சுயராஜ்யா என்ற போலிப் பெயரை அணிந்து பிராமணர்களின் சுயநலத் திற்கும் பிராமணரல்லாதார் சமுகத்திற்கு துரோகம் செய்வதற்குமான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சில பிராமணர்களால் நடத்தப் பட்டுவரும் ஒரு சென்னை தினசரிப் பத்திரிகை கொஞ்சம் கொஞ்சமாக தனது விஷத்தை நாலுங் கக்கிக்கொண்டே வருகிறது. அதாவது இம் µ 10.9.25ல் வெளியான சுயராஜ்யா பத்திரிகையில் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சில சென்னை ஓட்டர்கள் சுயராஜ்யக் கட்சியினரின் தூண்டுகோளின்படி சென்னைக்குச்சென்று ஓட்டர்கள் மகாநாட்டில் பேசிய பேச்சை அரைகுறை யாக மனதில் வைத்துக்கொண்டு மின்னொளி என்ற தலைப்பின் கீழ் சில வார்த்தைகள் காணப்படுகின்றன. ‘காவாலித்தனம்’ தலை மிஞ்சுகிறது.

நகரசபைகளைக் கைப்பற்ற காங்கிரஸ் முயலுமிடங்களிலெல்லாம் எதிர்க்கட்சியினர் குறும்பு பண்ணுகின்றனர்.

தலைக்குக் கொள்ளி விலைக்கு வாங்கிக்கொள்வோம் என்கிறார்கள்.

வகுப்பு வேற்றுமைப் பேயைக் கிளப்பி விடுகின்றனர்.     

நம்மவரிலே பலர் குட்டிக்கரணம் போடுகின்றனர்.

சின்னாட்களுக்கு முன் மகா தீவிர ஒத்துழையாதாரராகவிருந்தோர் இப்பொழுது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதில் மயங்கிக் கிடக் கின்றனர்.

சுதந்திரப்போரில் முன்னணியினின்று முதுகு காட்டி ஓடுவோம் என்கின்றனர்.

காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சிக்குப் போட்டியான நண்பர்களைத் தயாரிப் போம். ஆதரிப்போம் என்கின்றனர்.

சென்னையிலே பிள்ளையார் வேஷம் கிளம்பியுள்ளது. கும்ப கோணத்தில் மூலவேஷம் தோன்றப் போகின்றது. குட்டிக்கரணம் போட்ட பானர்ஜி, வாட்சா முதலியோரின் கதியை அன்னார் எண்ணிப்பார்ப்பரோ என்றும் எழுதியிருக்கின்றது.

ஆனால் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் சென்னையில் செய்த பிரசங் கத்தை இப்பத்திரிகையில் வெளியிட ஆண்மைத் தனம் இல்லாமல் மறைத்து வைத்துவிட்டு, ஆடு நனைகிறதென ஓநாய் அழுவதுபோல் நம் தலைக்கு கொள்ளி விலைக்கு வாங்கிக் கொண்டதாகவும், வகுப்பு வேற்றுமையைக் கிளப்பி விட்டுவிட்டதாகவும் மிகவும் பரிதாபப்பட்டு ஓலமிடுகின்றது. முதலாவது, இப்பத்திரிகைக்கு வகுப்பு வேற்றுமை இருக்கிறதா இல்லையா? ஒரே வார்டிற்கு நிற்கும் ஒரு பிராமணருடைய தேர்தலுக்காக கூடிய கூட்டத்தின் நடவடிக்கைகளை தாராளமாய் வெளிப்படுத்தியுள்ளது. மற்றவர்களுடைய கூட்டத்தைப் பற்றியோ நடவடிக்கைகளைப் பற்றியோ தங்கள் சாதிக்கோ தங்களைத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கோ விரோதமாயிருந்தால் அவற் றைப் பிரசுரிப்பதே இல்லை. இது சாதித் துவேஷ மும் வகுப்புதுவேஷமும் அல்லவா? கள்ளுக்குடித்தாலும், மாட்டுமாமிசம் சாப்பிட்டாலும் நான் பிராமணன், மற்றவர்கள் அப்படிச் செய்யாவிட்டாலும் அவர் சூத்திரர், தொடக்கூடாதவர் என்று ஒருவர் சொல்வாரானால் இது வகுப்பு வேற்றுமையா அல்லவா? கோவிலுக்குப் போகும்பொழுதும் குளத்திற்குப் போகும் பொழுதும் குஷ்டரோகியாகவிருந்தாலும், வியபசாரத் தில் ஜீவிப்பவர்களாயிருந்தாலும் தாங்கள் தான் உள்ளே போக வேண்டும் மற்றவர்கள் உத்தமர்களானாலும், வெளியில்தானிருக்கவேண்டும் மதில் பக்கங்கூட நடக்கக்கூடாது என்று சொன்னால் இது வகுப்பித்துவேஷமா அல்லவா? வியபசாரத்தனம் செய்தாலும், வியபசாரத்தனத்திற்குத் தரகு வாங்கினாலும் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் சூத்திரர்கள் பஞ்சமர்கள் என்றும் சொல்லுவது வகுப்புத் துவேஷமா அல்லவா? திருடினாலும், மோசம் செய்தாலும், லஞ்சம் வாங்கினாலும் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் மேற்சொன்னவற்றை செய்யா திருந்தாலும் சூத்திரர், தீண்டக்கூடாதவர் என்றால் இது வகுப்புத் துவேஷமா அல்லவா? தாங்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு மூன்றுபேர் இருந்தாலும் மற்றவர்கள் தொன்னூற்றேழு பேர் இருந்தாலும் தாங்கள் தான் எல்லாப் பதவி களையும், எல்லா ஸ்தானங்களையும், எல்லா உத்தியோகங்களையும் அடைய வேண்டும் என்று பேராசைப்பட்டுக் கொண்டு மற்றவர்கள் எவ்வளவு எண்ணிக் கையில் அதிகமும் யோக்கியர்களாயு மிருந்தாலும் அவர்கள் அதை அடையக் கூடாதென்ற கெட்ட எண்ணத்தின் பேரில் பிராமணரல்லாதாரிலேயே சில பொக்கிகளையும் வயிறு வளர்க்கவோ உத்தியோகம் பெறவோ என்ன வேண்டு மானாலும் செய்யத் தயாராக இருப்பவர்களையும் பத்திரிகை விளம்பரத்தினால் வாழுபவர்களையும் பணமும் பத்திரிகையில் இடமுங்கொடுத்து தங்களுடன் சேர்த்துக் கொண்டு அதற்குத் தகுந்தவிதமாக ஒரு சூழ்ச்சியான கட்சியையும் ஏற்படுத்திக்கொண்டு ஒரு பெரிய வகுப்பாருக்குத் துரோகமாய் இழிவுப் பிரசாரங்கள் செய்வது வகுப்புத் துவேஷமா இல்லையா? இந்நிலையிலிருக்கும் வகுப்புத் துவேஷிகள் மற்றவர்கள் வகுப்புவாரி உரிமை கேட்பதையும், கொடுக்கிறேன் என்பதையும் வகுப்புத் துவேஷம் என்று சொல்வார்களானால் இவர்களை வைத்துக் கொண்டு ஒருதேசம் எவ்வாறு முன்னேற்றமடையும்? இந்து, சுதேசமித்திரன் முதலிய பிராமணப் பத்திரிகைகள் பிராமணரல்லாதார் விஷயத்திலேயும் தேச விடுதலை விஷயத்திலேயும் யோக்கியமாய் நடக்க வில்லையென்றும், யோக்கியமாய் நடப்பதற்கு ஒரு பத்திரிகை வேண்டுமென் றும் நினைத்து பிராமணரல்லாதார் பணமே பெரும்பான்மையாகவிருந்த காங்கிரசிலிருந்து ரூபாய் பதினாயிரம் கடனும் கொடுத்து பிராமணரல்லாதா ரிடமே பெரும் பான்மையான பணத்தைப் பங்காய் வசூல் செய்து கொடுத்து நடத்தச்செய்த சுயராஜ்யா என்னுமொரு தமிழ்ப் பத்திரிகை இம்மாதிரி விசு வாசத் துரோகமாய் நடந்தால் பிராமணரல்லாதாருக்கு இவ்வித பிராமணர் களிடத்தில் எப்படி அவநம்பிக்கை உண்டாகாமல் இருக்கும்? வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் கேட்கமுடியாமல் எப்படி இருக்கமுடியும்? இதனாலேயே சுயராஜ்யா எழுதுகிறபடி காவாலித்தனமும் விசுவாசத் துரோகமும் மிஞ்சிப் போய் விட்டதென்றும் (இதற்குப் பணம் கொடுத்ததால் பிராமணரல்லாதார்) தலைக்குக் கொள்ளி விலைக்கு வாங்கிக் கொண்டது வாஸ்தவம்தான் என்றும் ஒப்புக்கொள்வோம். ஆண்மைத்தனமும் சுத்த இரத்தோட்டமும் உள்ள கூட்டத்தால் அப்பத்திரிகை எழுதப்படுமானால் ஒருவர் கூறியவற்றையும் எழுதியவற்றையும் தமது பத்திரிகையில் எழுதி அதற்கு மறுப்பு எழுதி பொது ஜனங்களின் அப்பிராயத்திற்கு விடுவது யோக்கியத்தனமாகும். அப்படிக் கின்றி நீச்சத்தன்மையும் மோச இரத்தமும் ஓடுகிறவர்களால் எழுதப்படு வதனால் உண்மையான விஷயங்களை விட்டுவிட்டு இழிவுப் பிரசாரம் செய்யும் அயோக்கியத்தனத்தைக் கைக் கொள்ளவேண்டியதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. சென்னையில் ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர் இரண்டு தினங்கள் ஓட்டர்கள் மகாநாட்டில் பேசியவற்றில் ஒருவரிகூட தமது பத்திரிகையில் போடாமல் பொதுஜனங்கள் இதை அறிந்துவிட்டால் தங்களுடைய யோக்கியதை வெளியாகிவிடுமே என்று மறைத்து விட்ட தல்லாமல் ஈனத்தனமாய் இழிகுலத்தோர் ஜாடை பேசுவதுபோல் குட்டிக் கரணம் போட்டுவிட்டாரென்றும், முதுகுகாட்டி ஓடி விட்டார் என்றும் எழுதி யிருப்பது இவர்களைப் பற்றி உலகத்தார் எண்ணி யிருக்கும் எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது. மானம் உள்ள ஆயிரம் வீரரோடு ஒரு ஒத்தைவீரன் சண்டை செய்யமுடியும். மானமில்லாத ஒரு கீழ் மகனோடு ஆயிரம் வீரர்களா னாலும் சண்டை செய்ய முடியாது. உண்மையானவர்களும், யோக்கியமான வர்களும் எக்குலத்தவராயினும் நமக்கு தெய்வம் போன்றவர் களே ஆவார்கள். அஃதின்றி அதற்கு எதிரிடையான மற்றவர்கள் நமது எதிரியே ஆவார்கள். நிற்க, மற்ற சில பிராமணப் பத்திரிகைகளும் மேற்கண்ட குணங் களோடு மாறு பெயர்களை வைத்துக் கொண்டு மறைமுகமாய்ப் பேடி யுத்தம் செய்ய ஆரம்பம் செய்து விட்டன. இவைகளையும், இவைபோன்ற இன்னும் பல யுத்தங்களையும் எதிர்பார்த்தே ராஜீய உலகத்திலும், ராஜதந்திர உலகத்திலும் கடுகளவு இடம் நமக்கு இல்லாமற் போயினும் உண்மையான பரோபகாரத் தொண்டு உலகத்தில் கடுகளவு இடம் கிடைத்தாலும் போதுமென் கின்ற உறுதியின் பேரிலேயே நாமும் போருக்கு ஆயத்தமாகி விட்டோம். உண்மைக்கு யோக்கியதை இருக்கின்றதா இல்லையா என்பதை ஒரு கை பார்த்தே தீர்க்கப் போகிறோம்.

தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 13.09.1925

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: