நம் நாட்டில் சுதந்தரமும் சுயமரியாதையும் சொந்த அரசியலும் ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்களால் அழிந்து போனதல்லாமல் மனித சமூகம் வஞ்சக மதத்துக்கும் ஒழுக்கமும் நீதியும் அற்ற கடவுளுக்கும் முட்டாள்தனமும் பித்தலாட்டமும் நிறைந்த மூடநம்பிக்கைக்கும் அடிமைப்பட்டு பெருவாரியான மக்கள் ஒரு வெகு சிறுபான்மையான வன்னெஞ்ச வஞ்சகர்களுக்கு ஆளாகி இன்னல் படுவதும் மிருகங்களிலும் மலத்திலும் கேவலமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திலிருப்பதும் தமிழ் நாட்டுச் சரித்திரம் அறிந்த எவரும் மறுக்க மாட்டார்கள். இம் மாதிரியான நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டதற்கு காரணம் மக்கள் ஒன்று சேர்வதற்கு இல்லாமலும் சுதந்தரத்தோடு விஷயங்களை ஆராய்ச்சி செய்து முடிவு பெறுவதற்கில்லாமலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பதற்கு இல்லாமலும் மக்களை அடிமை படுத்தி வைக்க வென்றே ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட இந்து மதம் என்னும் ஆரிய சூழ்ச்சி மதமே ஆகும். அம்மதமானது "சிறுபான்மையோர் பெரும்பான்மையோரை அடக்கி ஆட்கொண்டு ஆட்சி புரிய வேண்டுமானால் அம் மக்கள் சமூகத்தை பிரித்து உயர்வு தாழ்வு கற்பித்து ஒருவரை ஒருவர் வெறுத்து துவேஷிக்கும் படியும், உதை போட்டுக்கொள்ளும்படியும் செய்துவிட வேண்டும்." அவர்கள் என்றும் ஒன்றுகூடாமலும், அறிவு பெறாமலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்ற பஞ்ச தந்திர வாக்கியத்துக்கு இணங்க ஆரிய மதமானது நம் மக்களை பல்வேறு ஜாதி வகுப்பாய் பிரித்து உயர்வு தாழ்வும், மேன்மையும் இழிவும் கற்பித்து ஒருவரை ஒருவர் தொடவும், காணவும் கூட சகிக்க முடியாத மாதிரி ஆச்சார அனுஷ்டானம் கற்பித்து நம்மைச் சின்னாபின்னப்படுத்தி வைத்திருப்பதால் இன்று ஆரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் 100க்கு 3 பேராய் இருந்தும் அவர்களே தங்களுக்கு வேண்டியவர்கள் இடம் நாட்டை பிடுங்கிக் கொடுத்து அவர்களுக்கு தாங்களே ஒற்றர்களாகவும் தரகர்களாகவும் இருந்து நம்மீது ஆதிக்கம் செலுத்தி அவர்கள் சரீரப் பிரயாசை இன்றி நல்வாழ்வு நடத்த முடிகின்றது.

இது விஷயமாய் அனேக சரித்திராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மேதாவிகள், நிபுணர்கள் முதலியவர்கள் தக்க ஆதாரங்களைக் காட்டி விளக்கி இருக்கிறார்கள்.

இவற்றை செவ்வனே உணர்ந்த நம் நாட்டு மக்கள் இக்கொடுமையில் இருந்து விடுதலை பெற சிறிதும் கவலையற்றவர்களாகி எப்படியாவது உயிர் வாழ்தலே போதும் என்கிற அடிமை வாழ்க்கையிலேயே மூழ்கி அழுந்தி விட்டார்கள்.

ஆனால் காலத்தின் கோலமானது - இந்த இருபதாம் நூற்றாண்டின் உணர்ச்சியானது மக்களுக்கு மாத்திரமல்லாமல் காட்டு மிராண்டிகளும் மிருகாதி ஜீவன்களும் கூட விழித்தெழுந்து முற்போக்கடைய முனைந்து உழைக்கும் இக் காலத்தில் நம் தமிழ்மக்கள் மாத்திரம் "ஆரியர் பாதமே மோக்ஷ சாம்ராஜ்யம்" என்றும் அவர்களுக்கு அடிமையாய் இருப்பதே "இந்திர போகம்" என்றும் கருதி வாழ்வது மிக மிக மானக்கேடான இழிவான வாழ்க்கை என்றே சொல்லித் தீர வேண்டியிருக்கிறது.

அக்காலத்தில் தான் தமிழ் மக்கள் கடவுள் பேராலும் மோட்சத்தின் பேராலும் ஆரியத்திற்கு அடிமையானார்கள் என்றால் சுயமரியாதைக்காரர்கள் செயலால் கடவுளும் மோக்ஷமும் ஒரு அளவுக்கு வெட்ட வெளிச்சமாகியும் மேலும் பழையபடியே அரசியல், கல்வி இயல் முதலியவற்றால் பழைய உணர்ச்சியைக் கிளப்பி பழையபடியே மனிதன் மோக்ஷத்திற்குப் போவதற்குப் பார்ப்பனரிடமே அனுமதிச்சீட்டு பெறும்படி செய்து வருகிறார்கள்.

இதற்காக புராண உணர்ச்சியை மக்களுக்குள் ஏற்றுவதல்லாமல் மக்களது செல்வத்தைக் கொள்ளை கொள்வதல்லாமல் இவற்றிற்காக இதுவரை இருந்துவந்த முட்டாள்தனமானதும் மூடநம்பிக்கையானதுமான காரியங்கள் ஒருபுறமிருக்க இப்போது புதிதாக பல சூழ்ச்சிகள் செய்து வருகிறார்கள்.

மகோதய புண்யகாலம்

இச்சூழ்ச்சிகளில் தலைசிறந்து விளங்குவதும் புதிதாகக் கண்டுபிடித்திருப்பதும் "மகோதய புண்ணிய காலம்" என்பது போன்ற பித்தலாட்டங்களேயாகும்.

சமீப காலமாக பத்திரிகைகளிலும், ரயில்வே கைட்களிலும், ஸ்டேஷன் சுவர்களிலும் பிரமாதமாய் விளம்பரப்படுத்தப்படுவது மேற்குறிப்பிட்ட "மகோதய புண்ணிய காலத்துக்கு வேதாரண்யத்துக்கு போய் மக்கள் ஸ்நானம் செய்து, தங்களுடைய சகல பாவங்களையும் தொலைத்து ஒரு கோடி புண்ணியத்தைப் பெறுங்கள்" என்கிற விளம்பரமும் பத்திரிகை வியாசங்களும் பார்ப்பன பிரசாரமுமாகும்.

இந்தப் பித்தலாட்டப் பிரசாரம் நமது புரோகிதர்கள் ரெயில்வேக்காரர் களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு மக்களை ஏய்த்து காசுபறிக்க கற்பனை செய்து கொடுக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தப் பிரசாரம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இதற்காக இந்த "மகோதய புண்ணிய காலத்துக்கு" ஆக கு.ஐ.கீ. ரயில்வேகாரர் இந்த பார்ப்பனீயத்தை நம்பி வேதாரண்ய சமுத்திரக்கரையில் பதினாயிரக்கணக்கான ரூபாய் செலவுசெய்து பந்தல் போடவும், மக்களை அங்கு கொண்டுவந்து சேர்க்கவுமான காரியம் ஒருபுறம் செய்கிறார்கள். நமது பார்ப்பனர்கள் மற்றொருபுறம் பத்திரிகைகளில் "புண்ணிய காலத்தின் பெருமை"யைப் பற்றிய புராணம் எழுதி பிரசாரம் செய்கிறார்கள். இந்த பிரசாரமானது என்ன குறைந்தாலும் சுமார் ஒரு 50 ஆயிரம் பேர்களையாவது வேதாரணியம் கோடிக்கரை துறைக்கு இழுத்து வந்துவிடும். இதனால் ரயில்வேகாரருக்கு செலவு போக 50, 60 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் லாபம் கிடைக்கும் என்பதிலும் புரோகிதப் பார்ப்பனர்களுக்கு குறைந்தது 30, 40 ஆயிரத்துக்கு குறைவில்லாமல் ஆதாயம் கிடைக்கும் என்பதிலும், மொத்தத்தில் பொது மக்களுக்கு மற்றும் பல செலவுகள் சேர்ந்து ஒரு இரண்டு மூன்று லக்ஷ ரூபாயாவது பாழாகப் போகும் என்பதிலும் சிறிதும் சந்தேகமில்லை. இந்தத் தொகைகள் மிக மிக குறைவான உத்தேசத்திட்டம் என்றே சொல்லவேண்டும்.

வருஷம் தோறும் தொல்லை

வருஷா வருஷம் தவறாமல் நம் நாட்டில் கடிகாரம் சுற்றுவது போல் நடந்து கொண்டு வரும் உற்சவம் பண்டிகை புதிய தேர் திருவிழா முதலியவைகளால் மக்கள் அடையும் கஷ்டமும் நஷ்டமும் சொல்லி முடியாது. எழுதி ஆகாது. சென்னை மாகாணத்தில் எண்டோமெண்ட் போர்ட் கணக்குப்படி கடவுள்களுக்கு மடங்களுக்கு வரும்படி (2லீ) இரண்டரை கோடி ரூபாய் ஆகும். இது தவிர மக்கள் தங்கள் சொந்தத்தில் இதற்கு ஆக செலவழிக்கும் போக்குவரவு செலவு தொகை 5 அல்லது 6 கோடி ரூபாய் என்றால் இது அரை குறை கணக்கு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வருமானம் இரண்டரை கோடி ரூபாயிலும் சொந்தத்தில் செலவழிக்கப்படும் 5-6 கோடி ரூபாயிலும் லி பாகம் ரயிலுக்கும் வண்டிக்கும் லீ பாகம் பார்ப்பனர்களுக்கும் மற்றபடி லி பாகம் வியாபாரிகள், தாசிவேசிகள், தரகர்கள், சோம்பேறிகள், அண்ணாத்தைமார்கள் ஆகியவர்களுக்குமே போகக் கூடும். இவற்றால் மக்கள், அல்லது நாடு, அல்லது சமுதாய ஒழுக்கம் முதலியவை அடைந்த பயன் என்ன? என்று யோசிக்க வேண்டியது அறிவு படைத்த மனிதனின் கடமையாகும். இது இப்படி இருக்க இந்த மகோதய புண்ணியகாலப் பித்தலாட்டப் பிரசாரம் இவற்றிற்கு மேலாக என்ன பயனைக் கொடுக்கக் கூடும். இது போன்ற பல புண்ணிய கால புரட்டுகளுக்கு நேரில் சென்று அங்கு நடக்கும் ஆபாசங்களையும் அயோக்கியத்தனங்களையும் கண்டறிந்த தோழர்கள் பலர் உண்டு. ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு எண்ணத்தின்மீது பெண்டு பிள்ளைகளுடன் ஸ்நானத்துக்குப் போவதும், அங்கு சென்று கூட்டங்களின் பலவித ஒழுக்க ஈனமான காரியங்களுக்கு ஆளாவதும் நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நமது பெண்கள் சமுத்திரக் கரையில் ஸ்நானம் செய்வதும் மேலே வந்து துணியைப் பிழிந்து கட்டுவதும் அது காற்றினால் தலைக்கு மேலே தூக்கப்பட்டு விடுவதும் மானமிழந்து உட்கார்ந்து கையை போர்த்திக் கொள்ளுவதும் இதையே மகோதய புண்ணிய கால தரிசனம் என்று பல ஆண்கள், வாலிபர்கள் வேடிக்கை பார்ப்பதும் சாதாரண - வெகு சாதாரண காட்சியாய் இருந்து வருகிறது. மற்றும் திருடர்கள் முடிச்சவிழ்க்கிகள் வந்து பணம், நகை, திருடுவதும் வாலிபர்கள் பெண்களைக் கூட்டத்தில் கசக்கி பிசைவதும் ஒருவரை ஒருவர் ஆண் பெண்கள் பார்த்து சிரித்து கண் அடித்துக் கொள்வதுமான இம்மாதிரி காரியங்கள் மலிவாக நடைபெறுவனவாக இருக்கின்றன. எனவே இவ்வித சம்பவங் கொண்ட காரியங்களைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் புரோகிதர் தங்களுக்குப் பணமும் ரயில்காரருக்கு டிக்கட் விற்பனையும் கிடைத்தால் போதுமென்று இவ்விருவரும் ஒப்பந்தம் பேசிக் கொண்டு பாமர மக்களை பட்டி மாடுகள் போல் கொண்டு போய் அடைக்க முயல்வது யோக்கியமா? என்று யோசிக்க விரும்புகிறோம்.

"மித்திரன்" பிரசாரம்

இந்த மகோதய புண்ணிய காலத்தைப்பற்றி "சுதேசமித்திரன்" 15.1.38ந் தேதி பத்திரிகையில் எழுதியிருப்பதின் சில வாக்கியங்களை குறிப்பிடுகிறோம்.

"கோடிக்கரையில் ஸ்நானம் செய்பவர் தாம் அறிந்தும் அறியாமலும் செய்துள்ள சகல விதமான பாபங்களினின்றும் விடுபட்டு, இம்மை மறுமைப் பயன்களை அடைகிறார்கள் என்றும் கோடி ஜன்மங்களில் செய்த தவத்தின் பயனாகவே ஒருவருக்கு மஹோதய ஸ்நான பலன் ஏற்படுகிறது என்றும் ஒரு கோடி சூரியகிரஹண புண்ய காலங்களில், கங்கா நதியில் ஸ்நானம் செய்த பலன் மஹோதய புண்ய காலத்தில் ஒரு தடவை சேது ஸ்நானம் செய்வதினால் கிட்டுமென்றும் கோடியக்ஞ பலனை அளிக்கக் கூடியதென்றும், இப்புண்ய காலத்தின் பெருமையை முனிவர்கள் பலர் வெகுவாகப் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள்" என்றும் எழுதுகிறது.

சேது கட்டங்கள்

மற்றும் அப்பத்திரிகை "சேது கட்டங்கள் மூன்று. அவை கோடிக்கரையாகிய ஆதி சேதுவும், தனுஷ்கோடியாகிய ராம சேதுவும், மஹாபலிபுரமாகிய உத்தரசேதுவுமேயாகும். இம்மூன்று கட்டங்களிலும் மஹோதய புண்ய காலத்துக்கு மிகவும் சிரேஷ்டமாய்க் கருதப்படுவது கோடிக்கரை (கணிடிணt இச்டூடிட்ஞுணூஞு)யேயாகும்" என்றும்

எழுதி விட்டு மக்களுக்கு இந்தப் புண்ணியம் சுலபத்தில் கிடைக்க ரயில்வே கம்பெனியார், ஏராளமான சவுக்கியம் செய்திருப்பதாய் ரயில்வேகாரரையும் புகழ்ந்து கூறி மக்களை அவசியம் கோடிக்கரைக்கு வரும்படி அழைக்கிறது. இது யோக்கியமான பிரசாரமாகுமா என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.

எந்தப் பாவம் செய்தாலும் தெரிந்து மனதார வேண்டுமென்றே செய்தாலும் இந்த உப்புத்தண்ணீரில் குளித்துவிட்டால் மன்னிக்கப்பட்டு விடுமென்றால் மனிதன் பாவம் செய்யத்தூண்டுவதற்காகவே சேதுக்கள் என்பவை ஏற்பட்டன என்பது புலனாகவில்லையா? என்று கேட்கிறோம்.

"எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் 4 அணா கொடுத்து காங்கரஸ் மெம்பராகிவிட்டால் மகா பரிசுத்த யோக்கியனாவதுடன் சுயராஜ்யமே பெற்று விடுகிறான்" என்று சொன்ன பிரதம மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியாரின் பித்தலாட்டப் பேச்சுக்கும், இந்த "சுதேசமித்திரன்" பிரசாரத்துக்கும் ஏதாவது வித்தியாசமிருக்கிறதா? என்று கேட்கின்றோம்.

ஆகவே நம் பார்ப்பனர்கள் அரசியலையும், சமுதாய இயலையும், மத இயலையும் இம்மாதிரி தங்கள் சுயநலத்துக்கும் அந்நியனுக்கு நாட்டை, செல்வத்தை, மானத்தைக் காட்டிக் கொடுத்து சோம்பேறி வாழ்க்கை வாழ்வதற்கும் உபயோகப்படுத்திக்கொண்டு இருப்பதை வெளியாக்கினால் தேசத்துரோகி நாஸ்திகன் என்று சொல்லி அடக்கப் பார்த்தால் இதற்காக யார்தான் பயப்பட முடியும்? ஆகவே தமிழ் மக்களுக்குச் சிறிதாவது மானமோ அறிவோ இருக்குமானால் இப்படிப்பட்ட வஞ்சகங்களுக்கு இடம் கொடுக்க முடியுமா? என்று கேட்டு இதை முடிக்கின்றோம்.

தோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 23.01.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: