தற்காலம் நமது தமிழ் நாட்டில் வழங்கப்பெறும் நீதி நூற்களிலெல்லாம் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது என்று சொல்லப்படும் குறள் என்னும் நீதி நூலே மிகவும் மேலானது என்று சொல்லப்படுகிற தானாலும் அதையும் பார்ப்பனர்களோ, சைவர்களோ, வைணவர்களோ மற்றும் எந்த பிரிவினர்களோ அடியோடு காரியத்தில் ஒப்புக் கொள்ளுவதென்றால் முடியாத காரியமாகவே இருக்கும். என்றாலும் திருவள்ளுவரைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லிவிட்டால் பண்டிதர்களும் பெரும்பாலும் சைவர்களும் சண்டைக்கு மாத்திரம் வந்து விடுவார்கள். பார்ப்பனர்க ளென்றாலோ திருவள்ளுவரின் பெயரைச் சொன்னாலே சண்டைக்கு வந்துவிடுவார்கள்.

இவ்வளவும் இருந்தாலும், திருவள்ளுவர் யார்? என்ன ஜாதி? என்ன மதம்? அவரது கொள்கை என்ன? என்பதில் இன்னமும் எல்லோருக்கும் சந்தேகமாகவே இருக்கிறது. சைவர்கள் திருவள்ளுவரை தம்சமயத்தலைவர் என்று பாத்தியம் கொண்டாடிக் கொள்கிறார்கள். வைணவர்களில் சிலர் அவரை தம்சமயத் தலைவர்கள் என்கிறார்கள். சமணர்கள் அவரை தம் சமயத்தவர் என்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பார்களில் ஒருசாரராகிய பறையர் என்று சொல்லப்படுபவர்கள் திருவள்ளுவரை தம் இனத்தவர் என்று சுதந்திரம் பாராட்டுகின்றார்கள். அவரைப் பற்றிக் கிடைத்திருக்கும் புராணமோ அல்லது அவரது சரித்திரக் கதையோ, மிகவும் அசம்பாவிதமும் ஆபாசமானதுமாய்க் காணப்படுகின்றது. இவ்வளவு புறச்சான்றுகளையும் விட்டுவிட்டு அகச்சான்று என்பதாகிய திருவள்ளுவர் குறளைப் பார்த்தாலோ, அதுவும் மயக்கத்திற்கிடமானதாக இருக்கின்றதே ஒழிய ஒரு தெளிவுக்கு ஆதாரமானதாய் காணப்படவில்லை. அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேல் லோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரியமத சம்பிரதாயங்களையும் மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களையும் பார்க்கக் காணலாம்.

எனவே, இவற்றைக் கொண்டு திருவள்ளுவர் யாராயிருக்கலாம் என்று பார்ப்போமானால், அவர், தற்காலம் பார்ப்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்லிக் கொண்டு அவர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள் புராணங்கள் முதலாகியவற்றை எல்லாம், ஏற்றுக் கொண்டு, பார்ப்பனியம் என்னும் பார்ப்பனக் கொள்கைகளை ஒரு சிறிதும் தளர்த்த மனமில்லாதவர்களாய் இருந்து கொண்டு தங்களைப் பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்றும், தாங்கள் பெரிய கல்வி, கேள்வி ஆராய்ச்சி முதலியவைகளில் தேர்ச்சி பெற்ற வல்லவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு, தங்களை வெளியில் சமரச சன்மார்க்க சமயத்தவர்கள் என்றும் உள்ளுக்குள் சைவ சமயம்தான் தன்னுடைய மதம் என்றும், மற்றும் இதுபோல் உள்ளொன்றும் புறம் ஒன்றும் செய்கை ஒன்றுமாய் இருந்து கொண்டு தங்களை ஒரு பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இப்போதைய சீர்த்திருத்தக்காரரைப் போல்தான் காணப்படுகின்றார்.

இவை எப்படி இருந்தாலும் திருவள்ளுவரின் பெண்ணுரிமைத் தன்மையைப் பற்றிக் கவனித்தால் பெண்களுக்கு அவர் கூறிய குறளில் உள்ள நீதிகள் ஒருபுறமிருக்க, திருவள்ளுவர் மனைவியாகிய வாசுகி அம்மையாரின் சரித்திரத்தைக் கேட்போர் மனம் பதறாமல் இருக்கமுடியாது அதாவது வாசுகி அம்மையாரை திருவள்ளுவர், தம் மனைவியாக ஏற்றுக் கொள்ளுமுன் ஆற்றுமணலைக் கொடுத்து சாதம் சமைக்கச் சொன்னாராம். அதாவது வாசுகி கற்புள்ளவரா அல்லவா என்று பரிட்சிக்க, அவ்வம்மையார் அந்தப்படியே மணலைச் சாதமாகச் சமைத்துக் கொடுத்து திருவள்ளுவருக்குத் தமது கற்பைக் காட்டினாராம்.

அம்மையார் கிணற்றில் நீர் இறைக்கும்போது நாயனார் அம்மையாரைக் கூப்பிட, அம்மையார் கயிற்றை அப்படியே விட்டுவிட்டு வந்தபோது கயிறு கிணற்றில் விழாமல் அப்படியே தொங்கிக் கொண்டிருந்ததாம்.

திருவள்ளுவர், ஒருநாள் பகலில் நூல் நூற்கும்போது நூற்கதிர் கீழே விழ உடனே அம்மையாரைக் கூப்பிட்டு விளக்கேற்றிக் கொண்டுவா நூற்கதிரைத் தேடவேண்டும் என்று சொல்ல, அம்மையார், பகல் நேரத்தில் விளக்கெதற்கு என்று கேட்காமல் கேட்டால் பதிவிரதா தன்மைக்கும், கற்புக்கும் பங்கம் வந்துவிடும் எனக்கருதி உடனே விளக்குபற்ற வைத்துக் கொண்டு வந்து கொடுத்தார்களாம்.

ஒருநாள் நாயனார் பழைய சாதம் சாப்பிடும்போது சாதம் சுடுகின்றது என்று சொன்னவுடன் அம்மையார், பழைய சாதம் சுடுமா என்று கூடக் கேட்காமல், கேட்டால் பதிவிரதா தன்மை கெட்டுப் போகுமே என்று கருதி, உடனே விசிறி எடுத்துக் கொண்டு வந்துவீசி ஆற்றினாராம்.

திருவள்ளுவர், அம்மையாரைத் தினமும் ஒரு டம்ளரில் தண்ணீரும் ஒரு ஊசியும் தனியாக கொண்டு வந்து வைத்துவிட்டு சாதம் பரிமாறும்படி கட்டளையிட்டிருந்தாராம். அவ்வம்மையாரும், இது எதற்கு? என்று கேட்காமல் - கேட்டால் பதிவிரதா தன்மை கெட்டுப் போகுமே என்று கருதிக் கொண்டு தினமும் அந்தப்படியே செய்து வந்தாராம். ஆனால் அம்மையாரின் இறுதியான காலத்தில்
அம்மையார் உயிர் போகாமல் வாதாடிக் கொண்டிருக்க அது ஏன் என்று திருவள்ளுவர் அம்மையாரைக் கேட்கும்போது அம்மையார் பயந்துகொண்டு தினமும் பாத்திரத்தில் தண்ணீரும் வைக்கச் சொன்னீர்களே! அது எதற்காக என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றே ஆசை முடிவு பெறாமல் இருப்பதால் உயிர்போகாமல் வாதாடி மரணவதைபடுகிறேன் என்று சொன்னாராம். பிறகு திருவள்ளுவர் தயவு செய்து பெரிய மனது வைத்து அதன் காரணத்தை அதாவது - சாப்பிடும்போது அன்னம் கீழே விழுந்தால் அந்த ஊசியில் குத்தி எடுத்து அந்த டம்ளர் தண்ணீரில் கழுவுவதற்கு என்று சொன்னாராம். அதன் பிறகுதான் அம்மையாரின் உயிர் நீங்கிற்றாம்.

இது திருவள்ளுவர் புராணத்தில் உள்ள அவரது மனைவியின் சரித்திரம். எனவே இது இடைச்செருகலாகவோ கற்பனைக் கதையாகவோ இல்லாமல் உண்மைக் கதையாயிருந்தால் திருவள்ளுவரின் பெண்ணுரிமை என்ன என்பதையும் கற்பனையாக இருந்தால், கற்பனையல்லாத புராணம் எது? அதற்கு என்ன பரிட்சை? என்பதையும் அறிஞர்கள் வெளிப்படுத்துவார்களாக.

----------------

சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை - ”குடிஅரசு”, 20-01-192

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: