சென்ற மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பார்ப்பனர்கள் தங்கள் கட்சிக்கு வெற்றி ஏற்பட வேண்டுமென்று உத்தியோகப் பார்ப்பான் முதல் கொண்டு எச்சில் கிண்ணம் கழுவும் பார்ப்பான் வரை பெண்டு பிள்ளை குடும்ப சமேதமாய் கட்டுப்பாடாய் அக்கரையாய் ஆத்திரமாய் அலைந்து திரிந்து வேலை செய்தார்கள் என்பதைப் புகழ்ந்து அச்சமூகத்தை மெச்சிப்பேசுவதே இன்றைய எந்தக் கூட்டத்தினுடையவும் முதல் பேச்சாய் இருக்கிறது. அது உண்மைதான். ஆச்சரியப்படத் தக்கதுதான்.

ஆனால் அதன் காரணம் அவர்களுடைய பொது நல சேவை என்று சொல்ல முடியுமா? அல்லது அதிகாரம், பதவி ஆகியவற்றின் ஆசை என்று சொல்லிவிட முடியுமா? என்றால் இரண்டும் அல்ல என்று தான் சொல்லுவோம். மற்றென்னவென்றால் பார்ப்பனர்களை நாம், (ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும்) அந்த நிலையில் கொண்டு வந்து வைத்து விட்டோம். அவர்களது வாழ்க்கையை சமூகத்துறையிலும் அரசியல் துறையினும் மிக்க நெருக்கடியானதாக ஆக்கிவிட்டோம். சகல தொழிலிலும் பிரவேசிக்க அவர்கள் துணிந்தும் நாம் ஒவ்வொன்றிலும் தடுத்து கஷ்டமாக்கி விட்டோம். நாம் ஆக்காவிட்டாலும் "தானாகவேயாவது" ஆகிக்கொண்டு வர வேண்டியதாகிவிட்டது என்றாவது சொல்லித்தீர வேண்டியதாகிவிட்டது.

ஒரு சின்ன உதாரணம் கூறுவோம்.

உத்தியோக முறையில் நாம் வகுப்பு உணர்ச்சியை கிளப்பி விட்டதிலிருந்து - வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்பட்டதிலிருந்து அவர்கள் ஆதிக்கமும் பெருமையும் தேயத் தலைப்பட்டு விட்டது என்பதோடு மூடநம்பிக்கை ஒழிய வேண்டும் என்கின்ற அபிப்பிராயத்தை செல்வாக்குப் பெறும்படி நாம் செய்துவிட்டது முதல் மதத்திலும் சமூகத்துறையிலும் அவர்களுடைய உயர்வும் மதிப்பும் தேய்ந்துவர ஆரம்பித்துவிட்டது.

அச்சமூகத்தில் 100க்கு ஐம்பது பேருக்கு மேல்பட்டவர்கள் படித்து 100 உத்தியோகங்களில் 90 உத்தியோகங்களை கைப்பற்றி வந்ததும் அச்சமூகத்தில் உள்ள மீதி 100க்கு 50 பேருக்கு புரோகிதம், அர்ச்சகம், பரிசாரம், ரிஸ்டோரெண்ட், தூது ஆகிய வேலையில் ஈடுபட்டிருந்ததுமே அச் (பார்ப்பன) சமூக ஜீவன மார்க்கமாக இருந்தது.

மற்றும் வக்கீல், டாக்டர் ஆகிய வேலையும் அச்சமூகத்துக்கே ஏகபோக உரிமையாகவும் பணம் சம்பாதித்து சேர்க்கும் மார்க்கமாகவும் இருந்தது. இந்த நிலையில் இன்று அவர்களது படிப்பு, உத்தியோகம், வக்கீல், டாக்டர் ஆகிய பிழைப்புக்கு பலமான போட்டி ஏற்பட்டுவிட்டது. அரசியல் அதிகாரம் 15 வருஷ காலமாக அவர்களிடமிருந்து சிறிது சிறிதாக பறிக்கப்பட்டு விட்டதால் பார்ப்பனர்களே போட்டியில் முழு வெற்றியும் பெறுவதற்கு மார்க்கமில்லாமல் போய்விட்டது. சமூக வாழ்க்கையிலும் மதிப்பும் பெருமையும் குறைந்த உடன் அவர்களது சோம்பேறி வாழ்க்கைக்கு போதிய வருமானத்துக்கும் கூட வழி இல்லாமல் போய்விட்டது. இதன் பயனாய் பச்சை வருணாச்சிரம பார்ப்பனர் முதல் பெரிய சீர்திருத்த பார்ப்பான் - சர்க்கார் சேவக பார்ப்பான் முதல் மிதவாதப் பார்ப்பான் அதி தீவிர சத்தியாக்கிரக பார்ப்பான் முதல் தேசிய - சமதர்ம - பொது உடமை பார்ப்பான் வரை தங்களது நிலைமைக்கு வருந்தி கூடிக்கூடி ஒருவருக்கொருவர் கட்டி அழுது தங்கள் தங்கள் துக்கத்தை ஆற்றிக்கொள்ளவும் அச்சமூகத்துக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு பரிகாரம் உடனே தேடவும் முயற்சி செய்யவும் வேண்டியதாய் போய்விட்டது.

இதன் பயனாகவே தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் ஒரு கூட்டத்தில் பேசும்போது "இந்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியை ஜெயிக்க விட்டு விட்டால் நாம் (பார்ப்பனர்கள்) எல்லோரும் வங்காளக்குடாக்கடலில் விழுந்து மடிய வேண்டியதுதான்" என்று சொன்னார்.

பார்ப்பனர்களுக்கு மேல்கண்டபடியான கஷ்டங்களால் ஏற்பட்ட நஷ்டங்கள் அவ்வளவும் பார்ப்பனரல்லாதாருக்கு லாபமாய் இருந்ததால் அதை அடைந்து சுகத்தில் இருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கு கவலைப்படவேண்டிய அவசியமோ கட்டுப்பட வேண்டிய அவசியமோ ஒன்று சேர்ந்து ஒற்றுமையாய் வேலை செய்ய வேண்டிய அவசியமோ இல்லாமல் அவர்கள் ஒருவருக்கொருவர் பொறாமை, போட்டி, வேற்றுமை, துவேஷம் ஆகியவைகளையே வளர்த்துக்கொள்ள வேண்டியவர்களாகி விட்டார்கள். அதோடு ஒரே கட்சியில் ஒருவர் தோல்வி அடைய மற்றொருவர் காங்கிரசுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியத்துக்கும் ஆளானார்கள்.

இந்தக் காரணங்களால் ஒரு கூட்டம் (சிறியதாய் இருந்தாலும்) ஒற்றுமைப்பட்டு வலுவடைந்து வரவும், மற்றொரு கூட்டம் (பெரியதாய் இருந்தாலும்) வேற்றுமைப்பட்டு பலவீனமடைந்து வரவும் வேண்டியதாய் விட்டது.

ஒரு சின்ன விஷயம்

அதாவது சென்ற மாதத்தில் தென் இந்திய ரயில்வேக் கம்பெனிக்கு உத்தியோகத்திற்கு ஆட்கள் தேவையிருந்தபோது 200க்கு மேற்பட்ட ஆட்கள் தேவை என்று ரயில்வேகாரர் விளம்பரம் செய்யும்போது,

பார்ப்பனர் 6 பேர் வேண்டுமென்றும் பார்ப்பனரல்லாதார் 196 பேர்கள் வேண்டுமென்றும் விளம்பரம் செய்திருந்தார்கள்.

மற்றும் சென்னை ஹைக்கோர்ட்டில் இன்று முஸ்லீம் உள்பட 5 பார்ப்பனரல்லாத ஜட்ஜிகள் இருக்கவும் சென்னை மாகாணத்தில் 2 தடவை கவர்னர் ஸ்தானம் காலியானபோதும் 2 பார்ப்பனரல்லாதாரே கவர்னர் வேலைபார்க்கவும், 7 மந்திரிகளில் 5 இந்திய மந்திரிகள் ஸ்தானத்தில் சுமார் 10 வருஷகாலமாய் 5 பேரும் பார்ப்பனரல்லாதாராகவே இருக்கவும், பார்ப்பனருக்கே பெரிதும் ஏகபோக உரிமையாய் இருந்த முனிசீப், ஜட்சி ஆகிய உத்தியோகங்களில் 100க்கு 20 வீதமாவது பார்ப்பனரல்லாதார்களாக ஆகி பார்ப்பனரல்லாதார் வக்கீல்கள் ஆங்காங்கு 100க்கு 10, 20, 30 வீதம் பெருகி பார்ப்பனர்களின் பிரபுத்தன்மைப் பிழைப்பு நாளுக்கு நாள் குறையவும், மற்றும் பொதுவாக பார்ப்பனர்கள் வீடுகள் ஒவ்வொன்றிலும் 1, 2, 3 பையன்கள் பி.ஏ., எம்.ஏ., வரை படித்து விட்டு வேலையில்லாமல் திண்டாடவும் பார்ப்பனரல்லாதாரை சிபார்சுக்கு கெஞ்சவுமான நிலையில் இருந்து வருவது யாரும் அறியாததல்ல.

மற்றும் ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் கொச்சி சமஸ்தான திவானாகப் போன பின்பு அதற்கு முன்பு அச்சமஸ்தானத்தில் 100க்கு 2 வீதம் இருந்த பார்ப்பனர்க்கு பெரும் உத்தியோகங்களில் 100-க்கு 40 வீதம் 50 வீதம் இருந்த உத்தியோக விகிதத்தை மாற்றி பார்ப்பனர்களுக்கு இனிமேல் 100க்கு 2 உத்தியோகந்தான் என்றும் பார்ப்பனரல்லாதாருக்கு 100க்கு 98 என்றும் தீர்மானம் செய்து விட்டார். அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களாக இருந்து வந்தவர்கள் 100க்கு 40 வீதம் உத்தியோகம் பெறும்படி ஆகிவிட்டது.

இது மைசூர் சமஸ்தானத்திலும் பம்பாய் மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் பரவி அங்கும் பார்ப்பன ஏகபோக ஆதிக்கம் குறையும்படியான - ஒழியும்படியான நிலைமை ஏற்பட்டு வருகிறது என்றால் பார்ப்பான் வயிறு வேகாமலோ, ஒற்றுமைப்படாமலோ, கட்டுப்பாடாக அக்கரையும் ஆத்திரமும் படாமலோ இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இந்த நிலைமை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகுமானால் பார்ப்பனர்கள் நிலை இன்னும் ஒரு 25 வருஷ காலத்துக்குள் தாழ்ந்த ஜாதி என்று கருதும்படியான நிலைமைக்கு வந்துவிடும் என்பதில் என்ன தடை?

இப்போது சங்கீத தொழில், நாடகத் தொழில், நாட்டியத் தொழில் என்பவைகளில் கூட பார்ப்பனர்கள் தங்கள் பெண்களை தாராளமாய் இறக்கிவிட்டார்கள். இத் தொழில்களுக்கு என்னதான் மதிப்பு கற்பித்தாலும் இது வரை நம்நாட்டில் இத் தொழில்களில் ஈடுபட்டிருந்த பெண்களை பெரும்பாலும் கீழ் ஜாதியார்கள் என்றும் விவசாரிகள் என்றும் கருதி வந்திருக்கிறார்கள்.

விவசாரித்தனத்தில் பயனடையவும் பெருமை பெறவும் இத்தொழில்களே பெரிதும் பெண்களுக்கு உதவி செய்து வந்திருக்கின்றன என்றும் இதை அனுபவிக்கிற புருஷன்களும் கெட்டுப்போகிறார்கள் என்றும் கருதி பல பெரியோர்கள் அக்கூட்டங்களையே பஹிஷ்கரித்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொழிலை பார்ப்பனப் பெண்கள் ஏகபோகமாக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?

மற்றும் இதுபோன்ற வேறுபல தொழில்களை - இழிவு என்று கருதப்பட்டவைகளை பார்ப்பனர்கள் தங்கள் வாழ்விற்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்கள்.

நம் நிலையோ

நம் நிலையோ நம்மில் தாழ்ந்த ஜாதி என்றும், இழி ஜாதி என்றும் கீழ் மக்கள் செய்யும் தொழிலை உடையவர்கள் என்றும் கருதப்பட்டு வந்த மக்கள் முதல் கொண்டு சகல வகுப்பு மக்களிலும் இந்த 15 வருஷகாலத்துக்குள்ளாக தாராளமாகப் படிக்கவும் பரீøையில் பாஸ் செய்து பட்டம் பெறவும் 100க்கு 5, 10 வீதமாவது பெரிய உத்தியோகங்கள் பெறவும் இவர்களால் எவ்வளவோ மதிப்பாயும் பக்தியாயும் கருதப்பட்டு வந்த பார்ப்பனர்களை சாதாரணமாக நீ, நான், வா, போ, வாடா, போடா என்கின்ற மாதிரியில் சமத்துவமாகவும் சமீபமாகவும் அழைக்கும்படியான - மதிக்கும்படியான நிலைமைக்கு வந்துவிட்டோம்.

நமக்கு உத்தியோகப் பஞ்சமென்பது தெரிவதற்கில்லாமல் தானாகவே, தான் பிறப்பதற்கு முன்பே - படிப்பதற்கு முன்பே - பாஸ் செய்வதற்கு முன்பே உரிமை ஏற்பட்டிருப்பதாய் - காத்துக்கொண்டிருப்பதாய்க் கருதிக்கொண்டு "எனக்கு என்ன செய்தீர்கள்? எனக்கேன் அந்த உத்தியோகம் கொடுக்கவில்லை?" என்று பார்ப்பனரல்லாத பிரமுகர்களை மிரட்டி உத்தியோகம் பெறவும் சில சமயங்களில் நம்மில் சில வகுப்புகளில் உத்தியோகத்துக்கு ஆள் இருக்கிறதா என்று தேடிப்பிடிக்கவேண்டிய அவசியம் வரவும், சிலர் "எனக்கு அந்த உத்தியோகம் வேண்டாம், இந்த உத்தியோகம் தான் வேண்டும்" என்று வாதாடவும் பாத்தியம் கொண்டாடவுமான நிலைமை சிறிதாவது ஏற்பட்டு இருக்கிறது.

மற்றும் சில குடும்பங்களில் பார்ப்பனரல்லாதார் என்பதற்காக புருஷனுக்கு உத்தியோகம் கிடைத்தவுடன் பெண் ஜாதிக்கு உத்தியோகம் ஏன் கொடுக்கவில்லை என்று கோபித்துக் கொள்ளவும், இருவருக்கும் உத்தியோகம் கொடுத்தால் இருவரையும் ஏன் ஒரே பக்கத்தில் போடவில்லை என்று கோபித்துக்கொண்டு வேண்டாம் எனவும், இருவருக்கும் ஒரே இடத்தில் உத்தியோகம் கிடைத்தால் மேல் உத்தியோகமும் அவசரப் பிரமோஷனும் உயர்ந்த சம்பளமும் ஏன் கொடுக்கவில்லை என்று நிஷ்ட்டூரப்படவுமான நிலைமையும் ஏற்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு பார்ப்பனரல்லாத பெற்றோர்களும் "என் பையன் ஏன் படிக்கவில்லை" என்று வாத்தியார்களை கண்டிக்கவும் "என் பையனை மேல் கிளாஸில் தாக்கல் செய்துகொள்" என்று ஹெட்மாஸ்ட்டரை அதிகாரம் செய்யவும் மிரட்டவும் "காலர்ஷிப் கொடுக்கிறாயா இல்லையா" என்று பள்ளிக்கூட மேனேஜர்களையும் பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் அதிகாரம் செய்யவும் காலேஜúகளில் இடம் ஒதுக்கிவைக்கும்படி அதிகாரிகளுக்குத் தந்திகொடுக்கவும் வீடு வாசல் உடையவர்கள் "என் வீட்டுக்கு வரி குறைக்கிறாயா இல்லையா" என்று சேர்மென் கவுன்சிலர்களை அதட்டவும் கவுன்சிலர் "விண்ணப்பம் எழுதிக்கொடு" என்றால் "நீங்களே எழுதிக்கொள்ளுங்கள், நான் கையெழுத்து போடுகிறேன்" என்று சொல்லவும் இப்படியே இன்னும் பல துறைகளிலும் கஷ்டம் இன்னதென்று உணரமுடியாமல் அதிகாரத்திலும் ஆணவத்திலும் பாத்தியத்திலுமே காரியம் செய்துகொண்டு போகும்படியான சவுகரியங்களுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றும் பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் அரசியலிலும் 15 வருஷத்துக்கு முன் தாங்கள் எப்படி இருந்தவர்கள் என்பதை சரிவர உணராத வாலிபர்களும் இன்று தாங்கள் இருக்கும் நிலை தங்களுக்கு உரிமை உள்ளதே தவிர இது யாராலும் ஏற்பட்டதல்ல என்று கருதும் வாலிபர்களுமே இன்று இருக்கிறபடியால் பழய நிலை எப்படிப்பட்டது என்று தெரியாத வாலிபர்களும் பழய நிலை மாறினதற்கு நன்றி செலுத்த வேண்டியதல்லாதவர்களும் பழய நிலைக்குப் போக நேரிட்டால் என்ன செய்வது என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாதவர்களுமாய் இருக்கிறார்கள்.

உதாரணமாக ரஷியாவை எடுத்துக்கொள்ளுவோம். ரஷியாவில் புரட்சி ஏற்பட்ட 1917ம் வருஷத்துக்கு இன்று 20 வருஷம் ஆகிறது. ஆதலால் இன்று அங்கு 20 வருஷ வயதுள்ள வாலிபர்களும் புரட்சியின் போது 10, 15 வயதுடைய சிறுபிள்ளையாய் இருந்து இன்று 30, 35 வயதுவரை உள்ளவர்களுக்கும் புரட்சிக்கு முன் அந்நாட்டில் தங்களுடைய நிலைமையும் வாழ்க்கையும் சுயமரியாதையும் எப்படி இருந்தது என்பது பிரத்தியக்ஷத்தில் தெரிந்து இன்றைய நிலைமையோடு ஒத்திட்டுப் பார்த்து மகிழ்ச்சி யடையவும் இந்நிலைமைக்கு உதவியாய் இருந்து நடத்தி வருகிறவர்களுக்கு நன்றி செலுத்தவும் வேண்டிய நிர்ப்பந்தம் அந்த மக்களுக்கு இல்லாமலே போய்விட்டது.

இந்த காரணத்திலேயே இப்போது ரஷியாவில் புரட்சிக் கொள்கை தளர்ச்சியடைகின்றது என்றும், நாஸ்திகம் குறைகின்றது என்றும், ஜனநாயகமுறை கையாள யோசிக்கப்படுகின்றது என்றும் சொல்லப்படுகின்றது. இது உண்மையாய் இருந்தால் இதில் ஆச்சரியப்பட இடமில்லை. ஏனென்றால் மக்களுக்கு கவலை ஏற்பட அவசியம் இல்லாமல் போய்விட்டது.

அது போலவேதான் நம் நிலையும் என்று சொல்லுவோம்.

உதாரணமாக சில வகுப்புகளை எடுத்துக் கொள்ளுவோம். 20 வருஷத்துக்கு முன் மேல் வேஷ்டியை இடுப்பில் கட்டிக்கொண்டு 20, 30 அடி தூரத்துக்கு அப்பால் இருந்து கை கட்டி வாய் பொத்தி சாமி, எஜமானே, புத்தி என்று மரியாதைச் சொல் வைத்துப் பேசி வந்த வகுப்பார்கள் இன்று சமீபத்தில் உட்கார்ந்து தட்டிக் கூப்பிட்டு சமமான முறையில் மரியாதை வைத்து எதிர்த்தும் பேசக்கூடிய நிலைமை வந்தால் அவர்களது மக்கள் தங்கள் பூர்வ நிலையை எப்படி நினைக்க முடியும்? மற்றும் எத்தனையோ பேர் சமூகத்துறையில் எவ்வளவு குற்றமாக கருதக்கூடியவர்களானாலும் "நாங்கள் 30 வருஷத்துக்கு முன்பே 50 வருஷத்துக்கு முன்பே சுயமரியாதைக்காரர்கள்" என்று கூறிக்கொண்டு மேடையில் முதல் வரிசையில் உட்காரக்கூடிய பெருமை வந்து விட்ட பின் பழைய நிலை எப்படி ஞாபகத்துக்கு வரும்? இன்றைய இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட உழைத்தவர்களுக்கு எப்படி மரியாதையோ நன்றியோ காட்ட முடியும் என்பதை யோசித்தால் அவர்களது நடத்தையும் அலட்சிய புத்தியும் தன்னை மறந்ததும் ஞாயம் தான் என்று தோன்றும்.

ஆகையால் இன்றைய வாலிபர்கள் அல்லது இன்றைய நடுப்பிராயமுள்ள மக்கள் சமூகத்துறை முற்போக்கு முயற்சிக்கு சிறிதாவது உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாமல் போனது நியாயமேயாகும். அதுபோலவே கிராமக் குடித்தனக்காரர்களின் மக்கள் உதவியும் நாம் எதிர்பார்க்க முடியாது என்பதற்கும் நியாயம் உண்டு. கிராமக் குடித்தனக்காரன் முன்பு எவ்வளவு செல்வவானாய் இருந்தாலும் பஞ்சாங்கப் பார்ப்பான், வக்கீல் பார்ப்பான், போலீசுக்காரன் ஆகியவர்களின் அடிமையாய் இருந்து வணங்கி வந்தது யாவரும் அறிந்ததேயாகும். அப்படிப்பட்டவர்களுடைய மக்கள் தன் நிலை அறிய முடியாமல் இன்று ஜில்லா, தாலூக்கா போர்டு மெம்பர்களாயும் தலைவர்களாயும் பட்டண வாசிகள் பலர் தங்களிடம் வந்து வாயில் காத்து தயவு எதிர்பார்க்கின்றவர்களாகவும் பட்டணங்களில் உள்ள வக்கீல்கள் கிராமங்களுக்கு சென்று கட்சிக்காரர்களை தேடும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கும் போதும் கிராமக்காரர்கள் சீர்த்திருத்த முயற்சியில் ஈடுபட வேண்டிய அவசியமென்ன என்று கேட்கின்றோம். ஆகவே இன்று சீர்திருத்த முயற்சி இயக்கம் வெற்றிபெறவில்லை என்றும் செல்வாக்குடன் இல்லை என்றும் சொல்லப்படுமானால் அதிலும் நாம் ஆச்சரியப்பட இடமில்லை.

ஆகையால் மனித சமூக சீர்திருத்த - முன்னேற்ற வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பொறுமையோடு இருக்கவேண்டும்; மனத்தளர்ச்சி அடையக்கூடாது கூடிய அளவு ஸ்தாபன நிர்மாண வேலையை நடத்திக் கொண்டு போக வேண்டும். இன்று நாட்டின் செல்வாக்கானது மனித சமூக முற்போக்கு விரோதிகளிடம் சிக்குண்டுவிட்டது. பழைய கஷ்டமறியா வாலிபர்கள் பெரிதும் அவர்களது அடிமைகளாக ஆகிவிட்டார்கள். பாமரமக்களுக்கு தங்களின் முன்னைய நிலையை தாங்கள் உணருவதற்கில்லாமல் போய் விட்டது. ஆதலால் செல்வாக்கு பெற்றிருப்பவர்களும் மனித சமூக விரோதிகளும் தங்கள் சுயநலமே பிரதானமெனக் கருதுபவர்களுமான பார்ப்பனர்களின் ஆதிக்கம் நன்றாக உச்சஸ்தானத்துக்கு போகவும், பார்ப்பனரல்லாத மக்கள் தங்கள் பழய நிலைமைக்கு வரவும் வீட்டுக்கு நாலு இரண்டு உத்தியோகத்துக்கு ஆகவும் வயிற்றுப் பிழைப்புக்கு ஆகவும் எவ்வித இழிவான வேலையும் செய்யத் தயாராகவும் சமூக துறையில் வருணாச்சிரமம் மேலும் பலப்பட்டு தலையெடுக்கவும் ஒவ்வொரு காரியத்துக்கும் பார்ப்பனரல்லாத பிரமுகர்களிடம் வந்து அதிகார தோரணையில் கேட்பது போய் பார்ப்பான் வாயலில் கோயிலுக்குச் சென்று கல் முன் நிற்பது போல் பக்தியோடு - பணிவோடு நின்று கெஞ்சவுமான நிலைமை சீக்கிரத்தில் ஏற்படத் தாராளமாய் இடம் கொடுத்துவிடவேண்டும். இந்த நிலை தானாகவே வரக்கூடும். ஆனாலும் அதற்கு எதிராய் நின்றால் கொஞ்சமாவது தடைப்பட்டு காலதாமதமாகி விடுமாதலால் தாராளமாய் விட்டுவிட்டால் நம்மக்கள் கூடிய சீக்கிரம் புத்திபெற்று இரட்டை ஆவேசத்துடன் புரட்சிக்கு தயாராகிவிடுவார்கள். இதில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை.

தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 28.03.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: