சமீப சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனர்கள் தங்கள் முயற்சியை கடசி தடவையாகக் கருதி எல்லா பார்ப்பனர்களும் ஜாதி காரணமாக ஒன்று சேர்ந்து ஒரே மூச்சாகப் பாடுபட்டு அவர்களது ஆதிக்கத்துக்கு மாறாக உள்ள எல்லாவித முயற்சிகளையும் எல்லா கòகளையும் அடியோடு ஒழிக்க தங்களாலானவரை பார்த்தார்கள். ஆனால் (மாயமானைக் கொன்ற கதைபோல்) மாயவெற்றியைத்தான் அவர்களால் அடைய முடிந்ததே தவிர காரியத்தில் - அவர்களது உள் எண்ணத்தில் அவர்கள் எதிர் பார்த்ததில் ஒரு சிறிதும் இதுவரையில் வெற்றி பெற முடியாமலே போய் விட்டது.

1920, 21-ம் வருஷங்களில் இதே பார்ப்பனர்கள் காந்தியாரின் நிழலில் நின்று கொண்டு "இந்த அரசாங்கம் சைத்தான் அரசாங்கம், அரசாங்கப்படிப்பு உத்தியோகம் பிரதிநிதித்துவ சபை நீதி ஸ்தலங்கள் ஆகியவை பிரதிநிதித்துவ மற்றவை, பொய் அரசாங்கம் நடைபெறுகிறது. ஆதலால் இதை அழிக்க வேண்டும். ஆதலால் இவற்றை பஹிஷ்கரிக்க வேண்டும்" என்றெல்லாம் கத்திக் கொண்டு திரிந்து காலத்தைக் கடத்தி மக்களை ஏமாற்றியதில் யாதொரு பயனும் அடையாமல் படுதோல்வி அடைந்தது போலவே இப்போதும் தாங்கள் கூப்பாட்டில் பெயருக்கு மாத்திரம் வெற்றி பெற்றதாக ஏற்பட்டும் முடிவில் - பயன் பெறுவதில் அடியோடு ஏமாற்றமடைந்து விட்டதால் இப்போதும் முன் போலவே "பொய் மந்திரி சபை - பொறுப்பற்ற மந்திரி சபை - பிரதிநிதித்துவமற்ற மந்திரிசபை - கழுதை சபை - நாய் சபை - துடைப்பக் கட்டை சபை" என்று பழங்காலக் கீழ்த்தர பெண்களைப்போல் குலைத்து வாய்வலித்து ஓய வைப்பார் கூட இல்லாமல் தாங்களே ஓய்ந்து தீரவேண்டிய நிலைமைக்கு வந்து விட்டார்கள். அதன் பயனாய் இப்போது பார்ப்பனர்கள் அதாவது தேர்தலில் தங்கள் பெண்டு பிள்ளைகளையெல்லாம் பிரசாரத்துக்கு அனுப்பி பாடுபட்ட பார்ப்பனர்கள் இப்போது வேறு ஒரு தந்திர மெடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஏனெனில் இன்று எவ்வளவு தான் மெஜாரிட்டியாக காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தும் அவர்களுக்கு சர்க்கார் கோட்டை வாசலுக்குள் நுழைய யோக்கியதை இல்லாமல் போய்விட்டது. எவ்வளவோ பெரிய பெரிய வாக்குறுதிகள் கொடுத்து ஓட்டர்களை ஏமாற்றி விட்டதால் ஓட்டர்கள் முகத்தில் விழிக்கவும் யோக்கியதை இல்லாமல் போய்விட்டது. கோட்டைக்கு வெளியில் நின்று வாய் வலிக்க எவ்வளவு தான் குலைத்தாலும் அரசாங்க நிர்வாகம் முறைப்படி நடப்பதோடு நாள் ஒன்றுக்கு சராசரி 250 சர்க்கார் உத்திரவுகள் (ஜீ.ஓக்கள்) மீசையை முறுக்கிக்கொண்டு தொண்டையைக் கனைத்துக் கொண்டு வீரத்துடன் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. "ஒரு கூடை செங்கல்லும் பிடாரி ஆய்விட்டது" என்பது போல சகல பார்ப்பன வக்கீல்களும் காங்கிரஸ்வாதியாகி "இந்த அரசாங்கம் அநியாய அரசாங்கம்" என்றும் "இது ஏப்ரல் முதல் தேதியில் ஒரே அடியாய் புதைக்கப்பட்டு போய்விடும்"என்றும், கூப்பாடு போட்ட வக்கீல் கூட்டங்கள் அடியோடு குளித்து முழுகி பூசைசெய்து சாப்பிட்டு விட்டு காலை 11 மணிக்கு "அந்நிய அரசாங்க" கோர்ட்டுகளுக்குப் போய் மாலை 5 மணி வரை "வெள்ளையர்" பாதத்திலும் அரசாங்க சிப்பந்திகள் பாதத்திலும் யுவர் ஆனர் - தங்களுடைய கவுரவமுள்ள சமூகத்துக்கு - மை லார்ட் ஷிப் - எனது பிரபுவே என்கின்றதான மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்த வண்ணமாக இருக்கிறார்கள்.

காங்கிரசுக்கு ஓட்டுப்போட ரகசியமாயும் வெளிப்படையாயும் வேலை செய்த பார்ப்பன அதிகாரிகள், சர்க்கார் சிப்பந்திகள் எல்லோருமே அந்த சர்க்காருக்கு "மிகவும் கீழ்ப்படிதலுள்ள தங்கள் சேவகன்" என்று சொல்லிக்கொண்டு சேவகம் புரிந்த வண்ணமாகவே இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் இனிமேல் என்ன செய்வது என்பது பார்ப்பனர்களுக்கு புரியவில்லை. பழி வாங்குகின்ற முறையில் ஆங்காங்கு முஸ்லீம்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களும் பார்ப்பனர்களை பல வழிகளிலும் பஹிஷ்கரிக்க எண்ணுவதோடு பார்ப்பனர் களின் போர்வையான காங்கிரசுக்கும் சாயம் வெளுத்துவர ஆரம்பித்துவிட்டது.

ஆதலால் மேலே குறிப்பிட்டது போல் இதற்கு பார்ப்பனர்கள் ஏதாவது ஒரு யுக்தி செய்து தப்பித்துக் கொள்ளவேண்டிய நிலைமை அவசியமாக ஏற்பட்டுவிட்டது. அதுதான் இன்று மூலைமூலைக்கு பார்ப்பனர்களின் ஜாதி மகாநாடுகள் கூட்டி "எங்களுக்கும் காங்கிரசுக்கும் சம்மந்தமில்லை" என்று சொல்லி ஒருபுறத்திலும் அரசாங்கத்துக்கு ராஜவிஸ்வாசம் ஒரு புறத்திலும் காட்டி வேஷம் போட வேண்டியதாகிவிட்டது.

அந்த அவசியத்தாலேயே ஏப்ரல், மே ஆகிய இந்த இரண்டு மாதத்துக்குள் தென்னாட்டில் சுமார் 10 மகாநாடுகள் கூடி காங்கிரஸ் தலைவர் பார்ப்பனர்கள் உள்பட எல்லா பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்து பேச வேண்டியதாகி விட்டது. அவற்றுள் இம்மாதம் 24-ந் தேதி கும்பகோணத்தில் கூட்டப்பட்ட பார்ப்பனர் மகாநாட்டில் தலைமை வகித்த தோழர் மதுரை நடேசய்யர் அவர்கள் தலைமை உரையில் அனேக உண்மைகளை தன்னை அறியாமலே கக்கி இருக்கிறார். அவற்றைக் கூர்ந்து கவனித்தால் நாம் காங்கிரசைப்பற்றி கூறிவந்த விஷயங்கள் உண்மையா, பொய்யா என்பது விளங்கும். (27-5-37ந் தேதி "சுதேசமித்திரன்" 10ம் பக்கம் 1-வது கலத்தில் இருப்பதை அப்படியே குறிப்பிடுகிறோம்.)

அதாவது,

"சுமார் 52 வருஷங்களுக்கு முன்னதாக சனாதனிகள் காங்கிரஸ் சபையை உண்டு பண்ணி உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து அதை வளர்த்து விருத்தி செய்து வந்தார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகவே காங்கிரசானது பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்டதென்றும் பார்ப்பனர்களால் நடத்திவரப்படுவது என்றும் பார்ப்பன ஆதிக்கம் உள்ளது என்றும் நாம் கூறி வந்தது இதிலிருந்து உண்மையாகிவிட வில்லையா என்று கேட்கின்றோம்.

மற்றும் அதற்கு கீழாகவே "இப்பொழுது மூலைக்கு மூலை கணக்கில்லாமல் பிராமண சபைகளும் பிராமணக் கூட்டங்களும் ஏற்பட்டு விருத்தி ஆகிக்கொண்டிருக்கின்றன" என்று பேசியிருக்கிறார். (இதுவும் "சுதேசமித்திர"னில் இருக்கிறது.)

ஆகவே பார்ப்பனரல்லாதாரைப் போலவே பார்ப்பனர்களும் தங்கள் வகுப்பு நலனுக்காக சபைகளும் மகாநாடுகளும் ஏற்படுத்தி தங்கள் முன்னேற்றத்திற்கு வேலை செய்து வருகிறார்கள் என்பது இதிலிருந்தாவது விளங்குகிறதா, இல்லையா? என்று கேட்கின்றோம்.

மற்றும் அதற்குக் கீழாகவே "முக்கியமாக மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி முதலான ஜில்லாக்களில் பிரதி கிராமங்களிலும் இனி ஆயிரக்கணக்கான சபைகள் ஏற்படுமென்பது நிச்சயம்."

என்று பேசியிருக்கிறார். (இதுவும் 27ந் தேதி "சுதேசமித்திர"னிலேயே இருக்கிறது)

இதன் அருத்தம் என்ன என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். பார்ப்பன சமூகம் பூராவும் ஒன்று சேர்ந்து கிராமங்கள் பூராவும் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்பதுதானே?

இதுவரை இரகசியமாக வேலை செய்து வந்த பார்ப்பனர்கள் இப்போது வெளிப்படையாகவே தைரியமாக வேலை செய்யத் துணிந்துவிட்டார்கள் என்பது புலனாக வில்லையா என்று கேட்கின்றோம்.

இது இப்படியிருக்க, பார்ப்பனரல்லாதார் சமூகம் அதுவும் கல்வி, சமுதாய உரிமை முதலியவைகளில் உண்மையிலேயே கீழ்ப்படியிலும் பிற்போக்கான நிலைமையிலும் வைக்கப்பட்டிருக்கும் சமூகம் தங்கள் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டால் அது எப்படி வகுப்பு வாதம் ஆகிவிடும் என்றும், அது எப்படி தேசீயம் என்பதற்கு விரோதம் ஆகிவிடும் என்றும் பார்ப்பன கூலிகளைக் கேட்கின்றோம்.

மற்றும் தலைவர் தோழர் நடேசய்யர் பேசியிருப்பதாவது,

"பிராமணர்கள், பிராமணரல்லாதார்கள், பஞ்சமர்கள் (ஆகிய எல்லோரும்) பேதம் இல்லாமல் எல்லோரும் பஞ்சமர்களாக ஆகிவிடவேண்டும் என்றும் அல்லது எல்லோரும் பிராமணர்கள் ஆக ஆகிவிட வேண்டும் என்றும் ஒருவர் சொல்லுகிறார். இதை நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்களா?" என்று பேசி சபையைப் பார்த்து கேள்விகேட்கிறார். (இதுவும் "மித்திரனில்" இருக்கிறது) ஆகவே இதிலிருந்து ஜாதி பேதம் சிறிது கூட மாற்றமடைவதற்கு பார்ப்பனர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்று நாம் கூறி வந்தது உண்மையாகவில்லையா என்று கேட்கின்றோம்.

மற்றும் மத சம்மந்தமாக - சமூக சம்மந்தமாக - தீண்டாமை சம்மந்தமாக எவ்வித சட்டமும் செய்யக்கூடாது என்று பேசியிருக்கிறார். இவை ஒரு புறமிருக்க அம்மகாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சிலவற்றையும் இங்கு குறிப்பிடுகின்றோம்.

"பிராமண சபைகளை ஒவ்வொரு கிராமங்களிலும் நகரங்களிலும் ஏற்படுத்த வேண்டும்."

"பிராமண தர்மங்களை பரப்ப வேண்டும்."

"பிராமண தர்மம் ஆரிய தர்மம் முதலாகிய பத்திரிக்கைகளை எல்லோரும் வாங்கிப் படிக்க வேண்டும்.

"சனாதன தர்மத்தை நிலை நிறுத்தவும், காக்கவும் கிராமங்கள் தோறும் புராண காலக்ஷேபம் நடத்தி எல்லோரும் புராணங்களைப் படிக்கும்படி செய்ய வேண்டும்."

"திருவாங்கூர் ராஜாவின் கோவில் பிரவேச உத்திரவை உடனே ரத்து செய்ய வேண்டும்."

"சாரதா சட்டத்தை உடனே ரத்துச் செய்யவேண்டும்."

"வர்ணாச்சிரம தர்மத்துக்கும் பழய சனாதன தர்மத்துக்கும் விரோதமாக நடத்தப்படும் பத்திரிக்கைகள், புத்தகங்கள், சினிமாக்கள் ஆகியவைகளை பகிஷ்கரித்து அவைகளை ஒழிக்க வேண்டும்."

"கடசியாக வகுப்புவாரி தத்துவப்படி உத்தியோகங்கள் கொடுக்கும் முறைகொண்ட கவர்ன்மெண்டு உத்திரவுகள் உடனே ரத்து செய்யப்பட வேண்டும்.

என்பது ஆக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. (இவைகளும் 27-ந் தேதி "மித்திரன்" பத்திரிக்கையில் இருக்கின்றன)

ஆகவே பார்ப்பனர்களில் ஒரு கூட்டம் நம்மோடு கூடிக்கொண்டு சமூக சீர்திருத்தம் பேசி ஏமாற்றுவதும் மற்றொரு கூட்டம் - உண்மையான பிரதிநிதித்துவக் கூட்டம் பார்ப்பன மகாநாடுகள் கூட்டி பழய மனுதர்மத்தை ஆதரிக்க முயற்சியும் சூழ்ச்சியும் செய்வதும் காங்கிரசுக்கும் தங்களுக்கும் சம்மந்தமில்லை என்று பேசி தப்பித்துக்கொள்வதுமான முறையில் வேலை செய்து வருவதை நமது பாமரமக்கள் இப்போதாவது உணருகிறார்களா? என்று கேட்கின்றோம். உண்மையிலேயே காங்கிரசு ஆதிக்கத்துக்கு வந்தால் சமுதாயத்துறையில் நமக்கு எவ்வளவு கெடுதிகள் செய்யக்கூடும் என்பதையும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையும் இதுவரை நம்மவர்கள் கஷ்டப்பட்டு செய்திருக்கும் சாரதா சட்டம் முதலிய பல சட்டங்களும் என்ன கதி ஆகும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க விரும்புகிறோம்.

இதற்கு ஏற்றாற்போலவே கராச்சிக் காங்கிரசின் தீர்மானங்கள் இருக்கின்றன என்பதையும் அதாவது வகுப்பு உரிமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பழைய மனு முறைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் இருக்கின்றன என்பதையும் ஞாபகப்படுத்தி இதை முடிக்கின்றோம்.

தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 30.05.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: