காந்தியார் “கலப்பு மண”த்தையும் சமபந்தி போஜனத்தையும், கோவில் நுழைவையும் எதிர்த்தார் என்று பெரியார் அவர்கள் கோபி கூட்டத்திலே பேசியிருக்கிறாரே, இது உண்மையா? காந்தியார் ஒரு பொழுதும் இவற்றை எதிர்த்ததில்லையே ஏன் இந்த அபாண்டம்? என்று மறுக்கிறார்களாம், நமது காங்கிரஸ் திராவிடத் தோழர்கள் சிலர். வாடிப்பட்டியிலுள்ள நம் ஏஜண்ட் இதற்கு விளங்கங்கூற வேண்டுமென்கின்றார்.

காங்கிரஸ் திராவிடத் தோழர்களின் இச்செய்கையை நாம் வரவேற்கின்றோம். இன்னும் எத்தனையோ காங்கிரஸ் தோழர்கள் மேற்படி பேச்சைப் படித்திருப்பார்கள். ஆனால் என்ன எண்ணியிருப்பார்கள். எங்கள் மகாத்மாவா இவற்றை எதிர்த்தார்? பல நாடுகளுக்குச் சென்று பல நாட்டு மக்களோடு பழகிய எங்கள் மகாத்மாவா சமபந்தி போஜனத்தை எதிர்த்தார்? தன் மகனுக்கே தமிழ்நாட்டு ஆச்சாரியாரின் மகளைக்கொண்ட காந்திஜியா, கலப்பு மணத்தை எதிர்த்தார்? கோவிலை விபசார விடுதி என்று கூறி, உருவ வழிபாடு செய்வதை விரும்பாத எமது குருதேவரா கோயில் நுழைவைக் கண்டித்தார்? இதென்ன அக்கிரமம், இப்படியும் ஒரு மாபெரும் பொய்யை - பழியை - மகாத்மாவின் மீது சுமத்துவதற்கு எப்படித்தான் மனம் வந்ததோ இவ்வாறு அநியாயமாகப் பழிசுமத்துகின்ற ஒருவரை எங்கள் கவர்மெண்டாராக இருப்பதால்தானே வெறுமனே விட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் எண்ணியிருக்கலாம். ஏன்? நம் வாடிப்பட்டி காங்கிரஸ் திராவிடத் தோழர்கள்கூட இவ்வாறு எண்ணியிருக்கலாம்.

காந்தியாரின் கபடநாடகத்தையும், ஒரு சொல்லுக்கே பல பொருள்கூறி மயங்கவைப்பதையும், வழுக்கின இடங்களில் அந்தராத்மாவின் ஆதரவைப் பிடிப்பதையும், வருணாசிரமத்தின் பாதுகாவலரே காந்தியார் என்பதையும் சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் அப்போதைக்கப்போது அம்பலப்படுத்தி வந்திருக்கின்றன. ஆனால் அறிந்தவர்கள் எத்தனை பேர்? உண்மையைறிந்து கொள்ள வேண்டுமெனக் கவலைப் பட்டவர்கள் எத்தனை பேர்?

கலப்பு மணத்தைக் குறித்தும் சமபந்தி போஜனத்தைக் குறித்தும் மகாத்மா என்ற பேராத்மாவின் கருத்தைக் கீழே குறிப்பிடுகின்றோம்.

“சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் தேசிய ஒற்றுமைக்குத் தேவையில்லை என்று நான் நம்புகிறேன் சமபந்தி போஜனத்தால் நட்பு உண்டாக்கப்படுகின்றது என்பது என் அனுபவத்திற்கு மாறானது. இது உண்மையானால் (சமபந்தி போஜனம் ஒற்றுமையை உண்டு பண்ணுவது உண்மையானால்) அய்ரோப்பாவில் சண்டையே ஏற்பட்டிராதே. உணவுண்பது என்பது மல ஜலங்கழிப்பதுபோல ஒரு அசிங்கமான செயலேயாகும். உணவுண்பதற்கும் மல ஜலங்கழிப்பதற்கும் என்ன வேறுபாடு என்றால், உணவு உண்டபின்  ஏற்படும் அசவுகரியமும், மல ஜலம் கழித்தபின் ஏற்படும் ஒரு வகை அமைதி உணர்ச்சியுமே இரண்டிற்கும் வேறுபாடு. மல ஜலம் கழிப்பது எப்படித் தனித்தனியே செய்யப்படுகின்றதோ அதுபோல உணவுண்பதிலும் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் (இந்துக்களுக்குள்) சகோதர்ர்களுடைய குழந்தைகள் ஒருவரையொருவர் மணந்து கொள்ளும் பழக்கமில்லை. அவர்களிடையே மணம் இல்லாததினால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதில்லையா? வைதீக வைணவப் பெண்கள் சிலர், தம் குடும்பத்தினருடன் சேர்ந்துண்டதோ, பொதுக்குடத்திலுள்ள நீரைக் குடிப்பதோ இல்லை. அதனால் அவர்களிடையே அன்பு இல்லை என்று சொல்ல முடியுமா? வருணாசிரம தருமம் (ஜாதிப் பிரிவினைகள்) கலப்பு மணத்தையோ சமபந்தி போஜனத்தையோ அனுமதிக்கவில்லை என்பதற்காக, ஜாதிப் பிரிவினைகளைக் கெடுதல் எனக் கூறிவிட முடியாது”

இவை நவஜீவன் என்ற குஜராத்திப் பத்திரிகையில் 1921-22இல் காந்தியார் தம் கைப்பட எழுதியிருப்பதின் ஒரு பகுதியாகும். இதனை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தீண்டப்படாதோருக்கு காந்தியும் காங்கிரசும் சாதித்ததென்ன? என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் நூலில் 276ம் பக்கத்தில் கூறியிருக்கின்றார்.

கோவில் நுழைவை காந்தியார் எதிர்த்தார் என்பதையும் அதே நூலில் அம்பேத்கர் அவர்கள் குறிப்பிடுகின்றார். அதனிலும் விளக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் 1920 முதல் 24 வரையுள்ள “யங் இந்தியாவை” நமது இளந் தோழர்கள் புரட்டிப் பார்க்க வேண்டும். அக்காலங்களில் காந்தியார் பஞ்சமர்களுக்குத் தனித்தனியே கோயிலும் கிணறும் கட்டிக்கொடுக்க வேண்டுமென்று கூறி வந்தார். காந்தியாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பண்டித மாளவியா அவர்கள் கூட பஞ்சமர்களுக்குத் தனிக்கோயில், தனிக்கிணறு வேண்டுமென்று கூறி வந்திருக்கின்றார். வைக்கம் சத்யாகிரகத்தில் பெரியார் அவர்கள் அடைந்த பெரு வெற்றிக்குப் பிறகே, காந்தியார் தமது போக்கைச் சிறிது மாற்றிக் கொண்டு, ஏற்கெனவே சூத்திரர்கள் எந்த அளவு செல்ல அனுமதி உண்டோ, அந்த அளவு பஞ்சமர்களும் செல்வதை அனுமதித்தார் என்பதையும், பிராமணர்கள் கோவிலுக்குள் எங்கெங்கு நுழைகின்றார்களோ அங்கெல்லாம் சூத்திரர்களும், பஞ்சமர்களும் நுழைவதைக் குறித்து நாளது வரை காந்தியார் பேசவில்லை என்பதையும், பூஜை வைப்பது போன்ற செயல்களை, பிராமணரல்லாத மற்றவர்களும் செய்யலாம் என்பதைக் குறித்து ஒரு வார்த்தைகூட இதுவரை சொல்லவில்லை எப்தையும் நமது காங்கிரஸ் திராவிடத் தோழர்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகின்றோம்.

காங்கிரஸ் திராவிட இளைஞர்களே, காங்கிரசின் பெயரால், இன்று விளம்பரமாக ஆடம்பரமாக டாம்பீகமாக நடைபெறும் செயல்களால் ஏமாந்துவிடாதீர்கள். எதனையும் எப்பொழுதும், யார் கூறினாலும் யாரால் கூறப் பட்டிருப்பினும் அதன் உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென ஒரு வழக்கத்தையும் அறிந்ததை ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்ற வழக்கத்தையும், சிக்கல் உண்டாகும்போது மற்றவர்களோடு கலந்து பேசித் தெளிவடைய வேண்டிய முயற்சியை மேற்கொள்ளும் வழக்கத்தையும், தெளிவடைந்த எண்ணங்களைச் செயலுக்குக் கொண்டு வர வேண்டுமென்ற வழக்கத்தையும், மேற்கொள்ள வேண்டுவதே மிக மிகத் தேவை என்று கூறி, அவற்றுள் முதல் வழக்கத்தைக் கடைப்பிடித்த நம் வாடிப்பட்டிக் காங்கிரஸ் தோழர்கள் மற்றைய வழக்கங்களையும் கைக் கொள்ளத் தவறமாட்டார்கள் எனவும் நம்புகின்றோம்.

குடிஅரசு - கட்டுரை - 15.11.1947  

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: