இன்று இந்நாட்டில் அரசியல், சமூக இயல், பொருளாதார இயல் முதலாகிய துறைகளின் சீர்திருத்தம் முழுவதும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார், இந்துக்கள் - முஸ்லீம்கள் என்கின்ற வகுப்பு சச்சரவுகளாகவும் மதக்கலவரங்களாகவும் இருந்து வருகிறது. சென்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி - தமிழ்நாட்டு காங்கிரஸ் தத்துவம் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பு போரிலும் வடநாட்டு காங்கிரஸ் தத்துவம் பெரிதும் இந்து முஸ்லீம் என்கின்ற மதப்போரிலும் இருந்து வருகிறது. இரு நாடுகளிலும் காங்கிரசுக்கும் காங்கிரஸ் எதிர்ப்புக் கòக்கும் உள்ள பேதத்தின் காரணம் 100க்கு 90 பாகம் வகுப்புக்கும் மதத்துக்கும் பாதுகாப்புக்கும் சுதந்திரமும் சமஉரிமையும் கேட்கும் பிரச்சினையே முக்கியமாக இருக்கிறது. இவற்றை மறுப்பதே தேசியம் - தேசாபிமானம் என்று காங்கிரஸ் சொல்லுகிறதே ஒழிய வேறு கொள்கை எதையும் தேசாபிமானத்துக்கு அறிகுறியாய் சொல்லுவதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்பிரிவினையானது பார்ப்பனர்களை ஒன்று சேர்த்து கட்டுப்பாடாய் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தை அழுத்தி வருகிறது. காங்கிரஸ் தேசாபிமானம் என்பதின் பயனாய் வர வர பார்ப்பனர்களுக்கு தைரியமும் வலுவில் தாக்கும் உணர்ச்சியும் அதிகப்பட்டு வருகிறது. பார்ப்பனரல்லாதார் பாதுகாப்புக்கு அரசாங்கத்தைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்று மக்கள் கருதும்படி பார்ப்பனர்கள் செய்து வருகிறார்கள். பார்ப்பனரல்லாதார் கொஞ்சம் தலை எடுத்தாலும் அழுத்தப் பார்க்கிறார்கள். பார்ப்பனரல்லாத தேசியவாதிகள், தேசபக்தர்கள், தேசியத் தலைவர்கள், தேசியப் பத்திரிக்கைகள், தேசிய ஸ்தாபனங்கள் என்பவைகள் தமிழ் நாட்டில் இல்லாமல் செய்து விட்டார்கள். பார்ப்பனர் சம்மந்தமோ அவர்களுக்கு பெரியதனமோ இல்லாத எந்த ஸ்தாபனமும் நாட்டில் இருப்பதற்கு இல்லாமல் தொல்லை விளைவித்து ஒழித்து வருகிறார்கள்.

தொழிலாளர்கள் ஸ்தாபனங்கள் பூராவும் பார்ப்பனர்கள் கைப்பற்றிவிட்டார்கள். தொழிலாளர்களுக்கு சட்ட சபையில் பிரதிநிதித்துவம் வாங்க கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் யார் என்பதைப்பற்றி நாம் இங்கு பெருமை பேசிக்கொள்ள வரவில்லை. ஆனால் கிடைத்த ஸ்தானம் 6-ல் 4 ஸ்தானத்தை பார்ப்பனர்கள் கைப்பற்றிவிட்டார்கள். பெண்கள் ஸ்தானங்களில் தமிழ் நாட்டில் 4-ல் 2லீ ஸ்தானத்தை பார்ப்பனர்கள் கைப்பற்றி விட்டார்கள். இப்போது தொழிலாளர் ஸ்தாபனங்களும் பெண்கள் ஸ்தாபனங்களும் பார்ப்பனர் வசமாகிவிட்டது.

பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டு மாதம் 500 ரூபாய் வரும்படி வந்துகொண்டிருந்த சட்டசபை டிப்டி பிரசிடெண்ட் பதவியை ராஜினாமா கொடுத்த முத்துலòமி ரெட்டி அம்மையாரை தெருவில் விட்டு விட்டு திடீரென்று காங்கிரசில் புகுந்த ஒரு ருக்மணி அம்மாளை பெண்களுக்கு ஆக நிறுத்திக்கொண்டார்கள்.

இவைகள் ஒரு புறமிருக்க மற்ற சாதாரண ஸ்தானங்களில் கூட பார்ப்பனரல்லாதார் யாராவது தலைவராகவோ பிரதான புருஷராகவோ இருந்தால் அந்த ஸ்தானத்தையே அழிக்கப் பார்க்கிறார்கள்.

சமீபத்தில் சென்னையில் கூடிய தபால் இலாக்கா சிப்பந்திகள் மகாநாட்டிற்கு தோழர் டி.எ.வி நாதன் (ஜஸ்டிஸ் பத்திரிக்கை ஆசிரியர்) தலைமை வகித்து காரியங்கள் நடத்தியதற்கு ஆக அந்த ஸ்தாபனத்தை ஒழிக்க சில பார்ப்பனர்கள் அது பொது ஸ்தாபனமல்லவென்றும், அது சட்டப்படி செல்லாதென்றும் வேறு ஸ்தாபனமேற்படுத்திக் கொண்டதாகவும், பழய ஸ்தாபனத்துக்கு யாரும் சந்தா கொடுக்கக் கூடாது என்றும் விஷமப் பிரசாரம் செய்து அந்த ஸ்தாபனத்தையே கலைக்கப் பார்க்கிறார்கள். இவ்வளவுக்கும் அந்த ஸ்தாபனம் சர்க்காரால் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தும் அந்த இலாக்காவில் உள்ள பார்ப்பன மேலதிகாரிகளைக் கொண்டும் தொல்லை விளைவிக்கப்பார்க்கிறார்கள்.

ஸ்தாபன விஷயங்கள் இப்படி என்றால் பள்ளிக்கூட விஷயங்களிலும் பார்ப்பனர்கள் நிர்வாகத்தில் விளைவிக்கும் தொல்லையும் பிள்ளைகளுக்கு விளைவிக்கும் தொல்லையும் அங்கு ஜாதி பேதத்தை கற்பிக்கும் தன்மையும் அல்ப சொல்பம் என்று சொல்லிவிட முடியாது. பள்ளிக்கூடங்கள் அநேகமாக யாரால் நிர்வகிக்கப்பட்டாலும் அதன் பண்டுகள் பெரிதும் பார்ப்பனரல்லாதார் பணமாகவே இருப்பதும் அதிகாரமும் ஆதிக்கமும் மாத்திரம் பார்ப்பனர்களுடையதாகவே இருப்பதும் எங்கும் காணலாம். பார்ப்பன ஆதிக்கப் பள்ளிக்கூடங்களில் 100க்கு 100 உபாத்தியார்கள் பார்ப்பனர்களே.

உதாரணமாக ÿரங்கம் ஹைஸ்கூலுக்கு பணம் கொடுத்து பண்டு ஏற்படுத்தினவர்கள் பெரிதும் பார்ப்பனரல்லாதார்கள். அதாவது ராஜா சர். அண்ணாமலை, திவான் பகதூர் சபாரத்தினம், நவாப் அப்துல் ஹக்கீம், நாடிமுத்து பிள்ளை முதலாகியவர்கள் பெருந்தொகை கொடுத்து ஆதரித்துவரும் பள்ளிக்கூடத்தில் டிராயின்ங், வீவிங், பியூன் நீங்கலாக மற்றெல்லோரும் பார்ப்பன உபாத்தியாயர்களாகவே இருக்கிறார்கள். அப்பள்ளிக்கூடத்து தலைமை உபாத்தியார் வேறு பள்ளிக் கூடத்தில் இருந்து வயதாகி ரிட்டையர் ஆனவர். 40 ரூ சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். பிள்ளைகளை வெளியூர்களுக்கு பாடம் கற்பிக்கக் கூட்டிக்கொண்டு போனால் சாப்பாட்டில் வித்தியாசம், இடமாத்திரமல்லாமல் நேரமும் வித்தியாசம். அதாவது பார்ப்பன பிள்ளைகள் சாப்பிட்ட பிறகு சாப்பாடு போடுவது என்கின்ற கொடுமையில் நடத்தப்படுகிறது. இந்த யோக்கியதை உள்ள உபாத்தியாயர்கள் தான் எல்லோரும் தேசபக்தர்களாகவும் அவர்கள் பெண்டு பிள்ளைகள்தான் காங்கிரசுக்கு ஓட்டுபோட ஓட்டர்களை இழுத்து வருபவர்களாகவும் விளங்குகிறார்கள். இனி பார்ப்பனரல்லாதார் பணத்தில் வயிறு வளர்க்கும் வக்கீல்களோ பிச்சை எடுத்துப் படித்து பாஸ் பண்ணி வாழ்வது முதல் நம் பணமாய் இருந்தாலும் அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு கேடு தேடுபவர்களாய் இருப்பதுடன் எவ்வளவு இழிவுபடுத்துகிறார்கள் என்பதைக் கவனித்தால் எவனுக்கும் ரத்தம் கொதிக்காமல் இருக்காது. உதாரணமாக தேவகோட்டை வக்கீல்கள் அவ்வளவு பேரும் தேசபக்தர்கள். அதாவது 65 பார்ப்பன வக்கீல்களும் கையெழுத்து போட்டு ராஜா சர். மாப்பிள்ளைக்கு ஓட்டுப் போடக்கூடாது என்று நோட்டீசு போட்டவர்கள். அப்படிப்பட்டவர்கள் வக்கீல் ரூமில் வைத்திருக்கும் தண்ணீர்ப் பாத்திரத்தை பார்ப்பனரல்லாத வக்கீல்கள் தொடக் கூடாது என்று செய்து அது விஷயமாய் காங்கிரஸ்காரர்களுக்குள்ளாகவே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்று சண்டை யேற்பட்டு தோழர் காந்திவரை இந்த சேதி போய் ஒன்று மில்லாமலாகி இன்றும் அந்த வித்தியாசம் இருந்து வருகிறது.

இந்தி

பார்ப்பனர்களால் நடத்தப்படும் பொது ஸ்தாபனங்களில் உள்ள ஒழுக்கங்களோ சொல்லத் தேவையில்லை. உதாரணமாக இந்தி பாஷை படிப்பு என்று பார்ப்பனரல்லாதாரிடம் லக்ஷக்கணக்காய் காந்தி வசூல் செய்து கொடுக்கும் பணத்தில் பார்ப்பனர்களையே சிப்பந்திகளாய் வைத்து வேலை செய்வதும் அந்தப்படி சென்னையில் நடத்திவந்த ஒரு இந்திய ஸ்தாபனத்தில் பல பெண்கள் படிக்க வந்து கொண்டிருந்ததில் அந்த ஸ்தாபனத் தலைவர் ஒருவர் அப்பெண்ணைக் கலவி செய்து வயிற்றை நிரப்பி அது கர்ப்பவதி ஆகிவிட்டது. கடசியாக தலைவர் செய்த காரியம் என்று வெளியாகி தலைவரை நீக்கி விட்டு காந்தியார் கண்டித்து ஒரு வியாசம் எழுதி மழுப்பிவிட்டார். கலவி நடத்திய ஒரு பெண்ணுக்கு கர்ப்பமானதினால் அது கண்டு பிடிக்கப்பட்டது. கர்ப்பமாக்காமல் இன்னம் எத்தனை பெண்களை கலவி செய்திருப்பார் என்று யோசித்துப் பார்த்தால் இவர்களது நாணயமும் இவர்கள் ஸ்தாபனத்தில் சம்மந்தம் வைத்துக் கொள்வதின் யோக்கியதையும் விளங்கும். இன்னமும் கதர் ஸ்தாபனத்தில் நடக்கும் அக்கிரமம் எவ்வளவு என்று யாராவது நிர்ணயிக்க முடிகிறதா? பார்ப்பனர்கள் ஆதிக்கம் வைத்து நடத்திய காலத்தில் M ஒன்றுக்கு 30 ஆயிரம், 40 ஆயிரம் ஆக லக்ஷக்கணக்கில் நஷ்டம் வந்திருக்கிறது. பெரும்பாகம் வேலையற்ற பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கொடுப்பது, அவர்கள் தாறு மாறாய் நிர்வாகம் நடத்துவது, பெரும் சம்பளம் அனுபவிப்பது ஆகிய அக்கிரமங்களேயாகும். பொது ஜனங்கள் 3 அணாகூட பெறாத துணிக்கு 9 அணா 10 அணா கொடுத்து வாங்கி நஷ்டமடைகின்றது ஒரு புறமிருக்க, கதர் கொள்முதல் முதலில் லக்ஷம் இரண்டு லக்ஷம் நஷ்டமாவது என்றால் இவர்கள் நிர்வாகத்தின் யோக்கியதையை என்னென்று சொல்லமுடியும். இந்த யோக்கியதையும் ஒழுக்கமும் நாணயமும் திறமையுமுள்ளவர்கள் பார்ப்பனரல்லாதார்களை குறை கூறுவதும் பொது வாழ்வில் இருந்து ஒழிக்கப்பார்ப்பதுமான குறும்புகளும் விஷமங்களும் செய்து வருவது சகிக்கக் கூடியதா என்று கேட்கிறோம். இதே மாதிரியே இப்பார்ப்பனர் எந்த ஜில்லா போர்ட் முனிசிபாலிட்டி ஆகியவைகளில் இருந்தாலும் சதா நசுங்குச் சேட்டைகள் செய்து நிர்வாகத்துக்கு தொல்லை கொடுப்பதும் துன்பம் விளைவிப்பதுமாகவே செய்து வருகிறார்கள்.

உத்தியோகத்தில் மேல் பதவியில் இருந்தாலும் கீழ் பதவியில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுத்து இம்சிக்கிறார்கள்.

தபால் - ரயில் பார்சல், கோர்ட்டு முதலிய சர்க்கார் ஸ்தாபனங்களில் உள்ள பார்ப்பனர்களும் அவர்களுக்கு திருப்தி இல்லாத காரியங்களிலும் திருப்தி இல்லாதவர்கள் விஷயத்திலும் எவ்வளவு தொல்லை கொடுக்க வேண்டுமோ அவ்வளவு தொல்லை விளைவித்து காரியங்களை கெடுத்து வருகிறார்கள்.

இவற்றையெல்லாம் கவனிக்கும்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி பதவிகள் இருந்தால் ஒழிய இக் கொடுமை ஒழியாதென்றே முடிவு கட்ட வேண்டியதாக இருக்கிறது.

குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.05.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: