“ஜாதி இரண்டொழிய வேறில்லை” அதாவது இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தோர் என்று கருதியிருந்து வந்த மக்களை என்று ஆரியம் புகுந்து ஜாதிகள் பல வகுத்து ஒவ்வொன்றுக்கும் உயர்வு தாழ்வு கற்பிக்கத் துவங்கிற்றோ, என்று ஆரிய வர்க்கம் தங்களது சூழ்ச்சியை மறைக்கவும் திராவிடமக்கள் துயருறுவதையும் மறைப்பதற்காக ஆரியக் கடவுளையும், மோட்ச லோகத்தையும், நரக லோகத்தையும் கற்பிக்கத் துவங்கிற்றோ, அன்று முதற்கொண்டே திராவிட மக்கள் தங்களது பகுத்தறிவிழந்தது. ஆரியவலையில் - ஆரிய சூழ்ச்சியில் சிக்கி அவர்கள் சொல்லிவரும் அடிமுட்டாள் தனமான காரியங்களையும் நம்பி வந்தார்கள் - நம்பி வருகிறார்கள் என்பதைத் திராவிடர்களின் பூர்வீக நிலையும், வாழ்க்கையும் எவ்வாறிருந்தன? இன்றைய நிலையும் வாழ்வும் எவ்வாறிருக்கிறதென்பதை சீர்தூக்கி பார்ப்பவர்களுக்கு நன்கு  விளங்கும். உண்மையாகவே, நம்மவர்கள் அதாவது திராவிட மக்கள் தாங்கள் இந்நிலைக்கு வந்ததேன்? இதற்குக் காரணமாயிருந்தவர்கள் - இருக்கிறவர்கள் யார் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை எண்ணிப் பார்ப்பார்களேயானால், அன்றே இந்நாட்டில் ஆரியம் ஆழக்குழி தோண்டி வெட்டிப் புதைக்கப்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால், எதையும் எண்ணிப் பார்க்கும் வழக்கந்தான் நம்மவரிடம் கிடையாது. எதற்கும் “அய்யர் சொன்னால் சரி”, “அய்யர் வாக்கே தெய்வவாக்கு” என்று நம்பிவருகிறார்கள் என்பதை நாம் இன்னும் கண்முன் பார்க்கலாம். இத்தகைய நம்பிக்கை எவ்வளவு சீக்கிரம் நம்மவர்களை விட்டு நீங்குகிறதோ அவ்வளவு சீக்கிரத்திலிருக்கிறது நம்மவர்களது முன்னேற்றம். இந்த இருபதாம் நூற்றாண்டில்கூட ஆரியவர்க்கத்தின் ஜம்பப் பேச்சுகளையும், சவடால் வார்த்தைகளையும், முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் வாதங்களையும் மக்கள் கேட்டு வாளா இருந்து வருகிறார்களே என்றுதான் நாம் உள்ளபடி ஆச்சரியப்படுகிறோம். உலகம் விஞ்ஞானத்திலும், பகுத்தறிவிலும் வாயுவேகமாக வளர்ச்சியடைந்து வருகையில், நம் நாட்டினர் மட்டும் அதாவது திராவிட மக்கள் மட்டும் பழைய ஆரிய சூழ்ச்சிகளுக்கும், ஆரிய வஞ்சகத்திற்கும் ஆளாகி வருகிறார்களே என்பதைப் பார்க்கும்பொழுது, உள்ளபடி வருந்தாமலிருக்க முடியவில்லை.

ஏன் இதை இப்பொழுது சொல்லுகிறோம் என்றால், திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம் ஆகிய ஜில்லாக்களில் தோழர் சத்தியமூர்த்தியார் பேசிய பேச்சைப் பார்ப்பதினாலேயே ஆகும். அவரது பேச்சைப் பார்ப்பவர்களுக்கு, இந்த இருபதாம் நூற்றாண்டிலே, இரண்டரை வருடத்திற்குள் இவ்வளவு பெரிய புரட்டுகளைச் செய்துவரும் ஆரிய வர்க்கம், அந்நாளில் எத்தகைய புரட்டுகளைச் செய்திருக்க மாட்டார்கள் என்பது நன்கு விளங்கும். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் - சென்ற பொதுத்தேர்தலின் போது இதே தோழர் சத்தியமூர்த்தி அய்யர் “நீங்கள் வரிகொடுக்க வேண்டியதில்லை; நீங்கள் வரிகொடுத்து வரிகொடுத்து முதுகெலும்பு ஒடிந்திருக்கிறீர்கள்; ஆதலால் வரி கொடுக்க வேண்டாம். இனிமேல் குடிக்கத்தண்ணீர் இல்லையென்ற கவலை வேண்டாம்,  நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டளித்தால் வானிலுள்ள கங்கையைப் பூலோகத்திற்குக் கொண்டுவந்து விடுகிறோம்” என்றெல்லாம் வானமளாவ பேசவில்லையா? என்று கேட்கிறோம். ஆனால், இன்று அவர் செப்புவதைச் சிறிது எண்ணிப்பாருங்கள். உங்களுக்குப் பலவித வசதிகள் செய்யவேண்டி இருக்கிறது. அவைகளைச் செய்யவேண்டியதும் நகரசபைகளின் முக்கியமான கடமை. அதற்கு நீங்கள் அதிகவரி கொடுத்தாக வேண்டும். அதிக வரிவிதிப்பதைக் குறித்து நீங்கள் முணுமுணுத்தல் கூடாது. குடிப்பதற்கு நல்ல தண்ணீர் ஏராளமாகக் கிடைக்கவேண்டுமானால், நீங்கள் தாராளமாக வரிகொடுக்க வேண்டும் என்றெல்லாம் இதோபதேசம் செய்கிறார்கள். இரண்டரை ஆண்டுகட்கு முன் சொன்னதற்கும், இப்பொழுது சொல்லிவருவதற்குமுள்ள வித்தியாசம் எவ்வளவு  இருக்கிறதென்பதை வாசகர்களே எண்ணிப் பாருங்கள். தங்களது புரட்டுகளைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்வார்களே என்ற அச்சம் எள்ளளவாவது இவ்வர்க்கத் தாருக்கு இருக்குமேயானால், இவ்வளவு பச்சையாக, பகிரங்கமாக, முன்னுக்குப்பின் முரணாகப் பேசியிருப்பாரா? அல்லது பொதுமக்களுக்காவது எதையும் எண்ணிப் பார்க்கும் ஆற்றலிருக்குமேயானால், இவ்வாறு  அவ்வர்க்கத்தாரின் புரட்டான வாதங்களைக் கேட்டுக்கொண்டு வாளா இருந்திருப்பார்களா? என்று கேட்கிறோம். தோழர் அய்யரின்  பேச்சு ஒன்றே புரட்டை  உலகுக்கு நன்கு எடுத்துக் காட்டியிருக்குமென்று  நம்புகிறோம். அதாவது, தேர்தல்  காலங்களில் பேசும் பேச்சு வேறு;  தேர்தலுக்குப் பின்னால் பேசும் பேச்சு வேறு என்பதாகும். தேர்தல் பேச்சுக்கும் காரியத்திற்கும் சம்பந்தமில்லை; தேர்தலில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், மக்கள் எதையும் தட்டிக் கேட்க மாட்டார்கள், எண்ணிப்பார்க்க மாட்டார்கள். ஆகும் - ஆகாது என்றுகூட கவலை கொள்ளார்கள் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளலாம்.

மக்களுக்கு காங்கிரசிடம் பற்றுதல் குறைந்திருக்கிறதென்று அதிகாரிகள் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தால் அவர்கள் ஏமாற்றமடைவார்கள் என இலேசாக மிரட்டியிருக்கிறார். இந்நாட்டிலே காங்கிரசுக்கு செல்வாக்கு இருக்கிறதென்பதை தோழர் ஆச்சாரியாரும் மற்றவர்களும் சென்ற விடங்களில் எல்லாம் குழப்பமும் கூச்சலும், கலாட்டாவும், போலீஸ் பந்தோபஸ்தும் இருந்து வருவதையும், எதிர் கட்சியினர் அதாவது பெரியாரும் மற்றவர்களும் போகிற இடங்களில் எல்லாம், ஆயிரக்கணக்காக மக்கள் கூடுவதும், மணிக்கணக்காக கூட்டங்கள் நடைபெறுவதும், உபசாரப் பத்திரங்கள் வாசித்தளிப்பதும் ஆன காரியங்களையும் கண்டபின்னும் எவர்தான் காங்கிரசுக்கு இந்நாட்டிலே செல்வாக்கிருக்கிறதென்று எண்ணுவர் எனக் கேட்கிறோம். தங்களுக்கு நாட்டில் ஆதரவிருக்கிறதா, இல்லையா என்பதைத் தங்களுக்குச் சில நகரசபைகள் உபசாரப் பத்திரங்கள் வாசித்தளிப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாமென்றும் பெருமையாகப் பேசுகிறார். நகரசபைகள் உபசாரப் பத்திரங்கள் வாசித்தளித்துவிடுவதினாலே நாட்டிலே செல்வாக்கிருக்கிறதாகவும் நகரசபைகள் உபச்சாரப் பத்திரங்கள் வாசித்தளிக்காததினால் நாட்டிலே செல்வாக்கும் மரியாதையுமில்லையென்று பொருள் கொள்வதானால் சென்னைக்குப் புதியதாக நியமனம் செய்யப்பட்ட மேதகு.சர்.ஆர்தர் ஹோப் கவர்னராக சென்னைக்கு வந்ததும் சென்னை நகரசபையார் உபசாரப் பத்திரம் வாசித்தளிக்காததினால், கவர்னருக்கும் இம்மாகாணத்திலாவது அல்லது சென்னையிலாவது செல்வாக்கோ, மரியாதையோ இல்லையா? அதிகாரிகள் கவுரவிக்க வேண்டாமா? என்று கேட்கிறோம். நகர சபைகள் உபசாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுப்பதென்பது மட்டும் செல்வாக்கு இருக்கிறதென்பதற்கு ஆதாரமாய்விடுமா? என்று கேட்கிறோம். மேலும் நகர சபைகளில் ஜாதி வித்தியாசம், மத வித்தியாசம் புகுத்தக் கூடாது, காட்டக்கூடாது என்று செப்புகிறார் தோழர் மூர்த்தியார். அவர் மேயராகவிருக்கும் சென்னை நகரசபையில் ஜாதி வித்தியாசம், மத வித்தியாசம் காட்டப்படுகிறதா இல்லையா? என்று கேட்கிறோம். தோழர் மூர்த்தியார் கார்ப்பரேஷன் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தகாலையில் கார்ப்பரேஷன் கல்வியதிகாரி விஷயத்திலும், பத்து தலைமை ஆசிரியர்கள் நியமனம் விஷயத்திலும் ஜாதிவித்தியாசம் புகுத்தவில்லையா, காட்டவில்லையா? என்று கேட்கிறோம். இன்றும் கார்ப்பரேஷனில் நடைபெறும் ஒவ்வொரு காரியமும் ஒரு குறிப்பிட்ட வகுப்பாருடைய ஒரு குறிப்பிட்ட கட்சியாருடைய நலத்திற்காக நடைபெறகின்றன அல்லவா? என்று கேட்கிறோம். உண்மை நிலை இவ்வாறிருக்க நகரசபைகளில் ஜாதி வித்தியாசம், மத வித்தியாசம் புகுத்தல் கூடாது என்று இதோபதேசம் செய்வது யாரை ஏய்க்க என்று கேட்கிறோம். சுயமரியாதையும், சுயஉணர்ச்சியும், சுய அறிவையும் உடையவர்கள் இத்தகைய பித்தலாட்டகாரமான காரியங்களை எத்தனை நாளைக்குப் பொறுத்துக்கொண்டிருப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

குடிஅரசு - தலையங்கம் - 12.05.1940

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: