periyar with dog

இப்போது நம் இந்திய நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் நிலையும், முஸ்லீம்களின் நிலையும் சமூகம் அரசியல் ஆகியவைகளில் ஒன்று போலவே இருந்து வருகிறது என்று நாம் வெகு நாளாகவே சொல்லி வருகிறோம். இதையே தோழர் ஜின்னா அவர்களும் அலகாபாத்தில் தன்னைக் காண வந்த ஒரு தாழ்த்தப்பட்ட மக்கள் தூது கோஷ்டிக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

இந்து மதப்படிக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சுமத்தப்பட்ட தீண்டாமையானது அவர்கள் செத்தால் ஒழிய - செத்த பிறகும் கூட (தீண்டாமை) ஒழியாது என்பது தத்துவமாகும். இதற்கு இந்துமத வேத சாஸ்திரங்களும் அவைகளில் நிபுணத்துவம் பெற்ற சாஸ்திரிகளது வாக்குகளுமே ஆதாரங்களாகும். அது போலவே இந்து மதப்படி முஸ்லீம்கள் விஷயமும் ஆகும். மற்றும் கவனமாய் பார்த்தால் முஸ்லீம்கள் விஷயம் தீண்டப்படாதவர்களைவிட மோசமானதாகும் என்று தெரியவரும். ஏனெனில் மத அகராதிப்படி ஆதாரப்படி முஸ்லீம்கள் சோனகர் என்றும் மிலேச்சர்களென்றும் அழைக்கப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள். துருக்கியனை அசுரன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களது பாஷையையும், தேசத்தையும் மிலேச்ச பாஷை மிலேச்ச தேசம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே முஸ்லீம்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பவருடன் சேர்க்கப்பட்டவர்கள் என்பது மாத்திரமல்லாமல் அவர்கள் அந்நியர்கள் - இந்தியர்கள் அல்லாதவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இனி பார்ப்பன மந்திரிகள் ஆக்கினைப்படி மக்கள் யாவருக்கும் ஹிந்தி கற்பிக்கப்பட்டு அதன் மூலம் இந்துமத சாஸ்திரங்கள் படிக்கப்படுகிற காலத்தில் முஸ்லீம்கள் தீண்டப்படாதவர்கள் என்பது இன்னும் பலமாக அமுலில் வரப்போகிறது என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

அது மாத்திரமா என்று பார்த்தால் பார்ப்பனரல்லாத மற்ற ஜாதியார்களும் ஜாதிக்கு ஜாதி தொடப்படாதவர்களாகவே ஆகிவிடப் போகிறார்கள் என்பதிலும் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. இப்பொழுதே திருநெல்வேலி வேளாளனும் தஞ்சாவூர் வேளாளனும் கோயமுத்தூர் வேளாளனும் ஒருவர் சாப்பிடுவதை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாதென்றால் - இப்பொழுதே விசுவப் பிராமணாள் என்னும் ஆசாரியும் நகரத்து வைசியன் என்னும் செட்டியாரும் வாணிய வைசியன் என்னும் செட்டியாரும் ஆரிய வைசியன் என்னும் கோமுட்டி செட்டியாரும் ஒருவருக்கொருவர் சாப்பிடுவதை பார்த்தால் தோஷம் - தீட்டு என்றால் இனி ஹிந்தி படித்த பின்பு கூட நாயக்கன், படையாட்சி, நாயுடு, கவுண்டன், உடையார், சடையார், நாடார், ஏகாலி, அம்பட்டர் முதலியவர்களின் கதி என்ன ஆகும் என்பதைப் பற்றி நாம் எடுத்துக் கூற வேண்டியதில்லை. அப்புறம் பஞ்சமர்கள் என்பவர்கள் கதி நினைக்கவே வேண்டியதில்லை.

இந்த மத்தியில் காந்தியார் விரும்பும் வார்தா கல்வித்திட்டம் அமுலுக்கு வந்து அவனவன் ஜாதித்தொழிலே அவனவனுக்கு கற்பிக்கப்படவேண்டும் என்கின்ற முறை ஆரம்பித்துவிட்டால் பதினென் குடி மக்கள் கதி அதோகதிதான் என்பதை எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆகவே இந்த நிலையில் இருக்கும் இந்தியர்களில் முஸ்லீம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இந்த பிறவியில் தீண்டாமையோ, இழிவோ ஒழிவது என்பது காந்தி ராஜ்யத்திலோ, காங்கரஸ் ராஜ்யத்திலோ சுலபத்தில் எதிர்பார்க்கக் கூடிய காரியமல்ல என்பதே நமதபிப்பிராயம்.

இதை உத்தேசித்தே சுமார் இருபது வருஷ காலமாக நாம் தாழ்த்தப்பட்ட மக்களை முஸ்லிம்களுடன் சேர்ந்து கிளர்ச்சி செய்யுங்கள் என்று சொல்லி வருகிறோம். அதை இப்போதாவது வடநாட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் உணர்ந்து ஜனாப் ஜின்னாவிடம் சென்று தங்களை அடைக்கலம் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொண்ட புத்திசாலித்தனத்தை பாராட்டுகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்களை எப்பொழுதும் தலையெடுக்க ஒட்டாமல் இமயமலை போன்ற தடையாய் இருப்பது பூனா ஒப்பந்தமேயாகும். பூனா ஒப்பந்தம் இந்த நிலையில் இனி சுலபத்தில் ஒழிக்கப்பட்டுவிடும் என்று நம்புவதற்கு சிறிதும் இடம் இல்லை.

ஆகவே தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டிருக்கும் பூனா ஒப்பந்தத்தை ஒழிக்கப் பாடுபடுவதைவிட தோழர் அம்பத்கார் அவர்கள் விளம்பரப்படுத்தியபடி இந்து மதத்தை விட்டு வேறு மதம் புகுவதே மேலானதும், சுலபமானதுமான காரியம் என்று சொல்லுவோம்.

கொச்சியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் இன்று அரசியல் சுதந்தரம் பெற்றதற்கு காரணம் தோழர் அய்யப்பன் முதலியவர்கள் இந்து மதத்தை விட்டு விட வேண்டியது என்று செய்த தீர்மானமும் தோழர் டாக்டர் தையல் முதலியவர்கள் முஸ்லீம் மதத்தைத் தழுவியதுமே காரணமாகும்.

அதுபோல் இந்தியாவில் ஒரு தாழ்த்தப்பட்டார் மதம் மாறும் மிஷின் (கூட்டம்) என்று ஒரு கூட்டம் வெளியில் தைரியமாய் புறப்பட்டு தகுந்த செல்வாக்குள்ள தலைவர் தலைமை வகித்து 6 மாத காலத்தில் ஒரு 50 ஆயிரம் பேர்களையாவது முஸ்லீம்களாக ஆக்கிவிட்டால் பூனா ஒப்பந்தம் டபார் என்று உடைந்து போய் திருவாங்கூர் கொச்சி தாழ்த்தப்பட்ட மக்கள் போல் அவரவர்கள் உரிமையையும் சுயமரியாதையையும் கண்டிப்பாக ஒரு நாளில் பெற்று விட முடியும். அப்படிக்கில்லாவிட்டால் தோழர் காந்தியாருக்கும் பார்ப்பனர்களுக்கும் இனியும் பல முனிசாமிகளும் சிவ ஷண்முகங்களும் வண்டி வண்டியாய் கிடைத்துக்கொண்டு தானிருப்பார்கள். கேவலம் ஜெயிலிலேயே ஜாதி பார்க்க முடிவதில்லை. அப்படி இருக்க அதைவிட மோசமான சமூக வாழ்வில் நரகத்தில் உழன்று கொண்டு பசித்திருப்பவன் ஜாதிபார்க்க முடியுமா? ஒரு எலும்புத் துண்டை கண்டாலே நமக்குள் மண்டை உடைத்துக் கொண்டு எதிரிகள் காலை நக்க வேண்டியதுதான். ஆதலால் இன்று தாழ்த்தப் பட்டவர்களின் விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் பூனா ஒப்பந்த உடைப்புக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் அலகாபாத் தூது கோஷ்டி மாதிரியும் தோழர் அம்பத்கார் அபிப்பிராயப்படியும் இந்து மதத்தை விட்டு விலகி முஸ்லீம்களை தஞ்சமடைவதைவிட வேறு வழியில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்களை - இந்துக்கள் - பார்ப்பனர்கள் தங்களுடைய எண்ணிக்கையைப் பெருக்கிக் காட்டுவதற்கும் தங்களுக்கு அடிமைகளாக ஆக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்தி பலன் அடைந்து வருகிறவர்கள் ஆகையால் சுலபத்தில் சுதந்தரமோ சமத்துவமோ கொடுக்க இசைய மாட்டார்கள். ஆதலால் முஸ்லீம்களும் இந்து தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்களும் ஒன்று சேர்ந்தால் இந்தியாவில் இந்துக்கள் மைனாரிட்டி வகுப்பார் ஆகிவிடுவார்கள். அப்போதுதான் வெள்ளைக்காரர்களும் வழிக்கு வருவார்கள் என்பதோடு இந்துக்களுடைய ஜாதி தொல்லைகளும் ஒரு வரியில் ஒழிந்துவிடும்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.01.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: