உலகில் மதங்கள் என்பவைகள் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகி இருந்தாலும் மதங்களை ஏற்படுத்தியவர்கள் எல்லாம், அல்லது மதங்களின் மூல புருஷர்கள் எல்லாம் தெய்வீகச் சக்தி பொருந்தியவர்களாயும், தெய்வ சம்பந்தமுடையவர்களாயும், தீர்க்கதரிசன ஞானமுள்ள மகாத்மாக்களாயும் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டும் எல்லா மதக் கட்டளைகளும் தெய்வங்களாலேயே மூல புருஷர்கள் மூலம் உலகத்திற்கு இறக்கப்பட்டது என்று சொல்லப்பட்டும் இருந்தாலும் சதா சர்வ காலமும் அந்த அந்த மதப் பிரச்சாரம் செய்யப்படாவிட்டால் மதம் ஒழிந்துபோய்விடுமே என்கின்ற பயம் உலகிலுள்ள எல்லா மதஸ்தர்களிடமும் ஆதி முதல் இன்றுவரை இருந்துதான் வருகின்றது. இந்த அபிப்பிராயத்திலும், காரியத்திலும் உலகில் இன்ன மதம் உயர்வு, இன்ன மதம் தாழ்வு என்று சொல்லுவதற்கில்லை.

சாதாரணமாக ஒரு கோடி ரூபாயோ, அல்லது இரண்டு கோடி ரூபாயோ கையில் வைத்துக்கொண்டு ஆயிரம் ஆட்களையோ, அல்லது இரண்டாயிரம் ஆட்களையோ நியமித்து 5, 6 பாஷைகளில் பத்திரிகைகளையும் வைத்துக்கொண்டு ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட மிருகத்தின் பேரால் ஒரு மதத்தைக் கற்பித்து அம் மிருகத்துக்குச் சில "தெய்வீகத் தன்மை"யைக் கற்பித்து அது பல "அற்புதங்கள்" செய்ததாக ஆபாசமானதும், பொருத்தமற்றதுமான கதைகளைக் கட்டி விட்டு பிரசாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டால் கண்டிப்பாக சில வருஷத்திற்குள் லக்ஷக்கணக்கான மக்களை அம்மதத்தைப் பின்பற்றுபவர்களாகச் செய்துவிடலாம். பிறகு அந்த மதத்தை எவனாவது குற்றம் சொல்லுவானேயானால் அவன் தண்டிக்கப்படவோ, வையப்படவோ, அடிக்கப்படவோ, அம்மதக்காரர்களால் கொலை செய்யப்படவோ ஆளாகும்படியும் செய்துவிடலாம்.

ஆதலால் மதங்களுக்கு ஜீவ நாடிகளாக இருந்து வருவன பணமும், ஆள்பவர்களின் சலுகையும் பிரசாரமுமே அல்லாமல் அவற்றின் தெய்வீகத் தன்மையோ, உயர்ந்த தத்துவமோ அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் பொருந்தக்கூடிய கொள்கைகளோ என்று எந்த மதத்தையும் யாரும் சொல்லிவிட முடியாது.

"சமீப காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணை ஒரு "பேய்பிடித்துக்கொண்டது" என்று அந்தப்பெண்ணும் தலைவிரித்து ஆடத் தொடங்கினாள். அதற்காக ஒரு பேயோட்டியைக் கூப்பிட்டு அந்தப் பேயை ஓட்டச் சொன்னதில் அந்தப் பேயோட்டி இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கும் பேய் யார் என்று கண்டுபிடிப்பதில் 2-நாள் செலவழித்து கடைசியாக "5, 6 வருஷத்திற்கு முன்னால் அவ்வூர் கிணற்றில் விழுந்து செத்துப்போன ஒரு மராட்டியன் அடுத்த ஜன்மத்தில் நாயாய்ப் பிறந்து இந்தப் பெண் வீட்டில் வெகு செல்லமாய் வளர்ந்து இந்தப் பெண்ணிடமும் மிக அன்பாய் இருந்து ஆறு மாதத்திற்கு முன் அதுவும் கிணற்றில் விழுந்து செத்துப்போனதால் அது பேயாகி இப்போது அந்தப்பெண்ணைப் பிடித்துக்கொண்டது" என்று சொன்னான். இதை அந்த ஊர்க்காரர்கள் நம்பினார்கள் என்ற குறியை இந்தப் பெண் தெரிந்தவுடன் பேய் ஆடும்போது அடிக்கடி நாய்மாதிரி குலைப்பதும், சிற்சில சந்தர்ப்பங்களில் மராட்டிப் பேச்சு மாதிரி பேசுவதுமாய் இருந்தாள். அதுமாத்திரமல்லாமல் தன்னைப் பிடித்திருக்கும் பிசாசு நாய்ப் பிசாசுதான் என்பதைக் காட்டுவதற்காகச் சில சமயங்களில் மலத்தைச் சாப்பிடவும் செய்தாள். மற்றும் வேறு பல நாய்களுக்கும் தின்பண்டம் போட்டு சதா 7, 8 நாய்களுடன் காமாதுர விளையாட்டும் விளையாடுவாள். இதைப் பார்த்த எல்லோருமே சிறிது கூடச் சந்தேகமில்லாமல் இந்தப் பெண்ணைப் பிடித்திருப்பது நாய்ப் பிசாசுதான் என்று தீர்மானித்துக் கொண்டார்கள்,"

மதங்களும் இது போலவே தான் தன்னை ஒரு மதக்காரன் என்று காட்டிக்கொள்ள வேண்டுமானால் மதக் குருக்கள், அல்லது மத கர்த்தர்கள், அல்லது மதப் பிரசாரக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் என்ன சொல்லுகிறார்களோ, எப்படி நடந்தால் மத பக்தி உடையவன் என்று சொல்லுவார்களோ அந்தப்படி நடக்கத்தான் ஒவ்வொரு மதபக்தனும் ஆசைப்படுகிறான்.

மதம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதென்றும், சைன்சுக்கும், மதத்துக்கும் சம்மந்தம் பார்க்கக் கூடாதென்றும் பகுத்தறிவு வேறு, மதக்கோட்பாடுகள் வேறு என்றும் இந்தக்காலம் வேறு, அந்தக்காலம் வேறு என்றும் பெரியார்கள் நியமனங்களுக்குக் காரண காரியங்கள் விசாரிக்கக்கூடாது என்றும் "ரிஷிமூலம், நதி மூலம்" பார்க்கக் கூடாது என்றும் எல்லா மதக்காரர்களும் சொல்லி விடுவதால் உலகில் மதத்தின் பேரால் எந்த மூடனும் எதையும் சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம் என்கின்ற தைரியத்தின் மீதே மத ஆபாசமும், மத அயோக்கியத்தனங்களும் உலகில் நிலைத்து வருகின்றன. இந்த லட்சணத்தில் உள்ள மதங்களுக்கு ஆள் பிடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தின் மீது மதமாற்றப் பிரசாரங்களும் நடந்து வருகின்றன என்றால் இது "புழுத்ததின் மீது நாய் விட்டை யிட்டது" என்கின்ற பழமொழிப்படி மனிதர்களை மேலும் மேலும் மூடர்களாக்குவதாகவே இருந்து வருகிறதே அன்றி இதில் நாணையமோ, உயர்வோ இருப்பதாகச் சொல்ல முடியாது. சாதாரணமாக இந்திய மக்களில் 100-க்கு 92-பேர்கள் தற்குறிகள், எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்கள், இவர்களிலும் 100-க்கு 90-பேர்கள் நல்ல ஜீவனத்துக்கு மார்க்கமில்லாமல் வயிற்றுப் பிழைப்புக்கு எதையும் செய்யலாமென்று கற்பிக்கப்பட்டிருக்கிறவர்கள். இப்படிப்பட்ட இவர் களிடத்தில் எது சொன்னால் ஏறாது? என்ன சொன்னாலும் நம்பும் சக்தி எழுத்து வாசனை அறியாத மூடர்களுக்கே அதிகம். ஆதலால் இப்படிப்பட்ட ஜனங்களிடம் மதப்பிரசாரம் செய்து மத மாற்றுதல் வேட்டை ஆடுவது என்பது யாவருக்கும் சுலபமான காரியமாகும்.

இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனை அற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத் தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்த தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றங்களும் தாண்டவமாடுகின்றன. இந்தியாவில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள், புத்தர்கள், யூதர்கள், பாரசீகர்கள், சீக்கியர்கள், ஆரிய சமாஜிகள், வைணவர்கள், சைவர்கள், ஸ்மார்த்தர்கள் முதலிய கடவுள் மாறுபாடுள்ளவர்களும், மதகர்த்தாக்கள் மாறுபட்டுள்ளவர்களும், மதக் கோட்பாடுகளின் அர்த்த மாறுபாடுள்ளவர்களுமாக எத்தனையோ பிரிவினர்கள் இருந்துகொண்டு வெகு காலமாகவே மதமாற்றப் பிரசாரம் செய்துகொண்டுதான் வருகிறார்கள்.

ஆனால் இந்த மதங்களில் மனித வாழ்க்கை தத்துவத்தில் ஏதாவது ஒன்றுக்கொன்று பிரமாத வித்தியாசங்கள் இருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுமே காண முடியாத நிலையில் தான் இருந்து வருகின்றன.

எல்லா மதத்துக்குமே - ஒரு கடவுள் உண்டு.

மேல் லோகமுண்டு.

மோட்ச நரகமுண்டு.

ஆத்மா உண்டு.

செத்த பிறகு இந்த ஆத்மா என்கின்ற கொள்கைகளிலாவது, அல்லது மனிதன் அவனவன் நன்மை தீமைக்கு ஏற்றவிதம் பலன், மோட்ச நரகம் அனுபவிப்பான் என்கின்ற கொள்கைகளிலாவது கருத்து வித்தியாசமில்லாமலே இருந்து வருகின்றது.

பிரத்தியட்ச அனுபவத்திலோ எல்லா மதத்திலும் "அயோக்கியர்கள்" "யோக்கியர்கள்" இருந்து தான் வருகிறார்கள்.

எல்லா மதத்திலும் ஏழைகள் பணக்காரர்கள் இருக்கிறார்கள்.

எல்லா மதத்திலும் எஜமான், கூலியாள் இருக்கிறார்கள்.

எல்லா மதத்திலும் உற்சவம், பண்டிகை இருக்கின்றன.

எல்லா மதத்திலும் வணக்கம், தொழுகை, பிரார்த்தனை, ஜபம், தபம் இருக்கின்றன.

எல்லா மதக்கடவுள்களும் தொழுகை, பிரார்த்தனை, வணக்கம், பூசை ஆகியவைகளுக்குப் பலன் கொடுக்கும் என்றும், இவற்றாலேயே நாம் செய்த எப்படிப்பட்ட பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடலாம் என்றும் நாம் கோரியதை அடைந்து விடலாம் என்றும் ஓர் நம்பிக்கை இருந்துதான் வருகின்றது.

மற்றும் எல்லா மதக் கடவுள்களும் கண்களுக்குத் தோன்றாததும், மனத்திற்கு படாததும், ஆதி, அந்தம், ரூபம், குணம், பிறப்பு, இறப்பு முதலியவைகள் இல்லாதவைகளுமாகவேதான் இருக்கின்றன. எல்லா மதங்களும், "கண்களுக்கும், மனதிற்கும் தோன்றக் கூடிய எந்த வஸ்துவுக்கும் ஒரு கர்த்தா இருக்கவேண்டும் என்றும், ஆனால் கண்களுக்கும், மனதிற்கும் எட்டாத ஒரு வஸ்துவாகிய கடவுளுக்கு மாத்திரம் ஒரு கர்த்தா இல்லை யென்றுமே சொல்லுகின்றன. ஒரு மதமாவது என் கடவுள் கண்ணுக்குத் தெரியக்கூடியது என்றோ, என் வேதமாவது தனது கோட்பாடுகள் எல்லாம், மக்கள் எல்லோரும் ஏற்று நடக்கக் கூடியதாய் இருந்து வருகின்றது, அல்லது நடக்கக்கூடியதாய் செய்ய சக்தி உள்ளதாய் இருக்கின்றது என்றோ, சொல்ல யோக்கியதை உடையதாக இல்லை. எல்லா மதக்காரர்களுக்கும் பசி, தாகம், நித்திரை, புணர்ச்சி, இன்பம், துன்பம், ஆசை, அதிர்ப்தி, கவலை, போதாது என்கின்ற தரித்திர குணம் ஆகியவை ஒன்றுபோலவேதான் இருக்கின்றன. எல்லோருடைய வேதமும் கடவுளாலும் கடவுள் தன்மை உடையவர்களாலுந்தான் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன என்றாலும் அவை ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகவும் பலவற்றில் நேர்மாறான கருத்துக் கொண்டதாகவும் இருந்து வருகின்றன. எல்லா மதக்காரர்களுக்கும் ஒவ்வொரு வித அடையாளம் இருக்கின்றன. இந்த நிலையில் மதப்பிரசாரத்தால், மதமாற்றத்தால் மனிதர்களுக்கு என்ன லாபம் ஏற்படும் என்பது நமக்கு விளங்கவில்லை.

சாதாரணமாக இந்தியர்களில் 8 கோடி முஸ்லீம்கள் இருக்கிறார்கள். 1 கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். சுமார் 10 கோடி வைணவர்கள் இருக்கிறார்கள். 5 கோடி சைவர்கள் இருக்கிறார்கள்.

மற்றும் கலப்பு மதம் உள்ளவர்களும், மதக்குறிப்பு இல்லாதவர்களும் ஏராளமாயிருக்கிறார்கள் என்று உத்தேசமாகச் சொல்லக்கூடுமானாலும் இவர்களில் பெரும்பான்மையோர் சமீப காலங்களில் அதாவது சுமார் 1000, 2000 வருஷங்களுக்குள் மதமாற்றமடைந்தவர்கள் என்று சொல்லலாமானாலும் இவர்களின் வாழ்க்கையில் ஏதாவது விசேஷமோ, உயர்வோ உண்டா என்பதைச் சிந்தித்து நன்றாய் பார்ப்போமேயானால் ஒருவித மேன்மையும் எந்த ஒரு தனி மதக்காரருக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அதாவது அரசியலிலாகட்டும், பொருளியலிலாகட்டும், அறிவியலிலாகட்டும், சமுதாய வாழ்க்கையிலாகட்டும், ஆண் பெண் தன்மையிலாகட்டும், எல்லோரும் ஒரு திட்டத்தில் இல்லாவிட்டாலும் கொள்கையில் ஒரு மாதிரியாகவேதான் இருந்து வருகின்றார்கள்.

ஆகையால் மனித சமூகத்திற்கு அவரவர்கள் வாழ்க்கையில் உள்ள கவலைகள் அற்று அதிர்ப்தி ஒழிந்து சாந்தியும், சந்தோஷமும் கொண்டு வாழ்வதற்கும் பொருளியலிலும், சமுதாய இயலிலும், ஆண் பெண் தன்மையிலும் சமதர்ம தத்துவம் கொண்ட வாழ்க்கை ஏற்பட இந்தியாவுக்கோ, அல்லது உலகத்துக்கோ இனி மதம் ஒழிப்புப் பிரசாரம் வேண்டுமா? அல்லது மதம் மாற்றுப்பிரசாரம் வேண்டுமா? என்பதை ஒவ்வொரு அறிவாளியும் யோசிக்க வேண்டியது முக்கிய கடமையாகும்.

மதம் மாற்றுதல் மதப் பிரசாரம் ஆகிய காரியங்களால் சமீப காலத்திற்கு முன்பு உலகிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவிலும் நடந்த முட்டாள்தனமான - மூர்க்கத்தனமான பலாத்காரக்கொடுமைச் செயல்களும், கலகங்களும், அடிதடிகளும், குத்து வெட்டுகளும், கொலைகளும், சித்திரவதைகளும் எவ்வளவு என்பதற்குச் சரித்திரங்கள், புராணங்கள் பிரத்தியட்ச அனுபவங்கள் எத்தனையோ மலிந்து கிடக்கின்றன. இவைகளையெல்லாம் உத்தேசித்தாவது இனிவரும் சுயமரியாதை அறிவியக்க சமதர்ம உலக ஆட்சியில் மத விஷயத்தைப்பற்றி ஆதரித்து எவராவது தெருவில் நின்று பேசினாலும், தெருவில் புஸ்தகங்கள் வைத்து விற்பனை செய்தாலும், பத்திரிக்கைகளில் எழுதினாலும் அவர்களெல்லாம் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்று சட்டம் செய்யப்படுமானால், உலக மக்கள் பிரிவினையற்று, குரோதமற்று, மடைமையற்று, தோளோடு தோள் புனைந்து தோழர்களாக வாழமுடியும் என்பதோடு மத தத்துவங்களின் கூடாய்க் காண்கின்றோம். இன்று இந்து மதமென்று அருத்தமில்லாமல், சொல்லிக்கொண்டிருக்கிற சிவ விஷ்ணு மதங்கள் சீர்திருந்தாவிடில் மக்கள் மேன்மேலும், தீமை செய்பவர்களாகவும், வறுமை, பிணி, ஒற்றுமையின்மை முதலியவைகட்கு ஆளாகி என்றும் ஏழைகளாகவும், பலவீனர்களாகவும், மக்களுக்குள் அன்பற்றவர்களாகவும், மனிதத் தன்மையற்ற அடிமைகளாகவும் இருப்பார்களேயன்றி, இந்திய மக்கள் ஒன்று சேர்ந்து ஒருக்காலும் மற்ற நாட்டார்களைப்போல், தன் மதிப்போடு, மனிதத் தன்மையில் வாழ வியலாதென்பது எனது தாழ்மையான எண்ணமாகும்.

தோழர் பெரியார், பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - சனவரி 1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: