காங்கரஸ் வண்டவாளம்

தாழ்த்தப்பட்டவருக்குச் செய்த துரோகம்

தலைவரவர்களே! தோழர்களே!

இன்று அரசியலும் முஸ்லிமும் என்பதுபற்றி பேசுவேன் என்று நிகழ்ச்சிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் மூலை முடுக்குகள் உள்பட கிராமங்கள் பட்டினங்கள் எல்லாவற்றிலும் வீட்டுப் பேச்சுக்களாய் இருப்பது இந்த விஷயம் தான்.

அரசியல் சீர்திருத்தம் வந்ததும் போதும், காங்கிரஸ் பதவிக்கு வந்ததும் போதும்; பொது ஜனங்கள் அனைவர்களுக்குள்ளும் அரசியலும் வகுப்பு விஷயங்களுமாகவே பேசப்பட்டு வருகின்றது.

காங்கரஸ்காரர்கள் பதவிகளுக்கும் அதிகாரங்களுக்கும் வெளியில் இருந்து கொண்டு பதவிகளை இழித்துக் கூறியும் அதிகாரங்களை காலாகாலமில்லாமல் சந்தர்ப்ப சந்தர்ப்பமில்லாமல் குற்றங் கூறியும் வந்த பலனும் அரசாங்க நிர்வாகத்துக்கும் சமாதானத்துக்கும் சட்டதிட்டங்களுக்கும் மதிப்பில்லாமல் போகும்படி செய்து வந்த பலனும் இன்று காங்கரஸ்காரர்கள் பதவியில் அமர்ந்து அதிகாரம் பெற்று நிர்வாகம் நடத்த ஆரம்பித்த முதல் ஜனங்களுக்கு காங்கிரசை கேவலப்படுத்தத்தக்க அவசியமும் செளகரியமும் தானாகவே ஏற்பட்டு விட்டதின் பயனாய் காங்கரஸ் கர்ம பலனை அனுபவித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல காங்கரசின் ஆட்சி, வகுப்பு ஆதிக்க சூழ்ச்சி ஆட்சி என்பதை சுலபத்தில் பொது ஜனங்கள் அறிந்து கொள்ளும்படியான அவ்வளவு முட்டாள்தனமாக காங்கரஸ் நிர்வாகத்தை நடத்த ஆரம்பித்து விட்டதால் இன்று நாட்டிலுள்ள சகல வகுப்புகளுக்கும் வகுப்பு உணர்ச்சி வகுப்புவாதப் பேச்சாகவும் முயற்சியாகவுமே ஏற்பட்டு விட்டது. அதன் பிரத்தியட்ச உதாரணம்தான் நாம் இன்று இங்கு கூடியிருப்பதும் பேசுவதுமான காரியங்களாகும்.

காங்கரஸ் இந்து ராஜ்யம்

முஸ்லீம்கள் இன்று சிறிதும் சந்தேகமற காங்கிரசை இந்து ராஜ்யம் என்றும் இந்து ராஜ்யத்தை நிரந்தரமாய் ஸ்தாபிக்க முயற்சிகள் செய்யப்பட்டு வரும் ஒரு ஆபத்தான ஆட்சி என்றும் கருதுகிறார்கள். காங்கரஸ்காரர்களும் இந்து மகாசபைக்காரர்களும் விளம்பரமும் பொறுப்பும் பெற்ற தலைவர்களும் காங்கரஸ் ஆட்சியையும் அரசியல் விடுதலை முயற்சியையும் பூரண இந்து ஆதிக்க ஆட்சியாக ஆக்கவே பாடுபடுவதாய் பச்சையாய் சொல்லிக் கொண்டு விட்டார்கள்.

தோழர் காந்தியார் "சுயராஜ்யம் என்றால் ராமராஜ்யம்" என்று சொல்லுவதும் தோழர் ஜவஹர்லால் "வகுப்பு வாதத் தன்மையை ஒழிக்கவே சுயராஜ்யம் கேட்கப்படுகின்றது" என்றும் மற்றும் இந்து மகாசபைத் தலைவர்களான டாக்டர் மூஞ்சே, பாய் பரமாநந்தர் முதலியவர்களும் பங்களாவாசிகளும் "பிரிட்டிஷார் அளித்த வகுப்புத் தீர்ப்பை ஒழிக்க வேண்டும்" என்று சொல்லுவதும் தோழர் ராஜகோபாலாச்சாரி சத்தியமூர்த்தி போன்றவர்கள் "வந்தே மாதரப் பாட்டும் மூவர்ணக் கொடியும்தான் தேசீயப்பாட்டாகவும் தேசீயக் கொடியாகவும் இருக்க வேண்டும்" என்பதும் "ஹிந்தி பாஷைதான் இந்தியாவின் பொதுப் பாஷையாக இருக்க வேண்டும், அதுவும் அது கட்டாய பாஷையாக இருக்க வேண்டும் என்பதும் ஏற்கனவே சமூக ஆதிக்கத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் வர்ணாச்சிரம சுயராஜ்யச் சங்க மகாநாடுகள் கூட்டி "சுயராஜ்யமென்பது வர்ணாச்சிரம ஆட்சியாக இருக்க வேண்டும்" என்று தீர்மானங்கள் செய்வதும் சாஸ்திரிகளும் கனபாடிகளும் பண்டிதர்களும் இளைப்பாறும் பார்ப்பன ஜட்ஜúக்களும் வக்கீல்களும் கூட்டம் கூடி "தீண்டாமையும் ஜாதிபேதமும் பிறவியில் ஏற்பட்டது" என்றும் அது "செத்தாலும் ஒழியாது" என்றும் "அதை மாற்றவோ திருத்தவோ யாருக்கும் அதிகாரமில்லை" யென்றும் தீர்மானங்கள் செய்வதும் ஆன காரியங்கள் இந்து ராஜ்யத்தை வலியுறுத்துகிறதா இல்லையா என்று யோசித்துப் பாருங்கள்.

இப்படிப்பட்ட நிலையில் காங்கரஸ் கொள்கைகளையும் காங்கரஸ் கோரும் ராஜ்யத்தையும் கொண்டு முஸ்லீம்கள் பயப்படுவதும் தங்கள் சமூகத்தை காப்பாற்றிக்கொள்ள முயற்சிப்பதும் குற்றமென்று எந்த நடுநிலைமைக்காரனாவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

பார்ப்பனரல்லாதார் நிலையும் அப்படியே

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனரல்லாதாராகிய நம்முடைய நிலையும் முஸ்லீம்களைப் போன்றதேயாகும். வடநாட்டுப் பார்ப்பனரல்லாதார் பெரும்பான்மையோருக்கு நமக்கிருக்கும் உணர்ச்சி இருக்கிறதில்லை. ஏனெனில் வடநாட்டு பார்ப்பனரல்லாதார், நமக்கு சமீபத்தில் இருக்கும் மலையாளிகளில் சில வகுப்பாரைப்போல் தங்களை சூத்திரர்கள் என்றும் பார்ப்பனர்களுக்கு கீழ்ப்பட்டவர்கள் என்றும் பார்ப்பனர்களால் செய்யப்படும் இழிவுக்கு தகுதியுடையவர்கள் என்றும் சிலர் பார்ப்பனர்களுக்கு பிள்ளையாய் பிறந்ததாகச் சொல்லிக் கொள்வதில் கவுரவமிருக்கிறதென்றும் கருதிக்கொண்டு இருப்பதால் காங்கரஸ் ராஜ்யத்தைப்பற்றி நமக்கு இருக்கும் ஆட்சேபணைகளும் ஆத்திரமும் வடநாட்டார்களுக்கு இல்லை. ஆதலால் அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நாம் முஸ்லீம்களைப் போலவேதான் காங்கரஸ் ராஜ்யத்துக்கு பயப்படுகிறோம். நமது பந்தோபஸ்துக்கும் சுயமரியாதைக்கும் காங்கரசை எதிர்த்து முயற்சிக்கிறோம். ஆகையினாலேயே இன்று நம்நாட்டு அரசியலில் முஸ்லீம்கள் நிலைமையும் பார்ப்பனரல்லாதாராகிய நம்முடைய நிலைமையும் ஒன்றாகவே இருக்கிறது.

சுயராஜ்யம் ராமராஜ்யம் வர்ணாச்சிரம ராஜ்யம் இந்துராஜ்யம் எல்லாம் ஒன்றே

விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் காங்கரஸ் கோரும் சுயராஜ்யமும், காந்தியார் கோரும் ராமராஜ்யமும் ஒன்றுதான் என்பதை யாராவது ஆட்சேபிக்க முடியுமா? காந்தியார் கோரும் ராமராஜ்யமும் டாக்டர் மூஞ்சே, பாய் பரமானந்தர் கோரும் இந்து ராஜ்யமும் வேறு வேறானது என்று யாராவது சொல்ல முடியுமா? இவற்றிற்கும் பார்ப்பனர் கோரும் வருணாச்சிரம சுயராஜ்யத்திற்கும் வித்தியாசம் இன்னது என்று யாராவது காட்ட முடியுமா?

ஆகவே அவர்கள் எல்லோரும் கூறுவது இந்து ராஜ்யம் அல்லது ஆரிய ஆதிக்க ராஜ்யமே ஆகும். இப்படிப்பட்ட ராஜ்யம் முஸ்லீம்களுக்கு எவ்வளவு ஆபத்தானதோ அதைவிட நமக்கு சிறிது அதிகமான ஆபத்தும் இழிவுமானது. ஆதலால் நாமும் அதை எதிர்க்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். அதனால் நாம் இருவரும் சந்தேகமில்லாத பரிசுத்தமான வகுப்புவாதிகளாக இருக்கிறோம். நம் இருவர்களையும் அடக்கி ஒடுக்கி ஆளவே தோழர் ஜவஹர்லால் முதலியோர் "சுயராஜ்யம் வருவது தடைபட்டாலும் வகுப்பு வாதத்தை ஒழித்தே ஆகவேண்டும்" என்று தைரியமாகச் சொல்லுகிறார்கள்.

ஆனால் இன்றைய நிலைமையில் உலகம் உள்ளவரை முஸ்லீம் வகுப்பும், பார்ப்பன வகுப்பும் பார்ப்பனரல்லாதார் வகுப்பும் இருந்துதான் தீரும்.

இவர்களது வகுப்புகள் உள்ள வரையும் - இந்த வகுப்பு வாதங்கள் இருந்துதான் தீரும். சுயராஜ்யம் தடைபட்டாலும் வகுப்புவாதம் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று சொல்லுகின்ற ஜவஹர்லால்களாகிய பார்ப்பனர்கள் இருக்கும் வரையும் அந்நிய ஆட்சி இருந்துதான் தீரும். ஆதலால் நமது அரசியலும் சுயராஜ்யம் கோரும் காங்கரசும் வகுப்புவாத சபை என்பதுடன் அந்த வகுப்புவாதம் வெற்றி பெறாமல் இருப்பதற்கு ஆக போராடும் பார்ப்பனரல்லாதாரும் வகுப்பு வாதிகளேதான். நம் கண்முன் கல்லுபோல் வகுப்புகள் இருக்கும்போது - நாமும் நமது எதிரிகளும் ஆளுக்கொரு வகுப்பாளர்களாய் அதுவும் கீழ்மேல் வகுப்புக் காரர்களாய் இருக்கும்போது நாம் வகுப்புவாதிகள் என்பதற்கு ஆக நாம் வெட்கப்படவோ பயப்படவோ தேவையில்லை.

உண்மையில் "வகுப்புவாதம் நம் நாட்டில் ஒழிய வேண்டுமானால் அது நாமெல்லோரும் தைரியமாய் வகுப்புவாதிகள் என்று சொல்லிக் கொள்வதில்தான் இருக்கிறதே தவிர அதைப்பற்றி பித்தலாட்டமாகப் பேசுவதனாலல்ல. இம் மாதிரி தைரியமாக வெளிப்படையாக நாம் வகுப்பு வாதிகள் என்று சொல்லிக் கொண்டு நமது வகுப்புக் கொடுமைகளையும் வகுப்பு இழிவுகளையும் தீர்த்துக்கொள்ள முயற்சிக்கிற காலத்தில் - முயற்சித்துத் தீரவேண்டிய காலத்தில் நாமும் (சுயமரியாதைக்காரர்களும்) முஸ்லீம்களும் ஒருவருக்கொருவர் துணையாய் நின்று இருவரும் ஒத்துழைத்து ஆபத்திலும் இழிவிலும் இருந்து மீள செளகரியம் ஏற்பட்டதானது ஒரு கிடைத்தற்கரிய செல்வமேயாகும்.

ஏனெனில் ஒன்றாக நம் வகுப்பு இழிவும் நம் வகுப்பின் மீது மற்ற வகுப்பார் செலுத்தும் ஆதிக்கமும் ஒழிந்தாக வேண்டும்; அல்லது நமது வகுப்பே பூண்டற்றுப் போய்விடவேண்டும் என்று உயிருக்கு ஊஞ்சலாடும் இந்த சமயத்தில் இந்த ஒற்றுமையும் ஒத்துழைப்பும் மிகுதியும் பாராட்டவும் மகிழ்ச்சி அடையவும் தக்கதாகும்.

முஸ்லீம்களைப் பிரிக்க காங்கரஸ்காரர் சூழ்ச்சி

இதை நாம் என்றென்றும் காப்பாற்றவேண்டும். நம்மைப் பிரித்துவிட காங்கிரஸ் தலைவர்கள் சூழ்ச்சி செய்வார்கள். அச் சூழ்ச்சிக்கு நாம் ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டில் இந்த 4,5 மாதமாய் பலப்பட்டு வரும் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் முஸ்லீம்களுடைய கட்டுப்பாடும் கிளர்ச்சியும் இன்று காங்கரஸ் தலைவர்களை திக்கு முக்காடும்படி செய்துவிட்டன. வடநாட்டிலும் முஸ்லீம்களுடைய கட்டுப்பாடும் அவர்கள் ஒன்று சேர்தலும் காங்கரசுக்கு பயத்தை உண்டு பண்ணிவிட்டது. இந்து முஸ்லீமின் ஒற்றுமையின் பலன் இன்று காங்கரஸ்காரர்களுக்கும் காங்கரஸ் மந்திரிகளுக்கும் பொதுக் கூட்டங்களுக்கு மேடையே இல்லாமல் செய்து விட்டது. மந்திரிகளிடம் மக்களுக்கு மதிப்பும் நம்பிக்கையும் இல்லாமல் செய்துவிட்டது. இதன் பயனாய் சர்க்கார் யோக்கியதைகளும் வெளுத்து வருகிறது. ஆகவே எப்படியாவது இந்து முஸ்லீம்களைப் பிரிக்கவோ அல்லது முஸ்லீம்களை ஏமாற்றி சுவாதீனம் செய்து கொள்ளவோ காங்கரஸ் தலைவர்கள் சூழ்ச்சிசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள். முஸ்லீம்களுக்கு அடிபணிவதாய் வேஷம் போடத் துணிந்து விட்டார்கள்.

ஆரியத் தந்திரத்துக்கு ஆளாகக் கூடாது

வகுப்பு வாதத்தை அடியோடு ஒழிப்போம் என்றும் வகுப்பு வாதம் பேசும் எவரிடமும் காங்கரஸ் சம்பந்தம் வைத்துக் கொள்ளாதென்றும் காங்கரசை தவிர வேறு எந்த ஸ்தாபனமும் நாட்டில் இருக்கக் கூடாதென்றும் காங்கரஸ்காரர்கள் காங்கரசைத் தவிர வேறு எதிலும் மெம்பர்களாக இருக்கக்கூடாதென்றும் வீரம் பேசிய காங்கரஸ்காரர்கள் இன்று வகுப்புவாதத் தலைவர் ஜின்னாவுக்கு விண்ணப்பம் போட ஆரம்பித்து விட்டார்கள். முஸ்லீம்களுக்கு பிரதிநிதி அல்ல என்று கூறிய ஜின்னாவை முஸ்லீம்களுக்கு ஆக என்ன வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள் என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்கள். இது காங்கரஸ்காரர்களின் இந்து மத தந்திரமென்னும் ஆரியமத தந்திரமாகும். இந்து தந்திரம் எட்டினால் குடுமியைப் பிடிப்பதும் எட்டாவிட்டால் காலைப் பிடிப்பதும் இந்து சாஸ்திர புராணங்களில் காட்டப்பட்டிருக்கும் வழியாகும். இதுவரை ஜின்னாவை நீ யார்? உனக்கும் முஸ்லீம்களுக்கும் என்ன சம்பந்தம்? நீ முஸ்லீம்களுக்குப் பிரதிநிதியல்ல என்று வட்ட மேஜை மகாநாடு முதல் கர்ஜித்த காங்கரஸ்காரர்கள் இன்று ஜின்னாவை உங்களுக்கு என்ன வேண்டும்? தயவு செய்து சொல்லுங்களேன் என்று கெஞ்சக் காரணமென்ன? எங்கள் கிராமவாசிகளைப்பற்றி ஒரு வேடிக்கை விஷயம் சொல்லுவதுண்டு. அதாவது பட்டிக் காட்டு குடியானவர்கள் ஈரோட்டிற்கு வந்தால் அவர்களைப் போலீசார்கள் வெட்டி வேலைக்கு பிடித்துக்கொள்ளுவது வழக்கம். அதாவது தெருவில் போகும் ஒரு பட்டிக்காட்டானைக் கூப்பிட்டு ஒரு போலீஸ்காரன் ஒரு மூட்டையை தூக்கி வரும்படி சொன்னால் அந்தப் பட்டிக்காட்டான் "போய்யா எனக்கு வேரவேலை இல்லையா? நான் என்ன வெட்டி ஆளா?" என்று நிமிர்ந்து பேசுவான். உடனே போலீஸ்காரன் தனது இடுப்பில் இருக்கும் டவாலியைக் கழட்டி பட்டிக்காட்டான் முதுகில் பட்டாசு வெடித்தால் போல் படீரென்று ரெண்டு கொடுத்தால் அதை வாங்கிக்கொண்ட பிறகு உடனே குடியானவன் "என்ன சாமி எடுக்கரத்துக்குள்ளே வெகு அதிகாரம் பண்ணரிங்கோ வேட்டியை தலையில் கட்டிக்கொண்டு தானே மூட்டையைத் தூக்க வேண்டும்? அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி சாமி முடியுங்கோ" என்று சொல்லிக் கொண்டு அவசர அவசரமாய் மூட்டையைத் தூக்க குனிந்து கொண்டு வேட்டியைத் தலையில் கட்ட ஆரம்பிப்பான். அதுபோல் பெரியார் ஜின்னாவை "நீ யார்? முஸ்லீம்களைப் பற்றிப் பேச உனக்கு என்ன யோக்கியதை? என்று கேட்ட ஜவஹர் பிரசாத்துகள் ஜின்னாவிடம் இன்று அடிபணிந்தது போல் நடிக்கிறார்கள். "நீங்கள் கேட்டதெல்லாம் கொடுத்து விட்டோமே" என்கிறார்கள். "இன்னும் என்ன வேண்டுமென்று சட்டென்று சொல்லுங்களே" என்கிறார்கள். "கேட்டால்தானே எங்களுக்குத் தெரியும்" என்கிறார்கள். இதெல்லாம் ஆரியப் பித்தலாட்டமேயாகும். ஆரியப் புராணங்களில் "காரியம் ஆக வேண்டுமானால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; எவ்வளவு பொய், பித்தலாட்டம், வஞ்சகம், துரோகம் வேண்டுமானாலும் செய்யலாம்; பெண்களை விட்டும் மயக்கலாம்" என்பது நீதியாகும். அதற்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.

ஜவஹர்லால் யோக்கியதை

தோழர் ஜவஹர்லால் ஏகாதிபத்திய ஒழிப்புக்காரர் என்று சொல்லிக் கொள்ளுகிறவர். ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் இருந்து அடியோடு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று சொல்லி பூரண சுயேச்சைத் தீர்மானம் செய்தவர். சட்டசபைக்குப் போனாலே அடிமையாய் விடுவோம் என்று சொன்னவர். மந்திரி பதவி ஏற்றுக் கொண்டால் பிரிட்டிஷாருக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக் கொடுத்தது போல் ஆகும் என்று கர்ஜித்தவர். அப்படிப்பட்ட அவர் இன்று தங்கள் (இந்துக்கள் - பார்ப்பனர்கள்) கைக்கு ஆதிக்கம் வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் ராஜவிசுவாசப் பிரமாணம் செய்வது குற்றமல்ல; பிரிட்டிஷ் அரசருக்கும் அவர் சந்ததிக்கும் என்றென்றும் பக்தி விசுவாசமாய் நடந்து பிரிட்டிஷ் ஆட்சி சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அடிபணிந்து நடத்திக் கொடுப்பதாய் சத்தியம் செய்து மந்திரி பதவி ஏற்றுக் கொள்ளுவது குற்றமல்ல என்று சொல்லி பிரமாணம் செய்து பதவி பெறும்படி அனுமதி அளித்தார். அதோடு மாத்திரமல்ல அந்த மந்திரிகளை பிரிட்டீஷுக்கு நல்ல அடிமைகளாக்குவதற்கு ஆக "மந்திரிமார்களை குறை கூறக் கூடாது. மந்திரிகள் காரியங்களை குற்றம் சொல்லக் கூடாது" என்று மக்களை இன்று கேட்டுக் கொள்ளுகிறார். இதற்கு பெயர் என்ன? "ஆனால் ராஜவிசுவாச பிரமாணம் செய்யும்போது மனதில் "இது பொய் பிரமாணம்" என்று நினைத்துக்கொண்டு பிரமாணம் செய்யுங்கள்" என்று கட்டளை இட்டார். எனவே காங்கரஸ்காரர்களின் நாணயத்துக்கு அவர்களது ஆரிய சூழ்ச்சிக்கு இதை விட வேறு என்ன அத்தாட்சி வேண்டும். இப்போது ஜின்னாவை சமாதானத்துக்கு அழைப்பது மனதில் எதை வைத்துக் கொண்டு இந்த சமாதான கூளைக் கும்பிடு வேஷம் போடுகிறார்கள் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். ஜின்னாவின் காலைப் பிடிக்கலாமா என்று காங்கரஸ்காரர்களை இந்து மகாசபைக்காரர்கள் கேட்பதற்கு காங்கரஸ்காரர்கள் " நாங்கள் காலைப் பிடிக்கவில்லை. காலை வாரிப் போடுவதற்கு ஆக குனிகின்றோமே ஒழிய வேறில்லை "என்கிறார்கள்.

எச்சரிக்கை!

ஆகவே எச்சரிக்கை! இது சமயம் காங்கரசிடம் முஸ்லீம்கள் ஏமாந்து போகாமல் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். விடிய விடிய காவல் காத்து "விடியக்காலம் குமரி இருட்டில் தூங்கி விட்டால் அடியோடு கொள்ளைப் போய்விடும்". இப்படித்தான் ஜஸ்டிஸ் கட்சிக்கு பூரண வெற்றியும் உச்சஸ்தானமும் இருக்கும்போது அதை கவிழ்ப்பதற்கு தேசியம் பேசி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுப்பதாகவும் வாக்குறுதி தீர்மானம் உறுதி செய்து எங்களை ஏமாற்றி "கூலிக்கமர்த்தி" ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க பயன்படுத்திக் கொண்டார்கள். இன்று "ஜஸ்டிஸ்காரர்களை கொன்று புதைத்த குழியிலேயே" வகுப்புரிமையையும் கொன்று புதைத்து விட்டதாகப் பெருமை பேசுகிறார்கள். நானும் வரதராஜúலுவும் கல்யாணசுந்தர முதலியாரும் மற்ற கூலிகளும் முகத்தை வெளியில் காட்ட யோக்கியதை இல்லாத நிலையில் இருக்கிறோம்.

தாழ்த்தப்பட்டவர்கள் தலையில் கை வைத்தது

மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமையை சற்று எடுத்துக்கொண்டு பாருங்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சர்க்கார் கொடுத்த தனித் தொகுதி சுதந்திரத்தை வஞ்சித்துப் பிடுங்கிக் கொள்ளுவதற்கு ஆக காந்தியார் சாகப் போவதாக வேஷம் போட்டு இனியும் அரை நிமிஷத்தில் செத்துப் போய் விடுவாரென்பதாக டாக்டர்கள் மாய்மாலம் செய்து புராணங்களில் ஊர்வசியைக் காட்டித் தபசுகளை கலைத்த கதைகள் போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏதேதோ பித்தலாட்டமும் தந்திரங்களும் கொண்டு ஆசை காட்டி, வாக்குறுதிகள் கொடுத்து அவர்கள் தலையில் கையை வைத்து விட்டு இன்று தோழர்கள் அம்பேத்காரும், எம்.சி.ராஜாவும், ரெட்டைமலை ஸ்ரீனிவாசனும், என். சிவராஜúவும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்று தைரியமாய் சொல்லிவிட்டார்கள். காந்தியாரின் மாய்மாலத்தின் போது இந்த ஆட்களிடம் தான் ராஜிக்கு கையொப்பம் வாங்கி சர்க்காருக்கு அனுப்பினார்கள்.

ஆகவே பார்ப்பனத் தந்திரம் ஆரியப் புரட்டு இரண்டும் சேர்ந்த இந்துமத வஞ்சகமும் துரோகமுமே இன்றைய இந்துத்தன்மை என்றும் காங்கரசின் யோக்கியதை என்றும் கருத்தில் வையுங்கள். எங்களுக்கும் என்போன்ற சுயமரியாதைக்காரர்களுக்கும் காங்கரசினிடம் இருக்கும் வெறுப்புக்கும் துவேஷத்துக்கும் காரணம் அது ஆரியமத தர்மப்படி அரசியல் நடத்தப்படுவதற்கு முயற்சிக்கும் ஸ்தாபனம் என்பது தான். அதை காந்தியார் பச்சையாய்ச் சொல்லி விட்டார்கள். மற்ற இந்து தலைவர்களும் பச்சையாய்ச் சொல்லி வருகிறார்கள். ஆதலால் முஸ்லீம்களும் சுயமரியாதைக்காரர்களும் இன்று காங்கரஸ் விஷயத்தில் ஒரே நோக்கம் கொண்டவர்கள் - ஒன்று சேர வேண்டியவர்கள்.

ஜஸ்டிஸ்காரர்கள் கிறிஸ்தவர்கள்

ஜஸ்டிஸ்காரர்கள் கிறிஸ்தவர்கள் அப்படியல்ல. ஏனெனில் ஜஸ்டிஸ்காரர்கள் பலரிலும் கிறிஸ்தவர்கள் பலரிலும் ஜாதி உயர்வு தாழ்வு உணர்ச்சி உள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களும் பார்ப்பனர்கள் எப்படி தாங்கள் இந்துக்கள் என்று ஒரு பெரும் கூட்டத்தை சேர்த்து ஜனசங்கை எண்ணிக்கையை காட்டி பங்கு பெற்று அந்தப் பங்கை பார்ப்பனர்கள் மாத்திரம் 100க்கு 90 பங்கு அனுபவிக்கிறார்களோ அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சியாரும் கிறிஸ்தவர்களும் தங்கள் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களையும் சமூகத்தில் தாழ்ந்த நிலைமையிலும் பிற்பட்டும் இருக்கும் மக்களையும் தங்கள் எண்ணிக்கையில் சேர்த்துக் காட்டி பங்கு வாங்கிக்கொண்டு அப்பங்கை பணக்காரக் கூட்டமும் மேல் ஜாதி கிறிஸ்தவர்களும் ஏகபோகமாய் அனுபவித்து வருவதால் அவர்கள் முஸ்லிம்கள் நோக்கத்துக்கும் சுயமரியாதைக்காரர்கள் நோக்கத்துக்கும் சிறிது மாறுபட்டவர்களே யாவார்கள். ஆதலால் அவர்கள் சுயமரியாதைக் காரர்களோடு முழுமனதாக சேர்ந்திருக்க முடியாது.

முஸ்லிம்களும் சுயமரியாதைகாரர்களும்

மதவிஷயத்திலும் ஆத்மார்த்த விஷயம் என்பதிலும் மனிதனுக்கு மேம்பட்ட உயிரும் உணர்ச்சியும் உள்ள சக்தி யொன்று இருக்கிறது என்பதிலும் முஸ்லிம்களும் சுயமரியாதைக்காரர்களும் மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டவர்களாக இருக்கலாம். இது விஷயத்தில் இன்று எல்லா மதக்காரர்களுள்ளும் வகுப்புக்காரர்களுள்ளும் உள் வகுப்பார்களுக் குள்ளும் ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு வழியால் அபிப்பிராய பேதம் இருந்துதான் வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இன்றைய இந்து-முஸ்லிம், வகுப்பு - அரசியல் தகராறானது மார்க்க விஷயத்திலோ, ஆத்மார்த்தம் என்னும் விஷயத்திலோ மனிதனுக்கு மீறிய சக்தி விஷயத்திலோ ஏற்பட்ட தகராறு அல்ல. அப்படி இருந்தால் சிலவற்றில் ஒரே வித அபிப்பிராயம் கொண்ட இந்துக்கள் என்பவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இன்று அவநம்பிக்கையும் பயமும் அபிப்பிராய பேதமும் இருக்க காரணமில்லை. உடையிலும் வேஷத்திலும் பாவனையிலும் மனிதனுக்கு மனிதன் எப்படி வித்தியாசப்படுகிறானோ அதுபோல் தான் இவ்விஷயங்களிலும் வித்தியாசப்படுகிறான். இதனால் பொது லட்சியங்களில் ஒத்துழைப்பு கூடாதென்று கருத முடியாது. அப்படிக் கருதுவது முட்டாள்தனம் அல்லது விஷமத்தனமேயாகும்.

சுயநலக்காரர்கள் சூழ்ச்சி

இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் இப்போது சமூகத்துரோகம் அல்லது சுயநல எண்ணம் கொண்ட ஒருசில இந்துக்கள் என்பவர்களும் முஸ்லிம்கள் என்பவர்களும் ஒரு விஷமத்தனமான சூழ்ச்சிப் பிரசாரம் செய்கிறார்கள். அதாவது "மார்க்கத்திலும் ஆத்மார்த்தம் என்னும் உணர்ச்சியிலும் சுயமரியாதைக் கொள்கைக்கு மாறுபட்ட முஸ்லிம்களோடு சேர்ந்து கொண்டு இருக்கும் சுயமரியாதைக்காரர்களுடன் இந்துக்கள் சேரலாமா?" முஸ்லிம்களை இந்துக்களுக்கு விரோதமாய் தூண்டிவிடும் சுயமரியாதைக்காரர்களுடன் இந்துக்கள் சேரலாமா?" என்று துண்டுப் பிரசுரம் போட்டு வழங்கி கூட்டங்களிலும் வந்து காலித்தனம் செய்கிறார்கள். இது சென்ற வாரம் சேலத்திலும் திருச்சியிலும் நடந்து அடிதடி, கல்வீச்சு, செருப்படி, சாணி எறிதல் முதலிய பல இழிவான காரியங்கள் நடந்ததை நீங்கள் பத்திரிக்கைகளில் பார்த்து இருப்பீர்கள்.

அது போலவே "மார்க்கத்திலும் அல்லா உணர்ச்சியிலும் மாறுபட்ட சுயமரியாதைக்காரர்களுடன் முஸ்லீம்கள் சேரலாமா? அவர்களை பள்ளிவாசலில் விடலாமா?" என்று சில முஸ்லீம்கள் கலகம் செய்ததோடு இந்தக் கூட்டத்திலும் விஷமத்தனமான துண்டுப் பிரசுரங்களை வினியோகித்ததாகவும் அதன் பயனாய் முஸ்லீம்களுக்குள்ளாகவே கலவரம் ஏற்பட்டு சேலம் கூட்டத்தில் நடந்த சங்கதியே இங்கும் ஏற்பட்டு விஷமிகளுக்கு நல்ல உதை கிடைத்ததாகவும் கேள்விப்பட்டேன். இது நான் மேலே கூறியது போல் எதிரிகளின் கையாளாக - கூலிகளாக - சுயநலக்காரர்களாக இருக்கும் சிலரின் விஷமப் புத்தி வேலையேயாகும்.

அபிப்பிராய பேதங்கள் பல உண்டு

எந்த மனிதனும் தான் அறியாத பல விஷயங்களோ பல சக்திகளோ இருக்க முடியாது என்று சொல்லமாட்டான். அப்படி ஒருவன் சொல்வதானாலும் அது அவனவன் இஷ்டம். அது நிர்பந்தப்படுத்தும் காரியம் அல்ல. ஒருவன் தாடி நல்லது என்கிறான். ஒருவன் உச்சிக்குடுமி நல்லது என்கிறான். ஒருவன் வேஷ்டி கட்டுகிறான். ஒருவன் கால் சிராய் போடுகிறான். ஒருவன் தொப்பி வைக்கிறான். ஒருவன் வெறுந் தலையுடன் இருக்கிறான். இதனால் மனிதன் சேர்ந்து வாழ முடியாதா? என்று கேட்கிறேன். இந்த கும்பகோணம் முஸ்லீம் மகாநாட்டு மாலைத் தலைவர் ஜனாப் மெளலானா மெளல்வி அகமது சைது சாயபு அவர்கள் இந்த விஷமத்துக்குத் தகுந்த பதிலளித்தார். அதாவது "கடவுள்களுக்கு இணை வைக்கும் கூட்டத்தாருடனும் முஸ்லீம் மார்க்கத்தையும் சமூகத்தையும் இழிவாய் கேவலமாய் எழுதி வைத்துக் கொண்டும் கருதிக்கொண்டும் இருக்கிற கூட்டத்தாருடனும் மார்க்கத்தாருடனும் கலந்து கொண்டு அளவளாவும் பரிசுத்த நபிகள் பிறந்த தினங்களில் தலைமை வகிக்க அழைக்கவும் முஸ்லீம்கள் சம்மதிக்கும்போது கடவுளைப்பற்றிக் கவலைப்படாமல் மனித சமூகத்துக்கு ஜாதி மத வகுப்பு பேதமில்லாமல் தொண்டாற்றுவதே தங்கள் கடமையென்று கருதி முகமதுநபி அவர்கள் கொள்கைகளில் 100க்கு 90 பாகத்துக்கு மேல் மக்களுக்கு எடுத்துச்சொல்லி நபி அவர்களின் தொண்டை ஆற்றி வருபவர்களுடன் கலந்து நம் உரிமையைக் காப்பாற்ற முயற்சிப்பதில் யாதொரு தவறும் இல்லை" என்று சொன்னார் என்று முஸ்லீம் சமூகத்தாருக்குச் சொல்லுகிறேன். அது மாத்திரமல்ல. தலைவர் மெளல்வி சாயபு அவர்கள் பேசும் போது "தோழர் ராமசாமிப் பெரியார் காங்கரசில் இருக்கும்போதும் சுயமரியாதைக் கட்சி ஆரம்பித்ததிலிருந்தும் முஸ்லீம்களுடன் ஒத்துழைத்து வருகிறார்" என்றும் "முஸ்லீம் தலைவர்கள் அலி சகோதரர்கள் மற்றும் பல மார்க்கப் பிரபலஸ்தர்கள் முதலியவர்கள் அவர்கள் வீட்டில் தங்கி அவர்களால் மரியாதை செய்யப்பட்டார்கள்" என்றும் சொல்வதோடு இதை ஒரு மெளல்வி மார்க்க விஷயங்களில் அபிப்பிராயம் சொல்லத்தக்க அளவு மார்க்க ஞானமுடையவன் என்கிற நிலையில் சொல்லுகிறேன்" என்றும் சொன்னார்.

அதுபோலவே தான் நானும் சொல்லுகிறேன். என்னவென்றால் நம்மை கீழ் ஜாதியான் என்றும் தனது அடிமை என்றும் வைப்பாட்டி மகன் என்றும் கருதப்படும் இழிவான வார்த்தையாகிய சூத்திரன் என்று நம்மை கூப்பிடும்- கருதி இருக்கும்- கடவுள்வாக்கென்று சாஸ்திரங்களில் எழுதி வைத்துக்கொண்டிருக்கும் மக்களோடு சேர்ந்து கொண்டு அவர்கள் நன்மைக்கு கூலிகளாய் இருப்பது அவமானமல்ல என்று கருதி இருப்பதைவிட நமது கொள்கைகளில் பெரும்பாகங்களில் வித்தியாசமில்லாத - மனித சமூக சமத்துவத்துக்கு நலன் செய்துவரும் முஸ்லிம்களுடன் சேர்ந்துழைப்பது தவறல்ல என்று நான் எனது சுயமரியாதை தோழர்களுக்கு எடுத்துச் சொல்லுகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களாய் கருதப்படும் எனது தோழர்களுக்கும் அவர்கள் இந்துக்கள் என்பவர்களுடன் கலந்துகொண்டு தங்கள் உரிமையையும் சுயமரியாதையையும் - பறி கொடுத்து திண்டாடுவதை விட முஸ்லிம்களோடு கலந்து வேலை செய்வதில் உண்மையிலேயே பலன் ஏற்படும் என்று சொல்லுகிறேன். ஆதலால் சு.ம.காரர்கள், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மூன்று பேரும் இதுசமயம் ஒன்றுபட்டு வேலை செய்ய வேண்டியது அவசியமாகும்.

பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட காலம் முதல் அந்த ஒப்பந்தம் சரி இல்லை என்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதனால் ஏமாற்றப்பட்டோம் என்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் கூப்பாடு போட்டு வருகிறார்கள். இதை எந்த காங்கரசு வாதிகளாவது லட்சியம் செய்கிறார்களா? ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட தலைவர்களையும் தனித்தனியாய் ஒழித்து மூலையில் உட்கார வைத்து விட்டார்கள்.

ஆனால் முஸ்லிம்களிடம் காங்கரஸ்காரர்கள் எப்படி நடக்கிறார்கள். "நீங்கள் கேட்டதெல்லாம் கொடுத்து விட்டோமே இன்னும் என்னவேண்டும் சொல்லுங்கள்" என்று அடிபணிய ஆரம்பித்து விட்டார்கள்.

"உதைப்பானுக்கு வெளுப்பான்"

"உதைப்பவர்களுக்கு வெளுப்பான் உயர்ந்த சலவைக்காரன்" என்பது போல் காங்கரஸ்காரர்கள் "உதைப்பவர்"களைக் கண்டுதான் பயப்படுவார்கள். அதுதான் ஆரிய தர்மம்.

இன்று முஸ்லீம்கள் கட்டுப்பாடாய் இருக்கிறார்கள். நம்மைப்போலவே ஆரிய சூழ்ச்சியை நன்றாய் அறிந்து கொண்டார்கள். இனி முஸ்லீம்கள் காங்கரசுக்குத் தலைவணங்க மாட்டார்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் ஒரு கை பார்க்கத் துணிந்துவிட்டார்கள். ஆதலால் அம்மாதிரி பலமும் உறுதியும் கொண்ட சமூகத்துடன் ஒத்துழைப்பதில் ஆபத்து ஒன்றுமில்லை. அவர்களுக்குக் கிடைக்கும் வகுப்புத் தீர்ப்பும் பாதுகாப்பும் நமக்கும் கிடைத்துத்தான் தீரும். உதாரணமாக தாழ்த்தப்பட்டவர்கள் "அர்த்த மண்டபம்" வரை போக இடம் கிடைத்துவிட்டால் "நாயக்கர்மார்கள் நாடார்கள் எதுவரையில் போவது" என்று ஒரு தனிக்கேள்வி கேட்கவேண்டுமா?

நமது கொள்கை

நமது கொள்கை உயர்வு தாழ்வு வகுப்புகளும் மூட நம்பிக்கை மதங்களும் ஒழிய வேண்டும் என்பதில் மாறுதல் இல்லை. ஆனால் அவைகள் இருக்கத்தான் வேண்டுமென்றாலும் இருக்கும் வரையிலும் வகுப்புரிமையும் வகுப்பு பாதுகாப்பும் வேண்டும் என்பதேயாகும். முதல் காரியத்தில் நாம் முஸ்லிம்களும் ஒரு சமயம் அபிப்பிராய பேதமுடையவர்களாய் இருந்தாலும் இரண்டாவது விஷயத்தில் நாமும் முஸ்லிம்களும் ஒரே கொள்கை உடையவர்களே.அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

இப்போது முஸ்லிம்களும் பார்ப்பனர் அல்லாதாரும் ஒத்துழைப்பதைப் பார்த்து காங்கரஸ்காரர்கள் பொறாமையும் பயமும் கொண்டு சில பார்ப்பனரல்லாதார் பத்திராதிபர்களையும் அதுவும் பார்ப்பனரல்லாதார் நலத்துக்கு என்று உழைக்கும் பத்திராதிபர்களையும் முஸ்லிம் நலத்துக்கு என்று உழைக்கும் பத்திராதிபர்களையும் விலைக்கு வாங்கி முஸ்லிம்களுடன் இந்துக்கள் சேரக்கூடாது என்றும் சேருவது ஆபத்து என்றும் எழுதி மக்களைப் பிரித்துவிடவும் சுயமரியாதைக் காரர்களுடன் முஸ்லிம்கள் சேரக்கூடாது என்றும், சேர்ந்தால் ஆபத்து ஏற்படும் என்றும் எழுதி மக்களைப் பிரித்து விடவும் முயற்சிகள் நடைபெற்று வருவதாய் தெரிகிறது. அதற்கு சில பத்திராதிபர்களும் இயக்க அன்பர்களும் இணங்கி விட்டதாகவும் தெரிகிறது. இதை சில இந்து சுயமரியாதைக்காரர்களும், முஸ்லிம்களும்கூட நம்புவதாகவும் அவர்களும் அப்படியே அபிப்பிராயப்படுவதாகவும் தெரிகிறது. இது சரியானாலும் தப்பானாலும் இந்தப்படி எண்ணுகிறவர்கள் இந்துக்களானாலும் முஸ்லிம்களானாலும் இவர்கள் இந்து முஸ்லீம் ஒற்றுமையில் நம்பிக்கையும் அவசியம் என்ற உணர்ச்சியும் இல்லாதவர்கள் என்பது எனது அபிப்பிராயம்.

இன்று அதிகாரத்தில் இருக்கும் ஆரிய ஆதிக்கக் காங்கரஸ் ஆட்சியை ஒழிக்க வேண்டுமானால் சுயமரியாதைக்காரர்கள் செய்யவேண்டிய வேலை என்ன? ஜஸ்டிஸ் கட்சியார் பதவிபட்டம் பெற்று பணம் சம்பாதித்து வாழ்க்கையைப் பெருக்கிக் கொண்டவர்கள் போல் பேர் ஊர் விலாசம் தெரியாமல் ஓடி மறைந்து கொள்ளுவதா? அல்லது சைவப் பிரமுகர்கள் போல் கவர்னர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தவுடன் "இந்தி வந்தாவது தொலைந்து போகட்டும் நமக்கு ஏன் இந்தத் தொல்லை" என்று நடுங்குவதா?

முஸ்லிம்களும் சுயமரியாதைக்காரர்களும் ஒன்று சேர்ந்து இந்த 4, 5 மாதமாய் கிளர்ச்சி செய்யாதிருந்திருந்தால் காங்கரசும் காங்கரஸ் ஆட்சியும் எவ்வளவு உச்ச நிலைக்கு போய் எவ்வளவு விஷயங்களை செய்திருக்கும்? இவ்வளவு கேவல நிலைமைக்கு வந்திருக்க முடியுமா?

இன்று காங்கரஸ்காரர்களுக்குப் பொதுமேடை இல்லாமலும் அவர்கள் சூழ்ச்சி ஒரு காரியத்திலும் இதுவரை பலிக்க முடியாமலும் தொட்டதில் எல்லாம் தோல்வியும் அவமானமும் அடைந்துத் திண்டாடும்படி செய்தது. முஸ்லிம்-சுயமரியாதைக்காரர்களின் ஒற்றுமையும் கூட்டு வேலையுமா? அல்லவா? என்று கேட்கின்றேன். இந்த கூட்டு முயற்சிக்காக எந்த சுயமரியாதைக்காரர் தனது கொள்கையை விட்டு விட்டார்? அல்லது எந்த முஸ்லிம் தனது கொள்கையை விட்டுவிட்டார் என்பதுபற்றி யோசித்துப் பாருங்கள். விஷமிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். இந்து முஸ்லிம் ஒற்றுமை என்பது ஒரு சமயம் பொய்யாகவும் ஆகாதகாரியமாகவும் இருக்கலாம் என்று சொல்லுகிறவர்கள் சொல்லட்டும். ஆனால் காங்கரஸ் ஆதிக்கத்தை ஒழிக்க காங்கரஸ் ஆட்சியை அழிக்க ஆரிய சூழ்ச்சியிலிருந்து தப்ப முஸ்லிம்களும் சுயமரியாதைக்காரர்களும் ஒன்று சேர்ந்தாக வேண்டும் என்பது எனது உறுதி. முஸ்லிம்கள் நம்மோடு சேராவிட்டாலும் நாம் அவர்களை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் நமக்கு ஒன்றும் மூழ்கிப்போய் விடாது. முஸ்லீம் தோழர்களுக்கும் சிறப்பாக முஸ்லிம் வாலிபர்களுக்கும் ஒன்று சொல்லுகிறேன். அதாவது மனிதனின் சுயமரியாதை எப்படிப்பட்ட உயர்ந்த மார்க்கத்துக்கும் சமூகத்துக்கும் இளைத்ததல்ல என்பதுதான்.

காங்கரஸ்காரர்கள் 1920ல் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க முஸ்லிம்களைச் சேர்த்துக்கொண்டு இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு 21 நாள் பட்டினி கிடக்கவில்லையா? கிலாபத்துக்காக "உயிர்" விடுவதாகச் சொல்லவில்லையா? இதனால் முஸ்லீம்கள் இந்துக்களை ஏறி மிதித்து விட்டார்களா? இந்துக்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று எந்த முஸ்லிமும் சொல்லவில்லை கருதவும் இல்லை. இந்துக்கள் ஆதிக்கத்தில் தாங்கள் நசுங்கப்படாது என்றே அவர்கள் ஆசைப்படுகிறார்கள். நாமும் அதுபோலவே பார்ப்பனர் மீது ஆதிக்கம் செலுத்த ஆசைப்படவில்லை. பார்ப்பன ஆதிக்கத்தில் நசுங்குண்டு அடிமையாய் மானம் கெட்ட இழி பிறப்பாய் இருக்கக்கூடாது என்றே ஆசைப்படுகிறோம்.

காங்கரசின் வண்டவாளம்

காங்கரஸ் அரசியலைப் பற்றி நான் உங்களுக்கு ஒன்றும் விளக்க வேண்டியதில்லை. அது ஊர் சிரித்துக் கிடக்குமொரு மானங்கெட்ட விஷயமாகும். இன்று காங்கரசானது பிரிட்டிஷாரின் ஆதரவிலேயே இருந்து வருகிறது. பிரிட்டிஷார் தங்களுக்கு நிபந்தனை இல்லாதவர்களும் சற்று மானாபிமானமற்றவர்களுமான ஒரு உண்மையான அடிமைக் கூட்டம் தங்களது ஆட்சியை நடத்திக் கொடுக்க வலுவில் அடிமை முறிச்சீட்டு எழுதிக் கொடுத்து வந்து காலடியில் கிடப்பதால் அவர்கள் (மந்திரிகள்) எவ்வளவு மானங்கெட்டவர்களாய் இருந்தாலும் யோக்கியப் பொறுப்பற்றவர்களாயிருந்தாலும் தங்கள் காரியம் ஆனால் போதுமென்று ஏற்று ஆதரவளித்து வருகிறார்கள். இல்லாத வரையில் இன்று காங்கரசுக்கு இந்த நாட்டில் பெயர் சொல்லக்கூட ஆள் கிடையாமல் போயிருக்கும்.

காங்கரசுக்கு தலைவர் யார்?

இன்று காங்கரசுக்கு ஒரு ஒழுங்கு முறை உண்டா? ஒரு கட்டுப்பாடு உண்டா? ஒரு மானமும் பொறுப்பும் உள்ள தலைவர் உண்டா? என்று பாருங்கள். பெயருக்கு காங்கரஸ் தலைவர் ஜவஹர்லால் நேரு ஆவார்கள். அவருக்கும் காங்கரசின் கொள்கைக்கும் சம்பந்தம் கிடையாது. இவர் பேசுவது பூரண சுயராஜ்யம். "கிளர்ச்சி" செய்வது ஏகாதிபத்திய எதிர்ப்பு. தனது கொள்கை என்று விளம்பரம் பெற்று இருப்பது பொது உடமை. அனுபவ சாத்திய கொள்கை என்று பேசுவது சமதர்மம். நடந்து கொள்வது பார்ப்பன சூழ்ச்சி. இவருக்கு காங்கரசிலும், காங்கரஸ் தலைவர் என்பவர்களிடத்திலும் உள்ள மதிப்பு கண்ணடித்து நாக்கை நீட்டுவதேயாகும்.

இவரது வேலை வர்க்கிங் கமிட்டி தீர்மானத்தை விளம்பரப்படுத்தி ஆதரித்து பேசுவதேயாகுமே ஒழிய இவரது சொந்தக் கொள்கைக்கு இடமோ வலியுறுத்த சக்தியோ கிடையாது.

அதிகாரம் செலுத்துவது யார்?

சட்டப்படி ஏற்பட்ட தலைவர் கதி இப்படியானால் காங்கரஸ் தலைவர்கள் கதி என்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் - அதிகாரம் செலுத்தும் தலைவரோ காங்கரசில் 4 அணா மெம்பராகக் கூட இல்லாத காங்கரஸ் நடத்தைகளுக்கு எவ்வித பொறுப்பு ஏற்றுக் கொள்ளுபவரும் அல்லாத தோழர் காந்தியாராகும். அவருக்கும் சர்க்காருக்குமோ ஜவஹர்லாலுக்கும் சர்க்காருக்குமோ கொஞ்சமும் சம்மந்தமும் ஜவாப்புதாரி தனமும் கிடையாது. நமது மாகாணத்தில் பார்த்தாலும் மாகாண காங்கரஸ் கமிட்டித் தலைவர் சட்டப்படி தோழர் முத்துரங்க முதலியார். தலைவர் காரியம் பார்ப்பது தோழர் சத்தியமூர்த்தியார். சர்வாதிகாரம் செலுத்துவது தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார்.

காங்கரஸ் கொள்கை

காங்கரஸ் அரசியல் கொள்கை இந்திய அரசியல் சட்டத்தை தகர்ப்பது. இதற்கு காரணம் இந்த அரசியலில் வகுப்புத் தீர்ப்பு இருக்கிறதால் அதை ஒழிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டது. இதைச் சொல்லி ஓட்டு கேட்கப்பட்டது. இது புரியாத ஆட்களுக்கும் இதைப்பற்றி கவலைப்படாத ஆட்களுக்கும் வரி குறைப்பதாகவும் சம்பளம் குறைப்பதாகவும் தொழிலாளிகளுக்கு பெரிய நன்மைகள் செய்து விடுவதாகவும் சொல்லி ஓட்டு கேட்கப்பட்டது. சில இடங்களில் பதவி ஏற்பதில்லை என்றும் அரசியலை உடைப்பதற்கே சட்டசபைக்கு போவதாகவும் சொல்லி ஓட்டு கேட்கப்பட்டது.

வெற்றி பெற்றபின் பதவிக்கு சூழ்ச்சி

பாமரமக்கள் மத உணர்ச்சி போன்ற மூடநம்பிக்கையின் பயனாய் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுகள் போட்டுவிட்டதால் வெற்றி பெற்றதும் பதவிபெற சூழ்ச்சி செய்யப்பட்டது. இதற்கு ஆக பாமர மக்களை ஏமாற்ற சர்க்காரிடம் வாக்குறுதி கேட்பதாக வேஷம் போடப்பட்டது. ஏன் அதை வேஷம் என்று சொல்லுகிறேன் என்றால் காங்கரஸ்காரர்களின் இந்த நடத்தை பொது ஜனங்களுக்கு சர்க்காரை காங்கரஸ்காரர்கள் வாக்குறுதி கேட்பது போல் இருந்தாலும் சர்க்காருக்கு காங்கரஸ்காரர்கள் தாங்கள் ஒழுங்காய் நடந்து கொள்வதாக வாக்குறுதி கொடுப்பதாகவும் அதை ஏற்றுக்கொள்ளும்படி சர்க்காரைக் கெஞ்சுவதாக சர்க்காருக்கு படும்படியாகவும் இருந்தது.

வாக்குறுதி கேட்டவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள்

ஆனால் சர்க்காரோ அரசியல் சட்டத்தில் உள்ளதற்கு மேல் வேறு ஒரு பேச்சும் பேசவோ வாக்குறுதி ஒப்புக் கொள்ளவோ கொடுக்கவோ முடியாது என்று சொன்னதோடு "அரசியல் சட்டப்படி நடக்க முடியுமா? முடியாதா?" என்று இறுதி எச்சரிக்கை செய்தவுடன் வாக்குறுதி கேட்ட காங்கிரஸ்காரர்கள் பயந்து நடுநடுங்கி வெட்கமிழந்து மானமிழந்து வாக்குறுதி கொடுத்து ராஜபக்தி, அரசியல் சட்ட பக்தி, ராஜ சந்ததி பக்தி விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து பதவியில் அமர்ந்தார்கள். ஆகவே அரசியலை ஒழிக்க சட்டசபைக்குப் போவதாக ஓட்டுக் கேட்டவர்கள் அரசியலை நடத்த பிரமாணம் செய்து கொடுக்க சட்டசபைக்கு போகவேண்டியவர்களானார்கள்.

பதவி கிடைத்ததும் பார்ப்பனர்களே பற்றினார்கள்

அது மாத்திரமல்லாமல் காங்கரஸ் என்பதே பார்ப்பன ஆதிக்க சபைதான் என்பதை காட்டிக் கொள்ள வேண்டியவர்களானார்கள். அதாவது மந்திரிகள் அமைத்ததில் காங்கரஸ் பிரதம மந்திரிகள் எல்லோருமே பார்ப்பனர்களாய் அமர்ந்து கொண்டார்கள். மற்ற மந்திரிகள் தலைவர்கள் ஆகிய பதவிகளிலும் பகுதிக்குமேல் பார்ப்பனர்களே எடுத்துக் கொண்டார்கள். இரண்டு சட்ட சபைகளிலும் பார்ப்பனர்களே தலைவர்களாகிக் கொண்டார்கள். மற்ற மந்திரிகள் தலைவர்கள் ஸ்தானங்களுக்கும் பெரிதும் சுதந்தரமும் அனுபவமும் சுயமரியாதையும் அற்றவர்களாகவே பொறுக்கிக் கொண்டார்கள்.

ஜனநாயகம் சர்வாதிகார நாயகமாயிற்று

ஆட்சி முறையிலும் ஜனநாயகம் என்று சொல்லி வாக்குப் பெற்றுச் சர்வாதிகார நாயகமும் நாமிநேஷன் நாயகமுமே துவக்கினார்கள். கட்டுப்பாடு என்பதிலும் கட்டுப்பாடு மீறி தண்டிக்கப்பட்டவரை பார்ப்பனர் என்கின்ற காரணத்தால் வலிய கூப்பிட்டு அதிகாரம் நடத்த பதவி அளித்தார்கள்.

சகலத்திலும் தோல்வி

சபையில் உட்கார்ந்ததும் வகுப்பு விரோதம் உண்டாகும்படியான வந்தேமாதர பாட்டுப்பாடி அதில் தோல்வி யுற்றார்கள் - தேசீயக் கொடி உத்திரவு போட்டு அதிலும் தோல்வி அடைந்தார்கள். அதாவது:-

1. மூவர்ணக் கொடி காங்கரஸ் கொடியே ஒழிய தேசீயக் கொடி அல்ல என்று தங்கள் கையாலேயே உத்திரவு போட்டார்கள். சர்க்கார் காரியாலயங்களில் அக்கொடியைப் பறக்கவிடக்கூடாது என்று தாங்களே உத்திரவு போட்டார்கள். ஸ்தல ஸ்தாபனங்களிலும் சர்க்கார் பிரிட்டிஷ் கொடி பறக்கும் போது காங்கரஸ் கொடியைப் பறக்கவிடக்கூடாது என்று உத்திரவு போட்டார்கள்.

2. ஏற்கனவே சர்க்கார் வாங்கியிருந்த கடன்களைக் கேட்கில் - செல்லுபடி அற்றதாக ஆக்கிவிடப் போவதாய் சொல்லி ஓட்டுக் கேட்டவர்கள் பதவிக்கு வந்ததும் பழைய கடன்கள் பூராவையும் ஒப்புக்கொண்டு புதுக் கடனும் கோடிக்கணக்காய் வாங்கினார்கள்.

3. இக்கடன்கள் வரும்படி உள்ள காரியங்களையோ வட்டி கட்டும்படியான காரியங்கள் எதையாவதோ செய்வதற்கென்று இல்லாமல் அரசியலை நடத்தவே வாங்கப்பட்டன. அதாவது பட்ஜெட் வரவு செலவுக் கணக்கு சரிக்கட்ட முடியாமல் போய்விட்டது.

4. வரி குறைப்பது என்று சொன்ன விஷயத்திலும் புது வரி போடவேண்டிய அவசியத்தில் இருக்கிறார்களே ஒழிய இவர்களுக்கு முன் இருந்த மந்திரிகள் சரிப்படுத்தி வைத்த பட்ஜட்டை நிறைவேற்றவோ குறைத்து விட்டு வந்த வரியை அமலில் கொண்டு வரவோ முடியாதவர்களாக ஆகிவிட்டார்கள். மில் ஜவுளி லைசென்ஸ் வரி, ரிஜிஸ்ட்ரேஷன் பீசு, இரட்டித்த வரி ஆகிய புது வரிகளையும் போட்டு விட்டார்கள்.

5. பரீக்ஷார்த்தமாக நடத்திப் பார்க்கும் மது விலக்குத் திட்டம் என்பதினால் கல்வியும் வைத்தியமும் சுகாதாரமும் போக்குவரவு வசதியும் குறைவுபட்டுப் போகும்படியான நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.

6. ஜன செளக்கியத்திற்காக புதிதாக செய்யப் போவதாகச் சொன்ன சட்டங்கள் விஷயத்திலும் தோல்வியே அடைந்தார்கள். அதாவது கடன் வாய்தா ஒத்திவைப்பு சட்டமாகிய (Mணிணூச்tணிணூடிதட்)பில் என்பதைக் கொண்டு வருவதாய்ச் சொல்லி மசோதா தயாரித்தவர்கள் தங்கள் ஜாதி வக்கீல்களுடைய எதிர்ப்பை மாத்திரம் கண்டு பயந்து நிறுத்திக் கொண்டார்கள்.

7. விவசாயக் கடன் வட்டி குறைப்பு மசோதா கொண்டு வருவதாய் சொன்னவர்கள் தங்களுக்கே புரியாததும் அமலில் சுலபத்தில் கொண்டு வர முடியாததும் உண்மையில் விவசாயிகளுக்கு 100ல் 20 பாகம் கூட பயன்படுவதற்கு அருகதை இல்லாததுமான மசோதாவை கொண்டு வந்து அதிலேயே திண்டாடுகிறார்கள்.

8. சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்க ஹிந்தியை கட்டாய பாடமாக ஆக்கப் போவதாய் சூழ்ச்சிசெய்து வெகு உறுதியுடன் "யாருக்கும் பயப்படப் போவதில்லை செய்தே தான் தீருவேன்" என்ற இறுமாப்புடனும் ஆணவத்துடனும் புறப்பட்ட ஆச்சாரியார் பொது ஜன எதிர்ப்பைக் கண்டு இன்று மெள்ள நழுவ விட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் மானம் பாதிப்பதால் இன்னமும் ஹிந்திக்கு உயிர் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்.

9. புதிய கல்வித் திட்டம் என்று ஒன்று காந்தியாரால் வருணாச்சிரம தர்மத்தை உயிர்ப்பிக்க முயற்சித்த திட்டம் கர்ப்பத்திலேயே செத்துக் கொண்டு வருகிறது.

10. ஜில்லா போர்டுகளை ஒன்றுபடுத்துவதாகச் சொன்னவர்கள் ஒன்றுபடுத்த முடியாமலும் எல்லா போர்டுக்கும் ஒரே மாதிரி கொள்கையை நடத்த முடியாமலும் திண்டாடுகிறார்கள்.

11. ஸ்தல ஸ்தாபனங்களில் லஞ்சத்தையும் கண்டிராக்ட் ராஜ்யத்தையும் ஒழித்து விடுவதாய் சொன்னவர்கள் காங்கரஸ் மெம்பர்கள் லஞ்சம் வாங்குவதையோ கண்டிராக்ட் பிழைப்பு நடத்துவதையோ ஒழிக்க முடியாமல் தாங்களே வெட்ட வெளியாக்கி மானங்கெடுகிறார்கள்.

12. தனிப்பட்டவர்கள் செலுத்தும் ஏகபோக ராஜ்யத்தை ஒழிக்கப் போனவர்கள் தாங்களுடைய சட்டசபை மெம்பர்களையே ஊமையாக்கி செவிடாக்கி அவர்களது கைக்கு 75 ரூபாய் விலங்கு போட்டு வாய்க்கும் கட்டுப்பாட்டுப் பூட்டுப் போட்டு நகரும் பிணங்களாக ஆக்கி ஒருவரே அதுவும் பார்ப்பனரே சர்வாதிகாரம் செலுத்தி வருகிறார்கள்.

13. நீதி நிருவாக இலாகாவை பிரிப்பதாகச் சொன்னவர்கள் அதைப் பிரிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

14. உத்தியோகங்களில் வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் வித்தியாசம் கூடாது என்று சொன்னவர்கள் வெள்ளையர்கள் நிழலிலேயே இருக்க வேண்டும்; கறுப்பர்கள் வெயிலிலேயே இருக்க வேண்டும் என்று தாங்களே சொல்லி விட்டார்கள்.

15. முன் இருந்த மந்திரிகள் சர்க்கார் பணத்தை தாறுமாறாகச் செலவழிக்கிறார்கள் என்று சொன்னவர்கள் பதவிக்குப் போனவுடன் ஆளுக்கு ஒரு கார் சர்க்கார் பணத்தில் வாங்கிக் கொண்டு அதற்கு மாதம் 150 ரூபாயும் வீட்டு வாடகை ஆள் 1க்கு மாதம் 150 ரூபாயும் போட்டு எடுத்துக் கொண்டு தங்களுக்கு வால்பிடிக்க 10 காரியதரிசிகளையும் நியமித்துக் கொண்டு முன்னையை விட அதிக செலவும் தர்பாரும் செய்து வருகிறார்கள்.

இவை தவிர சர்க்கார் பிரயாணப் படியில் நாள் தோறும் ஊர் ஊராய் கட்சிப் பிரசாரத்திற்குப் போன வண்ணமாயிருக்கிறார்கள்.

ஆகவே இந்த மந்திரிகள் பொது ஜனங்கள் வரிப்பணத்தை திலகர் நிதி போலவும் கதர் பண்டு போலவும் தீண்டாமை விலக்கு பண்டு போலவும் கருதுகிற நாணயமுடையவர்களாய் இருக்கிறார்களே ஒழிய கொஞ்சமும், வரிப்பணமே இது பாழாகிறதே என்பதைப்பற்றி பயப்படுகிறவர்களாய் காணவில்லை.

உண்மையில் பொதுஜனங்கள் வரிப்பணத்தில் நாணயமிருக்குமானால் கை தூக்குவதற்காக ஆளுக்கு 75 ரூபாய் வீதம் கொடுக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

இன்னமும் இதுபோல் இந்த மந்திரிகளின் யோக்கியதையும் தகுதியும் நாணயமும் விடிய விடிய எடுத்துக் கூறலாம்.

ஆகவே இந்த மந்திரிகள் சட்டசபை மெம்பர்கள் வாழ்வுக்கு வகையில்லாதவர்களுக்கு இம்மாதிரி கூலி கொடுத்து விலைக்கு வாங்கி வைத்திருக்காவிட்டால் சராசரி பொறுப்பும் தகுதியும் செல்வமும் அனுபவமும் உள்ள சட்டசபை மெம்பர்களான தோழர்கள் ராமலிங்க செட்டியார், நாடிமுத்து பிள்ளை போன்றவர்களை பார்ப்பனர்கள் இவ்வளவு கேவலமாகவும் நடத்தி இருக்க முடியாது.

எனவே இன்றைய காங்கரஸ் ஆட்சிக்கும் பழய கால காட்டு ராஜாக்கள் பாளையப்பட்டுக்காரர்கள் ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் காண முடிகின்றது? அக்காலம் அவர்கள் கலகக்காரர்கள் உதவியால் காட்டுராஜா ராஜ்யபாரம் நடத்தி வந்தார்கள். இக்காலம் வரிப்பணத்தைப் பாழாக்கி மெம்பர்களுக்கு அள்ளிக்கொடுத்து அவர்கள் உதவியால் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

குறிப்பு: 9, 10, 11.01.1938 ஆகிய நாள்களில் கும்பகோணம், திருவாரூர், இளையான்குடி ஆகிய ஊர்களில் முஸ்லிம் மகாநாட்டிலும் பொதுக் கூட்டங்களிலும் ஆற்றிய சொற்பொழிவு.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 16.01.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: