தோழர்களே!

இன்னும் இரண்டொரு முக்கிய விஷயங்களைக் கூறிவிட்டு முடித்துக் கொள்ளுகிறேன்.

காங்கரஸ்காரர்கள் இன்று சர்க்காரில், சம்பளச் செலவு அதிகம், அதிகம் என்று கூறுகிறார்கள். இது யாரால் அதிகமாகியது என்று கவனியுங்கள்.

இந்த காங்கரஸ் ஏற்படாததற்கு முன்பு முன்சீப்பிற்கு 200 ரூபாய்தான் சம்பளம். இப்பொழுது 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.

முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு 70 ரூபாய் சம்பளம் கொடுத்து வந்தார்கள். இப்போது 150 ரூபாயில் ஆரம்பிக்கிறார்கள். இதுபோல்தான் எல்லா உத்தியோகஸ்தர்களுக்கும் சம்பளம் உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் வரி கொடுப்போர் பார்ப்பனரல்லாதார், உத்தியோகங்கள் பார்ப்போர் பார்ப்பனர்கள். ஆதலால் பணத்தின் அருமை அவர்களுக்குத் தெரியவில்லை கொள்ளையடித்தவரை லாபமென்று கருதினார்கள். காங்கரஸ் எல்லா உத்தியோகங்களும் இந்தியர்களுக்கு வேண்டும் என்றும் வெள்ளைக்காரர்களுக்குக் கொடுக்கும் சம்பளமே இந்தியர்களுக்கும் வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றியதுதான் காரணம்.

காங்கரஸ் சாதித்ததென்ன?

இதுதான் போகட்டும். காங்கரஸ் தேர்தலில் நின்று பாமர மக்களை ஏமாற்றி மங்களகரமான மஞ்சள் பெட்டியென்றும், மஞ்சள் பெண்கள் தாலியின் நிறமென்றும் அனைவரும் குளித்து முழுகிவிட்டுத் தேங்காய் உடைத்து ஓட்டுப்போட வேண்டுமென்றும் புராணபிரசங்கம் செய்து ஓட்டுக் கேட்டார்கள். அதை நம்பி பலர் ஓட்டுப் போட்டார்கள். அந்த வெற்றியினால் காங்கரஸ் என்ன செய்ய முடிந்தது? ஒன்றுமில்லை முன் காங்கரஸ் தலைவரான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் ஏகாதிபத்தியத்தை ஒழிக்கப் போகிறோம், வெள்ளை அறிக்கையை கிழிக்கப் போகிறோம், எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று சவடாலடித்தார். பட்டினி ஒழியுது பஞ்சம் பறக்குது என்று கத்தினார். ஏகாதிபத்தியம் ஒழிந்ததா? வெள்ளை அறிக்கை கிழிக்கப்பட்டதா? பஞ்சம் மறைந்ததா? பட்டினி தீர்ந்ததா? 144-வது சட்டம் ஒழிப்பதாகக் கூறினார் அது ஒழிந்ததா? ஒன்றும் இல்லை. எல்லாம் பித்தலாட்டமாய்த் தானே முடிந்தது?

வைஸ்ராய் வெடிகுண்டு

அது போகட்டும். பொது ஜனங்கள் தேர்தலில் பெருவாரியான ஓட்டுகளைக் கொடுத்து இவர்களை அளவு கடந்த மெஜாரட்டியுடன் சட்ட சபைக்கனுப்பினார்கள். உடனே அவர்கள் சர்க்காருக்கு நிபந்தனை கொடுத்தார்களே ஒழிய பொது ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிக் கவலைப்படவே கிடையாது. அதுவும் "நாங்கள் உங்கள் சட்டத்திற்கு அடங்கி நடக்கிறோம். எங்களுக்கு மந்திரி சபையில் இடம் கொடுங்கள்" என்று சர்க்காரை வலிய கெஞ்சினார்கள். இதற்கு கவர்னர்கள் "அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நீங்கள் என்னமோ செய்து கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார்கள். அதன் மீது வெட்கத்தால் சிறிது பிகுவு செய்தார்கள். உடனே கவர்னர்கள் வேறு மந்திரிகளை நியமித்து ஒழுங்காக வேலை நடக்கச் செய்துவிட்டார்கள். அதன் மீது காங்கரஸ்காரர்கள் தங்களது அதிகப் பிரசங்கத்துக்கு வருந்தி மந்திரி வேலைபெற ஏதாவது சாக்குத்தேட கஜகரணம் போட்டுப் பார்த்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. இதற்குள் வைஸ்ராய் பிரபு மரியாதையாய் உங்கள் வால்களை அடக்கிக்கொண்டு ஒழுங்காக நடக்கிறீர்களா? அல்லது நீங்கள் என்றென்றும் தலையெடுக்க முடியாமல் அழுத்தப்பட வேண்டுமா? என்று ஒரு வெடிகுண்டு போட்டார்.

காங்கரஸ் தலைவர்கள் சரணாகதி

காங்கரஸ்காரர்கள் நடுங்கிப்போய் சரணாகதி அடைந்தார்கள். இந்த மத்தியில் வைஸ்ராய் வெடிகுண்டைப் பற்றி காங்கரஸ் பத்திரிகைகள் வைஸ்ராயைக் கண்டிக்க ஆரம்பித்தன. ஆனால் காங்கரஸ் தலைவர்கள் வைசிராயைக் கண்டிக்க வேண்டாம் என்றும் வைசிராய் நல்ல வாக்குறுதி கொடுத்துவிட்டார் என்றும் எழுதும்படி செய்து கொண்டார்கள். மற்றும் காங்கரஸ்காரர்கள் வெற்றி பெற்ற உடனே அப்போது காங்கரஸ் தலைவராகவிருந்த பண்டித ஜவஹர்லால்நேரு அவர்களை சட்டசபைக்குள் போய் சத்தியமும் ராஜ விஸ்வாசமும் செய்ய வேண்டுமே அதற்கு என்ன செய்வது என்று கேட்டார்கள். அதற்கு பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் "நீங்கள் மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியில் பொய் சத்தியம் செய்து விடுங்கள். அதனால் ஒன்றும் குற்றமில்லை" என்று கூறினார். இது யாரை ஏமாற்ற? சர்க்காருக்கு பொய் சத்தியம் செய்தார்களா? ஜனங்களுக்கு பொய் சத்தியம் செய்தார்களா? என்று இன்று அவர்களுடைய நடத்தையில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

உதாரணம் வேண்டுமா?

காங்கரஸ்காரர்கள் இன்று வெள்ளைக்காரர்கள் சொல்வதற்கெல்லாம் தாளம் போடும் நிலைமையில் வந்து அவர்களை சதா புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

நமது மாகாண மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தேர்தலுக்கு முன், வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் சம்பளம் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. நமது இந்தியர்களுக்குச் சம்பளம் குறைச்சலாக கொடுக்கப்படுகிறது. நாங்கள் சட்டசபைக்குப் போய் இந்தக் கொடுமையை ஒழிக்கப் போகிறோம். எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று சொன்னார். அதன்படி நாம் ஓட்டுக் கொடுத்தோம். இன்று என்ன சொல்லுகிறார்? வெள்ளைக்காரர்களுக்கு சம்பளம் குறைக்க முடியாதாம். அவர்கள் பங்களாக்களில் வைக்கக் கூடிய ரோஜாச் செடிகளை போன்றவர்களாம். இந்தியர்கள் காட்டில் இருக்கக்கூடிய பனைமரம் போன்றவர்களாம். இவர்களுக்குச் சம்பளம் குறைக்கலாம் என்று சிறிதும் வெட்கமில்லாமல் தைரியமாய் கூறுகிறார். முன் நீதி நிர்வாக இலாக்கா பிரிக்கப்பட வேண்டுமென்றால் இன்று அதைப் பிரித்தால் சர்க்கார் சரியாய் நடக்காது என்கிறார். முன் சி.ஐ.டி. கூடாது என்கிறார். இப்போது சி.ஐ.டி. அவசியம் வேண்டுமென்று சொல்லிவிட்டார் வகுப்புவாரி உத்தியோக உத்தரவை மாற்றுவதில்லை என்றார். இப்போது திரைமறைவில் அவ்வுத்தரவை கொலை செய்கிறார். கேட்டால் "நான் என் இஷ்டப்படிதான் நடப்பேன். உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் இனிமேல் 5 வருஷம் பொறுத்து உங்களிடம் வருகையில் ஓட்டுக் கொடுக்காதீர்கள்" என்று ஆணவமாகவும், அகங்காரமாகவும் பதில் கூறுகிறார்.

யார் வகுப்புவாதிகள்?

கனம் ராஜகோபாலாச்சாரியார் ஜஸ்டிஸ் கட்சியையும், முஸ்லிம் லீக்கையும் வகுப்புவாதக் கட்சி என்று சொல்லி அவைகளை ஒழிக்க வேண்டும் என்கிறாரே, இன்று அவரது மந்திரி சபையில் வகுப்புவாதமில்லையா என்று பாருங்கள். இன்று பத்து மந்திரிகளில் அவர்கள் விகிதாச்சாரத்துக்கு மேல் ஒன்றுக்கு ஐந்து வீதம் மந்திரிகளாக வந்திருக்கிறார்களே. இது வகுப்பு வாதமில்லையா?

அதுமட்டுமல்ல. கீழ் சபைக்கு இரண்டு தலைவர்களும் பார்ப்பனர்களாகவே நியமித்துக் கொண்டார்களே அது வகுப்பு வாதமில்லையா? மேல்சபைத் தலைவருக்கும் பார்ப்பனரையே நியமித்துக் கொண்டார்களே அது வகுப்புவாதமல்லவா? பிரதம மந்திரியும், பிரதம காரியதரிசியும் பார்ப்பனர்களாகவே ஆக்கிக் கொண்டார்களே அது வகுப்புவாதமல்லவா? நம் நாடு மாத்திரமல்லாமல் ஆறு மாகாண முதல் மந்திரிகளும் பார்ப்பனர்களாகவே அமர்ந்து கொண்டார்களே! அது வகுப்புவாதமல்லவா? திவான்பகதூர் பட்டம் விட்ட பெரிய படிப்பாளியும் அனுபவமும் உள்ள ராமலிங்க செட்டியாரை மூலையில் உட்கார வைத்துவிட்டு ஒரு சாதாரண படிப்பாளியும் அனுபவமுமில்லாத ஒரு பார்ப்பனர் மேல்சபைக்கு தலைவராக்கப்பட்டு விட்டாரே! அது வகுப்புவாதமல்லவா? திருச்சி தேவரை தெருவில் திண்டாட விட்டுவிட்டு காங்கரசுக்குத் துரோகம் செய்து காங்கரசால் தண்டிக்கப்பட்ட ஒரு பார்ப்பனர் மந்திரியாக்கப் பட்டாரே அது வகுப்புவாதமல்லவா? 26 மிருக வைத்திய உத்தியோகத்துக்கு 19 உத்தியோகம் பார்ப்பனருக்குக் கொடுத்தால் அது வகுப்புவாதமல்லவா? கார்ப்பரேஷனில் 10 எட்மாஸ்டர் வேலை காலியாக்கப்பட்டதற்கு 10க்கும் பார்ப்பனர்களையே நியமித்தது வகுப்புவாதமில்லையா? கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி வேலைக்கு தகுதியான ஒரு பார்ப்பனரல்லாத தோழர் சிவசைலம் பிள்ளை எம்.ஏ.எல்.டி.யை கார்ப்பரேஷன் கவுன்சிலும் காங்கரஸ் கட்சியும் தெரிந்தெடுத்தும் அதைத் தள்ளிவிட்டு குறைந்த யோக்கியதையுடைய ஒரு கிழப் பார்ப்பனரை அதிகச் சம்பளத்தில் நியமித்தது வகுப்புவாதமல்லவா? இன்னும் பார்ப்பனரல்லாதார் உத்தியோகங்கள் காலியாவதற்கெல்லாம் பார்ப்பனர்களைப் புகுத்துவதும் தப்பான வழியில் பார்ப்பனரல்லாத பெரிய உத்தியோகஸ்தர்களை ஒழிக்க முயற்சிப்பதும் வகுப்புவாதமல்லவா? மற்றும் காங்கரசிலும் சென்னை போன்ற இடங்களிலேயே சாமி வெங்கிடாசலம் செட்டியார், விநாயக முதலியார், லட்சுமணசாமி முதலியார், சக்கரை செட்டியார், ஆதி கேசவலு நாயக்கர் முதலிய பார்ப்பனரல்லாதார் மீது மாத்திரம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தண்டிப்பதும், காங்கரசை விட்டு விரட்டுவதும் பார்ப்பனர்களாயிருக்கிறவர்கள் எவ்வளவு அயோக்கியத்தனமும், அக்கிரமும் செய்தாலும் அதைப்பற்றி சற்றும் கவனியாமல் இருப்பது வகுப்புவாதமல்லவா? இவைகள் எல்லாமுமா அகஸ்மாத்தாய் ஏற்பட்டவை என்று கேட்கிறேன்?

பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால்

பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் கிடக்கும் சாமான்கள்தான் வீட்டிற்குள் போகுமே தவிர, வீட்டிற்குள் இருக்கும் சாமான்கள் ஒன்றுகூட வெளியில் எறியப்படமாட்டா என்பது போல் எல்லா அகஸ்மாத்தும் பார்ப்பனர்களுக்கேதான் அனுகூலமாயிருப்பானேன்?

20 வருஷத்திற்கு முன்பாக நமது மாகாணம் இரண்டே மந்திரிகளால் நிர்வாகம் செய்யப்பட்டது. காங்கரசின் உத்தியோக வேட்டையில் இன்று பத்து மந்திரிகள் ஆள வேண்டியதாகிவிட்டது. இவர்களுக்கு 10 காரியதரிசிகள் வேண்டியதாகிவிட்டது. இவர்களிடம் சர்க்கார் வேலைகளை ஒப்புவிக்க வேண்டுமாம். சர்க்கார் நடவடிக்கை கழுதை புரண்ட களமாகி குட்டிச்சுவர் ஆவதற்கு இதைவிட வேறு காரியம் என்ன செய்ய வேண்டுமா? என்று பாருங்கள்.

காங்கரஸ் மந்திரிகள் காரியதரிசிகள் மெம்பர்கள் யோக்கியதை உங்களுக்குத் தெரியாத இப்போதே சேலத்தில் ராத்திரி சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒரு அன்னக்காவடி எம்.எல்.ஏ. "கலெக்டரை மாற்றி விடுகிறேன் பார், போலீஸ் சூப்ரண்டெண்டைத் தொலைத்து விடுகிறேன் பார், எனது பியூனை நிறுத்தினாலும் நீங்கள் ஓட்டுப் போட்டுத்தான் ஆக வேண்டும்" என்று மேடைகளில் வீரம் பேசுகிறார். போலீசைக் கண்டித்துத் தீர்மானம் போடுகிறார். இனி இவர்கள் தோழர்களான காரியதரிசிகளிடம் சர்க்கார் பைல் (ஊடிடூஞுண்) ரிக்கார்டுகளைக் கொடுத்து விட்டால் என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டும்.

சர்க்கார் செலவில் தேர்தல் பிரசாரம்

இன்று முனிசிபல் தேர்தல் பிரசாரத்துக்கு மந்திரிகளும் மெம்பர்களும் சர்க்கார் செலவில் சென்று தைரியமாய் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள்.

வெய்யில் காலத்துக்கு மலைக்குப் போய் மலைவாசம் செய்யக்கூடாது என்று மற்ற மந்திரிகளைக் குறை கூறினார்கள். இவர்கள் பதவிக்கு வந்ததும் இவர்கள் கீழ் உள்ள வெள்ளைக்காரர்களுக்கு மலைக்குப் போகலாம் என்றார்கள். இப்போது மந்திரிகளே திருட்டுத்தனமாய் குடைக்கானலிலும், நீலகிரியிலும் உல்லாசமாய்த் திரிகிறார்கள். இவர்கள் காரியதரிசிகளுக்குக் கூட மலைவாசம் வேண்டியதாக இருக்கிறது. இவர்களது நாணயமும், யோக்கியமும் என்ன என்று பாருங்கள்.

தோழர் ரத்தினசபாபதி முதலியார் அவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு ஒரு மந்திரி நீலகிரியில் இருந்து வந்து போனதற்கு "இதெல்லாம் யாருடைய செலவு" என்று சத்தியமூர்த்தியார் கேட்டார். இப்போது இந்த மந்திரிகளில் சிலர் எழவுக்குப் போகவும், தாசி வீட்டுக்குப் போகவும் வரிப்பணத்தில் போகிறார்களே, கேள்வி இல்லையா? என்று கேட்கின்றேன்.

கும்பகோணத்தில் ஒரு ஆளுக்குக் கையில் அடிபட்டது என்பதற்காக பிரதம மந்திரி ஜில்லா டாக்டர் (ஈ.M.O)வுக்கு தந்தி கொடுத்து வைத்தியம் பார்க்கச் சொன்னாரே. இது என்ன யோக்கியதை? அப்படியானால் ஈ.M.O.க்கள் சரியாய் வைத்தியம் பார்ப்பதில்லை என்று அருத்தமா?. அல்லது அந்த நபர் ஆச்சாரியாருக்கு வேண்டியவர் என்பதற்காக ஈ.M.O.வைத்தியம் பார்க்க வேண்டுமா? பார்ப்பன ஆட்சி எவ்வளவு அந்தர தர்பார் என்று காட்டுவதற்காக இதை சொல்லுகிறேனே தவிர எனக்கு இது விஷயத்தில் பொறாமை ஒன்றும் இல்லை.

தோழர்களே!

தேசீயக் கடனை ஒழிக்காமல் மேலும் கடன் வாங்கலாமா?

இனி ஒரு பித்தலாட்டத்தைப் பாருங்கள். காங்கரஸ்காரர்கள் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்கும்போது இதற்கு முன் இருந்த சர்க்கார் (ஜஸ்டிஸ் கட்சி உள்பட) நமது தேசத்தின் பேரால் கடன் வாங்கி தேசத்தில் உள்ளவர்களைக் கஷ்டமடையச் செய்து வருவதால் தாங்கள் பதவி ஏற்றவுடன் தேசீயக் கடன்களை அடியோடு செல்லுபடி அற்றதாக்கி, ஒழித்துவிடப் போவதாகக் கூறினார்கள். ஆனால் இப்போது என்ன செய்தார்கள் என்று பாருங்கள். பதவிக்கு வந்ததும் நமது தேசத்தின் மீது முன் இருந்த கடனுக்கும் சேர்த்து கையெழுத்துப் போட்டு நமது மாகாணத்திற்கு மாத்திரம் 3லி கோடி ரூபாய் புதிய கடன் வாங்கி விட்டார்கள். அது வாங்கி என்ன செய்தார்கள்? வாய்க்கால் வெட்டினார்களா? ரோட்டுப் போட்டார்களா? அணை கட்டினார்களா? ஏதாவது புதுக்காரியம் செய்தார்களா? 10 மந்திரி, 10 காரியதரிசி நியமிக்கவும், கார்கள் வாங்கவும், சதா ஊர் சுற்றவும், டாம்பீகமாக மைனர் விளையாட்டுகள் விளையாடவுமான காரியங்களுக்குத்தான் செலவு செய்தார்கள் என்பதோடு ஏற்கனவே இருக்கும் பள்ளிக் கூடங்களை மூடுகிறார்கள், ஆஸ்பத்திரி டாக்டர்களுக்குச் சம்பளமில்லை என்கிறார்கள், கிராமங்களில் கிணறு வெட்ட பணமில்லை என்கிறார்கள். அப்படியானால் மூன்றரை கோடி கடன் வாங்கியது எதற்காக என்று பாருங்கள். முன்பிருந்த மந்திரிகள் வரவு செலவுகளைச் சரிப்படுத்தி வரிகளையும் குறைத்து கடனில்லாமல் சர்க்கார் ஒழுங்காக நடக்கும்படி செய்து ஆட்சி செலுத்தி வந்தார்கள். இப்போது இவர்களோ கடன் மேல் கடன் வாங்கி தாம் தூம் செய்து விட்டு அதன் பொறுப்பை நமது மக்கள் தலையில் சுமத்துகிறார்கள்.

ராஜிநாமாப் புரளி எதற்கு?

யாராவது கேட்டால் ராஜீநாமா ஜேப்பில் இருக்கிறது என்கிறார்கள். இதன் கருத்து என்ன? கடன் வாங்கிக் கண்டபடி செலவழித்துவிட்டு ஓடிப்போனால் எவனோ வந்து மக்கள் மீது அதிக வரி போட்டு கடனைக் கட்டட்டும் என்று கருதி ஊரான் தலையில் கடன்பளுவை சுமத்தத்தானே அல்லாமல் வேறு என்ன? ஒரு ஜில்லாவில் செய்த மதுவிலக்குக்காக எத்தனை பள்ளிக்கூட கிராண்டு, எத்தனை ரோடு, பாலம் கிராண்டு, எத்தனை கிராம குடிதண்ணீர் கிராண்டு ஆகியவைகளையெல்லாம் நிறுத்தி விட்டார்கள் என்று பாருங்கள். இன்னும் செலவைக் குறைக்க ஆஸ்பத்திரிகளில் இருக்கும் டாக்டர்களை எடுத்துவிடுகிறார்களாம். இது என்ன அக்கிரமம். மாட்டுக்கும், எருமைக்கும், கழுதைக்கும், நாய்க்கும் வைத்தியம் பார்க்கும் டாக்டர்களுக்கு சம்பளமாம். ஆனால் மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்களுக்கு சம்பளம் இல்லையாம். தோழர்களே இந்த மந்திரிகள் நாய், கழுதை, குதிரை, மாடு, எருமை உயிர்களைவிட மனிதர் உயிர் கேவலமானதென்று இவர்கள் கருதுகிறார்களா அல்லவாவென்று கேட்கிறேன். மந்திரிகளுக்கு நோவு வந்தால் டாக்டர் குருசாமி காத்திருக்கிறார். நமக்கு நோவு வந்தால் ஒரு டாக்டரிடம் போக வேண்டுமானால் நாம் கொடுக்கும் வரி வேறு எதற்குப் பயன்படுகிறது என்று கேட்கிறேன். சம்பளமில்லாத டாக்டர்கள் யோக்கியமாய் வைத்தியம் பார்ப்பார்களா?

நோயாளிகளைத் தமது வீட்டிற்கு வரும்படி சொல்லிப் பணம் சம்பாதிக்க வழியாகுமே தவிர வேறு நன்மை ஏற்படாது.

யாரோ பைத்தியக்காரர்கள், மஞ்சள் பெட்டியை நிரப்பிய பாவத்திற்காக நமது கல்வி, வைத்தியம், சுகாதாரம், போக்குவரவு வசதி இவ்வளவும் நாசமாகப் போய் நாம் மிருகங்களிலும் கேடாக வாழ்வதா என்று உங்களைக் கேட்கிறேன்.

மற்றும் இந்தப் பார்ப்பனர்கள் பதவி பெற்ற ஆணவத்தால் நம்மவர்களை எப்படி மதித்திருக்கிறார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

பார்ப்பன ஆட்சியில் நாம் கண்ட பலன்

இரட்டை ஆட்சியில் இலாகாக்களை ஒதுக்கிக் கொடுத்ததில் "சர்க்கார் இலாகாக்களை பொறுப்புள்ள அதிகாரங்களை தாங்கள் வைத்துக் கொண்டு ஜனப்பிரதிநிதிகளுக்கு சொத்தை இலாக்காக்கள் கொடுத்தார்கள்" என்று சொன்னார்கள். மற்றும் "தகுதி உள்ளவர்களைத் தள்ளிவிட்டுச் சர்க்கார் அடிமைகளுக்கும் சொத்தைகளுக்கும் பதவிகள் கொடுத்தார்கள்" என்று சொன்னார்கள்.

இவர்கள் கைக்கு அதிகாரம் வந்தவுடன் இவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள். பொறுப்புள்ள இலாகாக்களை அதாவது வெள்ளையர்கள் பார்த்துவந்த இலாகாக்களைப் பார்ப்பனர்கள் எடுத்துக் கொண்டார்கள். சொத்தைகளை தமிழர்களுக்குக் கொடுத்தார்கள். தோழர் ராமநாதன் அவர்களுக்கு விளம்பர வேலை கொடுத்து மாட்டி வண்டி ஓட்டச் சொன்னார்கள். தோழர் சுப்பராயன் அவர்களுக்கு கல்வி இலாகா கொடுத்து ஹிந்தியைப் புகுத்த நிர்ப்பந்தப்படுத்தியதுடன் யாராவது தட்டிப் பேசினால் ராணுவத்தையும், போலீசையும் கொண்டு அடக்கச் சொன்னார்கள்.

தோழர் முனிசாமி பிள்ளைக்கு விவசாயமும், கலால் இலாகாவும் கொடுத்து அதிலும் காட்டிய இடத்தில் படித்துக்கூடப் பார்க்காமல் கையெழுத்து போடுகிற உரிமை மாத்திரம் கொடுத்தார்கள். மற்றபடி தமிழர்களுக்கு பார்ப்பனர் கொடுத்த இலாகா என்ன? என்று பாருங்கள்.

இவர்கள் பொறுக்கியெடுத்த ஆள்களின் யோக்கியதைதான் என்ன? கடைந்தெடுத்த அடிமைகளாகவும், பதவிக்கும், சம்பளத்துக்கும் சற்றும் தயங்காமல் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருப்பவர்களாகவும் பார்த்து பதவி கொடுத்தார்களே ஒழிய மனிதத் தன்மை உடையவர்களைச் சற்றாவது கவனித்தார்களா? கவனிக்காவிட்டாலும் சும்மாவாவது விட்டார்களா?

சமர்த்தர்கள் கதி

உதாரணமாகச் சில விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதே கோவை ஜில்லாவில் தோழர் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார், டி.எ. ராமலிங்கம் செட்டியார், வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர், ஆர்.கே. ஷண்முகம் இவர்கள் லேசானவர்களா? 10, 20 வருஷங்களுக்கு முன்பிருந்து பொதுநல சேவகம் செய்பவர்கள். அரசியலின் பேரால் வயிறு வளர்க்க வேண்டிய அவசியமில்லாத செல்வவான்கள். ஆங்கில ஞானமுடையவர்கள். நிர்வாக அனுபவமுடையவர்கள். சொந்த வாழ்க்கையில் கண்ணியமான நடத்தைக்காரர்கள். இப்படிப்பட்ட இவர்கள் கதி என்ன ஆயிற்று? காங்கரஸ்காரர்கள் தோழர் சி.எஸ்.ஆர். அவர்களை ஏமாற்றி வஞ்சித்து குற்றம் கூறிவிட்டார்கள். 20 வருஷ காலமாக தனது சொந்த முதல் லக்ஷக்கணக்கில் செலவழித்து பூரா நேரமும் பொதுநலத்துக்கு பாடுபட்ட அவர்கள் கதி இப்படியாயிற்று. தோழர் டி.எ. ராமலிங்கம் செட்டியார் அவர்களும் 30 வருஷம் பொதுநல சேவை செய்து கடைசியில் திவான் பகதூர் பட்டத்தைவிட்டு மூலையில் உட்கார வேண்டியதாயிற்று. தோழர் ஆர்.கே. ஷண்முகம் அவர்களது சாமர்த்தியம் புத்தி எல்லாம் வேறு நாட்டுக்கு பயன்படும்படியாக ஆகிவிட்டதே தவிர, நமது நாட்டார் அனுபவிக்க முடியவில்லை. இந்த ஜில்லா பெருங்குடி மக்கள் கூட்டத்தில் முக்கியவரான தோழர் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களும் ஏனென்று கேட்பதற்கு ஆளில்லாமல் மற்றபடி கோவை ஜில்லாவுக்கு தலைவர்கள் தோழர்கள் சுப்ரி, சுப்பையா, மகாலிங்கய்யர் மற்றும் யாரோ ஒரு அய்யர் இவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு ஜே போட்டு பின்பற்ற வேண்டிய தலையெழுத்து தோழர்கள் டி.எ. ராமலிங்கச் செட்டியாருக்கும், வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களுக்கும் இருக்கிறதென்றால், காங்கரசின் யோக்கியதைக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.

ஜில்லாத் தலைவர்கள் யார்?

மற்றும் ஒவ்வொரு ஜில்லாவையும் பாருங்கள். சென்னைக்கு தலைவர் தோழர் சத்தியமூர்த்தியார், வேலூர் ஜில்லாவுக்கு தலைவர் தோழர் குப்புசாமி, உபயதுல்லா, திருவண்ணாமலை ஜில்லாவுக்கு தலைவர் தோழர் அண்ணாமலை, ராமனாதபுரம் ஜில்லாவுக்கு தலைவர் தோழர்கள் காமராஜ நாடார், முத்துசாமி; மதுரைக்கு தலைவர் தோழர் மட்டபாறை அய்யர், திருநெல்வேலிக்குத் தலைவர் யாரோ ஒரு அய்யர். திருச்சிக்கு தலைவர் ஆலாசியம் அய்யர், தஞ்சைக்கு தலைவர் தோழர் பூவராகம்; சேலத்துக்கு தலைவர் சுப்பிரமணியம்; தென் ஆற்காட்டுக்கு தலைவர் நைனியப்பன். இப்படியாகத்தானே இருந்து வருகிறது. இது தமிழ் மக்களுடைய மானத்துக்கு மரியாதை அளிக்கக் கூடியதா என்று கேட்கிறேன்.

பார்ப்பன ஆட்சியில் நாணயமாவதுண்டா?

இன்று காங்கரஸ் இப்படித் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி மூலையில் வைத்துவிட்டு செயலாற்றுவதிலாவது நாணயமாயிருக்கிறதா வென்று பாருங்கள். சட்டசபையிலுள்ள மெம்பர்களுக்கு மாதம் 75 ரூபாய் சம்பளத்தை கொடுத்து பலரைக் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருக்கும்படி உட்காரவைத்துக் கொண்டு அவர்கள் எதிரிலேயே (தமிழர்களை) என்றும் தலையெடுக்க வொட்டாமல் இருக்கும்படியான காரியங்கள் செய்கிறார்கள். இதைத் தமிழன் 75 ரூபா காசுக்கு வேடிக்கை பார்க்கிறான். சிலர் வேறு கதியில்லாமல் சரணாகதி அடைந்து கிடக்கிறார்கள். இனியும் காங்கரசின் பேரால் பார்ப்பனர்கள் செய்யும் கொடுமைகள் சொல்லத்தரமல்ல. இனி நம்மவர்கள் பப்ளிக் பிராசி கூட்டராய் வர முடியாது. காலேஜ் கமிட்டி எடுத்துவிட்டதால் நம் பிள்ளைகள் முன்போல் மேல்படிப்புக்கு வர முடியாது. ஹிந்தி கட்டாயத்தால் கீழ்படிப்பும் பாழாய் விடும். வார்தா கல்வித் திட்டத்தால் பிள்ளைகளுக்கு கையெழுத்துப் போடத் தெரிவதே கஷ்டமாய் முடியும். கடன் நிவாரணச் சட்டம் என்கின்ற புரட்டால் சிறு குடியானவர்களும், கிராமவாசிகளும் பட்டணங்களுக்கு ஓடி அடிமையாய்த்தான் வாழ வேண்டும். இல்லாவிட்டால் விவசாயி கூலியாக ஆக வேண்டும். நாணையமே ஒழிந்தது.

மொத்தப் பலன்

மொத்தத்தில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் வருணாச்சிரம முறை தலையெடுக்க ஆரம்பித்துவிட்டது. அது இந்த மந்திரி சபையில் பலப்பட்டு நிலை நிற்கப் போகிறது. இவைகளையெல்லாம் நன்றாய் மனதிலிருத்தி காங்கரஸ்காரர்களும், பார்ப்பனர்களும் சொல்லுவதையும் நன்றாய் கேட்டு உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அப்படி நடங்கள். மணி இரவு 11 ஆகி விட்டதால் இனி உங்களை காக்க வைக்க இஷ்டமில்லை.

குறிப்பு: வேலூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் ஆற்றிய உரை. 22.05.1938 குடி அரசு தொடர்ச்சி.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 29.05.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: