வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

இதைப்பற்றி கொஞ்சகாலத்துக்கு முன்பு நமது 16-8-25 குடி அரசின் இதழில் சித்திரபுத்திரன் யெழுதிய ஒரு கட்டுரை வாசகர்கள் பார்த்திருக்கலாம். இன்று நடக்கப்போகும் காஞ்சி மகாநாட்டில் ஒரு தீர்மானம் வருவதாய்த் தெரிகிறபடியால் அதனவசியத்தைப்பற்றி வாசகர்கள் மறுபடியும் அதைப் பற்றி அறியுமாறு சில வாக்கியங்கள் எழுதுகிறோம். வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் என்பது ஒரு தேசத்தின் ஆட்சியின் பொது உரிமையும் அந்நாட்டின் குடிமக்களின் உரிமை சகலமும் எல்லா வகுப்பாரும் ஏற்றத்தாழ்வின்றி சமமாய் அடையவேண்டிய தென்பதுதான். இதன் அரசாங் கத்தாரும் குடி மக்களுக்கு சரியாய் வழங்குவதாய் 1840-ம் வருஷத்திலேயே ஒப்புக்கொண்டு (போர்டு ஸ்டாண்டிங் ஆர்டர் 125 -ன் மூலமாய்) வெளியிட்டுமிருக்கிறார்கள். ஆதலால் இந்தியர்களுக்கு பெரிய உத்தியோகங்கள் ஏற்பட்டதன் பிறகோ சீர்திருத்தங்கள் ஏற்பட்டதன் பிறகோ வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பேச்சு பிறந்ததல்ல. ஆனால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டால் யாருடைய செல்வாக்கும் போகங்களும் ஆதிக்கங்களும் குறைந்துவிடுமோ அவர்கள் வசமே அரசாங்கத்தின் ஆதிக்கமிருந்து அவர்களே அநுபவித்துக் கொண்டேவந்த தினால் வகுப்புவாரி பிரதிநிதித்துவமென்பது சர்க்கார் உத்தரவளவிலும் காயிதவளவிலும் நின்று போய்விட்டது. அதன் பலனாய் பிரிவுகளும், வேற்றுமைகளும், துவேஷங்களும், தந்திரங்களும், பகைமை களும் வளர்ந்து கொண்டே வந்து இப்பொழுது அதுகள் பலனளிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆரம்பித்திருக்கும் முறையைப் பார்த்தால் இதனு டைய முடிவு என்னவாகுமோ என்று எண்ணுகிறபோது பயமாகவே இருக் கிறது. இந்தியா ஒழிந்த மற்ற நாடுகளுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அதிக அவசியம் இல்லாத போதிலும் சிற்சில விடங்களில் தொகுதிகள் பேராலும் வகுப்புகளின் பேராலும் இருந்து கொண்டு தான் வருகிறது. குடியேற்ற நாடுகளிலும் இவ்வழக்கமிருந்து கொண்டுதான் வருகிறது. நமது நாட்டில் சிலர் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வந்தால் ஜனங்களை பிரித்து விடும் என்று சொல்லுகிறார்கள். நமது நாட்டில் மகமதியர்களுக்கும் கிருஸ்து வர்களுக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டதின் பிறகு என்ன பிரிவினை புதிதாய் ஏற்பட்டுப் போய்விட்டது? பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு 150 வருஷத்துக்கு மேலாகியும் இன்னமும் தீண்டாதாராகிய ஏழு கோடி மக்களுக்கு ராஜீய வாழ்வில் சுதந்தரம் பெற யோக்கியதை யில்லையென்றுதானே சொல்லவேண்டியிருக்கிறது. அதன் பலனாய் அவர்களத்தனை பேரும் அரசாங்கத்தைதானே நத்திக்கொண்டிருக்க வேண்டியதாய் போய்விட்டது. பிராமணரல்லாதாரென்னும் 24 கோடி இந்துக்கள் ராஜீய வாழ்வில் சமஉரிமை பெறுவதற்கில்லாமல் பிற்போக்கான வகுப்பில் சேர்க்கப்பட்டு அரசாங்கத்தாரையும், பிராமணர்களையும் நத்திக் கொண்டு தானே இருக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. இதற்கு காரண மென்ன? பிறவியிலேயே அவர்களுக்கு இவ்வுரிமையை பெற யோக்கிதை இல்லாததா? அல்லது அவர்கள் இவ்வுரிமைபெற வொட்டாமல் உயர்பதவி யிலிருக்கிறவர்கள் தங்கள் செல்வாக்கால் கொடுமைப்படுத்தி முன்னேற வொட்டாமல் அடக்கி வைத்திருப்பதா? குறைந்தது 50 வருஷத்திற்கு முன் பாவது பிராமணரல் லாதாருக்கும், தீண்டாதாரென்போருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தால் இன்றைய தினம் இவர்களிருவரின் நிலைமையும் இப்படி யிருக்குமா? ஸ்ரீமான்களான க்ஷ.சூ. சர்மாவுக்கும், ஊ.ஞ. ராமசாமி அய்யருக்கும், கொடுத்திருக்கும் உத்தியோகங்களை ஸ்ரீமான்களான ஆ.ஊ. ராஜாவுக்கும், சு. வீரய்யனுக்கும் கொடுத்தால் பார்க்கமாட்டார்களா? ஊ.ஞ. ராமசாமி அய்யர் அவர்கள் இருக்கும் உத்தியோகத்தில் ஸ்ரீமான் வீரய்யன் அவர்கள் இருந்தால் பாலக்காடு தெருவில் நடக்க 144 ஏற்பட்டிருக்குமா? கோவிலுக்கு போனதற்காக தண்டனை அடைந்திருக்க முடியுமா? என்ன காரணத்தால் இவர்களுக்கு அந்த உத்தியோகம் கிடைக்காமல் போய் விட்டது? யோக்கியதை இல்லாததாலா? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாததாலா? ஜனாப் சர் முகம்மது ஆபீபுல்லா சாய்புக்கும், டாக்டர் முகம்மது உஸ்மான் சாய்புக்கும் 5000 ம், 6000 ம், சம்பளம் கிடைக்கக்கூடிய பதவிகள் எப்படி கிடைத்தது. இப்பொழுதுதான் அந்த ஸ்தானத்திற்கு அவர்கள் யோக்கியதை உடையவர்களாய் விட்டார்கள் என்கிற காரணத் தாலா? வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையின் வாசனையினாலா? இவற்றை பொது மக்கள் சிந்தித்துப் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்பட்ட வகுப்பார்கள் என்று கருதப்பட்டவர்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இல்லாமல் எப்படி சமத்துவம் ஏற்படும் என்பதை அறி வார்கள். இப்போது பிற்பட்ட வகுப்பார் என்று அழைக்கிற வகுப்பாரெல்லாம் பிரிட்டிஷார் நம் நாட்டுக்கு வரும்போது பிற்பட்ட வகுப்பாராகவா இருந் தார்கள்? பல பிராமணர்கள் அரசாங்கத்திற்கு அனுகூலமாயிருந்ததாலும் மற்றவர்கள் அப்படியில்லாததாலும் அரசாங்கத்தார் பிராமணர் களுக்கே சகல சவுகரியமும், உரிமையும் கொடுத்ததனால் பிராமணர்கள் முற்பட்ட வகுப்பாராகவும் பிராமணரல்லாதவர்கள், பிற்பட்ட வகுப்பார்களாகவும் ஏற்பட்டுப்போய் விட்டது. இந்த பிற்பட்ட வகுப்பார் வகுப்புவாரி பிரதிநிதித் துவம் இல்லாமல் வேறு எந்த வழியில் முற்பட்டவர்கள் ஆகக்கூடும். இப்போது அவர்களுக்கு புத்தியில்லையா? சக்தியில்லையா? கல்வி யில்லையா? ஏன் தங்கள் தொகைக்குத் தகுந்த உரிமை அடையாதிருக் கிறார்கள். இந்தியர்கள் அநேக ஜாதியார்கள் நாள்போகப்போக உரிமை வளர்ந்துகொண்டேபோகும். பிறகு எத்தனை பேருக்கு கொடுப்பது என்று சிலர் பேசுவார்கள். ஆனால் தற்காலம் அரசாங்கத்தில் தென்னாட்டில் ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், கிருஸ்தவர், மகமதியர், பிராமணர்கள், பிராமணரல்லாதவர்கள், தீண்டதார்கள் என இவ்வெட்டு வகையாய்த்தான் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ஐரோப்பியர், ஆங்கிலேய இந்தியர், கிருஸ்தவர், மகமதியர் இவர்களுக்கு பிரித்து கொடுத்தாய்விட்டது. இவர் நீங்கிய மற்றவர்களான பிராமணர் பிராமணரல்லாதார் தீண்டாதார் என மூன்று வகுப்பாரையும் மகமதியரல்லாதார் என்னும் பெயரால் அழைக்கப்பட்டு அவர்களுக்கு மாத்திரம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்படாமலிருக் கிறது. இம்மூன்று வகுப்பாருக்கும் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் ஏற்பட்ட பிறகு மறுபடியும் உள் வகுப்புகள் ஏற்படுமே என்கிற பயமிருக்குமானால், அதற்கும் நாம் தயாராயிருக்க வேண்டியதுதான். உத்தியோகங்களுக்கு பெருத்த சம்பளங்கள் கொடுப்பதை நிறுத்திக்கொண்டோமேயானால் எத்தனை வகுப்புகளுக்கு வேண்டுமானாலும் பிரதிநிதித்துவம் கொடுப்பதில் நமக்கு கஷ்டம் ஏற்படாது. மேல் நாடுகளில் பார்லிமெண்டு முதலிய சபைகளுக்கு 500, 1000 என்கிற கணக்குள்ள மெம்பர்கள் இருந்து காரியம் நடத்தவில்லையா அது செய்வது நமக்கு கஷ்டமே இருக்காது. சண்டை வருவதெல்லாம் பெரும் சம்பளத்தை உத்தேசித்துத்தானே. சம்பளமில்லாத அதிகாரத்தை அனேக மாய் யெல்லாரும் விரும்பமாட்டார்கள். ஒருவருக் கொருவர் சண்டைபோட்டு கொள்ளமாட்டார்கள். ஒருவரைக் கெடுக்க ஒருவர் தந்திரங்கள் செய்ய மாட்டார்கள். தேசம் நம்முடையது என்கிற எண்ணமும் தேசத்தின் பொது நலத்திற்கு யெல்லோரும் ஒன்றுசேர்ந்து உழைக்கவேண்டும் என்கிற எண்ண மும் தானாகவே ஏற்படும். இப்போது ஜனங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகள் ஒழியும்.சர்க்காராரும் ஒருவரை விட்டு ஒருவரை கொடுமைப்படுத்தச் சொல்லமுடியாது. ஆதலால் தேச நலத்திலும் சமூக நலத்திலும் அக்கரையுள்ளவர்கள் காஞ்சீபுரம் மகாநாட்டில் வகுப்புவாரி தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுகிறோம்.

குடி அரசு - கட்டுரை - 22.11.1925

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: