வைதீகப்பழமான பண்டித மதன்மோகன மாளவியாவும் ஒரு சீர்திருத்தக்காரராம். அவருடைய சீர்திருத்தப்போக்கு மகா விநோதமானது. தீண்டாதார் தீக்ஷை பெற்றுவிட்டால் ஏனைய இந்துக்களைப் போல அவர்களும் ஆலயங்களுக்குள் போகலாம்; சுவாமி தரிசனம் செய்யலாம் என்பது அவருடைய கருத்து. ஆனால் தீண்டாமையைப்பற்றி ஸநாதனிகளுக்குள்ளேயே அபிப்பிராய பேதமிருந்து வருகிறது. பண்டித மாளவியா கோஷ்டியார் வேத சாஸ்திரங்களில் தீண்டாமைக்கு ஆதரவில்லை யென்கிறார்கள். ஏனைய மாறுதல் வேண்டாத ஸநாதனிகள் உண்டு என்கிறார்கள். மாறுதல் வேண்டாத ஸநாதனிகளும் அவர்களை ஆதரிப்பவர்களுமே அதிகமாயிருக்கிறார்கள். எனவே தீண்டாதார் துயரம் அவ்வளவு சுளுவாக நீங்குமென்று நம்புவதற் கில்லை. தீண்டாமையை ஒழிக்க எத்தனையோ பேர் இதற்குமுன் முயன்று பார்த்தும் பயன் ஏற்படாததினாலேயே மத மாறியாவது சுயமதிப்பைப் பெறுங்கள் என்று டாக்டர் அம்பேத்கார் தம் இனத்தாருக்கு யோசனை கூறுகிறார். அவர் யோசனைப்படி பலவிடங்களில் பலர் மத மாறியும் வருகிறார்கள். எனவே ஹிந்து அரசியல்வாதிகளுக்கு கிலி பிடித்திருக்கிறது. தீண்டாதார் மதம் மாறி விட்டால் ஹிந்துக்களின் அரசியல் பலம் குறைந்துவிடும். எனவே தீண்டாதாரை மேலும் ஹிந்து மதத்துக்குள்ளேயே வைத்திருக்க பண்டித மாளவியா போன்ற அரசியல் ஸநாதனிகள் பெருமுயற்சி செய்து வருகிறார்கள். சென்ற மஹா சிவராத்திரி காலத்து கங்கைக்கரையிலே அநேக தீண்டாதாருக்கு பண்டித மாளவியா தீக்ஷõ மந்திரம் உபதேசம் செய்து "சுத்தி"ப்படுத்தியதை நண்பர்கள் அறிந்திருக்கலாம். சென்ற 17ந் தேதியும் நாசிக்கில் அநேக தீண்டாதாருக்கு பண்டித மாளவியா தீக்ஷõ மந்திரம் உபதேசம் செய்தாராம்.

நாசிக் ராமசாமி ஆலயத்தில் தரிசனம் செய்ய நாசிக் தீண்டாதார் வெகுகாலமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். சத்தியாக்கிரகமும் செய்து பார்த்தார்கள். பலிக்கவில்லை. எனவே தீக்ஷõ மந்திரம் மூலம் அவர்களை சுத்திப்படுத்தி ஆலயத்துக்கு அழைத்துச் செல்ல பண்டித மாளவியா முயன்று பார்க்கிறதாகத் தெரிகிறது. நாசிக் ஸநாதனிகளும் மாளவியா கோஷ்டியாரும் தீண்டாமை விஷயமாக விவாதம் நடத்திப் பார்த்தார்கள். பலம் பூச்சியம்தான். "ஐயோ அந்த வம்பர்களிடம் வாதம் செய்து ஜெயிக்க முடியாது" என்று சாது மாளவியாவே வாய்விட்டுக் கூறிவிட்டாராம். "என்னாலான மட்டும் முயன்று பார்த்தேன். திருப்தியான பலன் கிடைக்கவில்லை" என்றும் ஒப்புக்கொண்டாராம். தீண்டாமையை ஒழித்து, ஒடுக்கப்பட்டவர்களை முன்னேற்ற பண்டித மாளவியா உண்மை யாகவே ஆசைப்படலாம். அவரது அந்தரங்க சுத்தியைப்பற்றி நமக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் தீண்டாமையை ஒழிக்க அவர் கையாளும் முறை பலனளிக்கக் கூடியதுதானா என்பதே கேள்வி. முதலில் ஒடுக்கப் பட்டவர்களுக்கு தீக்ஷõ மந்திரம் உபதேசம் செய்யத் தேவையென்ன? ஹிந்துக்கள் அல்லாதவர்களை ஹிந்து மதத்தில் சேர்க்க தீக்ஷõ மந்திரம் உபதேசம் செய்தால் அதற்குப் பொருளுண்டு. ஒடுக்கப்பட்டவர்களும் ஹிந்துக்களே என்று பண்டித மாளவியா ஒப்புக்கொண்டிருக்கையில் அவர்களுக்கு தீக்ஷõ மந்திரம் உபதேசம் செய்வது அவர்களை அவமதிப்பதே யாகும். சுயமரியாதையுடைய ஆதி இந்துக்கள் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். தீக்ஷõ மந்திரம் உபதேசம் செய்வதினால் ஆதி இந்துக்களிடம் பிறவியிலேயே ஏதோ குறை இருப்பதாகக் கருதப்படு கிறது. உண்மையில் அத்தகைய குறைகள் எதுவுமில்லை. ஆதி இந்துக்களும் இந்துக்களானால் அவர்களும் ஏனைய இந்துக்களுக்கு ஒப்பானவர்களே. எனவே பண்டித மாளவியாவின் சீர்திருத்த முயற்சிக்கு அர்த்தமே இல்லை. இம்மட்டோ? அவருடைய முயற்சி ஆதி இந்துக்களை அவமதிக்கக் கூடியதாக இருக்கிறது.

பண்டித மாளவியாவின் மந்திரோபதேசத்தினால் தீண்டாமை யொழியவும் செய்யாது. பண்டிதரிடம் தீக்ஷõ மந்திரோபதேசம் பெற்றவர்கள், தீக்ஷை பெற்ற தீண்டாதவரா யிருப்பார்களேயன்றி இந்துக்கள் ஆகிவிட மாட்டார்கள். தீண்டாமைக்கு அடிப்படையாயுள்ளது ஜாதி. ஜாதி ஒழியாமல் தீண்டாமை ஒழியவே செய்யாது. ஆகவே பண்டித மாளவியாவின் முயற்சி வீண் முயற்சியாகும்.

தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 22.03.1936

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: