சென்னையில் இம்மாதம் 10ந் தேதி சனிக்கிழமை நடந்த கார்ப்பரேஷன் எலக்ஷனில் காங்கிரசால் நிறுத்தப்பட்ட அபேக்ஷகரான தோழர் ஜகநாததாஸ் தோல்வி அடைந்து விட்டார். ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆரம்ப கர்த்தாவாகவும் தூணாகவும் இருந்த தோழர் நடேச முதலியார் அவர்கள் தம்பி தோழர் தாதுலிங்க முதலியார் வெற்றி பெற்று விட்டார். ஓட்டு விபரம் தாதுலிங்க முதலியாருக்கு 470 ஓட்டுகளும் காங்கிரஸ் அபேக்ஷகருக்கு 289 ஓட்டுகளுமாய் கிடைத்து இருக்கின்றன. ஜெயிப்பும் தோல்வியும் அபேக்ஷகர்கள் யோக்கியதையையும் ஓட்டர்கள் யோக்கியதையையும் நிச்சயிக்க சரியான கருவி ஆகிவிடும் என்று நாம் கருதுவதில்லை. வேறு அநேக தேர்தல்களில் அயோக்கியர்களும் தகுதி அற்றவர்களும் வெற்றிபெற்று விடுகிறார்கள். இப்போது எலக்ஷன் மோகம் கொண்டவர்கள் பெரிதும் எலக்ஷனில் வெற்றி பெறுவதன் மூலம் வயிறு வளர்க்கலாம் - வாழலாம் என்கின்ற சுயநலக்காரர்களே. அதுவும் ஓட்டர்கள் ஆவதற்கு நியாயமான யோக்கியதை இல்லாமல் குறைந்த அளவு யோக்கியதையை நாணயக்குறைவாய் பயன்படுத்தி ஓட்டர் லிஸ்டில் புகுந்து கொள்ளுகிறவர்களே பெரிதும் தேர்தல்களில் போட்டியும் கவலையும் கொண்டு முன் வருகிற காலமாக ஆகிவிட்டது.

நமது நாட்டு ஜனப்பிரதிநிதிசபை என்று அடியோடு பொய் கெளரவம் பாராட்டிக் கொள்ளும் காங்கிரசின் ஆதிக்கமும் ஏறக்குறைய இந்த யோக்கியதை கொண்டவர்களையே அதிகமாய் கொண்டுவிட்டதால் இப்போதைய தேர்தல் பிரசாரம் பெரிதும் அபேக்ஷகர் யார் என்பதை மக்கள் ஓட்டர்கள் உணரக்கூடாதபடி சூழ்ச்சி செய்து வஞ்சகமாக ஓட்டுப் பெறும்படியான முறை கையாளப்பட்டு வருகிறது. இந்தக் காரணத்தாலேயே காங்கிரஸ் தலைவரே "அபேக்ஷகர்கள் கூனோ, குருடோ, மொண்டியோ, முடமோ, அயோக்கியனோ மற்றும் எவனாகவோ இருந்தாலும் பாராமல் காங்கிரசு என்று சொன்னாலே போதும், அவர்களுக்கு ஓட்டுச் செய்யுங்கள்" என்று உபதேசம் செய்திருக்கிறார்.

ஆதலால் இப்போது நாம் தகுதி, தகுதி இன்மை என்பதை பிரமாதப்படுத்திக் கொள்ளவில்லை. மற்றென்னவென்றால் "உலகம் காங்கிரஸ் வசமாகி விட்டது. காங்கிரசுக்கு எதிராக யார் நின்றாலும் பஸ்மீகரமாய் விடுவார்கள். காங்கிரசை எதிர்க்க யாராலும் முடியாது" என்று வீண் அகம்பாவமும் ஆணவமும் கொண்ட சவடால் பேச்சுக்களுக்கு இன்று சாவுமணி அடித்தாய் விட்டதல்லவா என்பதையே எடுத்துக்காட்டு கிறோம். சட்டசபை தேர்தல் நடந்து இன்னும் 2 மாதம் கூட ஆகவில்லை. அதுவும் சென்னை நகரத்தில் சகல காங்கிரஸ் தலைவர்களும் குடி இருக்கும் தொகுதியில் பார்ப்பன அக்கிரஹாரத்தில் சகல தலைவர்களாலும் எவ்வளவோ விஷமப்பிரசாரங்கள் நடத்தி ஜனங்களை ஏமாற்றி நடத்திய தேர்தலில் காங்கிரஸ் அபேட்சகர் இம்மாதிரி படுதோல்வி அடைந்து விட்டார் என்றால் இந்த முடிவைக் கொண்டு என்ன நிச்சயிப்பது என்று கேட்கின்றோம்.

காங்கிரசின் வண்டவாளம் 1 மாதத்திலேயே வெளுத்துப் போய் விட்டது என்றும் காங்கிரஸ்காரர்களின் பித்தலாட்டங்களை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் காங்கிரஸ்காரர்கள் ஓட்டர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் வெறும் ஏமாற்றுப் பிரசாரமே ஒழிய வேறில்லை என்று உணர்ந்துவிட்டார்கள் என்றும் காட்டுகிறதா இல்லையா என்று கேட்கின்றோம்.

கார்ப்பரேஷனில் காங்கிரஸ்காரர்கள் தாங்கள் போனவுடன் வரிகளைக் குறைப்போம் என்றவர்கள் இந்த 6 மாத காலமாய் யாதொரு வரியும் குறைக்காமல் வரி குறைக்க மற்ற கட்சியார் கொண்டுவந்த தீர்மானங்களை எதிர்த்ததோடு பல விஷயங்களில் இப்போது அதிக வரியும் போட ஆரம்பித்து விட்டார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு சாதிப்பதாய்ச் சொன்னதையெல்லாம் மறந்து அவர்கள் விஷயத்தில் வரும் தீர்மானங்களையெல்லாம் தோற்கடித்தே வருகிறார்கள். சேரியில் அவர்கள் படும் கஷ்டம் கொஞ்சமல்ல. முஸ்லீம்கள் விஷயத்தில் குரோதமாகவே நடந்து கொள்ளுகிறார்கள். மற்றும் உண்மையைப் பேச வேண்டுமானால் சென்னை கார்ப்பரேஷனில் 40 டிவிஷன்களுக்கு 40 ஸ்தானங்களுக்கு 11 பார்ப்பனர்கள் வெற்றி பெற்று வந்து இருக்கிறார்கள் என்பதும் ஆல்டர்மென் ஸ்தானங்கள் 5ல் அவர்களே மெஜாரிட்டி என்பதும் (இப்போது காலியான ஸ்தானம் அது எந்தக் கட்சியை சேர்ந்ததானாலும் அது ஒரு பார்ப்பனரல்லாதாருடையது என்பதும்) யாவரும் அறிந்ததாகும். அப்படி இருக்கும்போது இந்த ஒரு ஸ்தானத்துக்கும் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியாரும் சத்தியமூர்த்தி சாஸ்திரியாரும் மறுபடியும் தோழர் ஜெகநாததாஸ் என்கின்ற ஒரு பார்ப்பனரை நிறுத்தி போட்டி போடுவதென்றால் இது தேசியமா பார்ப்பனீயமா - இது சுயராஜ்ஜியமா பார்ப்பன ராஜ்ஜியமா என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். பார்ப்பனர்கள் உண்மையாகவே தேசாபிமான எண்ணம் கொண்டு இந்திய நாடு விடுதலை பெறவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தின் மீது பாடுபடுகிறவர்களாய் இருந்தால் சந்து கிடைத்த இடங்களில் எல்லாம் பார்ப்பனர்களையே கொண்டு வந்து துணிப்பானேன்? பார்ப்பனர்களைத் தவிர மற்ற வகுப்பார்களுக்கு புத்தி இல்லை என்று கருதி இருக்கிறார்களா, அல்லது பார்ப்பனர் ஆளுவதுதான் சுயராஜ்ஜியம் என்றும் பூர்ண சுயேச்சை என்றும் மற்றவன் ஆளுவது அந்நிய ராஜ்ஜியம் என்றும் கருதி இருக்கிறார்களா? என்பது விளங்கவில்லை.

தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பேசும் போதெல்லாம் "வகுப்பு உணர்ச்சியை காட்டாதீர்கள். வகுப்புப் பேச்சு தேசியத்துக்கு விரோதமானது - வகுப்பு துவேஷம் கற்பிக்கிறவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள் - காங்கிரசுக்கு ஜாதி மத வகுப்பு வித்தியாசமில்லை" என்றெல்லாம் மேடையில் பேசிவிட்டு அறிக்கையில் வெளியிட்டு விட்டு சமயம் கிடைத்த போதெல்லாம் பார்ப்பனர்களை அழைத்துக் கொள்வது என்றால் இதற்கு என்ன பேர் வைப்பது என்று கேட்கிறோம்.

சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷனில் முஸ்லீம்களுக்கு இரண்டே ஸ்தானங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. முஸ்லீம்கள் ஜனத்தொகை 100க்கு 25 பேர்களுக்கு மேல் உண்டு. அப்படிப்பட்ட சமூகத்துக்கு 40-க்கு 2 ஸ்தானம் கொடுத்து விட்டு நூத்துக்கு 3 வீதமுள்ள பார்ப்பனர்கள் 40-க்கு 15 ஸ்தானங்களை அடித்துக்கொண்டார்கள் என்றால் காங்கிரசிலோ பார்ப்பனர்கள் இடமோ வகுப்பு நியாயமோ மைனாரிட்டி வகுப்பாருக்கு பாதுகாப்பு அளிக்கும் தன்மையோ இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

சென்ற வாரம் இந்தியா மந்திரியவர்கள் விடுத்த அறிக்கையில் "மைனாரிட்டி வகுப்பார்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு ஆக சர்க்காருக்கு விசேஷ அதிகாரம் இருக்க வேண்டியது அவசியமாகும்" என்று சொல்லியிருக்கிறார். இந்த வாசகத்தை நமது பார்ப்பனர்கள் காரியத்தில் அவசியமாக்கி காட்டிவிட்டு வாயில் மாத்திரம் மைனாரிட்டி வகுப்பைக் காப்பாற்றும் பொறுப்பு எங்களிடமும் இருக்கிறது, நாங்களும் கவனித்துக்கொள்ளுவோம் என்று சொன்னால் அதில் அருத்தமோ நாணையமோ ஏதாவது இருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

தோழர் காந்தியாரும் (தோழர் ஜட்லண்டு பிரபு சொல்வது போல், தனது பேச்சு எப்படிப்பட்டதானாலும் மதிப்பதற்கோ, காதுகொடுப்பதற்கோ பல முட்டாள்களும் மடையர்களும் நாட்டில் இருக்கிறார்கள் என்கின்ற ஆணவத்தால்) என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற அகம்பாவம் கொண்டு கண்டபடி உளறி வருகிறாரே ஒழிய அவருக்கு உலக ஞானமோ உண்மைக்காரியங்களில் கவலையோ சிறிதும் இருப்பதாகக் காட்டி கொள்வதே இல்லை.

"மைனாரிட்டி வகுப்பாரின் உரிமைகளை மந்திரிமார்கள் கவனிக்கவில்லையானால் அவர்கள் காங்கிரசுக்கு குழிதோண்டிக் கொண்டவர்களாகிவிடுவார்கள்" என்று தோழர் காந்தியார் ஜட்லண்ட் பிரபுக்கு பதில் சொல்லி இருக்கிறார். காங்கிரசு மந்திரிகளாக வரவிருந்த தோழர்கள் ஆச்சாரியாரும் சாஸ்திரியாரும் பார்ப்பனர்கள் நலம் தவிர மைனாரிட்டி வகுப்பாரின் நன்மையை எந்த சந்தர்ப்பத்தில் எந்தக் காரியத்தில் காட்டிக் கொண்டார்கள் என்று யாராலாவது காட்ட முடியுமா என்று காந்தியாரையே கேட்கின்றோம்.

ஆகவே நமது மக்கள் இனியும் தேசம் என்றோ, சுயராஜ்யம் என்றோ கருதிக்கொண்டு பார்ப்பன ராஜ்யம் ஏற்பட பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்துவருவதை இனியாவது விட்டுவிட்டு மானத்துடன் பிழைக்க வழி தேடி பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க முயற்சிப்பார்களாக.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.04.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: