காங்கரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியையும், முஸ்லிம் லீக்கையும் உத்தியோக வேட்டைக் கட்சிகள் என்றும், கண்டிறாக்ட் கொள்ளை கட்சிகள் என்றும் ஆதலாலேயே இவர்கள் கையில் இருக்கும் நிருவாக அதிகாரத்தை எப்படியாவது பிடிங்கிவிட வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டு என்ன என்னமோ சூழ்ச்சிகளும் பிரயத்தனங்களும் செய்து வந்தார்கள். இந்தக் காரியத்திற்காக பார்ப்பனர்கள் ஒரு காந்தி என்பவரை பிரமாத விளம்பரப்படுத்தி அவர் பேரைச் சொல்லி மக்களை பலவழிகளில் ஏமாற்றி வந்தார்கள். இதற்கு ஆக பிரசாரம் நடைபெறுவதற்கு தனிமையில் யோக்கியதை அற்றவர்களையும் சமுதாயத்தில் இழிவான ஈன வாழ்க்கை உள்ளவர்களையும் வாழ்க்கைக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் எப்படிப்பட்ட ஈனக் காரியங்களும் செய்துவந்த அனுபவமுள்ளவர்களையும் பிடித்து கூலியும் கொடுத்து மற்ற கட்சியாரை வையும் படியும் அதாவது தங்களைத்தவிர மற்றவர்கள் உத்தியோக வேட்டைக்காரர் என்றும் கண்டிறாக்ட் ஆட்சிக்காரர் என்றும் நிர்வாகத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் என்றும் கூப்பாடு போட்டு குரைக்கும்படியும் செய்தார்கள். பாமர மக்கள் தங்களது மடமையினாலும் பொறுப்பற்ற தன்மையினாலும் அற்ப சுயநல குணத்தாலும் இவர்கள் பேச்சில் ஏமாந்து ஓட்டுக்கொடுத்து காங்கரஸ்காரர்களை ஆதரித்துவிட்டார்கள். அதன் பயனாய் இன்று அரசியலில் பல மாகாணங்களில் காங்கரஸ் ஆட்சி ஏற்பட்டுவிட்டது. புதிய அரசியலில் சட்டசபைக்கு பல அதிகாரங்களும் சுயேச்சையும் கொடுக்கப்பட்டிருப்பதால் ஏறக்குறைய இன்று காங்கரஸ் ஆட்சி என்பது ஒரு அளவுக்கு சுதந்திரமுள்ள ஆட்சி யென்று சொல்லும்படியாக நடத்தக்கூடியதாக இருந்து வருகிறது.

அது மாத்திரமல்லாமல் காங்கரஸ்காரர்கள் ஓட்டு கேள்க்கும்போது பதவி ஏற்பதில்லையென்று சொல்லி ஓட்டுக் கேட்டிருந்தாலும் தங்களுக்கு மெஜாரிட்டி கிடைத்தவுடன் நிபந்தனை மீது பதவி ஏற்றதாக வேஷம் போட்டதில் காங்கரஸ் மந்திரிகள் நடத்தும் நிர்வாகத்தில் அரசாங்கத்தார் தலை இடுவதில்லை என்று சொல்லி ஒரு மாதிரி வாக்கு கொடுத்திருப்பதால் பதவி ஏற்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இன்று தங்களுக்கு ஒரு அளவு சுயராஜ்யம் கிடைத்துவிட்டதாகவும் இன்றைய ஆட்சி காங்கரஸ் ஆட்சியே ஒழிய வெள்ளைக்காரர் ஆட்சி அல்ல வென்றும் ஆதலால் சர்க்காரைக் குறை கூறக் கூடாது என்றும் இன்று இந்தியாவில் காங்கரஸ் ஆட்சி உள்ள மாகாணங்களில் பறப்பது காங்கரஸ் கொடி என்றும் சொல்லி நித்தியம் நூறு இடங்களில் தேசீய கொடியேற்றுவிழாவும் நடத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரும் வெற்றியை காங்கரசுக்கு உண்டாக்கிக் கொடுத்தவர் காந்தியார் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி அதற்காக விசேஷ முறையில் காந்தி ஜயந்தி கொண்டாடுகிறார்கள்.

காங்கரஸ் ராஜ்யத்தில் நடப்பது என்ன?

ஆகவே இப்படிப்பட்ட காங்கரஸ் ராஜ்யத்தில் நடப்பது என்ன என்பதை காந்தி ஜயந்தியான இன்றைய “புண்ணிய”தினத்தில் சற்று அலசிப்பார்ப்போம் என்பதற்காகவே அதைப்பற்றி சில எழுதத் துணிந்தோம்.

காங்கரஸ் மந்திரிகள் லஞ்சம் வாங்கினார்கள் என்றும் தகுதியற்ற தங்கள் பந்துக்களுக்கு பெரும் பெரும் உத்தியோகங்களைக் கொடுக்கிறார்கள் என்றும் கண்டிறாக்ட் காரியங்களில் பிரவேசிக்கிறார்கள் என்றும் சில மந்திரிகள் மீது பல புகார்கள் வந்து அதை காரிய கமிட்டி விசாரணையும் செய்தது. இப்புகார்களுக்கு ஆதாரம் இருக்கிறது என்று மாஜி ஹைக்கோர்ட் ஜட்ஜúகள் தீர்ப்பு கூறியும் விட்டார்கள். அதன் மீதும் காந்தியோ காரியக் கமிட்டியோ அ.இ.கா. கமிட்டியோ அப்படிப்பட்ட மந்திரிகளை நீக்கவும் இல்லை.

மற்றும் சில மந்திரிகள் கண்டிறாக்ட்களில் பிரவேசித்து தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, வரிப்பணம் லட்சக்கணக்கில் நஷ்டமாகும்படியும் குறைந்த டெண்டரை விட்டு உயர்ந்த டெண்டருக்கு ஒழுங்குமுறைக்கு விரோதமாயும் கண்டிறாக்ட் கொடுக்கிறார்கள் என்று மந்திரிகள் மீது குறைகூறிவந்த புகார்களுக்கு ஆதாரமில்லை என்று எந்த மந்திரியும் தங்கள் நிரபராத தன்மையை நிரூபிக்க முன்வரவில்லை.

உத்தியோக விஷயங்களிலும் தங்கள் சுற்றத்தார்களுக்கு சலுகைகாட்டி மற்றவர்களுக்கு அநீதி செய்கிறார்கள் என்று ஆதாரங்களோடு எவ்வளவோ புகார்கள் வந்தன. அவற்றை மறுக்க மந்திரிகள் சிறிதும் கவலை கொள்ளவில்லை.

மேலும் காங்கரஸ் கைப்பற்றி பலமான மெஜாரட்டியுடன் நடந்து வரும் பல ஸ்தல ஸ்தாபனங்கள் சென்னை கார்ப்பரேஷன் அதாவது 2000 ரூ. சம்பளமுள்ள சர்க்கார் உத்தியோகஸ்தர் நிர்வாக அதிகாரியாய் இருந்து மேல்பார்வை பார்த்துவரும் சென்னை கார்ப்பரேஷனில் லஞ்ச தாண்டவமும் உத்தியோக சலுகையும் கண்டிறாக்ட் கொள்ளையும் வகுப்பு உணர்ச்சியும் நடக்கிறது என்று காங்கரஸ் பத்திரிகைகள் உள்பட கூப்பாடு போடத்தக்க நிலை ஏற்பட்டும் மந்திரிகள் பிரவேசித்ததாகவோ கவலை செலுத்தினதாகவோ இனிமேலாவது இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள ஏதாவது முயற்சி எடுத்ததாகவோ சிறிதும் தெரியவில்லை.

கார்ப்பரேஷன் லஞ்சப் புராணம்

சமீபத்தில் ஒரு பார்ப்பன கார்ப்பரேஷன் கவுன்சிலர் புஸ்தக கண்டிறாக்ட் தனக்கு கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரமுடையவருக்கு எழுத்து மூலமாக விண்ணப்பித்துக் கொண்ட ஆதாரம் வெளியாகியும் அது லக்ஷக்கணக்கில் துண்டு பிரசுரமாக பொதுஜனங்களுக்கு வினியோகிக்கப்பட்டும் காங்கரசோ காங்கரஸ் ஆட்சியோ இதை ஏன் என்றுகூட கேள்க்கவில்லை. அந்த பார்ப்பன கவுன்சிலர் இந்தி மறுப்பின் பேரால் சிறை பிடிக்கப்பட்ட தொண்டர்களை மன்னிப்புக் கேள்க்க தூண்டவும் மன்னிப்பு வாங்கிக் கொடுக்க அதிகாரிகளிடம் சிபார்சு நடக்குமான காரியத்தில் வெளிப்படையாய் ஈடுபட்டிருக்கிறார் என்பதற்காகவோ அல்லது அவர் பார்ப்பனராய் இருக்கிறார் என்பதற்காகவோ அவரைப் பற்றி கவனிக்கவில்லை போல் தெரிகிறது.

ஆகவே காங்கரஸ் ஆட்சியில் லஞ்சம் (நியாயமற்ற முறையில் கண்டிறாக்ட் வினியோகம்) உத்தியோக சலுகை ஆகியவை சர்வ சாதாரணமாய் நடைபெறுகிறது என்பதற்கு நடு நிலைமைக்காரர்களுக்கும் யோக்கியர்களுக்கும் இந்த ஆதாரங்களும் எடுத்துக்காட்டுகளுமே போதும் என்று நினைக்கிறோம்.

இதுவும் போதாது என்று சொல்ல யாராவது வருவார்களானால் அந்த யோக்கியர்களுக்கு வேறு பல எடுத்துக்காட்டுகளும் அத்தாட்சிகளும் ஆதாரங்களும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அதென்னவென்றால்,

மத்திய மாகாண முதல் மந்திரியாய் இருந்து நிர்வாகம் நடத்தியவரும் பழைய காங்கரஸ்வாதியும் இதுவரையில் காங்கரஸ் காரர்களில் எவ்வித குற்றமும் குறையும் கூறப்படாதவருமான தோழர் காரே என்கிற ஒரு பார்ப்பன மாஜி மந்திரியார் நேற்று வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையிலிருந்தே எடுத்துக்காட்டுகிறோம். அவ்வறிக்கை இன்று வேறு ஒரு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

காங்கரஸ் தலைவர்கள் வண்டவாளம்

அதில் காங்கரஸ் தலைவர்கள் காரியக் கமிட்டி அங்கத்தினர்கள் ஆகியவர்கள் ஆடிய உத்தியோக வேட்டையும், கண்டிறாக்ட் வேட்டையும் நீதி சலுகை வேட்டையும் வெட்ட வெளிச்சமாய் குருடனுக்கும் மடையனுக்கும் விளங்கும்படி திறந்து காட்டப்பட்டிருக்கிறது.

அதில் முதலாவது தோழர் பட்டேல் அதாவது பார்லிமெண்டரி சப்கமிட்டி பிரசிடெண்டும் காந்தியாரின் அந்தரங்க நண்பரும் மந்திரிகளை நியமிக்கவும் நீக்கவும் கூடிய அதிகாரம் உள்ளவருமான தோழர் பட்டேல் என்பவர் தனது நண்பரொருவருக்கு கண்டிராக்ட் கொடுக்கும்படி ஒரு சிபார்சு கடிதம் எழுதியிருக்கிறார் என்பது விளங்கும். அதில் காட்டியிருக்கும் விஷயம் எவ்வளவு மானக்கேடும், நாணையக் கேடுமானது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. கண்டிறாக்ட்டுக்கு டெண்டர் போட்டிருப்பவர் காங்கரஸ்காரருக்கு சகோதரராம் மற்றும் அந்த காங்கரஸ்காரர் காங்கரசுக்கு பல தடவை உதவி செய்திருக்கிறாராம். அதற்காக அவர் சகோதரருக்கு காண்ட்றாக்ட் கொடுக்க வேண்டுமாம். இந்த முறை நிர்வாகமானது லஞ்சமுறையா அல்லவா என்று யோசித்துப் பார்க்கும்படி பொதுஜனங்களை வேண்டுகிறோம். ஆகவே காங்கரஸ் தலைவர்கள் என்பவர்கள் காங்கரசுக்கு ஆள் சேர்க்கும் முறையும் அந்த ஆட்கள் காங்கரசுக்கு செய்யும் உதவியும் அதற்கு காங்கரஸ் தலைவர்கள் செய்யும் மறு உதவியும் கைம்மாறும் எப்படி இருக்கிறது என்பது இதிலிருந்தாவது பொதுமக்களுக்கு விளங்குமென்று நினைக்கிறோம்.

தோழர் பட்டேல் அவர்களைப் பற்றி நாம் அடிக்கடி எழுதி வந்திருக்கிறோம். அதாவது அவர் பம்பாய் சத்தியமூர்த்தி என்று எத்தனையோ தடவை எடுத்துக்காட்டி இருக்கிறோம். இவர் நரிமன் விஷயத்தில் நடந்துகொண்டதும் மற்றும் இவரைப் பற்றிப் பம்பாய் பத்திரிகைகளில் வெளிவந்த விஷயங்களும் அறிந்தவர்களுக்கு நாம் மேல் கொண்டு தெரிந்து கொள்ளும்படியாய் எதுவும் எழுதிவிட முடியாது. ஆனாலும் இப்படிப்பட்டவர்கள் கையில்தான் இன்றைய மந்திரி நியமனம் நீக்குதல் முதலிய அதிகாரங்கள் பதவிகள் ஆகியவை இருக்கின்றன என்றால் இவர்களால் நியமிக்கப்பட்ட மந்திரிகளிடம் நாணையம் ஒழுக்கம் நீதி ஆகியவைகள் இருப்பது ஆச்சரியமாகத்தானே இருக்கமுடியும்.

மற்றொரு படலம்

அடுத்தாற்போல் மற்றொரு கடிதம் எழுதப்பட்டதாகவும் அந்த (டாக்டர் காரே) அறிக்கையில் காணப்படுகிறது. அதென்னவெனில் காங்கரஸ் தலைவரான தோழர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தனக்கு வேண்டிய யாரோ ஒருவருக்கு ஒரு டாக்டர் உத்தியோகம் கொடுக்கும்படி சிபார்சு கடிதம் எழுதினதாகும். எனவே காங்கரஸ் தலைவர் என்பவருடைய யோக்கியதையே இப்படி இருக்கும்போது இனி மந்திரிமார்கள் தகுதியற்றவர்களுக்கோ அல்லது பணம் கொடுத்தவர்களுக்கோ உத்தியோகம் வழங்கினாலும் அது எப்படி குற்றமாகுமென்பது நமக்கு விளங்கவில்லை.

இவை தவிர டாக்டர் காரே அறிக்கையில் மற்றொரு காரியக் கமிட்டி அங்கத்தினரான தோழர் சரோஜனி அம்மாள் தனக்கு வேண்டிய யாரோ ஒருவருக்கு ஒரு அட்வொகேட் ஜனரல் உத்தியோகம் கொடுக்கும்படி சிபார்சு கடிதம் எழுதி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அக்கடிதத்தில் இருந்து மற்றோர் பிசாசு புறப்படுகிறது. அதாவது இவருக்கு (தோழர் காரேக்கு) முன்னிருந்த ஒரு மந்திரி ஹைக்கோர்ட்டு சிபார்சை புறக்கணித்து விட்டு தனக்கு (மந்திரிக்கு) வேண்டிய ஒருவருக்கு அவ்வுத்தியோகத்தை வழங்கிவிட்டார் என்று அம்மையார் குறிப்பிட்டு குறைகூறி இருக்கிறார். ஆகவே காங்கரஸ் மந்திரிகள் யோக்கியதை எப்படி இருந்து வந்தது என்பதை அது காட்டுகிறது.

இதுதவிர மற்றொரு விஷயமும் அக்கடிதத்தில் காணப்படுகிறது. அதாவது அந்த அம்மாள் அக்கடிதத்தினடியில் முக்கிய குறிப்பு என்று போட்டு ஒரு ஜட்ஜ் வேலை காலியிருப்பதாக தெரிகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதிலிருந்து இந்த வேலைக்கும் அந்த அம்மாள் யாரையோ சிபார்சு செய்யப்போகிறார் என்று நினைக்க வேண்டி இருக்கிறது.

ஆகவே சரோஜனி தேவியும் டாக்டர் காரேயிக்கு முன் இருந்த மந்திரியும் இந்த யோக்கியதை உடையவர்களாக இருந்தால் சென்னை மந்திரி பப்ளிக் பிராசிகூட்டர் வேலை பார்ப்பனர்களிடம் இருந்து சிபார்சு பெற்று வந்தவர்களுக்குத்தான் கொடுப்பேன் என்பதிலும் சில சந்தர்ப்பங்களில் அந்த சிபார்சையும் தள்ளிவிட்டு தனக்கு வேண்டியவனுக்குத்தான் கொடுப்பேன் என்று கொடுத்து வந்ததிலும் ஏதாவது ஆச்சரியமிருக்க முடியுமா என்று கேள்க்கிறோம்.

பஜாஜ் நாடகம்

இவ்வளவும் தவிர, மற்றொரு காரியக் கமிட்டி மெம்பரான தோழர் ஜம்னாலால் பஜாஜ் என்பவர் அதாவது காந்தியாரை தெய்வமாகக் கொண்டாடும் குபேரசம்பத்துடைய பஜாஜ் என்பவர் டாக்டர் காரேய்க்கு ஒரு சிபார்சு கடிதம் எழுதியிருக்கிறார். அதன் யோக்கியதை என்னவென்றால் ஒரு கொடிய குற்றம் செய்த யாரோ ஒருவனை அவனுடைய தண்டனை காலம் முடிவதற்குமுன் விடுதலை செய்யும்படி வேறு ஒருவருக்காக தோழர் பட்டேல் அவர்களால் எழுதப்பட்ட ஒரு சிபார்சு கடிதத்திற்கு மேல் தோழர் பஜாஜ் தானும் சிபார்சு செய்து அனுப்பினதாகும். இது ஒரு சமயம் தோழர் பட்டேல் சிபார்சை டாக்டர் காரே கவனிக்கமாட்டார் அலட்சியம் செய்துவிடுவார் என்று கருதி தோழர் பட்டேல் தோழர் பஜாஜ் இடமும் மேலொப்பம் வாங்கி இருக்கக்கூடும் எனவும் தோன்றுவதோடு இதிலிருந்து தோழர் பட்டேலுக்கும் டாக்டர் காரேய்க்கும் அவ்வளவு நம்பிக்கையான சினேகம் இல்லை என்று கருதவும் இடம் ஏற்படுகிறது. இவைகளை யெல்லாம் பார்க்கும்போது சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலர் தோழர் எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர் என்பவர் ஒரு கண்டிறாக்டில் பங்கு கேட்டு தோழர் லôமணசாமி முதலியாருக்கு எழுதிய கடிதம் காங்கரஸ் நாணையப்படியும், காங்கரஸ் தலைவர்கள் காரியக்கமிட்டி மெம்பர்கள், பார்லிமெண்டரி போர்டு தலைவர்கள் ஆகியவர்கள் நாணையப்படியும் அவ்வளவு பெரிய தப்பிதம் என்று தோன்றா தென்றே கருதுகிறோம்.

அன்றியும் நம் தமிழ்நாட்டில் அட்ஹாக்கமிட்டி மெம்பர்கள், தலைவர்கள் அவர்களுக்கு வேண்டியவர்கள் பலர் திடீர் திடீர் என்று பணக்காரர்கள் ஆவதும் பங்களாக்கள் கட்டுவதும் வங்கிகளில் பணம் டிபாசிட் செய்யப்படுவதுமான காரியங்களில் நமக்கு சிறிதும் ஆச்சரியம் தோன்றுவதில்லை.

எனவே பொதுஜனங்கள் தகவலுக்கு இவ்வளவு சேதிகள் ஆதாரத்தோடு கைப்பிடியாய் கிடைப்பதாய் இருந்தால் இன்னமும் பொதுஜனங்களுக்கும் வெளிக்கும் தெரியாமல் நடக்கும் காரியங்கள் எவ்வளவு இருக்கக்கூடும். அவைகள் எப்படிப்பட்டவைகளாய் இருக்கக்கூடும் என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்துக்கொள்ளட்டும்.

அபிப்பிராய பேதமுண்டாகாததற்கு காரணம்?

இந்த நிலையில் காங்கரஸ் தலைவர்கள் ஒரு குடும்பம்போல் ஒற்றுமையாய் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்குள் அபிப்பிராய பேதமில்லை என்றும் சொல்லப்படுவது எப்படிப் பொய்யாகும்? இந்தக் காரணங்கள் அவர்களை மேலும், மேலும் ஒற்றுமைப்படுத்தாமல் அபிப்பிராய பேதத்தை எப்படி உண்டாக்கும்? இவர்களுக்குள் இந்த விதமான சம்மந்தமிருக்கும் போது ஒரு மந்திரி காரியத்தை மற்றொரு மந்திரி ஆதரிக்கவும், மந்திரிகள் காரியத்தை காரியக் கமிட்டி ஆதரிக்கவும் காரியக் கமிட்டி காரியத்தை அ.இ.கா. கமிட்டி ஆதரிக்கவும் இந்தக் காரணம் போதாதா? என்று கேட்கின்றோம்.

கட்சிக் கொள்கை நீதி நிர்வாகம் ஆகியவைகளிலும் தியாகம் ஆகியவைகளிலும் இவர்கள் யோக்கியதை இப்படி இருந்தபோதிலும் காங்கரஸ்காரர்களுக்குள் இருக்கும்போது ஒழுக்கம்தான் எப்படிப்பட்டது என்பதைப்பற்றி காந்தி ஜயந்தியின் போது இரண்டு வார்த்தை சொல்லுவது அதிகப் பிரசிங்கித்தனமாகுமென்று கருதவில்லை.

சபர்மதி முனிவர் ஆச்சிரமத்திலேயே முனிவரது பத்தர்களுக் குள்ளாகவே பல ஒழுக்கக்கேடான காரியங்கள் நடந்து காந்தியார் பட்டினி விரதப் புரட்டால் அது மறைக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததேயாகும். காந்தியாரைப் பற்றியே வேறுபல கதைகளும் வெளியாயின. அவை ஒருபுறம் கிடக்கட்டும்.

இந்தி பிரசார மண்டலத்தில் இந்தி பிரின்சுபால் அவர்கள் இந்தி கற்க வந்த பெண்களில் சிலரை கற்பழித்துவிட்டார் என்ற சேதியும் அதற்காக காந்தியார் அந்த பிரின்சுபாலை தமிழ்நாட்டுக்கு வந்த சமயத்தில் டிஸ்மிஸ் செய்துவிட்டதாகச் சொல்லி மறந்துபோகும்படி செய்து விட்டார் என்ற சேதியும் பொதுமக்கள் உணர்ந்ததே ஆகும். இதுபோல் மற்றும் எவ்வளவோ சங்கதிகள் கூறப்படுகின்றன. ஆகவே இவற்றை யெல்லாம் காந்தி ஜயந்தி என்னும் "மகா புண்ணிய" தினத்தில் ஏன் சொல்லுகிறோம் என்றால் காங்கரஸ்காரர்கள் பலர் ஒருவரைப்பற்றி ஒருவர் தங்கள் தங்கள் மனதார எவ்வளவோ கேவலமான இழிவான - அற்பமான ஈனப்பிறவியான நடத்தையுடையவர்கள் என்பதாக உணர்ந்து கொண்டும் அதுபோன்ற பல காரியங்கள் நித்திய கருமத்தில் சிலர் செய்து கொண்டும் சிலர் தங்களின் வாழ்க்கை பூராவையுமே இப்படிப்பட்ட அஸ்திவாரத்தின் மீது கட்டிக்கொண்டுமிருந்தும் மற்றவர்களைப் பற்றி மிக சுலபமாக வெகு இழிவாகப் பேசுகிறார்கள் - விஷமப்பிரசாரம் செய்கிறார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல் நிதானத்தையும் பொறுமையையும் இழக்கும்படி செய்கிறார்கள் என்பதற்காகவே இவற்றை காந்தி பக்தர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 02.10.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: