முஸ்லீம்களுக்கு அனேகமாய் மதம் வேறு, சமூகம் வேறு, தேசம் வேறு என்கின்ற வித்தியாசம் கிடையாது. மூன்றையும் வேறு வேறாய்க் கருதும்படியான நிலை ஏற்பட்டு விட்டால் முதலில் மதத்தையும் பிறகு சமூகத்தையும் அப்புறம் தான் தேசத்தையும் கருதுவார்கள். அவர்களுக்கு மதம் ஒன்றேயாகும்; சமூகம் ஒன்றேயாகும்; தேசம் பலவாகும். துருக்கி, ஈஜிப்ட், பர்ஷியா, ஈராக், ஆப்கானிஸ்தானம் முதலிய பல தேசங்கள் உண்டு. கடவுளும் நபியும் ஒன்றேயாகும். இஸ்லாம் சமூகம் ஒன்றேயாகும். இஸ்லாம் சமூகத்துக்கு ஆபத்துண்டாக்கக்கூடிய அல்லது கேடுண்டாக்கக்கூடிய நிலையில் தேசத்தை இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் சமூகத்தைக் காப்பார்களே ஒழிய தேசத்தை லஷியம் செய்யமாட்டார்கள். அவர்கள் சமூகம் முன்னேறி வருவதற்கும் அவர்கள் மதம் தலை சிறந்து விளங்குவதற்கும் அதுதான் காரணம். அப்படிப்பட்டவர்கள் இன்று இந்தியாவில் ஜன சமூகத்தில் சுருங்கின எண்ணிக்கை உள்ளவர்களாய் இருந்தும் எப்படிப்பட்ட நெருக்கடியிலும் சமூகத்தை விட்டுக் கொடுக்காததாலேயே அவர்கள் தலை நிமிர்ந்து நடக்கிறார்கள். சமபங்கு - சில விஷயங்களில் இரட்டைப்பங்கு கூட அடைந்து வருகிறார்கள். இது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியதும் மற்ற சமூகத்துக்கு படிப்பினைக்கு பயன்படுத்தக் கூடியதுமான விஷயமாகும்.

ஆனால் நம் தென்னாட்டு முஸ்லீம் சமூகப் பிரமுகர்களில் பிரமுகரான தோழர் ஜமால் மகமது சாயபு அவர்கள் தேசம் தான் முதலாவது, சமூகம் இரண்டாவது என்று கொஞ்சகாலமாய்க் கருதி பார்ப்பனர்கள் வலையில் பட்டு எப்படியோ ஏமாந்து வருகிறார் என்பதைக் காண நமக்கு ஆச்சரியமாகவும் பரிதாபகரமாகவும் இருந்து வருகிறது.

இந்திய தேசிய காங்கிரசு ஏற்பட்ட நாள் முதல் முஸ்லீம்கள் தாங்கள் சமூக மதவிஷயங்களின் நலனுக்கு காங்கிரசினிடம் உத்திரவாதம் பெறுவதற்குப் பாடுபட்டு வந்திருக்கிறார்கள். எத்தனையோ முஸ்லீம் பிரமுகர்கள் இதற்கு மாறாக காங்கிரசை ஆதரித்து தங்கள் சமூக நலன் கோரும் ஸ்தாபனங்களுக்கு பலவீனத்தை உண்டாக்கி வந்திருந்தாலும் அச்சமூக பாமரமக்களின் உறுதியாலும் அச்சமூக கட்டுப்பாட்டினாலும் 1890ம் வருஷம் முதலே பந்தோபஸ்துகள் சம்பாதிக்கப்பட்டு வந்திருக்கிறது.

1900-த்தில் விகிதாசாரம் நியமனமும் 1909ல் விகிதாச்சார ஸ்தானம் தேர்தலிலும் அளிக்கப்பட்டுவிட்டது. 1920-லும் 1937-லும் விகிதாசார ஸ்தாபனம் ஜனசங்கைப்படி நியமனத்திலும் தேர்தலிலும் விளக்கமாக ஏற்பட்டு விட்டது.

இவைகளை எல்லாம் அறிந்தவரும் இம்மாதிரி தனிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்ட பிறகே முஸ்லீம்களுக்கு அரசியலிலும் சமுதாயத்திலும் மற்ற வகுப்புகளுக்கு சமமாய் முன்னேற்றமடைந்திருப்பதை நேரில் அறிந்தும் இப்பிரதிநிதித்துவ முறை இல்லாத போது தாங்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் போல் சிலரால் மதிக்கப்பட்டு வந்ததையும் நேரில் அறிந்தும் என்ன காரணத்தாலோ தோழர் ஜமால் முகமது சாயபு அவர்கள் அப்பிரதிநிதித்துவ முறை தேசியத்துக்கு விரோதமென்றும் தேசியம் சமூகத்தைவிட மேலானதென்றும் வாதாடி வந்திருக்கிறார்.

அந்தக் காரணத்தாலேயே அவர் இதுவரை தனித்தொகுதியின் மூலம் எந்த தேர்தலுக்கும் நிற்காமல் பொதுத் தொகுதியிலேயே நின்று வந்திருக்கிறார்.

அப்படி நின்று வந்ததில் 1928 வாக்கில் இந்திய சட்டசபைக்கு வர்த்தகத் தொகுதிக்கு ஒரு அபேக்ஷகராக நிற்க தோழர் ஜமால் முகமது சாயபு முன்வந்த போது தனித்தொகுதி தேசீயத்துக்கு விரோதமென்று கூப்பாடு போட்டு சாயபுவை ஏமாற்றி தங்கள் வசம் செய்து கொண்ட பார்ப்பனர்களே அவருக்கு எதிரியாய் வந்து (தோழர் கோவை வெங்கிட்ட ரமணய்யங்கார்) எதிர் அபேக்ஷகராய் நின்று பார்ப்பனர் எல்லாம் "இந்து" "சுதேசமித்திரன்" கூட்ட அய்யங்கார் முழுவதும் அய்யங்காரை ஆதரிக்க முன் வந்து தொல்லை விளைவித்தார்கள். இது கண்ட தோழர் ஜமால் முகமது சாயபு அவர்கள் பேசாமல் விலகிக் கொண்டார். அதற்குப் பிறகும் அது முதல் இதுவரை இந்த 10 வருஷ காலமாய் தனித்தொகுதியை வெறுத்து வந்திருக்கிறார். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் பார்ப்பனர்கள் பக்கமே இருந்து வந்திருக்கிறார். பார்ப்பனர்களுக்கு தாராளமாய் ஏராளமான பொருளுதவி செய்தும் வருகிறார். பார்ப்பன பத்திரிகைகள் பலவற்றிற்கும் தாராளமாய் பண உதவி செய்தும் வருகிறார். அப்படி எல்லாம் இருந்தும் இந்த தடவை தேர்தலில் தோழர் ஜமால் மகமது அவர்களை பார்ப்பனர்கள் காலை வாரிவிட்டு விட்டு விட்டார்கள். விபரம் என்னவென்றால் தோழர் ஜமால் மகமது சாயபு முஸ்லீம் தொகுதி 28 ஸ்தானங்களில் 2, 3 ஸ்தானங்களுக்கு வேண்டுமானாலும் நின்று போட்டியில்லாமல் வெற்றி பெற்றிருக்கக் கூடியவர் என்பதை அவர் எதிரிகளும் மறுக்கார்கள். அப்படி இருக்க அவைகளை விட்டு விட்டு ஏனென்றால் தனி தொகுதி வேண்டாம் என்கின்றவர்கள் தனித்தொகுதியை பயன்படுத்திக்கொள்ளுவது சுயமரியாதை அல்ல என்கின்ற கருத்தின் மீது தனி தொகுதிக்கு நிற்காமல் பொதுத் தொகுதியிலேயே நிற்க வேண்டும் என்று கருதி, அதிலும் தனக்கு இயற்கையிலேயே உரிமை உள்ள தென் இந்திய வியாபாரத் தொகுதியில் ஒரு அபேக்ஷகராய் நின்றார். தென் இந்திய வியாபார சங்கத்திற்கு தோழர் ஜமால் மகமது அவர்கள் வெகுநாளாகவே (சர். தியாகராய செட்டியார் அவர்கள் காலம் சென்ற காலம் முதலே) தலைவராய் இருந்து வருவதோடு அச்சங்கத்துக்கு எவ்வளவோ நன்மையும் செய்து வந்திருக்கிறார். மற்றும் வியாபார விஷயத்தில் நாணைய செலாவணி விஷயத்தில் நிபுணர் - பெருத்த வியாபாரி. இவ்வளவும் தவிர தனித்தொகுதியை வெறுத்து பொதுத் தொகுதிக்கு வந்தவர். இப்படிப்பட்ட ஒருவருக்கு விரோதமாய் பார்ப்பனர்கள் ஒரு அய்யங்கார் பார்ப்பனரை நிறுத்தி தோழர் கோவை சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார் முதல் சென்னை பத்திரிக்கை அய்யங்கார்கள், காங்கிரஸ் அய்யங்கார்கள், மற்றும் பார்ப்பனர்கள் ஆகியவர் எல்லோரும் ஒருங்கே பாடுபட்டு தோழர் ஜமால் மகமது சாயபுவை தோற்கடித்துவிட்டார்கள்.

காரணம் என்னவென்றால் தோழர் ஜமால் மகமது அவர்கள் காங்கிரஸ் அபேக்ஷகருக்கு விரோதமாய் முஸ்லீம் லீக்கு அபேக்ஷகர்களை நிறுத்தினார் என்பதுதானாகும்.

முஸ்லீம் லீக்கைப் பொறுத்தவரை நிறுத்தப்பட்ட அபேக்ஷகர்கள் காங்கிரசைத் தழுவியே யிருப்பார்கள் என்று தெரிவித்து இருந்தும் அதைக் கவனியாமல் ஏதோ ஒரு பேர் அறிந்திருக்க முடியாத ஒரு சாதாரண அய்யங்கார் பார்ப்பனரை அவருக்கு விரோதமாய் நிறுத்தி வைத்து சட்டசபை அசம்பிளித் தேர்தலில் தோற்கடித்து விட்டார்கள்.

இப்போது மந்திரி சபை நியமிக்கப் போவதிலும் முஸ்லீம் லீக்காரால் வெற்றி பெற்ற மெம்பர்களை லòயம் செய்யாமலும் எதிர்பார்க்காமலும் மந்திரி சபை அமைக்கப் போகிறார்கள்.

முஸ்லீம் சமூகம் பெரிதும் தென்னாடு மாத்திரமல்லாமல் இந்தியா வெங்கும் காங்கிரசுக்கு வேறாகவே இருந்து வருகிறது. அதோட மாத்திரமல்லாமல் காங்கிரஸ் மந்திரி பதவி ஏற்பது சீர்திருத்தத்தை உடைப்பது என்பது ஏமாற்றமாய் இருந்தாலும் வகுப்பு உரிமைகளை அழிப்பதே முக்கிய கருத்தாய் கொண்டிருக்கிறது.

ஆகவே முஸ்லீம் மக்கள் குறிப்பாக தோழர் ஜமால் முகமது சாயபு அவர்கள் முதல் கொண்டு தேர்தலில் முஸ்லீம் லீக்கின் பேரால் வெற்றி பெற்ற அங்கத்தினர்கள் உள்பட என்ன செய்யப்போகிறார்கள்? தங்கள் சுயமரியாதையை காக்கப் போகிறார்களா? அல்லது வகுப்பின் பேரால் முன்னுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் தங்கள் வகுப்பைக் காட்டிக் கொடுத்து சுயநலம் பெறுவது போல் தங்கள் தனிப்பட்ட சுயநலத்தை காப்பாற்றிக் கொள்ளப் போகிறார்களா?

தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 14.03.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: