ஆச்சாரியார் ஆத்திரம்

தோழர்களே!

எலக்ஷன் முடிந்த இந்த இரண்டு மாதகாலமாய் எவ்வளவோ இடத்துக்கு நாங்கள் அழைக்கப்பட்டும் பொதுக் கூட்டங்களில் 2, 3 - மாதத்துக்கு பேசக்கூடாது என்கின்ற கருத்தின் மீது பேச மறுத்துவிட்டோம். சமுதாய விஷயமாகவே பேசினோம். இங்கு (பூவாளூரில்) இதற்கு ஆகவே எங்களை வரவழைத்து ஆடம்பர ஊர்வலங்கள் செய்து பல வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக்கொடுத்து அரசியலைப்பற்றி பேச வேண்டுமென்று கட்டளை இட்டு இருக்கிறீர்கள். ஏதோ எனது அபிப்பிராயத்தைக் கூறுகிறேன். நீங்கள் தயவு செய்து பொறுமையாய்க் கேட்டு நன்றாகச் சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். கண்மூடித்தனமாக நம்பி விடாதீர்கள். வெறுப்பாகவும் கருதி விடாதீர்கள்.

தற்கால அரசியல் நிலை

தற்கால அரசியல் என்றால் எதைப் பேசுவது? இன்று மிக்க பிரபலமான பேச்சாய் இருக்கும் அரசியல் காங்கிரஸ் வெற்றியும் ஆணவப் பேச்சும் அவர்களது கூப்பாடுகளும் விஷமப் பிரசாரங்களுமல்லாமல் வேறு எதைச் சொல்லுவது என்பது எனக்கு விளங்கவில்லை. எலக்ஷனில் தோல்வியுற்றதாகக் கருதிய ஜஸ்டிஸ் கட்சியார் இனிமேல் என்ன செய்வது என்பது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. அவர்கள் அடுத்த மாதம் 9-ந் தேதி ஒரு மீங்டிங்கு போட்டிருக்கிறார்கள். அதில் ஏதாவது அடுத்த வேலைத்திட்டம் பற்றிப் பேசி ஏதாவது ஆரம்பிக்கக்கூடும். இப்போது வாய் மூடிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே சுயமரியாதைக்காரர்களும் அடுத்து கூட்டப்படும் மாகாண மகாநாட்டில் ஏதாவது தீவிர வேலைத்திட்டம் வகுத்து தொடர்ந்து வேலை செய்வது என்கின்ற கருத்து மீது ஸ்தாபனங்களை புனருத்தாரணம் செய்து வருகிறார்கள். இந்த நிலைமையில் காங்கிரஸ்காரர்கள் தங்கள் இஷ்டப்படி தாறுமாறாய் வகை தொகை இல்லாமல் ஆணவமாய் கூத்தாடி வருகிறார்கள்.

ஆச்சாரியாரின் ஆத்திரம்

எனது தோழர் ஆச்சாரியார் இவ்வளவு மோசமாக மதி இழந்து பைத்தியம் பிடித்து அலைவார் என்று நான் எப்போதும் கருதியதே இல்லை. காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டதை சகிக்க அவரால் முடியவில்லை. அன்று முதல் இன்று வரை அவரது பாதம் நிலத்தில் படுவதாக எனக்கு தெரியவில்லை. தலைகீழாக தலையில் நடப்பதாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.

நாட்டைப்பற்றின பொறுப்பு அவருக்கு சிறிதும் இல்லை. மந்திரி வேலை அடைய முடியாமல் போய்விட்டதே என்கின்ற ஆத்திரம் தான் அவரைப் பிடித்து ஆட்டுகிறது.

முத்துரங்கமும் மூர்த்தியும் எங்கே?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தோழர் முத்துரங்க முதலியார் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் தென்படுவதில்லை. தோழர் சத்தியமூர்த்தியார் விஷயமும் சத்தியமூர்த்தி என்று ஒருவர் இருந்ததாகவே இப்போது மக்களுக்கு ஞாபகமில்லாத மாதிரியில் மறைந்துவிட்டார். ஆச்சாரியார் விளம்பரம் தான் பலமாக இருக்கிறது. பார்ப்பனர்கள் உள்ளுக்குள் இப்போது அவரை சபித்துக்கொண்டு இருந்தாலும் வெளியில் பலமான விளம்பரம் செய்கிறார்கள். பத்திரிகைகளும் அதிகமான விளம்பரங்கள் செய்கின்றன. தோழர் கனம் சாஸ்திரிக்கு அடுத்த விளம்பரம் இவருக்குத்தான் இருந்து வருகிறது. எவ்வளவு விளம்பரம் செய்தும் வெறும் எண்ணெய்ச் செலவே ஒழிய பிள்ளை பிழைக்கிறதைக் காணோம் என்கின்ற பழமொழிப்படி தலையெடுக்க வழியில்லாத நிலைமையை ஏற்படுத்திக்கொண்டு விட்டார். திண்டுக்கல் தோழர் மத்திரன் அவர்கள் தோழர் சத்தியமூர்த்தியைப் பற்றி பாடியது போல் அதாவது "உமக்கு அடுத்துவரப் போகுதையா அரசியலில் மரணம்" என்றதுபோல் சத்தியமூர்த்தி சாஸ்திரிக்கும் ராஜகோபால ஆச்சாரிக்கும் அரசியல் மரணம் ஏற்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மோசம், நாசம், கம்பிளி வேசம் என்கின்ற மாதிரி சத்தியமூர்த்தியார் நாசமாய்விட்டார். ஆச்சாரியார் பீச்சாண்டி ஆகிவிட்டார். வெறும் வசவைத் தவிர இனி அவர் வாழ்வு உயருவது குதிரைக் கொம்பாக ஆகிவிட்டது.

ஆச்சாரியார் தவிப்பு

ஏன் இவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறேன் என்றால் இரட்டை வெட்டில் மாட்டிக்கொண்டார் என்கிற கருத்தில் சொல்லுகிறேன். இருதலைக்கொள்ளி மத்தியில் சிக்கின எறும்புபோல் தவிக்கிறார். எப்படி எனில் அவர் மந்திரி வேலை ஒப்புக்கொண்டால் பார்ப்பனர்களுக்கு சில உத்தியோகங்கள் கொடுக்கலாம் என்பதை நானும் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் அவர் அதன் மூலம் பொது மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்கின்றேன். இதுவரை அங்குபோய் இன்னது செய்யக்கூடும் என்று எங்காவது குறிப்பாய் யோக்யமாய் பேசியிருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? அனாமத் மந்திரிகள் ஒரே அடியாய் பல திட்டங்களை போட்டுக் கொண்டார்கள். சிலவற்றையாவது செய்வார்கள் என்று கருதுகிறேன். ஆகவே இந்தக் காரியங்களை அனாமத் மந்திரிகள் செய்வதற்கு மேல் ஆச்சாரியார் ஒன்றும் செய்து விட முடியாத நிலைமை இருந்து வருகிறது. ஒரு சமயம் சத்தியமூர்த்தியார் மந்திரி ஆனாலும் கடமுடா என்று ஒரு கிளர்ச்சி உண்டாக்கவும் அதை வியாக்கியானம் செய்துகொண்டு பலர் பேசவும் ஆச்சாரியார் வெளியில் இருந்து வியாக்கியானம் செய்து கொண்டிருக்கவும் சவுகரியமேற்பட்டிருக்கும். இப்போது தளகர்த்தரையே சிறைபிடித்து விட்ட மாதிரி ஆச்சாரியார் தானே சிக்கிக்கொண்டு விழிக்கிறார். மந்திரி வேலை வேண்டாம் என்று தைரியமாய் சொல்லிவிடலாம் என்றாலோ அப்படியானால் ஒன்றா மறுபடியும் ஜெயிலுக்கு போகவேண்டும். இல்லாவிட்டால் யார் மீதாவது "கோபத்தை" உண்டாக்கிக்கொண்டு "நான் இனிமேல் காங்கிரஸ் காரியத்தில் பிரவேசிப்பதில்லை" என்று கூறிவிட்டு பகவத்கீதைக்கு புது வியாக்கியானம் எழுதப் புகவேண்டும். இல்லாவிட்டால் உலகில் இடமே இல்லை என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

ஆச்சாரியாருக்கு மாத்திரமல்ல. காந்தியார் நேரு ஆகிய எல்லோருக்கும் எல்லா காங்கிரஸ்காரருக்கும் இதே நிலைமையே ஏற்பட்டு விட்டது. இது ஒரு நல்ல சம்பவம் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது "குந்தினாயா குரங்கே உன் கொட்டமடங்க" என்பதுபோல் அடங்கிக்கிடக்க வேண்டியதாகிவிட்டது.

ஏற்பதும் மறுப்பதும் இரண்டும் தொல்லையே

இப்போது காங்கிரஸ்காரர்கள் - காந்தியார் மந்திரி பதவி ஒப்புக்கொள்ள தகுந்தமாதிரி மறுத்ததற்கு ஏதேதோ புது புது வியாக்கியானங்கள் சொல்லி வருகிறார்கள். நிலைமை சர்க்காருக்கு அனுகூலமாக அதாவது காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொருவர் மனதிலும் எப்படியாவது ஒப்புக்கொண்டு கிடைத்தவரையில் பயன் அனுபவிக்கலாம் என்கின்ற ஆசை ததும்பிக் கொண்டிருப்பதை சர்க்கார் அறிந்துவிட்டதால் எப்படியாவது காங்கிரஸ்காரர்கள் தலையில் மந்திரி பதவியைக் கட்டி வேடிக்கை பார்க்கலாம் என்று கருதுவதால் அவர்களும் தாங்கள் வாக்குறுதி மறுத்ததற்கு புது வியாக்கியானம் சொல்லி ஒருபடி இறங்குவதாய் காட்டுகிறார்கள். எப்படியானாலும் சரி, இரண்டும் அதாவது மந்திரி பதவி மறுப்பதும் ஏற்பதும் காங்கிரசுக்காரருக்கு தொல்லைவிளைவிக்கும் காரியமாகவே இருக்கிறது என்பதுமாத்திரம் உறுதி. அதுபோலவே ஏற்பதும் மறுப்பதும் இரண்டும் சர்க்காருக்கு லாபமாகவே இருக்கிறது என்பதும் உண்மையே. ஏனெனில் மறுப்பதால் அனாமத் மந்திரிகளைக்கொண்டு காங்கிரஸ்காரர்கள் சொன்னதற்கு மேலாகவே செய்துகாட்டிவிடக்கூடும். ஏற்றுக்கொண்டால் அதிகார தோரணையில் காங்கிரஸ்காரர்களை அடக்கி ஆண்டு ஆதிக்கம் செலுத்தக்கூடும். காங்கிரஸ்காரர்கள் சர்க்கார் இஷ்டத்துக்கு சிறிது விரோதமாய் நடந்தாலும் விசேஷ அதிகாரத்தைச் செலுத்தி மட்டம் தட்டி விடுவார்கள். அப்போது காங்கிரசுக்காரர்கள் வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்.

ஆதலால் காங்கிரசை அடக்க அது சர்க்காருக்கு நல்ல சந்தர்ப்பமாகிவிடும். ஆகவே இரண்டுவிதத்திலும் காங்கிரசுக்கு ஆபத்தும் சர்க்காருக்கு அனுகூலமுமான சமயமாக ஆகிவிட்டது.

அனாமத் மந்திரிகள் நிலைமை அப்படியில்லை. ஏதாவது காரியம் செய்ய மந்திரிகள் துணிந்தால் சர்க்கார் இடம் கொடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வேலையைவிட்டு வெளியில் போவதாய் மிரட்டலாம். அப்போது சர்க்காார் இனி மறுபடி யாரைப்பிடிப்பதென்று கருதி வெட்கத்துடன் ஒப்புக்கொண்டாக வேண்டும். எனவே இப்படிப்பட்ட நிலைதான் இன்று தற்கால அரசியல் நிலையாக இருந்து வருகிறது. இது உண்மையிலேயே ஏற்படக்கூடியதுதான். ஏனெனில் காங்கிரஸ் வெற்றி என்பது உண்மையானதாக இருந்தால் அதற்கு ஏதாவது யோக்கியதையோ பயனோ உண்டாகக்கூடும். பொய் வெற்றிக்கு எங்காவது யோக்கியதை கிடைக்குமா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்.

காங்கிரஸ் வெற்றிபெற்ற யோக்கியதை

காங்கிரஸ் எப்படி வெற்றி அடைந்தது? காங்கிரசின் பேரால் நின்ற தனிப்பட்ட மக்களின் யோக்கியதையாலா? அல்லது காங்கிரஸ் முன் பின் மக்களுக்குச் செய்து காட்டிய நன்மையான காரியத்தாலா? அல்லது அது முன்பின் நடந்து கொண்ட நாணையத்தாலா? என்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் ஓட்டர்களுக்குக் கொடுத்த அபாரமான ஆசை வார்த்தைகளால் அல்லாமல் வேறு என்ன என்று கேட்கின்றேன்.

உதாரணமாக ஒரு இடத்தில் 3 கடைகள் இருக்கிறதாக வைத்துக் கொள்ளுங்கள். முதல் கடைக்காரன் பரம்பரையாய் வழக்கமாய் கடை வைத்துக்கொண்டிருக்கிறான். சாமான் வாங்க வருபவர்களிடம் ரூபாய் ஒன்றுக்கு 5 படி அரிசி போடுவதாகச் சொல்லுகிறான். மற்றொருவன் 5லீ படி அரிசி போடுவதாகச் சொல்லுகிறான். மற்றொருவன் ரூபாய் ஒன்றுக்கு 12 படி அரிசி போடுவதாகச் சொல்லுகிறான் என்றால் ஜனங்கள் எந்தக் கடைக்குப் போவார்கள்? அதுபோல் காங்கிரசுக்காரர்கள் ரூபாய்க்கு 12 படி அரிசி போடுகிறோம். (அதிக நன்மை செய்கிறோம்) அட்வான்சு (ஓட்டு) கொடுங்கள் என்று சொல்லி மக்களிடம் ஓட்டுப்பெற்றுக் கொண்டார்கள். பாமர மக்களும் 12 படிக்காரன் கடையில் கூட்டம் கூடி அட்வான்சு கொடுப்பது போல் கூட்டமாக தங்கள் ஓட்டுகளை கொடுத்து விட்டார்கள். இப்போது பொது ஜனங்களின் அட்வான்சை பெற்றுக் கொண்டு ஓட்டம் பிடித்து விட்டார்கள். கடை இன்சால்வெண்டாய்விட்டதாக மஞ்சள் கடுதாசியை முன்பக்கம் ஒட்டிவிட்டு பின்புறமாய் போக்குவரத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் காங்கிரசு ஜெயித்ததற்கு காரணம். 5 படி 5லீ படி போடுவதாகச் சொன்னவர்கள் மக்களுக்கு புத்திவந்து அவர்கள் தன் கடைக்கு மறுபடியும் வருவார்கள் என்று காத்திருக்கிறார்கள்.

காங்கிரஸால் ஒன்றும் சாதிக்க முடியாது

இந்த நிலையில் காங்கிரசு மறுபடியும் எந்த முகத்தைக்கொண்டு பொது ஜனங்களை ஓட்டுக் கேட்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். ஏமாற்றமே வெற்றிபெறுமென்றால் வெற்றி பெற்று விட்டுப் போகட்டும். புத்தியில்லாமல் மக்கள் தங்கள் மடத்தனத்தின் பயனை அனுபவிக்கட்டும்; ஏமாற்றமும் ஒரு படிப்பினையே தவிர அது ஈடு செய்ய முடியாத நஷ்டம் என்று நான் கருதவில்லை. நானும் ஓட்டுப்பிரசாரம் செய்தேன். ஆனால் இன்று எந்த ஓட்டர் முன்னிலையிலும் தலை நிமிர்ந்து நடக்கிறேன். ஓட்டர்கள்தான் என்னைக்கண்டு தலை குனிகிறார்கள். ஆனால் காங்கிரஸ்காரர்களோ அட்வான்ஸ் வாங்கி ஏமாத்தினவன் கொடுத்தவனைக் கண்டு எப்படி தலைகுனிந்து திருட்டுத்தனமாய் ஒளிந்து நடப்பானோ அதுபோல் தலைகாட்ட யோக்கியதை இல்லாமல் மறைவாய் திரிகிறார்கள். நான் எதற்கும் பயப்படவில்லை. இன்னம் 10 எலக்ஷன் நடந்தாலும் சரி, இன்னம் 10 தடவையும் ஓட்டர்கள் காங்கிரஸ்காரர்களை ஆதரித்தாலும் சரி, காங்கிரஸ்காரர்கள் 215 ஸ்தானங்களையும் கைப்பற்றினாலும் சரி. "காசிக்குப் போனாலும் வீசத்துக்கு 12 சல்லி" என்பதுபோல் காங்கிரஸ்காரர்கள் சாதிப்பது என்பது மற்றவர்கள் சாதித்தது என்பதற்குமேல் கடுகளவும் சாதிக்க முடியாது என்பது மாத்திரம் உறுதியான காரியமாகும்.

நமது நாட்டில் காங்கிரஸ்காரர்கள் ஆதிக்கத்துக்கு வந்தால் ஜஸ்டிஸ் கட்சியார் செய்த சில சட்டங்களை எடுத்துவிடலாம். அதாவது, தேவஸ்தான சட்டம், பொட்டுக்கட்டுவது ஒழிப்புச் சட்டம், இனாம் சட்டம் முதலாகியவைகளை எடுத்து விட முயற்சி செய்யலாம். அவற்றிற்கு கவர்னர், கவர்னர் ஜனரல், அரசர் ஆகியவர்கள் சம்மதம் வேண்டியிருக்கும். அவ்வளவு சுலபமாய் அவர்கள் அனுமதி அளித்துவிட மாட்டார்கள்.

மற்றபடி உத்தியோகங்களில் வகுப்புவாரி முறை உத்திரவு போன்றவைகளை காங்கிரஸ்காரர்கள் எடுத்துவிட முடியும். கவர்னர்கள் தனது விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுக்கலாம். இல்லாவிட்டால் தான் நஷ்டமென்ன?

பார்ப்பனர்கள் வாலைப் பிடித்துத் திரிந்துகொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார்களுக்கும் காங்கிரஸ் பைத்தியம் பிடித்த பார்ப்பனரல்லா தார்களுக்கும் ஒரே தடவையில் புத்திவரச் சந்தர்ப்பமேற்படும். ஆதலால் காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போய் மந்திரி ஆவதால் நமக்கு ஒன்றும் பெரிய நஷ்டமாகி விடாது. அவர்கள் சாயம் தான் வெளுக்கப் போகிறது. அடுத்த தேர்தல் வந்தால் நாம் யாரும் நிற்க வேண்டியதில்லை என்றுகூட சிலர் சொல்லுகிறார்கள். அதுவும் நல்லதாகத்தான் முடியலாம்.

ஆனால் நாம் மாத்திரம் காங்கிரஸ் பொதுஜனப் பிரதிநிதித்துவம் கொண்ட ஸ்தாபனம் என்றும் நம்மால் ஆதரிக்கக்கூடியதென்றும் ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடியாது என்பதை நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.

காங்கிரஸ், பார்ப்பனர் கையாயுதம்

இன்றைய நிலையில் நான் ஒருவனாய் இருந்தாலும் காங்கரசின் எதிரியாகவே சாவேன். ஏனெனில் அது ஒரு வகுப்பு ஸ்தாபனம். மற்ற வகுப்புகளை அடக்கி ஒடுக்கி அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற சுயநல ஸ்தாபனம். தமிழ் நாட்டில் பார்ப்பனரல்லாத சமூகத்தை தலையெடுக்கவிடாமல் நசுக்கவே அது பார்ப்பனர்கள் கை ஆயுதமாக இருந்து வருகிறது. அது பார்ப்பனரல்லாதார்களில் மானமும் குலநலமும் இருக்கும் மக்களை சேர்ப்பதே கிடையாது. அப்படிப்பட்டவர்கள் யாராய் இருந்தாலும் காங்கிரசிற்குள் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் அவர்களையெல்லாம் அடக்கி ஒடுக்கியே வைக்கும். தங்கள் அடிமைகளை தங்களை அல்லாமல் வேறுகதி இல்லை என்று வந்து ஒண்டும் பேடி, கோழைகளை எல்லாம் வீரர்கள் என்கின்றது. தன் காலில் நிற்கக் கூடியவர்கள் யாரையும் மதிப்பதோ அவர்களுக்கு மரியாதை கொடுப்பதோ கண்டிப்பாய்க் கிடையாது. இன்று காங்கிரசில் இருக்கும் காங்கிரசின் பேரால், பெருமை பதவிபெற்று வாழும் மக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாய்ப் பாருங்கள். தோழர் சி.ஆர். ரெட்டியார், சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் போன்றவர்கள் திறமையும் யோக்கியமும் நாணயமும் மானமும் எங்கே? என்று பாருங்கள்.

காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார்களுக்கு மானமும் சுதந்திர உணர்ச்சியும் வீரமும் குலப்பற்றும் இருக்குமானால் சென்னை சட்டசபைக்கு 140 பொது ஸ்தானங்களுக்கு 50 பார்ப்பனர்கள் போல் நிறுத்தி வெற்றி பெற்றிருப்பார்களா?

இந்தச் சமூகத்திற்கு உணர்ச்சி கிடையாதா?

சென்னை கார்ப்பரேஷனுக்கு 40 ஸ்தானங்கள் போல் பார்ப்பனர்களை நிறுத்தி வெற்றி பெற்று நேற்று நடந்த தேர்தலுக்கும் ஒரு பார்ப்பனரை நிறுத்தி போட்டி போட்டிருப்பார்களா? இந்த பார்ப்பனரல்லாத காங்கிரஸ்வாதிகளுக்கு மனித உணர்ச்சி கூடவா இல்லை என்று கேட்கிறேன்.

பார்ப்பனரல்லாதார்களில் தகுதி உடையவர்கள் இல்லையா? காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு வகுப்பு உணர்ச்சி கிடையாது என்றால் எல்லாம் பார்ப்பன மயமாவது தான் அதற்கு அறிகுறியா என்று கேட்கிறேன்.

காங்கிரஸ் காலிகள் நம்மிடம் வந்து நீ ஏன் தாடி வைத்துக் கொண்டிருக்கிறாய். உன் பேர் ஏன் ராமசாமி என்று வைத்திருக்கிறாய் என்று கேள்வி கேட்டு பார்ப்பனர்களிடம் கூலி வாங்கி வயிறு கழுவப் பார்க்கிறார்களே ஒழிய பார்ப்பனர்களைக்கண்டு இம்மாதிரி வகுப்புக்கொள்ளை ஏன் என்று கேட்கத்தக்க நாடி உள்ளவன் எவனையும் காணோம். இம்மாதிரி மானம் கெட்ட சமூகம் எக்காலத்தில் சுதந்திரம் பெறப்போகிறது? அது என்று தான் சுதந்திரத்துக்கு லாயக்காகும் என்று யோசித்துப் பாருங்கள்.

வகுப்புரிமை கேட்பதன் காரணம்

நானோ எனது நண்பர்களோ சுதந்திரம் வேண்டாம் என்கிறோமா? ஜெயிலுக்குப் போகப் பயப்படுகிறோமா? பார்ப்பான் ஏமாற்றலுக்கு இணங்காத காரணம்தான் நான் காங்கிரஸ்வாதி அல்லாதவனாயிருப்பதற்கு காரணமாகும். காங்கிரஸ்காரர்களுக்கு உண்மையான தேசாபிமானமிருக்கும் பக்ஷம் அவனவன் ஜாதி மதத்துக்கு ஏற்ற உரிமை கொடுப்பதில் என்ன தவறு? காங்கிரசில் ஜாதிகளும் மதங்களும் ஒன்றாகி விட வேண்டும் என்று தீர்மானம் போட்டிருந்தால் நான் ஜாதி மத வகுப்புரிமை கேட்கவே மாட்டேன். அப்படிக்கில்லாமல் ஜாதி, மதம், வகுப்பு காப்பாற்றப்படும் என்று காங்கிரசில் ஜவஹர்லால் நேரு சம்மதத்தின் மீது தீர்மானம் செய்து வைத்துக்கொண்டு அவைகளுக்கு ஏற்ற உரிமை மாத்திரம் மறுத்தல் எப்படி ஞாயமாகும்? அப்படி உரிமை கொடுப்பது தேசத்துக்குக் கெடுதி என்றால் பார்ப்பனர்கள் மாத்திரம் ஒன்றுக்கு 10,15 வீதம் கொள்ளை அடித்துக்கொள்ளலாமா? என்று கேட்கின்றேன்.

1லீ பேர் இருக்கவேண்டிய ஸ்தானத்தில் 15 பேரும் 4லீ பேர் இருக்கவேண்டிய ஸ்தானத்துக்கு 50 பேரும் போய் உட்கார்ந்து கொண்டால் இந்தக் கூட்டத்தாரை நம்பி எந்த மடையன் கை தூக்குவான் என்று கேட்கிறேன்.

வகுப்புகள், ஜாதிகள், மதங்கள் உள்ளவரை அவைகள் காப்பாற்றப்படும் வரை அவரவர்களுக்கு உண்டான விகிதாச்சார உரிமை கொடுக்கப்படும் என்று காங்கிரசில் ஒரு தீர்மானம் போட்டுக்கொண்டு ஜாதி மத வகுப்புப் பிரிவுகளை பேதங்களை ஒழிப்பது காங்கிரஸ் கொள்கை என்று சேர்த்துக் கொண்டு வருமானால் நான் மாத்திரமல்ல, மற்ற எல்லா இந்தியனும் காங்கிரசில் சேர வேண்டியது ஞாயமாகும்.

அப்படி இல்லாமல் வெறும் ஏமாற்றும், காலித்தனமும், காலிக்கூட்டமும் தான் காங்கிரஸ் என்றால் அதில் சேர்ந்த உடனே சர்வாதிகாரப் பதவி கிடைப்பதானாலும் மானமுள்ளவன் செருப்புக்கு சமமாய்த்தான் மதிப்பான். இன்று காங்கிரசுக்கு எதிராக இந்தியா பூராவிலும்தான் கட்சியும் கிளர்ச்சியும் இருந்து வருகிறது. 5 மாகாணங்கள் காங்கிரசைத் தோற்கடித்து விட்டன. பம்பாயில் காங்கிரசுக்கு 88 ஸ்தானமும் காங்கிரசுக்கு எதிராய் 87 ஸ்தானமும் கிடைத்திருக்கின்றன. மற்ற மாகாணங்களிலும் கிட்டத்தட்ட சரி பகுதியாகவே பிரிந்திருக்கிறது.

குலைப்பதால் கதவு திறக்குமா?

சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் 215ல் 158 கைப்பற்றி விட்டது என்று சொன்னால் வங்காள மாகாணத்தில் 250க்கு காங்கிரசுக்கு 50 ஸ்தானம்கூட கிடைக்கவில்லை. காங்கிரசுக்கு எதிர் ஸ்தாபனம் 250ல் 200 ஸ்தானத்தை கைப்பற்றி விட்டது. காங்கிரஸ் எங்கே வெற்றி அடைந்து இருக்கிறது? வெற்றியடைந்தும் கூட தோற்றவர்களும் காங்கிரஸ் விரோதிகள்; ஆட்சிபெற்றவர்களும் காங்கிரஸ் விரோதிகள்; அதிகாரம் செலுத்துபவர்களும் காங்கிரஸ் விரோதிகள்; மக்களுக்கு நன்மை செய்ய பல அருமையானத் திட்டம் போட்டு வேலை செய்பவர்களும் காங்கிரசுக்கு விரோதிகள் என்றால் காங்கிரஸ் வெற்றியின் அருத்தம் என்ன? அது இனி செய்யப்போவது என்ன? பூட்டி இருக்கும் பூட்டைப் பார்த்துக் குலைப்பதால் கதவு திறக்கப்பட்டு விடுமா? அதுபோல் பதவியில் இருக்கும் மந்திரிகளைப் பார்த்து நாய், கழுதை, துடைப்பம் என்று கூறுவதால் வெற்றிக்குப் பயன் ஏற்பட்டு விடுமா? என்று கேட்கின்றேன்.

ஏமாற்றப்பட்ட சமூகத்துக்கு எச்சரிக்கை

நமது நாட்டில் எண்ணிக்கையில் குறைவாய் இருந்தாலும், சரி பலமுள்ள முஸ்லீம் சமூகத்தை காங்கிரஸ் மூட்டைப்பூச்சி போல் மதித்திருக்கிறது. இரண்டு மூன்று சாயபுகள் தோழர் உபயதுல்லா மாதிரி காங்கிரசில் இருந்து விட்டால் அதுவே முஸ்லீம்கள் காங்கிரசில் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாகி விடுமா? தோழர்கள் ஜின்னா, மகமதலி, அப்துல் ரகீம் போன்ற திறமைசாலிகளும் வீரர்களும் கோடீஸ்வரர்களும் காங்கிரசுக்கு வெளியில் இருந்து கொண்டு தங்கள் சமூக நலன்களைக் கவனித்துக்கொண்டு காங்கிரசினிடம் நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது "முஸ்லீம்களுக்கு தேசபக்தி கிடையாது" என்று சொல்லி விடுவதே அதற்குச் சமாதானமாகி விடுமா என்று கேட்கின்றேன். காங்கிரசால் ஏமாற்றப்பட்ட சமூகம் இனி சும்மா இருக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறேன்.

காங்கிரசுக்கு பாமர மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. இதன் பயனாய் பார்ப்பனர்கள் ஆதிக்கம் பெற்றுவிட்டார்கள். தேர்தலில் நல்ல நபர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள். சுத்த காலிகளும் ஒருவேளை சாப்பாட்டுக்கு எதையும் செய்யத் துணிவும் அவசியமும் உள்ள ஆட்களும் தங்களுக்கு என்று அல்லாமல் காங்கிரசுக்கு என்று வெற்றி பெற்று விட்டார்கள். இதன் அருத்தம் என்ன?

இன்றைய நிலைமை

எப்படிப்பட்ட யோக்கியனும் நாணயஸ்தனும் தகுதியும் உடையவனாய் இருந்தாலும் பார்ப்பனர்கள் ஆதரவில்லாவிட்டால் வெற்றி பெற முடியாது என்பது மாத்திரமல்லாமல் தொல்லையில்லாமலும் வாழ முடியாது என்றால் பார்ப்பனரல்லாத மக்கள் சரீரத்தின் நல்ல ரத்த ஓட்டத்தின் பயன் இதுதானா? என்று கேட்கின்றேன். இதை இப்படியே விட்டு விட்டால் என்ன கதி ஆவது? இப்போதே பள்ளிப்பிள்ளைகளும் தெருவில் எச்சக்கலை நக்கிக்கொண்டு தண்ணீர்த் துறையில், காசு சாமான் திருடி தலைமறைவாய்த் திரிந்த பையன்கள் வரை தைரியமாய் வெளியில் நம் வீடுகளுக்கு முன்னால் நின்றுகொண்டு காலித்தனம் செய்யவும் வம்புக்கு வழக்கிழுக்கவும் ஆச்சாரியார் போல் இழிதனமாய்ப் பேசவும் துணிந்துவிட்டார்கள் என்றால் நாம் இதை சகித்துக்கொண்டு கோழைப்பெருமை காட்டுவதா என்று கேட்கின்றேன். ஒரு மிராசுதார் ஒரு மாஜி மந்திரியிடம் வந்து தன் தோட்டத்தில் போட்டிருந்த பில்லுப்போரில் பகுதியை சுமை கட்டி ஒருவன் எடுத்து போனதாகவும் தோட்டத்திலுள்ள விறகுகளை அள்ளிப் போவதாகவும், கேட்டால் போக்கிரித்தனமாகப் பேசுவதாகவும் என் முன்னாலேயே குறை கூறினார். காரணம் என்னவென்றால் "இந்த காங்கிரசுக்கார பசங்கள் தான்" என்கிறார். இப்படி இன்னும் பல உதாரணம் உண்டு. நானே இது போல் பல தடவை அனுபவிக்கிறேன். இன்னும் பார்ப்பன அதிகாரிகள் தொல்லை சகிக்க முடியவில்லை. ராஜ்யம் பார்ப்பன ராஜ்யம் ஆகிவிட்டதாகவும் தன்னரசு நாடாகவும் காலிகள் நாடாக ஆகிவிட்டதாகவும் சாயல் காட்டப்படுகிறது. "காங்கிரசில் சேராவிட்டால் நாம் எப்படி வாழ்வது" என்பதாக அனேக நபர்களுக்குத் தோன்றிவிட்டது.

இந்த நிலைமை மாறாவிட்டால் நாட்டில் சமாதானமோ மானமுள்ளவர்களுக்கு சாந்தியோ ஏற்படாது. என்னைப் போன்றவனுக்கு கவலை இல்லை. ஒருவர் தயவையும் ஒரு பதவியையும் ஒரு சுயநலத்தையும் கருதப் போவதில்லை. காலித்தனங்களில் நல்ல அனுபவமும் நடத்தும் திறமையும் தக்க ஆட்களும் எனக்குண்டு. எதிர்தரப்புக் காலிகளை என்பக்கம் சேர்க்கும் சக்தியும் எனக்குண்டு. ஆனால் ஏழை எளியவர்கள் சாதாரண மக்கள் நிலை என்ன ஆவது? மலையாளத்துப் பார்ப்பனர்கள் ஆதிக்கம் போல் பெண்டுபிள்ளைகளைக் கேட்டாலும் (மோக்ஷத்துக்காக) கூட்டி விடத்தயாராய் இருப்பது போன்ற நிலை ஏற்பட இடம் கொடுப்பதா என்று கேட்கிறேன்.

காங்கிரசில் சேர்ந்தவர்கள் கதி

பார்ப்பனரல்லாத செல்வவான்களுக்கும், மிராசுதார்களுக்கும் மற்றும் ஜமீன்தார் முதலியவர்களுக்கும் புத்தி வரவேண்டிய சமயம் இதுவேயாகும். காங்கிரசில் சேருவதால் நிலைமை மாற்றமடைந்து விடும் என்று கருதுவது ஏமாற்றத்தை அளித்துவிடும். தோழர்கள் டி.ஏ. ராமலிங்க செட்டியார், சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் இருவரும் காங்கிரசில் சேர்ந்தார்கள். பலவழிகளிலும் பொதுவாழ்வில் இருவரும் கெட்டார்கள். இப்படியே கவுண்டர்களுக்குள்ளும் செட்டியார்களுக்குள்ளும் நாயுடுமார்களுக்குள்ளும் போட்டி போட்டு காங்கிரசில் சேர்ந்ததல்லாமல் பயன் அடைந்தவர்கள் பார்ப்பனர்களே. தலைவர்கள் ஆனவர்கள் பார்ப்பனர்களே. பார்ப்பனர்கள் கை ஆயுதங்களாக காரியதரிசியானவர்கள் சகலத்திலும் 3-ந்தர 4-ந்தர ஆட்களே.

இன்று காங்கிரசில் தோழர்கள் சுப்பராயன், நாடிமுத்துப்பிள்ளை, ராமலிங்க செட்டியார் போன்ற ஆட்களுக்கு வெளியில் இருந்த யோக்கியதை காங்கிரசில் இருக்கிறதா, இவர்கள் பணமும் பட்டமும் கல்வியும் அறிவும் சமூகப் பிரதானமும் சத்தியமூர்த்தி அய்யர் வீட்டு வாயில்படியிலும் ஆச்சாரியாரது தலையசைப்பிலும் இருந்துவருகிறது. இந்த நிலையை விட பார்ப்பனரல்லாத சமூகத்தின் கீழ்நிலை - இழிநிலை என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் செய்ய வேண்டியது

மரியாதையாக காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்கள் ராஜினாமா கொடுத்து விட்டு தன் சொந்த முறையில் நின்று வெற்றி பெற்று மந்திரி பதவி அடைந்து நாட்டு மக்களுக்கும் தங்கள் சமூக மக்களுக்கும் நன்மை செய்யும் நிலைமையை அடைவதே புத்திசாலித்தனமாகும். அதில்லாவிட்டால் கூடிய சீக்கிரம் பார்ப்பன ராஜ்யம் ஏற்பட்டு ஹிட்லர் அதிகாரம் செய்யப்போகிறது என்பது உறுதி.

குறிப்பு: 25.04.1937 இல் துறையூரிலும் 26.04.1937 இல் இலால்குடி வட்டம் பூவாளூரிலும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் "தற்கால அரசியல்" என்னும் பொருள் குறித்து ஆற்றிய உரை.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 02.05.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: