இப்போதுதான் புத்தி வருகிறது

தாழ்த்தப்பட்ட மக்களை காங்கிரஸ்காரர்கள் ஏய்த்து விட்ட விஷயமாய் நாம் பல தடவை எழுதி வந்திருக்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களில் எவ்வளவோ கல்வி அறிவுள்ளவர்களும் உலக ஞானமுள்ள periyar 307வர்களும் இருந்தாலும் சமயத்தில் மோசம் போகும் புத்தி அவர்களுக்கு வெகுகாலமாகவே இருந்து வருகிறது. சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களுடன் வாது செய்து வெற்றி பெற்றதின் பலனாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதாவது தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு என்று சட்டசபையில் ஒரு அளவு ஸ்தானங்கள் தனித் தொகுதி மூலம் ஒதுக்கி வைக்கப்பட்டது. அதை காந்தியார் பட்டினி கிடப்பதாகப் பாசாங்கு செய்து அச் சமூக மக்களை ஏமாற்றி தனித் தொகுதி உரிமையை பாழாக்கி அடிமை உரிமைக்கு ஆளாகச் செய்து விட்டார்.

அப்பொழுதே தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பத்காருக்கு விஷயங்களை விளக்கி ஏமாந்து போகாதீர்கள் என்று அதாவது ஒரு காந்தியாரைவிட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் கேவலமானதல்ல என்றும் 6 கோடி மக்கள் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர் என்றும் நீண்ட தந்தி கொடுத்திருந்தும் ஒன்றையும் லòயம் செய்யாமல் தங்களை சிலர் மதித்து அழைத்து கெஞ்சிப் பேசுகிறார்கள் என்கின்ற மமதையில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டு தங்கள் உரிமையைப் பறிகொடுத்து விட்டார்கள். வாதாடி உரிமை வாங்கிக் கொடுப்பது ஒரு கூட்டம், அதை தட்டிவிட்டு வாயில் போட்டுக்கொண்டு போவது மற்றொரு கூட்டம் என்பதாக ஆகிவிட்டது. இதிலிருந்து இன்றுள்ள நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுதந்திரத்தோடு வாழ தகுதி அற்றவர்கள் என்பதும் அவர்கள் இன்னும் இரண்டு கோடி அதிகமாய் இருந்தாலும் அரசாங்கத்தின் பாதுகாவலில் இருக்கத்தான் தகுதி உடையவர்கள் என்றும் விளங்குகிறது. அவ்வகுப்பில் புத்திசாலிகள் முன் யோசனைக்காரர்கள் ஒருவர் கூட இல்லை என்பதாக விஷயங்கள் வெளியாகிவருகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாய் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட தலைவர்கள் அத்தனை பேரும் இன்று அழ ஆரம்பித்து விட்டார்கள். தோழர்கள் அம்பத்கார், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, என். சிவராஜ் முதலியவர்கள் எல்லோருமே தங்கள் தவறை உணர்ந்து விட்டார்கள். சாமி சகஜாநந்தம் என்பவரும் அழுக ஆரம்பித்து விட்டார். ஆகவே தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸ்காரர்களால் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்பது நிதர்சனமாக ஆகிவிட்டது.

தோழர் திவான்பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் இது விஷயமாய் விடுத்த அறிக்கை மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் கவனமாய் படிக்க விரும்புகிறோம். அதில் காணும் முக்கிய விஷயங்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்.

அதாவது,

"காங்கிரஸ் கேட்கும் உறுதி மொழியைக் கொடுப்பதானது 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களையும் மற்ற சிறுபான்மை வகுப்பாரையும் கொடுமைப்படுத்த காங்கிரஸ்காரருக்கு சர்க்கார் காட்டிக் கொடுத்ததாகும்."

"ஷெடியூல் வகுப்பாரின் (தாழ்த்தப்பட்ட மக்களின்) கல்வியில்லாத் தன்மையையும் ஏழ்மைத் தன்மையையும் காங்கிரசார் தங்களுக்கு சாதகமாய் உபயோகித்துக் கொண்டு 30 ஸ்தானங்களில் 26 ஸ்தானங்களைக் கைப்பற்றி விட்டார்கள்."

"காங்கிரஸ்காரர்கள் வரி குறைக்கப்படும் என்று சொல்லி மிராசுதாரர்களை சுவாதீனம் செய்துகொண்டு அவர்கள் மூலமாகவும் தொண்டர்கள் மூலமாகவும் மிரட்டி பயமுறுத்தி ஓட்டு வாங்கி விட்டார்கள்."

"இந்த அயோக்கியத்தனங்களை போலீசு, கிராம உத்தியோகஸ்தர்கள், மற்ற அதிகாரிகள் யாரும் தடுக்கவில்லை."

"பூனா ஒப்பந்தத்தை கவுரவிப்பதற்குப் பதிலாக அதை மோசம் செய்து விட்டார்கள்".

"தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் கவலை எடுத்துக்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ்காரர்கள் பல தொல்லை விளைவித்து விட்டார்கள்."

"சில உபாத்தியாயர்கள் வெகு தூரம் மாற்றப்பட்டார்கள். சிலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சில குடிசைகள் கொளுத்தப்பட்டன. சிலர் மரத்தில் கட்டிவைத்து அடிக்கப் பட்டனர். சிலரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டது. நீர்ப்பாசன வசதிகள் நிறுத்தப்பட்டன. மற்றும் அளவற்ற கஷ்டங்கள் அனுபவித்து வருகிறார்கள்."

"கூட்டுத் தொகுதி வேண்டியதில்லை. தனித்தொகுதி மூலம் 18 ஸ்தானமே போதுமானது."

"பெருத்த கிளர்ச்சி செய்து சீக்கிரத்தில் கூட்டுத்தொகுதி முறையை ஒழிக்க வேண்டும்."

"காங்கிரஸ்காரர்கள் மந்திரிபதவி ஏற்காமல் செய்ததற்கு கவர்னருக்கு நன்றி செலுத்துகிறேன்" என்றும் இன்னும் இதுபோன்ற முக்கிய விஷயங்களும் தோழர் ஆர். சீனிவாசன் அவர்கள் அறிக்கையில் மலிந்து கிடக்கின்றன.

இப்போதாவது அவர்களுக்கு புத்தி வந்ததற்கு நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்கு காங்கிரஸ்காரர்கள் இதுவரை யாதொரு பதிலும் சொல்லவில்லை.

எனவே தாழ்த்தப்பட்ட மக்களும் அவர்கள் தலைவர்களும் இனியும் ஏமாந்துவிடாமலும் ஒரு துண்டுரொட்டிக்கு மானத்தை விற்றது போல் தங்கள் தங்கள் சுயநலத்துக்கு ஆக மானங்கெட்டு மதிகெட்டு இழிவடைந்து காங்கிரஸ்காரர்களின் கால்களை நக்கிக்கொண்டு திரியாமலும் சுயமரியாதையோடு வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.05.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: