இவ்வருடம் சென்னை மாகாணத்தில் 84 ஸ்திரீகளுள்பட, 1744 பேருக்கு அடிமை முத்திரை வைக்கப்பட்டது.

மணிகளாகவும், மாணிக்கங்களாகவும் உள்ள பல வாலிபர்களும், ஸ்திரீ ரத்னங்களும், அடிமை முத்திரையைப் பெற்றுக்கொண்டுவிட்டார்கள்.

அதாவது இவ்வருடம் சர்வகலா சாலைப் பட்டம் வழங்கிய விழாவில்;

எம்.எல். பரீட்சையில் 4 பேர்கள்

பி.எல். ,, 234 ,,

பி.எஸ்.எஸ்ஸி. ,, 1 ,,

எம்.பி.பி.எஸ். ,, 22 ,,

எல்.எம்.எஸ். ,, 14 ,,

பி.இ. ,, 11 ,,

பி.எஸ்.ஸி. ,, 74 ,,

எல்.டி. ,, 50 ,,

எம்.ஏ. ,, 52 ,,

பி.ஏ. (ஆனர்ஸ்) ,, 89 ,,

பி.ஏ. ,, 750 ,,

கீழ் நாட்டுக்கலை ,, 17 ,,

பொருளாதார சாஸ்திரம் ,, 6 ,,

மாதர்களில் 84 பேர்களும் பட்டம் பெற்றனர். ஒவ்வொரு வருடமும் இப்படியே இந்தியா முழுவதும் பதினாயிரம் இருபதினாயிரக்கணக்கான பேர்களுக்கு நமது அரசாங்கத்தார் அவர்களது கல்வியான, அடிமைத் தன்மையைப் போதித்து, அடிமை முத்திரையைத் தலையிலடித்து, அடிமைச் சின்னத்தையும் கையில் கொடுத்து, அடிமைக்குத் தக்கவன் என்ற நற்சாட்சிப் பத்திரமும் அளித்து வெளியிலனுப்பி விடுகிறார்கள். இவ் அடிமைகளால் உலகும், உலகிலுள்ள ஜீவன்களும், சத்தியம், தர்மம், நீதி, அன்பு, பரோபகாரம், தேசபக்தி இன்னோரன்ன பிறவும், கடவுள் ஒருவர் இருக்கிறாரா என்றும், சந்தேகப்படத் தக்க வண்ணம் நாசமடைந்து வருகிறது.

பெண்களையும் பற்றிக்கொண்டது

இவ் அடிமை என்னும் ப்ளேக் வியாதி புருஷர்களைப் பீடித்து, மேல் சொன்னவைகளையெல்லாம் பாழ்படுத்துவதோடல்லாமல், இந்தியாவின் பெருமைக்கு நாயகமாய் இலங்கும் ஸ்திரீ ரத்னங்களையும் பற்றிப் பாழாக்க ஆரம்பித்து விட்டது. இதனால், மேல்சொன்ன தர்மங்கள் அழியக்கிடப்பது மல்லாமல், மேலும் அநேக தர்மங்கள் அழிவதற்கு அடிகோலியாகிவிடுமோ என்று ஐயுறும் நிலையில் இருக்கிறது. இதனால், ஸ்திரீகள் கல்வி கற்கக் கூடா தென்பது நமது அபிப்பிராயமல்ல. புருஷர்களே கற்கக்கூடாது என்றும், இக் கல்வியே இந்தியாவையும், இதன் அரசியல் சுதந்திரங்களையும் பாழாக்கி அடிமையில் ஆழ்த்தியிருக்கிற தென்றும், முன்னே குறிப்பிட்ட தர்மங்களைப் பாழாக்கிற்றென்றும் கருதி, காங்கிரஸ் பகிஷ்காரத் திட்டங்களிலே முதன்மை யானதாக வைத்து, ஆண் மக்களைப் பகிஷ்கரிக்குமாறு வேண்டிக்கொண்ட ஒரு கல்வியை பெண் மணிகளும் கற்க ஆரம்பித்து விட்டார்களென்றால், பிற்கால வாழ்வில் மனித தர்மத்திற்கும், தேசவிடுதலைக்கும் நம்பிக்கை எங்கிருக்கிறது? நமது ஸ்திரீகளையாவது இவ் அடிமைக் கல்வியிலும், அதர்மக் கல்வியிலும் புகவிடாமல் காப்பாற்ற முடியவில்லையானால், புருஷர்களை நாம் எப்படிக் காப்பாற்றப் போகிறோம்?

பட்டதாரிகள் என்னசெய்யப் போகிறார்கள்?

எம்.எல்.

நிற்க, இப்பட்டம் பெற்ற 1744 பேர்களும் என்ன செய்யப்போகிறார் களென்று கவனிப்போம். நால்வர் எம்.எல். பரீக்ஷையில் தேறியிருக்கிறார்கள். இவர்கள் அனேகமாய் நமது சர்க்காரில் உத்தியோகம் பெறுவார்கள். இவ் உத்தியோகம் பெறுவதினால் சர்க்காருக்கு நல்ல பிள்ளைகளாக நடந்து, வண்ணான் வாகனம் போல் வைத்த பாரத்தைச் சுமந்து பலவிதத்திலும் கிடைக்கும் வருமானத்தால் தமது பெண்டாட்டி பிள்ளைகளைக் காப்பாற்றிக் காலங் கழிப்பார்களேயொழிய வேறென்ன செய்வார்? இவர்களால் தேசத் திற்கு யாதொரு பயனும் விளையப் போவதில்லை என்பது மாத்திரம் திண்ணம்.

பி.எல்.

அடுத்தபடியாக பி.எல். வகுப்பில் 234 பேர்கள் தேறியிருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் வக்கீல் தொழில் செய்யவே அமருபவர்கள். இவ் வக்கீல்களால் தேசம் எக்கதியை அடைந்திருக்கிறதென்பதை நாம் சொல்லா மலே விளங்கும். மதுபானக் கடைகளாலும், சூதாடுமிடங்களாலும், விபசாரக் கோஷ்டிகளாலும் செய்யமுடியாத அவ்வளவு அதிகமான கொடுமைகளை இவ்வக்கீல் தன்மை நமது தேசத்தில் விளைவித்து வருகிறது. தேசத்தின் சமாதானத்தையும், ஒற்றுமையையும் கோர முடியாததான இவ்வக்கீல் தொழிலை நம்மில் அனேக உத்தமமானவர்களுக்கு நமது சர்க்காரார் இதற்கென்றே பள்ளிக் கூடங்கள் வைத்து, கற்றுக்கொடுத்து, தேசத்தைக் கெடுக்கத் தகுதியுடையவர்கள் என்று நற்சாட்சிப் பத்திரமும் கொடுத்து வெளி யில் அனுப்பிவிடுகிறார்கள். இது சமயம் நமது தேசத்தில் இக்கோஷ்டியார் சுமார் இருபதினாயிரம் பேர்களுக்குக் குறைவுபடாமலும் முப்பதாயிரம் பேர்களுக்கு அதிகப்படாமலும் இருக்கலாம். இக்கோயமுத்தூர் ஜில்லாவில் மாத்திரம் 250 வக்கீல்கள் இருக்கிறார்களென்றால், நமது மாகாணத்தில், இது போல் இருபத்தி நான்கு ஜில்லாக்கள் இருக்கின்றன. சென்னையில் சுமார் 500 அல்லது 600 வக்கீல்கள் வரை இருக்கிறார்கள். ஆக இம்மாகாணத்தில் மட்டுமே, எவ்விதத்திலும் ஐயாயிரம் வக்கீல்களுக்கு குறைவுபடாது. இப்படியே பார்த்துக்கொண்டு போனால், இன்னும் எத்தனையோ மாகாணங் கள் நமது தேசத்தில் இருக்கின்றன. ஆக சற்று ஏறக்குறைய, சராசரி இருபத் தையாயிரம் வக்கீல்களுக்கு குறைவுபடமாட்டார்களென்றே நம்புகிறோம்.

ஆறு கோடி ரூபாய்

இவர்களின் சராசரி வரும்படி, பத்தாயிரம் பதினாயிரம் என்று சம்பா திப்பவர்களும் நூறு, இருநூறு என்று சம்பாதிப்பவர்களும் உள்பட நபர் ஒன்றுக்கு, மாதம் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் வரும்படி என்று வைத்துக் கொண்டாலும், இவ் இருபத்தையாயிரம் வக்கீல்களுக்கும் மாசமொன்றுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்கள் வீதம் வருடமொன்றுக்கு ஆறு கோடி ரூபாய்கள் பொதுமக்களுடைய பணம் செலவாகிறது. இப்படியிருக்க வருடமொன்றுக்கு 250 பேர்களும், இஃதல்லாமல் முதல் வகுப்பு வக்கீல்கள் என்பவர்கள் ஐம்பது, அறுபது பேர்களும், ஆக முன்னூறு வக்கீல்கள் இம்மாகாணத்திற்கு மட்டும் புதிதாக ஏற்பட்டால், மற்றும் பிற மாகாணங்களிலும் இதே போல் கணக்கிட்டுப் பார்த்தால் வருடமொன்றிற்கு இரண்டாயிரம் பேர்களுக்குக் குறையாமல் புது வக்கீல்கள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறார்கள். இக்கணக்கு இவ் வண்ணமே வருடா வருடம் பெருகிக்கொண்டே போகுமானால் இதற்கு முடிவு எப்பொழுது? இதன் பலனாய் தேசத்தின் பிற்கால கதியென்னவாகும்?

வயிறு வளர்க்கும் விதம்

இத்தனை பேரும் இச்சர்க்காரைத் தாங்கிக் கொண்டு, இதன் அதிகாரி களை பிரபுவே! பூஜிக்கத் தகுந்தவர்களே!! துரைகளே!!! கனவான்களே!!!! என்று ஒருபக்கம் ஸ்துதி பண்ணிக்கொண்டும், மற்றொரு பக்கம் பாமர ஜனங்களைக் கூட்டிவைத்து மேடையின் மேலேறி இச்சர்க்காருக்குச் சரியான புத்தி கற்பிக்கவேண்டும், லாயிட் சார்ஜ் துரைக்கு சரியான பதில்சொல்ல வேண்டும், லார்ட் பர்கென் ஹெட் பிரபுவிற்கு பதில் சொல்லவேண்டும், ஜஸ்டிஸ்கட்சியை நம்பாதீர்கள், அன்னார் சர்க்காரைத் தாங்குபவர்கள், மிதவாதக்கட்சியினர் தேசத்தைக் காட்டிக்கொடுத்து பட்டம் பதவிகளைப் பெறுபவர்கள். சுயராஜ்யக் கட்சிக்காரர்கள் உண்மையற்றவர்கள், யோக்கியரல்லாதவர்கள் என்று ஒருவரை யொருவர் தூற்றிக்கொண்டு வயிறு வளர்ப்பதற்கும், பெருமை பெறுவதற்கும் அலைவதுதானே இவர்கள் கதி.

எல். எம். அண்ட் எஸ்.

இவர்கள் கதி இதற்கடுத்தால் போல், எம்.பி.பி.எஸ். எல்.எம்.எஸ் என்ற பரீக்ஷையில் தேறினவர்கள்.

இவர்களால் தேசத்திற்கு உண்டாகும் நன்மையென்ன? இவ் வயித்தி யர்கள் எனச் சொல்லப்படும் டாக்டர்களின் கதியென்ன? இவர்களேற் படாத காலத்தில் ஓர் அரை அணா மருந்தில் தீர்ந்துபோகக்கூடிய ஒரு வியாதி இவர் களேற்பட்டபின் ஒருவனுக்கு வந்தால், இவரைக்கூட்டிக் கொண்டுபோய்க் காட்டுவதற்கு மூன்று ரூபாய். இவர் சொல்லுகிறபடி மருந்து வாங்குவதற்கு ஒன்று, பத்து என்று சொல்லக்கூடிய ரூபாய்கள் செலவு செய்து மருந்து வாங்குவதில், செலவழிக்கச் செய்யும் பணம் எவ்வளவு? இப்படியாக இவர்கள் அன்னியநாட்டு மருந்துகளை விற்கும் தரகர்களாகி நமது நாட்டுப் பெண்களுக்குக்கூட தெரிந்திருந்த சாதாரண வைத்தியக் கைமுறைகளையும், நாட்டு வைத்தியங்களையும், அழித்து ஏழைகளுக்கு வியாதிவந்தால், பார்த்துக் கொள்ளமுடியாத நிலையில் ஆக்கி தாங்கள் மட்டும் பிழைப்பதற்கு உபயோகப்படுவார்களேயல்லாமல் தேசத்தின் வேறு எவ்வித நன்மைக்கு உபயோகப் படப்போகிறது?

பி. ஏ., எம். ஏ.

பிறகு, தொளாயிரம் நபர்கள் வரையும் பி. ஏ., எம். ஏ. முதலிய பரீக்ஷை களில் தேறி பட்டம் பெற்றதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் கதி யென்ன என்று பார்ப்போமேயானால், பட்ட விழாவில் அடிமை முத்திரை பெற்றதும், முதல்முதலாக பத்திரிகைகளில் எங்காவது விளம்பரங்கள் இருக்கின்றனவா என்று தேடுவதும், வக்கீல் உத்தியோகத்திற்கு போகலாமா, வியாபாரம் செய்யலாமா அல்லது ராஜீய விஷயத்தில் புகுந்து ஏதாவது ஜீவனத்திற்கு வழிதேடலாமா எனவும் மற்றும் பலவிதமாக யோசித்து ஒருபங்கு வக்கீலுக்கும், ஒருபங்கு சர்க்கார் உத்தியோகத்திற்கும், ஒருபங்கு தருதலையாகவும் பிரிந்து வீடுவீடாக ஆபீஸ் ஆபீஸாக அலையவும், நினைத்தபடி யெல்லாம் விண்ணப்பங்கள் போட்டுக்கொண்டு அலையவும், இன்னும் மேலே சொன்ன விபரங்களுக்கல்லாமல் வேறு எதற்கு உபயோகப் படப் போகிறார்கள்? இதைத்தான் நமதுநாட்டில் கல்வியென்றும், இக்கல்வி கற்றோர்கள்தான் கற்றவர்களென்றும், மேதாவிகளென்றும் சொல்லிக் கொண்டும் நமது ஜனங்கள் இக்கல்வியையே பயிலல் வேண்டுமென மோகங் கொண்டு தங்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள். இவற்றை நன் கறிந்துதான் மகாத்மா காந்தியவர்கள் இக்கல்விதான் தேசத்தை இந்நிலைக்குக் கொண்டுவந்துவிட்ட தென்றும், இதை பகிஷ்கரித்தாலல்லது நமது தேசத்திற்கு விடுதலையும் சுயராஜ்யமும் இல்லையென்றுசொல்லி, இதை ஒத்துழை யாமைத் திட்டத்தில் ஓர் முக்கிய பாகமாக வைத்தார்கள். இதை நிறைவேற்ற இப்படிப்புப் படித்தவர்களையே ஆயுதமாக உபயோகித்ததால் ஆரம்பித்த ஒத்துழையாமை தர்மமும் அழிக்கப் பட்டு, தேச முன்னேற்றமும் பாழடைந்து, மகாத்மா காந்திக்கும் இனி நமக்கு சுயராஜ்யம் கிடைக்கவா போகிறதென சந்தேகித்து நடக்கிறபடி நடக்கட்டும் என்று விட்டுவிட்டு, புதுத்திட்டத்திற்கு யோஜனை பண்ணிக்கொண்டிருக்கிறார். நமது தேசம் சுயராஜ்யமடைய வேண்டுமானால், விடுதலைபெற வேண்டுமானால் இக்கற்ற வகுப்பார் தேசத் தொண்டிலிருந்து தொலைந்து, இக்கல்வி முறைகளும் ஒழிந்துபோக வேண்டும். மற்றவைகளைப் பற்றி சமயம் நேரும் பொழுது எழுதுவோம்.

தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 30.08.1925

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: