுவதற்குச் செலவு செய்யும் பணம், அதை பாடப் புத்தகச் சங்கத்தார் அங்கீகரிப்பதற்காகச் செலவு செய்யும் பணம், தங்களிடம் புத்தகம் வாங்கி விற்பவர்களுக்குக் கமிஷன் கொடுக்கும் பணம் புத்தகங்களைப் பள்ளிக் கூடங்களில் பாடமாக வைப்பதற்காகப் பள்ளிகூட நிர்வாகஸ்தர் களுக்குக் கொடுக்க வேண்டிய லெஞ்சம், இந்தப் புத்தக வியாபாரக் கொள்ளையை இன்னும் பலப்படுத்துவதற்காகவே அவர்கள் அரசியல் கட்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு, முனிசிபல் கௌன்சிலர்களாகவும், சேர்மன்களாகவும், ஜில்லா போர்டு மெம்பர்களாகவும், பிரசிடெண்டுகளாகவும், எம்.எல்.சி.களாகவும், யூனிவர்சிட்டி மெம்பர்களாகவும், எஜுகேஷன் கவுன்சில் மெம்பர்களாகவும், பிரசிடெண்ட்களாகவும் ஆவதற்குச் செலவு செய்யும் பணம் ஆகிய எல்லாப் பணங்களையும் பள்ளிக்கூடப் புத்தகங்களின் தலையில் வைத்துக் கல்வியின் பேரால் பொது ஜனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள்.

இதற்காகவே புத்தக வியாபாரிகளின் முயற்சியினால் பள்ளிக்கூடங் களில் ஒவ்வொரு வருஷமும் பாட புத்தகங்கள் அனாவசியமாய் மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு வகுப்பிற்கு இந்த வருஷத்திற்குப் பாடமாக வைக்கப்பட்ட புஸ்தகம் அடுத்த வருஷம் வைக்கப்படுவதில்லை. ஒரு வருஷத்தில் வைக்கப் பட்ட புஸ்தகமே அடுத்த வருஷமும் வைக்கப்படுமானால் ஒருவாறு புஸ்தகம் வாங்கப்படும் செலவிலாவது கொஞ்சம் குறைவு ஏற்படும் என்று சொல்லலாம். கீழ் வகுப்பிலிருந்து மேல் வகுப்புக்கு வரும் பிள்ளைகளிடமுள்ள பழைய புத்தகங்களை ஏழை மக்கள் அரை விலைக்கோ, கால் விலைக்கோ வாங்கிக் கொள்ளலாம். ஒரு வகுப்பிலேயே இரண்டு வருஷங்கள் தங்கிப் படிக்க நேரிடுகின்ற பிள்ளைகளுக்குப் புத்தகம் வாங்க வேண்டிய செலவே இல்லாமற் போய்விடும்.

ஆனால் புத்தக வியாபாரிகளைப் பொறுத்த வரையில் புத்தக விற்பனை அதிகமாவதற்கு இடமில்லாமற் போய்விடுகின்றது. அவர்களிடமிருந்து லெஞ்சம் வாங்கும் கூட்டத்தார்க்கும் கிடைக்கக்கூடிய லாபத் தொகையின் வீதம் குறைந்து போய் விடும். இந்தக் காரணத்தாலேயே புத்தக வியாபாரிகளும் மற்றவர் களும் சேர்ந்து கொண்டு ஒவ்வொரு வருஷமும், பள்ளிகூட பாடப்புத்தகங் களை மாற்றிக் கொண்டு வருகிறார்களென்பதில் அனுமானிக்க இடமே இல்லை.

தமது பிள்ளைகளைப் படிக்க வைக்கப் பள்ளிக்கூடம் அனுப்பும் பெற்றோர்களுக்கு இவ்வாறு மறைமுகமாக வரி விதிக்கும் கொடுமையைத் தடுக்க வேண்டியது அரசாங்கத்தாரின் கடமையாகும். அடிக்கடி பாடப் புத்தகங்களை மாற்றமாலிருப்பதன் மூலம், சிறிதளவு பெற்றோர்களின் செலவைக் குறைக்கலாம். ஆதலால், இத்தனை வருஷத்திற்குப் பிறகு தான், அவசியமிருந்தால் புத்தகங்களை மாற்றலாம் என்று அரசாங்கத்தாரே ஒரு நிர்பந்தமான நிபந்தனையை ஏற்படுத்த வேண்டுமென்று சில கல்வியதி காரிகளே தங்கள் அபிப்பிராயங்களை வெளியிட்டு வந்தார்கள். இதன் பயனாக அரசாங்கத்தார், "ஐந்து வருஷங்களுக்கு ஒரு முறை தான் பாடப் புத்தகங்களை மாற்ற வேண்டும்" என்று ஒரு உத்திரவு பிறப்பிக்க உத்தேசித்திருப்பதாகத் தெரிகிறது. இவ்விஷயம் தெரிந்தவுடன், புத்தக வியாபாரிகள் பலர், தாங்கள் அடிக்கும் கொள்ளை லாபத்துக்கு ஆபத்து வந்துவிட்டதென்று அறிந்து அவ்வாறு அரசாங்கத்தார் உத்திரவிடக் கூடா தென்று கூச்சலிடத் தொடங்கிவிட்டார்கள். இவர்களுடைய எதிர்ப்பையோ, வேண்டுகோளையோ, செல்வாக்கையோ, தயவையோ லட்சியம் செய்யாமல், அரசாங்கத்தார் தாம் செய்ய உத்தேசித்துக் கொண்டிருக்கும் காரியத்தைச் செய்து முடிப்பதனாலும் அதனால் முழுப் பிரயோஜனமும் ஏற்பட்டு விடாதென்றே நாம் கூறுவோம்.

உண்மையில் அரசாங்கத்தாரும், கல்வி மந்திரியும், கல்வி விஷயத்தில் பொது ஜனங்களுக்கு ஏதாவது நன்மையோ, அல்லது செலவு குறையும் படியோ செய்யும் எண்ணமுடையவர்களானால் பாடப் புத்தகங்களை எல்லாம் எழுதுவித்து அச்சாக்கி வெளியிடும் வேலையைத் தாங்களே மேற்கொள்ள வேண்டுமென்றே நாம் அபிப்பிராயப்படுகிறோம். தற்பொழுது S.S.L.C. வகுப்புக்கும் அதற்கு மேற்பட்ட காலேஜ் வகுப்பு களுக்கும், அரசாங்கத்தாரே புத்தகங்களை வெளியிட்டும், ஏற்படுத்தியும் வருவது போலவே S.S.L.C.க்கும் கீழ்ப்பட்ட எல்லா வகுப்புக்களுக்கும் வேண்டிய புத்தகங்களை யெல்லாம் வெளியிட்டு வருவதால் ஒன்றும் நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டு விடப் போவதில்லை. இக்காரியம் மக்களுக்கு பேருபகாரமாய் இருக்கும்.

தனிப்பட்ட மனிதர்கள் பாடப் புத்தகங்களை வெளியிட்டுப் பொது ஜனங்களின் பொருளைக் கொள்ளையாய்க் கொண்டு முதலாளிகளாகி ஏழைப் பெற்றோர்களைக் கஷ்டப்படுத்துவதற்கு இடங்கொடாமல், அரசாங்கமே இந்தப் புத்தக வெளியீட்டு வேலையை மேற்கொள்ளு மானால், அதனால் சில நன்மைகள் உண்டாகவும் இடமிருக்கிறது.

முதலாவது ஓரளவாவது மதச்சண்டை, சாதிச்சண்டைகளை உண்டாக்காததும், மக்களுடைய மூடநம்பிக்கைகளைப் போக்கி அறிவை யுண்டாக்கக் கூடியதுமான விஞ்ஞானம் முதலிய அவசியமான விஷயங் களடங்கிய புத்தகங்களை வெளியிட முயற்சிக்கலாம்.

இரண்டாவது, இக்காரியத்தை மேற்கொள்வதனால், புத்தகங்கள் எழுதுவது, செலக்ஷன் செய்வது, அச்சிடுவது, விற்பனை செய்வது ஆகிய காரியங்களின் மூலம், படித்து விட்டு வேலை இல்லாமல்யிருக்கின்றவர் களில் சிலருக்கும், தொழிலாளர்களில் சிலருக்கும் வேலை கொடுக்கக்கூடிய வசதி ஏற்படுகிறது.

மூன்றாவதாக இந்தப் புத்தக வெளியீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்தை கல்விக்கே செலவு செய்து, பொது ஜனங்கள் கல்விக்காகச் செலவு செய்யும் அதிகச் செலவில் கொஞ்சம் குறையச் செய்வதன் மூலம் தேசத்தில் கல்வி அறிவைக் கொஞ்சம் அதிகமாகவே பரவும்படியும் செய்யலாம்.

ஆதலால், ஏழைகளின் பணத்தைக் கொள்ளையடிக்க விரும்புவோர் களின் கூச்சலைச் சிறிதும் பொருட்படுத்தாமல், அரசாங்கத்தார் இக்காரியத்தைச் செய்ய தைரியத்தோடு முன்வர வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கல்வி மந்திரி இந்தக் காரியத்தை கவனிப்பாரா அல்லது புஸ்தக வியாபாரிகளுக்குப் பயந்து நாள்களை எண்ணிக் கொண்டு இருப்பாரா?

- குடி அரசு துணைத் தலையங்கம் 10.02.1935

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: