இவ் வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப்போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? "அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை" என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டாடப்போகின்றீர்களா? என்பதுதான் "நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?" என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே சிறிதும் யோசனையின்றி யோக்கியப் பொறுப்பின்றி உண்மைத் தத்துவமின்றி சுயமரியாதை உணர்ச்சியின்றி சுயமரியாதை இயக்கத்தின்மீது வெறுப்புக்கொள்ளுகின்றீர்களே யல்லாமல் மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப் பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே யல்லாமல் மேலும், உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும் ஜீவனற்ற தன்மையான "பழைய வழக்கம்" "பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்" என்கின்றதான வியாதிக்கு இடங்கொடுத்துக்கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களே யல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கின்றீர்கள். சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதார் களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராண புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று மானமற்று கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப்பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றோம்.

புராணக் கதைகளைப் பற்றி பேசினால் கோபிக்கிறீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளை பொத்திக்கொள்ளுகின்றீர்கள். "எல்லாருக்கும் தெரிந்ததுதானே; அதை ஏன் அடிக்கடி கிளருகின்றீர்கள். இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா" என்று கேட்கின்றீர்கள். ஆனால் காரியத்தில் ஒரு நாளைக்குள்ள அறுபது நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராண புரட்டை உணர்ந்தவர்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்கள் ஆவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். பண்டித, பாமர, பணக்கார ஏழை சகோதரர்களே!

இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள், எவ்வளவு யாத்திரை செய்தீர்கள், இவற்றிற்காக எவ்வளவு பணச்செலவும் நேரச்செலவும் செய்தீர்கள், எவ்வளவு திரேக பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோவிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள்மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றி பேசுவதால் என்ன பயன்? "நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்" என்றால் அதற்கு "நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்" என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் தீபாவளிப்பண்டிகை என்று ஒன்று வரப்போகின்றது. இதைப் பார்ப்பனரல்லாத மக்களில் 1000க்கு 999-பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால் பொதுவாக எல்லோரும் அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும், பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று. மக்கள், மரு மக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததானதுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு. அர்த்தமற்றதும், பயனற்றதுமான வெடிமருந்து சம்மந்தப்பட்ட பட்டாசுவகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று. பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடுவீடாய் கூட்டங் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சி பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு. இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது ஐந்து. அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவதும் ஆறு. இந்தச் செலவுக்காகக் கடன் படுவது ஏழு. மற்றும் இது போன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும் அதற்காக கடன்படவேண்டியிருக்கின்றது என்பதுமான விஷயங்களொருபுற மிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன, அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்றதான விஷயங்களுக்கு சிறிது கூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில் அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனீயப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத் தான் முடியுமே ஒழிய மற்றபடி எந்தவிதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவிற்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம் பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய்விட்டது. கந்தப்புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய்விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவை யெல்லாவற்றையும் பொய்யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்ல வேண்டும் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது அல்லது இவர்கள் சம்மந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இம்மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமா வென்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள் தங்களை ஒரு பெரிய சமூகவாதிகளென்றும் கலைகளிலும் ஞானங்களிலும் நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப் பேசி விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ "காளைமாடு கண்ணு (கன்றுக் குட்டி) போட்டிருக்கின்றது" என்றால் உடனே "கொட்டடத்தில் கட்டி பால் கறந்து வா" என்று பாத்திரம் எடுத்துக்கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கிறோமே யொழிய "காளை மாடு எப்படி கண்ணுபோடும்" என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களைவிட பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களைவிட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க்கின்றோம். உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களைவிட நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவே யிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும் குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லிவிடலாம். ஏனெனில் இன்றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலைமுண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயண காலக்ஷேபங்களும் பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலக்ஷேபங்களும், பொது ஸ்தாபனங்கள் தோறும் கதா காலக்ஷேபங்களும் நடைபெறுவதையும் இவற்றில் தமிழ்ப் பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கெளரவப்பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள்தான் "ஆரியர் வேறு தமிழர் வேறு" என்பாரும் "புராணங்களுக்கும் திராவிடர்களுக்கும் சம்மந்தமில்லை" என்பாரும் "பார்ப்பனர் சம்மந்தம் கூடாது" என்பாரும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு "நாங்கள் தான் பிரதிநிதிகள்" என்பாரும் மற்றும் திராவிடர்கள் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே இம்மாதிரியான விஷயங்களில் படித்தவர்கள் பணக்காரர்கள் உத்தியோகஸ்தர்கள் என்கின்றவர்கள் போன்ற கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்மந்தமான காரியங்கள் எதிர்பார்ப்பதைவிட, பிரசாரம் செய்வதைவிட, உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரசாரம் செய்வதே பயன் தரத்தக்கதாகும்.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகின்றோம்.

தோர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 16.10.1938

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: