மதத்தின் போல், நமது நாட்டில், பரப்பி வைக்கப்பட்டுள்ள பலவித ஆபாசங்களில் மோசமான, ஆபத்தான ஆபாசம் மாந்திரீகம், யக்ஷணி வசியம் என்பனவாகும். வினைகளைத் தீர்க்கவும், நோய் போக்கவும் கூடாதவரைக் கூட்டி வைக்கவும் போன பொருளை மீட்கவும் புத்திர சந்தானம் உண்டாகவும் மந்திரக்காரனைத் தேடி அலையும் குடும்பங்கள் பல உள்ளன. பேய், பில்லி, சூனியம் முதலிய எண்ணற்ற ஆபாசங்கள், பலருக்கு வயிற்றுப்பிழைப்பு மார்க்கமாகவே போய்விட்டது. நெற்றியில் ஒரு அங்குல அளவு குங்குமப்பொட்டும், கையில் ஒரு உடுக்கையும் வைத்துக்கொண்டு காளி அருள் பெற்றவன், நெற்றி வியர்வை நிலமீது சிந்த, கையில் மண் வெட்டியோ, கோடாரியோ, கலப்பையோ தாங்கி பாடுபடும் பாட்டாளியைவிட பல நூறு மடங்கு செளக்கியமாக வாழுகிறான். மதத்தின் பேரால் முளைத்துள்ள ஆபாசங்கள், பேயர்கள் பலருக்கு, வெறியாட்டத்தையும், களியாட்டத்தையும் தந்து மக்களின் வாழ்வைப் பாழ்படுத்துகிறது. பட்டம் பெற்ற படிப்பாளிகளும், இந்த உடுக்கைக்காக உலுத்தர்களிடம் நம்பிக்கை வைக்கிறார்கள். பூசாரி, சாமி, சுவட்டோலைச் சோதிடன், அநுமார் உபவாசி, காளி வசியக்காரன், மதுரை வீரன் பூஜை போடுபவன், மாந்திரீகன், பில்லி சூனியக்காரன் என்போர் மக்களுடைய மதியீனத்தையே தங்கள் முதலாக(இச்ணீடிtச்டூ)க் கொண்டு மக்களை உருட்டி மிரட்டி, வஞ்சித்து வாழ்கின்றனர்.

வருங்கேடு

மதி நாசம், நிதிநாசம் ஆவதுடன், மானமும் இவர்களால் நாசம் ஆவதுடன் மானமும் இவர்களால் நாசமாகிறது. சில சமயம் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. வேண்டுமென்றே, குரோதத்தால், இத்தகைய மாந்திரீகனால் யாருக்கேனும் கேடு விளைந்தாக ருஜúப்படுத்தினால் இந்தியன் பீனல் கோடு 319-வது செக்ஷன்படி அவர்களைத் தண்டிக்கக் கூடும்! ஆனால், கெட்ட எண்ணத்துடன் இது நடந்தது என்று எப்படி முடியும்? இந்த ஆபாசத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், மந்திரக்காரன், சூனியக்காரன் முதலியோரின் செயலால்தான் விபத்து வந்ததென எண்ணமாட்டார்கள். பிள்ளை வரம் கேட்கப்போய் கற்பை இழந்தவரும், சாமியை வீட்டில் பூஜை செய்யச் சொல்லி கொள்ளை கொடுப்பதும், காமாந்தகாரர், காவி அணிந்து வந்து ஏதோ ஒரு "மந்திர" உச்சாடனம் செய்தானென்பதில் மயங்கி, பெண்களைப் பறி கொடுப்பதும், புதையல் தேடப்போய் உள்ள பொருளை இழப்பதும், பாழாய்ப் போன நமது சமூகத்திலே, நடந்தபடியேதானே இருக்கிறது. மக்களின் மதியீனத்தைப்போக்க முற்பட்டால், அது மிக சுலபமாக முடிவதில்லை. தத்துவங்களும் , வியாக்கியானங்களும், "அன்று அவர் சொன்னது" என்றும், வாய்க்கு வந்ததை எல்லாம் மக்கள் கூறுவர். பல்லிக்கும், பூனைக்கும் பயந்து வாழ்க்கையை நடத்தும் பாமரரின் அஞ்ஞானத்தை எளிதில் ஒழிக்க முடியுமா? ஆகவே, அந்த மூட நம்பிக்கையை வளர்த்து, அதனால் வாழ்வு நடத்தும் வன்னெஞ்சப்பாதகர்களை, நாகரிக சமூகத்திலே, நாணயமுள்ள சர்க்கார் விட்டு வைப்பது கூடாது.

சட்ட விரோதமான செயல்

இந்த உயரிய, சீரிய, பகுத்தறிவுள்ள கருத்து கொண்டு பரோடா சமஸ்தானத்திலே, ஒரு மசோதாவை, சமீபத்தில் தயார் செய்கிறார்கள். பேய், பில்லி, சூனியம், மந்திரம், ஜாலம் முதலிய மூடப்பழக்கத்தால் பிழைப்பவரை இனி தண்டிக்க வேண்டுமெனவும், அவர்கள் மக்களுக்கு விபத்து உண்டாக்கினார்களா என்ற விசாரணை தேவையில்லை என்றும், அவர்கள் செயலே சட்டவிரோதம் என்றும், மேற்படி மசோதா குறிப்பிடுகிறது. இது பொது ஜன அபிப்பிராயத்திற்கு விடப்பட்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் சட்டமானால், பரோடாவில் பாமரரை வஞ்சிக்கும் பாதகம் ஒழியும்! மூடப்பழக்க வழக்கம் மண்மூடிப்போகும்! அஞ்ஞானம் அழியும்! ஒரு சிறு சமஸ்தானம், முனைந்து இந்த அரிய செயலைச் செய்கிறது. நாம் என்ன செய்கிறோம்? மதத்தின் உண்மையான கருப்பொருள் காண்போர், என் செய்கின்றனர்? காவியம்புகளும் கலியாண சுந்தரனார்கள் என் செய்கின்றனர்? விருத்தியுரைகள் எழுதி அடக்கவிலைக்கு விற்று காலந்தள்ளுபவர்கள், ஏன் வீறு கொண்டெழுந்து இக்கொடுமைகளைப் போக்க முற்படக்கூடாது? வெள்ளையனை விரட்டும் வீராதி வீரர்கள், தங்கள் சொந்த நாட்டிலே, காணப்படும் இந்த சோம்பேறிக் கூட்டத்தின் தொல்லையை ஒழிக்க ஏன் வரக்கூடாது? சென்னை பரோடா காட்டிய வழியைப் பின்பற்றுமா? வஞ்சகர் வலையினின்றும் மக்களை மீட்குமா? வாலிபர்கள் இத்தகைய சட்டமொன்று நம் மாகாணத்திலே ஏற்பட வேண்டுமென கிளர்ச்சி செய்வார்களா? "தேசீய ஒற்றுமைக்காக" ஹிந்தியைத் தேடிக்கண்டுபிடித்த ஆச்சாரி வர்க்கம், பரோடாவில் கொண்டு வரப்படும், மசோதா போன்ற தொன்றைக் கொண்டு வருவார்களா? அல்லது திருவாங்கூர் தீண்டாதார் கோவில் பிரவேசத் திருத்தாண்டகம் பாடிக்கொண்டே, சென்னை மாகாணக் கோவில் கதவுகளை அடைத்து வைத்துக்கொண்டு, சனாதனிகளிடம் சரணடைந்திருப்பது போல, "சபாஷ்! பரோடா" என்று கூறிவிட்டு, காரியத்தில் ஒன்றும் செய்யாது காலந்தள்ளுவார்களா? யாரறிவர் இந்த சர்க்கார் போக்கை.

தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 03.04.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:pwversion@gmail.com

To Get Latest Articles

Enter your email address: