கொச்சி சமஸ்தானத்தில் பிரசங்கம்

அன்புள்ள தோழர்களே! கொச்சி ராஜ்ஜிய தீயர் வாலிப சங்கச் சார்பாக உங்களைப் பல ஆயிரக்கணக்கில் சந்திக்க நேர்ந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுடைய அன்பும், உணர்ச்சியும் மிகுந்த ஆடம்பரமான வரவேற்புகளையும், புகழ் வார்த்தைகளையும் கண்டு நான் வெட்கமடைய வேண்டியவனாய் இருக்கிறேன். அவைகள் உண்மையிலேயே எனது தகுதிக்கு மேற்பட்டவையாகும். என்றாலும் என்னிடம் உங்களுக்கு உள்ள விஸ்வாசத்துக்கு நான் பெருமை அடைவதோடு எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைக்கம் சத்தியாக்கிரகம்

வைக்கம் சத்தியாக்கிரகத்தைப்பற்றி பிரஸ்தாபித்தீர்கள். இளம் ஆண்களும் பெண்களும் ஏராளமாய் நிறைந்த இந்த கூட்டத்தையும் குதூகலத்தையும் பார்க்கும் போது வைக்கம் சத்தியாக்கிரகம் தானாகவே எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. வைக்கம் சத்தியாக்கிரகமே முதல் முதலாக உங்களையும் என்னையும் சந்திக்க வைத்தது என்பது மாத்திரமல்லாமல் அந்த சத்தியாக்கிரகமானது நம்மை ஒன்றாகக் கட்டி பிணைத்து விட்டது. அந்த வைக்கம் சத்தியாக்கிரகம் செய்த வேலைதான் இன்று இந்தியா பூராவுக்கும் சமுதாயத் துறையில் ஒரு புதிய உணர்ச்சியை கிளப்பிவிட்டு 100க்கணக்கான வருஷங்களில் கூட நடைபெற முடியாததும் எண்ணமுடியாததுமான காரியங்களையும், எண்ணங்களையும் உண்டாக்கி இருக்கிறது.

இன்றைய நம்முடைய செய்கைளுக்கும் எண்ணங்களுக்கும் கூட வைக்கம் சத்தியாக்கிரகம் ஒருபெரும் காரணமாகும். அது தீய சமுதாயத்தை மாத்திரமல்லாமல் மற்றும் வேறு எத்தனையோ சமுதாயத்துக்கு வெளிச்சத்தையும் சுயமரியாதையையும் கொடுத்துவிட்டது.

வாலிபர்கள்

நிற்க, இந்த சந்தர்ப்பத்தில் வாலிபர்களைப்பற்றி சில வார்த்தைகள் பேசிவிட்டு மேலால் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுகிறேன். வாலிபர் களிடம் எனக்கு அதிக மதிப்பு உண்டு. வாலிபர்களிடம் எனக்கு உள்ள நம்பிக்கையே எனது தொண்டுக்கு ஆதாரமாய் இருந்து வருகிறது. வாலிபர்களிடம் நான் இடையறாமல் நெருங்கிப் பழகிவரும் பழக்கமே என்னை நான் இன்னமும் வாலிபனாக நினைத்துக்கொண்டு இருக்கச் செய்து வருகிறது. வாலிபர் நேசமும் அவர்களது கூட்டுறவும் எனக்கு இளமையை அளித்து வருகிறது என்றுகூட சொல்லுவேன்.

வாலிபர்களாலேயே உலகில் அபார காரியங்கள் ஆகிவருகின்றன. வாலிபர்கள் அனேக நன்மைக்கும் முற்போக்குக்கும் காரணமாய் இருக்கிறவர்கள்.

எனவே, வாலிபர்களுக்கு இவ்வளவு பெருமை இருந்தாலும் வாலிபர்களால் சில சமயங்களில் ஆபத்து நேர்ந்து வருவதுமுண்டு. ஏனென்றால் அவர்கள் சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளத்தக்க வஸ்துக்கள் போன்றவர்கள். வாலிபர்கள் நல்ல காரியத்தில் பிரவேசித்தால் எப்படி அதிக நன்மை உண்டாவது நிச்சயமோ, அதுபோல் வாலிபர்கள் தீய காரியங்களில் பிரவேசித்தால் தீய காரியங்களும் சுலபத்தில் ஏற்பட்டு விடக்கூடும். அவர்கள் ஜாக்கிரதையாக கையாளப்பட வேண்டியவர் களாவார்கள் என்பதையும் நான் மூடி வைக்க இஷ்டப்படவில்லை. வாலிபர்கள் தாங்கள் பிரவேசிக்கும் காரியங்களை நன்றாய் ஆலோசித்துப் பார்த்து முடிவு செய்து கொண்டு பிறகு பிரவேசிக்க வேண்டும்.

சிறிது காலமாக வாலிபர்கள் சுயநலக்காரர்களுக்கும், பிற்போக்காளர் களுக்கும் சுலபமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டு வருகிறதை நான் பார்த்தே இப்படிப் பேசுகிறேன். வாலிப ஆண்கள் கதியே இப்படியானால் வாலிப பெண்களைப் பற்றி பேச வேண்டுமா?

பிரத்தியக்ஷ நிலை

தோழர்களே! மனித சமூகத்தின் பிரத்தியக்ஷ நிலைமையை நாம் நன்றாய்ப் பார்க்கிறோம். மனித சமூகம் செல்வமாய் இருந்தாலும், தரித்திரமாய் இருந்தாலும், அறிவுடமையாய் இருந்தாலும், மூடத்தன்மையாய் இருந்தாலும், மேன்øமாய் இருந்தாலும், கீழ்மையாய் இருந்தாலும், பொதுவில் துக்கமும், கவலையும், அதிருப்தியும், அலைச்சலும் கொண்ட தாகவேதான் இருந்து வருகிறது. இது இந்த நாட்டில் மாத்திரமல்ல. உலக முழுவதும் எந்த தேசத்திலும் மனிதன் என்றாலே துக்கத்துக்கும், கவலைக்கும், அதிருப்திக்கும் ஆளானவன் என்பதாகத்தான் இருந்து வருகிறது.

மனித சமூக சமுதாயத்துக்கு என்று பாடுபடுகின்றவர்கள் எவரும் இதற்கு இதுவரையில், எவ்வித முயற்சியும் செய்ததில்லை. எத்தனையோ பேர்கள் மனிதத் தன்மைக்கு மீறியவர்கள் என்பதாகப் பேர் பெற்றும், உலக மக்களால் வணங்கும்படியானவர்களாகியும் இதைப்பற்றி யாதொரு காரியமும் செய்தவர்களாகக் காணப்படவில்லை. இதைப்பற்றி சிந்தித்தவர் களாகக் கூடத் தெரியவில்லை. மற்றும் அதற்கு விரோதமாக மனித சமூகத்துக்கு துக்கமும், கவலையும், அதிருப்தியும், அலைச்சலும் இயற்கை யென்றும் மனிதன் தனது முயற்சியால் அவைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்புக் கூறிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

பெரும்பான்மையான மக்களால் கருதப்படும், மதிக்கப்படும், தெய்வம், தெய்வசக்தி, தெய்வசக்தி பொருந்தியவர்கள், தெய்வாம்சம் பெற்றவர்கள், தெய்வ அவதாரங்கள் என்பவைகளாகக் கருதப்பட்டவர்களாலும் கூட இவற்றிற்கு நாளது வரை எவ்வித பரிகாரமும் செய்யப்படவில்லை.

இந்தக் காரியங்களில் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே எவ்வித முன்னேற்றமும் ஏற்படவே இல்லை.

பயனற்ற வேலை

பயனற்ற வேலையாகிய சமுத்திர அலையை எண்ணுவதில் போட்டி போடுவது போலவே பயனற்ற காரியங்களை உலக வாழ்க்கையாகக் கற்பித்துக் கொண்டு அவைகளில் போட்டி போடுவதையே மனித லக்ஷ்யமாய்க் கொண்டு சதா அதிலேயே ஈடுபட்டு மனிதன் சிறிதும் திருப்தியும் சாந்தியும் இல்லாமல் குறையினாலேயே மனம் நொந்து துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

இதற்குக் காரணம் என்ன என்பதை சிந்தியுங்கள். மனிதன் உலகிலுள்ள பிராணிகளையெல்லாம் விட விசேஷ அறிவு பெற்றவன். அப்படிப்பட்ட விசேஷ அறிவைப்பெற்ற காரணமாக இக்கஷ்டங்களையும் குறைகளையும் அனுபவிப்பது நியாயமாகுமா?

நாட்டுக்குறை என்ன?

நம் நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் இந்நாட்டுக்கு இயற்கை வளங்களில் என்ன குறைவு இருக்கிறது? நீர்வளம் நிலவளம் குறைவு என்றோ, கெடுதியானது என்றோ சொல்ல முடியுமா? மக்கள் அறிவுக்குத்தான் ஏதாவது குறை சொல்ல முடியுமா? அல்லது மனிதர்கள் மிருகப்பிராயத்தில் இருந்து இன்றுதான் மனிதப் பிராயத்துக்கு வந்தார்கள் என்று சொல்லி விட முடியுமா? ஒன்றும் இல்லையே. இப்படிப்பட்ட நிலையில் ஏன் பலகோடி மக்கள் தீண்டக்கூடாத கிட்ட நெருங்கக்கூடாத "இழிகுல" மக்களாகவும், பலகோடி மக்கள் ஜீவனத்துக்கும் மார்க்கமில்லாத வேலை கிடைக்காத மக்களாகவும், பல கோடி மக்கள் இரவும் பகலும் உழைத்து உழைத்து வஞ்சகர்களுக்கும் சோம்பேறிகளுக்கும் அழுதுவிட்டு பிள்ளை குட்டிகளுடன் அரைப்பட்டினி கிடக்கும் மக்களாகவும் இருக்கக் காரணமென்ன? யோசித்துப் பாருங்கள். இதற்கு எப்போதாவது எந்தப் பெரியோராவது மார்க்கமோ சமாதானமோ சொன்னதுண்டா? சமுதாய வேலையென்றோ, பொதுநல வேலையென்றோ அரசியல் வேலையென்றோ சொல்லப்படுவதானால் அது இக்குறைகளையும், கொடுமைகளையும், பேதங்களையும் சரிப்படுத்துவ தல்லாமல் வேறு எதைச் சொல்லுவது என்று கேட்கின்றேன்.

தெய்வ சங்கற்பமா?

இவ்வளவு கொடுமைக்கும் குறைகளுக்கும் தெய்வ சங்கற்பம் என்கின்ற ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டால் போதுமானதாகிவிடுமா?

அப்படித்தான் சொல்வதானாலும் தெய்வ சங்கற்பம் தான் ஏன் இந்தப்படி இருக்கவேண்டும்? தெய்வ சங்கற்பம் என்று சொல்லுகின்றவர்கள் தாங்கள் சொல்லும் தெய்வத்தை முட்டாள் என்றோ, அயோக்கியன் என்றோ பலவீன சக்தி அற்றவன் என்றோ சொல்லுவதனால் இந்தக்கூற்றுக்கு ஆதாரம் இருக்கலாம். இன்று எவனும் தான் கற்பித்துக் கொண்டோ, அல்லது உணர்ந்து கொண்டோ இருக்கும் தெய்வத்தை மகா மேதாவி என்றும், மகா நீதீவான் என்றும், சர்வசக்தி உடையவன் என்றும் கருதிக் கொண்டு இக்கொடுமைகளையும் இழிவுகளையும் துன்பமயங்களையும் தெய்வ சங்கற்பம் என்று சொன்னால் அதை முட்டாள்தன மென்றோ, அயோக்கியத்தன மென்றோ, சோம்பேறித்தன மென்றோ சொல்லாமல் வேறு என்ன சொல்லுவது என்று கேட்கின்றேன். தெய்வத்தின் காரியத்தால் மனித சமூகம் ஒட்டும் ஏன் துக்க மயத்தில், அதிருப்தி மயத்தில் இருக்க வேண்டும்? ஏன் ஒருவனை ஒருவன் இழிவுபடுத்தி அடிமைப்படுத்தி துன்புறுத்த வேண்டும்? இவைகளைப்பற்றி மனிதன் யோசித்துப் பார்க்க வேண்டாமா? இதை யோசித்து, இதற்கொரு காரணம் கண்டுபிடித்து அதை மாற்ற முயற்சிக்க வில்லையானால் மற்றபடி மனிதனுக்கு பகுத்தறிவு இருந்து என்ன பயன்? பெரியார்கள், அவதாரங்கள், தேவதூதர்கள் தோன்றி என்ன பயன்? பொதுநல சேவையோ, சமுதாய சேவையோ, பெரும் பெரும் தியாகமோ செய்து என்ன பயன்? இவையெல்லாம் குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடுவதுபோல் மூடனும் மூடனும் சேர்ந்து முட்டாள் ஆட்டம் ஆடுவது போலவே தானே முடிகிறது.

வாலிபர் கடமை

இவைகளைப்பற்றி யோசிக்க வேண்டியதுதான் இன்றைய வாலிபர்களின் கடமையாகும். இதை யோசிப்பவர்கள்தான் மனித சமூக விடுதலைக்குப் பாடுபடுபவர்களாகும். ஆனால் இன்றைய விடுதலைப் பேச்சில் இந்த பிரஸ்தாபமே கிடையாது. இதற்கும் மனித சமூக முயற்சிக்கும் சம்மந்தமில்லையென்று முடிவுகட்டிவிட்ட பெரியார்கள்தான் விடுதலைப் பேச்சைப் பேசி விளம்பரம் பெறுகிறார்கள். மூடமக்களும் இப்படிப் பட்டவர்களைத்தான் மதிக்கிறார்கள். அறிவில்லாமல் வெறும் ஆவேசம் மாத்திரம் உள்ள வாலிபர்களும் இப்படிப்பட்ட "பெரியார்"களைத் தான் பின்பற்றி தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்வதோடு உண்மையான விடுதலைக்கும் எமனாய் இருக்கிறார்கள்.

தெய்வம்

சோம்பேறிகளும், வஞ்சகர்களும் மக்களை ஏமாற்றுவதற்காகவே மனிதர்களுடைய பொது குறைகளுக்கு தெய்வத்தைக் கற்பித்துக் காரணம் காட்டி வருகிறார்கள். தெய்வம் என்கின்ற கற்பனை மக்களின் மூடத்தனத்தினால் ஏற்பட்டது என்பது ஒரு சாரார் முடிவு. ஆனால் கொஞ்சம் அளவுக்கு அப்படி இருக்கலாம். பெரும்பாகம் தெய்வ கற்பனைக்கு ஏமாற்றும் தன்மையே காரணமாய் இருக்கவேண்டுமென்பது தான் எனது அபிப்பிராயம். இன்று இந்த நாட்டில் சிறப்பாக உங்கள் சமுதாயத்தின் முக்கிய லக்ஷ்யம் உங்கள் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழிவுக் கொடுமை அதாவது தீண்டாமை, நெருங்காமை என்பவைகளை ஒழிக்க வேண்டும் என்பதே என்று நான் கருதுகிறேன். அதை நானும் ஆமோதிக்கிறேன். மற்ற எந்தப் பிரச்சினையும் விட இதுவேதான் உங்களுடைய முக்கியமானதும் ஒன்றேயானதுமான பிரச்சினையாக இப்போது இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை உலகில் வேறு எங்கும் இல்லாத கொடுமைகள் என்றுதான் சொல்லவேண்டும். எந்த பூமியை ஞான பூமி என்றும், புண்ணிய பூமி என்றும், தர்ம பூமி என்றும் சொல்லுகிறோமோ அந்த பூமியாகிய நமது இந்திய நாட்டில்தான் இந்த முட்டாள் தனமானதும் அயோக்கியதனமானதுமான கொடுமைகள் இருந்து வருகின்றன.

உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தான் ஏராளமான கடவுள்களும், கடவுள் அவதாரங்களும், ஆழ்வார்களும், நாயன்மார்களும், ரிஷிகளும், முனிவர்களும், மகாத்மாக்களும் தோன்றி இருக்கிறார்கள். இன்றும் அம்மாதிரி பலர் இருந்து வருகிறார்கள். இவர்கள் இத்தனை பேர்களாலும் இந்த முட்டாள்தனமான அயோக்கியத்தனமான கொடுமைக்கு அதாவது தீண்டாமை என்னும் இழிவுக்கு ஒரு பரிகாரமும் செய்ய முடியவில்லை. தீண்டாமை ஆயிரக்கணக்கான வருஷங்களாய் இருந்து வருகின்றது.

எந்த தர்ம ராஜ்யமும் இதைப்பற்றி கவனித்து யாதொரு காரியமும் செய்யவில்லை. வேறு யாராவது இவ்விஷயத்தில் பிரவேசித்து ஏதாவது செய்ய முயற்சித்தால், அங்கு ஜாதியும் மதமும், தெய்வமும் வந்து குறுக்கே போடப்படுகிறது. தீண்டாமையைப்பற்றி மக்களை ஏமாற்றி அதை நிலை நிறுத்தத்தான் ஜாதி மத தெய்வ சம்மந்தமான தடைகள் ஏற்படுத்தப்படுகிறதே ஒழிய இவற்றின் பக்தி காரணமாக அல்லவே அல்ல. இதனாலேதான் நாம் தீண்டாமை ஒழிவுக்கு ஜாதியும், மதமும், தெய்வமும் ஒழிந்தாக வேண்டும் என்கின்றோம். இம் மூன்றும் ஒழியாமல் தீண்டாமை ஒழியப்போவதில்லை. தெய்வம் உள்ளவரை மதம் இருந்துதான் தீரும். மதம் உள்ளவரை ஜாதி இருந்துதான் தீரும். ஜாதி உள்ளவரை தீண்டாமை இருந்துதான் தீரும்.

இன்று தீண்டாமையை ஒழிக்கப் பாடுபடுவதாய்ச் சொல்லும் எவரும் ஜாதியையோ மதத்தையோ ஒழிக்க சம்மதிப்பதில்லை.

காந்தியார்

தீண்டாமை ஒழிந்தாலொழிய சுயராஜ்ஜியம் வராது என்று சொன்ன காந்தியாரின் தன்மையை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள்.

காந்தியார் தீண்டாமை போகவேண்டும் என்று மாத்திரம் சொல்லுகிறாரே ஒழிய எங்காவது ஜாதி ஒழிய வேண்டும் என்று ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கிறாரா? அது மாத்திரமல்லாமல் அவர் எவ்வளவு துணிவாக "ஜாதியைக் காப்பற்றுவதே எனது சுயராஜ்ஜியத்தின் லக்ஷ்யம்" என்று சொல்லி வருகிறார் என்பதை யோசித்துப் பாருங்கள். அதாவது :

"வருணாச்சிரம தர்மமே தனது சுயராஜ்யம்" என்கிறார்.

"இந்து மதத்தைக் காப்பாற்றவும், வருணாச்சிரம தர்மத்தை காப்பாற்றவும்தான் நான் உயிர் வாழ்கின்றேன்" என்கிறார்.

இப்படிப்பட்டவரால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்று மூட மக்கள் நம்பிக்கொண்டு அவரைப் பின்பற்றுகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கார் இதன் தந்திரத்தை உணர்ந்து கொண்டார். அதனால்தான் காந்தியாரால் தீண்டாமை ஒழியாது என்று சொன்னதோ டல்லாமல் இந்து மதத்திலும் தனக்கு விஸ்வாசமில்லை என்று சொல்லி இந்து மதத்தை விட்டுவிடுவதாகவும் சொல்லிவிட்டார். ஆனால் அவர் அரசியல்வாதியாகவும், அரசியலில் சில பதவிகள் எதிர்பார்க்கிறவராகவும் இருப்பதால் ஜாதி மத நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தெரிவித்தது போல் கடவுள் நம்பிக்கை இழந்துவிட்டதாகச் சொல்ல அஞ்சுகிறார்.

தீய சமுதாயமாகிய நீங்கள் தைரியமாய் ஜாதியும் மதமும் தெய்வமும் ஒழிக்கப்படவேண்டும் என்றும், இவற்றில் உங்களுக்கு சுத்தப்படி நம்பிக்கை இல்லை என்றும் தைரியமாயும் தாராளமாயும் சொல்லிவிட்டீர்கள்.

இந்தியா பூராவுக்கும் ஒரு சமுதாயமாகச் சேர்ந்து மொத்தத்தில் ஜாதி மத தெய்வ நம்பிக்கை இல்லையென்று சொன்னவர்கள் நீங்களேயாகும். அந்தப் பெருமை உங்களுக்கே உண்டு.

தமிழ்நாட்டில் சுமார் லட்சக்கணக்கான பேர்களுக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லாமலும் பதினாயிரக்கணக்கான பேர்களுக்கு மதத்திலும், தெய்வத்திலும் நம்பிக்கை இல்லாமலும் இருந்தாலும் ஒரு சமுதாயம் பூராவும் ஜாதி மத தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சொல்லும் படியாக இல்லை. தமிழ்நாட்டில் நாடார் சமூகத்தாரில் அநேகருக்கு ஜாதி மத தெய்வ நம்பிக்கை கிடையாது.

ஆலயப் பிரவேசம், மதமாற்றம்

இப்போது உங்களில் சிலர் ஆலயப் பிரவேச உரிமைக்கு ஆசைப் படுவதாகவும், சிலர் இந்து மதம் விட்டு கிறிஸ்து மதத்திற்குப் போக ஆசைப்படுவதாகவும் இவ்விரண்டுக்கும் கிளர்ச்சி நடப்பதாகவும் கேள்விப்பட்டேன். பத்திரிகைகளிலும் பார்க்கிறேன். இது மிகவும் துக்கமும் பரிதாபகரமுமான விஷயமாகும்.

ஈழவர்களோ மற்றும் தாழ்ந்த ஜாதியார் என்பவர்களோ ஆலய பிரவேசத்துக்கு ஆசைப்படுவது சிறிதும் சுயமரியாதை அற்ற விஷயமேயாகும். ஆலயத்தில் என்ன இருக்கிறது? அங்கு சென்றால் என்ன பயன் ஏற்பட்டு விடும்? வீணாக உங்கள் பணமும் உங்கள் நேரமும் பாழாவதல்லாமல் ஆலயத்தால் என்ன நேரிடப் போகிறது?

தமிழ்நாட்டில் நாடார் சமூகத்துக்கு சில ஜில்லாக்களில் ஆலயப் பிரவேசம் இல்லாததால் இன்று அவர்கள் எல்லாக் காரியங்களிலும் மற்ற சமூகத்தாரை விட முற்போக்கில் இருக்கிறார்கள். அவர்கள் தர்மங்கள் எல்லாம் கல்விக்கும் முற்போக்குக்குமாகவே செலவழிக்கப்பட்டு பல "மேல் ஜாதி" சமூகத்தைவிட மேல் அந்தஸ்தில் இருக்கிறார்கள். அவர்களால் பல பள்ளிக்கூடங்களும் ஆஸ்பத்திரிகளுமாக நடைபெறுகிறது. சம்பளமில்லாத ஹைஸ்கூல்கள் நடத்துகிறார்கள். ஆலயப்பிரவேசம் இருந்து இருந்தால் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கதிதான் அவர்களும் அடைந்திருப்பார்கள். அதாவது ஏழை மக்களை சுரண்டவும் உலகுக்கு பயன் இல்லாமல் வாழவும் ஆயிருப்பார்கள். உங்களுக்கு ஆலயப் பிரவேசம் கிடைத்தால் நீங்களும் அந்த கதி அடைவதோடு என்றும் கீழ் ஜாதியாய் இருக்கப்போவது நிச்சயம். உங்களுக்கு பகுத்தறிவும் ஏற்படப்போவதில்லை. மனிதனுடைய முட்டாள் தனத்தை நிலை நிறுத்தவும் அயோக்கியர்களும் வஞ்சகர்களும் பிழைக்கவுந்தான் ஆலயங்கள் இருந்துவருகின்றன. ஆகையால் அதை நீங்கள் வன்மையாய் எதிர்க்க வேண்டும். நீங்கள் மதத்தையும், தெய்வத்தையும் அலட்சியம் செய்யவும் ஒழிக்கவும் ஆரம்பித்த பிறகே ஆலய விஷயத்தில் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்கள் உங்களுக்கு அந்த உணர்ச்சியை ஊட்டி சிறிது இணங்கியும் வருகிறார்கள். அது உங்களை ஏய்க்கவே ஒழிய காப்பற்றவல்ல.

கிறிஸ்து மதம்

அதுபோலவே தீயர்கள் கிறிஸ்து மதம் மாறுவது என்பதையும் நான் பலமாய் ஆட்சேபிக்கிறேன். தீண்டாதவர்கள் கிறிஸ்து மதம் மாறுவது என்பது குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொள்ளுவதேயாகும். கிறிஸ்து மதத்தால் தீண்டாமை ஒழியாது. அம்மதத்தில் இன்றும் தீண்டாதவர்கள் இருக்கிறார்கள். தீயர்கள் கிறிஸ்தவர்களானால் தீயர் என்கின்ற பெயர் சற்று நீளுமே ஒழிய அதாவது கிறிஸ்தவத் தீயர் என்றுதான் சொல்லப்படுமே யொழிய தீயர் என்கின்ற பெயர் போய்விடாது.

தனி சமுதாயமாய் இருப்பதன் மூலமும், மதத்தையும் தெய்வத்தையும் ஒழித்துவிடுவதன் மூலமும் தீண்டாமை ஒழியாது என்று கருதுகிறவர்கள் கிருஸ்து மதத்தில் சேருவதைவிட மகமதிய மதத்தில் சேருவது மேல் என்று சொல்லுவேன். அந்த மதத்தில் ஜாதி வித்தியாசமில்லை, அம்மதம் சிறிதாவது வீரமும் ஒற்றுமையும் உள்ள மதமாகும். சமூக வாழ்வில் உயர்வு தாழ்வு பேதம் கற்பிக்காத மதமாகும். உலகிலுள்ள மற்ற மதக்காரர்களை மிரட்டி நடுங்கச் செய்யும் மதமாகும்.

இந்து மதத்திலும் கிருஸ்துவமதத்திலும் உள்ள அளவு மூடநம்பிக்கையும், புரோகிதப்பிடுங்கல்களும் முஸ்லிம் மதத்தில் இல்லை. முஸ்லீம் சமூகம் பெருகினால் இந்து மத ஆதிக்கம் குறையும் அரசியலிலும் சுதந்திரம் ஏற்படும். அரசாங்கமும் இந்துக்களும் முஸ்லீம்களைக் கண்டால் தான் பயந்து கொள்ளுகிறது. முஸ்லீம்களுக்கு அரசியலில் இரட்டைப்பங்கு கிடைத்திருப்பதின் காரணம் இதுவே. இந்துக்கள் கிளர்ச்சியை அரசாங்கம் லக்ஷ்யம் செய்வதில்லை. கிருஸ்தவர்களுக்கும் அரசாங்கம் பிச்சை கொடுப்பது போலவே உதவுகிறது. ஆனால் முஸ்லீம்கள் விஷயத்தில் அரசாங்கம் நடுங்குகிறது. காரணம் அவர்களது ஒற்றுமையும் கட்டுப்பாடுமேயாகும். ஆதலால் இந்து மதம் விட்டு வேறு மதத்துக்கு போக வேண்டுமானால் முஸ்லீம் மதமே மேலானது.

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் எந்த மதத்தையும் ஒப்புக்கொள்ளுவ தில்லை. அது தெய்வத்தையும் ஒப்புக்கொள்ளுவதில்லை. இந்த கொள்கைகள் இன்று இந்தியாவில் சுயமரியாதை இயக்கத்தினிடம்தான் இருக்கிறது. ஆனாலும் தெய்வ நம்பிக்கையும் மத நம்பிக்கையும் உள்ளவர்களை அது புறக்கணிப்பதுமில்லை. பகுத்தறிவை உபயோகிக்க பூரண உரிமை கொடுக்கிறது. மூட நம்பிக்கை, குருட்டு பழக்க வழக்கம் ஆகியவைகளை ஒழிக்கவே அது பெரிதும் பாடுபடுகின்றது. இந்நாட்டில் உள்ள ஜாதிமத தெய்வ விஸ்வாசமற்ற தீய சமுதாயமும் சுயமரியாதை இயக்கமும் ஒன்றாக வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். இங்கு ஆங்காங்கு சு.ம. இயக்க ஸ்தாபனங்களை ஏற்படுத்த வேண்டும்.

அரசியல்

தாழ்த்தப்பட்டும், கொடுமைப்படுத்தப்பட்டும் இருக்கும் சமூகம் அரசியல் கிளர்ச்சியில் தலையிடக்கூடாது என்பதே எனது அபிப்பிராயம். எங்கள் நாட்டு அரசியல் செப்பிடு வித்தையேயாகும். ஒரு கூட்டத்தார் வயிற்றுப்பிழைப்புக்கும் ஆதிக்கத்துமாகவே அங்கு அரசியல் நாடகம் நடத்தப்படுகிறது.

இந்திய அரசியல் சர்வாதிகாரி தோழர் காந்தியாராவார். இவர் ஜாதி காப்பற்றுகிறவர் வருணாச்சிரமம் காப்பாற்றுகிறவர், இந்து மதம் காப்பாற்றுகிறவர், தெய்வ கட்டளைப்படி நடப்பவர், ராமராஜ்ஜியம் கொண்டுவருபவர். இதன் பயனாகவே மகாத்மாவானவர். இவர் சர்வாதிகாரத் தன்மைக்கு உள்பட்ட அரசியலில் தாழ்த்தப்பட்ட கீழ்படுத்தப்பட்ட மக்களுக்கு கடுகளவு பயன் ஏற்படுமா? அவர் முயற்சியால் இதுவரை கடுகளவு பயனாவது ஏற்பட்டது என்று யாராவது சொல்ல முடியுமா?

இந்திய அரசியல் ஸ்தாபனத் தலைவர் பண்டித ஜவஹர்லாலை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் புஸ்தகப் பூச்சியேயாகும். புஸ்தகத்தில் படித்ததை ஒப்புவிப்பவர். காரியத்தில் அவருடைய ஞானம் தகப்பனாரையும் மனைவியாரையும் மோக்ஷத்துக்கு அனுப்ப அவர்களது எலும்புகளை கங்கையில் போட்டு சடங்கு செய்தவர். இவர்தான் சமதர்மவாதியாம்.

காந்தியார் ஜாதியைப் காப்பாற்றாவிட்டால் அவரது மகாத்மாப் பட்டம் பறந்துவிடும். பண்டித ஜவஹர்லால் எலும்பை கங்கையில் போடாவிட்டால் அவரது வீரப்பட்டம் பறந்துவிடும். பார்ப்பனர்கள் ஒருநாளில் இருவரையும் ஒழித்து சாதாரண ஆள்களாக ஆக்கிவிடுவார்கள்.

இந்த விளம்பர வேட்டை அரசியலில் நீங்கள் சிக்கினால் நசுங்குண்டு போவீர்கள் நீங்கள் பிறர் பயன்படுத்திக் கொள்ளத்தான் ஆளாவீர்கள்.

எதிரிகளோடு சேராதீர்கள்

அரசாங்கத்துக்கு எதிரியாய் இருப்பவர்களுடன் சேராதீர்கள். உங்களுக்கு வேண்டியது சமுதாய சுயமரியாதையேயாகும். அது அரசாங்கத்தாரால்தான் கொடுக்க முடியும். உங்களுக்கு உத்தியோகத்தில் பங்கும் வேண்டி இருக்கிறது. இந்த இரண்டிற்கும் அரசியல் ஸ்தாபனங்கள் காங்கிரசும் தேசீயமும் விரோதமானவை. ஆகவே அவை உங்கள் எதிரிகளாகும். அரசாங்கமோ இவ்விஷயங்களில் அனுகூலமாய் இருக்கிறது.

இன்றையதினம் தோழர் ஜவஹர்லால் அன்னிய அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று பேசுகிறார். அன்னிய அரசாங்கத்தை கூட்டி வந்தவர்கள் ஜவஹர்லால் ஜாதியார் என்பது அவர் அறியாததல்ல.

பிரிட்டிஷ் அரசாங்கத்தினிடம் ஜாதி மத விஷயங்களில் பிரவேசிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் வாங்கிக் கொண்டு சுதேச ராஜாக்களைக் காட்டிக் கொடுத்து துரோகம் செய்தவர்கள் ஜவஹர்லால் ஜாதியார்களேயாகும்.

இப்பொழுதும் இந்த அரசாங்கத்தை ஒழிக்க முயற்சிப்பதின் காரணம் இந்த அரசாங்கம் ஜாதி மத விஷயத்தில் பிரவேசித்து சீர்திருத்தம் செய்ய புறப்பட்டதேயாகும்.

வரப்போகின்ற (கனவு காண்கின்ற) அரசாட்சியிலும் ஜாதிமதத்தைக் காப்பாற்றுவதாக ஒப்பந்தம் செய்து பார்ப்பனர்கள் பந்தோபஸ்து செய்து கொண்டார்கள். அதுதான் கராச்சிக் காங்கிரஸ் ஜீவாதாரமான உரிமையின் முக்கியாம்சமாகும். இதற்கு ஜவஹர்லால் மேலொப்பம் போட்டிருக்கிறார். இந்த மாதிரி புரட்டுகளுக்கு நீங்கள் ஆளாகாதீர்கள்.

எங்கள் நாட்டில் பல இழி மக்களுடைய நிலைமையும் கீழ்த்தர சுயநல மக்களுடைய நிலைமையும் பார்ப்பனர்கள் காலைக் கழுவி தண்ணீரைச் சாப்பிட வேண்டியிருப்பதால் அவர்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாகவும் குலாம்களாகவும், அவர்களது மக்களாகவும் இருக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். உங்களுக்கு அந்த அவசியம் இல்லை. நீங்கள் ஜாதி, மதம், தெய்வம் ஆகியவைகளில் நம்பிக்கை அற்று உங்கள் சமுதாயத்துக்குள் அவர் களை தலைகாட்டாமல் அடிப்பதே உங்களுடைய உண்மையான சுதந்திரமாகும். அதுவே அரசியல் சுதந்திரமாகும். அதுவே முதல்தர சமதர்மமுமாகும்.

வாலிபர்களை நான் கேட்டுக் கொள்வதும், வாலிபர்களிடம் நான் எதிர்பார்ப்பதும் இதுதான். எந்தக் காரணம் கொண்டும் அரசியல் புரட்டிலும் காங்கிரஸ் செப்பிடு வித்தையிலும் கலந்து கொள்ளக் கூடாது என்பதே.

திவான்

உங்கள் ஊர் திவானைப் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. நான் அதைப் பற்றிப் பேச ஆசைப்படவில்லை. ஒரு காரியம் மாத்திரம் சொல்லுகிறேன். திவான் சர். ஷண்முகம் அவர்கள் பெயரை நினைத்தாலே எங்கள் நாட்டுப் பார்ப்பனர் வயிற்றில் நெருப்புப் பற்றிக் கொள்ளுகிறது. அவர் ஒரு நாளைக்கு கவர்னர் ஆவார் என்பது பார்ப்பனர்களின் ஜோசியம். அதற்காக அவரை எப்படியாவது தட்டி விட வேண்டுமென்று கட்டுப்பாடாக பார்ப்பனர்கள் முயற்சிக்கிறார்கள். எங்கள் மாகாணத்தில் இரண்டு பேர் பார்ப்பனரல்லாதார் கவர்னராகி விட்டார்கள். ஒரு "சாயபும் ஒரு நாயுடுவும்" கவர்னராகிவிட்டார்கள். ஒரு "செட்டியாரும்" ஆகக்கூடும். இந்த ஸ்தானம் பார்ப்பனருக்கு கிடைக்கவில்லை, இனி கிடைப்பதும் லேசான காரியமல்ல. ஆதலால் அவர்கள் இந்த விஷமம் செய்து அவர் பெயரைக் கெடுக்க தமிழ்நாட்டிலிருந்து பார்ப்பன சக்தி இங்கு வந்து வேலை செய்கிறது. அவரது அரசியல் நிர்வாகம் எப்படியிருந்தாலும் அதைப் பற்றி நான் சிபார்சு பேசவில்லை. ஆனால் அவரது சமூக விஷயமான நிர்வாகம் உங்களுக்கு மிகவும் அனுகூலமானதாகவே இருக்கும். அதற்கு ஆகவே அவர் இங்கு அவர் தகுதிக்கு மிகவும் சிறியதான இந்த வேலையில் இருக்கிறார்.

ஆதலால் அது விஷயத்திலும் நீங்கள் பார்ப்பனர்களுடனோ மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களுடனோ சேர்ந்து உங்களந்தஸ்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். அவருக்கு இங்கு இருக்கப்பிரியமில்லை. அவர் தன் தகுதிக்கு ஏற்ற மேல் உத்தியோகத்தில் கண் வைத்து கொண்டிருக்கிறார். சீக்கிரம் போய் விடக்கூடும். அதற்குள் குறைகளை நீக்கிக் கொள்ள முயற்சியுங்கள்.

குறிப்பு: கொச்சி சமஸ்தானத்தில் தீய வாலிபர் சமாஜங்கள் சார்பாக 19.04.1936 ஆம் நாள் எர்ணா குளத்தில் நடைபெற்ற தீய வாலிப சங்க 4 ஆவது மாநாடு, 20.04.1936 ஆம் நாள் ஒச்சன் துருத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டம், 21.04.1936 ஆம் நாள் சேத்தன்மங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம், 22.04.1936 ஆம் நாள் கிராங்கனூரிலும் திருச்சூரிலும் நடைபெற்ற பொதுக்கூட்டம் இவற்றில் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 26.04.1936

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: