சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை - இது ஆங்கிலத்தில் உள்ள சோஷியலிசம் என்னும் வார்த்தைக்குத் தமிழ் மொழிபெயர்ப்பாகக் கையாளப்படுகிறதென்றாலும், சோஷியலிசம் என்ற வார்த்தையே தேசத்துக்கு ஒருவிதமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. அநேகமாக அவ்வார்த்தை அந்தந்தத் தேச நிலைமைக்கும், தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக்கப் படுகின்றது. சில இடங்களில் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்கின்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது. ஆகவே சோஷியலிசத்துக்கு, இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க, அவ்வார்த்தையில் எவ்விதக் குறிப்பும் இல்லை.

சில இடங்களில் சோஷியலிசத்துக்கும், பொது உடைமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்து வருகிறது. சில இடங்களில் வெகு சாதாரண விஷயத்துக்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடங்களில் பொதுவுடைமை வேறாகவும் சமதர்மம் வேறாகவும் இருந்து வருகின்றன.

இங்கும் சமதர்மம் என்கின்ற வார்த்தைக்கு, சமுகத்துறையில் பொருளாதாரத்துறையிலும் மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய்ப் (பேதமின்றி) வாழவேண்டும் என்பதையே, சமதர்மம் என்று நான் கருத்துக்கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்குப் பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில், மற்ற நாட்டில் சமுகத் துறையில் நமது நாட்டில் உள்ளதுபோன்ற உயர்வு, தாழ்வு, பேதாபேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நமது நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது.

அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால் அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மதநம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்பமாட்டார்கள். ஒப்பமாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல் அவர்களே நமக்கு எதிரிகளாகவும் இருப்பார்கள். ஏனெனில் பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம்மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும், அதை மாற்றாமல் அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல், மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவேயாகும்.

முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டுச் சமதர்மத்துக்கு முதற்படியாகும். அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமுக சாந்திக்கு, மருந்து என்று கருதி இருக்கும் நான், சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேதவாதத்தை முக்கியமாய் வலியுறுத்திவருகிறேன்.

நிற்க, பொதுவாகவே சமதர்மம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கியமானாலும் அதற்குக் கடவுள் உணர்ச்சி மதநம்பிக்கை என்பவைகளுக்கு எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேச சமதர்ம வாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மதநம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானவை என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால் எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்த வரையில் அபிப்பிராயபேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்து தான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிருக்கிறது, ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமுக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழமுடியும். பொருளாதார பேதத்துக்கும் சமுக ஜாதி பேதமுறைதான் பெரிதும் காரணமாய்க் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது.

எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும், நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமெல்லாம், அவர்களில் பிறவியில் கீழ் மேல் நிலை இருக்கும்படியான ஜாதிபேதம் இல்லாததேயாகும். நமது மக்களுக்கு வெறும் பொருளாதாரச் சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி, பொருளாதார சமதர்மம் சொன்னால் தான் உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.

ஆகவே சமுக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம் பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கின்றது என்றும், பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். மதத்தைப் பற்றியோ, மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையை பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால் தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாஸ்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.

நாஸ்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்றுகூடச் சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டனவாக - கடவுளால் கற்பிக்கப்பட்டனவாக - கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும் கருதப்படுகின்றன. உதாரணமாக பகவத்கீதை என்பது இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும் மேலானதுமான புஸ்தகம் என்று பெயர். மகமதியர்கள் குரானை மதிப்பதைவிட கிறிஸ்தவர்கள் பைபிளை மதிப்பதைவிட கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதித்திருக்கிறார்கள். ஆனால், அப்புஸ்தகத்தில் நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதிப்பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. கீதை என்றாலே “பகவான் வாக்கு” என்று அர்த்தம்.

ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில்கூட 100க்கு 99 ¾ பேர்கள், கீதையைப் பகவான் வாக்கு என்று நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஜாதி வித்தியாசம், உயர்வு தாழ்வு ஆகியவைகளைப் பற்றிக் கண்ணீர்விட்ட பெரியார் காந்தியார் கூடக் கீதைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பதாய்ச் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல் கீழ் நிலைகளை எப்படி ஒழிக்க முடியும். கீதை முறை தவறு என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை என்றோ சொல்லத் துணியாவிட்டால் - சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால், ஜாதிப் பிரிவு, ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே இந்தப்படி சொல்லும் படியான ஒருவன் கீதையையும் கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாஸ்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது. ஆதலால் நாஸ்திகனாகவோ நாஸ்திகனாவதற்குத் தயாராகவோ நாஸ்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

இது மாத்திரமல்லாமல் சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமுகத்தில் பிறவி மூலமாகவும் வாழ்வு மூலமாகவும் இன்று இருந்துவரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளியென்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்றும் சொல்லப்படுமானால் - அதை நம்பாமல் இருப்பது நாஸ்திகமானால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகனாகத்தான் வேண்டும். ஏனெனில், செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும் பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதி தத்துவமும் கடவுள் கொடுத்தது என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால் அந்தக் கடவுளை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார்தான் நிலைத்திருக்கவிட்டுக் கொண்டிருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக்கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவரை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படிக்கும், மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கிப் பாடுபட்டு பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டுப் பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தை அற்று, இருக்க இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.

இந்தக் காரியங்களுக்குக் கடவுளைப் பொருத்துகின்றவர்களை யோக்கியர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது. ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது. நாட்டுக் கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக் கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும் பாட்டிற்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா? ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத்தினால், தொழில் முறையினால், மனவலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்டதென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார்தான் சரியானமுறை என்று சொல்லிக்கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான் நல்லநிலை என்று சொல்ல முடியும்? இவற்றையெல்லாம் மாற்றவேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டுவந்து குறுக்கே போட்டால் அக்கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?

மற்றும் கடன்பட்டு வட்டிகொடுத்த மக்களுடையவும், பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப்பணங்களைக் கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கலியாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம், வாண வேடிக்கை செய்யப் பாழ் பண்ணப்படுமானால் யார்தான் சகித்துக்கொண்டு இருக்க முடியும்? இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்கமுடியும்? அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடுவதில் யாருக்கு என்ன நஷ்டம் வரும்? அப்படிப்பட்ட கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படுமானால், அது ஒழிந்து போகுமே என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்? இதையெல்லாம் பார்க்கும்போது

கடவுளைக் கற்பித்தது நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடியவில்லை. சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள், கொடுங் கோன்மைக்காரன், பேராசைக்காரன் முதலிய கூட்டத்தாரின் சுயநலத்துக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய, வேறு காரியத்துக்குக் கடவுள் பயன்படுவதே இல்லை. மனித சமுக வாழ்க்கை ஒழுக்கத்திற்காக என்று கடவுள் சிருஷ்டிக்கப்பட்டிருக்குமானால், அப்படிப்பட்ட கடவுளைப்பற்றி அது இருந்தாலும் அது இல்லாவிட்டாலும் நமக்குக் கவலையில்லை இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டதென்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கிறேன்.

கடவுளைச் சதாகாலம் கட்டியழுது அதனாலேயே ஜீவனம் நடத்தும் அர்ச்சகர்கள் குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் இருக்கிறார்களா? இவர்களுடைய ஒழுக்கக் காரியங்கள் நமக்குத் தெரியாதா? கடவுளுக்காக லட்சம், பத்து லட்சம் பணம் போட்டுக் கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து அய்ந்து வேளை, ஆறு வேளை பூஜை செய்து மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்கமாய் யோக்கியமாய் நடக்கிறார்களா? கடவுளுக்காவே சன்னியாசியாய், குருவாய், சங்கராச்சாரியாராய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய், பாதிரியாய், பெரிய குருவாய் இருக்கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்கமானவர்கள் என்று சந்தேகமறச் சொல்லத்தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்கக் கடவுள் நம்பிக்கை உள்ள சாதாரணப் பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம், யோக்கியதை எதிர் பார்க்கமுடியும்?

எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக நான் கூறவில்லை. மனித சமுக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய், எந்தக் கடவுளும் இருக்கக்கூடாது என்றும், அப்படிப்பட்ட கடவுளை இருக்கவிடக்கூடாது என்றும் தான் வற்புறுத்திக் கூறுகிறேன். மனித வாழ்க்கைக்கும் பேதா பேதங்களுக்கும் கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சம் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?

குடிஅரசு - கட்டுரை - 18.06.1949

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: