இம்மாதம் (ஏப்ரல்) 30ந் தேதி தமிழ் நாடெங்கும் முனிசிபல் தேர்தல்கள் நடக்கப் போகின்றன. அதில் காங்கரஸ்காரர்கள் போட்டி போட முனைந்து அபேட்சகர்களை நிறுத்தி இருக்கிறார்கள். இன்று முதல் 15 நாள்களுக்கும் தமிழ்நாட்டின் முக்கிய பட்டணங்கள் எல்லாம் கலவரமாகவும், குழப்பமாகவுமே இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. இது ஒருபுறம் இருக்க தேர்தல் பலாபலன்களைப் பற்றியும் நமக்கு கவலையில்லை.

ஆனால் காங்கரஸ்காரர்களுக்கு முனிசிபாலிட்டிகளில் வேலை செய்ய ஒருவித திட்டமும் இல்லை என்பது யாவரும் அறிந்ததேயாகும். பின் ஏன் காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டி தேர்தல்களில் பிரவேசிக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் சொல்லும் சமாதானம் என்னவென்றால்,

1. முனிசிபாலிட்டிகளில் லஞ்சம் தாண்டவமாடுகிறதாம்.

2. முனிசிபாலிட்டிகளில் கண்டிராக்டர்கள் ராஜ்யம் நடக்கின்றதாம்.

3. முனிசிபாலிட்டிகளில் வகுப்புவாதம் தாண்டவமாடுகின்றதாம்.

4. முனிசிபாலிட்டிகளில் பணக்காரர்கள் ஆட்சி நடக்கிறதாம்.

5. முனிசிபாலிட்டிகளை காங்கரஸ்காரர் அல்லாதார் கைப்பற்றி விடுவதால் சுயராஜ்யம் கிடைப்பது தாமதப்பட்டு விடுகிறதாம்.

ஆகிய இந்த ஐந்து காரணங்களுக்காக காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டியை காங்கரஸ் கைப்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இன்று தமிழ் நாட்டில் எந்த முனிசிபாலிட்டியிலாவது கண்டிராக்ட் ராஜ்யம் நடக்கின்றது என்றால் அது காங்கரஸ் கைப்பற்றிய முனிசிபாலிட்டியாகிய சென்னை கார்ப்பரேஷனிலும், சேலம் முனிசிபாலிட்டியிலும் மற்றும் சில காங்கரஸ் ஆதிக்கத்தில் உள்ள இடங்களிலும்தான் நடைபெற்று வருகிறது என்று சந்தேகமறக் கூறலாம்.

லஞ்சத்துக்கு காரணம்

இந்த மாதிரியாக கார்ப்பரேஷனில் லஞ்சம் தாண்டவமாடக் காரணம் என்னவென்போமானால் கார்ப்பரேஷன் கவுன்சில் ஸ்தானத்துக்கு காங்கரஸ்காரர்கள் ஆட்களை பொறுக்கும்போது மனதார தெரிந்தே ஜீவனத்துக்கு பொதுவாழ்வைத் தவிர வேறு வழியில்லாத, மார்க்க மில்லாதவர்களைப் பொறுக்கினார்கள். அப்படி பொறுக்கி எடுத்தவர்களுக்கு சட்டசபையில் செய்தது போல் வெற்றிபெற்ற பின்பு அவர்களுக்கு ஏதாவது மாதச் சம்பளம் போட்டு முனிசிபாலிட்டி பணத்தையாவது மாதாமாதம் கொடுத்து வந்திருந்தால் அந்த கவுன்சிலர்களுக்கு லஞ்சத்தினால் பிழைக்க வேண்டியதான அவசியம் வந்திருக்காது. அப்படிக்கில்லாமல் ஜெயிலுக்குப் போனவர் என்றும், கூட்டத்தில் பாடக்கூடியவர் என்றும், பிரசாரம் செய்யத் தகுந்தவர் என்றும், மேடைகளில் பேசத் தகுந்தவர் என்றும், காலித்தனத்தில் கெட்டிக்காரர் என்றும், மற்றவர்களை வைவதில் வீரர் என்றும் இப்படியாகப் பல காரணங்களைக் கருதியும் சில தொண்டர்களின் காலித்தனத்துக்குப் பயந்தும், கண்டபடி அபேக்ஷகர்களைப் பொறுக்கி எடுத்ததால் அவர்கள் கண்டிப்பாய் லஞ்சம் வாங்கி லஞ்சத்தால் பிழைத்து லஞ்சத்துக்கு தக்கபடி நிர்வாகத்தில் அபிப்பிராயம் கொடுத்துத் தீர வேண்டிய அவசியத்திற் குள்ளாய்விட்டார்கள். கார்ப்பரேஷனில் லஞ்சம் தாண்டவமாடினதற்கும், தாண்டவமாடுவதற்கும் காங்கரஸ்காரர்கள் இந்த உண்மையான காரணத்தை ஒப்புக் கொள்ளாமல் "ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து ஆட்களை காங்கரசில் சேர்த்து காங்கரஸ் அபேட்சகர்களாக அவர்களை நிறுத்தியதால் காங்கரஸ் கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்கினார்கள்" என்று காங்கரஸ் பத்திரிகையான "தினமணி" காரணம் எழுதி லஞ்சத்தை ஒப்புக்கொண்டு இருக்கிறது. அப்படி இருந்தும் இன்றும் கூடத்தான் காங்கரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தவர்களை பொறுக்கி இருக்கிறார்கள். லஞ்சம் வாங்குவது கட்சியைப் பொறுத்ததா, ஆளைப் பொறுத்ததா என்பதை ஓட்டர்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். கட்சியைப் பொறுத்ததென்றால் காங்கரசுக்கு வந்தும் ஏன் ஒருவன் லஞ்சம் வாங்க வேண்டும்? ஆளைப் பொறுத்ததென்றால் கட்சியைப் பற்றி ஏன் பேசவேண்டும்? அப்படியானாலும் "காங்கரசுக்கு கால் ரூபாய் கொடுத்துவிட்டால் எப்படிப்பட்ட அயோக்கியனும் யோக்கியனாய் விடுவான்" என்று கனம் சி.ஆர். ஆச்சாரியார் சொன்னது என்ன ஆயிற்று?

லஞ்சத்தை ஆதரிப்போருண்டா?

நிற்க, முனிசிபாலிட்டிகளில் ஜில்லா போர்டுகளில் லஞ்சம் கூடாது என்பது நாட்டில் எல்லாக் கட்சியாருடையவும், எல்லாத் தனிப்பட்ட மனிதருடையவும் அபிப்பிராயமேயாகும். எந்த கட்சியிலும் லஞ்சம் வாங்குவது ஒரு திட்டமாக இல்லை. ஆனால் இதுவரை காங்கரஸ் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சி கவுன்சில் மெம்பர்களும் லஞ்சம் வாங்கியதாக எதிரிகளால் கூடச் சொல்லப்படவில்லை. இப்படி இருக்க காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டிகளில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு ஆக போகிறோம் என்று சொல்லுவதில் ஏதாவது நாணையமிருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

ஒவ்வொரு ஊர்களிலும் காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டிக்கு நிறுத்தி இருக்கும் ஆட்களின் ஜாப்தாவைப் பார்த்தால் அந்த ஆட்களில் பலர் லஞ்சம் வாங்காமல் அவர்கள் எப்படி ஜீவனம் செய்ய முடியும் என்று யோசித்தால் காங்கரசால் லஞ்சம் நிறுத்தப்பட்டுவிடுமா என்பது விளங்கிவிடும்.

லஞ்சம் ஒழிய வேண்டுமானால்

மற்றும் மனைவி இருக்கிற காங்கரஸ் கவுன்சிலர்களே சிலர் சென்னை கார்ப்பரேஷனில் பெண் சிப்பந்திகளிடம் ஒழுக்க குறைவாக நடக்க ஆரம்பித்தார்கள் என்று சொல்லப்படுமானால் மனைவி யில்லாத கவுன்சில் மெம்பர்கள் நாணையமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் சொல்ல முடியும்? பெரிய மனிதர்களாகவும், சமுதாயத்தில் மரியாதையும் கண்ணியமும் விரும்பி மதிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டியவர்களுமான கனவான்கள் என்கின்றவர்களை விட சமுதாயத்தில் எவ்வித மரியாதையும் பொறுப்பும் இல்லாத சாதாரண மனிதர்கள் மெம்பர்களாவார்களானால் அவர்கள் எந்த விதத்தில் யோக்கியர்களாகவும், நாணையமுள்ளவர்களாகவும் கனவான்கள் போலவும் நடந்து கொள்ள முடியும் என்று கேட்கிறோம். ஆகவே காங்கரசானது உண்மையில் முனிசிபாலிட்டியில் லஞ்சத்தையும், ஒழுக்க ஈனத்தையும் ஒழிக்க வேண்டுமென்று கருதுமாகில் அது முதலில் காங்கரசில் அப்படிப்பட்ட ஆட்கள் இல்லாமலும் நிறுத்தும் ஆட்களில் அம்மாதிரியான ஆட்களாவதற்கு இடமில்லாதவர்களாகவும் பார்த்து நியமித்து இருக்க வேண்டும்.

இதுவரை பல இடங்களிலிருந்தும் நமக்கு வந்திருக்கும் காங்கரஸ் அபேட்சகர் லிஸ்டுகளிலிருந்து பார்ப்போமானால் காங்கரசின் பேரால் போடப்பட்டிருக்கும் நபர்களில் பலர் தாங்கள் நாணையக் குறைவாகவும் ஒழுக்க ஈனமாகவும் நடந்து கொள்ளுவதுடன் மற்ற யோக்கியமான ஆட்கள் யாராவது இருந்தால் அவர்களையும் கெடுத்துவிடக் கூடியவர்கள் என்றே காணப்படுகின்றனர். ஆதலால் காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டி களுக்கு லஞ்சத்தை ஒழிப்பதற்காக போகிறோம் என்பது சுத்த ஹம்பக் என்பதோடு பலர் லஞ்சம் வாங்கிப் பிழைப்பதற்காகவே இப்படிச் சொல்லி கொண்டு போகிறார்கள் என்று கூற வேண்டியிருக்கிறது.

கண்டிராக்ட் ராஜ்யம் எது?

இனி கண்டிராக்ட் ராஜ்யத்தை ஒழிக்கும் யோக்கியத்தைப்பற்றி சிறிது யோசிப்போம். காங்கரஸ் ஆதிக்கத்தில் உள்ள எந்த ஸ்தாபனத்தில் இன்று கண்டிராக்ட் ராஜ்யம் இல்லை என்று சொல்ல முடியும்? சென்னை கார்ப்பரேஷன் மேயராய் இருந்த தோழர் சாமி வெங்கிடாசலம் செட்டியார் அவர்களுக்கு கார்ப்பரேஷனில் கண்ட்றாக்ட் சம்மந்தமிருந்தது என்பது ரிக்கார்டுகள் மூலமாய் ருசு செய்யப்பட்டு அது அவருக்காகக் கொடுக்கப்பட்ட இரசீது மூலமாய் ருஜúவாகி அந்த இரசீதுகளும் பிரசுரிக்கப்பட்டு செட்டியார் சென்றவிடமெல்லாம் இதைப்பற்றி கேள்வி கேட்கப்பட்டு செட்டியார் அவர்களும் பதில் சொல்ல முடியாமல் ஒவ்வொரு கூட்டங்களிலிருந்தும் பின்புறமாய் ஓடினதோடு அன்று முதல் இன்று வரை அவர் பாவம் எந்தப் பொதுக் கூட்டங்களிலும் தலை காட்டக்கூட பயப்படும்படியான நிலைமை ஏற்பட்டு இருக்கிறதை யாரும் எந்த காங்கரஸ்வாதியும் மறுக்க முடியாது.

சென்னைக் கதை

மற்றும் சென்னை கார்ப்பரேஷனில் அரிசி கண்றாக்டில் ஒரு சாயபு கவுன்சிலர் கலந்திருந்ததாயும் புத்தகக் கண்டிறாக்ட்டில் ஒரு பார்ப்பன கவுன்சிலர் அதுவும் சட்டசபை மெம்பர் கவுன்சிலர் சம்மந்தம் வைத்திருந்ததாயும், ஸ்டேஷனரி சாமான்களிலும், மாட்டுக்கு தீவனம் முதலியவைகளிலும் வேறு பல காரியங்களிலும் ஜாதிக்கொருவர் என்று சொல்லத்தக்க வண்ணம் கார்ப்பரேஷன் கவுன்சிலர்களுக்கு சம்மந்தமிருப்பதும் அவர்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் சொல்லிக் காட்டிக் கொள்ளுவதும் காங்கரஸ் பத்திரிகைகளான "தமிழ்மணி" "நம் நாடு" "வினோதினி" முதலாகிய பத்திரிகைகளில் அவ்வப்போது வெளிப்படையாயும், சூசனையாகவும் வருவதை யார்தான் இல்லை என்று மறுக்க முடியும்? இவைகள் எல்லாம், காங்கரஸ் கமிட்டியார் லஞ்சம் வாங்கின கவுன்சிலர்களை விசாரித்தபோது பல வழிகளில் வெளியாகவில்லையா?

போர்டு பிரசிடெண்டுகள் ஒழுக்கம்

காங்கரஸ் ஜில்லா போர்டு பிரசிடெண்டுகளில் கண்டிராக்ட் ராஜ்யமில்லாமல் யார் ஒழுங்காய் நடந்து கொண்டார்கள் என்று எந்த காங்கரஸ்வாதியாவது சொல்ல முடியுமா என்று கேட்கிறோம். போர்டிலுள்ள காங்கரஸ் மெம்பர்களுக்கு கண்ட்றாக்ட் கொடுக்கவில்லை என்றுதானே திருநெல்வேலி, திருவண்ணாமலை போர்ட் பிரசிடெண்டுகள் மீது காங்கரஸ்காரர்கள் நம்பிக்கைஇல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது? மெம்பர்களும், மேயர்களும், பிரசிடெண்டுகளும் நடந்து கொள்ளும் யோக்கியதைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். காங்கரஸ் மந்திரிகளின் யோக்கியதை என்ன என்று சவால் விடுகிறோம்.

மந்திரிகள் யோக்கியதை என்ன?

காங்கரஸ் மந்திரிகளுக்கு சர்க்கார் பணத்தில் மோட்டார்கார் வாங்கினார்களே அதில் அவர்கள் நடந்து கொண்ட யோக்கியதை என்ன என்று பார்ப்போம். முதலாவது கார்களுக்காக டெண்டர் கேட்கவில்லை என்பதோடு அவை மந்திரிகளுக்கு வேண்டியவர்கள் என்பவர்களான பார்ப்பனர்களிடமே வாங்கப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றி சட்டசபையில் கேள்வி வந்தபோது ஒரு மந்திரியார் அன்று வரை அதாவது அந்த கேள்வி கேட்கப்படும் வரை அந்த மோட்டார்கார் சப்ளை செய்த கம்பெனியார் யார் என்று எனக்குத் தெரியாது என்று பதில் சொன்னாராம். இது உண்மையாக இருக்க முடியுமா என்று கேட்கிறோம். ஒரு சமயம் கார் வாங்கும்போது அந்த கம்பெனியார் யார் என்று தெரியாமல் இருந்தாலும் இருக்க நியாயமுண்டு. கார் வாங்கிய பிறகு 6 மாத காலமாய் அதைப் பற்றி பத்திரிகைகளில் புகார்களும், மந்திரிகளின் மீது குறைகளும் பறந்து கொண்டிருந்த காலத்தில்கூட அந்த மந்திரியாருக்கு அவை எந்தக் கம்பெனியில் வாங்கியது என்று அதுவரையில் தெரியாமல் இருந்தது என்றால் அவரும் அது வரையில் அதைப்பற்றிய விஷயம் தமக்கு எட்டமுடியாமல்படி அவ்வளவு தூரம் காதை அடைத்துக் கொண்டிருந்தார் என்றால் இதை உலகத்தில் எட்டாவது அதிசயமெனத்தானே சொல்ல வேண்டி இருக்கிறது?

சேலம் நாற்றம்

அதுதான் போகட்டும். சேலம் வாட்டர்வர்க்ஸ் குழாய் வேலை கண்டிராக்டில், மந்திரி சபையும், கண்டிராக்ட் ராஜ்யம் ஆய்விட்டதற்கு காங்கரஸ்காரர்கள் இதுவரை என்ன பதில் சொன்னார்கள் சொல்லுகிறார்கள் என்று கேட்கிறோம்.

இது கூட மந்திரிகளுக்கு தெரியாமல் போன கம்பெனியா அல்லது தங்களுக்கு அக்கரை இல்லாமல் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயமாய் இருந்ததா என்று கேட்கிறோம்.

"பார்ப்பானுக்கு பைத்தியம் பிடித்தால் வெளியில் கிடக்கும் சாமான்களைத்தான் வீட்டுக்குள் எடுத்து எறியும்படி செய்யுமே தவிர வீட்டுக்குள் இருக்கும் சாமானை வெளியில் எறியச் செய்யாது" என்று ஒரு பழமொழி உண்டு.

அதுபோல் நமது பார்ப்பன மந்திரிகள் தெரியாமலும் லட்சியம் இல்லாமலும் கவனிக்காமலும் எந்த காரியம் தூக்க வெறியில் செய்தாலும் அவையெல்லாம் பார்ப்பனர்களுக்குத்தான் அனுகூலமாகவும் பார்ப்பனர்களைத் தேடிப் போகக் கூடியதாகவும்தான் இருக்குமே தவிர அவை ஒன்றுகூட பொதுவாகவோ, பார்ப்பனரல்லாதார் ஒருவருக்காவது பயன்படக் கூடியதாகவோ இருப்பதில்லை.

ஆகவே இப்படிப்பட்ட மந்திரிகளையும், மேயர்களையும், பிரசிடெண்டுகளையும், காங்கரஸ் மெம்பர்களையும் கொண்ட காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டியில் கண்டிராக்ட் ராஜ்ஜியத்தை ஒழிக்கிறோம் என்பது " எனக்கு பயித்தியம் தெளிந்துபோய்விட்டது. உலக்கை எடுத்துக்கொடு அதை கோவணமாய் கட்டிக்கொண்டு வெளியில் வருகிறேன்" என்று அடைப்பட்டுக் கிடக்கும் ஒரு பயித்தியக்காரன் கேட்பது போல் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. அடுத்தாப்போல் முனிசிபாலிட்டியில் பணக்காரர்கள் வராமல் தடுக்க வேண்டும் எனப்படுவதைப் பற்றி யோசிப்போம்.

பணக்காரனை எப்படித் தடுப்பது?

எந்த ஸ்தாபனத்திலாவது பணக்காரர்கள் வராமல் தடுக்க யாராலாவது முடியுமா என்று கேட்கின்றோம். அன்றியும் பணக்காரன் ஏன் தடுக்கப்பட வேண்டும்? பணக்காரன் ஏற்கனவே சம்பாதித்துக் கொண்டதால் இனி பாப்பர்கள் முனிசிபாலிட்டிக்கு சென்று சம்பாதிக்கட்டும் என்கிற ஒரு மாறுதலுக்கு ஆகவா? என்று கேட்கிறோம். காங்கரசால் நிறுத்தப்பட்டவர்களுக்குள் பணக்காரர்கள் இல்லையா? அல்லது சுயேச்சையாய் நின்று இருக்கிறவர்களுக்குள் பணக்காரர்கள் அல்லாதவர்கள் இல்லையா? என்று கேட்கிறோம்.

அப்படிக்கிருக்க சில பணக்காரர்களிடம் மாத்திரம் இந்த காங்கரஸ் பரிசுத்தவான்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருவானேன் என்று யோசித்துப் பார்த்தால் காங்கரஸ்காரர்கள் சில பணக்காரர்களை வேண்டாம் என்பதற்கு காரணம் விளங்காமல் போகாது.

சர்க்காரோ காங்கிரஸ்காரர்களோ நாட்டின் சகல தொழிலையும், வர்த்தகத்தையும் ஏற்றுக்கொண்டால் மாத்திரம் முனிசிபாலிட்டியிலிருந்து பணக்காரர்களை விலக்க முடியுமே ஒழிய மற்றபடி இதில் காங்கரஸ்காரர்கள் பணக்காரர்களைப் பற்றிப் பேசுவது, கடைந்தெடுத்த காலித்தனமும் அயோக்கியத்தனமுமேயாகும். ஏனெனில் தாங்கள் செய்ய முடியாததைப் பேசுகிறார்கள் என்பதோடு இப்படிப் பேசும் காங்கரஸ்காரர்களிலேயே பலர் ஒவ்வொருவர் ஒவ்வொரு பணக்காரர் வீட்டு எச்சில் தொட்டிகளை காத்துக் கொண்டிருக்கிறவர்கள் என்றும் ஒவ்வொருவர் ஒவ்வொரு பணக்காரரால் உதைத்து விரட்டி அடிக்கப்பட்டவர்கள் என்றும் அறியக் கிடப்பதாலேயே சொல்லுகிறோம். உதாரணமாக தஞ்சாவூர் காங்கரஸ் பாப்பர் பக்தர்கள் தோழர் நாடிமுத்து பிள்ளையிடம் ஏழாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டுதான் தோழர் சாமியப்ப முதலியாரின் "பணக்கார ராஜ்யத்தை" ஒழித்தார்கள். இப்படியே தான் இருக்கும் மற்றும் தமிழ் நாட்டில் "பணக்காரர்கள் ராஜ்யம்" ஒழிக்கப்பட்ட யோக்கியதை. ஆகவே இந்த சாக்கும் அருத்தமும், பொருத்தமும், நாணையமும் மற்றதென்றே சொல்லுவோம். பிறகு முனிசிபாலிட்டிகளில் வகுப்பு வாதம் ஒழிப்பது என்பது பற்றி யோசிப்போம்.

வகுப்புவாதம் எங்கு இல்லை?

இன்று இந்தியாவில் எங்கு வகுப்பு வாதம் இல்லை என்று சொல்ல முடியும்? காங்கரஸ் சட்டசபைகள் பூராவும் வகுப்புவாத சபைகளாகவே இருக்கின்றன.

காங்கரஸ் "வெற்றி" பெற்ற பிறகே நாட்டில் வகுப்பு வாதம் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாய் வளர்ந்து வருகிறது. வகுப்பு வாதம் இல்லாவிட்டால் சென்னை அசம்பளியில் தோழர் கனம் முனிசாமிபிள்ளையைக் காட்டி முக்கால் கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் கண்களிலும் தோழர் யாகூப் ஹாசன் சேட்டைக்காட்டி ஒரு கோடி முஸ்லிம்கள் கண்களிலும் தோழர் ராமநாதனைக் காட்டி இரண்டுகோடி தமிழ் மக்கள் கண்களிலும் இந்தப் பார்ப்பனர்கள் மண்ணைப் போட்டிருக்க முடியுமா? என்று கேட்கிறோம். வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு இவர்கள்தான் பிரதிநிதிகளாக இருந்திருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் சென்னை இரண்டு சட்ட சபைக்கும் பார்ப்பனர்களே தலைவராக ஆகி இருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டில் பிரதம மந்திரியும், பிரதம காரியதரிசியாரும் பார்ப்பனர்களாய் வந்திருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் இந்தியாவில் காங்கரஸ் காரர்கள் கைப்பற்றிய ஆறு மாகாணங்களிலும் பிரதம மந்திரிகள் ஆறு பேரும் பார்ப்பனர்களாகவே வந்திருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டில் பெரிய பட்டங்கள் விட்ட பார்ப்பனரல்லாதார் அனுபவம் பெற்றவர்களும் 10, 20 வருஷம் பொது வாழ்வில் உழைத்து மதிப்பு பெற்றவர்களுமிருக்கும்போது காங்கரஸ் துரோகிகளுக்கு மந்திரி வேலை கிடைத்து இருக்குமா? என்று கேட்கின்றோம்.

வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டில் மந்திரிகளான 5 தமிழ் மெம்பர்களில் 4 பேர்கள் காங்கரஸ் துரோகிகளாகவும் வகுப்புவாதிகளாகவும் இருந்தவர்களே மந்திரிகளாக வந்திருக்க முடியுமா?

கடைசியாக ஒன்று குறிப்பிடுகிறோம். காங்கரசில் வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் காங்கரசுக்காக எவ்வளவோ உழைத்தவரும் எவ்வளவோ தியாகம் செய்தவரும் கல்வி விஷயத்தில் சென்னை மாகாணத்தில் நிபுணரும், கல்வி இலாக்கா தலைவராய் இருந்து அனுபவம் பெற்றவருமான தோழர் சி.ஆர். ரெட்டியார் இருக்க கல்வி இலாக்கா (யூனிவர்சிட்டி) தொகுதிக்கு சி.ஆர். ஆச்சாரியார் நிறுத்தப்பட்டு மந்திரி பதவியும் பெற்றிருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாதம்

இப்படியே காங்கரசின் வகுப்புவாதத்துக்கு இனியும் ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் எடுத்துக் காட்டலாம்.

ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாதம் இல்லையா என்பதற்கு கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி கட்சியாக, கார்ப்பரேஷன் காங்கரஸ் மீட்டிங்கில் 3 தடவை தெரிந்தெடுக்கப்பட்டவரும் கார்ப்பரேஷன் பொது மீட்டிங்கில் தெரிந்தெடுக்கப்பட்டவருமான தோழர் சிவசைலம் பிள்ளைக்கு பதவி கொடுக்காமல் ஒழுக்கத்துக்கும் நாணையத்துக்கும் விரோதமாக ஒரு பார்ப்பனருக்கு அந்த பதவி கிடைத்திருக்குமா என்பதும் கார்ப்பரேஷன் தலைமை உபாத்தியாயர் வேலைகள் காலியாவதெல்லாம் பார்ப்பனருக்கே போய்க் கொண்டிருக்குமா என்பதுவுமே போதுமான ஆதாரமாகும்.

இவ்வளவு சமாதானமும் போறாது என்று வைத்துக்கொண்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அட்ஹாக் கமிட்டியார் அபேக்ஷகர்களை தெரிந்தெடுக்கும் போது பார்ப்பனர்களை மாத்திரம் அவர்களது எண்ணிக்கைக்கு மேல் 100க்கு 200 - வீதம் 300- வீதம் சில இடங்களில் 500 வீதம் அதிகமாக தெரிந்தெடுக்கப்படுவதின் காரணம் என்னவென்று கேட்கின்றோம். இனியும் காங்கரஸ்காரர்கள் பதவிபெற்றால் தங்களுக்குள் வகுப்பு வாதம் கிடையாதென்றும் ஆனால் பார்ப்பனர் என்கின்ற ஒரு வகுப்பார்தான் யெல்லாவற்றிற்கும் தகுதி உள்ளவர்கள் என்று சொல்லிக்கொண்டு சர்வம் பார்ப்பனமயமாய் ஆக்கிவிடுவார்களா இல்லையா என்று கேட்கின்றோம்.

சுயராஜ்யம் எது

இனிக் கடைசியாக காங்கரஸ் எதிரிகள் ஸ்தல ஸ்தாபனங்களை கைப்பற்ற விட்டு விட்டால் சுயராஜ்யம் தடைபட்டு போகும் என்பதைப் பற்றி யோசிப்போம்.

சுயராஜ்யம் என்பதற்கும் முனிசிபாலிட்டிக்கும் என்ன சம்மந்தமிருக்கிறது என்பது முதலில் கவனிக்கப்படத் தக்கதாகும்.

சட்டசபை என்பது ஒரு நாட்டில் ஆட்சி நடக்க சட்டம் செய்யும் ஸ்தாபனமாகும். ஆதலால் அங்கு சட்ட வல்லவர்கள் சென்று சுயராஜ்யத்துக்கு சட்டம் செய்யலாம். அதுவும் அதற்கென்று ஏற்கெனவே ஏற்பட்டுள்ள சட்டத்திற்கு அடங்கி சட்டம் செய்யவேண்டும். ஆனால் முனிசிபாலிட்டிகளோ அப்படி அல்ல. அவை ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டப்படி நடப்பதற்கு ஆக ஏற்பட்ட ஸ்தாபனங்களாகும். அங்கு சுயராஜ்ய சம்மந்தமாகவோ, வேறு எந்த விதமாகவோ ஒரு சட்டமும் செய்ய முடியாது. செய்தாலும் செல்லாது.

முனிசிப்பாலிட்டி வேலை

முனிசிபாலிட்டியில் செய்யக் கூடியதெல்லாம் சர்க்கார் கட்டளைப்படி வரிவிதித்து சர்க்கார் மிரட்டலுக்கு பயந்து வரி வசூலித்து ஊருக்குள் உள்ள ரோடுகளை பராமரிக்கவும், தெருக்கள் கக்கூசுகள் சுத்தம் செய்யவும், சுகாதாரம், கல்வி ஆகியவைகளை நிர்வகிக்கவுமே ஏற்பட்ட ஸ்தாபனங்களாகும். அதற்கும்கூட முனிசிபாலிட்டிகளுக்கு ஜவாப்தாரிகளல்லாத மேல் அதிகாரிகளும் நிபுணர்களும் உண்டு. அவ்விஷயங்களில் அவர்கள் சொன்னபடிதான் முனிசிபல் கவுன்சிலர்கள் கேட்க வேண்டுமேயொழிய முனிசிபல் கவுன்சிலர்கள் சொல்லுகிறபடி அவர்கள் கேட்கமாட்டார்கள்.

இவை தவிர நேரிட்டு நிர்வாகம் நடத்த சர்க்காருக்கு ஜவாப்தாரி ஆனவரும், கவுன்சிலர்க்கு ஜவாப்தாரி அல்லாதவருமான நிர்வாக அதிகாரி ஒருவர் ஒவ்வொரு முனிசிபாலிட்டிக்கும் உண்டு. அப்படி இருக்க முனிசிபாலிட்டியில் என்ன சுயராஜ்யம் பெற முடியும். இப்படிப்பட்ட முனிசிபாலிட்டியில் யார் போனால்தான் எப்படிப்பட்ட சுயராஜ்யம் எப்படி தடைப்பட்டு விடும் என்று கேட்கிறோம்.

காங்கரஸ் கைப்பற்றும் மர்மம்

முனிசிபல் கவுன்சிலராவதற்கு தகுதியான யோக்கியதா பக்ஷமும் தனிப்பட்ட நாணையமும் ஒழுக்கமும் இல்லாத அயோக்கியர்களும் கவுன்சிலர்களாவதற்காக செய்துகொண்ட சூழ்ச்சிகளும் இழிவான தந்திரங்களும்தான் முனிசிபாலிட்டியை காங்கரஸ் கைப்பற்ற வேண்டும் என்று சொல்லும் காரணமாகுமே தவிர மற்றபடி அதில் சிறிதும் நாணையமில்லை என்று உறுதியாகச் சொல்லுவோம்.

பொதுவாக மேற்கண்ட எல்லாவற்றையும்விட முனிசிபாலிட்டியில் காங்கரஸ்காரர்களல்லாதவர்கள் செல்ல இடம் கொடுத்தால் சுயராஜ்யம் வருவது தடைப்பட்டுப் போகும் என்று சொல்வது மகா மகா அற்பத்தனமும் அயோக்கியத்தனமும் மனதறிந்து பேசும் போக்கிரித்தனமான பேச்சாகும் என்று மறுபடியும் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம். ஏனெனில்,

பார்ப்பனர் தோற்றம்

இந்தச் சாக்கினால்தான் பார்ப்பனர்கள் முனிசிபாலிட்டிகளில் தங்களை யோக்கியதைக்கு மீறி உள் நுழைய முடிகின்றது. உதாரணமாக ஈரோட்டை எடுத்துக் கொள்ளுவோம். இந்த 20 வருஷகாலமாக பார்ப்பனர்கள் ஈரோடு முனிசிபாலிட்டிக்கு ஒருவர் மாத்திரமே புக முடிந்தது. இப்போது சுயராஜ்யத்தை அவசரப்படுத்துவது என்னும் பேரால் 3, 4 பார்ப்பனர்கள் அபேக்ஷகர்களாய் முன்வந்து விட்டார்கள். மற்ற பல ஊர்களில் இதைவிட அதிகம் பேர் இந்தச் சாக்கில் உள்ளே புகப் பார்க்கிறார்கள். இதை கருத்தில் கொண்டே பார்ப்பனப் பத்திரிக்கைகள் பல இந்த அயோக்கியத்தனமான சாக்கினை சொல்லுகின்றன.

ஆகவே இந்தக் காரணத்தால்தான், இதுவே பார்ப்பனர்கள் பொது ஸ்தாபனங்களுக்கு அருகதை அற்றவர்கள் என்பதையும் பொதுநலங்களில் நாணையமற்றவர்கள் என்பதையும் காட்டுவதற்கு போதுமான ஆதாரங்களாகும்.

ஆகையால் அவ்வவ்விடங்களிலுள்ள முனிசிபல் ஓட்டர்கள் ஒவ்வொருவரும் பார்ப்பனர்களாய் இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட தகுதியையும் நாணையத்தையும் உரிமையையும் நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தங்கள் ஓட்டுகளை அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். அப்படிக்கு இல்லாத பக்ஷம் முனிசிபாலிட்டிகள் கட்சிச் சண்டைகளுக்கு இடமாகவும், காலிகள் வயிற்றுப் பிழைப்புக்கு புகலிடமாக அதிக வரிகள் கொள்ளை போவதுடன் முனிசிபல் வாழ்க்கையும் நாசமாகிவிடும் என்று வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 17.04.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: