ஆத்திரப்பட்டு பயன் என்ன?

periyar 231சுயமரியாதை இயக்கமானது நாஸ்திகத்தையும் மதங்கள் ஒழிப்பையும் கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை என்பது பல தடவை விளக்கப்பட்ட விஷயமாகும். ஆனால் சுயமரியாதை மகாநாடுகளில் "மக்கள் சுதந்தரமும் ஒற்றுமையும் சுயமரியாதையும் பெற்று சமூகம் பொருளாதாரம் அரசியல் ஆகிய துறைகளில் சமத்துவமும், சம உரிமையும், விடுதலையும் பெற வேண்டுமானால் மதங்கள் ஒழிக்கப்பட வேண்டும்" என்பதாகவும் இந்தக் கருத்தைக் கொண்டதாகவுமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதுடன் பல சுயமரியாதைத் தோழர்கள் தங்கள் தங்களை பொறுத்த வரையில் ஜாதிமதம் முதலியவைகளை விட்டு விலகி அனுபவத்திலும் அதற்கு ஏற்றதுபோல் நடந்து வருகிறார்கள்.

இந்தக் கருத்தை அனுசரித்தே இந்த தத்துவத்தை அமுலில் கொண்டுவரவே இந்தியாவில் வெகு காலத்திற்கு முன்னிருந்தே பல பெரியார்கள் முயற்சித்து அதற்கு ஏற்ற பல காரியங்கள் செய்தும் வந்திருக்கிறார்கள். சுமார் 100 வருஷங்களுக்கு முன் வங்காளத்தில் "பிரம்ம சமாஜம்" என்னும் ஒரு ஸ்தாபனத்தை தோற்றுவித்த பெரியார்களும் ஜாதி மதம் ஆகியவை ஏதும் இல்லை என்றும் மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்றும் சொல்லி அக்கொள்கைக்கு பிரசாரம் செய்து கடசியாக ஜாதிமதமற்ற ஒரு ஸ்தாபனமாக அதை கையாண்டு இந்தியாவில் பல இடங்களிலும் அதற்கு கிளை ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி பல ஆயிரக்கணக்கான மக்களை அக்கொள்கையைத் தழுவச் செய்துமிருக்கிறார்கள்.

இந்து மதமென்பதிலும் ஞானமார்க்கமென்றோ வேதாந்த மார்க்கமென்றோ சொல்லப்படுபவைகளில் தத்துவங்களில் மதம் ஜாதி எதுவும் இல்லை என்பதும் மற்றும் மக்களும் மற்ற ஜீவராசிகளும் ஒன்றுபோல் பாவிக்கப்பட வேண்டியவை என்பதும் இடம் பெற்றிருப்பது யாரும் அறியாததல்ல.

மேலும் இந்துமதம் என்பதில் உள்பட்ட சைவம் வைணவம் என்பதிலும் மக்களுக்கு தனி ஜாதியோ மதமோ இல்லை என்றும் "சர்வம் விஷ்ணு மயம் ஜெகத்" என்றும் "சர்வம் சிவமயம் ஜெகத்" என்றும் சொல்லப்படுவதோடு இருசாராரும் சமரசமும் சன்மார்க்கமுமே மதமல்லாமல் மற்றெவ்வித மதமோ சமயமோ மார்க்கமோ இல்லை என்பதும் யாவரும் உணர்ந்ததேயாகும்.

மத ஒழிப்புப் பிரசாரத்தால் யாருக்குக் கேடு

ஆகவே சுயமரியாதைக்காரர்கள் மதங்கள் ஒழிய வேண்டும் என்று சொல்வதில் இந்து மதக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களில் தங்களை மாத்திரம் மனித சமூகத்தில் உயர்ந்த பிறவி என்று ஏற்படுத்திக்கொண்டு மற்ற மக்களை பல படிகளாக தாழ்த்தித் தாழ்த்தி பிரித்து வைத்து மக்கள் ஒன்று சேருவதற்கில்லாமல் செய்து அதன் பலனாய் தாங்கள் பாடுபடாமல் வயிறு வளர்த்து உயிர் வாழ்க்கை நடத்தும் கூட்டத்தார் மாத்திரம் "மதம் போகின்றதே, மதம் போய்விடுமே, மதம் போச்சே" என்று கூப்பாடு போடலாமே ஒழிய மதங்கள் போகாமலிருக்க என்று பாடுபடலாமே ஒழிய மற்ற எந்த பிரிவு இந்துவுக்கும் எந்த உட்பிரிவு மார்க்கத்தாருக்கும் கவலைப்பட அவசியமில்லை என்பதே நமதபிப்பிராயம். ஆகையால் சுயமரியாதைக்காரர்களின் மதமொழிப்புப் பிரசாரத்தால் உலகுக்கு எவ்வித கெடுதியும் ஏற்பட்டுவிடும் என்றும் எந்த இந்துவும் பயப்படவேண்டியதில்லை என்றே கருதுகிறோம்.

மதமாற்றம் புதியதல்ல

சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு இந்துக்களில் மலையாளத்தில் ஒரு பெரும் வகுப்பாராகிய ஈழுவ சமூகத்தார் தங்கள் சமூக மகாநாடுகளிலும் அச் சமூக வாலிபர்கள் மகாநாடுகளிலும் மதமொழிக்கும் பிரச்சினையை கொண்டு வந்து நன்றாக ஆலோசித்து இந்து மதத்தையே தங்கள் சமூகம் விட்டு விட்டதாக தீர்மானங்கள் செய்தார்கள். அதுபோலவே பம்பாய் ஆதிதிராவிட சமூகத்தலைவராகிய டாக்டர் அம்பேத்கார் அவர்கள் ஆதிதிராவிடர்கள் இந்து மதத்தை விட்டுவிட வேண்டியது என்றும் தீர்மானம் செய்து இருக்கிறார். என்றாலும் சுயமரியாதை இயக்கம் ஏற்படுவதற்கு ஏறக்குறைய 500, 1000 வருஷ கால முன்பிருந்தே இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இந்து மதத்தை விட்டு அந்நிய மதத்தை ஏற்றுக்கொண்டும் வந்திருக்கிறார்கள்.

அந்நிய மதக்காரர்கள் யாராவது இந்து மதத்துக்கு வந்திருக்கிறார்களா என்று பார்த்தால் அது எண்ணிக்கைக்கு மிக மிகச் சுருக்கமாய் இருக்கும் என்பதோடு அப்படிச் சேர்க்கப்பட்டவர்களுக்கு இந்து மதத்தில் என்ன அந்தஸ்து என்பது இன்னமும் முடிவு செய்யாததும் அரசியல் காரணங்களுக்காக அப்படிப்பட்டவர்களை இந்துக்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடியதாக மாத்திரமுமே இருக்கிறதே அல்லாமல் சமூகத்தில் அப்படிப்பட்டவர்களுக்கு (அதாவது அந்நிய மதத்தில் இருந்துவந்து சேர்ந்தவர்களுக்கு) எவ்வித உரிமையோ நிலைமையோ இருக்கிறது என்று சொல்லமுடியாமலே இருந்துவருகிறது.

இந்த 15 வருஷ காலமாக சுயமரியாதை இயக்கம் தோன்றி இக் குறைகளையும் கொடுமைகளையும் புரட்டுகளையும் முட்டாள்தனங்களையும் வெளியாக்கி கண்டித்து பிரசாரம் செய்து வந்ததின் பலனாகவே இந்தியர்களில் மகமதியரல்லாத மக்களை ஒன்று சேர்க்கவும் மகமதிய சமூகத்திற்கு எதிர் நிற்கவும், இந்துக்கள் என்பவர்கள் இந்து மதத்தை விட்டு ஓடிப்போகாமல் இருக்கவுமே ஏதேதோ சில சில்லறை சீர்திருத்தங்கள் செய்து வருகிறார்கள். அவற்றில் சிலவே தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை கொடுப்பது என்ற உணர்ச்சியும் சில சுதேச சமஸ்தானங்களில் ஆலயப் பிரவேச உரிமை அளித்து இருப்பதுமான காரியங்களும் சமுதாயத் துறையில் குழந்தை மணம் தடுப்பு சட்டமும், விதவை மணம் செல்லும் சட்டமும், பெண்கள் சொத்துரிமை சட்டமும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுக்கு கல்வி வசதி, ரோட்டில் நடக்கும் வசதி முதலிய செளகரியங்கள் அரசியலின் மூலமாக செய்ததுமான காரியங்கள் ஆகும்.

இப்படிப் பல காரியங்கள் நடந்தாலும் இவை சமூகசீர்திருத்த மாகவோ மத சீர்திருத்தமாகவோ இல்லாமல் வெறும் அரசியல் காரியங்களுக்கும் இந்துக்கள் என்பவர்கள் வேறுமதத்துக்கு போகாமல் இருக்க வேண்டும் என்றும், எண்ணிக்கை பாதுகாப்புக்குமாக செய்யப்பட்டனவே ஒழிய வேறில்லை.

குழந்தை மணத்தடுப்பு சட்டம், இந்து மதக்காரர்களால் மத தத்துவ நிபுணர்களால் மதப்பிரமுகர்களால் இன்னமும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. ஆலயப்பிரவேசமென்பதும், இன்னமும் இந்துமதத் தலைவர்களால், மதப்பிரமுகர்களால் ஒப்புக்கொள்ளப்படவே இல்லை.

திருவாங்கூர் ஆலயப்பிரவேச யோக்கியதை

திருவனந்தபுரம் ஆலயப்பிரவேசமானது திருவாங்கூர் கோயில்கள் இதுவரை மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கு மாத்திரம் செல்ல உரிமை இருந்ததானது இப்போதே கீழ்ஜாதியாருக்கு மாத்திரம் செல்ல உரிமையுள்ள கோயில்களாக ஆக்கப்பட்டுவிட்டது. அதாவது மேல்ஜாதியார்கள் கோவில்களை பஹிஷ்கரித்துவிட்டார்கள். அப்படி மீறி கோவில்களுக்கு சென்று வந்த மேல் ஜாதியார்களை மேல்ஜாதி சமூகத்தில் பஹிஷ்காரம் செய்கிறார்கள் என்பதோடு அவர்களை தாழ்ந்த ஜாதியார் என்பவர்களுக்கு பிரவேசமில்லாத கோவில்களில் விடப்படுவதுமில்லை. இதை பல பார்ப்பனப் பத்திரிகைகளில் அடிக்கடி பார்த்து வருகிறோம். ஆரம்ப முதல் நமக்கு இந்த சேதி தெரிவிக்கப்பட்டும் வந்திருக்கிறது.

இந்த விஷயங்கள் மத சம்பந்தமான வைதீகர்கள் உலகில் நடக்கின்றன என்பதாக மாத்திரம் சொல்லுவதற்கில்லாமல் அரசியல் உலகிலும் நடந்து வருவதை எவரும் மறுக்க முடியாது. நம் நாட்டு அரசியல் ஸ்தாபனங்களில் தங்களுக்கே தான் அரசியலைப் பற்றிப் பேச உரிமை உண்டு என்று வாதிக்கும் காங்கரஸ் ஸ்தாபனத்தில் ஜாதி உணர்ச்சி ஜாதி பாகுபாடு காப்பாற்றும் உணர்ச்சியும் மத உணர்ச்சியும் மதப்பாகுபாடு காப்பாற்றும் உணர்ச்சியும் வெகு கண்டிப்பாக கட்டாயமாக இருந்து வருகின்றன.

அந்தப்படி காங்கரஸ்காரர்களுக்கு ஜாதிமத பாகுபாட்டை காப்பாற்றும் உணர்ச்சி இல்லாதிருக்குமானால் சகல மக்களுக்கும் அரசியலில் சமஉரிமை கிடைக்கும்படி செய்யவும் மக்கள் ஜாதிமதம் பேர் சொல்லி உரிமைகள் கேட்கவேண்டிய அவசியமில்லாமல் இருக்கும்படி செய்யவும் சிறிதாவது முயற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். அப்படிக்கில்லாமல் அந்நியர்கள் ஜாதி மத உரிமை கேட்கும்போது மாத்திரம் "அவை கூடாது என்பதற்காகத்தான் காங்கரஸ் பாடுபடுகின்றது" என்பதும் காங்கரசினால் அடையப் பெற்ற சாதனங்களை வழங்கும்போது தங்கள் ஜாதி, தங்கள் மதம், தங்கள் வகுப்பு மாத்திரமே நூற்றுக்கு முன்னூறு நானூறு பங்கு வீதம் ஏகபோகமாய் அனுபவிக்கும்படியான சூழ்ச்சிகளையும் பலாத்காரங்களையும் சிறிதும் தயவு தாட்சண்யம் மனித தன்மை இல்லாதபடி கையாளுகிறார்கள்.

ஜாதிமத உணர்ச்சிக்கு பார்ப்பனரே காரணம்

இந்த மாதிரியாக ஒரு தனிப்பட்ட ஜாதியார் குறிப்பாக பார்ப்பனர்கள் நடந்து கொள்ளுவதாலேயே இன்று இந்தியாவெங்கும் மூலைமுடுக்குச் சகலத்திலும், அரசியல் உலகத்திலும், மத உலகத்திலும் ஜாதிமத உணர்ச்சியும் கிளர்ச்சியும் தலைவிரித்தாடுகின்றன. இன்றுள்ள இந்து முஸ்லீம் பேத உணர்ச்சி பார்ப்பனர்களாலேயே அதாவது இந்துமத தர்மகர்த்தாக்கள் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்களாகிய தோழர்கள் மாளவியா, மூஞ்சே, பாய்பரமானந்தா, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு ஆகியவர்களாலுமே நம் மாகாணத்திலும் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி, ஏ. ரங்கசாமி அய்யங்கார், கஸ்தூரி ரங்கய்யங்கார் போன்றவர்களாலுமே ஏற்பட்டது என்பதும் இவர்களாலேயே பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் அதாவது ஆரியர் திராவிடர் என்ற உணர்ச்சியும் ஏற்பட்டது என்பதும் யாராலும் மறுக்க முடியாது.

பார்ப்பனர்கள் மிக்க தந்திரசாலிகள் சூழ்ச்சிக்காரர்கள் ஆனதால் முஸ்லிம்களில் மெளலானா அபூல்கலாம் ஆசாத், தாவுத்ஷா, உபயத்துல்லா போன்ற ஆட்களை விளம்பரம் கொடுத்து பிரமாதப்படுத்தி அவர்களைக் கொண்டு முஸ்லிம்களின் முன்னேற்ற உணர்ச்சியை தடுக்க முயற்சிப்பதும் பார்ப்பனரல்லாதார்களில் தோழர்கள் காந்தியார், முத்துரங்கம், குப்புசாமி, சுப்பையா போன்றவர்களுக்கு விளம்பரம் கொடுத்து அவர்களைக் கொண்டு பார்ப்பனரல்லாதார் - திராவிடர் முன்னேற்றத்தைத் தடுப்பதுமான சூழ்ச்சி செய்கிறார்கள். அது போலவே தாழ்த்தப்பட்ட மக்களிலும், யாரோ சிறிதும் ஊர், பெயர் தெரியாத ஆட்களை விலை கொடுத்து வாங்கி பிரமாதப்படுத்தி விளம்பரம் செய்து அவர்களைக்கொண்டே அச் சமூக முன்னேற்றத்தையும் தடுக்கிறார்கள்.

இந்த வேலைதான் இந்நாட்டு பார்ப்பனர்கள் அரசியல் விடுதலை காரியமாகவும், காங்கரஸ் காரியமாகவும் செய்து வருகிறார்கள்.

இதை ஒழிப்பது என்பது இக்கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் தடுத்து மக்கள் சமூகத்துக்கு உண்மையான முன்னேற்றம் ஏற்படும்படி செய்வது என்பது மிக மிக பிரயாசையான காரியமாய் இருப்பதோடு இக்காரியத்தை செய்வதற்கு எந்த மதத்திலும் எந்த ஜாதியிலும் முயற்சி இல்லை என்றும் எவ்வித ஸ்தாபனமும் இல்லை என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஜமால் முகமது கருத்து

முஸ்லிம் தோழர்கள் "இக்காரியங்களுக்காக முஸ்லிம் லீக்கு இருக்கிறது" என்று சொல்லவரக் கூடும். முஸ்லிம்லீக்கின் யோக்கியதை என்ன என்பது இம்மாகாண முஸ்லிம் லீக் தலைவரான தோழர் ஜமால் மகமது சாயபு அவர்கள் முஸ்லிம் லீக்கு எதற்காக இருக்கிறது என்று விளக்கியிருக்கும் வாக்குமூலத்தில் விளங்கிவிட்டது. அதாவது "முஸ்லீம் லீக் என்பது நம்முடைய தேவைகளை அரசாங்கத்தாருக்கு விண்ணப்பித்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனமே ஒழிய வேறல்ல" என்று சொன்னதாக சேதி வந்திருக்கிறது. அப்படியானால் முஸ்லிம் சமூகத்துக்கு முஸ்லிம்களால் ஜீவாதாரமானதென்று கருதும் கொள்கைகளுக்கு ஆபத்தும் இடையூறும் ஏற்படும்படியாக மற்ற சமூகத்தாரோ, மதக்காரர்களோ செய்யும் தொல்லையில் இருந்து விடுபட முஸ்லிம்களுக்கு ஸ்தாபனம் எங்கே? மார்க்கம் எங்கே என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

கனம் ஜமால் மகமது சாயபு கோடீஸ்வரர் - அவரிடம் பார்ப்பனர் சதா பணம் பறிப்பவர்களாய் இருப்பதால் அவரைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள் அல்லது வேறு சில இந்துக்கள் என்பவர்கள் அவர் மகிழும்படியும், திருப்தி அடையும்படியும் நடந்து கொள்ளலாம். ஆனால் மற்ற முஸ்லீம்களின் கதி என்ன என்று யோசிக்க வேண்டாமா? என்று கேட்கின்றோம். 8 கோடி முஸ்லீம்களில் 100-க்கு 99 - தே முக்கால் பேர்களால் போற்றப்படும் ஜனாப் ஜின்னாவை இந்தப் பார்ப்பனர்கள் தோழர்கள் மோதிலால், ஜவர்லால், மூஞ்சே போன்றவர்களும் மற்றும் காங்கரஸ் பார்ப்பனர்களும் பார்ப்பனப் பத்திரிகைகளும் என்னமாய் கருதின? எவ்வளவு கேவலமாய் இழித்துக் கூறின? முஸ்லிம் சமூகத்தையே அவை எவ்வளவு அலட்சியமாய் பேசின? இவைகளை உணர்ந்தால் எப்படி ஒரு முஸ்லிம் காங்கரசினிடம் தயவு தாட்சண்யம் காட்டவோ பார்ப்பனருக்கு பரிந்துபேசவோ முடியும்? என்று கேட்கின்றோம். சர். மகமது உஸ்மான் அவர்கள் பார்ப்பனர் ஜோதியில் இரண்டறக் கலந்து விட்டது பற்றி நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால் கனம் ஜமால் மகமது சாயபு அவர்கள் பார்ப்பனக் கெஞ்சுதலுக்கு இணங்கினது பற்றி ஆச்சரியப்படுகிறோம்.

கனம் ஜமால் மகமது சாயபு தனித்தொகுதி வேண்டாமென்றவர். ஆனால் பொதுத்தொகுதி பேரால் 2 தடவை சட்டசபை எலக்ஷனுக்கு அதுவும் வியாபாரத் தொகுதியில் நின்று இரண்டு தடவையும் பார்ப்பனர்களாலேயே தோற்கடிக்கப்படவும் வர முடியாமல் போகவும் செய்யப்பட்டவர். அப்படி இருந்தும் அவருக்குப் பார்ப்பனர்கள் இடம் சலுகையாக இருக்குமானால் மற்ற முஸ்லிம்களுக்கோ நமக்கோ அந்த மகான் தன்மை சுலபத்தில் வரும் என்று அவரே எதிர்பார்ப்பது சிறிதும் நியாயமும் தருமமுமாகாது.

தாழ்த்தப்பட்டவர்கள் நிலை

நிற்க தற்கால தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயமும் அது போலவேதான் இருந்து வருகின்றது.

காங்கரசில் இந்து முஸ்லிம் ஒற்றுமைத் திட்டம் எவ்வளவு முக்கியமாய் இருந்ததோ அது போலவே தீண்டாமை விலக்குத் திட்டமும் தீண்டாதார் முன்னேற்றத் திட்டமும் இருந்து வருகின்றன.

இது தவிர பூனா ஒப்பந்தம் வேறு இருந்து வருகிறது. இப்படி இருந்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் காங்கரசு நடந்து வந்திருக்கும் யோக்கியதை திருச்சி ஜில்லா அரசியல் மகாநாட்டில் தோழர் சன்னாசிக்கு நடந்த மரியாதையும் தஞ்சை ஜில்லா அரசியல் மகாநாட்டில் நீடாமங்கலத்தில் தோழர்கள் தேவசகாயம், ரத்தினம், ஆறுமுகம் ஆகியவர்களுக்கு நடந்த மரியாதையும் கவனித்துப்பார்த்தால் எவருக்கும் நன்றாய் விளங்கிவிடும்.

தோழர் சன்னாசிக்கு சாப்பாடு தெருவில் துணியை விரிக்கச்சொல்லி இலையில் காய்கறி சாதம் வைத்து கொண்டு வந்து போட்டார்கள். இதை தோழர் சன்னாசியே தெரிவித்தார். எந்தக் காங்கரஸ் வாதியாலும் இது மறுக்கப்படவில்லை.

நீடாமங்கலக் கதை

தஞ்சை மகாநாட்டில் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு ஆக தோழர்கள் தேவசகாயம், ஆறுமுகம், ரெத்தினம் ஆகியவர்களை உதைத்து தலை மொட்டை அடித்து சிரைத்து சாணிப்பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது, இது அவர்கள் ஸ்டேட்மெண்டுடன் உருவப்படத்தோடு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அக்காரியத்தில் சம்மந்தப்பட்ட யாரும் இதுவரை மறுக்கவே இல்லை. யாரோ ஒரு தோழர் சூசை என்பவர் மறுத்து இருக்கிறார். அவர் இதில் சம்மந்தப்படவில்லை என்று அடிபட்டு மொட்டை அடிக்கப்பட்ட தோழர்கள் சொல்லுகிறார்கள். மற்றும் கட்டாயப்படுத்தி மிரட்டி கையெழுத்து வாங்கினதாக சொல்லப்படுவதும் மறுக்கப்படவில்லை.

மற்றும் சுமார் 20 பேர்கள் மொட்டை அடிக்கப்பட்ட சேதியையும் அவர்களது பெயர்களுடன் பத்திரிக்கைகளில் வெளிவந்ததையும் யாரும் மறுக்கவில்லை. இன்றும் இந்த 20 பேர்கள் தலை மொட்டையாய் இருப்பதை யாரும் பார்த்துக்கொள்ளலாம்.

இது எப்படியோ போகட்டும். இந்த விஷயமாக எந்த ஆதிதிராவிட மெம்பராவது கவலை எடுத்து இவர்களைக் கண்டு அல்லது வரவழைத்து விசாரித்தார்களா? இல்லவே இல்லை. அல்லது இந்த அடிபட்டு மொட்டை அடிக்கப்பட்ட ஆதிதிராவிட தோழர்கள் 20 பேர்களில் பகுதிக்கு கிறிஸ்தவர்களாயிற்றே. இந்த ஆதிதிராவிடர்களுக்கும் இவர்கள் முன் சந்ததியர்களுக்கும் ஞானம் ஸ்நானம் கொடுத்து கிறிஸ்தவர்களாக ஆக்கிய பாதிரிமார்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று கேட்கிறோம். மற்றும் இந்தியாவில் இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களின் மொத்த எண்ணிக்கையை காட்டி உத்தியோகப் பங்கு பெற்ற கிறிஸ்தவ சமூக பிரமுகர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்கிறோம்.

இந்த மொட்டை அடித்து துன்புறுத்தி சாணி அபிஷேகம் செய்யப்பட்ட ஆட்களில் ஒருவராவது முஸ்லீமாய் இருந்திருந்தால் இன்று நீடாமங்கலமோ தஞ்சை ஜில்லாவோ சட்டசபையோ சர்க்கார் நிலையோ என்ன கதி ஆக்கியிருக்கும் என்று ஒரு நிமிஷம் யோசித்து பார்க்கும்படி வேண்டுகிறோம்.

ஆதிதிராவிடர்கள் முஸ்லிம்களாக வேண்டும்

ஆதிதிராவிடர்களை நாம் முஸ்லிம்களாக மாறிவிடும்படி இந்த இருபது வருஷகாலமாய் வெளிப்படையாய் சொல்லி வரும் காரணம் இதுவேயாகும். அவர்களது மோட்சத்தைப் பற்றியோ கடவுளது சன்மானத்தைப் பற்றியோ உண்மையில் நமக்கு சிறிதும் கவலையில்லை. அப்படி ஒன்று இருந்தால் அவரவர்கள் எண்ணங்கள் செய்கைகள் ஆகியவைகளுக்குகந்தபடி அவரவர்கள் அடைந்துதான் தீர்வார்கள். இல்லாவிட்டால் யாரும் அடையமாட்டார்கள். ஆனால் ஆதிதிராவிடர்கள் மனிதத்தன்மை பெற சுயமரியாதை அடைய இந்துக்களுடைய இம்மாதிரி கொடுமையிலிருந்தும், கிறிஸ்தவர்களுடைய இம்மாதிரி கோழைத்தனமும் கவலையற்ற தன்மையும் கொண்ட சுயநலத்தில் இருந்தும் தப்ப ஆதி திராவிடர்களுக்கு இன்று ஒருவழிதான் இருக்கிறது.

அதாவது ஆதிதிராவிடர்கள் இந்துக்கள் என்பதிலிருந்தும், கிறிஸ்தவர்கள் என்பதிலிருந்தும் வெளிப்பட்டு முஸ்லிம்களாக மாறிவிடுவது தான். உண்மையில் இந்த நீடாமங்கல அநீதிக்கு - அட்டூழியத்துக்கு சமாதானம் ஏற்படாத பட்சத்தில் மலையாளத்தைப் போலவே நமது நாட்டிலும், ஆதி திராவிடர்களுக்கென்றே ஒரு பெரிய மதமாற்ற மகாநாடு ஒன்று கூட்டி ஆயிரக்கணக்கான ஆதிதிராவிடர்கள் முஸ்லிம்களாக ஆக்கப்படுவதற்கு சீர்திருத்த - சமுதாய சமத்துவ புரட்சிகர வாலிபர்கள் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமும் அவசரமுமான கடமையாகும். இந்த நிலை ஏற்பட்ட பிறகுதான் மலையாள கோவில் கதவு திறக்கப்பட்டது.

நீடாமங்கல நிகழ்ச்சியை காங்கரஸ்காரர்கள் பொய்யாக்கி விடலாம், இதை வெளிப்படுத்தியதற்காக நமக்கு பல தொல்லைகளை விளைவிக்கலாம் அல்லது இதை வெளியாக்க உதவி செய்த ஆதிதிராவிடர்களுக்கு குடி இருக்க வசதி இல்லாமல் அடித்து விரட்டப்படலாம். அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. நம்மைப் பொறுத்தவரை இந்நிகழ்ச்சி உண்மை என்றும் கல்லுப் போன்ற - சூரிய வெளிச்சம் போன்ற உண்மை என்றும் கருதி இருக்கிறோம். இதற்கு ஆதாரமாக இன்று 20 மொட்டைத் தலைகளும் இருந்து வருகின்றன.

ஆகவே நீடாமங்கல நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் மாத்திரமல்லாமல் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள "இந்து" "கிறிஸ்தவ" ஆதிதிராவிட மக்களும் ஆங்காங்கு தனித்தனியே கூட்டம் கூட்டி சும்மா கண்டனத் தீர்மானம் செய்வதில் காலம் கடத்தாமல் இனி இம்மாதிரி அவமானம் கொடுமை ஏற்படாமல் இருப்பதற்கு நிரந்தரமான காரியமான விஷயத்தை பற்றி யோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டுமென்று அழுத்தமாய் வேண்டிக் கொள்கிறோம். மத வேஷத்தால் பிழைக்கும் சில ஆதிதிராவிட தோழர்கள் இதற்கு இடையூறு செய்வார்கள். அதைப்பற்றி சிறிதும் காது கொடுக்காமல் கவனம் செலுத்தாமல் ஒரு தகுதியான முடிவுக்கு வரும்படி வேண்டிக்கொள்கிறோம்.

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 06.02.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: