இடம்: பரலோகம் கடவுள் தர்பார்.

பாத்திரங்கள்: கடவுள், சித்திரபுத்த்திரன், யமன், ஞானசாகரன், பக்தரத்னம்.

காலம்: ஊழிக் காலம்.

I

கடவுள்: அடே! சித்திரபுத்திரா! என்ன தாமதம். இன்றைய கணக்கென்ன?

சித்திராபுத்திரன்: சர்வலோகப் பிரபு சர்வஞானப் பிரபு! சர்வவல்லப் பிரபு! கருணாநிதி! நாயேன் தங்களாக்ஞையையே எதிர்பார்த்திருந்தேன். (யமனைப் பார்த்து சமிக்கை செய்கிறான்).

யமன்: (மானிடர் இருவரை அழைத்து வந்து தர்பார் முன்னிலையில் நிறுத்தி) “சுவாமி உத்திரவுப்படி நடந்து கொண்டேன்”. என்று ஒதுங்கி குனிந்து வாய் பொத்திக் கைகட்டி நிற்கிறான்.

சித்திராபுத்திரன்: (கடவுளை நோக்கி) இன்றைய கணக்குப்படி இவ்விரு மானிடர்களும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்.

கடவுள்: சரி, விசாரி.

சித்திராபுத்திரன்: (ஞானசாகரனை நோக்கி) இப்படி வா, உன் நாமதேயமென்ன?

ஞானசாகரன்: என் நாமமும், தேயமும் தங்கள் கணக்கில் இருக்குமே.

சித்திராபுத்திரன்: சீ! கேட்ட கேள்விக்கு பதிலிறு. இது பூலோக கோர்ட்டல்ல என்பதை ஞாபகத்தில்வை

ஞானசாகரன்: இது பூலோக கோர்ட்டாயிருந்தால் என் நாம நேயத்தை சொல்லித்தான் தீரவேண்டும். ஆனால் தங்கள் சமுகத்திற்கு முற்காலம், தற்காலம், பிற்காலம் எல்லாம் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.

சித்திராபுத்திரன்: சீ! அதிகப்பிரசங்கி! வாயை மூடு. கேட்ட கேள்விக்குப்பதில் சொல். இல்லாவிட்டால் பார் அங்கே (யமனைச் சுட்டிக் காண்பிக்கிறார். யமன் உதட்டை மடக்கி நாக்கைக் கடித்துக் கொண்டு கதாயுதத்தை எடுத்து சுழற்றிக் காட்டி ஞானசாகரனைப் பயமுறுத்துகிறான்)

சித்திராபுத்திரன்: (மறுபடியும்) உன் நாமதேயமென்ன?

ஞானசாகரன்: என் பெயர் ஞானசாகரன்

சித்திராபுத்திரன்: எந்த தேசம்?

ஞானசாகரன்: ஆப்கானிஸ்தானத்திற்கும், பெல்ஜிஸ்தானத்திற்கும் மேற்கேயுள்ள இந்துஸ்தானத்திற்கு தெற்கேயிருக்கும் ஆராய்ச்சிஸ்தானம் என் தேயம்.

சித்திராபுத்திரன்: உன் ஊர் எது?

ஞானசாகரன்: ஞானபுரி.

சித்திராபுத்திரன்: உன் மதம் என்ன?

ஞானசாகரன்: சுயமரியாதை

சித்திராபுத்திரன்: அதன் கொள்கைகள் என்ன?

ஞானசாகரன்: எவனும் தன்னை மற்றவனைவிட பிறவியில் தாழ்ந்தவனென்றோ, உயர்ந்தவனென்றோ மதிக்கக் கூடாது. தன்னைத் தாழ்ந்தவனென்று நினைத்தால் தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்வதாகும். மற்றவனைவிட தன்னை உயர்ந்தவனென்று நினைத்தல் பிறரை இழிவுபடுத்துவதாகும். அதாவது சமத்துவம், சகல சொத்தும், எல்லோருக்கும், சமசுதந்திரம், உண்மை விளக்கல், அனைத்துயிர் ஒன்றென்றெண்ணல், அரும் பசியெவருக்கும் ஆற்றல், மனத்துள்ளே பேதாபேதம், வஞ்சம், பொய், சூது, சினம் ஆகியவற்றைத் தவிர்த்தல்.

சித்திராபுத்திரன்: உன் மதத்தின் கடைசி லட்சியம் யாது?

ஞானசாகரன்: மக்களில் எந்த ஜீவனுக்கும் யாதொரு கெடுதியும் செய்யக்கூடாது. எல்லா ஜீவன்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.

கடவுள்: அப்படியா சமாச்சாரம் (ஞானசாகரனை மேலும் கீழும் பார்த்து) இருக்கட்டும் உன் காலட்சேபம் எப்படி?

ஞானசாகரன்: உடலைக் கொண்டு மனதார உழைத்து நல்வழியில் சம்பாதிப்பது. அதை நானும் என் குடும்பத்தாரும் சந்தோஷமாய் உண்டு ஆனந்தமாயிருப்பது.

கடவுள்: உன் வாழ்க்கைக் கடனையெல்லாம் கிரமப்படி நடத்தி வந்திருக்கிறாயா?

ஞானசாகரன்: என் வாழ்க்கையில் நான் கடன்படவில்லை.

கடவுள்: எப்போதாவது திருடினதுண்டா? பொய் சொன்னதுண்டா? பொய் கையெழுத்திட்டதுண்டா?

ஞானசாகரன்: இல்லை! இல்லை! இல்லவே இல்லை!!!

கடவுள்: சிராத்தம் முதலிய சடங்குகளையும், வருணாசிரம தருமங்களையும் அனுசரித்து வந்தாயா?

ஞானசாகரன்: அதைப்பற்றி நான் ஒரு சிறிதும் கவலை கொண்டதே இல்லை.

கடவுள்: அப்படியா! நீ அவைகளைக் கிரமமாய் செய்யவில்லையா?

ஞானசாகரன்: ஒரு நாளாவது அதைப்பற்றி நினைத்ததேயில்லை.

கடவுள்: எம்மிடத்திலாவது சரியாய் பக்தி செலுத்தி அபிஷேகம், பூஜை, உற்சவம், சரியாய்ச் செய்து வந்தாயா?

ஞானசாகரன்: அதுவும் இல்லை. உங்களைப்பற்றி எண்ணவே எனக்கு நேரமில்லை. கஷ்டப்படவும், சம்பாதிக்கவும், அவைகளை ஏழைகளுக்கு உதவவும், மீதி நேரங்களில் மற்ற ஜீவன்களுக்கு உழைக்கவுமே சரியாய் இருந்தது என் வாழ்நாள்.

கடவுள்: அப்படிப்பட்டவனா நீ! சடங்கு செய்யவில்லை! வருணாசிரம தர்மப்படி நடக்கவில்லை! எமக்கும் பக்தி பூசை முதலியவை செய்யவில்லை! சண்டாளனாகி விட்டாய்! எமதர்மா! இவனை மீளாநரகில் தள்ளு.

II

கடவுள்: (மற்றொருவனைப் பார்த்து) ஹே! நரனே! உன் பெயரென்ன?

நரன்: பக்தரத்னம்.

கடவுள்: உன் மதமென்ன?

பக்த: கடவுள் சர்வ வல்லமையுள்ளவர், கடவுளை நம்பினார் கைவிடப்படார் என்பதோடு சதா சர்வகாலம் கடவுளை நினைத்துக்கொண்டு அவருக்கு பூஜை உற்சவம் செய்வது.

கடவுள்: சந்தோஷம்! உன் தொழில் என்ன?

பக்த: என்ன வேலையாவது செய்து பணம் சம்பாதிப்பது.

கடவுள்: அப்படி என்னென்ன வேலை செய்தாய்?

பக்த: நன்றாய்த் திருடினேன், போலிசு உத்தியோகம் செய்து லஞ்சம் வாங்கினேன், வேலை போய்விட்டது என்றாலும் பிறகு வக்கில் வேலை செய்தேன். வியாபாரம் செய்து வியாபாரத்தில் மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்தேன். லேவாதேவி செய்து, கொள்ளை வட்டி வாங்கிப் போய்க் கணக்கெழுதி ஊரார் பொருள்களை நன்றாய் அபகரித்தேன்.

கடவுள்: அப்படி எவ்வளவு சம்பாதித்தாய்?

பக்த: லட்சக்கணக்கில் இருக்கும்.

கடவுள்: பணத்துடன் இன்னும் ஏதாவது சம்பாதித்ததுண்டா?

பக்த: பக்கத்து வீட்டான் பெண்டாட்டியையும் நான் அடித்துக் கொண்டு வந்து என் சுவாதீனத்தில் வைத்துக் கொண்டிருந்தேன். அதனாலும் எனக்கு வரும் படியுண்டு.

கடவுள்: உனக்கு சொந்த மனைவி மக்கள் இல்லையா?

பக்தன்: ஆம் உண்டு.

கடவுள்: நீ அவர்களைக் கைவிட்டு விட்டால் அவர்களுக்கு யார் துணை?

பக்தன்: அவர்களை நான் கை விடவில்லை. அவர்களைக் கொண்டுதான் நான் உத்தியோகம் பெற்றது. அவர்களை உபயோகித்துத் தான் பணமும் சம்பாதித்தேன்.

கடவுள்: அந்தப் பணத்தையெல்லாம் என்ன செய்தாய்?

பக்தன்: காசிக்குப் போனேன், கங்கையில் மூழ்கினேன், ஆயிரம் பிராமணருக்கு அன்னதானம் செய்தேன், லிங்கப் பிரதிஷ்டை செய்தேன். கடவுளுக்கு லட்ச தீபம் ஏற்றி வைத்தேன், பித்ருக்கள் சடங்கு முதலியவைகளை கிரமமாய்ச் செய்து வந்தேன். என் வருணப்படி நான் உயர்ந்த ஜாதியானாகவே இருந்து வந்தேன், யாரையும் தொடமாட்டேன், கீழ் ஜாதியான் சாவதாயிருந்தாலும் ஒரு மடக்குத் தண்ணீர் கொடுத்துப் பாவியாக மாட்டேன். சதா தங்கள் ஞாபகமே.

கடவுள்: ஓ! எம்மைத் துதித்தாய்! எம்மை நம்பினாய்! எனக்கு பக்தி செலுத்தினாய்! மிகச் சந்தோஷம்! முதலையுண்டபாலனை அழைத்தது, குதிரையைக் கூடிப் பாயாசம் பருகிய கவுசலையின் கர்ப்பத்துக்குள் யாம் புகுந்து குழந்தையாய் (ராமனாய்) பிறந்தது, இறந்துபோன ஜலந்தராசூரன் சவத்துக்குள் புகுந்து அவன் பத்தினியை ஏமாற்றிப் புணர்ந்தது முதலிய எமது திருவிளையாடல்கள் உனக்குத் தெரியாதா?

பக்தன்: ஆம் பிரபு நன்றாய்த் தெரியும். தங்களிடம் என் நம்பிக்கையையும், இன்னும் அதிகமான பக்தியையும் காட்ட இவைகளைவிட இன்னும் பெரிய புராணங்கள் இல்லையே என்று வருத்தமும் பட்டேன்.

கடவுள்: மெச்சினோம்! மெச்சினோம்! ஹே! சித்திரபுத்திரா! இந்த பக்தனை நமது சொர்க்கத்திலேயே இருத்தி அப்ஸரஸ்திரீகளைக் கொண்டு வந்துவிடு, சுகமாய் இந்த மோட்சத்தை அனுபவித்துக் கொண்டிருக்கட்டும்; அவன் ஆசை தீர்ந்த பிறகு மறுபடியும் நரனாகப் பிறந்து மேற்கண்ட நற்கருமங்களைச் செய்து இதுபோல் நம்மை வந்தடையட்டும்.

குடிஅரசு - கட்டுரை - 01.10.1949

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: