மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை

ஆ-ன்: மதங்கள் கடவுள்களால் உண்டாக்கப்பட்டவை.

ப-தி: அல்ல அவை மனிதர்களால் உண்டாக்கியவை.

ஆ-ன்: ஏன் அப்படிச் சொல்லுகிறாய்.

ப-தி: மதங்கள் எத்தனை உண்டு?

ஆ-ன்: பல மதங்கள் உண்டு.

ப-தி: உதாரணமாக சிலது சொல்லும்.

ஆ-ன்: எடுத்துக்காட்டாக இந்து மதம், புத்த மதம், கிறிஸ்து மதம், முகமது மதம், சீக்மதம், பார்சி மதம், ஜொராஷ்ட்டிர மதம் முதலியவைகளும் இவற்றில் பல உட்பிரிவுகளும் உண்டு.

ப-தி: கடவுள்கள் எத்தனை உண்டு.

ஆ-ன்: ஒரே கடவுள்தான் உண்டு.

ப-தி: இவ்வளவு மதங்களும் யாருக்காக உண்டாக்கப்பட்டவை.

ஆஸ்திகன்: மனித வர்க்கத்துக்காகத்தான்.

ப-தி: மதத்தால் ஏற்படும் பயன் என்ன!

ஆ-ன்: மனிதன், கடவுளை அறியவும், கடவுளுக்கும், தனக்கும் சம்மந்தம் ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும் கடவுள் கருணைக்கு பாத்திரனாகவும் பயன்படுவதாகும்.

ப-தி: அப்படியானால் ஒரே கடவுள் மனித வர்க்கத்துக்கு இத்தனை மதங்களை ஏற்படுத்துவானேன்.

ஆ-ன்: அது மிகவும் சிரமமான கேள்வியாக இருக்கிறது. பெரியார்களைக் கண்டு பேசி பிறகு பதில் சொல்லுகிறேன்.

மதவிபரம்

ப-தி: அதுதான் போகட்டும் இந்து மதம் என்பது என்ன? அது கடவுளால் எப்படி ஏற்படுத்தப்பட்டது.

ஆ-ன்: ஹிந்து மதம் என்றால் வேதமதம் என்று பெயர்.

ப-தி: வேதம் என்றால் என்ன?

ஆ-ன்: கிருக்கு, எஜசு, சாமம், அதர்வணம் என 4 வேதம் உண்டு. அவ்வேத முறைதான் ஹிந்துமதம் என்பது.

ப-தி: இவ்வேதங்கள் யாரால் ஏற்படுத்தப்பட்டவை.

ஆ-ன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை.

ப-தி: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்று யார் சொன்னார்கள்?

ஆ-ன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்று வேதம் சொல்லுகிறது. வேதம் கடவுள் வாக்கு என்று வேதம் சொல்லுகிறது.

ப-தி: இதற்கு ஏதாவது சாட்சியோ ஆதாரமோ உண்டா?

ஆ-ன்: வேதத்துக்கும், கடவுள் வாக்குக்கும் ஆதாரமோ சாட்சியோ கேட்பது என்றால் அது பாவமான காரியமே யாகும்.

ப-தி: அது பாவமாக இருக்கலாம். ஆனால் ஆதாரம், ரூஜú இல்லாமல் ஒன்றை ஒருவன் நம்புவது என்றால் அது குற்றமாகாதா?

ஆ-ன்: இதுவும் கஷ்டமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. பெரியவர்களைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

ப-தி: சரி புத்தமதம் என்றால் என்ன?

ஆ-ன்: புத்த மதம் என்பது புத்தர் என்கிறவருடைய கொள்கை.

ப-தி: அது யாரால் ஏற்பட்டது?

ஆ-ன்: புத்தர் என்கிறவர் காலத்தில் ஏற்பட்டது.

ப-தி: அதற்கு என்ன ஆதாரம்?

ஆ-ன்: புத்தர் என்கிறவர் சொன்னதாக சொல்லப்படும் வாக்குகள்தான்.

ப-தி: புத்தர்தான் சொன்னார் என்பதற்கு ஆதாரம் என்ன?

ஆ-ன்: புத்தர் சங்கதி சரித்திரத்தில் பட்டதாய் இருக்கிறது. அன்றியும் அதில் இன்றைய நிலையில் மற்ற மதங்களைப் போல் கடவுள், கடவுள் வாக்கு, பல அற்புதங்கள் முதலியவை இல்லை என்பதோடு ஆலோசனைக்கும், அறிவுக்கும் பொருத்தமானதை எடுத்துக் கொண்டு மற்றவைகளைத் தள்ளி விடுவதில் பாவமோ, குற்றமோ, கடவுள் தண்டனையோ இல்லை. ஆகையால் அதற்கு ஆதாரம் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

ப-தி: சரி, ரொம்ப நல்ல மாதிரி சமாதானம் சொன்னீர்கள். அப்படியானால் அம்மதத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை.

ப-தி: கிறிஸ்து மதம் என்பது என்ன?

ஆ-ன்: கிறிஸ்த்தவ மதம் என்பது கிறிஸ்துவால் சொல்லப்பட்ட கொள்கை.

ப-தி: அது எது?

ஆ-ன்: பைபிள்.

ப-தி: கிறிஸ்து என்பவர் யார்?

ஆ-ன்: கிறிஸ்து கடவுள் குமாரர்.

ப-தி: அப்படி என்று யார் சொன்னார்.

ஆ-ன்: கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.

ப-தி: ஒருவர் தன்னை இன்னான் என்று ரூபிக்க அவரது வாக்குமூலமே போதுமா?

ஆ-ன்: ஏன் போதாது.

ப-தி: அப்படியானால் இப்போது ஒருவன் வந்து உம்மிடம் தான் தான் கடவுள் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளுவீரா?

ஆ-ன்: இதுவும் கஷ்டமானப் பிரச்சினைதான். பெரியவர்களைக் கேழ்க்க வேண்டும்.

முகம்மதிய மதம்

ப-தி: முகமதிய மதம் என்றால் என்ன?

ஆ-ன்: முகம்மது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகள்.

ப-தி: அதற்கு என்ன ஆதாரம்?

ஆ-ன்: குரான் என்னும் வாக்கியம்.

ப-தி: அது யாரால் சொல்லப்பட்டது?

ஆ-ன்: கடவுளால் மகமது நபி அவர்கள் மூலம் வெளியாக்கப்பட்டது.

ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?

ஆ-ன்: நபி அவர்கள் சொன்னார்.

ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?

ஆ-ன்: குரான் வாக்கியங்களில் இருக்கிறதுடன், வேறு பல சாட்சியங்களுமிருக்கின்றன.

ப-தி: வேறு பல சாட்சியங்கள் என்பது எவை.

ஆ-ன்: அந்தக் காலத்தில் நபி அவர்களுடன் இருந்த பல பெரியவர்கள் வாக்கு இருக்கிறது.

ப-தி: அவை உண்மை என்பதற்கு ஆதாரம் என்ன?

ஆ-ன்: அந்தப்படி இருக்கும் ஆதாரங்களை நம்ப வேண்டியது தான்.

ப-தி: மற்ற மதங்களும் இதுபோல் தானே?

ஆ-கன்: ஆம்.

ப-தி: அனேகமான கடவுள் வாக்கு, கடவுளால் அனுப்பப்பட்டவர்கள், கடவுள் அவதாரங்கள் என்பவர்கள், அவர்களது வாக்குகள், சம்மந்தப்பட்ட மதங்களின் தத்துவம், பலவித கடவுள் தன்மை பெற்றவர்கள் ஆகிய எல்லோரையும், ஒரே கடவுள் சொன்னார், சிருஷ்டித்தார் என்பதும் நியாயமாகுமா? ஆதலால் இம்மாதிரி மதம் என்பது வியாபாரம் மத கர்த்தர், வேதம், புராணம் என்பவைகள் வியாபாரச் சரக்குகள் என்பது பகுத்தறிவுக்காரர்களுக்கும் படும் விஷயம். இது ஒரு சமயம் தப்பாக இருந்தாலும் இருக்கலாம்.

ஆ-ன்: ஆம் எல்லாம் இப்படிப்பட்டதுதான்.

ப-தி: அப்படி இருக்க இவ்வளவு மதங்களையும் ஒரே கடவுள் உண்டாக்கி இருப்பார் என்று நீரே நம்புகிறீரா? அதனால்தான் இவைகள் ஒவ்வொரு சீர்திருத்தக்காரர்களால் அறிவாளிகளால் முன்பின் ஆராய்ந்து பார்த்து மனித சமூகத்துக்கு நன்மை செய்யவேண்டும் என்ற கவலை கொண்டவர்களால் (மனிதர்களால்) உண்டாக்கப்பட்டது என்று எண்ண வேண்டியிருக்கிறது. அப்படிக்கில்லாமல் ஒரே கடவுள் இருந்து அவரே இவ்வளவு மதத்துக்கும், மத கர்த்தருக்கும் ஆதார புருஷர் என்றால் அப்போது கடவுளின் மேன்மைக் குணம் பாதிக்கப்படவில்லையா? யாரோ சில மனிதர்களுக்கு மேன்மை கொடுப்பதற்காக கடவுளை முட்டாளாக்குவதும் பல கடவுள்களை சிருஷ்டிப்பதும் பல வேதங்களை சிருஷ்டிப்பதும் சரியா?

நாம் இருவரும் இவ்விஷயங்களில் ஒரே கருத்துடையவர்களாகி இவைகள் எல்லாம் சற்று நேரத்துக்கு உண்மை என்றே ஒப்புக் கொள்வோம். அதாவது இந்து மதம் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்பதையும், வேதம் கடவுள் வாக்கு என்பதையும், கிறிஸ்து கடவுள் அவதாரம் என்பதையும், முகம்மது நபி கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதையும் குறானையும், மற்ற மதத்தையும் ஒப்புக் கொள்வோம். ஆனால் அவைகள் எல்லாம் இன்று ஒன்றாய் இல்லாமல் வேறு அபிப்பிராயங்களாகவும், சில முரணானவைகளாகவும் ஒரு மதத்துக்கும், ஒரு மததத்துவத்துக்கும் மற்ற மத தத்துவத்துக்கும் மற்ற தலைவருக்கும் மாறாக இருப்பானேன்? ஒன்றுக்கொன்று இன்றைய அனுபவத்தில் அதிர்ப்தி, வெறுப்பு, துவேஷம் உடையவைகளாக இருப்பானேன்?

ஆ-ன்: இதுவும் சிரமமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. பெரியவர்களைக் கேட்க வேண்டும்.

ப-தி: சாவகாசமாய் பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் இன்று நாம் எதை நம்பி எப்படி நடந்து கொள்வது?

ஆ-ன்: இவைகள் எல்லாம் உண்மை என்றோ, அல்லது உண்மை அல்ல என்றோ எப்படியோ இருக்கட்டும். அதற்கு ஆக நாம் கவலைப்படவேண்டாம். உலகில் மனிதன் உயிருள்ளவரை நல்லது எண்ணு, நல்லது செய் அவ்வளவுதான்.

ப-தி: நல்லது எது? தீயது எது என்பதற்கு அளவு கருவி என்ன?

ஆ-ன்: இது மிகவும் கஷ்டமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் பெரியவர்கள் நடந்து காட்டியது, சொல்லி இருப்பது இவைகளைக் கண்டு தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.

ப-தி: பெரியவர் யார் என்பதற்கு அளவு கருவி என்ன? ஒருவர் ஒருவரை பெரியவர் என்றால் மற்றொருவர் அவரை ஒப்புக்கொள்வதில்லை. அவருக்கு மாறாக அல்லது வேறொன்றைச் சொன்னவர்களை பெரியவர் என்கிறான். இதற்கு ஒரு பரீஷை குறிப்பு வேண்டுமே?

ஆ-ன்: இதுவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் உம்முடைய சமாதானம்தான் என்ன சொல்லும் பார்ப்போம்.

ப-தி: என் சமாதானம் என்ன? நான் தான் மதத்துவேஷி, பார்ப்பனத் துவேஷி, நாஸ்த்திகன், சுயமரியாதைக்காரர்கள் என்றெல்லாம் பெயர் வாங்கினவனாய் விட்டேனே, என்பேச்சை யார் கேட்பார்கள். நீர் ஆஸ்திகராயிற்றே உமக்கு தெரியுமென்றும், தெரியாவிட்டாலும் உம்முடைய உள்ளத்தில் சதா குடிகொண்டிருக்கிற கடவுள் உணர்த்துவார் என்றும் கருதி உண்மையான சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்காகக் கேட்டேன். நல்ல வேளையாக நீர் பதில் சொல்லாவிட்டாலும் என்னை வையாமல் பெரியவர்களைக் கேட்டுச் சொல்லுகிறேன் என்று சொன்னீரே அதுவே எனக்கு ரொம்ப திருப்தி. ஆஸ்த்திகர்களில் இப்படிப்பட்டவர்கள் அருமை, மிக அருமை. சந்தேகம் கேட்டால் அடி, உதை, நாஸ்திகன், பிராமண துவேஷி, ஆரிய துவேஷி... என்றெல்லாம் வெறிபிடித்தவர்கள் போல் ஆடுவார்கள். ஆதலால் உம்மைப்பற்றிக்கூட எனக்கு சந்தேகம்தான்.

ஆ-ன்: என்ன சந்தேகம்?

ப-தி: நீர் ஆஸ்திகரோ என்னமோ என்று.

ஆ-ன்: நான் உண்மையில் ஆஸ்திகன். அதாவது ஒரு கடவுள் இருப்பார் என்று நம்புகிறவன்.

ஆனால் இத்தனை மதங்களையும், மத கர்த்தாக்களையும் அந்தந்த மத வேதங்களையும் அவையெல்லாம் கடவுளால் சொல்லப்பட்டவை என்பதிலும் அவ்வேதக் கதைகள், புராணங்கள் ஆகியவை உண்மை என்பவைகளையும் பற்றி அவநம்பிக்கை கொண்டவன்தான் .

ப-தி: அப்படியானால் நீர் இருப்பர் என்ற கடவுள் நம்பிக்கையை யார் எந்த ஆஸ்திகர் லட்சியம் செய்வார். ஒரு குறிப்பிட்ட கடவுள், அல்லது ஒரு குறிப்பிட்ட மதகர்த்தர், அல்லது ஒரு குறிப்பிட்ட மதம் என்பவைகளை ஏற்றுக் கொளாதவர், நம்பாதவர் எல்லோரும் மற்ற மதக்காரனுக்கு நாஸ்திகனே - நம்பிக்கையற்றவனே யாவான். நாஸ்திகம் என்பதும் நம்பிக்கை யற்றது என்பதாக எல்லா ஆஸ்திகர்களுக்கு ஒரே பொருள்தான்.

ஆ-ன்: யாரோ எப்படியோ போகட்டும் எனக்கென்ன என் புத்திக்கு சரி என்று பட்டதை செய்து விட்டு செத்துப்போகிறேன்.

ப-தி: ஏன் சாகிறீர். உயிருடன் தான் இருமே உமக்கு சரி என்று படாதைத்தான் செய்யுமே, எனக்கென்ன கவலை? எப்படி இருந்தாலும் ஆஸ்திகர்கள் வைது கொண்டுதானிருப்பார்கள்.

குடி அரசு - உரையாடல் - 20.03.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: