19.3.35ல் நீதிபதிகள் ராமேசம், ஸ்டோன்ஸ் இருவர்களும் திருச்செந்தூர் ஆலயப் பிரவேச வழக்கில் தீர்ப்புக் கூறினார்கள். இந்த வழக்கு சட்ட சம்பந்தமான வியாக்கியானத்தைப் பற்றிய தகராறில் பிரிவி கௌன்சில் வரையில் போய் மறுபடியும் ஹைக்கோர்ட்டுக்கு வந்தது.

இப்போது கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் "எண்ணெய் வாணியர்" என்ற ஜாதியாருக்கு ஆலயப் பிரவேச உரிமை உண்டு.

வழக்கின் வரலாறு

திருச்செந்தூரிலுள்ள சில வாணியர்கள் தமது வகுப்பினருக்குப் பிரதிநிதிகள் என்ற ஹோதாவில் சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாக்களையும் ஸ்தலத்தார் என்று சொல்லப்படும் சில உரிமையாளரையும் பிரதிவாதிகளாக்கி, அந்த ஆலயத்தில் மற்ற மேல்ஜாதி ஹிந்துக்கள் போகும் இடம் வரையில் போய் தரிசனம் செய்யத் தமக்கு உரிமை உண்டென்று வழக்குத் தொடர்ந்தார்கள். முதலில் இது தூத்துக்குடி சப் கோர்ட்டில் நடந்தது.

ஆக்ஷேபம்

பிரதிவாதிகள் பின் வருமாறு தாவாச் செய்தார்கள். வெளிப் பிரகாரத்தில்கூட இந்த வகுப்பினர் வருவதற்கு உரிமை கிடையாது. 1877ல் இதைப் பற்றி வியாஜ்ஜியம் நடந்திருக்கிறது. வாணியர் களுக்கு இந்தக் கோயிலில் பிரவேச உரிமை இல்லையென்று அப்போது தீர்ப்பு கூறப்பட்டிருப்பதால், இப்போது கொண்டுவரப் படும் வழக்கு "முன் வழக்கால் பாதிக்கப்படுகிறது" என்று அவர்கள் விவாதித்தார்கள்.

சப் கோர்ட்டு தீர்ப்பு

வாணியர்கள் "வைசியர்கள்" என்று ருசுவாகாவிட்டாலும் அவர்கள் சூத்திரர்களுக்கு குறைவானவர்களல்ல. முன் வியாஜ்யம் பிரதிநிதித்துவ வியாஜ்ஜியமல்ல. ஆகையால் இப்போது வரும் பிரதிநிதித்துவ வியாஜ்ஜியத்தை முன் தீர்ப்பு பாதிக்காது என்று சப்கோர்ட்டு கருதியது. வாணியர்களுக்கு உரிமையுண்டு என்று தீர்ப்புக் கூறப்பட்டது.

பிரதிவாதிகள் ஹைக்கோர்ட்டில் அப்பீல்

இதன் மீது ஹைக்கோர்ட்டில் தர்ம கர்த்தாக்களும் ஸ்தலத்தாரும் அப்பீல் செய்தனர். முன் தீர்ப்பினால் பாதகம் தான் என்று சொல்லி, ஹைக்கோர்ட்டு வாணியர்களுக்கு விரோதமாக தீர்ப்புக் கொடுத்தது.

பிரிவி கவுன்சிலில் மாறியது

முன் வழக்கால் பாதகம் ஏற்பட்டதா என்பதைப் பற்றி வாணியர்கள் பிரிவி கவுன்சிலில் அப்பீல் செய்தார்கள். பாதகமில்லை யென்று பிரிவி கவுன்சில் சொல்லிவிட்டதோடு, இந்த வழக்கின் உள் விஷயங்களையும் கவனித்து தீர்ப்புக் கூறும்படி உத்திரவிட்டது.

கடைசியாக இப்பொழுது ஹைக்கோர்ட்டில் வழக்கு வந்தது.

வாணியர்கள் எக்காலமும் பிரவேச உரிமையை அனுபவிக்க வில்லை யென்பதை ருசுச் செய்வது பிரதிவாதிகள் பொறுப்பு; ஏனென்றால் வாணியர்கள் வைசியர்களைவிட தாழ்ந்த படியிலிருப் பவர்களல்ல. பிரதிவாதிகள் முன் அனுஷ்டானத்தை ருசுச் செய்ய வில்லை. 1862க்கு முன் வாணியர்களுக்கு பிரவேச உரிமை இருக்க வில்லையென்று ருசுவாகவில்லை.

ஆகையால் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதாவது சப்கோர்ட்டின் தீர்ப்பு உறுதி. வாணியர்களுக்கு உரிமையுண்டு என்பதே இப்போது ஏற்பட்டுள்ள தீர்ப்பு.

இந்த வழக்கில் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.எல். வெங்கடராமய்யர், வி. சம்பந்தம் செட்டி ஆகியோர் வாணியர் கட்சிக்கும், டி.ஆர். வெங்கடராமய்யர், கே.எஸ். சங்கரய்யர், டி. நல்லசிவம்பிள்ளை தர்மகர்த்தாக்களுக்காகவும் ஆஜரானார்கள். (தினமணி)

குறிப்பு: பிரிட்டிஷ் ஆட்சி நம் நாட்டில் இல்லாமல், பார்ப்பனர் களுடைய வருணாச்சிரம தர்ம சுயராஜ்ய ஆட்சி இருந்திருக்குமானால், இத்தகைய தீர்ப்பு ஏற்பட்டிருக்க முடியுமா? இத்தகைய வழக்கு தொடர்ந்ததையே அதிகப் பிரசங்கித்தனமானதென்று கருதி அதற்காக வாதிகளுக்கு கடுந்தண்டனை கொடுத்திருப்பார்கள் என்பதில் என்ன சந்தேகம். வருணாச்சிரம தர்ம ஆட்சிக்காரப் பார்ப்பனர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிபவர்கள் இதைக் கவனிப்பார்களா?

(பர்.)

குடி அரசு பத்திராதிபர் குறிப்பு 24.03.1935

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: