காங்கிரஸ்காரர்களின் ஆசை நிராசையாக ஆகிவிட்டது. அவர்கள் ஜனங்களையும் சர்க்காரையும் ஏமாற்றி பார்ப்பன ஆதிக்கத்துக்குப் புத்துயிர் கொடுத்து நாட்டைப் பழைய கால வருணாச்சிரம மனு ஆட்சி நாடாக ஆக்க முயற்சித்துப் பார்த்தார்கள். இதற்காக அவர்கள் செய்யக்கூடாத சூழ்ச்சிகளையும், பித்தலாட்டங்களையும் செய்து பார்த்தார்கள். கடைசியில் ஏமாற்றமடைந்து தோல்வி அடைந்தார்கள். இன்று அவிழ்த்து விட்ட குதிரைகள் போல் தலைமாடு கால்மாடு தெரியாமல் அளவு கடந்து பேசுவதும் வெறிபிடித்தவர்கள் போல் சீறிச் சீறி எதிரி மீது விழுகிறதுமாய் இருக்கிறார்கள்.

தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் இந்த சமயத்தில் தன்னை மறந்து விட்டார். தனக்கு இந்த சந்தர்ப்பத்தில் மந்திரி பதவி கிடைத்தால்தான் உண்டு இல்லாவிட்டால் தன் ஆயுளில் மந்திரியாக முடியாது என்று முடிவு செய்து கொண்டு "சாகிறவனுக்கு சமுத்திரம் முழங்கால் தண்ணீராகத் தோன்றும்" என்பது போல் தனது வாயைத் தாராளமாய் திறந்துவிட்டு சத்தியமூர்த்தியாரைவிட மோசமாய்ப் பேச ஆரம்பித்து விட்டார்.

2-4-37ந் தேதி சென்னை மாம்பலம் காங்கிரஸ் சபையில் பேசியதாகக் காணப்படும் சேதியில் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் பேசியதாகக் குறிப்பிட்டிருக்கும் குறிப்பில் "ஜனங்கள் கொடுத்தது குதிரை, சர்க்கார் தெரிந்தெடுத்தது கழுதை" என்று பெரும் எழுத்துத் தலைப்புக்கொடுத்து கீழே "சர்க்கார் ஜனங்கள் கொடுத்த குதிரைகளுக்கு கடிவாளம் போட யத்தனித்ததில் குதிரைகள் மறுத்ததும் அதை விட்டு விட்டு கழுதைகள் மீது சவாரி செய்யத் துணிந்து விட்டார்கள்" என்று தோழர் ஆச்சாரியார் பேசியதாகத் "தினமணி" 5ந் தேதி பத்திரிகையில் 6ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தப்படி ஆச்சாரியார் பேசியிருப்பாரானால் இது மிகவும் அயோக்கியத்தனமானதும் பொது ஜனங்களால் தக்கபடி புத்தி கற்பிக்கப்பட வேண்டியதுமான செய்கையாகும். ஆச்சாரியார் எப்போதும் நிதானமாய் பேசக் கூடியவர். அவரது பேச்சு எவ்வளவு விஷமம் பொருந்திய பேச்சா யிருந்தாலும் அதில் மரியாதையும் மனுஷத்தன்மையும் குறையாமல் இருக்கும். அப்படியிருக்க அவர் காதலித்த மந்திரி பதவி வேறு ஒருவரை காதலித்த உடன் அவரது மதியையும் மரியாதையையும் இழந்து இப்படி உளற வேண்டியவராய் விட்டார்.

இந்தக்குணம் தோழர் சத்தியமூர்த்தி அவர்களுக்கே பிறவிக்குணமாய் இருந்து வந்தது. அதற்கு உண்டான பதிலையும் மரியாதையையும் 100-க்கணக்கான தடவைகளில் மூர்த்தியார் அனுபவித்தும் வந்து இருக்கிறார். தோழர் சத்தியமூர்த்தியாரின் தோல் மொத்தமானதால் அவருக்கு கற்பிக்கப்பட்ட புத்திகள் ஒன்றுகூட பயன்படாமல் பழைய மாதிரி சண்டிக்கழுதை போலவே நடந்து கொள்ளுகிறார். ஆனால் ஆச்சாரியார் அந்த நிலைக்கு வந்தது மிகவும் வருந்தக்கூடிய காரியமாகும்.

ஆச்சாரியாருக்கும் அவர் இனி இம்மாதிரியான இழிவான நிலைக்கு இறங்காமல் இருக்கும்படி செய்வதற்கு ஆக பொதுஜனங்கள் புத்தி கற்பிக்க வேண்டிய அவசியம் வந்ததற்கு நாம் உண்மையிலேயே இரங்குகிறோம். தங்களைத் தவிர மற்றவர்கள் கழுதைகள் என்று பேசுவாரானால் பொது ஜனங்கள் புத்தி கற்பிக்காமல் இருப்பார்கள் என்று எந்த மடையனும் எதிர்பார்க்கமாட்டான்.

எலக்ஷனில் பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் வெற்றிபெற்று விட்டதினாலேயே ராஜ்ஜியம் தங்களுடையதாகிவிட்டதென்றும் பார்ப்பன ஆட்சி ஏற்பட்டு விட்டதென்றும் "என்ன வேண்டுமானாலும் பேசலாம், இனி நமக்கு யாரும் எதிரிகள் இல்லை, எல்லா மக்களும் பார்ப்பன அடிமைகள்தான்" என்றும் எண்ணி பார்ப்பனர்கள் தலைக்கிறுக்கு அடைந்துவிட்டார்கள். தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் மாத்திரமல்லாமல் ஆங்காங்குள்ள பார்ப்பன அதிகாரிகள் போலீசு இலாக்கா முதற்கொண்டு நீதி - ரிவனியூ இலாக்கா மாத்திரமல்லாமல் மற்ற அன்னக்காவடி "அக்ஷயபாத்திர" உபாதானப் பார்ப்பான் வரை இதே மாதிரி அயோக்கியத்தனமாகவும் அதிகப் பிரசங்கித்தனமாகவும் வீட்டிலும் தெருக்களிலும் தொழில் இடங்களிலும் மேடைகளிலும் பேசத் தொடங்கிவிட்டார்கள். காங்கிரசில் உள்ள பார்ப்பனரல்லாதார் பலர் பார்ப்பனர்கள் அங்கு பேசிக் கொள்ளப்படுவதை தங்களால் சகிக்க முடியாமல் நம்மிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்து அழுகிறார்கள்.

அதாவது இப்போது பார்ப்பனர்கள் "என்ன ஆணவம்? என்ன திமிர்? எவ்வளவு அயோக்கியத்தனமாய் பேசுகிறார்கள்? எத்தனை தைரியம் வந்து விட்டது?" என்று ஆத்திரமாய் பேசி ஆவலாதி கூறுகிறார்கள்.

நாட்டை யார் ஆள்வதானாலும் மனிதனுக்கு மானமும் மரியாதையும் முக்கியமான விஷயம் என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் இன்று பார்ப்பனர்களுக்கு இதில் சிறிதும் கவலை இல்லாமல் போய்விட்டது. "அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்பதுபோல் இன்னது செய்வது, இன்னது பேசுவது என்பதில்லாமல் குடிகாரன் வெறிகாரன்போல் கூத்தாடுவதை நாம் கொஞ்சமும் சகித்துக்கொண்டிருக்க முடியாது.

பாதுகாப்பு அவசியமேயாகும்

இன்று பார்ப்பனருக்கு எதிராக எந்த ஸ்தாபனமும் இல்லை என்று கருதும்படி ஆகிவிட்டதும், பார்ப்பனருக்கு எதிராகப் பேச எந்த மனிதனுக்கும் தைரியமில்லாமல் போய்விட்டது என்று கருதும்படியாகி விட்டதும் பார்ப்பனர்களுக்கு எதிராக ஒரு பத்திரிகையும் இல்லை, பிரசாரம் செய்ய ஒரு ஆளும் இல்லை என்று கருதும்படியாக ஆகி விட்டதுமே பார்ப்பனர்கள் இவ்வளவு தலைகொழுத்து பேச இடம் ஏற்பட்டு விட்டது.

முஸ்லீம்கள் விஷயத்திலும் பார்ப்பனர்கள் எவ்வளவு ஆணவமாய் நடந்து கொண்டார்கள் என்பதற்கு சென்னை கார்ப்பரேஷன் கூட்டத்தில் மாஜி மேயரும் சட்டசபை மெம்பரும் ஆன தோழர் அமீத்கான் சாயபும் டாக்டர் நியமதுல்லா கானும் வெளியிட்டிருக்கும் அபிப்பிராயமே போதுமானதாகும்.

மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் பார்ப்பனர்கள் எவ்வளவு கொடுமையாக நடந்து கொண்டார்கள் என்பதற்கும் தேர்தலில் அவர்கள் நடந்துகொண்டதே போதிய ருஜúவாகும்.

இன்றைய பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சியைப் பார்ப்பனர்கள் எவ்வளவாவது லட்சியம் செய்தார்களா என்பதற்கு சென்ற சட்டசபை தேர்தலில் பார்ப்பனர்கள் 215 ஸ்தானங்களில் முஸ்லீம், கிறிஸ்தவர், ஆதிதிராவிடர், வெள்ளையர்கள் ஆகியவர்கள் ஸ்தானங்கள் 75 போக, பாக்கி இந்துக்கள் என்பவர்கள் ஸ்தானங்கள் 140-க்கு பார்ப்பனர்கள் 50 பேர்களை நிறுத்தி ஜெயித்தும் விட்டார்கள் என்றால் மூன்றில் ஒரு பாகத்துக்கு மேலாகவே அடைந்துவிட்டார்கள் என்றால் அவர்களது துணிவுக்கும் ஆணவத்துக்கும் நமது கிளர்ச்சியை அலட்சியமாய் கருதுகிறார்கள் என்பதற்கும் வேறு ஆதாரம் என்ன வேண்டும் என்று கேட்கின்றோம். பொதுஜனங்கள் தேர்தல் மூலம் நடக்கப்படவேண்டிய காரியத்திலேயே மூன்றில் ஒரு பங்குக்கு மேல் கொள்ளை அடித்து விடுகிறார்கள் என்றால் இனி இவர்கள் செய்யும் காரியத்தை யாரும் ஆட்சேபிக்கக் கூடாது என்கின்ற நிபந்தனை கொண்ட வாக்குறுதியின் மீது மந்திரி ஆட்சியில் உட்கார்ந்தார்களேயானால் பார்ப்பனரல்லாதார் சமூகத்தை என்ன கதிக்கு ஆளாக்குவார்கள் என்பதை விவரிக்க வேண்டுமா என்று கேட்கிறோம். என்ன காரணத்தாலேயோ நம்மில் சில செல்லாக் காசுகளும் காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்க வேண்டிய "விபீஷணர்களும்" "அனுமார்களும்" பார்ப்பனர்களை தஞ்சமடைந்து விட்டதாலேயே நமது சமூகத்தின் சுயமரியாதையும் மனிதத்தன்மையும் அடியோடு பறிபோய் விட்டது என்று எண்ணி சும்மா இருந்து விடுவதா என்று கேட்கின்றோம். ஆதலால் பார்ப்பன ஆட்சியில் நமக்கு பாதுகாப்பு அவசியமேயாகும்.

ஏன் உறுதி மறுக்கப்பட்டது?

சர்க்கார் காங்கிரசுக்காரருக்கு உறுதிமொழி கொடுக்காததற்கு காரணம் கூறுகையில் இந்தியா மந்திரி அவர்கள் தெரிவித்து இருக்கும் ஒரு குறிப்பை எல்லோரும் கவனிக்க விரும்புகிறோம்.

சீர்திருத்த சட்டத்தில் குறைந்த எண்ணிக்கையுள்ள சமூகத்தார் நலத்தையும் பிற்போக்காளர்களாயுள்ள சமூகத்தார் நலத்தையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு கவர்னர்கள் கையில் விடப்பட்டிருக்கிறது என்றாலும் சட்டப்படி பார்த்தால் சட்டசபைக்கும் மந்திரிகளுக்கும் இது விஷயத்தில் என்னமும் செய்து கொள்ள அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரத்தை வைத்து அதாவது உதாரணமாகச் சொல்லவேண்டுமானால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி விஷயத்திலோ சமூக சுதந்திர விஷயத்திலோ அரசியல் - உத்தியோக இயல் பிரதிநிதித்துவ விஷயத்திலேயோ இருந்துவரும் பழக்கத்தையோ இனிமேல் செய்யப்படவேண்டிய அவசியமான காரியத்தையோ மந்திரிகளாவது சட்டசபையாவது மறுத்து விடுமானால் அது சட்டப்படி செல்லத்தக்கதேயாகும். அதாவது கவர்னருக்கு காங்கிரஸ்காரர் கொடுத்திருக்கும் நிபந்தனையாகிய சட்டரீதிக்குக் கட்டுப்பட்டு மந்திரிகள் நடந்துகொள்ளும் முறைக்கு அடங்கினதேயாகும். அப்பேர்ப்பட்ட சமயங்களில் கவர்னர்கள் விசேஷ அதிகாரத்தை செலுத்தாமல் போனால் என்ன கதியாவது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதிலிருந்து கவர்னர்கள் விசேஷ அதிகாரங்கள் செலுத்தப்பட வில்லையானால் அச்சமூகங்கள் அதோ கதி அடைய வேண்டியது தான் என்று ஏற்படுகிறதல்லவா?

இதுபோலவே அரசியல் சட்டத்தில் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் நசுக்கிவிட அநேக வசதிகள் இருக்கின்றன.

"பெண்கள் படிக்கக்கூடாது "சூத்திரர்கள்" படிக்கக் கூடாது, அவர்கள் நிலை மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளது எதுவோ அதுதான்" என்று வருணாச்சிரம முறையை மந்திரிகள் அனுஷ்டிக்க ஆரம்பித்துவிட்டால் அவை யாவும் சட்டப்படி செல்லக் கூடியதாகவே ஆகிவிடும். அப்போது கவர்னர்களுக்கு தனி அதிகாரம் இருந்தால்தான் மற்ற சமூகத்தார் சுயமரியாதையுடனோ மனிதத்தன்மையுடனோ வாழ முடியும் என்பதாகும்.

இதற்கு ஏற்றாற் போலவே காங்கிரசிலும் இவ்விஷயங்களில் தங்களிஷ்டப்படி நடக்கத் தகுந்த தீர்மானங்கள் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன வென்றால் "அவனவன் ஜாதி பழக்க வழக்க சாஸ்திரப்படி நடக்க வேண்டும்" என்றும் அதிகாரம் வந்தால் காங்கிரஸ்காரர்கள் அந்தப்படி நடக்கச் செய்வதாக ஜனங்களுக்கு உத்திரவாத மளிக்கிறதாகவும் தீர்மானங்கள் செய்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆதலால் காங்கிரசுக்காரர்கள் கவர்னர்களிடம் வாக்குறுதி கேட்பது என்பது தேசாபிமானத்தைப் பொருத்தோ சுதந்திரத்தைப் பொருத்தோ என்று எண்ணினால் அது முற்றிலும் பிசகேயாகும். மற்றென்ன வெனில் இன்று சிறிதாவது தலை தூக்கி இருக்கும் சிறுபான்மை சமூகங்களும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் தலைதூக்காதிருக்கவும் பழய நிலைக்கு அமிழ்த்தப்படவும் ஆன சூழ்ச்சிக்கு ஆகவே ஒழிய வேறில்லை என்பதை ஆதாரத்தோடு எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கூறத் தயாராய் இருக்கிறோம். ஆதலால் கவர்னர்கள் வாக்குறுதி கொடுக்கவில்லை என்கின்ற சாக்கை வைத்துக்கொண்டு மற்ற கட்சிகளையும் சமூகங்களையும் இவ்வளவு அயோக்கியத்தனமாய் பேசுவதை பொதுஜனங்கள் அடக்கியே ஆகவேண்டும். அதற்கு ஏற்ற எல்லா முயற்சிகளும் உடனே கையாளப்பட்டுத்தான் தீரவேண்டும். ஏனெனில் இது அவர்கள் வேண்டுமென்றே அத்துமீறிப் பேசும் அயோக்கியத்தனமான பேச்சாகும் என்றே கருதுகிறோம்.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.04.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: