இந்தியாவில் உள்ள பத்திரிகைகள் பெரிதும் பார்ப்பன ஆதிக்கத்தில் இருப்பதால் அவர்கள் தங்களுக்கு அனுகூலமாக எவ்வித சேதிகளையும், விஷமத்தனமான காரியங்களையும் அடியோடு பொய்யாக கற்பித்து விஷமப் பிரசாரம் செய்து விடுகிறார்கள். அது பரவி மக்களுக்குள் செய்ய வேண்டிய விஷமங்களைச் செய்த பின் ஒரு அலட்சிய விஷயம் போல் மறுப்பு எழுதி தெரியாத ஏதோ ஒரு கோடியில் பலர் கண்களுக்கு தெரியாமல் பிரசுரித்து விட்டு யோக்கியர்கள் ஆகிவிடுகிறார்கள்.

இந்தப்படியான அயோக்கியப் பிரசாரத்தாலேயே காந்தியாரை மகாத்மாவாக்கியும், பண்டித மாளவியாவை தேச பக்தராக்கியும், பண்டித ஜவார்லாலை வீரராக்கியும், தமிழ் மக்களை ஏமாற்றியும் வாழ்ந்து வருகிறார்கள்.

காந்தியாரைப் பற்றியும், நேருக்களைப் பற்றியும் இப்பார்ப்பனர்கள் கட்டிவிட்ட புளுகு கொஞ்ச நஞ்சமல்ல. அப்புளுகுகளைப் பிரசாரம் செய்ய காலிகளுக்கும், கூலிகளுக்கும் காசு கொடுத்து உசுப்பிவிட்டதும் கொஞ்ச நஞ்சமல்ல.

காந்தியாரை ஜெயிலுக்குள் போட்டு பூட்டினால் வெளியில் வந்து விடுகிறார் என்றும், அதனாலேயே அவரை சர்க்கார் பூட்டுவதில்லை யென்றும், அடிக்கடி விட்டு விடுகிறார்கள் என்றும் கட்டி விட்டார்கள். அவர் மூத்திரம் பன்னீர் வாடை அடிக்கின்ற தென்றும், சிலந்திப் பூச்சிகள் எல்லாம் காந்தியார் பெயரை இந்தியில் எழுதுகின்றன என்றும் காலிகளை விட்டு பேசச் செய்தார்கள்.

காந்தியாரை ராஜா கூப்பிட்டார், மந்திரி கூப்பிட்டார், வைசிராய் கூப்பிட்டார், வைஸ்ராய் வந்து காணப் போகிறார், முசோலினி கூப்பிடுகிறார் என்றெல்லாம் சிறிதும் மானம் வெட்கம் இல்லாத பொய்களை எழுதினார்கள். அசோசியேட் பிரஸ், யுனைட்டெட் பிரஸ் முதலியவற்றின் மூலம் வெளியாக்கினார்கள்.

ஜவஹர்லாலைப் பற்றியும் இதைவிட மோசமான இழிவான புளுகுகள் புளுகி புகழ்ந்தார்கள்.

கடைசியாக "அவைகளுக்கு ஆதாரம் இல்லை" என்று ஒரு வரியில் எழுதினார்கள். என்றாலும் காங்கிரசில் பார்ப்பனர்களின் எச்சில் இலையில் சிந்திக்கிடப்பதைப் பொறுக்கித்தின்று ஜீவனம் நடத்தும் இழி மக்கள் இனியும் அம்மாதிரியே பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றார்கள்.

நிற்க, இவ்வாரத்தில் "டாக்டர் அம்பேத்கார் இன்னம் பத்து வருஷத்துக்கு ஹரிஜனங்களை பிற மதத்துக்கு சேரும்படி பிரசாரம் செய்வதில்லை என்று காந்தியாரிடம் பிரமாணம் செய்து கொடுத்து விட்டார்" என்று கொட்டை எழுத்துக்களில் 2, 3 கலம் தலைப்புக் கொடுத்து போட்டு விட்டு அதை மறுத்து அம்பேத்கார் கொடுத்த சேதியை அது போல் வெளியிடாமல் விஷமத்தனமாக இரண்டருத்தம் கொடுக்கும்படியான மாதிரியில் பிரசுரிப்பது எவ்வளவு ஈனத்தனமும், இழிமக்கள் செய்கையும் ஆகும் என்று கேட்கின்றோம்.

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம்.

அதுபோல் நம் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்துக்கும் மானமற்ற தன்மைக்கும் ஒரு அளவு இல்லாமல் போய்விட்டதால் அதோடு போராடுவது சிரமமாகத்தான் இருக்கிறது.

எவ்வளவு பெரிய ஒரு காரியத்தில் இம்மாதிரியான அயோக்கியத் தனங்கள் சிறிதும் வெட்கமில்லாமல் செய்யப்பட்டிருக்கிறது என்று பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறோம். இந்த சேதி வந்தவுடன் டாக்டர் அம்பத்காரைப் பற்றி மற்ற மக்கள் வெகு கேவலமாக நினைத்து விட்டார்கள். அம்பத்கார் சீர்திருத்த உலகில் செத்துவிட்டார் என்றே மக்கள் கருதி விட்டார்கள்.

அம்பத்காருக்கு இது மகத்தான அக்கிரமம் செய்ததாகும் என்பதில் என்ன சந்தேகம்?

இந்தக் கூட்டத்தார் அம்பத்கார் தூங்கும் போது கழுத்தறுக்க பயப்படுவார்களா என்பது யோசிக்கத்தக்க விஷயமாகும்.

காந்தி கூட்டத்தார் தங்கள் காரியத்துக்கு என்ன வேண்டுமானலும் செய்வார்கள், எவ்வளவு இழிவான காரியமும், துரோகமான காரியமும் செய்வார்கள் என்பதை இது ருஜுப்படுத்த வில்லையா?

ஆகவே இந்தியாவுக்கு மானமோ, சுயமரியாதையோ ஏற்பட வேண்டுமானால் இந்த மாதிரி காந்தி கூட்டத்தார் அழிந்து ஒழிந்தாக வேண்டும் என்கின்றதை தவிர வேறு விமோசனமில்லை.

குடி அரசு துணைத் தலையங்கம் 10.05.1936

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: