நமது சின்னஞ் சிறு குழந்தைகள் "சாமி" வைத்து விளையாடுவதைப் பார்த்திருக்கின்றோம். சிறு கற்களை இரண்டு வரிசையாக அடுக்கி அதன் மேல் குச்சிகளைப் பரப்பி, அதற்கு மேல் துணி, இலை, காகிதம் முதலியவைகளைப் போட்டு மூடி, ஓர் அறை மாதிரியாகச் செய்வார்கள். அதன் பிறகு சிறு ஓடுகளை முக்கோணமாகத் தேய்த்தோ அல்லது பொம்மைகளையோ அவ்வறைகளுக்குள் "சாமி"களாக வைத்து, ஒரு குழந்தை அர்ச்சகராகவும், மற்றக் குழந்தைகள் "பக்தர்"களாகவும் நடிப்பதுண்டு. இதுதான் குழந்தைகளினுடைய கோயில்கள். இவைகளுக்குத் திருவிழாக்களும் உண்டு. சிறு காய்களில் துடைப்பக் குச்சிகளைக் கோர்த்து தேர்மாதிரி செய்து அடியில் குச்சிகளைப் பரப்பி அதன் மேல் முக்கோணமாய்த் தேய்க்கப்பட்ட ஓட்டுத்துண்டை வைத்து, இழுத்துக்கொண்டு போவது உண்டு. அந்தக் கூட்டத்தில் மிகவும் சிறு குழந்தையாய் இருப்பவர்கள் ஓட்டைத் தகரங்களை "மேள"மாக உபயோகப்படுத்துவார்கள். "இந்துக்கள்" என்றும், "சைவர்கள்" "வைஷ்ணவர்கள்" என்றும் சொல்லிக்கொள்ளும் எல்லாருடைய வீடுகளிலும் பெரும்பாலும் குழந்தைகள் இவ்வாறு விளையாடுவது உண்டு. ஆனால் இப்போது பட்டணங்களிலுள்ள "இந்து"க் குழந்தைகள் இவ்வாறான விளையாட்டு விளையாடுவது கிடையாது. அவர்கள் பட்டண வாழ்க்கையில் அதிகமாய்க் காணப்படும் மோட்டார், ரயில் முதலியவைகள் மாதிரி வைத்துவிளையாடுகிறார்கள். ஏனெனில் கிராமத்துக் குழந்தைகளுக்கு கடவுளின் மேலிருக்கும் அவ்வளவு "பக்தி" பட்டணத்துக் குழந்தைகளுக்கு இருக்கச் சந்தர்ப்பம் கிடையாதல்லவா? "சாமி" வைத்து விளையாடும் குழந்தைகள், பெரியோர்களாகிய நாம் செய்வதைப் பார்த்துத்தான் செய்கின்றன. ஆனாலும் அக்குழந்தைகள் விளையாடுவதை ஓரளவுதான் நாம் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். பொறுத்துக் கொள்ளவும் முடிகிறது. உதாரணமாக, மிகவும் "செல்ல"ப்பிள்ளையாய் வளரும் ஒரு குழந்தையை 6 முதல் 8 அல்லது 10வது வயது வரை "சாமி" வைத்து விளையாடுவதைப் பொறுத்துக்கொண்டிருப்போம். சாதாரணமாக 3 வயது முதல் 6 வயது வரையில்தான் இவ்வித விளையாட்டுகளுக்கு மதிப்பும் இருக்கும். அதுவும்கூட ஓர் அளவு வரையில்தான். 7 வயதுக் குழந்தை "சாமி" விளையாடுவதற்காக பள்ளிச் சம்பளத்துக்கு வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கற்பூரமும் கலர் காகிதமும் வாங்கினால், கன்னத்தில் ஒரு அறை கொடுத்துக் காதைப்பிடித்து இழுத்து அப்புறம் விடுவதைப் பார்த்திருக்கிறோம். அல்லது 13 வயதுப் பையன் "சாமி" விளையாட ஆரம்பிப்பதைக் கண்டோமானால், "அடே, குட்டிச்சுவரே அரைக்கழுதை வயதாகி இன்னம் சாமி வைத்து விளையாட வெட்கமில்லையா?" என்று கடுத்த முகத்தோடு கேட்கிறோம். அதையும் மீறிச் செய்தால் அக்குழந்தைகள் சிறு சிறைச்சாலை வாழ்க்கையைக் கூட அநுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இச்சிறு அனுபவம் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால், மேலே சொன்ன எல்லா விஷயங்களிலும் அக்குழந்தைகளே நம்மைத் திருப்பிக் கேட்குமாகில் நாம் என்ன சொல்வோம்? அவர்களை "அடே அதிகப் பிரசங்கி" என்பது தவிர உண்மையான பதில் ஏதாவது நம்மால் சொல்ல முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.

வருஷா வருஷம் நமது நாட்டில் நூற்றுக்கணக்காக கோயில்களும் தேர்களும் கட்டப்பட்டு, ஆயிரக்கணக்கான உத்ஸவங்களும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு திருவிழாவுக்கும் லட்சக்கணக்கான ஜனங்கள் போய்க் கொண்டே இருந்தால், இன்னும் சில வருஷங்களில் இந்தியாவினுடைய செல்வமெல்லாம் குட்டிச் சுவர்களிலும், குழவிக் கற்களிலும் குடை பீதாம்பரங்களிலும் தான் இருக்குமேயொழிய ஜனங்களுக்குப் பிரயோஜனப்படக்கூடிய முறையில் ஒரு தம்பிடி கூட இருக்காது என்பது திண்ணம்! இன்னும், மதுரை, திருநெல்வேலி, திருவாரூர், சீரங்கம், திருச்செந்தூர், திருவானைக்காவல் முதலிய ஊர்களில் ஜனங்களுக்கு வீடு கட்டிக் கொள்ளக் கூட இடமில்லாதபடி சரிபாதி ஊரைக் கோவில் அடைத்துக் கொண்டிருக்கிறது. உயிரில்லாச் சாமி ஒன்றுக்கும், உயிரற்ற "சாமிகள்" தோசை, வடை, புளியோதரையை விழுங்கி விட்டு ஜட்காவண்டிக் குதிரை புரளுவது மாதிரி நெளிந்து கொண்டு ஏப்பம் விட்டு மல்லாந்து கிடப்பதற்கு மாத்திரம் ஊரில் பாதியை அடைத்துக் கோவில் கட்டினால் நமது புத்திசாலித் தனத்தைக் கண்டு மேல் நாட்டுப் பெண்மணிகள் புஸ்தகம் எழுதாமல் வேறு என்ன செய்வார்கள்?

நமக்கும் குட்டிச் சுவர் மாதிரி 5 கழுதை வயது ஆயிற்றேயொழிய, "சாமி" விளையாட்டு மாத்திரம்போகவே இல்லை. திருப்பதி போகலாமா, திருச்செந்தூர் போகலாமா என்பதும், காசி போய்விட்டு ராமேஸ்வரம் போகலாமா, அல்லது ராமேஸ்வரம் போய் விட்டுக் காசி போகலாமா வென்பதும், அநுமார் வாகனத்திற்குத் தங்கமுலாம் பூசலாமா அல்லது தங்கத் தகட்டினாலேயே செய்து விடலாமா என்பதும், ஜம்புகேஸ்வரருக்குப் பூச்சக்கரக் குடை செய்வதற்குப் பட்டு விசேஷமா வெல்வட் விசேஷமா என்பதும், மாரியம்மனுக்கு வெள்ளியில் கண்கவசம் செய்யலாமா தங்கத்தில் செய்யலாமா, கல்யாண உற்சவம் வருஷத்துக்கு இரண்டு தடவை நடத்தலாமா என்பதுமே பெரிய ஆராய்ச்சியாயிருக்கிறதே தவிர, நமது நித்திய வாழ்க்கைக்குச் செளகரியமான ஏற்பாடுகளைச் செய்வதில் நமது யுத்தியானது சிறு பிள்ளைகளை விட ஆயிர மடங்கு கீழாகவே தான் இருக்கிறது. போன வருஷம் நடந்த கல்யாணம் என்ன ஆயிற்று? எந்த கோர்ட்டில் ரத்து ஆயிற்று? அல்லது ஓடிப்போயிற்றா? தம்பதிகளில் ஏதாவது ஒன்று செத்துப்போயிற்றா என்று யோசிப்பதில்லை.

பள்ளிக்கூடத்துச் சம்பளத்தை யெடுத்துக் கற்பூரம் வாங்கி தன் "சாமி"க்குக் கொளுத்தும் பிள்ளையாண்டானுக்கும், ஆஸ்பத்திரி, கல்விச்சாலை, சுகாதாரம் முதலியவைகளுக்குப் பணமே இல்லாமலிருக்கும் போது, பெரிய தொகையைச் செலவு செய்து, "சாமி" விளையாட்டு விளையாடும் பெரியோர்களுக்கும் புத்தி சம்பந்தப்பட்ட மட்டில், ஏதேனும் வித்தியாசமிருக்கிறதா என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும்.

இவ்வுலக வாழ்விற்கு அவசியமான கல்வியையும், அதன் பிறகு தெரிய வேண்டிய பல விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டிய வயதில் "சாமி" வைத்து விளையாடுவதும், அதுவும் வீட்டுப்பணத்தைச் செலவழிப்பதும் அறிவீனமென்றும் அதைத் தடுக்காவிட்டால் பிள்ளையாண்டான் கெட்டுப்போவதோடு குடும்பத்துக்கும் கெடுதியுண்டாகும் என்றும் பெற்றோர்கள் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அதுபோலவே, நமது உலக முன்னேற்றத்தில் ஈடுபடவும், நமது வாழ்க்கையைச் சீர்ப்படுத்திக் கொள்ளவும், அதற்கு வேண்டிய முயற்சிகளைப் பல துறைகளிலும் செய்யவும் வேண்டிய காலத்தில், நமது பெரியோர்கள் "சாமி" வைத்து விளையாடுவதும் அதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழிப்பதும், நமது மக்களைச் சோம்பேறிகளாக்கி விடுவதோடு, நமது நாட்டையும் பாழ்படுத்தி விடும் என்ற கவலையால்தான், நாமும் நமது பெரியோர்களுக்குப் புத்தி கூற வேண்டியது கடமையாகின்றது. பெற்றோருக்கு அடங்காப்பிள்ளை "சாமி" விளையாடிக்கொண்டே இருந்து வீணாய்ப் போவதுண்டு. ஆனால் தைரியமுள்ள பெற்றோர் தமது பிள்ளையைக் கெடுக்க விரும்புவதில்லை. அறைக்குள் கட்டிப்போட்டாவது புத்தி புகட்டுவது வழக்கம். அவ்வாறே "அறிவியக்கத்தார்"களாகிய சுயமரியாதை இயக்கத்தவர்களுக்கும், சந்தர்ப்பமும், செளகரியமும் கிடைக்குமானால் மேல்கண்ட முறையை கையாண்டாவது நமது பக்தர்களுக்குப் புத்தி புகட்டாமல் இருக்கப் போவதில்லை. ஆனால் அதற்குள்ளாக, நமது "பெரியோர்களும்" "பக்தர்களும்" நல்ல பிள்ளைகளாக ஆகிவிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

தோழர் பெரியார், பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - பிப்ரவரி 1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: