அன்புள்ள தலைவரவர்களே! இந்து முஸ்லீம் தோழர்களே!!

நான் நேற்று இங்கு நடைபெற்ற நபிகள் பெருமான் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருவதற்கு இருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வேலையினால் வரமுடியவில்லை. அந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதற்காகவே இன்று இங்கு வந்திருக்கிறேன்.

இந்த ஒரு வாரமாகவே பல இடங்களுக்குச் சென்று தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்து வந்திருக்கிறேன். அதனால் எனது உடல் நிலையும் சரியாக இல்லை. அப்படி யிருந்தும் இங்கு பேசவேண்டுமென்ற ஆசையால் வந்தேன்.

துக்க சேதி

அப்படி வந்த நான் ரயிலை விட்டு இறங்கி காரில் ஏறியதும் என்னை ரயிலுக்கு அழைக்க வந்த எனது நண்பர் தோழர் யாகூப் சாயபு அவர்கள் ஒரு வருத்தமான விஷயம் கூறினார். அது கேள்விப்பட்ட நேரத்திலிருந்து என் மனம் துடிக்கிறது. அதாவது தோழர் பரமேஸ்வரம் செட்டியார் காலம் சென்று விட்டதாகக் கூறினார்.

தோழர் பரமேஸ்வரம் செட்டியார் அவர்கள் எனது அருமை நண்பர். நமதியக்கத்திற்காக பல வகையிலும் உதவி செய்து வந்தவர். அவர் ஒரு இளைஞர். மிகுந்த செல்வந்தர். அவரைப் போன்ற ஒரு பொது ஊழியர் இது சமயம் இந்த ஊருக்கு மிகவும் அவசியம். அவர் காலமானது சகிக்க முடியாத நஷ்டம். உலகில் பிறக்கிறவர்கள் இறந்து போவது இயற்கை என்றாலும், பரோபகாரியாகிய ஒருவர் இறந்து போவது துக்கப்படத்தக்கதாகி விடுகிறது.

இக் கூட்டம் முஸ்லீம் லீக் சார்பில் கூட்டப்பட்டிருக்கிறது. ஆதலால் இன்று பேச வேண்டிய விஷயம் முஸ்லீம்களின் தற்கால அரசியல் நிலைமை என்று வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆனால் நமது கூட்டத்தின் தலைவர் கனம் கலிபுல்லா சாயபு அவர்கள் தற்கால அரசியல் நிலை என்பதாகவும் பொதுவாகவும் பேச வேண்டுமென்று கட்டளை இட்டிருக்கிறார்.

இந்து முஸ்லிம்

நான் இன்று பொதுவாக நமது நாட்டிலுள்ள அரசியல் நிலைமை என்பது பற்றியும், அதில் முஸ்லிம்கள் நிலை என்பது பற்றியும் முதலில் இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றியும் சிறிது பேசுகிறேன்.

இப்பொழுது இங்கு கூடியுள்ள 5000 ஜனங்களில் இந்துக்கள் அதிகமாய் இருப்பதால் இந்துக்கள் என்பவர்களுக்கு முதலில் சில வார்த்தைகள் கூறுகிறேன். இன்று இந்தியாவில் முஸ்லிம் சமூகம் ஒரு பலமான நிலையான ஒரு சமூகம் என்பது நான் சொல்லாமலே விளங்கும். அப்படிப்பட்ட அந்த சமூகத்தைக் கண்டு இந்துக்கள் வெறுப்படையவோ, இழிவாக மதிக்கவோ செய்வது தற்கொலைக் கொப்பாகும்.

நான் இப்படி சொல்லுவதால் என்னை முஸ்லிம்களுக்கு இந்துக்களைக் காட்டிக் கொடுப்பதற்காக அவர்களைப்பற்றி புகழ்ந்து பிரசாரம் செய்து வருவதாகச் சில பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு உபதேசம் செய்து விஷமப்பிரசாரம் செய்து வருவது எனக்குத் தெரியும்.

நான் உறுதியாக ஒன்று கூறுகிறேன். இந்த நாட்டை விட்டு முஸ்லிம்களை இந்துக்கள் விரட்டியடித்துவிடவோ, அவர்களை இந்துக்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கச் செய்யவோ, அடக்கி விடவோ ஒரு நாளும் முடியாது.

கனம் ஆச்சாரியார் ஒரு சமயம் வந்தே மாதரம் பாட்டுத் தகராறில் "இஷ்டமில்லாதவர்கள் இந்த நாட்டை விட்டு போகட்டுமே" என்று சொன்னாராம்.

அசட்டுப் பேச்சு

அது அசட்டுப் பேச்சு, ஒரு நாளும் அவர்கள் போகமாட்டார்கள்.

அது போலவே இந்துக்களையும் இந்த நாட்டை விட்டு விரட்டிவிடலாம் என்றோ அடக்கி ஆளலாம் என்றோ எந்த முஸ்லிமும் கருத முடியாது. அப்படிக் கருதுகிறவனுக்கு ஒரு நிமிஷமும் ஓய்விருக்காது. இந்த நாடு உள்ள வரையிலும் இந்த இரண்டு சமூகங்களும் இருந்தே தீரும். அதிலும் ஒருவருக்கொருவர் சம சுதந்திரத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள்.

இந்த இரு சமூகத்தாரும் எப்படி ஒற்றுமையாக வேற்றுமை உணர்ச்சி இல்லாமல் வாழச் செய்வது என்பது தான் இன்று இந்தியாவில் முக்கிய பிரச்சினை. அந்த வேலையில்தான் நான் இப்போது ஈடுபட்டு வருகிறேன்.

ஏனெனில் இன்றைய நிலையில் இந்தியாவில் உள்ள எல்லா சமூகமும் ஜாதி மத வகுப்பு பேதமன்னியில் ஒரு குடும்பமாக, ஒற்றுமையாக வாழும்படி செய்தால் தான் நமது அரசியல், பொருளியல், சமுதாய இயல் ஆகியவற்றில் ஏதாவது முற்போக்கான மாறுதல் காணமுடியும் என்று நான் உண்மையாய்க் கருதுவதால் அந்தப் பிரசாரம் செய்து வருகிறேன்.

கட்சியார் சொன்னதே

இதை நான் இன்று மட்டும் சொல்லவில்லை. அன்றியும் இதை நான் மட்டும் சொல்லவில்லை. இன்று இந்திய மக்களின் உண்மை விடுதலைக்காகப் பாடுபடுகிறவரென்றும், ஆத்ம சக்தி வாய்ந்தவரென்றும் கூறப்படுகின்றவரும் மகாத்மா பட்டம் பெற்று இருக்கிறவருமான தோழர் காந்தியாரே "இந்து முஸ்லிம்கள் ஒற்றுமை ஏற்படாவிட்டால் நம் நாட்டிற்கு விடுதலை கிடைக்காது, சுயராஜ்யம் கிடைக்காது" என்று 20 வருஷத்துக்கு முன் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்ல, நமது நாட்டை விட்டு தீண்டாமை ஒழியும் வரையும் சுயராஜ்யம் கிடைக்காதென்றும் கூறி இருக்கிறார். அவ்வளவோடு அவர் நின்றுவிடவில்லை. அவை ஏற்பட்டாலன்றி "சுயராஜ்யம் வந்தாலும் உதைத்துத் தள்ளுவேன்" என்று கூறி இருக்கிறார்.

அதைத்தான் நான் இன்று சொல்லிவருகிறேன். அப்படி இருந்தும் என்னை வகுப்பு வாதியென்று தேசபக்தர்கள் என்பவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். இதைத்தான் நான் பார்ப்பன சூழ்ச்சி என்றும், பார்ப்பனத் தொல்லை என்றும் சொல்ல வேண்டி இருக்கிறது.

21 - நாள் பட்டினி

நமது நாட்டில் ஒரு காலத்தில் "ஒத்துழையாமை" என்ற ஒரு காங்கரஸ் கொள்கை இருந்து வருகையில் தோழர் காந்தியார் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக 21 நாள் பட்டினி விரதம் இருந்து வருவதாகக் கூறி பட்டினி கிடந்தது உங்களில் பலருக்குத் தெரியும்.

அது சமயம் நானும் இன்று பிரதம மந்திரியாகவிருக்கும் நண்பர் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் சென்னையிலிருந்து "இறந்து போவதற்கு இது காலமல்ல" என்று தோழர் காந்தியாருக்கு தந்தி கொடுத்தோம். அதற்குப் பதிலாக ஒரு கடிதம் காந்தியாருக்காக காந்தியாரின் காரியதரிசியான தோழர் மகாதேவதேசாய் எழுதி இருந்தார்.

அதில் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படாமல் உயிருடன் இருப்பதில் பயனில்லை என எழுதப்பட்டிருந்தது.

இப்போது நான் அதைப் பின்பற்றிப் பிரசாரம் செய்துவந்தால் நான் தேசத்தைக் காட்டிக் கொடுப்பவனென்றும் முஸ்லிம்களுக்கு இடம் கொடுப்பவனென்றும், தேசத்துரோகி என்றும் கூறிவருவது நியாயமா? நான் அதைப் பொருட்படுத்தாமல் நான் எது முக்கியமானது, அவசியமானது என்று கருதுகிறேனோ அதைச் செய்து வருகிறேன்.

தீண்டாமை ஒழிவதின் முக்கியம்

மற்றும் தோழர் காந்தியார் ஒரு சமயம் சிறையிலிருக்கும்போது சிறையிலிருந்து கொண்டே தான் தீண்டாமையொழிப்பு வேலை செய்யப் போவதாகவும் அதற்கு வேண்டிய செளகரியங்கள் செய்து கொடுக்க வேண்டுமென்றும், சிறை அதிகாரிகளைக் கேட்டிருந்தார். அதற்கு அவர்கள் சம்மதித்தார்கள்.

அதற்குப்பின் தோழர் காந்தியார் சிறைக் கதவே மூடி இருக்கக் கூடாதென்கிற மாதிரியில் நிபந்தனை கூறினார். அதற்கு ஜெயில் ரூல் இடம் கொடுக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினார்கள். அதற்குக் காந்தியார் "நான் சொல்லுகிறபடி கதவு திறந்திருக்காவிட்டால் நான் பட்டினி கிடந்து சாவேன்" என்று பட்டினி இருக்க ஆரம்பித்தார்.

இதை அறிந்த அதிகாரிகள் சிறைக்கதவுகளைத் திறந்து வைக்க முடியாது அதைவிட நீங்கள் வெளியிலே போய் அங்கிருந்து கொண்டு வேலை செய்யுங்கள் என்று வெளியில் அனுப்பிவிட்டார்கள்.

வெளியில் வந்து என்ன செய்தார். மறுபடியும் ஒரு பட்டினி விரதமிருந்து தீண்டாதார் தலையில் நிரந்தரமாய் இனி என்றென்றும் பட்டினி இருக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்து விட்டார். இதை யெல்லாம் நான் யார் மீதும் துவேஷம் கொள்வதற்காகச் சொல்லவில்லை.

நாங்கள் எது செய்தாலும் அவைகளைத் திரித்துக் கூறி விஷமப் பிரசாரம் செய்து வருவதால் இதையெல்லாம் உங்கள் முன் கூறுகிறேன்.

முஸ்லிம் 9 கோடி இந்து 25 கோடி

இன்று நமது நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சற்றேரக் குறைய 9 கோடியே ஆகும். ஆனாலும் அவர்களுடைய பலம் எவ்வளவு? இந்துக்களின் எண்ணிக்கை 25 கோடி ஆகும் என்றாலும் இந்துக்களின் பலம் எவ்வளவு? என்பதையும் யோசித்துப் பாருங்கள். முஸ்லிம்கள் தங்கள் சமூக விஷயத்தில் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவர்கள் அப்படி ஒற்றுமையாகவிருப்பதால் தங்கள் காரியங்கள் எவ்வளவு சுளுவில் முடிகிறதென்பதைக் கவனித்துப் பாருங்கள்.

25 கோடி எண்ணிக்கையுள்ள இந்துக்களின் ஒற்றுமையைச் சற்று கவனித்துப் பாருங்கள். 25 கோடியில் ஒரு கோடி பேராவது ஒற்றுமையாக ஒரு ஜாதியாக இருக்கிறார்களா? இவர்கள் ஜாதியென்றும் வகுப்பென்றும் பல பல பிரிவுகளாகப் பிரிந்து தனித்தனியாக தங்களில் உயர்வு தாழ்வு உணர்ச்சியுடன் இருந்து வருவதால் இந்துக்களுக்கு சுயமதிப்பு உணர்ச்சி தோன்றமுடிவதில்லை. தோன்றினாலும் எதையும் சாதிக்க முடிவதில்லை.அதனால்தான் நாம் சுயமரியாதை இழந்து "சூத்திரனாய்" கூலிகளாய் தவிக்கிறோம்.

வெள்ளையனை விரட்டுவது

இந்த நிலைமையில் இருந்து கொண்டிருக்கிற நாம் இன்று இந்த நாட்டை விட்டே வெள்ளைக்காரர்களை விரட்டி அடிக்க வேண்டுமென்றும், நம்மை நாமே ஆண்டு கொள்ளும்படியான சுயராஜ்யம் பெறவேண்டுமென்றும், ஏகாதிபத்தியத்தை ஒழிக்க வேண்டுமென்றும் அருத்தமும், பொருத்தமும் அற்ற வார்த்தைகளைப் பாமர மக்கள் காதிற்கு இனிமையாகவும் அவர்கள் சுலபத்தில் ஏமாறக்கூடிய மாதிரியாகவும் கூறி வருகிறோம்.

இவர்கள் இந்த நாட்டை ஆளும் வெள்ளைக்காரர்களை இந்த நாட்டை விட்டு எப்படி விரட்டுவார்கள்? இந்து முஸ்லிம் சண்டை ஒருபுறம்; இந்துக்களில் 1008 ஜாதி பதினாயிரத்தி எட்டு பிரிவு; இதில் தீண்டப்படாதவர்கள் 5 கோடி; மீதியிலும் பார்ப்பான் மற்றவர்களைத் தொடக் கூடாதாம். இப்படி இருக்கும்போது இந்தியர்களால் என்ன செய்ய முடியும்?

அப்படித்தான் சாதிப்பதாய் இருந்தாலும் இந்தியனின் ஆயுதம் என்ன? கைராட்டினமும் தக்கிளியுந்தானேயிருக்கிறது. அந்த ராட்டினமும் தக்கிளியும் வெள்ளைக்காரனை என்ன செய்யும்? ஒரு கோடி ரூபாய் செலவு செய்து 20 வருஷமாய் சுற்றிய ராட்டினமும் தக்கிளியும் வெள்ளைக்காரனை என்ன செய்தது?

ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்து சரணாகதி அடையத்தானே செய்தது?

நான் இப்படிக் கூறுவதால் வெள்ளைக்காரன் இந்தியாவில் இருந்து சுரண்டிக் கொண்டு போகும் பணத்துக்கு எனக்கு ஏதாவது கமிஷன் வருகிறது என்று நினைத்துவிடாதீர்கள். நாம் உண்மையை பேச வேண்டாமா?

போதிய பலம் வேண்டாமா?

வெள்ளைக்காரன் துப்பாக்கி, பீரங்கி, ஆகாயக் கப்பல் வெடிகுண்டு, விஷப்புகை முதலிய சாதனங்களுடன் ஒன்றுபட்ட ஒரே ஜாதி மக்களை பல லக்ஷக்கணக்காய் பட்டாளத்தில் வைத்திருக்கிறான். அவனை ஒழிக்க நமக்குப் போதிய பலமும் சாதனமும் ஒற்றுமையும் வேண்டாமா என்பதற்காகத் தான் இதைச் சொல்லுகிறேன்.

வெள்ளைக்காரனே இருக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கில்லை. அவனுக்கும் எனக்கும் ரத்த சம்மந்த உறவு கிடையாது.

பார்ப்பனர்கள் வேண்டுமானால் வெள்ளையரும் தாங்களும் ஒரு வழியில் வந்தவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொள்ளுகிறார்கள்.

பார்ப்பனர்கள் நம்மிடம் ஒன்று சொல்லுகிறார்கள், அவர்களிடம் ஒன்று சொல்லுகிறார்கள். நான் அப்படியில்லை, வெள்ளையன் ஓடிப்போவதில் எனக்கு ஆக்ஷேபணை இல்லை. எப்படி ஓடச் செய்வது? இங்கிலீஷ் வெள்ளையன் போய்விட்டால் ஜப்பான் வெள்ளையனும் ஜர்மனி வெள்ளையனும் வராமலிருக்க வேண்டாமா? நம்மால் என்ன செய்ய முடியும்? கோட்டை வாசலில் துளசியைக் கொட்டி விட்டால் போதுமா? அல்லது கதவைத் தாழிட்டுக் கொண்டு வேதம் ஓதினால் போதுமா?

இந்த 50 வருஷ காலமாக காங்கரஸ் என்னும் பேரால் எவ்வளவோ தந்திரங்கள் செய்து பார்த்தாய் விட்டதே! வெள்ளைக்காரனை என்ன செய்தோம். நமக்குத்தானாகட்டும் உப்புக்காவது, புளிக்காவது பலனேற்பட்டதா? செம்புக்காசு பலனாவது உண்டா என்று கேட்கிறேன்.

சவால்! ஆண்மையிருந்தால் எந்த காங்கரஸ்வாதியாவது பதில் கூறட்டும்.

காங்கரஸ்காரர்கள் யாராவது பொதுமக்களிடம் பேசும்போது காங்கரஸ் இதுவரை மக்களுக்கு இன்ன நன்மை செய்தது என்று கூறுகிறார்களா?

"மகாத்மா காந்தி ஆட்டுப்பால் குடிக்கிறார். ஆரஞ்சு ரசம் சாப்பிடுகிறார். அவரை சிறையிலடைத்தால் இரவில் வெளிவந்து விடுகிறார். அவர் சிறுநீர் பன்னீர் வாசனை அடிக்கிறது என்று காந்தியார் பெருமையையும், அடிபட்டோம், உதைபட்டோம், சிறைபட்டோம் என்று "தியாக" பெருமைப் பேச்சுப் பேசி புராண காலக்ஷேபம் செய்து ஏமாற்றுப் பிரசங்கம் செய்வதைத் தவிர வேறு என்ன அவர்களால் எடுத்துக் காட்ட முடிகிறது.

நான் இவைகளையெல்லாம் உங்கள் முன் பொய்யாகப் பேசிவிட்டு ஓடுகிறவனல்ல. நான் பேசியதில் ஏதாவது தவறுதல் இருக்கிறதென்று யாராவது ரூபித்தால் தலை வணங்கத் தயாராகவிருக்கிறேன்.

காங்கரஸ் ஏற்பட்டதற்கு அப்புறமே வரிக்கொடுமை, சம்பளக் கொள்ளை, உத்தியோக வேட்டை, வகுப்புக் கலகம், பார்ப்பன ஆதிக்கம், பணக்காரர்கள் துரோகம் ஆகிய காரியங்கள் ஏற்பட்டன. புள்ளி விவரங்களுடன் நான் ருஜú செய்வேன்.

காங்கரஸ்காரர்கள் தாங்கள் சிறை சென்ற பெருமையைப் பற்றி பேசுகிறார்கள். இன்று பெரிய அரசியல் தலைவர்கள் என்று சொல்லுகிறவர்கள் 2 - தடவை சிறை சென்றிருந்தால் நானும் 6 - தடவை சென்றிருக்கிறேன். அவர்களைவிட சிறையில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன்.

நான் சிறை செல்லும்போது சிறையில் மிகவும் கஷ்டமிருந்தது. அப்பொழுது மூத்திரச் சட்டியும், தண்ணீர்ச் சட்டியும் ஒன்றாக இருந்தது.

இவர்கள் சிறைவாசம்

வேலையும் செய்தோம். ஆனால் அவர்கள் சிறைக்குச் சென்ற இப்போதோ எ.கிளாஸ், பி.கிளாஸ், சி.கிளாஸ் என்ற விதிகளும், வீட்டுச் சாப்பாட்டைவிட நல்ல சாப்பாடும், அது பிடிக்காதவர்களுக்குத் தனிச் சமையல்காரனும், படிப்பதற்குப் பேப்பர்களும், புஸ்தகங்களும் கொடுக்கிறார்கள்.

இது தவிர மேஜை, நாற்காலி, கட்டில் மெத்தை கம்மோடுகளும் கொடுக்கிறார்கள். இப்படி இருக்க "சிறை சென்றேன். கஷ்டப்பட்டேன்" என்றெல்லாம் கூறுவது வீண் ஏமாற்றமாகும். நான் வெறுப்பினாலோ, பொறாமையாலோ உத்தியோக ஆசையினாலோ இவற்றைப் பேசவில்லை.

தோழர்களே! இன்னும் நான் ஒன்று உங்களுக்குக் கூறுகிறேன். நான் இஷ்டப்பட்டால் நமது மாகாண மந்திரியாக கஷ்டமில்லாமல் வந்து விடுவேன்.

எனது அருமை நண்பர் கனம் ராஜகோபாலாச்சாரியாருக்கு இன்று ஒரு கடிதம் எழுதினேனென்றால் இன்றிருக்கும் ஏதாவதொரு அன்னக்காவடி மந்திரியை வீட்டிற்கனுப்பிவிட்டு நாளையே என்னை மந்திரியாக நியமிப்பார். அதுவும் நான் ஆசைப்பட்டால் என்னை முதல் மந்திரியாகக் கூட நியமிப்பார். (சிரிப்பு)

ஏன் சிரிக்கிறீர்கள். இன்று காங்கரசையும், காந்தியாரையும் சதா இகழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு காங்கரஸ் துரோகம் செய்தவர்களுக்கு, நாணையமில்லாதவர்களுக்கு 3, 4 பேர்களுக்கு மந்திரி வேலை கொடுக்கவில்லையா? அப்படி யிருக்கும்போது ஆச்சாரியாரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவனான எனக்கு ஏன் கொடுக்கமாட்டார்? ஆதலால் நான் வெறுப்பாலோ, விரோதத்தாலோ பேசவில்லை.

இன்று நாட்டிலுள்ளவர்கள் பாமரர்கள் அவர்களிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லி ஏமாற்றலாம் என்ற தைரியத்துடனேயே காங்கரஸ்காரர்கள் ஒவ்வொரு காரியமும் செய்து வருகிறார்கள்.

காங்கரஸ்காரர்கள் இன்று பதவி ஏற்று சுமார் 300 நாட்களுக்கு மேலாக ஆகப்போகிறது.

தேர்தல் வாக்கு எங்கே?

இதுவரை தேர்தலில் வாக்குக் கொடுத்த எந்தக் காரியம் செய்திருக்கிறார்கள்.

அவர்கள் வந்ததிலிருந்து இந்நாட்டில் மக்களை ஏமாற்றி சோம்பேறித்தனமாக வாழ்க்கை நடத்தி வந்த ஒரு கூட்டத்தார்தான் இன்று உயர்ந்திருக்கிறார்கள்.

உத்தியோகங்களை ஏகபோகமாய் அனுபவிக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் நமது மாகாண முதல் மந்திரியார் தனது முழு நேரத்தையும், சகல சக்திகளையும் செலவழித்து வருகிறார். இதைத்தான் நான் இன்று பாமர மக்கள் முன் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறி வருகிறேன்.

இன்று முதன் மந்திரியாக இருக்கும் நண்பர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், இன்று நமது கூட்டத்திற்குத் தலைமை வகித்திருக்கும் நமது தலைவரவர்களும், மற்றவர்களும் இடைக்கால மந்திரியாக இருந்த காலத்தில் மிகவும் இழிவாகவும், கேவலமாகவும் அவர் வாயால் வரத்தகாத வார்த்தைகளையும் பேசினார்.

அதாவது ஜனங்கள் "குதிரைகளைத் தேர்ந்தெடுத்தனுப்பினார்கள். கவர்னர் கழுதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்" என்று கூறினார். ஆச்சாரியாருக்கு இருந்த ஆத்திரம் அவரை அப்படிக் கூறச் செய்தது.

ஆச்சாரி மந்திரிசபையார் குதிரைகளேயானாலும் அவை சர்க்கஸ்காரன் குதிரைகளாக கவர்னர் சவுக்குக்கு நடுங்கிக் கொண்டு வளையத்துக்குள்ளாகவே ஓடுகின்றன. அவைகளைவிட சுதந்திர "கழுதைகள்" மேலென்றே சொல்லுவேன்.

இந்த லக்ஷணத்தில் உள்ள இவர்கள் (காங்கரஸ்காரர்கள்) முஸ்லிம்கள் சபையாகிய முஸ்லிம் லீகையும் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கு வேலை செய்யும் ஜஸ்டிஸ் கட்சியையும் வகுப்புவாத சபை என்று கூறுகிறார்கள். அவைகளை ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

வகுப்புவாதிகள் யார்?

நாங்கள் காங்கரஸ்காரர்களைவிட எந்த விதத்தில் வகுப்பு வாதிகள்? எந்த விதத்தில் தேசத் துரோகிகள்?

இன்று காங்கரஸ்காரர்கள் காங்கரஸ் கொள்கை பூரண சுயேச்சை என்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். ஆனால் வெள்ளைக்காரர்கள் கேட்டால் அதற்கு தத்துவார்த்தம் வேறு கூறுகிறார்கள்.

முஸ்லிம் லீக் கொள்கையும் பூரண விடுதலையேயாகும். ஆனால் இது தத்துவார்த்தமில்லாத பரிசுத்தமான பூரண சுதந்திரமாகும்.

ஆகவே காங்கரசைவிட லீக் கொள்கை எந்த விதத்தில் குறைவானது என்று கேட்கிறேன்? ஜஸ்டிஸ் கட்சி கொள்கையும் எந்த விதத்திலும் காங்கரஸ் கொள்கையை விடக் குறைந்ததல்ல.

காங்கரஸ் மக்களுக்குப் புரியாதபடி சுயராஜ்யம் என்று சொல்லிக் கொண்டு ஒரு வகுப்பாரே ஏகபோகமாக அனுபவிக்க ஏற்பாடு செய்தால் யார்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? முஸ்லிம் லீக் தலைவர் தோழர் ஜின்னா அவர்கள் காங்கரஸ்காரர்களிடம் கேட்கும் பாதுகாப்புகளைப் பற்றித் தப்புப் பிரசாரம் செய்து வருகிறார்கள். பாதுகாப்பு கேட்பதால் என்ன தப்பு?

ஓர் உதாரணம்

ஒருவர் என்னை அவர் வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். நான் அவரிடம் ஐயா! உங்களுடன் வருவதற்கு எனக்கு பயமாகவிருக்கிறது. நான் யாரையாவது எனக்குத் துணைக்கு அழைத்து வருகிறேன், அல்லது கையில் தக்க ஆயுதமாவது கொண்டு வருகிறேன். இன்றேல் ஒரு சிறு தடியாவது கொண்டு வருகிறேன் என்று கூறினால் இதிலென்ன தப்பு இருக்கிறது.

உன்னுடன் காங்கரசில் வருவதற்குப் பயப்படுகிறோம். நீ பலரை ஏமாற்றுகிறாய், அதனால் பாதுகாப்பு கேட்டால் வகுப்பு வாதமா? நான் சொல்லுகிறேன் காங்கரஸ் ஆரம்பமே வகுப்பு வாதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஆரம்பிக்கப்பட்டது.

உத்தியோக வேட்டை காரணமாகத்தான் அது ஆரம்பிக்கப்பட்டது. நான் சொல்லுவது பொய்யென்று தோன்றினால் காங்கரஸ் சரித்திரத்தை வாங்கிப்படித்துப் பாருங்கள்.

ராஜ விஸ்வாசமும் உத்தியோக விண்ணப்பமுமே காங்கரஸ் கொள்கையாக இருந்தது.

1920 வரை காங்கரஸ்

காங்கரசானது 1920ம் வருஷம் வரை மகாநாடு கூடுகின்ற ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மகாநாடும் முதல் தீர்மானமாக ராஜ விஸ்வாசமும், இரண்டாவதாக வெள்ளைக்காரர்களைப் புகழ்வதும், மூன்றாவதாக இந்தியர்களுக்கு அந்த உத்தியோகம் வேண்டும், இந்த உத்தியோகம் வேண்டுமென்ற தீர்மானம் செய்வதும், நான்காவதாக வகுப்புகள் ஒற்றுமையைப் பற்றியும் தீர்மானங்கள் நிறைவேற்றுவார்கள்.

வகுப்புகள் ஒற்றுமை தீர்மானம் எதற்கென்றால் ஒரே வகுப்பார் உத்தியோகங்களை கொள்ளையடிப்பதை மற்ற வகுப்பார் கண்டு பொறாமைப்படக்கூடாது என்பதற்கே. நான் கூறுவது பொய்யென்று தோன்றினால் காங்கரஸ் சரித்திரத்தை வாங்கிப் படியுங்கள். இதையெல்லாம் ஏமாற்றுவதற்காக உங்கள் முன் கூற வரவில்லை.

பொதுவாகக் கூறினால் காங்கரசானது வெள்ளைக்காரனும், மேல் ஜாதிக்காரனும் சேர்ந்து பெற்ற பிள்ளை என்றே சொல்லலாம்.

இன்னும் அதைப்பற்றி சில உதாரணங்கள் தருகிறேன். இதோ கோவையில் கூடிய ஒரு காங்கரஸ் கூட்டத்திலும் முதல் தீர்மானமாக ராஜ விஸ்வாசப் பிரமானத் தீர்மானம் நிறைவேறியது.

சென்னையில் தோழர் போஸ் அவர்கள் தலைமையில் ஒரு காங்கரஸ் மகாநாடு கூடியது. அந்த மகாநாட்டில் காலையிலேயே ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்யப்பட்டு மற்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தது.

மத்தியானம் சென்னை கவர்னர் அந்த மகாநாட்டிற்கு வந்தார். தோழர் பானர்ஜி ஒரே அடியாகக் குதித்து கவர்னரை எதிர்கொண்டு அழைத்து வந்தார். காலையில் நிறைவேற்றிய ராஜ விஸ்வாசத் தீர்மானத்தை மீண்டும் கவர்னர் முன் நிறைவேற்றினார். அதோடு மட்டுமல்ல கவர்னரையும் வெள்ளைக்காரரையும் வானமளாவப் புகழ்ந்தார்.

காங்கரஸ் மகாநாடுகளில் தீர்மானம் நிறைவேற வேண்டியதுதான் பாக்கி, உடனே பெரிய பெரிய உத்தியோகம் பெருகும். அது ஒரு ஜாதிக்காரர்கள் வயிற்றிலேயே போய் விழும்.

இதைக் கண்ட மற்ற வகுப்பார்களும் அந்த உத்தியோகங்களில் தங்களுக்குப் பங்கு கேட்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது தான் காங்கரசானது காங்கரசில் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாத முஸ்லிம்களிலும் மற்றவர்களிலும் கூலிகளும் காலிகளும் என்ன செய்தாவது தங்கள் சுயநலம் பெருக்குவதே பிரதானமென்கின்ற சாதாரண மக்களும் தவிர வேறு எந்த யோக்கியனும் சுயமரியாதைக்காரனும் இருப்பதற்கு இல்லாமலும் வருவதற்கு இல்லாமலும் செய்து கொண்டார்கள்.

தொடர்ச்சி 29.05.1938 குடி அரசு "காங்கரஸ் பித்தலாட்டம்."

குறிப்பு: 12.05.1938 இல் சேலம் மாவட்ட வேலூரிலும், 14.05.1938 இல் கோயம்புத்தூரிலும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் ஆற்றிய உரை.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 22.05.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: