திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்திலும், பிரிட்டிஷ் மலபாரிலும் 23 லக்ஷம் ஜனங்கள் ஈழவர்கள் என்றும், தீயர்கள் என்றும் சொல்லப்படுவ தல்லாமல் அவர்கள் 5வது ஜாதியாயும் பஞ்சமரில் பட்டவராயும் தீண்டத்தகாதவராயும் பாவித்து வரப்படுகிறது.

ஈழவ சமுதாயம் தீண்டத்தகாத வகுப்புபோல் கொடுமை செய்யப்பட்டு வந்தாலும் அச்சமூகம் இன்று சூத்திரர்கள் என்று தாங்களாகவே ஒப்புக் கொள்ளும் நாயர் சமுதாயத்துக்கும், பார்ப்பன சமுதாயத்துக்கும் அறிவிலும் ஆற்றலிலும் எள்ளளவும் குறைந்தவர்கள் அல்ல என்கின்ற நிலையில் இன்று இருந்து வருகிறார்கள். கல்வியிலும் நல்ல முற்போக்கடைந்து இருக்கிறார்கள். இதற்கு உதாரணம் வேண்டுமானால் திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் மகமதியருக்கு பள்ளிக் கூடத்தில் அரைச் சம்பளம் உண்டு. ஆனால் ஈழவருக்கு அரைச் சம்பளச் சகாயம் இல்லை. காரணம் என்னவென்றால் ஈழவர்கள் கல்வியில் பிற்பட்ட வகுப்பு அல்ல என்கின்ற காரணமே யாகும்.

அப்படிப்பட்ட ஈழவ சமூகம் வைக்கம் சத்தியாக் கிரகத்துக்குப் பிறகும், அவர்களது ஒப்பற்ற தலைவராகிய ஸ்ரீநாராயணகுருசாமியின் தீவிர சீர்திருத்த வேலைக்குப் பின்னும் இனி அரை நிமிஷம் தீண்டாத ஜாதியாகவோ, பஞ்சம ஜாதியாகவோ இருந்து உயிர் வாழக்கூடாது என்கின்ற உணர்ச்சி பெற்று பெரியதொரு கிளர்ச்சி செய்து வருகிறார்கள். என்றாலும் தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கும், கிளர்ச்சிக்கும் பார்ப்பனர்கள் எப்படி பெரியதொரு வியாதியாயும், கூற்றுவர்களாயும் இருக்கிறார்களோ அது போலவே திருவாங்கூரில் ஈழவர்களுக்கு நாயர்கள் முட்டுக்கட்டையாயும் எதிர்ப்பாயும் இருந்து வருகின்றார்களாம்.

தமிழ்நாட்டில் எப்படி தமிழ் மக்கள் பார்ப்பனர்கள் கொடுமை சகிக்கமாட்டாமல் இந்து மதத்தையும், ஜாதியையும் சிலர் கடவுள்களையும் கூட வெறுத்து விலகிவிட்டார்களோ அதுபோல் மலையாளத்தில் நாயர்கள் தொல்லையை சகிக்க மாட்டாமல் 23 லக்ஷ ஈழவர்களும் ஒரே அடியாய் மதத்தையும் கடவுளையும் விட்டு விலகிவிடத் தீர்மானித்து விட்டார்கள்.

இம்மாதம் 6, 7 ந் தேதிகளில் திருவாங்கூர் சங்கனாச்சேரியில் கூடிய கு.N.ஈ.க. யோக மகாநாடுகளில் அதாவது 3 மகாநாடுகளிலும், வாலிப மகா நாட்டிலும், மத மகாநாட்டிலும், பொது மகாநாட்டிலும் ஒரே அடியாக 10000 பேர்களுக்கு மேல் ஆண்களும், பெண்களுமாய் கூடியுள்ள பெரிய கூட்டத்தில் "இந்துமதம் மனித சமூக முன்னேற்றத்துக்கும், சுயமரியாதைக்கும் எதிராய் இருப்பதால் ஈழவ சமுதாயம் ஒட்டுக்கும் இந்து மதத்தை விட்டு விலகிவிட வேண்டும்"

என்று பெரிதொரு உற்சாகத்தோடு ஏகமனதாய் தீர்மானித்து விட்டார்கள். அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல்,

"ஈழவ சமுதாயத்தை ஏமாற்றி வஞ்சித்து அவர்களை பாமர மக்களாய் வைத்திருக்க, ஈழவருக்கு ஆலயப் பிரவேசம் கொடுக்க ஜாதி இந்துக்கள் என்பவர்கள் முன் வந்திருக்கிறபடியால் ஈழவர்கள் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்பதோடு கோவில்களுக்கும் போகக்கூடாது" என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டார்கள்.

தமிழ் நாட்டில் ஈழவர்களை விட இழிவாகவும் கேவலமாகவும் கருதப்பட்டு கல்வி இல்லாமலும், உரிமை இல்லாமலும், கொடுமைப் படுத்தப்படும் ஆதி திராவிட மக்களில் சிலர் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து சமூக நலத்தையும், சுயமரியாதையையும் பறிகொடுத்து விட்டு இந்து மதத்தையும், கோவில்களையும் கட்டி அழுவது மாத்திரமல்லாமல் இந்து மத பிரசாரமும், கோவில் பிரசாரமும் செய்வதென்றால், இந்த ஆதி திராவிட சமூகத்துக்கும் ஈழவ சமூகத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

இந்து மதத்தை ஒழிக்கவேண்டும் என்றும், இந்துமதம் மனித சுயமரியாதைக்கு எதிரானது என்பதோடு அயோக்கியர்களது சுயநலத்துக்கும், சோம்பேறிகளது வயிற்றுப் பாட்டிற்கும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அதில் யோக்கியமோ நாணயமோ இல்லை என்று வெகு காலமாகவே சொல்லி வருகிறோம்.

உதாரணமாக, தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் 1922ல் திருப்பூரில் கூடிய தமிழ் மாகாண காங்கிரஸ் மகாநாட்டில் இந்து மதத்தைக் குறை கூறி இராமாயணத்தையும், மனுதர்ம சாஸ்திரத்தையும் நெருப்பில் இட்டு பொசுக்க வேண்டும் என்று சொன்னதும்,

மற்றொரு சமயத்தில் தோழர் ராமசாமி நான் இந்துவாய் இருந்து சாகமாட்டேன் என்று சொன்னதும் யாருக்கும் ஞாபகமிருக்கும். ஆகவே, இந்த இரண்டு வார்த்தைகளையும் தைரியமாக முதல் முதல் இந்த நாட்டில் வெளிப்படையாகச் சொன்னதோடு மாத்திரமல்லாமல் அது சந்து பொந்து மூலை முடுக்குகளில் பிரசாரம் செய்து வந்ததும் தோழர் ஈ.வெ. ராமசாமியாகும். அதை ஆதரித்து நாம் எழுதி வந்ததும், பிரசாரம் செய்து வந்ததும் அந்தக் காலம் முதல் இதுவரை அனேகம் பேருக்கு ஆத்திரமாகவும் வருத்தமாகவும் இருந்து வந்தாலும், அதற்கு எதிராக எத்தனையோ பேர் பிரசாரம் செய்து வந்திருந்தாலும் இன்று அந்த அபிப்பிராயம் எல்லா எதிர்ப்புகளையும் விஷமங்களையும் சூழ்ச்சிகளையும் சமாளித்து ஆண்மையோடும், சக்தியோடும் தலைதூக்கி இமயமலை முதல் கன்னியாகுமரி வரை மதத்தை ஒழி! கடவுளை ஒழி!! இந்து மதம் அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்பு மதம்!!! என்று 10000 பேர் 20000 பேர் உள்ள கூட்டத்தில் வீர கர்ஜ்ஜனை செய்யும்படியான நிலைமைக்கு வந்துவிட்டது.

காந்திகளும், மாளவியாக்களும், நேருக்களும் என்னதான் களிமண் உபதேசமும் , ஞானஸ்நான உபதேசமும் ஹரிஜன முன்னேற்ற வேஷமும் எலும்பை கங்கையில் போட்டு நபரை மோக்ஷத்துக்கு அனுப்பும் நாடகமும் செய்தாலும், நடத்தினாலும் இனி இந்து மதத்தைக் காப்பாற்றுவது என்பது வெள்ளரிக்காய்க்குப் பூண் போடும் வேலையாகத்தான் முடியுமே ஒழிய காரியத்தில் ஒன்றும் ஆகப்போவதில்லை.

கிறிஸ்துமதம் மேல்நாடுகளில் ஆட்டம் கொடுத்துவிட்டது. ஏழ்மையின் காரணமாக இந்து மதத்தின் கொடுமையின் காரணமாக உத்தியோக ஆசை பரிகாரமாக இந்தியாவில் கொஞ்சம் இருக்கிறது. அதுவும் ஏழைகளை வஞ்சித்து ஊரைக் கொள்ளையடித்த சில பணக்காரர்களின் பணங்களால் கிருஸ்துமதம் இருப்பதாக வாயால் சொல்லிக் கொள்ளப் படுவதல்லாமல் காரியத்தில் மதம் மேல் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பாவிலும் கூட கிழக்கு கோடி ரஷ்யாவிலும், மேற்கு கோடி ஸ்பெயினிலும் செத்தே விட்டது. மத்திய ஐரோப்பாவில் பரிகாசத்துக்கு இடமாய் விட்டது. இப்போது இருப்பதாய் சொல்லும் கிருஸ்து மதம் அரசர்களையும், பணக்காரர்களையும் காப்பாற்றவும் ஜனநாயகத்தையும் ஏழைகள் விடுதலையையும் தடுக்கவும், ஏமாற்றவுமே ஐரோப்பாவில் (மதம்) இருந்து வருகிறதே அல்லாமல் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தைக் காட்டவோ, அயோக்கியர்களை, கொடுமைக்காரர்களை நரகத்துக்கு அனுப்பவோ இல்லை. ஆகையால் தமிழ் நாட்டில் எப்படிப் பார்ப்பன ஆதிக்கம் கூலிகளின் கூப்பாடுகளால் இருக்கிறதோ அதுபோல் மதமும் சோம்பேறி வயிற்றுப் பிழைப்பாளர்களின் பிரசாரத்தால் தான் இருக்கிறது தவிர வேறில்லை.

உலக மனித சமுதாயம் முன்னேற்றமடைவதற்கு இந்து மதமும் கிருஸ்து மதமும் முதலில் ஒழிந்தாக வேண்டும் என்பதை இப்போதாவது இந்திய மக்களும், ஐரோப்பிய மக்களும் உணர்ந்ததற்கு நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

இதுவரை கிருஸ்தவ மத யோக்கியதைக்கு ஒரே ஒரு நற்சாக்ஷிப் பத்திரமிருந்து வந்தது. அதாவது அமெரிக்காவில் கிறிஸ்தவ நீக்கிறோவர்களை கிறிஸ்தவ ஐரோப்பியர்கள் எப்படி நடத்துகிறார்கள்? இந்தியாவில் கிறிஸ்தவ கோவில்களில் பறபள்ளசக்கிலியர் என்கின்ற கிருஸ்தவர்களை பாதிரிகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே.

இப்போது அபிசீனிய கிருஸ்தவர்களையும் அபிசீனிய கிருஸ்தவ நாடுகளையும், ஐரோப்பிய கிருஸ்தவர்களும் ஐரோப்பிய கிருஸ்தவ நாடுகளும் எப்படி நடத்திற்று என்கின்ற இரண்டாவது நற்சாக்ஷிப் பத்திரம் ஏற்பட்டு விட்டது. அம்மதம் ஒழிய வேண்டும் என்பதற்கு இவைகளை விட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.

அதுபோலவே இந்து மதத்துக்கும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் தாழ்த்தப்பட்ட மக்களிடத்தும் மற்றும் பார்ப்பனரல்லாத மக்களிடத்தும் பார்ப்பனர்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பதும், அவர்களை எப்படிக் கருதி எப்படி நடத்துகிறார்கள் என்பதும், இந்துமத வேத சாஸ்திரங்களில் அம்மதத்தைச் சேர்ந்த 100க்கு 97 மக்களின் நிலை எப்படி இருந்து வருகிறது என்பதும் மானமுள்ள சுத்த ரத்த ஓட்டமுள்ள ஜாதி மக்களுக்கு ஒரு நல்ல அத்தாட்சியாகும். அதோடு இப்போது அரசியல் சீர்திருத்த சமயத்தில் காந்தியார் வட்டமேஜை மகாநாட்டில் நடந்து கொண்டதும் பார்ப்பனர்கள் மற்ற ஜாதியார்களை வஞ்சிக்க எவ்வளவு சூழ்ச்சியான காரியம் செய்கிறார்கள் என்பதும் அடுத்த மாதத்தில் தமிழ் மக்களை ஏய்க்க தோழர்கள் மாளவியாவையும், காந்தியையும், நேருவையும் தமிழ்நாட்டுக்குக் கூட்டி வந்து எவ்வளவு மோசமும் துரோகமும் செய்ய உத்தேசித்து இருக்கிறார்கள் என்பதும் இரண்டாவது அத்தாட்சியாகும்.

ஆகவே மத விஷயமாக இந்த 10, 12 வருஷ காலத்திலேயே நாம் சொல்லி வந்ததெல்லாம் ருஜுவாகி பாமர மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று இமயமலை முதல் கன்னியாகுமரி வரை இந்துமதம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கூச்சல் ஆகாயத்தை பிளந்து நிற்கிறது என்பதைப் பார்க்கும் போது நாம் ஆனந்தக் கூத்தாடாமல் இருப்பதற்கில்லை.

குடி அரசு துணைத் தலையங்கம் 10.05.1936

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: