ராம இராஜ்யத்துக்குப் பட்டாபிஷேகம் 1950 ஜனவரி 26ஆம் தேதி என்று வதிஸ்டர் வம்சத்தினர் நாள் குறித்துவிட்டனர். ராமாயண வதிஸ்டர், நாடாள குறிப்பிட்ட நாள், இராமன் காடேக வேண்டிய நாள் ஆக, ஆகிய இப்போது இந்துஸ்தான் வதிஸ்டவம்சத்தோர் குறிப்பிடும் இந்த 26 எப்படியும் மாறப்போவதில்லை என்று உறுதி கூறுகிறார்கள்.

நம் காங்கிரஸ் தோழர்கள் ஏகாதிபத்தியம் என்று சொல்லுவதற்குப் பதிலாக கண்டுபிடித்த மற்றொரு பழமையான - அர்த்த புஷ்டியான சொல் இராமராஜ்யம் என்பதை அவர்களே நெடுங்காலமாக விளக்கி வந்திருக்கிறார்கள். "ஏகாதிபத்தியத்திற்குப் புதைகுழி தோண்டிவிட்டோம். கண்காணாசீமைக்குக் கப்பலேற்றிவிட்டோம்" என்று பேசிய அவர்களே, ஏகாதிபத்திய சிம்மாசனத்திற்கு அதைப்போன்ற மற்றொன்றே ஏற்றது என்று முடிவு கட்டிவிட்டார்கள். அந்த முடிவுப்படிதான் இந்துஸ்தான் ஏகாதிபத்தியம் உருவாகிவிட்டது என்றுகூறி அதற்குப் பட்டாபிஷேகம் அதாவது அந்த ஏகாதிபத்தியம் ஆட்சிக்கு வரும் நாள் ஜனவரி 26 என்று கூறுகிறார்கள்.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஏகாதிபத்தியம் என்கிற ஈயத்திற்கு ஜனநாயகம் என்கிற வெள்ளி முலாம் பூசப்பட்டிருக்கிறது. முலாம் பூசியதற்கப் பெரும் பொருள் செலவாகி (11/2 கோடி ரூபாய்) நீண்டகாலமும் (2 ஆண்டு) ஆகி ஏராளமானவர்கள் (385 பேர்) உழைத்த உழைப்பு என்பதாகவும் கணக்குப் போட்டுக் காட்டப்படுகிறது. திராவிடத்தைப் பொறுத்த வரையிலும், ஈயத்தின் சுயரூபம் வெகுவிரைவிலேயே கண்ணுக்குத் தெரிந்துவிடத்தான் போகிறது. ஏன்? இந்துஸ்தானம் அல்லது ஏக இந்தியா அல்லது பூரண இராமராஜ்யம் என்கிற நினைப்பில்- மிருகபலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் திராவிடத்தையும், திராவிடம் போன்றே வேறு நாடுகளையும் அதனதன் உண்மைக்கருத்துக்கு, ஏற்ற இடமில்லாதபடிக்குத் தான்தோன்றித்தனமாகப் பலவந்தமாக இந்த அமைப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த அமைப்புக்கு யார்யாரை நியமித்தால், "ஆமாம் சாமி" போடுவார்கள் என்கிற திட்டத்தின் மீதுதான் ஆரம்பத்திலேயே நபர்களும் நியமிக்கப்பட்டார்கள். இப்படி நியமிக்கப்பட்டவர்கள்கூடப் பணக்காரர்களுக்கும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் மட்டும்தான் பிரதிகள் என்று சொல்லக்கூடிய யோக்கிதையில், ஏகாதிபத்திய வெள்ளையர்களின் திட்டப்படிக்கு இடம் பெற்றவர்கள். இப்படி இடம் பெற்ற இவர்கள், குறிப்பாகச் சென்னையில், திராவிடத்திற்கு உரிய பிரதிநிதிகள் அல்லவே அல்ல.

இப்படி நியமிக்கப்பட்டவர்களைக்கொண்டு, இந்தியத் துணைக்கண்டத்தை ஒரே கண்டமாக ஆக்குவதற்குத்தான் 2,3 ஆண்டுகளும் 1½ கோடி ரூபாயும், செலவழிந்தது என்கின்றனர். "இது ஒரு அரும்பெரும் சாதனை. இவ்வளவு காலமும் இத்துணைப் பொருளும் செலவழிந்திருப்பது நியாயந்தான்" என்கிற உணர்ச்சியையூட்ட வேண்டுமென்கிற எண்ணத்தோடுதான் காலத்தைப் பெருக்கிச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்த அரசியல் நிர்ணயசபைக்கூட்டங்கள் வருஷக்கணக்கில் மூன்று என்று கூறப்பட்டாலும் மாதக்கணக்கில் 11 ஆகி, நாள் கணக்கில் 107 ஆகி மணிக்கணக்கில் 500,600 என்று சொல்லக் கூடிய கால அளவுதான் ஆகியிருக்கிறது. இவ்வளவு குறுகியகாலத்தில் "ஆமாம் சாமி" போடுபவர்களை வைத்துக்கொண்டு வகுத்திருக்கும் ஒரு திட்டத்துக்குத்தான், அவர்களே வெளியில் கூறுகிற கணக்கின்படி 1½  கோடி ரூபாய். வியர்த்தமாக்கப்பட்டிருக்கிறது. எப்படியோ திராவிடத்தின் பங்குக்கு ஆக, 25, 30 இலட்சரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு பெரும்பொருளைச் செலவுசெய்தும் இனித் திராவிடத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? வெள்ளை ஏகாதிபத்தியம் எத்தனையோ ஆயிரம் மடங்கு தேவலாம் என்று, சர்வ சாதாரணமாக எல்லோரும் பேசக்கூடிய ஒரு நிலைதான் விரைவில் உண்டாகப்போகிறது.

ஏனென்றால் "வெள்ளையர் நெடுந்தூரத்தில் இருந்துகொண்டு சுரண்டி, சுரண்டிக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காகவாவது இடையே சிலகாலம் கழிக்கவேண்டியதாய் இருந்தது. இந்த வடவர்களோ நம் பக்கத்தில் இருந்து கொண்டே இடைவிடாமல் சுரண்டுவதில் முனைந்திருக்கிறார்கள்" என்பதை வற்ற வற்ற, சுரண்டப்பட்ட பிறகாவது திராவிடன் உணரத்தானே வேண்டியதாய் வரும்.

வெள்ளையரின் ஏகாதிபத்தியத்தில், மாகாணங்கள் ஒரு அளவுக்குப் பெற்றிருந்த அதிகாரங்கள் எல்லாம், இப்போது இந்துஸ்தான் ஏகாதிபத்தியத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, ஒரு ஸ்தல ஸ்தாபன அளவில் மதிக்கத்தக்கதாய் ஆக்கப்பட்டுவிட்ட கொடுமைக்குத்தான் பூரண ஆதிபத்திய ஜனநாயக் குடிஅரசு என்று முழக்கப்படுகிறது.

இந்தத்திட்டம் (பட்டாபிஷேகம்) நடைபெறவேண்டியது தானா? திராவிடம் என்றைக்குமே மாறி மாறி அடிமையாகக்கிடந்து உழல வேண்டியதுதானா? என்றைக்குமே வடவர் தயவை எதிர்பார்த்துத்தான், கைத்தட்டி, வாய்பொத்தி நின்று திராவிடன் வாழ்ந்தாக வேண்டுமா? ஆம்! ஆம்!! என்கின்றனர் வடவர், அதுசரிதான் என்கின்றனர் நம் நாட்டுப் பார்ப்பனர்கள். ஆனால் திராவிடனின் மாற்றம் என்ன?

குடிஅரசு- தலையங்கம்- 22.10.1949

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: