"பார்ப்பன பாம்புக்கு தேசீயப் பால்!"

தலைவரவர்களே! தோழர்களே!

தாங்கள் அன்புடன் வாசித்தளித்த உபசாரப் பத்திரத்திற்கு நான் எனது மனப்பூர்வமான நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.periyar 450

என் வாழ்க்கை லட்சியம்

தங்கள் வரவேற்புப் பத்திரத்தில் கூறியுள்ள அளவு தீண்டாமை ஒழிவதற்கு நான் ஒன்றும் அவ்வளவு பாடுபட்டு விடவில்லை என்றாலும் எனது வாழ்நாள் லட்சியத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டுமென்பது முக்கியமான பாகமாகும் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கேற்ப ஏதோ ஒரு அளவு பாடுபட்டேன் - பாடுபடுகிறேன் என்பதும் உண்மையே. நான் சிறை சென்ற பல தடவைகளில் தீண்டாமைக்காகவென்றும் 2,3 முறை நான் சிறை சென்றிருப்பதும் உண்மைதான். ஆனால், அவை அவ்வளவும் ஆதி திராவிட மக்கள், பள்ளர், பறையர், சக்கிலிகள் என்று இழிவாய்க் கருதப்படுகின்ற உங்களுக்காகவே அல்ல என்பதையும், உங்களைவிட சிறிது வித்தியாசத்தில் சற்று மேலான ஜாதி என்று கருதப்படுகின்ற எங்கள் ஜாதி என்பதைப் பொருத்துள்ள தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற சுயவகுப்பு நலத்தையும் முன்னிட்டே பாடுபட்டு வருகின்றேன்.

பார்ப்பனர் தவிர மற்றவர் யாரும் கீழானவரே!

இந்த நாட்டில் தீண்டப்படாதவர் என்று அழைக்கப்படாத ஜாதி ஒரே ஒரு ஜாதிதான் உண்டு. அதுதான் பார்ப்பன ஜாதி என்பதாகும். அதைத்தவிர மற்றெல்லா ஜாதி வகுப்பு மக்களும் தீண்டப்படாதவர்களாகவே தான் கருதப்படுகிறார்கள். ஐரோப்பியர்களும், முஸ்லிம்களும், இந்திய கிறிஸ்தவர்களும் பார்ப்பனரொழிந்த ஏனைய இந்துக்கள் என்பவர்களும், பார்ப்பனர்களுக்கு தீண்டப்படாதவர்களேயாவோம். அவர்களுடைய கடவுள்களுக்கும் நாம் எல்லோரும் தீண்டப்படாதவர்களேயாவோம்.

அது சும்மா வாயினால் மாத்திரம் சொல்லப்படுவதல்ல. மத தர்மப்படி என்றும் வேத சாஸ்திர விதிப்படி யென்றும் சொல்லப்பட்டு தாழ்த்தப்பட்டிருக்கிறோம். முக்கியமாக ஒருவன் தன்னை ஹிந்து என்று சொல்லிக் கொள்வது என்றால் அவனுக்கு ஏதாவது ஒரு ஜாதிப்பிரிவு பெயர் இருந்துதான் இருக்கும். அவன் அதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அன்றியும் இந்து மத மாத்திரமல்லாமல் இந்து கடவுள்கள் என்பவையும் ஜாதிப்பாகுபாட்டுக்கு உட்பட்டதேயாகும். ஆகவே ஒரு மனிதன் இந்து என்கின்ற கூட்டத்தில் இருக்க ஆசைப்படுகிறவரை அவன் ஜாதிப்பாகுபாட்டுக்கு உள்பட்டும் அவன் பார்ப்பனரல்லாதாராய் இருக்கும் வரை கீழ் ஜாதியானாகவும் இருந்து தான் ஆகவேண்டும். எத்தனை காந்திகள் தோன்றினாலும் சரி அவர்களை எப்படிப்பட்ட மகாத்மாவாக விளம்பரப்படுத்தினாலும் சரி ஜாதிபாகுபாடும் கீழ் மேல் ஜாதியும் ஒருநாளும் ஒழிக்கப்படமாட்டாது என்றும் உறுதி கூறுவேன். இதுவரை இதற்கு ஆக எத்தனையோ பேர் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தாய்விட்டது. அப்படிப்பட்ட முயற்சியாளர்கள் எல்லோரையுமே பார்ப்பனர்கள் அடிமை கொண்டும் அடிமையாகக் கட்டுப்படாதவனை அழித்தும் வந்திருக்கிறார்களே ஒழிய ஒருவனையாவது தலையெடுக்க விடவில்லை.

பார்ப்பன பாம்புக்கு காந்தீயப் பால்!

ஆங்கில அரசாட்சியால் ஆங்கிலக் கல்வியால் ஆங்கில பழக்க வழக்கத்தால் ஆங்கில நாகரிகத்தால் ஜாதிப்பாகுபாட்டுக்கும் ஜாதி உயர்வு தாழ்வுக்கும் ஒரு அளவு கேடு காலம் கிட்டிற்று என்று சொல்லலாம். ஆனாலும், பார்ப்பனீயத்துக்கு எதிராக இந்நாட்டில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றி சென்ற 20 வருஷத்தில் இருந்து ஒரு அளவு பாடுபட்டு வந்ததின் பயனாய் ஒரு அளவுக்கு ஜாதி உயர்வு தாழ்வு அழியும் காலம் கிட்டிற்று என்றாலும், சுயமரியாதை இயக்கம் இந்த 10, 15 வருஷ காலமாய் செய்து வந்த சமூகப்புரட்சி வேலையின் பயனாய் பெரியதொரு மாறுதல் காணமுடிந்தது என்றாலும் மறுபடியும் இந்து மதம் என்ற பார்ப்பனப் பாம்புக்கு காந்தீயம் என்னும் பால் ஊற்றி வளர்க்கப்பட்டு இன்று அரசியல் ஆதிக்கத்தை அப்பாம்பு கைப்பற்றி மேற்கூறப்பட்டவர்களது இவ்வளவு முயற்சிகளையும் பாழாக்கி பழய நிலையை உற்பத்தி செய்ய முயன்று விட்டது.

நெருக்கடி! ஆபத்து!

அவ்வாட்சியின் பயனாய் மனித சமூகத்தின் அறிவு, மானம், மனிதத்தன்மை எல்லாம் பாழாக கூடிய நிலைமை ஏற்படுத்தப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் மாத்திரமல்லாது பார்ப்பனரல்லாத இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள் எல்லோருமே இது சமயம் ஒன்று சேர்ந்து பார்ப்பனீயத்தில் இருந்து தப்பிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள். இந்த நூற்றாண்டில் இந்த சமயம் மிக நெருக்கடியானதாகும். மிக மிக ஜாக்கிரதையாய் விழித்திருந்து தப்பித்துக்கொள்ள வேண்டிய சமயமாகும். ஆதலால் பெரும் கூட்டம் கொண்ட மகாநாடுகளாலோ, வெரும் கட்டுப்பாடுகளாலோ, வீரத் தீர்மானங்களாலோ, பார்ப்பனர்களையோ பிரிட்டிஷ் சர்க்காரையோ வைவதினாலோ சரியான பயன் ஒன்றும் ஏற்பட்டுவிடாது.

கிறிஸ்தவரின் இன்றைய நிலை

பார்ப்பனரல்லாத மக்கள் யாவரும் உண்மையான ஒற்றுமைப் படவேண்டும். என்னைப் பொருத்தவரை இந்திய கிறிஸ்தவர்கள் பலர் இடத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. அவர்களில் பலரைப் பார்த்தால் அவர்களுக்கு எப்படியோ தன் தன் சுயநலம் தான் பெரிது என்பதாக அவர்கள் மார்க்கம் கற்பித்து வருவதாக கருதவேண்டி இருக்கிறது. சமூக ஒற்றுமையோ மத ஒற்றுமையோ சமூக பொதுநலமோ அவர்களிடத்தில் காண முடியவில்லை. அவர்கள் தனித்தனி நபர்கள். எந்தக்கட்சி வலுக்கின்றதோ அதில் சேருவதுதான் கொள்கையாய் கருதி இருக்கிறார்கள். ஒருவர் இருவர் உறுதியாக இருப்பதாய் காணலாம். அவர்களும் மற்றவர்களைப் பார்த்து பலவீனமடைந்து விடுகிறார்கள்.

ரோஷமுள்ள முஸ்லீம்கள்

ஆனால் முஸ்லீம்கள் நிலைமை அப்படி இல்லை. மார்க்கத்துக்கு - பொது நலத்துக்கு என்றால் பெரும்பான்மையான பேர் 100க்கு 90 பேர் சுயநலத்தை விடத்தயாராய் இருக்கிறார்கள். எவ்வித தியாகத்தையும் செய்யத்தயாராய் இருக்கிறார்கள். மற்றவர்களிடம் காணமுடியாத ரோஷம், மானம், ஒற்றுமை, துடிதுடிப்பு அவர்களிடம் காணலாம். நான் ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், சூழ்ச்சியும் விஷமமும் பொருந்திய பார்ப்பனீயம் இன்று ஆட்சியில் இருப்பதால் அக்கொடுமையில் இருந்து தப்ப தனி மனிதனாய் தனித்தனி சின்னாபின்னப்பட்ட வகுப்பாய் இருந்து கொண்டு போராடுவது என்பது சுலபமான காரியம் அல்ல என்பதற்காகவும் மற்றபடி நாம் எப்படி ஒற்றுமை அடைய முடியும் என்பதற்கு உதாரணத்துக்கு ஆகவுமே இதை எடுத்துச் சொல்லுகிறேன். உண்மையிலேயே முஸ்லிம்களைக் கண்டால்தான் பார்ப்பனர்களும் அவர்களில் முக்கிய வைதீகர்களும் பயப்படுகிறார்கள். மற்றவர்களைக் கண்டால் வெகு இழிவாகப் பேசுகிறார்கள். மற்ற வகுப்பிலேயே கூலிகளை சுலபமாய் அமர்த்தி இஸ்கே படுத்துகிறார்கள். காரணம் முஸ்லிம் தங்களுள் ஒற்றுமையும் இந்துக்கள் தங்களுள் வேற்றுமையுமே தான்.

ஆச்சாரியார் ஆணவத்திற்கு ஆப்பு

உதாரணமாக ஹிந்தி எதிர்ப்பும் வந்தே மாதர எதிர்ப்பும் ஏக காலத்தில் ஏற்பட்டது. வந்தே மாதர எதிர்ப்பு ஒருவரால் அல்லது இருவரால் ஆரம்பிக்கப்பட்டது. வந்தே மாதரப் பாட்டு 55 வருஷமாய் இருந்து வருவது அது தேசியத்துடன் இரண்டாகக் கலந்தது. இந்தியாவின் பூராபாகத்திலும் பரவியுள்ளது. வந்தே மாதரப் பாட்டு நிறுத்தப்பட்டுவிட்டால் இந்திய தேசீயமே தோல்வி அடைந்தது என்றுதான் அருத்தம் என்றெல்லாம் சொல்லப்பட்ட அவ்வளவு உறுதியும் செல்வாக்கும் பிரதானியமும் உள்ள வந்தே மாதரப் பாட்டு ஒரு சாயபு தனிப்பட்ட முறையில் விரட்டிய உடன் "சத்தியாக்கிரகம் 5ந்தேதி ஆரம்பிக்கப்படும்" என்று சொன்னவுடன் 1ம் தேதியே வந்தே மாதரப்பாட்டு நிறுத்தப்பட்டு விட்டது என்று பிரதம மந்திரியும் சட்டசபைத் தலைவரும் உறுதி கூறிவிட்டார்கள். தவிரவும் காங்கரசைத் தவிர வேறு ஸ்தாபனங்களை ஸ்தாபனங்களாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் எப்படிப்பட்ட குறையானாலும் காங்கரசில் வந்து சேர்ந்த பிறகு தான் கவனிக்கப்படும் என்றும் ஆணவம் கூறி ஜனாப் ஜின்னாவையும் இழிவாகப் பேசிய காங்கரஸ் தென்னாட்டில் ஒரு 100,200 முஸ்லிம் சங்கம் ஏற்படுத்தப்பட்டு ஒரு 100, 200 கூட்டம் கூடி காங்கரஸ் மந்திரிகளை கண்டித்த உடன் முஸ்லிம் லீக்கோடு நேசம் செய்து கொள்ள வேண்டும் என்றும் காங்கரசின் பேரால் தீர்மானிக்க தென்னாட்டுப் பார்ப்பனர்கள் நிர்ப்பந்தப்படுத்த காங்கரஸ் தலைவர்கள் இறங்கி வந்து விட்டார்கள்.

தமிழர் கிள்ளுக்கீரையா?

ஆனால் மற்றவர்கள் விஷயம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். ஹிந்தி கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று ஒரு ஆச்சாரியார் தனிப்பட்ட முறையில் கருதினார். தனிப்பட்ட முறையில் வெளியிட்டார். தமிழ்நாடு முழுவதும் திரண்டு எதிர்த்து தமிழ் மக்கள் பண்டிதர்கள் பட்டம் பதவி வகித்துள்ள பெரியார்கள், பாமரமக்கள் 100க்கு 90 பேர்கள் ஒன்று சேர்ந்து 1000 கூட்டம் போட்டு 1000 தீர்மானங்கள் செய்து அனுப்பியாய் விட்டது. கவர்னர் பெருமானுக்கும் தெரியப்படுத்தி ஆய்விட்டது.

மாஜி கவர்னர் முதல் 4, 5 மாஜி மந்திரிகள் கூப்பாடு போட்டாய் விட்டது. காங்கரஸ் பக்தர்கள் என்பவர்கள் பலரும் 4 தடவை 8 தடவை ஜெயிலுக்கு போனவர்களும் போர் முரசடித்தாய்விட்டது. இதுவரை சுமார் 200, 250 வீரர்கள் வரை ஹிந்தியை ஒழிக்க எவ்வித தியாகத்துக்கும் தயாராய் இருப்பதாக பறை சாற்றியாய் விட்டது. இவ்வளவெல்லாம் நடந்தும் சிறிதும் லட்சியம் செய்யாமல் இது "ஒரு மனிதனுடைய கூப்பாடு இதை நான் சற்றும் மதிக்கமாட்டேன்" என்று ஒரு ஒத்தை பார்ப்பனர் ஆணவமாய் அகம்பாவமாய் பதில் சொல்லிவிட்டார் என்றால் பார்ப்பனர்கள் முஸ்லீம்களை எப்படி மதிக்கிறார்கள் இந்துக்கள் என்பவர்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதை கூர்ந்து பார்க்கும்படி விரும்புகிறேன்.

முஸ்லிம் ஒற்றுமையைப் பார்!

மற்றும் முஸ்லிம் ஒற்றுமையையும் ஹிந்து ஒற்றுமையையும் பாருங்கள். முஸ்லிம் சமூக நலனுக்கு விரோதமாய் காங்கரசில் இருக்கும் முஸ்லிம்களை அவர் மந்திரியானாலும் காரியதரிசியானாலும், தினம் 8 அணா கூலியராகிய மற்ற பிரசார முஸ்லிமானாலும் முஸ்லிம்கள் ஒரே மாதிரி கருதி பகிஷ்கரிப்பதும் கறுப்புக்கொடி பிடித்து அவமானப் படுத்துவதும் காங்கரசிலிருக்கும் மற்ற முஸ்லிம்களையும் கூண்டோடு ராஜினாமாக் கொடுக்கும்படி சமூகத்தின் பேரால், மார்க்கத்தின் பேரால், கட்டளையிட்டுப் பணியச் செய்தும் வருகிறார்கள். வந்தே மாதரப் பாட்டுக்கு மாறுபட்ட அபிப்பிராயமுள்ள முஸ்லிம் 1000க்கு லீ வீதம் கூட இல்லை. முஸ்லிம் லீகை குற்றம் சொல்லுகிற முஸ்லிம் 1000க்கு 1/16 வீசம் வீதம் கூட இல்லை. ஆனால் பார்ப்பனரல்லாத இந்துக்கள் யோக்கியதை என்ன? இப்படிப்பட்ட நெருக்கடியில் காந்தி கல்வித் திட்டமும் ஹிந்தியும் பார்ப்பனரல்லாத சமூகத்தையே மிருகப் பிராயமாக்கி மானம் ஈனம் இன்னது என்று அறியாத தாசி மக்கள், குச்சுக்காரி மக்கள் நிலைக்கு கொண்டு வந்துவிடக் கூடியதாய் இருக்கிறது என்பதை உணர்ந்த மக்கள் பார்ப்பனர்கள் காலை நக்கி அவர்களுடைய பாதத்துக்கு தேங்காயும் உடைத்து வைத்து கர்ப்பூர ஆலாத்தி நடத்தி வயிறு வளர்க்கிறார்கள் என்றால் ஒரு மானமுள்ள மனிதன் ஹிந்துவாய் இருப்பதற்கு எவ்வளவு வெட்கம் வேண்டும் என்று உங்களை கேட்கிறேன்.

அம்பேத்கார் காட்டிய வழி

சாதாரண மக்களைப் பற்றி நான் இப்போது பேசவில்லை. ஹிந்துக்கள் என்பவர்களில் தாழ்த்தப்பட்ட மக்களாய், இழி மக்களாய், தீண்டப்படாதவர்களாய் பன்றி, கழுதை என்னும் இழிவான மிருகங்களாய் கருதப்படுபவைகளிலும் கேவலமாய் நடத்தப்படும், இங்கு கூடியுள்ள பத்தாயிரக்கணக்கான மக்களைப் பார்த்தே பேசுகிறேன். தோழர்களே உங்கள் வரவேற்புப் பத்திரத்தில் இந்தக் கொடுமையும், இழிவும் ஒழிய என்னை ஒரு வழி கண்டுபிடித்து ஒரு திட்டம் போட்டு கொடுக்கும்படி கேட்டிருக்கிறீர்கள். நான் என்ன திட்டம் போடுவது? உங்கள் பெரியவர்கள், உங்கள் தலைவர்கள், அக்கம் பக்கத்து சமஸ்தானத்திலுள்ளவர்கள் திட்டம் போட்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவற்றையே உங்கள் திட்டமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். நான் போடவேண்டும் என்கிற அவசியம் இப்போது உங்களுக்கு இல்லை.

அதென்னவென்றால் சுமார் 3 - Mத்துக்கு முன்னால் உங்கள் அகில இந்தியத் தலைவர் தோழர் அம்பேத்கார் அவர்கள் இந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தீண்டாமைக்கொடுமையும் சமூக இழிவும் தீரவேண்டுமானால் அவர்கள் அத்தனை பேரும் இந்து மதத்தை விட்டு விலகி விட வேண்டும் என்பதாக தீர்மானித்து இருக்கிறார். அது மாத்திரமல்லாமல் திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அதாவது அவர்கள் உங்கள் ஜாதி என்பதைவிட எவ்வளவோ பங்கு மேலாக கல்வி, அறிவு, சுத்தம், செல்வம் ஆகியவற்றில் சிறந்தவர்களான ஈழவர்கள் என்பவர்கள் பத்தாயிரக்கணக்காக ஊருக்கு ஊர் மகாநாடு கூட்டி தங்களுக்கு உள்ள வைதீகக் கொடுமையும் சமூக இழிவும் தீரவேண்டி எவ்வளவு பாடுபட்டும் முடியாமற் போனதால் இனி இந்து மதத்தையே விட்டு இச்சமூகம் விலகிவிட்டது என்று தீர்மானம் செய்து இருக்கிறார்கள். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் பலபேர் இந்துமதம் விட்டு முஸ்லிம்களாகவும் சீக்கியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் ஆகிவிட்டார்கள். இதன் பிறகுதான் திருவனந்தபுரத்தில் ஜாதிக் கொடுமை ஒழிந்து கோவில் கதவுகளும் திறக்கப்பட்டு எல்லா தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கோவில் பிரவேசமும் கிடைத்து இருக்கிறது.

துருக்கித் தொப்பி அணியுங்கள்

இங்கு உங்களுக்கு கோவில் பிரவேசம் வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. உங்களுக்கு அரசியல் சுதந்திரம் பிரிட்டிஷ் சர்க்கார் கொடுத்தார்கள். அதைப் பார்ப்பனர்கள் தோழர் காந்தியார் மூலம் என்ன என்னமோ சூழ்ச்சி செய்து பிடுங்கிக் கொண்டார்கள். இன்று உங்களுக்கு அரசியலில் உண்மையான பிரதிநிதித்துவம் இல்லை. பார்ப்பனர் கால் கழுவின தண்ணீரை மோக்ஷத்துக்கும் பாவ மன்னிப்புக்கும் தீர்த்தமாகக் குடிப்பவனுக்குத்தான் பிரதிநிதித்துவம் இருக்கிறது. உங்களை பற்றி கவனிக்க ஆள் கிடையாது. கவனிப்பவர்கள் பாடும் திண்டாட்டமாய் விடுகிறது. கேவலம் நீடாமங்கல விஷயம் எங்களை ஜெயிலுக்கு அனுப்பும் போலிருக்கிறது. 1000, 2000ரூ செலவாகும் போல் இருக்கிறது. இக்கொடுமையை எத்தனை நாளைக்கு சகிப்பது. ஆகவே தோழர்களே உங்களுக்கு இழிவு போக வேண்டுமானால் நீங்கள் மனிதர்களாய் மதிக்கப்படவேண்டுமானால் உங்களை மேல் ஜாதிக்காரர்கள் நாயிலும் மலத்திலும் கேடாய் மதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் ஒரே கூட்டமாய் துருக்கி குல்லா தலையில் அணியுங்கள். உங்களைக் கண்டால் மேல் ஜாதியார்கள் நடுங்குவார்கள். அரசியல் சமுதாய இயல் பொருளியல் ஆகியவற்றில் உங்களுக்கு சமபங்கு கிடைக்கும்.

உங்களை எவனும் இழிவு படுத்தமாட்டான். நீங்கள் ஒரு வீரமும் சுயமரியாதையும் பொருந்திய சமூகமாக வாழ முடியும்.

காந்தியார் உங்கள் உரிமைகளைக் கைப்பற்றி ஏழைகளாகிய உங்களுக்கு 2 தேர்தல் வைத்து உங்களை தலையெடுக்க விடாமல் செய்த கொடுமைக்கும் சூழ்ச்சிக்கும் நீங்கள் அவருக்கு செய்ய வேண்டிய பதில் நீங்கள் துருக்கிக் குல்லாய் போட்டுக்கொண்டு அவர் எதிரில் நிற்பதேயாகும். நீடாமங்கல தொல்லை என்பதற்கும் இதுவே தக்கபதில் ஆகும். ஆகவே தோழர்களே உங்களுக்கு தைரியம் புத்தி இருந்தால் உங்கள் கொடுமையும் இழிவும் நீங்க வழி இல்லாமல் இல்லை. நான் காட்ட வேண்டும் என்கின்ற அவசியமும் இல்லை. உங்கள் அகில இந்தியத் தலைவர் அம்பேத்காரும் ஈழவத் தலைவர் அய்யப்பன், கமால் பாக்ஷா தையல் ஆகியவர்களும் காட்டிய வழியை பின்பற்றினாலே போதும் என்று சொல்லுகிறேன். மற்ற விபரம் இன்று மாலை நடக்கும் லீக் மகாநாட்டில் பேசுகிறேன்.

குறிப்பு: 05.03.1938 இல் பெரம்பலூரில் நடைபெற்ற ஆதிதிராவிட மாகாண மாநாட்டில் ஆற்றிய உரை.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 13.03.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: