‘இந்து மதம்’ என்பது ஆரியர் மதம் என்றும், இந்துக்கள் என்ற பெயரே வடநாட்டிலிருந்த ஆரியர்களுக்கு அந்நாளில் பாரசீகர் போன்ற அந்நிய நாட்டவர்களால் அளிக்கப்பட்டதென்று சரித்திரம் சாற்றுகிறதென்றும் நாம் அடிக்கடி எழுதி வந்திருக்கிறோம். பாரசீகர் போன்ற அந்நியர்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு  பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே ஆரியர் என்ற ஒரு கூட்டம் இந்தியாவின் வடமேற்குக் கணவாய் வழியாக வந்தனர் என்று சரித்திரங்கள் கூறுவதால்- அறிஞர்கள் பகர்வதால் பாரசீகர்  போன்றவர்கள் இந்தியாவுக்குள் வடமேற்குக் கணவாய் வழியாக நுழைந்தபோது  அவ்வாரியர்களைத்தான் கண்டிருக்க வேண்டும். எனவே அவர்களைத்தான் இந்துக்கள் என்று அழைத்துமிருக்க வேண்டும் என்று நாம் விளக்கியிருக்கிறோம். இன்றும் அதை மெய்ப்பிக்க பல ஆதாரங்கள் தினந்தோறும் வெளியிடப்பட்டே வருகின்றன.

சமீபத்தில் அதாவது சென்ற வாரத்தில் அலகாபாத்திலிருந்து வெளிவரும் ‘லீடர்’ என்ற பத்திரிகையில் தோழர் பகவன்தாஸ் என்பவர் எழுதியுள்ள கட்டுரையொன்றில், “இப்பொழுது இந்துக்கள் என்று சொல்லப்படுபவர் அந்த நாளில்  ஆரியர்கள் என அழைக்கப்பட்டனர்” என  குறிப்பிட்டிருக்கிறார். தோழர் பகவன்தாஸ்  ‘இந்து’ மதத்திலும், இந்து சமுகத்திலும் எவ்வளவு பற்றதலுடையவர், அவைகளில் எவ்வளவு ஆராய்ச்சியுடையவர் என்பதைக் குறித்து நாம் ஒன்றும் புகழ்ந்து எழுதவோ, அறிமுகப் படுத்தவோ தேவையில்லையென்றே கருதுகிறோம். ஆகவே, அவரே இன்று ‘இந்துக்கள்’ என்று அழைக்கப்படுகிறவர்கள் அந்நாளில் ஆரியர் என அழைக்கப்பட்டனர் என்று சொல்வாரேயானால் தமிழர்கள் ‘இந்துக்கள்’ என்று தங்களை  அழைக்க அனுமதிக்கலாமா? என்று கேட்கிறோம். மேலும்  இந்து (ஆரியர்) மதம் வேறு, தமிழர் மதம் வேறு; இந்து (ஆரியர்) கடவுள் வேறு, தமிழர் கடவுள் வேறு; இந்து (ஆரியர்) கலை வேறு, தமிழர் கலை வேறு; இந்து (ஆரியர்) நாகரிகம் வேறு, தமிழர் நாகரிகம் வேறு என்று சொல்வதில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்கிறோம்.

அடுத்தபடியாக,பொதுவாக மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டையாக இருக்கிறதென்று சொல்லப்பட்டாலும், இந்து மதம் என்று சொல்லப்படுகிற ஆரியர் மதம் இருக்கிற அளவுக்கு உலகிலே வேறு எந்த மதமும் இருக்க முடியாது. ஏன் அப்படிச் சொல்லுகிறோம் என்றால், இன்று இந்நாட்டில் காணப்படுகிற ஜாதிப் பிரிவுகளும், பிறப்பினாலே உயர்வு, தாழ்வு கற்பித்தலும், மனிதனை மனிதன் தொடக்கூடாது என்பதும் போன்ற கொடுமைகள் உலகிலே வேறு எந்த நாட்டிலாவது காட்டமுடியுமா? என்று கேட்கிறோம். இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணம் இந்து (ஆரியர்) மதமில்லையென்று யாராலும் சொல்ல முடியுமா? என்று  அறைகூவி அழைக்கின்றோம். தமிழர்களிடையே அந்நாளில் இத்தகைய வேறுபாடுகள் ஜாதி வித்தியாசங்கள் இருந்ததென பழந்தமிழ் நூல்களிலிருந்து ஒரு ஆதாரமாவது எடுத்துக்காட்ட முடியுமா? என்று கேட்கிறோம். மாறாக பழந்தமிழ் நூற்களிலிருந்து தமிழ்மக்கள் தொழிலைக் குறித்துதான் ஒவ்வொரு கூட்டத்தாரும் தனித்தனியாக அப்பெயரால் அழைக்கப்பட்டு வந்தனரே தவிர அவர்களில் ஒருவன் தாழ்ந்தவன் மற்றவன் உயர்ந்தவன் என்ற வேற்றுமையே இருந்ததில்லையென்று எத்தனை ஆதாரங்கள் வேண்டுமானாலும் நம்மால் எடுத்துக்காட்ட முடியும்.

ஆகவே, திராவிட மக்கள் தங்களுக்குள் காணப்படும் வேற்றுமைகளை நீக்கி மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் ஒருவன் மற்றொருவனை எந்த விதத்திலும் அடிமை கொள்ளக்கூடாது என்று  கருதுவார்களேயானால் உடனே தங்களை ‘இந்துக்கள்’ என அழைக்கப்படக்கூடாது என்று  கிளர்ச்சி செய்யவேண்டும். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை முரசுகொட்ட வேண்டும். சங்கநாதம் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் தமிழன் தன்மானத்தோடு, சுயமரியாதையோடு வாழ  முடியும், வடநாட்டான் சுரண்டுதலினின்று விடுதலை பெற முடியும்.

இந்து (ஆரியர்) மதம் இந்நாட்டுக்குச் செய்த கொடுமைகள் எவை எவையென்று நாம் சொன்னோமா- சொல்லி வருகிறோமா அவைகளை ஒன்றுவிடாமல் தோழர் பகவன்தாஸ் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதாவது 3000-க்கு மேற்பட்ட ஜாதிப்பிரிவுகளை  ‘இந்து’ மதம் உண்டு பண்ணியிருக்கிறதென்றும், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், தீண்டப்படுபவர் - தீண்டப்படாதார் என்பன போன்ற வேற்றுமைகளைப் புகுத்தியிருப்பதோடு உயர்ந்த ஜாதி என்று தங்களைக் கருதிக் கொள்பவர்கள் உரிமைகளைக் கொண்டாடுகிறார்களேயல்லாது, அவைகளைச் சரிவரச் செய்ய வில்லையென்றும் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையிலே இவைகள் எல்லாம் களைந்தெறியப்பட வேண்டியவைகளே. ஆனால் இவைகளெல்லாம் களைந்தெறியப் பட்டுவிட்டால் வேறு எதை தோழர் பகவன்தாஸ் ‘இந்து’ மதம் என அழைப்பாரோ நமக்குத் தெரியவில்லை.

ஜாதி என்பது உள்ளபடி நமக்கு உடன்பாடாய் இல்லாவிட்டாலும், வாசத்திற்காக அதை ஒப்புக் கொண்டு தோழர் பகவன்தாஸ் ஜாதி இந்துக்கள் (பார்ப்பனர்கள்) என்கிறவர்கள்  உரிமைகளைக் கொண்டாடுகிறவர்களேயல்லாது, தங்கள் கடமைகளைச் செய்வதில்லை என்று கூறியிருப்பதை நாம் வரவேற்கிறோம். ஏன்? இன்று தோழர் பகவன்தாஸ் கருதுகிறபடி, இந்துக்கள் என்று சொல்லப்படுகிற பார்ப்பனர்கள், அவர்கள் உரிமைப்படி அவர்களது தொழில்களாகிய அறுவகைத் தொழில்களை அதாவது ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேற்பித்திட்டல், ஈதல், ஏற்றல் ஆகிய தொழில்களைச் செய்து வருவார்களேயானால் இந்நாட்டில் பார்ப்பனரல்லாதார் பிரச்சினையே உண்டாகியிருக்காது. அப்படி அவர்கள் (பார்ப்பனர்கள்) செய்வதாயிருந்தால் அய்யரும், அய்யங்காரும், ஆச்சாரியாரும், திவான்களாகவும், மந்திரிகளாகவும் வந்திருக்க முடியுமா? என்று கேட்கிறோம்.

ஆகவே, வயிறு பிழைக்க வந்த கூட்டம், குடியேறிய கூட்டம், “ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியைத் துரத்தியது” என்பதுபோல சிறுகச்சிறுக சமுதாயத் துறையில் ஆதிக்கம் செலுத்தி  வந்து கடைசியில் அரசியலில் புகுந்துகொண்டு, என்றும் தங்கள் ‘தொந்தி’ வாடாமலிருக்க வகை தேடுவதென்றால், அதைக் கண்டிக்க முன்வந்தால், மதத்துக்கு தத்துவார்த்தம் சொல்லி மக்களை ஏய்ப்பதென்றால், எத்தனை நாளைக்கு மானமுள்ள மக்கள் பொறுத்துக்கொண்டிருப்பார்கள் என்று கேட்கிறோம். அண்டிப்பிழைக்க வந்தவன் அடுக்கடுக்காக மாடி கட்டிக்கொண்டு வாழ்வது, மாடி வீட்டிலிருந்தவன் ஒண்டக் குட்டிச் சுவரில்லாது தவிக்கிறானே இதற்கு யார் பொறுப்பாளி, எது இந்த நிலைமைக்குக் கொண்டுவந்ததென்றால் தத்துவார்த்தமா பேசுவது? என்று கேட்கிறோம்.

எனவே, இந்நாட்டைப் பொறுத்தமட்டில், அதாவது தமிழ் நாட்டின் விடுதலையில், திராவிட நாட்டின் விடுதலையில், அக்கறையுடைய ஒவ்வொருவரும், இன்றே ஆரிய மதமாகிய இந்து மதத்திலிருந்து முதலில் விடுதலை பெற வேண்டும். “அதற்காக நான் பாடுபடுவேன்” என ஒவ்வொரு வரும் கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டும்.

கடைசியாக ‘இந்து மதம்’ என்று சொல்லப்படும் ஆரியர் மதம், மனித வர்க்கத்தின் ஒரு பகுதியை மற்றொரு பகுதிக்கு அடிமையாக இருக்கும் பொருட்டு பலவித குருட்டு நம்பிக்கைகளை வளர்த்து மூடபழக்க வழக்கங்களைக் கற்பித்து வந்திருக்கிறது என்றும், அதன் காரணமாகத்தான் ஒருவரை ஒருவர் உயர்ந்தவராகக் கருதும்படி மனதிலே ஒருவித அச்சம் தோன்றிவிடுகிறது என்றும் தமது கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதை நாம் பல சமயம் எடுத்து விளக்கியிருக்கிறோம். தாழ்த்தப்பட்ட சமுகத்தினிடம்தான் குருட்டு நம்பிக்கைகளும், மூடப்பழக்க வழக்கங்களும் அதிகமாகக் காணப்படுகிறதென்றும், அதை ஒழிக்க வேண்டு மானால் அதற்கெல்லாம் காரண பூதமாய் இருப்பதென்னவென்று ஆராய்ந்து பார்த்து மூலகாரணம் ‘இந்து’ மதந்தான் என்று கண்டு அதை அறிவென்ற கோடாரிகொண்டு வெட்டி வீழ்த்த வேண்டுமென்றும் நாம் கூறி வந்திருக்கிறோம். இன்றும் அதைத்தான் மீண்டும் வற்புறுத்துகிறோம். இந்து மதத்திலிருந்து விடுதலை பெறுவதுதான் ஆரிய ஆதிக்கத்திலிருந்து, ஆரிய சூழ்ச்சியிலிருந்து, ஆரியத் தளையிலிருந்து விடுதலை பெறுவதாகும். தமிழர்களே! அந்நன்நாளை எதிர்பார்த்து ஆவன செய்யுங்கள்.

குடிஅரசு – தலையங்கம் - 07.01.1940

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: