தோழர்களே!

இன்று பொதுவாகவே மனித சமூகத்துக்கு உள்ள கஷ்டங்களையும், குறைபாடுகளையும் பற்றி உங்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை.

குறிப்பாக நமது நாட்டு மக்களிடை உள்ள குறைபாடுகள் மற்ற நாட்டு மக்கள் குறைபாடுகளைவிட அதிகமாகவே இருந்து வருகின்றன. நமது குறைகளுக்கு நிவாரணம் அரசியல் மாறுதலால்தான் முடியும் என்பது சிலருடைய அபிப்பிராயம். ஆனால் சுயமரியாதை இயக்கம் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை.

அரசியலானது சமுதாயக் கொள்கைகளையும், மதக் கட்டளைகளையும் ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல் மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டுவிடும் என்று நாம் கனவுகூடக் காண முடியாது.

அரசியல் கொள்கைகளை சமூகம் தான் நிர்ணயிக்க வேண்டும். சமூகத்துக்கு ஆதாரம், முன் குறிப்பிட்ட சமுதாய பழக்க வழக்கங்களும், ஜாதி மதக் கட்டளைகளுமே ஆகும்.

எந்த நாட்டிலும் அரசாங்க ஆட்சித் திட்டம் சமுதாய ஜாதி மத பழக்க வழக்கங்களின் மீதே இருந்து வருகின்றன. ஏதோ இரண்டொரு அற்ப விஷயங்களே இதிலிருந்து விலக்கு பெற்றதாக இருக்கலாம்.

நம் நாட்டு அரசியல் சீர்திருத்தம் என்பதில், அரசாங்கத்தாராவது சமூக மக்களாவது ஜாதி மதப் பழக்க வழக்கங்களில் மாறுதல் செய்யச் சிறிதும் சம்மதிப்பதில்லை.

நமது இன்றைய அரசாங்கமோ, இந்நாட்டு மக்களிடம் ஜாதி மத பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்து விட்டு, ஆட்சி புரிகின்றது என்பது நாம் அறியாததா? இன்றைய நமது அரசியல் கிளர்ச்சியும் சுயராஜ்ஜிய முயற்சியும்கூட ஜாதி மத பழக்க வழக்கங்களுக்கு உத்திரவாதம் கொடுத்துவிட்டே (கிளர்ச்சியும், முயற்சியும்) நடைபெறுகின்றது.

இன்றைய தினம் தோழர் ராஜகோபாலாச்சாரியாரால் எடுத்துக் காட்டப்படும் கராச்சித் திட்டத்தில் இந்த ஜவாப்புதாரித்தனமான உத்தரவாதம் கல்லுபோல் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

காங்கிரசு முயற்சி செய்யும் சுயராஜ்ஜியத்தில்

1) The article in the constitution relating to Fundamental Rights"," shall include a guarantee to the communities concerned of protection of their culture"," languages"," scripts"," education"," profession"," practice of religion and religious endowments.

2) Personal Laws shall be protected by specific provision to be embodied in the constitution.

1) சுயராஜ்ய அரசாங்கத்தில் ஒவ்வொரு வகுப்பாருடையவும் அவர்களது கலைகள், நாகரீகங்கள், பாஷை, கல்வி, தொழில், பழக்க வழக்கம், மதம், மத தர்ம சொத்துக்கள், ஸ்தாபனங்கள் முதலியவைகளைக் காப்பாற்றுதலாகியவைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறி உத்திரவாதமளிக்கப்படும்.

2) ஒவ்வொரு சமூக தனிப்பட்ட உரிமைகளையும் பற்றிய சட்டங்களும் காப்பாற்றப்படும்படியான திட்டத்தையும் சேர்க்கப்படும்

என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதுதான் கராச்சித் திட்டம் என்பது.

அன்னிய அரசாகிய பிரிட்டிஷ் ஆட்சியின் வாக்குறுதிகளின் பயனாகவே, சமூக வாழ்வில் ஜாதிமதக் கொடுமையில் ஒரு கடுகளவு மாறுதல்கூட செய்வது கஷ்டமாய் இருந்து வருகிறது.

சாரதா சட்டம் கூட அதனாலேயே சுயமரியாதையற்று பிணமாகக் கிடக்கிறது. இப்படியிருக்கும்போது இனி வரப்போகும் சுயராஜ்ஜியத்திலும் சமூகப் பழக்க வழக்கம், ஜாதி ஆகியவைகளுக்கு ஜவாப்புதாரித்தனமும், உத்தரவாதமும், வாக்குறுதியும் கொடுக்கப்பட்டிருக்கும் போது அவை களில் ஒரு சிறு மாறுதலாவது செய்யப்படக்கூடும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா?

ஆகவே இன்று இந்நாட்டு மக்களுக்கு உள்ள குறைபாடுகள் நீக்கப்படுவதற்கு, இன்றைய அரசியல் மாறுபட்டுவிடுவதாலேயே ஏதாவது பலன் ஏற்பட்டுவிடும் என்பது வெறும் கனவாகத்தான் முடியும்.

இன்றுள்ள குறைபாடுகள் எல்லாம் இந்தியாவில் சுயராஜ்ஜியம் இருந்த காலத்திலும் இருந்து வந்தது தானே ஒழிய, மகமதியர் ஆட்சியிலோ பிரிட்டிஷார் ஆட்சியிலோ ஏற்பட்டு விட்டதாகச் சொல்லிவிட முடியாது.

மனிதனை மனிதன் இழிவுபடுத்தி அடிமைப்படுத்தும் குணமும், மனிதன் உழைப்பை மனிதன் அபகரித்துப் பொருள் சேர்த்து உழைப்பாளியை பட்டினி போட்டு கொடுமைப்படுத்திய குணமும், ராமராஜ்யம் முதல் தர்ம தேவதை ராஜ்ஜியம் இடையாக, பிரிட்டிஷ் ராஜ்யம் வரை ஒரு மாதிரி யாகத்தான் இருந்து வருகின்றது.

உண்மையை யோக்கியமாய் வீரமாய்ப் பேச வேண்டுமானால், முகமதிய ஆட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் ஓரளவு பழய கொடுமை களும் இழிவுகளும் குறைவுகளும் குறைந்திருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் காட்டலாம்.

இந்த நாட்டில் ஜாதியால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் 100க்கு 97 பேர்களாகும்.

ஜாதியில் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் 100க்கு 25 பேர்களாகும். மதத்தால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் 100க்கு 100 பேர் என்றுகூட சொல்லலாம். ஒவ்வொரு மதக்காரனும் மற்ற மதக்காரனை இழிவாய்த்தான் கருதுகிறான். ஒவ்வொரு ஜாதியானும் மற்ற ஜாதியானை இழிவாய்த்தான் கருதுகிறான்.

பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் கீழ்ஜாதி என்பது இந்து மதச் சம்பிரதாயம். இப்படிப்பட்ட இந்த இழிவான நிலை மாற வேண்டுமானால் இன்றைய பிரிட்டிஷ் அரசியல் மாறுவதால் முடியுமா?

பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரக் கொடுமைக்கும், அவர்களது வாழ்க்கை நிலை இழிவுக்கும், ஜாதியும் மதமும் காரணமாய் இருக்கின்றதை யாராவது மறுக்க முடியுமா? எங்காவது பார்ப்பான் பட்டினி கிடக்கின்றானா? எங்காவது பார்ப்பான் சரீரப் பாடுபடுகின்றானா? கூலிக்கு மூட்டை தூக்குகின்றானா? நடவு நட்டுத் தண்ணீர் கட்டுகிறானா?அது போலவே பறையர் பள்ளர் போன்ற கூட்டத்தினர் வாழ்க்கை எங்கும் எப்படி இருக்கிறது பாருங்கள். பாடுபட்டும் இக் கூட்டத்தாரின் நிலைமை எவ்வளவு பரிதாபகரமானதாய் இருக்கின்றது. இதற்கு ஜாதிமதம் அல்லாமல் வேறு காரணம் என்ன? ஆகவே ஜாதி மதத்தின் காரணமாய் சிலருக்கு மாத்திரம் உயர்வும், செல்வமும் அநேகருக்கு இழிவும் தரித்திரமும் மக்களிடம் நிலவுகின்றதே தவிர பாடுபடாததாலும், பாடுபடுவதாலும் அன்னிய அரசராலும் சுயராஜ்ஜியத்தாலுமா நிலவுகின்றது என்பதைத் தயவுசெய்து யோக்கியமாய் நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கராச்சித் தீர்மானப்படி ஆட்சிப் புரியப் போகும் சுயராஜ்ஜியம் நமக்குக் கிடைத்தால், இந்தியா இந்த விஷயங்களில் இன்றுள்ள நிலையைவிட, கேடான நிலையையே அடையும் என்பதை உறுதியாய்க் கூறுவேன்.

மனிதனுடைய அவமானத்தையும் இழிவையும் போக்குவதற்கு ஒப்புக் கொள்ளாத சுயராஜ்ஜியம் பித்தலாட்டச் சூட்சி ராஜ்ஜியமாகுமே ஒழிய யோக்கியமான ராஜ்ஜியம் ஆகாது.

கேவலம் ஒரு தீண்டாமை விலக்கு என்கின்ற சாதனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது வரை காங்கிரசால் இந்தக் காரியத்துக்கு என்ன பயன் ஏற்பட்டது. இந்தக் காரியத்தின் பேரால் காங்கிரஸ் பணம் வசூல் செய்து அதனால் ஓட்டுப் பெற்றது. மற்றப்படி தீண்டாமை விலக்குக்கு என்ன திட்டம் காங்கிரசினிடம் இருக்கிறது.

தீண்டாமை விலக்குக்கு "பாடுபடாமல் உயிர் வாழ முடியாது" என்று சொல்லி பட்டினி கிடந்து ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்த காந்தியார் என்ன சாதித்தார்?

இந்தியச் சட்டசபைக்கு காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாக வந்து விட்டார்கள் என்பதைக் கேட்டவுடன், காந்தியார், "சட்டசபைக்கு சமுதாய சம்மந்தமான தீர்மானங்களைக் கொண்டு போகாதீர்கள்" என்று உத்திரவு போட்டுவிடவில்லையா? காங்கிரஸ் தீண்டாமை விலக்கு விஷயத்தில் நடந்து கொள்ளும் நாணயத்துக்கு இதைவிட வேறு என்ன அத்தாக்ஷி வேண்டும்?

ஆகவே இந்த சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் இருந்தாலென்ன? சர்க்கார் நியமனக்காரர்களே இருந்தால் என்ன? என்று யோசித்துப் பாருங்கள். கராச்சி காங்கிரஸ் தீர்மானப்படி நடக்கும் சந்தர்ப்பம் கிடைத்த காங்கிரஸ்காரர்கள், தீண்டாமை விஷயத்தில் தான் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால், பொருளாதார விஷயத்தில் எவ்வளவு யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள்.

N 1க்கு 500 ரூக்கு மேல் சம்பளம் வாங்குவதில்லை என்ற காங்கிரஸ்காரர்கள், ஒரு ஒற்றை ஆளுக்கு நாள் ஒன்றுக்கு 20 ரூ. வீதம் சர்க்காரிடமிருந்து படி வாங்கினார்கள். இதில் ஒரு அளவு காங்கிரஸ் பண்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் உத்திரவு போட்டார். யார் இதற்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள்?

தோழர் சத்தியமூர்த்தி அய்யர் தென்னாட்டுக் காங்கிரஸ் ஸ்தாபனத்தின் தலைவர் என்கின்ற ஹோதாவில், அதை மறுத்து ஒரு தம்பிடி கூட கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார். தனது (ஒண்டி ஆள்) செலவுக்கு நாள் ஒன்றுக்கு 20 ரூபாயே போதாது என்று சொல்லி, ஒரு காசு கூட குறைத்துக் கொள்ள மறுத்து விட்டார்கள். இந்த யோக்கியர்கள் நாளை சுயராஜ்ஜியம் பெற்ற பிறகு மாத்திரம் பொருளாதாரத்தில் எப்படி யோக்கியமாய் நடந்து கொள்ள முடியும்?

ஒரு காசு கூட சர்க்காருக்கு இன்கம்டாக்ஸ் கொடுக்க வேண்டிய அவசியமில்லாத தோழர் சத்தியமூர்த்திக்கு, தன் சாப்பாட்டுச் செலவுக்கு மாத்திரம் தினம் ஒன்றுக்கு 20 ரூ. போதவில்லை என்றால் மற்றபடி மற்றவர்களுக்கு எவ்வளவு அதாவது "செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து வந்த" கோடீஸ்வரர்களுக்கு, தினம் எவ்வளவு ரூபாய் வேண்டியிருக்கும் என்பதைப் பார்த்தால் தோழர் சத்தியமூர்த்திக்கோ மற்ற காங்கிரஸ்காரர்களுக்கோ இன்றையச் சம்பளம் அதிகம் என்றும், ஜனங்களால் தாங்க முடியாதது என்றும் சொல்லுவதற்கு யோக்கியதை உண்டா என்பதோடு, இவர்கள் ஆதிக்கத்துக்கு வந்தால் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுவார்களா என்றும் கேட்கின்றோம்.

நிற்க ஜாதி, மதம், பழக்க வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்ய காங்கிரஸ்காரர்கள் சம்மதிக்கவில்லையானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்? பிராமணன், சூத்திரன், பறையன், சண்டாளன் என்கின்ற பெயர்களும் பிரிவுகளும் ஜாதி காரணம் மாத்திரமல்லாமல் மதங்காரண மாகவும் இருந்து வருகின்றன.

மதம் காரண மாத்திரமல்லாமல், தெய்வம் காரணமாகவும் இருந்து வருவதாக இந்தியா பூராவும் உள்ள இந்து மக்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். ஜாதிக்கு இந்து மதமும், மனு தர்ம சாஸ்திரமும் காரண பூதம் என்றாலும், அதற்கும் மேல்பட்டு கடவுளும் காரணமாய் இருந்து வருகிறது.

கடவுளுடைய முகம், தோள், துடை, கால் ஆகியவைகளில் இருந்து நான்கு ஜாதிகள் தோன்றின என்பது இந்து சனாதன மதக்காரர்கள் மாத்திர மல்லாமல், இந்து ஆஸ்திகர்கள் பெரும்பாலோரும் நம்புகின்ற கொள்கையாகும்.

பறையன், சக்கிலி, பள்ளன் முதலிய சூத்திரர்கள் அல்லாத ஜாதியார் என்பவர்கள் எதிலிருந்து பிறந்தார்கள் என்பதும் இந்தியா தவிர மற்ற தேசத்திலுள்ள மக்களான கிறிஸ்தவர், மகமதியர், பௌத்தர்கள் முதலிய 180 கோடி மக்கள் எதிலிருந்து யாரால் பிறப்புவிக்கப்பட்டார்கள் என்பதும் கேள்விக்கு இடமான காரியமாய் இருந்தாலும், நான்கு வருணத்தையும் மறுக்க எந்த ஒரு இந்துவும் துணிவதில்லை. ஏதோ சில பேர்கள் சூத்திரர்கள் என்கின்ற அவமானம் பொறுக்க மாட்டாதவர்களாய் இருப்பதால் நான்கு வருணத்தை ஒப்புக் கொள்ளுவதில்லை என்று ஒரு புறம் சொன்னாலும் மற்றொரு புறம் அக் கொள்கைக்கு அடிமையாகியே தீருகிறார்கள்.

எப்படி எனில் ராமாயணக் கதைக்கு வேறு வியாக்கியானம் செய்கின்றவர்களும், பாரதக் கதையை நம்பாதவர்களும், அக்கதைகளில் வரும் பாத்திரங்களான ராமனையும், கிருஷ்ணனையும் தெய்வமாகக் கொண்டாடாமல் இருப்பதில்லை. அது மாத்திரமல்லாமல் பாரதக் கதையில் ஒரு சிறு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் கிருஷ்ணன், அர்ச்சுனன் சம்பாஷணை என்னும் கீதையைப் பிரமாதமாக மதிக்கிறார்கள்.

கீதையை மறுக்க இன்று இந்துக்களில் பதினாயிரத்தில் ஒருவனுக்குத் தைரியம் வருமா என்பது சந்தேகம். அப்படிப்பட்ட கீதையில் கிருஷ்ணன் "நான்கு வருணங்களை நான் தான் சிருஷ்டி செய்தேன்" என்று சொன்னதாக வாசகம் இருக்கிறது.

ஆகவே கீதையை தங்களுடைய மதத்துக்கு ஒரு ஆதாரமாகவும் கிருஷ்ணனை ஒரு கடவுளாகவும் கொண்டிருக்கிற ஒருவன், சூத்திரன் என்கின்ற பட்டம் ஒழிய வேண்டும் என்றோ, ஜாதிப் பிரிவுகள் ஒழிய வேண்டும் என்றோ எப்படிச் சொல்ல முடியும்.

ஜாதிப் பிரிவுக்குப் பார்ப்பனன் தான் காரணம் என்று சொல்லுவது இனி பயனற்ற காரியம் என்பதே எனது அபிப்பிராயம்.

ஜாதிப் பிரிவுக்கும் அதனால் ஏற்படும் இழிவுக்கும், தரித்திரத்துக்கும், ஒற்றுமை இன்மைக்கும் இந்து மதம், மனுதர்ம சாஸ்திரம், பாரத ராமாயண புராண, இதிகாசம் என்பவைகளோடு மாத்திரமல்லாமல் ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்களும், காரணங்கள் ஆகும் என்பதை எந்த மனிதன் உணருகிறானோ அவன்தான் வருணபேதத்தை, ஜாதி பேதத்தை ஒழிக்க நினைக்கவாவது யோக்கியமுடையவனாவான்.

காங்கிரசுக்காரர்கள் 100க்கு 99லுபேர் கீதை பாராயணம் செய்கின்றவர்கள் கீதையை நெருப்பிலிடவோ, கிருஷ்ண பகவானை மறுக்கவோ ஒப்புக் கொள்ளாதவர்கள்.

காங்கிரசுக்காரர்கள் மாத்திரம் அல்லாமல் "நான்கு வருணம் கூடாது" என்கின்ற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்கூட கீதையையும், கிருஷ்ணனையும் ஒழிக்க சம்மதிக்க மாட்டார்கள். ஒரு அளவுக்கு மனுதர்ம சாஸ்திரத்தின் மீது பார்ப்பனர் உள்பட பலருக்கு வெறுப்பும் அலட்சியமும் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், கீதையின் மீதும், கிருஷ்ணன் மீதும் வெறுப்பும் அலட்சியமும் அவநம்பிக்கையும் மக்களிடமிருக்கும் அந் நம்பிக்கையை ஒழிக்கும் தைரியமும் ஏற்படுவது என்பது சுலபத்தில் எதிர்பார்க்க முடியாத காரியம். இந்தக் காரணங்களாலேயே இந்த நாட்டில் பல ஆயிர வருஷங்களாக இந்த இழிவும், முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் நிலவி வந்திருக்கின்றன.

திருவள்ளுவர் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர் விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.

இந்த முட்டாள்தனமான காரியம் பார்ப்பனர்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை. சைவன்கள், வைணவன்கள் கீதையை கிருஷ்ணனை பிரம்மாவை மறுக்கவே மாட்டார்கள். அவநம்பிக்கைப்படவும் மாட்டார்கள்.

ஆனால் தங்களுக்குள் ஜாதி பேதம் இல்லை என்று வாயில் சொல்லுவார்கள். கபிலர் சொன்ன வாக்கும், சித்தர்கள், ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப்படுகின்றன. ஆனால் காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில் எப்படி ஜாதி ஒழியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஜாதியை உற்பத்தி செய்தவர்களை நாம் கேவலமாய் நினைத்து, அவர்கள் மீது மாத்திரம் ஆத்திரப்படுவதின் மூலமே நமது முயற்சிகள் இதுவரை நாசமாகிக் கொண்டே வந்துவிட்டது.

பார்ப்பனர்கள் ஜாதி விஷயத்தில் எவ்வளவுதான் நமக்கு விட்டுக் கொடுத்தாலும் கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். இது தெரிந்துதான் ராஜகோபாலாச்சாரியார் உள்பட பக்கா பார்ப்பனர்கள் ஜாதி போக வேண்டும்; ஜாதி போக வேண்டுமென்று நம்முடன் சேர்ந்து கொண்டு கோவிந்தாப் போடுகிறார்கள். நம்ம வீட்டிலும் பறையன் என்கிறவன் வீட்டிலும் சாப்பிடுகிறார்கள். ஆனால் கீதையை வெகு பத்திரமாகக் காப்பாற்றுகிறார்கள். கிருஷ்ணனுக்கு பதினாயிரக்கணக்கான கோவில்கள் கட்டி கோடிக்கணக்கான மக்கள்களை கும்பிடும்படி செய்து மூடர்களாகவும் அடிமைகளாகவும் ஆக்கி வருகிறார்கள்.

இதனால் அவர்களுக்கு நம் வீட்டில் சாப்பிடுவதன் மூலம் ஆகாரச் செலவு மீதி ஆவதுடன், அவர்களிடம் மக்களுக்கு துவேஷம் இல்லாமல் போகவும் இடம் ஏற்பட்டு விடுகின்றதே தவிர, மற்றப்படி ஜாதி பிரிவுக்கு சிறிதுகூட ஆட்டம் ஏற்பட்டுவிடுவதில்லை.

நமக்கு இன்று வேண்டிய சுய ஆட்சி என்பதானது ஜாதிக் கொடுமைகளையும் ஜாதிப் பிரிவுகளையும் ஜாதிச் சலுகைகளையும் அழிக்கும்படியாகவும், ஒழிக்கும்படியாகவும் இருக்கத்தக்கதாய் இருந்தால், நமக்கு அதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதோடு மனப்பூர்வமாய் வரவேற்கவும் ஆசைப்படுகிறேன்.

கோவில் நுழைவு என்பதைப் பற்றிக் கராச்சி காங்கிரஸ் திட்டத்தில் ஒரு வார்த்தைகூட இல்லை. அதற்கு மாறாக பழக்கவழக்கங்களைக் காப்பாற்றுவதாகவே வாக்குறுதியும் உத்திரவாதமும் இருக்கிறது.

சமீபத்தில் சத்தியமூர்த்தி தலைவர், கோவில் நுழைவைப் பற்றி, தான் ஒப்ப முடியாது என்று சொல்லிவிட்டார். ரோட்டு, குளம், பள்ளிக்கூடம் இவைகளுக்கு மாத்திரம் அனுமதி கொடுப்பதாய் கருணை வைத்து அருள் புரிந்து இருக்கிறார். இதையே கராச்சிக் காங்கிரஸ் கூறுகிறது.

இதற்குச் சத்தியமூர்த்தியுடையவும், கராச்சி காங்கிரசினுடையவும், காந்தியாரினுடையவும் தயவு எதற்கு என்பது நமக்கு விளங்கவில்லை. ரோட்டும், பள்ளிக்கூடமும், குளமும் சர்க்கார் பாதுகாப்பில் இருப்பவை. அவை தினமும் சர்க்கார் உதவியால் நடந்து வருபவை. ஆதலால் அதை ரயில், தந்தி, தபால் போல் எல்லா மக்களுக்கும் கிறிஸ்தவர் முகமதியர் உட்பட சம சுதந்திரமாய் அனுபவிக்க கட்டுப்பட வேண்டியவர்களாகிறார்கள்.

கோவில் மதத்தைச் சேர்ந்ததானதினாலும், மதத்துக்கு மத ஜனங்களே பிரதிநிதிகளானதினாலும், ஜனங்களுக்குக் காந்தியாரும், சத்திய மூர்த்தியாரும் "பிரதிநிதிகளாக" ஆகிவிட்டதாலும் கோவில் பிரவேசம் என்பது ஜனப்பிரதிநிதிகளையும், ஜனப்பிரதிநிதி சபையான காங்கிரசையும் சேர்ந்தது என்று சொல்ல வேண்டி யிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் காந்தியாருக்கும் இஷ்டமில்லையானால், சத்தியமூர்த்தியாருக்கும் இஷ்டமில்லையானால், காங்கிரசுக்கும் இஷ்ட மில்லையானால், பிறகு இந்த அரசியல் பிரிட்டிஷ் அரசாங்கம் மாறி காங்கிரஸ் ஆட்சியோ, காந்தி ஆட்சியோ, சத்தியமூர்த்தி ஆட்சியோ ஆகிவிடுவதால் என்ன லாபம் என்று கேட்கின்றேன்.

நிறபேதம் மாறுவதால் அதாவது வெள்ளை நிறக்காரர் ஆட்சி மாறி பழுப்பு நிறக்காரர் ஆட்சி வந்தவுடன் ஜனங்களுக்கு இன்றுள்ள இழிவு மாறிவிடும் என்று கருதுவது போன்ற முட்டாள்தனம் வேறு ஒன்றுமே இல்லை.

கொள்கைகள் மாற்றமடைய வேண்டும். அதை மாற்றுவதற்கு ஒப்புகிறவர்கள் கைக்கே ஆட்சி வர வேண்டும். அது வர முடியவில்லை யானால் பொது மக்களிடம் இன்னும் 10 வருஷத்துக்கோ, 100 வருஷத்துக்கோ பிரசாரம் செய்ய வேண்டும்.

அதில்லாமல் ஜஸ்டிஸ் மந்திரிகள் உள்ள ஸ்தானத்தில், சத்தியமூர்த்தி, பிரகாசம் மற்றும் இவர்கள் அடிமைகள் போய் உட்கார்ந்தால், ஒரு மாறுதலையும் கண்டுவிட முடியாது. ஆகவே வீண் சூழ்ச்சிப் பிரசாரங் களையும், துவேஷப் பிரசாரங்களையும் சுயநலப் பிரசாரங்களையும் கண்டு மக்கள் யாவரும் ஏமாந்துவிடாதீர்கள்.

குறிப்பு: 17.05.1935 இல் அருப்புக்கோட்டை, 19.05.1935 இல் திண்டிவனம், 20.05.1935 இல் விழுப்புரம், 21.05.1935 இல் சேலம், 26.05.1935 இல் நாகப்பட்டணம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் ஆற்றிய உரைகளின் சுருக்கம்.

தோழர் பெரியர் - குடி அரசு - சொற்பொழிவு - 02.06.1935

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: