periyar 404

காங்கிரஸ் மந்திரிகள் அதிகாரத்துக்கு வந்துவிட்டார்கள். மக்களுக்கு இனி தண்ணீரே குடிக்க வேண்டிய அவசியமிருக்காது. ஏனெனில் தேனும் பாலுமே அருவியாகவும், ஆறாகவும் ஓடப்போகிறது.

ஆகாய கங்கை அகிலமெல்லாம் வேண்டியவுடன் வரவழைக்கப் படப்போகிறது. வரி என்கின்ற வார்த்தையே அகராதியில் கூட இல்லாமல் எடுபடப்போகிறது. இந்திய நாட்டில் எங்காவது பட்டினி என்றோ, வேலை இல்லாத கஷ்டம் என்றோ யாராவது உச்சரித்தால் ராஜத்துவேஷக் குற்றமாகக் கருதி தண்டனைக்குள்ளாக்கக் கூடிய சட்டம் செய்யப்படப் போகிறது.

அற்ப ஆயுளில் யாரும் சாகாவண்ணம் எல்லோரும் 120 வருஷம் உயிர் வாழ ஏற்பாடு செய்யப்பட்டு மரணப் பதிவு இலாக்காவே எடுபடப்போகிறது. ஆகவே இனி என்ன வேண்டும்? இந்த சரணாகதி மந்திரிகள் ஆதிக்கத்தில் இவ்வளவு காரியம் ஆனால் போதாதா? இதற்கு மேலும் அனேக காரியம் செய்யப்படும் என்று காங்கிரஸ்காரர்கள் வாக்களித்திருந்த போதிலும் இதற்கு மேலும் மக்கள் ஆசைப்படுவது பேராசையைக் காட்டுவதாகிவிடாதா?

ஆனால் சரணாகதி மந்திரிகள் இவ்வளவோடு நிறுத்தி விடமாட்டார்கள். இன்னமும் அதிகமான அனேக நன்மைகளைச் செய்து விட்டுத்தான் ஓய்வெடுப்பார்கள். ஏனெனில் இவ்வளவு பெரிய நன்மைகள் செய்ய திட்டமும், சக்தியும் அவர்களுக்கு இல்லாதிருக்கு மானால் அவ்வளவு பெரிய மானங்கெட்ட சரணாகதி அடைந்து இந்த பதவியை அடைந்திருப்பார்களா?

ஆகவே நாம் ஆவலோடு பொறுத்திருப்போம். ஆனால் ஒரு விஷயத்தை நாம் ஆலோசித்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

அதாவது இந்த சரணாகதி மந்திரிகள் யாருடைய பிரதிநிதிகள்? ஜனங்களுடைய பிரதிநிதிகளா? பிரிட்டிஷ் கவர்ன்மெண்டாருடைய பிரதிநிதிகளா? என்பதுதான். ஜனங்களால் இந்த மந்திரிகள் தெரிந்தெடுக்கப் பட்டவர்கள் என்பதைக்கூட நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் பத்தாவது மந்திரியாகிய டாக்டர் ராஜன் அவர்கள் ஜனங்களால் ஒதுக்கித்தள்ளப்பட்டவர், காங்கிரசினால் தண்டிக்கப்பட்டவர். அவர் அடைந்திருந்த இந்திய சட்டசபை அங்கத்தினர் பதவியையும் ராஜிநாமா செய்யும்படி காங்கிரசால் சென்ற வருஷம்தான் உத்திரவிடப்பட்டு அந்தப்படி ராஜிநாமா செய்தவர். ஆகவே காங்கிரசுக்கும் பிரதிநிதி அல்ல என்பதோடு பொது ஜனங்களுக்கும் பிரதிநிதி அல்ல. அதுவாவது போகட்டும் என்று சொல்லப்படுவதானாலும் ஒழுக்கத்துக்கும் கட்டுப் பாட்டுக்குமாவது இவர் பிரதிநிதியா என்று பார்த்தால் அதுவும் 0 பூஜ்ஜியம் என்றுதான் சொல்லும்படியாக காங்கிரஸ் ரிக்கார்டே இருக்கிறது.

அதாவது இவர் காங்கிரசுக்கு மகத்தான துரோகம் செய்து, இன்று முதல் மந்திரியாயிருக்கும் கனம் ஆச்சாரியார் அங்கம் பதறி ஆத்திரம் கொண்டு "இன்று முதல் நான் இனிமேல் எந்த காங்கிரஸ் நடவடிக் கையிலும் கலந்து கொள்வதில்லை" என்று பிரதிக்கினை செய்துவிட்டு வெளியேறும்படியான நிலைமை ஏற்படும்படி நடந்து கொண்டவர். மற்றபடி அதற்குப் பிறகாவது ஏதாவது தேர்தலில் நின்று பொதுஜன ஆதரவு தனக்கு ஒரு கடுகளவாவது இருக்கிறது என்று காட்டிக்கொண்டவரா என்று பார்த்தால் அதுவும் சிறிதுமில்லாமல் மக்கள் முன் தலைகாட்ட தயங்கிக் கொண்டு அஞ்ஞாத வாசம் செய்து கொண்டிருந்தவர். ஆகவே கனம் டாக்டர் ராஜன் யாருடைய பிரதிநிதி என்பதை வாசகர்கள் தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். ஒரு சமயம் யாராவது ஒரு வாசகர் இது தனக்கு புரியவில்லை என்றும் நாமே சொல்லிவிட்டால் அனுகூலம் என்றும் தெரிவிக்க ஆசைப்படுவாராயின் அவருக்கு நாம் நமதபிப் பிராயத்தை விளக்கவேண்டுமானால் ஒரு விஷயம் சுருக்கமாகச் சொல்லுவோம்.

அதாவது ஆரியர்களின் ஆணவத்துக்கும், மனுதர்ம ஆட்சியின் தத்துவத்துக்கும் இவர் பிரதிநிதி என்றுதான் சொல்லுவோம். கனம் டாக்டர் ராஜன் அவர்கள் செய்த குற்றத்தைவிட எவ்வளவோ மடங்கு குறைவான குற்றம் செய்தவர்கள் 5 வருஷ காலமும் ஆயுள் பரியந்தமும் கூட காங்கிரசால் "தண்டிக்கப்பட்டு" விட்டார்கள். ஆனால் கனம் டாக்டர் ராஜனோ இதுவரையில் காங்கிரஸ்காரர்களில் எவரும் செய்திருக்காத - செய்ய எண்ணக்கூட தைரியமிருக்க முடியாத "மகா பாதகமான" குற்றத்தைச் செய்தும்கூட அவர் ஒரு ஆரியராய் இருப்பதால் தண்டனை அடைவதற்குப் பதிலாக அமைச்சர் பதவி பெற நேர்ந்துவிட்டது.

மனுதர்ம சாஸ்திரத்தில் "ஒரு "சூத்திரன்" ஒரு பார்ப்பன விபசாரிப் பெண்ணை அப்பெண் சம்மதத்தின் மீது கலந்தாலும், அந்த சூத்திரனின் ஆண் குறியை வெட்டி சித்திரவதை செய்து கண்டம் கண்டமாய் துண்டு செய்து கொல்ல வேண்டும்" என்றும்,

"ஒரு "பிராமணன்" ஒரு சூத்திர குடித்தனப் பெண்ணை பலாத் காரமாய் புணர்ந்தாலும் அந்த பிராமணனுக்கு அரசன் மானியம் கொடுத்து தம்பதிகளை வேறு ஊருக்கு அனுப்பிவிட வேண்டும்" என்றும் வியக்தமாய் பொருள்பட விதி இருக்கிறது. அது போலவே கனம் ஆச்சாரியார் ஆட்சியில் நமது கனம் டாக்டர் ராஜன் அவர்கள் அமைச்சரானது அவ்விதிக்கு சரியான எடுத்துக்காட்டாக விளங்கி மனு ஆட்சியை பிரதிபலிக்கச் செய்து விட்டது.

மற்ற மந்திரிகளாவது யாருடைய பிரதிநிதிகள் என்று பார்ப்போ மானால் எந்த ஓட்டர்களுக்காவது எந்தக் கொள்கையையாவது எடுத்து விளக்கி ஓட்டுப்பெற்றிருந்தால் இவர்கள் ஏதாவது ஒரு கொள்கைக்கோ, ஓட்டர்களுக்கோ பிரதிநிதிகள் என்று சொல்லலாம். ஒன்றும் கிடையாது. ஆளுக்கு ஒருவிதம், சமயத்துக்கு தகுந்தபடி, கனம் ஆச்சாரியார் ஒரு மாதிரி, தோழர் மூர்த்தியார் ஒரு மாதிரி, பண்டிதர் நேரு ஒரு மாதிரி, காந்தியார் ஒரு மாதிரி, தோழர் குப்புசாமி அண்ணாமலை கம்பெனியார் ஒரு மாதிரி, மற்ற பார்ப்பன வக்கீல்கள், சர்க்கார் பார்ப்பன உத்தியோக ஸ்தர்கள் ஒரு மாதிரி ஆக இப்படி இன்னும் பலபேர் பல மாதிரி பேசி படிப்பில்லாத ஓட்டர்களை மயக்கி வஞ்சித்து ஏமாற்றிப் பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கையில் வந்தவர்களானதால் உண்மையில் மற்ற 9 பேர்களை பொய்யும், ஏமாற்றும், சூதும் சூழ்ச்சியுமான "அருமை" குணங்களுக்கு பிரதிநிதிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இடைக்கால மந்திரிகளை கனம் ஆச்சாரியார் மெய்மறந்து வையும்போது ஆத்திரத்தில் அவருக்கு வேறு நல்ல வார்த்தைகள் கிடைக்காமல் "ஜனங்கள் சர்க்காருக்கு சவாரிசெய்ய குதிரைகளை கொடுத்தார்கள். ஆனால் சர்க்கார் கழுதைக்கு கடிவாளம் போட்டு விட்டார்கள்" என்று சொன்னது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும்.

இடைக்கால மந்திரிகள் கழுதைகளா அல்லவா என்பது பற்றி நமக்கு இப்போது விவகாரம் வேண்டாம். ஏனெனில் அவர்கள் யாராய் இருந்தாலும் 3 மாத வாய்தாவில் அவர்கள் (இடைக்கால மந்திரிகள்) மறுபடியும் "மனிதர்கள்" ஆகிவிட்டார்கள். ஆனால் "ஜனங்கள் கொடுத்த குதிரை மேல்" இப்போது பிரிட்டிஷ் சர்க்கார் சவாரி செய்கிறார்கள். ஆகவே காங்கிரஸ் மந்திரிகள் சர்க்காருக்கு சவாரி செய்யும் குதிரைகளாக ஆகிவிட்டார்கள். அக்குதிரைகளுக்கு சர்க்காரால் கடிவாளம் போட்டாய் விட்டது. அதுவும் "நன்றி விசுவாசத்துடன் உத்திரவுக்கு கீழ்படிந்து நடக்கிறேன்" என்று மண்டியிட்டு அடிபணிந்து சரணாகதி அடைந்த பிறகே சர்க்கார் கடிவாளம் பூட்டி இருக்கிறார்கள். ஆகவே இந்த சரணாகதி மந்திரிகள் கடிவாளத்துக்கு (சர்க்காருக்கு)த்தான் பிரதிநிதி களாகவோ - பொறுப்பாளர்களாகவோ ஆவார்களே ஒழிய ஓட்டர்களுக்கு அல்ல. பொது மக்களுக்கும் அல்ல.

இனி இவர்கள் செய்யப்போகும் காரியம் என்ன இருக்க முடியும் என்று பார்த்தால் நிலவரி விஷயத்தில் இனி புதிய வரி போட வேண்டியது தான் பாக்கி இருக்குமே ஒழிய ஒரு காசும் குறைப்பதற்கும் இடம் இருக்காது. ஏனெனில் இடைக்கால மந்திரிகள் 100-க்கு 75 வீதம் அதாவது 1 ரூபாய்க்கு 4 அணாவீதம் நிலவரி குறைத்து வரவு செலவு கணக்குகள் சரிக்கட்டி முடிவான உத்திரவும் போட்டுவிட்டு போய் விட்டார்கள். இதை "சுதேசமித்திரன்" பத்திரிகையே ஒப்புக்கொண்டு "நடந்த வருஷத்துக்கு இல்லையாம். இனி நடக்கப்போகிற வருஷத்துக்கு தான் வரி குறைப்பாம்" என்று இடைக்கால மந்திரிகள் வரிகுறைத்து விட்டதாக வெளியிட்ட உத்திரவின் மீது ஆத்திரம் காட்டி விஷமமாக எழுதியிருந்தது. ஆகவே நிலவரி விஷயம் ஏற்கனவே தீர்ந்துவிட்டது.

இனி சம்பள விஷயத்தில் சாதிக்கப் போவதாக சவடால் அடிக்கிறார்கள். என்ன குறைக்கப் போகிறார்கள்? ரூபாய்க்கு 16 அணாவாக முன் இருந்ததை சரணாகதி மந்திரிகள் ரூபாய்க்கு 192 காசாக குறைக்கப் போகிறார்கள். எப்படி எனில் 7 மந்திரிகள் 10 மந்திரிகளானார்கள்; 3 காரியதரிசிகள் 10 காரியதரிசிகளானார்கள்; இவை போதாமல் சட்டசபை மெம்பர்கள் எல்லோருக்கும் மாதம் 100 ரூபாயோ 150 ரூபாயோ வீதம் மாதச் சம்பளம் கொடுக்க திட்டம் வைத்து இருக்கிறார்கள். ஆகவே இந்தச் சம்பளம் அலவன்ஸ் படி ஆகியவைகள் சேர்ந்தால் பெருமாள் பெரிய பெருமாள் ஆனமாதிரிதான் ஆகக்கூடுமே தவிர குறைபடப் போவதில்லை.

இந்த அதிக மந்திரி, அதிக காரியதரிசி என்பதெல்லாம் சரணாகதி மந்திரிசபை அதிக காலம் நிலைக்கச் செய்வதற்கு ஆக செய்யப்பட்ட சூழ்ச்சியே ஒழிய இதில் உண்மையோ நியாயமோ அவசியமோ இருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது. சம்பளத்திலும் முன்பிருந்ததை விட ஒரு காசும் பொது ஜனங்களுக்கு மீதியாகப் போவதில்லை. 215 மெம்பர்கள் உள்ள சபையில் இப்போது உத்தியோகத்தின் மூலமே 9 மந்திரிகள், 10 காரியதரிசிகள், 2 தலைவர்கள் ஆக 21 பேர்கள் நிரந்தர சிப்பந்திகள் ஆகிவிட்டார்கள். மொத்தம் ஐம்பது பார்ப்பனர்களில் 10 பேர்கள் இந்த சிப்பந்தி கூட்டத்தில் சேர்ந்துவிட்டதால் இனியும் மீதி உள்ள 40 பார்ப்பனர்கள் அவர்களுடன் எப்போது மிருப்பார்கள். ஆகவே 21-ம் 40-ம் 61 பேர்கள் தவிர இனி கீழ் சபையில் மெஜாரிட்டிக்கு வேண்டிய எண்ணிக்கை 47 பேர்களே ஆகும். அதற்கு ஆக சட்டசபை மெம்பர்களுக்கு சம்பளம் என்பதாக ஒரு தொகை ஏற்பாடு செய்து விட்டால் இனியும் குறைந்தது சுமார் 50, 60 பேர்களுக்கு குறையாமல் சரணாகதி மந்திரிகளை 24 மணி நேரமும் "அனுமார்" மாதிரி கைகட்டி வாய்பொத்தி சுற்றிக்கொண்டும், நத்திக்கொண்டும் திரிந்து விடுவார்கள். இந்த சூழ்ச்சிமீதுதான் "சட்டசபை மெம்பர்"களுக்கு சம்பளம் ஏற்படுத்தப் போகிறார்களாம். ஆகவே சம்பளம் குறைப்பது என்பதில் உள்ள நாணையம் மக்களை ஏமாற்றுவது தானே தவிர பணச்செலவில் ஏதாவது குறைந்துவிடுமா என்பது சந்தேகந்தான்.

நிற்க நமது நாட்டுக்கு சீர்திருத்தம் வருவதற்கு முன் 2 மந்திரிமார்கள் தான் சென்னை மாகாண நிர்வாகத்தைக் கவனித்து வந்தார்கள். அப்புறம் 3 ஆகி பிறகு 7 ஆகி இன்று 10 மந்திரிகளும், 10 வால்களுமாக 20 உருப்படிகள் ஆகிவிட்டன. பணமும் அதுபோலவே பெருகிவிட்டது. பொறுப்பும் சின்னபின்னப்பட்டு பாழாகி "குருட்டுக் கோமுட்டி கடையில் அள்ளாதவன் பாவி" என்கின்ற மாதிரியில் போனதோடு ஒரு மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. எப்படியோ நடக்கட்டும். முடிவில் இன்று பார்ப்பனர்கள் வெற்றி பெற்றுவிட்டதாக மகா குதூகலத்தில் இருக்கிறார்கள். அவர்களில் யாரைப்பார்த்தாலும் முகத்தில் களை வழிந்து ஓடுகின்றது. வாய் நிறையப் புன்சிரிப்பு அமிழ்ந்து கிடக்கின்றது. மனுப்பிரஜாபதி அவதரித்து விட்டதாகவே முடிவு செய்து கொண்டார்கள். இனி "கற்பகோடி" காலத்துக்கு அசைக்க முடியாதபடி பார்ப்பன ஆட்சி பலம் பெற்று விட்டதாகவே மனப்பால் குடித்து மகிழ்கிறார்கள்.

ஆனால் இந்த வைபவத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் போய்விடுமோ என்று யாரும் கருதிவிட வேண்டியதில்லை. அது முழு வெற்றி பெற்று விட்டது. இனியும் உச்சத்துக்கு வரப்போகிறது. இந்த 17 வருஷ ஆதிக்கத்தின் வரவு செலவு (பாலன்ஸ்ஷீட்) கணக்குபோட்டு பொதுஜனங்களுக்கு வெளியிடுவதற்கு ஆக அந்த வேலையில் இப்போது ஈடுபட்டிருக்கிறது. முன்னிலும் அதிகமாக இயக்கம் வேலை செய்யப் போகிறது. அதற்கு ஆன எல்லா தளவாடங்களும் தயாராகின்றன. அவற்றிற்கு நம் சரணாகதி மந்திரிகளே உற்சாகமூட்டி வருவார்கள். நம் சுயமரியாதை கொள்கையும் ஒரு நாளும் ஓய்வடையவில்லை. யாரையும் ஏமாற்றிவிடவு மில்லை. புடம் போட்ட தங்கம் போல் பிரகாசமும் பரிசுத்தமும் அடைந்து வருகிறது. எல்லா மக்களும் உணரத்தகுந்த தன்மையில் ஆதிக்கத்துடன் பிரகாசிக்கப் போகிறது. யாரும் எவ்வித மனத்தளர்ச்சியோ, சலிப்போ கொள்ள வேண்டியதில்லை.

ஆனால் ஒன்று மாத்திரம் அவசியம். அதாவது பார்ப்பனரல்லாத மக்களாய் இருக்கிற ஒவ்வொருவருடையவும் கிறிஸ்தவர், முஸ்லீம், ஆதிதிராவிடர் "ஜாதி இந்துக்கள்" என்று சொல்லப்படும் எல்லாருடையவும் கடமையை - சுயமரியாதை உணர்ச்சியை பார்ப்பனரல்லாத இயக்கம் எதிர்பார்க்கிறது என்பதையும் இது ஒரு நல்ல தங்கமான சமயம் என்பதையும் உற்சாகமான உணர்ச்சியோடு வேலை செய்ய இதைவிட நல்ல சந்தர்ப்பம் இனி கிடைக்காது என்பதையும் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் மனதிலிருத்த வேண்டும் என்பதாகும்.

தோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 18.07.1937

Add comment


Security code
Refresh

Share this post

Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

புரட்சி மொழிகள்

"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்" - பெரியார்

தொடர்புக்கு

Periyar web version
கைப்பேசி: +919787313222
மின்னஞ்சல்:[email protected]

To Get Latest Articles

Enter your email address: