கானாடுகாத்தான் தோழர் வைசு. ஷண்முகம் அவர்களை நமது தோழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை.

அவர் நாட்டுக்கோட்டை நகரத்து வகுப்பைச் சேர்ந்தவர். இந்நாட்டில் காந்தி கிளர்ச்சி கிளம்புவதற்கு முன்பாகவே அதாவது சுமார் 20 வருஷத்திற்கு முன்பே செட்டிநாட்டில் சமூக சீர்திருத்தம் என்னும் பேரால் ஒரு பெருங் கிளர்ச்சியை கிளப்பி விட்டு அதில் முனைந்து வேலை செய்து கொண்டிருந்த இளம் வாலிபர்களில் தோழர் வைசு. ஷண்முகம் முதன்மை யானவரும், முக்கியமானவருமாய் இருந்தவர். அவரது முயற்சியாலும் அவரது தோழர்களது முயற்சியாலும் செட்டிநாட்டில் சமூகத் துறையில் ஓரளவு சீர்திருத்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதோடு இன்று அச்சமூகத்தில் கலப்பு விவாகம், விதவைகளை மணத்தல், கல்யாண ரத்து விவாகம், பெண்கள் விவாக விஷயத்தில் தங்கள் பெற்றோருக்கு அடிமையாகாமல் தங்கள் இஷ்டப்படி கணவர்களைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுதல், இஷ்டப்படாத கணவரிடம் இருந்து பிரிந்து விடுதல் ஆகிய காரியங்கள் ஏற்பட்டதும், ஆடம்பரச் செலவுகள் குறைக்கப்பட்டு சிக்கனங்கள் கையாடும் மனப்பான்மை ஏற்பட்டதும், லட்சம் 10 லட்சக் கணக்கில் ரூபாய்களை கல்லுக்கும், மண்ணுக்குமாகக் காசைக் கொட்டி, கோயில், கோபுரங்கள் ஆகியவைகளுக்காக என்று பாழாக்குவதும், வேத பாட சாலை, பிராமண சமாராதனை, பிராமணர்களுக்கு அன்ன சத்திரம் என்றும் பல வகையில் பாழாக்கப்பட்டும் வந்த பணங்கள் இப்போது பள்ளிக்கூடம், தீண்டாதார் ஆச்சிரமம் ஆகியவைகளில் செலவழிக்க மனந் திரும்பும்படி செய்ததும் முதலாகிய காரியங்களுக்கு இக் கூட்டத்தார் முயற்சிகளே தூண்டுகோல் என்று சொல்லலாம்.

மற்றும் காங்கிரஸ் காந்தி கிளர்ச்சி ஏற்பட்ட போதும் அக் கிளர்ச்சியில் தோழர் ஷண்முகம் முழு மனதோடு இறங்கி வேலை செய்ததல்லாமல் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களையும் உதவி இருப்பதும் யாரும் அறியாததல்ல.

தோழர் வ.வெ.சு. அய்யர் அவர்கள் ஆச்சிரமம் வைப்பதாகச் சொன்னதும் ரூ.3000 கொடுத்து இடம் வாங்கிக் கொடுத்தார்.

காந்தியார் செட்டிநாட்டுக்குச் சென்ற காலத்தில் ரூ.1000 கொடுத்தார். மற்றும் பார்ப்பனரல்லாதார் முன்னேற்ற முயற்சிக்கும் திராவிடன் பத்திரிகைக்கும் 1000, 1000 மாய் பல தடவை உதவி யிருக்கிறார்.

இப்படிப்பட்ட தாராளமும், தயாளத்துவமும், உண்மையான பொது நல சேவை ஊக்கமும் தங்கு தடை அற்ற சீர்திருத்த உணர்ச்சியும் கொண்ட இத் தோழர், தனது குடும்ப சம்மந்தமான ஒரு விவகாரத்தில் ஈடுபட்டு சுமார் 3 லக்ஷ ரூபாய் வரை தனது சொந்த முதலும் செலவு செய்து வெளியில் சுமார் ஒரு லக்ஷ ரூபாய் போல் கடன் வாங்கியும் செலவு செய்து கடைசியாக விவகாரம் பிரிவி கவுன்சிலுக்குப் போய் அங்கு 9 லக்ஷ ரூபாய்க்கு இவருக்கு அனுகூலமாக டிக்கிரி கிடைத்து இருக்கிறது. என்றாலும் அதை வசூல் செய்ய இன்னமும் சுமார் லக்ஷ ரூபாய் போல் தேவை. கொஞ்சம் நாள் பிடிக்கும்படியான தாமதமும் டிக்கிரியில் ஏற்பட்டு விட்டது.

விவகாரத்தில் கையில் இருந்த பொருள் எல்லாம் போய்விட்ட தாலும், டிக்கிரியை நிறைவேற்ற கையில் பணமில்லாததாலும், நிலைமை நெருக்கடியானது ஒருபுறம் இருக்க விவகாரத்துக்கு செலவுக்குப் பணம் கொடுத்த கடன்காரர்கள் அவசரப்பட்டு நடவடிக்கைகள் நடத்தி வைசு. ஷண்முகம் அவர்களை இன்சால்வெண்டாக்க விண்ணப்பம் கொடுத்து விட்டார்கள்.

தோழர் ஷண்முகம் சொந்த ரூ.300000 இழந்தும், 900000 ரூ. டிக்கிரியை நிறைவேற்றி வசூல் செய்ய சவுகரியம் இல்லாமல் போயும், குடும்பம் நடைபெறும் விஷயமும் ஒரு பெரிய விடுகதை போல் ஆகியும், கடன்காரர் தொல்லை இவ்வளவுக்கும் மேல் பட்டு தன்னை இன்சால்வெண்டாக்க முன் வந்துவிட்டதால் அதை ஒழிப்பதற்கு கடன்காரர்களிடம் தனக்கு இருக்கும் பூஸ்திகளைக் காட்டி, அதற்கு ஒரு பஞ்சாயத்து ஏற்படுத்தி இன்சால்வெண்டாக இல்லாமல் நேரில் பைசல் செய்து கொள்ளும்படி பல தடவை கடன்காரர்களைக் கெஞ்சியும் அவர்களில் சிலர் வழிக்கு வராததால் இன்சால்வெண்டாகி உயிர் வாழ்வதற்கு இஷ்டப்படாமல் பட்டினி கிடப்பதன் மூலம் கடன்காரர்கள் மனதை இளகச் செய்து இன்சால்வெண்டிலிருந்து தப்பி 9 லட்ச ரூபாய் டிக்கிரி கடனை வசூல் செய்ய ஏதாவது மார்க்கம் ஏற்பாடு செய்யலாம் என்கின்ற எண்ணத்துடன் 21 ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் பட்டினி விரதம் ஆரம்பித்து இருக்கிறார் என்பதாக தெரிய வருகிறது. அவரால் கடன்காரர்களுக்கு காட்டப்பட்டிருக்கும் சொத்துக்கள் கடன் தொகைக்கு சரிசமமாகக் காணப்பட்டாலும் கடன்காரர்களுக்கு ரூபாய் 1க்கு 8 அணாவுக்குக் குறைபடாமல் 12 அணாவுக்கு அதிகப்படாமல் கிடைக்கக் கூடிய அளவுக்கு இருக்கிறதென்றே தெரிய வருகிறது.

இவை அல்லாமல் இன்சால்வெண்ட் இல்லாமல் தோழர் ஷண்முகம் விடுதலை அடைவாரானால் டிக்கிரி பணம் வசூல் செய்யவும், அந்த வசூலி லிருந்து ஒரு பாகம் இந்த கடன்காரர்களின் பாக்கிக்கு ஏதாவது மறுபடியும் வகை செய்யவும் கூடும் என்கின்ற நம்பிக்கை தோழர் ஷண்முகத்துக்கு இருப்பதால் இன்சால்வெண்டு ஆகாமல் இருக்க முயற்சிப்பதாய் தெரிகிறது.

ஆகையால் இந்த நிலையில் தோழர் வைசு. ஷண்முகம் அவர்களது பட்டினி விரதம் வெற்றி பெறுமானால் அவருக்கும் நன்மை; கடன்காரர்களும் நன்மை அடைவதோடு கடன்காரர்களின் நிர்ப்பந்தத்தால் ஷண்முகம் நிலை இப்படி ஆயிற்று என்கின்ற ஒரு மறு இல்லாமலும் இருக்கும். இல்லா விட்டால் அதாவது கடன் கொடுத்தவர்கள் பிடிவாதமாகவோ, பழி வாங்கும் தன்மையாகவோ இருப்பார்களானால் தோழர் வைசு. ஷண்முகத்துக்கு உலக வழக்கில் ஒரு நல்ல பேர் ஏற்படுவதோடு பல தொல்லைகள் இருந்து விலகி முடிவடைந்தவராவார்.

தோழர் பெரியர் - குடி அரசு - கட்டுரை - 24.02.1935

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: