periyar 2

நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க சம்பந்தத்தில் பூமி வரி, வருமான வரி, கள்ளு வரி, துணி வரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிட்டி வரி, போர்டு வரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகளைக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதல்லாமல் தெய்வத்திற்காகவும், மதத்திற் காகவும் கொடுத்து வரும் வரி அளவுக்கு மீறினவைகளாய் இருப்ப தோடு நமக்கு யாதொரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் மேற்சொல்லிய அரசாங்க சம்பந்த வரிகளின் அளவை விட ஏறக்குறைய அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. அன்றியும், இவ்வரிகளால் தத்துவ விசாரணையும், மத விசாரணையும் நாம் கொஞ்சமும் செய்வதற்கில்லாமல் செய்து, நமது மூட நம்பிக்கையால் பிழைக்க வேண்டிய சிலரின் நன்மைக்காக அவர்கள் எழுதி வைத்ததையும் சொல்வதையும் நம்பி நாம் கஷ்டப்பட்டு வரி செலுத்து வதல்லாமல் வேறு என்ன உண்மை லாபம் அடைகிறோம்? தெய்வத்தை உத்தேசித்தோ, ஸ்தலத்தை உத்தேசித்தோ, தீர்த்தத்தை உத்தேசித்தோ, நமது பிரயாணச் செலவு எவ்வளவு? பூஜை, பூசாரி காணிக்கை, பிரார்த்தனை முதலியவற்றிற்காக ஆகும் செலவு எவ்வளவு? சாதாரணமாய் திருப்பதி வெங்கடாசலபதி என்கிற ஒரு தெய்வத்திற்கு மாத்திரம் வருடம் ஒன்றுக்குப் பதினெட்டு லட்சம் ரூபாய் வரும்படி வருகிறது. இதைத் தவிர மேற்படி யாத்திரைக்காரர்களுக்கும் அங்குள்ள பூசாரிகளுக்காகவும், மற்றும் சில தர்மத்திற்காகவும், அங்கு போகும் ரயில் சத்தம் வண்டிச் சத்தத்திற் காகவும் ஆகும் செலவு எவ்வளவு? இது போலவே இமய முதல் கன்னியா குமரி வரை உள்ள தீர்த்தம், ஸ்தலம், கோவில் முதலிய வைகளுக்கு மக்கள் போக்கு வரவு செலவுகள் முதலியவைகளை நினைத்துப் பார்த்தால் உடல் நடுங்குகிறது. இஃதன்றி வீடுகளில் நடைபெறும் வைதீகச் சடங்குகளான கலியாணம், வாழ்வு, சாவு, திதி இவை களுக்காகவும், அதை நடத்திவைக்கவும் புரோகிதர் பிராமணர்கள் செலவும் எவ்வளவாகிறது? இவைகளை எல்லாம் மக்களின் பேராசையும், மூட நம்பிக்கையும் தானே செய்விக்கின்றன. தாங்கள் எவ்வளவு கொடுமையும் பாவமும் செய்திருந்தாலும் மேற்கூறிய தெய்வ யாத்திரையோ, வைதீகச் சடங்கோ செய்வதால் தப்பித்துக் கொள்ளலாமென்றும், தங்கள் யோக்கியதைக்கு மேல் எதை விரும்பினும் பெற்று விடலாமென்றும் நினைக்கிற பேராசை நினைப்புகளும் இவைகளுக்குக் காரணமாய் இருப்பதன்றித் தங்கள் முன்னோர்கள் அவர்களின் குண கர்ம யோக்கியதையைப் பொறுத்த தல்லாமல், தாம் வைதீகச் சடங்கு செய்து பிராமணர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலமாய் அவர்களை மோட்சத்திற்கு அனுப்பிவிடலாம் என்கிற மூடநம்பிக்கையும் இவர்களை இப்படிச் செய்விக்கச் செய்கின்றது. இதனால் மக்கள் ஒழுக்கம் பெறுவதற்கு இடமுண்டாகின்றதா? ஒருவர் ஏமாறவும் மற்றொருவர் ஏமாற்றவும் தானே பழக்கப்படுகிறது. கடவுளின் உண்மைத் தத்துவத்தையும் தங்கள் தங்கள் செய்கைகளின் பலன்களையும், மக்களுக்குப் போதித்து வந்திருந்தால் இவ்வளவு பேராசையும் செலவும், தெய்வத்தின் பெயராலும் ஏமாற்று தலாலும் ஏற்பட்டிருக்கவே முடியாது. தெய்வத்திற்காகச் செலுத்தப்படும் காணிக்கைகள் என்னவாகின்றன. வைதீகச் சடங்குகளின் பலன்கள் என்னவாகின்றன? இவ்விரு கர்மங் களையும் நடத்தி வைப்பவர்களின் யோக்கியதை என்ன? என்பதை மக்கள் கவனிப்பதில்லை. காளை மாடு கன்றுப் போட்டதென்றால் கன்றுக் குட்டியைப் பிடித்துக் கொட்டத்தில் கட்டு என்றே சொல்லி விடுகிறோம். காளை மாடு எப்படிக் கன்றுப் போடும் என்பதை நாம் கவனிப்பதே இல்லை. பூசாரிக்குப் பணம் கொடுப்பதாலும், காணிக்கை போடுவதாலும் நமது குற்றச் செயல்கள் எவ்வாறு மன்னிக்கப்படும்? நமது ஆசைகள் எவ்வாறு நிறைவேறும்? தெருவில் போகும் பிராமணர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கு அரிசி, பருப்பு, பணம், காசு கொடுப்பதாலும், அவர்கள் ஏதோ சில வார்த்தைகளை உச்சரிப்பதாலும் நமது முன்னோர்கள் எப்படிச் சுகப்படுவார்கள் என்று யோசிப்பதே இல்லை. இவைகளால் நமது பொருள், நேரம், தத்துவம் வீணாகப் போவதல்லாமல் ஒரு மனிதன் கொலை, கொள்ளை முதலிய துஷ்டச் செயல்கள் செய்யும் போது தன்னுடைய பணச் செருக்கையும், வக்கீல்களையும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப் பதையும் நினைத்துக் கொண்டு, இவர்களால் தப்பித்துக் கொள்ளலாமென்று எப்படித் தைரியமாய்ச் செய்கிறானோ, அப்படியே இந்த க்ஷேத்திரங் களையும், காணிக்கைகளையும், புரோகிதர்களையும் நம்பிக்கொண்டு தைரியமாய்க் குற்றங்கள் செய்கிறான். அதோடு மட்டும் அல்லாமல் தேசத்தில் சோம்பேறிகளும், கெட்ட காரியங்களும் வளர்கின்றன. நல்ல யாத்திரைஸ்தலம் என்று சொன்னால் நல்ல வியாபாரஸ்தலம் என்பது தான் பொருளாக விளங்குகின்றது. தேர் திருவிழா ஸ்தலங்களுக்குப் போனவர்களுக்கும், யாத்திரை ஸ்தலங்களுக்குப் போனவர்களுக்கும் அநேகமாக இதன் உண்மை விளங்காதிருக்காது. நல்ல புரோகிதர்கள் என்போர்கள் தங்கள் வரும்படியை வியபசாரத்திற்கும் சூதுக்கும் போதை வஸ்துக்களுக்குமே பெரும்பான்மையாக உபயோகித்து வருகின்றனர். வைதிகச் சடங்கைப்பற்றி ஒரு பெரியாரால் சொல்லப்பட்ட ஒரு சிறு கதையைச் சொல்லி இக்கட்டுரையை முடிக்கின்றோம்.

ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு புரோகிதர், ஒருவருக்கு வைதிக கர்மம் செய்து வைத்துக் கொண்டிருக்கும்பொழுது தான் கிழக்கு முகமாக நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட ஒரு பெரியார் தான் மேற்கு முகமாய் நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்தார்.

புரோகிதர்:- ஐயா, என்ன மேற்கு முகமாய்ப் பார்த்துத் தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கிறீர்?

பெரியார்:- நீங்கள் கிழக்கு முகமாகப் பார்த்து எதற்காகத் தண்ணீர் இறைக்கிறீர்கள்?

புரோகிதர்:- இது மேல் உலகத்திலுள்ள பிதுர்க்களைப் பரிசுத்தமாக்கும்.

பெரியார்:- நான் இறைப்பது என்னுடைய காய்கறித் தோட்டத்தின் செடிகளை நன்றாக வளர்க்கும்.

புரோகிதர்:- இங்கு நின்று கையால் வாரி இறைப்பது வெகு தூரத்திலுள்ள தோட்டத்திற்கு எவ்வாறு போய்ச் சேரும்? பயித்தியமாய் இருக்கிறீர்களே!

பெரியார்:- நீர், இறைக்கும் தண்ணீர் மாத்திரம் என்னுடைய தோட்டத்தைவிட எத்தனையோ அதிக தூரத்திலிருக்கும் மேல் உலகத்திற்கு எப்படிப் போய்ச் சேரும்?

புரோகிதர்:- (வெட்கத்துடன்) இந்த வார்த்தையை இவ்வளவுடன் விட்டு விடுங்கள். வெளியில் சொல்லி என் வரும்படியைக் கெடுத்துவிடாதீர்கள்.

இஃதல்லாமல் குருமார்களென்று எத்தனையோ பேர் நமது நாட்டிடைத் தோன்றி மக்களைத் தம் சிஷ்யர்களாக்கி அவர்களிடை எவ்வளவு பணம் பறித்துப் பாழாக்குகிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே.

தோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 04.07.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: