periyaar 350

தலைவர் அவர்களே! தோழர்களே!

முஸ்லீம்களும் காங்கிரசும் என்பது பற்றி எனது அபிப்பிராயத்தை தாங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். இதைப்பற்றி பல தடவை பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். சுருக்கமாகச் சொல்லுவதானால் தென்னாட்டில் காங்கிரசும் பார்ப்பனரல்லாதாரும் எப்படியோ அப்படியேதான் காங்கிரசும் முஸ்லீம்களும் என்பதாகும்.

சூழ்ச்சி சபை

தென்னாட்டில் உள்ள பார்ப்பனரல்லாதாராகிய நாங்கள் பெரும்பான்மையோர் காங்கிரசை எங்கள் சமூகத்தை ஏய்த்து பல வஞ்சக காரியங்களால் எங்களைப் பிரித்து அடக்கி வைத்து எங்கள் மீது ஒரு சிறு கூட்டத்தார் ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்ட சூழ்ச்சி சபை என்றே கருதுகிறோம். இந்த எண்ணம் எனக்கு இன்று நேற்று உதித்ததல்ல. நான் தீவிர காங்கிரஸ் வாதியாய் - தென்னாட்டு மாகாண காங்கிரஸ் ஸ்தாபனங்களின் தலைவனாய் தேசத்துக்கு ஆக 3, 4 முறை சிறை சென்று தேசிய வீரனாய் இருந்த காலத்திலே ஏற்பட்டதாகும். அதாவது சுமார் 12 வருஷத்துக்கு முந்தியே ஏற்பட்டு காங்கிரசிலிருந்து வெளி வந்து பல்லாயிரமுறை பேச்சிலும், எழுத்திலும் செய்கையிலும் காட்டி வரும் எண்ணமுமாகும். இதே கருத்தைத்தான் இன்று தென்னாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியா பூராவிலுமிருக்கும் முஸ்லீம் தோழர்களும் காங்கிரஸ் விஷயமாய் 100க்கு 99 பேர் கொண்டிருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

ஆனால் காங்கிரசில் சில கறுப்பு ஆடுகள் இருக்கலாம். அது உலகம் பூராவிலும் உள்ள இயற்கை தன்மையே ஒழிய வேறில்லை.

ரஷியாவில்கூட பொது உடமை சமதர்ம ஆட்சிக்கு விரோதமாக ஒரு கூட்டம் எதிரிகளுக்கும் உளவாளிகளுக்கும் அனுகூலமாய் இருந்து வருவதை தினமும் அறிகிறோம்.

ஆதலால் அதைப்பார்த்து யாரும் ஏமாந்துவிடக்கூடாது. எங்களிலும் எத்தனையோ பேர் எங்கள் சமூக நலனைக் காட்டிக் கொடுத்து வெளிப்படையான எங்கள் ஜன்ம விரோதிகளுக்கு வால் பிடித்துக்கொண்டு அவர்கள் பின் சென்று வயிறு வளர்த்துக்கொண்டும் பதவிகள் பெற்றுக்கொண்டும் திரிகிறார்கள். இவற்றைக் கண்டு நானோ எனது தோழர்கள் பலரோ சிறிதுகூட மனந் தளரவில்லை. அன்றியும் இந்த நிலையை நான் பார்க்கும்போதும் கேட்கும் போதும் தான் எனக்கு அதிகமான உணர்ச்சியும் ஊக்கமும் உண்டாவதோடு எனது தொண்டை நடத்துவதில் அதிக உற்சாகமும் ஏற்படுகிறது.

கறுப்பு ஆடுகளுக்கு அஞ்சவேண்டாம்

அதுபோலவே உங்களிலும் பலர் இருப்பதை உங்கள் தொண்டுக்கு அதிக உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உண்மையான சமூக அபிமானம் இருப்பவனுக்கு இப்படிப் பட்ட காரியங்களால் உற்சாகமும் ஊக்கமும் அதிகமாகுமே தவிர புறமுதுகிட்டு ஓட மனம் இசையாது.

காங்கிரஸ் ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் ஒரு இந்திய அரசியல் பொது ஸ்தாபனம் என்று எல்லா மக்களுமே கருதி இருந்தார்கள். ஆனால் அது ஏற்பட்ட 5, 6 வருஷத்துக்குள்ளாகவே காங்கிரஸ் ஒரு தனிப்பட்ட கூட்டத்தாரின் சுயநல ஸ்தாபனம் என்பதை முஸ்லீம்கள் உணர்ந்து விட்டார்கள்.

அதாவது 1885-ல் காங்கிரஸ் ஏற்பட்டது என்று சொன்னால் 1890-லேயே முஸ்லீம்கள் காங்கிரசினால் தங்கள் நலம் பிற்போக் கடைவதை உணர்ந்து காங்கிரசு நடவடிக்கைகளுக்கும் தங்களுக்கும் சம்மந்தமில்லை என்றும் தங்கள் கருத்துக்கள் தனியாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்துக்கு விண்ணப்பித்துக் கொண்டார்கள். காங்கிரசின் கிளர்ச்சியில் ஏற்படும் உத்தியோகங்களும் சம்பளங்களும் தங்கள் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்கள். உடனே சர்க்காரார் 1892 வருட இந்தியக் கவுன்சில் ஆக்ட் என்ற ஒரு சட்டம் செய்து உத்தியோகத்திலும் நியமனத்திலும் முஸ்லீம்களுக்கு ஸ்தானங்கள் வழங்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அந்த சட்டமும் முஸ்லீம்களுக்கு போதிய திருப்தி அளிக்காததினாலும் காங்கிரசிடம் முஸ்லீம்களுக்கு நம்பிக்கை மேலும் குறைவுபட்டதினாலும் 1906-ம் வருஷத்தில் மேன்மை தங்கிய ஆகாகான் அவர்கள் தலைமையில் வைசிராய் பிரபுவிடம் தூது சென்று தங்கள் குறைகளையும் காங்கிரசால் தங்களுக்கு ஏற்படும் பிற்போக்கையும் எடுத்துச் சொன்னார்கள்.

ஹிந்துக்கள் எதிர்ப்பு

இதை காங்கிரசின் பேரால் பல இந்துக்கள் ஆக்ஷேபித்து இந்தியா மந்திரிக்கு விண்ணப்பித்துக் கொண்டார்கள். இந்தியா மந்திரியும் இதற்கு இணங்கிவிட்டார். அதை அறிந்த பிறகு முஸ்லீம் லீக் தூது ஒன்று தோழர் அமிர் ஆலி தலைமையில் சீமைக்குச் சென்று இந்தியா மந்திரியை கண்டார்கள். அதன் பயனாக அரசாங்கத்தார் அரசியலில் முஸ்லீம்களுக்கு இவ்வளவு உத்தியோகம் என்றும் பிரதிநிதித்துவத்தில் இவ்வளவு ஸ்தானம் என்றும் பிரித்து முஸ்லீம்களுக்கு தனித்தொகுதியும் ஏற்படுத்தி 1909-ல் இந்தியன் கவுன்சில் ஆக்ட் என்று ஒரு சட்டம் செய்தார்கள். அதற்கான முயற்சியும் அதன் பயனாக முஸ்லீம்களுக்கு தனியாக பதவியும் பிரதிநிதித் துவமும் கொடுத்த காரணமுமேதான் 1907-வருஷ வாக்கில் பங்காளத்தில் இந்துக்களால் சுதேசி கிளர்ச்சியும் வந்தே மாதர கிளர்ச்சியும் ஏற்படச் செய்தன. அதில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளாததினால்தான் அரசாங்கத்தார் கொடுத்த உரிமையை பறிக்கவில்லை. அதன் பிறகு காங்கிரஸ் வெளிப் படையாகவும் இரகசியமாகவும் இப்பிரதிநிதித்துவத்தை ஒழிக்க வேலைகளும் பிளவு உண்டாக சூழ்ச்சி செய்ததால் முஸ்லீம்கள் வெளிப்படையாகவே காங்கிரசை புறக்கணித்து முஸ்லீம்கள் யாரும் காங்கிரசில் சேராதபடி கிளர்ச்சி செய்தார்கள். இதனால் காங்கிரசு 3, 4 வருஷத்திற்குள்ளாகவே வலுக்குறைய ஆரம்பித்துவிட்டது.

காங்கரஸ்-லீக் ஒப்பந்தம்

அதன்பிறகு தான் தோழர் பெசண்டம்மையார் காங்கரசில் ஆதிக்கம் வைத்திருந்த காலமாகிய 1916-ம் வருஷத்தில் முஸ்லீம் லீக்கோடு ஒரு ஒப்பந்தம் செய்து லக்னோவில் கூடிய காங்கிரசில் அந்த ஒப்பந்தத்தை உறுதி செய்தார். இந்த சங்கதி முடிந்து காங்கிரஸ் வகுப்புவாரி உரிமையும் தனித்தொகுதி உரிமையும் ஒப்புக்கொண்டவுடன் அதே நிலைமையில் அதாவது முஸ்லீம்களுக்கு காங்கிரசில் எந்த விதமான கெடுதி இருந்ததோ அதுபோலவே தென்னாட்டில் பார்ப்பனரல்லாதாருக்கும் காங்கிரசில் இருந்ததால் தென்னாட்டு பார்ப்பனரல்லாதாரும் முஸ்லீம்களைப் போலவே தனி உரிமை கேட்க ஆரம்பித்தார்கள். அதுதான் இன்றும் காங்கிரஸ் - தென் இந்தியர் அல்லது ஜஸ்டிஸ் என்றும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்றும் சொல்லும்படியான கிளர்ச்சியாய் இருக்கிறது.

1916-ம் வருஷம் முஸ்லீம்களுடன் காங்கிரஸ் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஒழிப்பதற்கு ஆகவே 1920-ல் தோழர் காந்தியார் வசம் காங்கிரசை பிடித்துக்கொடுத்தும், இந்து காங்கிரஸ் தலைவர்கள் பலர் அன்னிபெசண்ட் அம்மையாரை காங்கிரசில் இருந்து விரட்டியதும், இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்ட பிறகு தான் சுயராஜ்யம் கேட்கவேண்டு மென்று காங்கிரஸ் தீர்மானித்ததும், கிலாபத் விஷயத்தில் இந்துக்களுக்கும் காங்கிரசுக்கும் மிகவும் அக்கரை இருப்பதுபோல் நடித்ததுமான காரியங்கள் செய்யப்பட்டதாகும்.

சூழ்ச்சிகள் பலிக்கவில்லை

இந்த சூழ்ச்சிகள் ஒன்றும் பலிக்காமல் போனதோடு வட்ட மேஜை மகாநாட்டில் தோழர் காந்தியாரும் தோழர் ஜின்னாவும் நேருக்கு நேராக முறையே இந்துக்களுக்கு ஆகவும் முஸ்லீம்களுக்கு ஆகவும் பேசி மனஸ்தாப மேற்படுத்திக் கொண்டதோடு கடைசியாக சுயராஜ்யம் கொடுத்தாலொழிய இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படமுடியாது என்று காந்தியார் சொல்லிவிட்டதுமான காரியங்களும் நடத்துவிட்டது.

அவ்வளவு மாத்திரமல்லாமல் இன்று அரசியலில் முக்கிய பிரச்சனையானது "முஸ்லீம்களுக்கு சர்க்கார் அளித்துள்ள வகுப்புரிமை பிரதிநிதித்துவமும், தனித்தொகுதியும் ஒழிக்கப்படுவதேயாகு"மென்றும் "இதனால் சுயராஜ்யம் கிடைப்பது தடைப்பட்டாலும் கூட கவலை இல்லை" என்றும் காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் பார்ப்பனர் அவர்களாலும் தென்னாட்டு காங்கிரஸ் தலைவர்கள் ராஜகோபாலாச்சாரியார், பிரகாசம், சத்தியமூர்த்தி முதலிய பார்ப்பனர்களாலும் வெளிப்படையாய் சொல்லப்பட்டும் விட்டது.

மைனாரிட்டிகளுக்கு துரோகம்

இவ்வளவு மாத்திரமல்லாமல் காங்கிரசார் சட்டசபை தேர்தலில் பகுதி மாகாணங்களில் நல்ல மெஜாரிட்டியாய் வந்தும் தாங்கள் சட்டப்படி பதவி ஏற்றுக்கொள்ளாமல் சண்டித்தனம் செய்து வருவதின் கருத்தும் இந்தியா மந்திரி அவர்கள் பேச்சால் விளங்கி விட்டது. அதாவது அரசியல் சீர்திருத்த சட்டத்தில் ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள் போக மேல் கொண்டு விசேஷ அதிகாரம் கவர்னர்களுக்கு வைத்திருக்கும் காரணம் முஸ்லீம் முதலிய சிறு வகுப்பாருடைய உரிமை முதலியவைகளை பாதுகாக்கவே என்பது விளக்கப்பட்டிக்கிறது. இதை அறிந்தும் காங்கிரஸ்காரர்கள் மேலும் தங்களுக்கு வாக்குறுதி வேண்டும் என்று கேட்டதிலிருந்தே காங்கரஸ் காரர்களின் உள் எண்ணம் நன்றாய் முஸ்லீம்களுக்கு விளங்கியிருக்கும்.

கடசியாக அரசாங்கத்தார் பிடிவாதமாய் - குரங்குப் பிடிவாதமாய் வாக்குறுதி மாத்திரம் கொடுக்க முடியாது என்றும், பொய்க் காரணங் களைக் காட்டி சந்தேகப்படுவதாய் வேஷம் போடுகிறீர்களே ஒழிய நீங்கள் படுவதாய் சொல்லப்படும் சந்தேகத்துக்கு கவர்னர்கள் விசேஷ அதிகாரங்களில் இடமில்லை என்றும், எதற்கு ஆக விசேஷ அதிகாரம் வைக்கப்பட்டிருப்பதாக சட்டத்தில் சூசனையாகவும் வெளிப்படையாகவும் காட்டப்பட்டிருக்கிறதோ அதற்கு மாறாய் காங்கிரஸ் நடக்காமல் இருந்தால் விசேஷ அதிகாரத்தைப்பற்றி காங்கிரஸ்காரர் பயப்பட வேண்டியதில்லையே என்றும் சொல்லி காங்கிரஸ் குட்டை வெளிப் படுத்திவிட்டதோடு இப்போது காங்கிரஸ்காரர்கள் சட்டப்படி பதவியில் அமராத வரையில் பின்னால் நிலைமை மிக மோசமாகிவிடும் என்றும் அப்புறம் சுலபத்தில் சரிப்படுத்திக் கொள்ளமுடியாதென்றும் எச்சரிக்கை செய்து விரட்டிய பின்பும் மேலால் ஒன்றும் பேசுவதற்கில்லாமல் "எறிந்துவிட்ட கீரையையாவது வளித்து வந்து எலையில் வை" என்று கேட்கின்ற மாதிரியில் இப்போது சொரணையற்று பதவி ஏற்கப்போகிறார்கள்.

இது நமக்கு ஒரு நல்ல சம்பவம்தான். காங்கிரசால் நாட்டுக்கு இருந்து வந்த தொல்லைக்கு சாவுமணி அடித்து விட்டது என்பதில் ஆக்ஷேபணை இல்லை. ஆனால் முஸ்லீம்களைப்பற்றி முஸ்லீம் கோரிக் கைகளைப் பற்றி முஸ்லீம் ஸ்தாபனங்களைப் பற்றி முஸ்லீம் தலைவர்களைப் பற்றி காங்கிரசின் கொள்கை என்ன, அதன் உள் எண்ணம் என்ன? என்பதை ஒவ்வொரு முஸ்லீமும் யோசித்துப்பார்க்க வேண்டியது இது சமயத்தில் மிகவும் அவசியமான காரியமாகும்.

இந்து மகாசபை, வருணாச்சிரம மகாசபை ஆகியவைகள் இந்தியாவில் உள்ளவரை முஸ்லீம்லீக், பார்ப்பனரல்லாதார் சங்கம், ஆதிதிராவிடர் சங்கம் முதலியவைகள் இந்த நாட்டில் இருந்தே ஆகவேண்டும். காங்கிரஸ் இவைகளுக்கு சித்திரத்திலும் கதையிலும் எழுதுவதற்கு கூட இடமில்லாமல் செய்ய சம்மதித்து அதில் முதலில் இறங்குமானால் மாத்திரம் மற்ற சங்கங்களையும் லீக்குகளையும் கட்டிவைத்துவிட்டு காங்கிரசுக்கு நம்மாலான உதவிகள் செய்யலாம். அப்படிக்கில்லாதவரை காங்கிரஸ் இந்திய மக்களுக்கு பொதுஸ்தாபனம் என்பது நம்மைப்போல் சமூக வாழ்விலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் பிற்படுத்தப் பட்டிருக்கும் மக்களின் விழிப்படையும் உணர்ச்சியையும் அழிக்க வைத்திருக்கும் பொறி என்றுதான் கருதவேண்டும்.

குறிப்பாக முஸ்லீம்கள் காங்கிரஸ் விஷயத்தைப்பற்றி கவனிக்க வேண்டுமானால் அவர்கள் காங்கிரசை ஒரு வார்த்தை கேட்கட்டும். இந்துக்கள் என்றும் முஸ்லீம்கள் என்றும் சமூக மத பிரிவுடன் இந்நாட்டின் மக்கள் கவனிக்கப்படும் வரை முஸ்லீம்களுக்கு இன்று இருந்துவரும் அரசியல் உரிமைகளில் தலை இடுவது இல்லை என்று காங்கிரஸ் ஒப்புக் கொண்டு காங்கிரசில் ஒரு தீர்மானம் போட்டு அரசாங்கத்துக்கு அனுப்பிக் கொடுக்க சம்மதிக்கிறதா என்று ஒரு கேள்வி கேட்டுப் பார்க்கட்டும். இதற்கு காங்கிரஸ் சம்மதித்தால் காங்கிரஸ் வெள்ளைக்காரர்களையோ வெள்ளைக்காரர் ஆட்சியையோ இந்த நாட்டைவிட்டு ஓட்டவேண்டும் என்றும் வெள்ளைக்காரர் ஆட்சி இந்தியாவை விட்டு அடியோடு ஒழிய வேண்டும் என்றும் கருதுகிற காலவரையறைக்கு 5 நிமிஷத்து முன்னாலேயே அவை ஓட்டப்படட்டும் என்று கையொப்பம் இட தயாராயிருக்கலாம். நாம் எந்த ஆட்சியின் கீழும் அடிமையாய் இருக்க விரும்பவில்லை.

காங்கிரஸ் வெள்ளைக்காரர்களை மிரட்டுவது மூலமோ தொல்லை கொடுப்பது மூலமோ சண்டித்தனம் செய்வது மூலமோ இந்த நாட்டில் தந்திரக்காரர்கள் வாழ்க்கையையும் சோம்பேறிகள் வாழ்க்கையையும் பலப்படுத்தி ஆதிக்கம் பெற்று மற்ற வகுப்பார்களை அடக்கி ஒடுக்கி பழயகால "மனு" சூழ்ச்சியை நடத்த சூழ்ச்சி செய்யப்படுகிறது என்று கண்ணியமாக கருதுகிறவர்கள் எப்படி காங்கிரசுடன் ஒத்து உழைக்க முடியும்? காங்கிரசில் சேர முடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

கிட்டத்தட்ட முஸ்லீம்களுடைய இந்த 30, 40 வருஷ கிளர்ச்சியாலும் அநேக தலைவர்கள் முயற்சியாலும் இந்திய முஸ்லீம்கள் இந்துக்களின் கண்களில் மனிதர்களாக தென்படும்படியான நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இது நிலைபெறுவதற்குள் எதிரிகள் கைக்கு அதிகாரங்கள் வந்து விட்டன. விடியவிடிய கண்விழித்து காவல் காத்துவிட்டு விடியற் காலம் சமீபத்தில் இருக்கும் குமரி இருட்டு நேரத்தில் தூங்கி விட்டோமே யானால் காவல் காத்ததின் பயன் முட்டாள் தனமாக வந்து முடிந்துவிடும். ஆதலால் தனிப்பிரதிநிதித்துவத்தால் தனி உரிமையால் அல்லாமல் வாழ முடியாது என்றும், சுயமரியாதை பெற முடியாது என்றும், உண்மையாய் கருதுகின்ற மக்கள் முஸ்லீம்கள் மாத்திரம் என்பது அல்லாமல் வேறு யாராவது இருந்தாலும் அவர்களும் இந்த சமயத்தில்தான் ஜாக்கிரதையாயும் கட்டுப்பாடாகவும் ஒற்றுமையாகவும் இருந்து காங்கிரசுக்கு தொல்லை கொடுத்து அவர்கள் மற்ற சமூகத்தாருக்கு தீங்கு செய்யாமல் காத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆகவே காங்கிரசும் முஸ்லீம்களும் என்பது பற்றி எனது அபிப்பிராயத்தை வெளியிட்டேன். இதில் தங்களுக்கு ஏற்றவைகள் இருந்தால் ஏற்றுக்கொண்டு மற்றவைகளை புறக்கணித்து விட வேண்டுகிறேன்.

குறிப்பு: 28.06.1937 இல் கும்பகோணத்தில் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் ஆற்றிய உரை.

தோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 11.07.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: