இந்திய மத்திய சட்டசபையில் உத்தியோக தொடர்பற்ற மசோதாக்கள் இந்த மாதம் மூன்றாம் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் தோழர் பண்டிட் தாகூர்தாஸ் பார்கவா என்பவர் கொண்டு வந்த ஒரு திருத்த மசோதா, விவாதத்திற்குப் பிறகு பொதுமக்கள் அபிப்பிராயம் அறிவதற்காக என்று திருத்தம் பெற்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

தோழர் பார்கவா அவர்களின் திருத்த மசோதாவின் நோக்கம் என்னவென்றால் 1928ஆம் ஆண்டில் சர்க்காரால் நியமிக்கப்பட்ட கமிட்டி பெண்களின் சம்மத வயது சம்பந்தமாகச் செய்த சிபாரிசுகளை அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதாகும்.

கமிட்டி செய்த சிபாரிசுகளுக்குள் முக்கியமாய்க் குறிப்பிடத்தக்கது என்ன? என்றால், விவாகத்திற்குப் புறம்பான பெண்களின் விஷயத்தில் சம்மத வயது 18 ஆகவும் விவாகமான பெண்கள் விஷயத்தில் 15 ஆகவும் உயர்த்தப்பட வேண்டும் என்பதேயாகும்.

விவாகத்திற்குப் புறம்பான பெண்கள், விவாகமான பெண்கள் என்ற இருவகைப் பெண்களையும் பற்றி இங்கு சிறிது விளங்கிக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் மனம் ஒப்பி, அவரவர்கள் ஜாதிக்குள்ளேயே அவரவர்களின் சம்பிரதாயப்படி அல்லது அப்பெற்றோர்களின் மன விருப்பப்படி கல்யாணம் செய்து வைக்கப்பட்ட பெண்கள் விவாகமான பெண்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். இந்த முறையில் கல்யாணம் செய்யப்படாத பெண்கள் அதாவது ஜாதி விட்டு ஜாதியில் (கலப்பு மணம்) கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறவர்களும், விதவையாகி மறுமணம் செய்து கொள்ள விரும்புகிறவர்களும், கல்யாணமே செய்து கொள்ளாமல், தேவைப்பட்ட ஆடவர்களை கூடி விட்டுத் தனிவாழ்க்கை வாழவேண்டுமென்று விரும்புகின்ற பெண்களும், “விவாகத்திற்குப் புறம்பான பெண்கள் ஆவார்கள்” என்று குறிப்பிடப்படுகின்றது என்று கூறலாம்.

இங்க குறிப்பிட்ட விவாகமான பெண்கள், தங்களின் கணவன்மாரைக் கூட வேண்டுமானால் அப்போது அவர்களுக்கு 15 வயது ஆக வேண்டும் என்பதும் விவாகமாகாத பெண்கள், தம் மனத்திற்கு விரும்பிய கணவனையோ அல்லது ஆடவர்களையோ கூட வேண்டுமானால் அப்போது அவர்களுக்கு 18 வயதாக ஆக வேண்டும் என்றும், அதாவது இப்போதிருக்கின்ற 14 வயது (விவாகமான பெண்ணின் சம்மத வயது) 16 வயது (விவாகத்திற்கு புறம்பான பெண்களின் சம்மத வயது) என்ற சட்டங்களைத் திருத்தி 15 வயது 18 என்பதாக உயர்த்த வேண்டும் என்பதுதான் இந்தத் திருத்த மசோதாவின் கருத்தாகும்.

சாரதாச் சட்டம் ஏற்பட்ட பிறகு இப்போதிருக்கிற விவாக முறைச் சட்டங்களை வகுத்துப் பார்ப்போமானால் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  1. ஜாதிக்குள்ளேயே சம்பிரதாய முறை கெடாமல் செய்து கொள்ளுகின்ற கலியாணம். இதற்குப் பெண்ணின் சம்மத வயது 14 ஆக இருக்க வேண்டும்.
  2. ஜாதிக்குள்ளேயோ அல்லது கலப்பு மணமாகவோ இரண்டு ஆண், பெண்கள் இஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்துவதற்கு முன்வந்து செய்து கொள்ளும் (ஸ்பெஷல் மேரியேஜ்) பதிவுத்திருமணம். இதற்குப் பெண்ணின் சுயேச்சையான சம்மத வயது 21 ஆக இருக்க வேண்டும்.
  3. இந்த இரண்டு வகையிலும் இல்லாமல் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கூட வேண்டுமானால் அப்போது பெண்ணிற்கு 16 வயது ஆக இருக்க வேண்டும். அதாவது இஷ்டப்பட்ட ஒரு ஆணை ஒரு பெண் கூட்டிக் கொண்டு போவதாயிருந்தால், பெண்ணுக்கு வயது 16 ஆக இருக்க வேண்டும்

இதுதான் இப்போதிருக்கின்ற கல்யாண வருணாசிரம முறையாகும். இதைத் திருத்த வேண்டுமென்பதற்காகக் கொண்டு வந்திருக்கின்ற தோழர் பார்கவா அவர்களின்  திருத்த மசோதா, வருணாசிரம முறையைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் அதாவது சட்ட ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இந்த மூன்று வகையும் ஒழிக்கப்பட்டு எந்த வகையில் விவாகமானாலும், விவாகமாகாது போனாலும் பெண்களின் சம்மத வயது ஒரே வயதாகவே இருக்க வேண்டும் என்ற திருத்தமாக இல்லாமல் வருணாசிரம முறையை காப்பாற்றும் வகையில் கலப்பு மணத்திற்கு இடமில்லாத வகையில் பழைய கருப்பனே கருப்பனாக இருக்கின்றது என்பதைத் திராவிடர் உணர வேண்டும்.

பெற்றோர்கள் பார்த்துச் செய்து வைக்கின்ற அதாவது ஜாதகப் பொருத்தம் பார்த்து அய்யர் கூறுகின்ற ஏற்பாட்டின்படி பெற்றோர்கள் செய்து வைக்கின்ற கல்யாணமே உயர்ந்த கல்யாணம் என்று, ஏற்கனவே இருந்து வருகின்ற முறையைப் பாதுகாத்து, சம்மத வயது மட்டும் 14 ஆக இருப்பதைப் 15ஆக உயர்த்த வேண்டுமாம். வாழப் போகின்ற இரண்டு பேர் இஷ்டப்பட்டுக் கலியாணம் செய்து கொள்ள வந்தால், அப்போது பெண்ணின் வயது 21 ஆக இருக்க வேண்டும் என்கிற பழைய சட்டத்தைப் பற்றிப் பேச்சேயில்லை. அப்படியானால் அதற்கு மட்டும் அதாவது ஒழுங்கான திருமண முறைக்கு மட்டும் பெண்ணின் சுயேச்சையான சம்மத வயது 21 ஆகவே இருக்க வேண்டுமாம்.

ஒரு பெண் தனக்கு விருப்பமான கணவனை அடைய வேண்டும்; பாதுகாப்புக்குச் சட்டமும் துணை செய்ய வேண்டும். என்றெண்ணினால் முடியாது வேண்டுமானால் கலியாணமில்லாமல், வாழ்க்கைக்குப் பாதுகாப்பில்லாமல் இஷ்டப்பட்ட போக்கில் திரியலாம். அதற்கு அனுமதி உண்டு. ஆனால் அதற்கும் 16 வயது ஆக இருப்பதைப் 18 வயது ஆக உயர்த்த வேண்டுமாம். இதுதான் திருத்த மசோதாவின் விளக்கமான கருத்து ஆகும்.

பெண்களின் சம்மத வயது அதாவது ஒரு பெண் ஒரு ஆணைக் கூடுவதற்கேற்ற வயது 15 ஆக இருக்க வேண்டும். 16ஆக இருக்க வேண்டும். 18 ஆக இருக்க வேண்டும். அல்லது 21 ஆக இருக்க வேண்டுமென்று ஏதோ ஒரு பொருத்தமான வயதை நிர்ணயம் செய்வதில் நமக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆட்சேபணையில்லாத்து மட்டுமல்ல அவசியம். தகுந்த வயதை நிர்ணயம் செய்ய வேண்டியதுமாகும்.

சின்ன வயதிலேயே நாட்டின் வெப்பமிகுதியால் நம் நாட்டில் பெண்கள் பக்குவமடைந்து விடுகின்றார்கள். 8 வயது 9 வயதுகளிலே கூடச் சில சிறுமிகள் பக்குவமடைவதைப் பார்த்து வருகின்றோம். பெரும்பாலும் 12 வயதிற்குள்ளாகவே இந்த மாற்றம் நடந்து வருகின்றதென்று சொல்வி விடலாம். பருவமடைந்த உடனேயே விவாகஞ் செய்து கொள்ளுவதற்கு அதாவது  ஒரு ஆடவனோடு கூடுவதற்கு அந்தச் சிறுமி தகுதியானவள் என்று எப்படி சொல்ல முடியும்? இருந்தாலும் தகுதியானவள் என்று நம்பி (ஆரியர் போக்கில்) அவர்களைப் பெரிய மனுஷி ஆகிவிட்டவர்கள் என்றே குறிப்பிட்டு, பருவமடைந்தவுடன் வீட்டிற்குள் அடைத்து, “ஒருவன் கையில் பிடித்து ஒப்புவித்து விட வேண்டும்; இல்லாத வரையில் நிம்மதியில்லை” என்று சொல்லிக் கொண்டு பருவ மடைந்த நாளிலிருந்தே மாப்பிள்ளைகளுக்கு அய்யர் அமைக்கின்ற ஜாதகம் பொருத்தம் என்கின்ற துப்பாக்கியைக் கொண்டு வேட்டையாடி வருவதை நாம் பார்த்து வருகின்றோம். இவ்வாறு சிறுவயதில் அதாவது குடும்ப வாழ்க்கைக்குக் கொஞ்சமும் தகுதியில்லாத நிலையில் கணவனைத் கூடி வாழ்வதினால் அவர்களுக்கு உண்டாகும் உடல்நலக் கேட்டையும் அவர்கள் கலியாணமான மறு வருடத்திலேயே கையில் குழந்தையுடன் காட்சியளிக்கின்ற புதுமையையும் அக்குழந்தைகள் எலிக்குஞ்சுகளைப் போல் நோஞ்சலாகப் பலவீனத்துடன் காணப்படும் கேட்டையும், இதனால் நாட்டு மக்களின் சராசரி வயதும் குறைந்து நாட்டுக்கு உழைப்புச்சக்தியும் ஒரு பக்கத்தில் குறைந்துவிடுகின்ற பெருங்கேட்டையும் மற்றொரு பக்கத்தில் இந்த மாதிரி பலவீனமான சந்ததிகளைப் பற்றிக் கொள்ளும் நோயைப் போக்குவதற்காக ஏற்பட்டு வரும் நாட்டின் பொருட்கேட்டையும், இதற்கு முன்பு பல வகையிலும் அவ்வப்போது எடுத்துச் சொல்லி இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமென்று வற்புறுத்தி வந்த நமக்குப் பெண்களின் சம்மத வயதை உயர்த்துவதிலே எப்படி ஆட்சேபணை இருக்க முடியும்? அவசியம், போதிய வயதை நிர்ணயம் செய்ய வேண்டியதுதான் என்பதையும் அதுவும் 15 வயதாக இல்லாமல் 16 வயதாக நிர்ணயம் செய்யவேண்டியதே நல்லது என்பதையும், 16 வயது ஆனாலும் கூட அந்த வயதிற்குமேல் “டாக்டரின் சர்டிபிகேட்” பெற்று உடல் தகுதியை பரிசோதனை பார்த்துத் கொண்ட பிறகே மணம் செய்ய வேண்டும் என்பதையும் நாம் இங்கு வற்புறுத்திச் சொல்ல ஆசைப்படுகின்றோம்.

ஆனால் விவாக முறையில் வருணாசிரமத்தை ஏன் புகுத்த வேண்டும்? புகுந்திருப்பதை ஏன் திருத்தக்கூடாது. திருத்துவதினால் உண்டாகப்போகும் நஷ்டம் என்ன? இந்த குறைகளுக்குப் பரிகாரமில்லையா? இவைகளைப் பற்றிய பேச்சே திருத்த மசோதாவில் இல்லை. இருந்திருந்தால் ஆச்சரியப்படலாமே தவிர, இல்லாதிருப்பதால் திராவிடர்கள் ஆச்சரியப்படவும் மாட்டார்கள் ஏன்? இப்பொழுது நடைபெறுவது பார்ப்பனிய ராமராஜ்ய ஆட்சியே என்பதைத் திராவிடர்கள் நன்குணர்வார்கள். இந்த ஆட்சியில் திராவிடர்களின் நன்மைக்கான - திராவிட சமுதாயத்தின் வளப்பத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்பதினாலேயே “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற முழக்கத்தை எழுப்பி அதற்காகப் பாடுபட்டு வருகின்றவர்கள் எப்படிப் பார்ப்பனிய ஆட்சியில் நன்மை விளையும், நன்மையான திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்க முடியும்?

பழைய வருணாசிரம்முறை தவறாதிருக்க வேலி பலமாகப் போடப் படுகின்றது என்பதுதான் இதிலிருந்து தெரிகிறதே தவிரப் பாசீசப் பட்டேல் பிரபு சொல்லியிருப்பதைப் போல இப்போதையத் திருத்த மசோதா பாமர மக்களின் மத உணர்ச்சியைப் பாதிக்கக் கூடியது என்று நம்மால் நினைக்கவே முடியவில்லை.  பார்ப்பனர்கள் இம்மசோதாவைக் குறித்து என்ன கருதுகிறார்கள்? பார்ப்பனிய நன்மைக்கு இம்மசோதா வேறு எவ்வாறு இருந்தால் நல்லது என்பவைகளைப்  பார்ப்பனர்கள் (ஏன் என்றால் அவர்கள்தானே பொதுஜனம்) சிந்தித்து முடிவு கூற வேண்டும் என்பதற்காகவே இந்தத் திருத்த மசோதா  பொதுஜன அபிப்பிராயம் அறிய முடிவு கட்டப்பட்டிருக்கின்றது என நாம் உறுதியாய் நம்பலாம்.

திராவிடர்கள் குறிப்பாக காங்கிரஸ் திராவிடர்கள் இதை எண்ணிப் பார்ப்பார்களாக. 16 வயதுவந்த ஒரு பெண் அல்லது 18 வயது வந்த ஒரு பெண் பதிவுத் திருமணம் செய்து கொண்டு ஒழுங்காக வாழுவதற்குச் சட்டம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் திருமணம் என்ற பெயரில்லாமல் கூட்டிக் கொண்டு ஓடுவது, தவறான முறையில் நடந்து கொள்ளுவது ஆகிய செயல்களுக்கு வேண்டுமானால் சட்டம் இடம் கொடுக்கிறது. சட்டத்தின் பெயரால் ஒழுங்கீனத்தை விபசாரத்தை வளர்க்க அனுமதிக்கப்படுகின்றது. காரணம் ஒழுக்கக் கேடு உண்டானாலும் உண்டாகட்டும். வருணாசிரமம் அழிந்து போய்விடக் கூடாது என்ற அச்சத்தைத் தவிர வேறு என்ன கூறமுடியும்?

ஜாதியம் ஒழிய வேண்டும் என்று சொல்லியே தீரவேண்டிய சந்தர்ப்பங்களில் சொல்லி வரும் காங்கிரஸ்காரர் அல்லாமல், உண்மையாகவே ஆசைப்படுகின்ற காங்கிரஸ் திராவிடத் தோழர்களை இது ஜாதியத்தை நிலை நிறுத்துவதா? அல்லது ஒழிக்க முயலுவதா? எனச் சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.

குடிஅரசு - தலையங்கம் - 13.12.1947

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: